Tuesday, June 3, 2014

ஹிட்ச்காக்கின் Sabotage (1936) - விமர்சனம்

1939ஆம் ஆண்டு வரை ஹிட்ச்காக் பிரிட்டிஷ் சினிமாவில் தான் இருந்தார். ஹாலிவுட்டில் நுழையும் முன், த்ரில்லர் படங்களை விதவிதமாக எடுத்து தன்னை மெருகேற்றிக்கொண்டிருந்தார். The 39 steps படத்தின் வெற்றி ஹிட்ச்காக் பெயரை ஹாலிவுட்வரை கொண்டுசென்றது. அடுத்து வந்த Secret Agent படம் சொதப்பிவிட, ஒரு வித்தியாசமான த்ரில்லராக Sabotage-ஐ எடுத்தார் ஹிட்ச்காக். Secret Agent போன்று ஓவர் டோஸ் ஆகி கதையைப் பாதிக்காத வண்ணம், இந்தப் படமும் சில அடிப்படை மனித இயல்புகளைப் பற்றி அலசியது. ஹிட்ச்காக்கின் பிரிட்டிஷ் படங்களில் முக்கியமான படங்களில் ஒன்றாக இது ஆனது.

Sabotage என்பதன் பொருள் சமூக ஒழுங்கை/அரசாங்கத்தை குலைக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் அட்டாக் என்று பொருள்படும். அதன் நேரடி அர்த்தம், மெசினரி அல்லது பில்டிங்குகளை விருப்பப்பட்டே இடிப்பது. டிக்சனரியில் அந்த அர்த்தத்தினைக் காட்டியபடியே படம் ஆரம்பம் ஆகிறது. 

டிடெக்டிவ் ஸ்பென்சர் (John Loder) ஒரு பழக்கடையில் பணிபுரிவராக நடித்து வருகிறார். அந்தக் கடை ஒரு தியேட்டருக்கு அருகே அமைந்துள்ளது. அந்த தியேட்டர் அதிபர் வெர்லாக்(Oscar Homolka)கிற்கு ஒரு தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக ஸ்பென்சர் சந்தேகிக்கிறார், அது உண்மையும்கூட. வெர்லாக்கின் மனைவி (Sylvia Sidney)க்கு கணவனின் நடவடிக்கை பற்றி எதுவும் தெரிவதில்லை. 

சில்வியா சிறுவனான தன் தம்பியும் உடனிருக்க, க்வெர்லாக்குடன் அந்த தியேட்டருக்கு மேலே இருக்கும் வீட்டிலேயே வசித்து வருகிறாள். டிடெக்டிவ் தன்னை நெருங்கிவிட்டதை அறியும் வெர்லாக், தனது திட்டத்தை நிறைவேற்ற சில்வியாவின் தம்பியிடம் பாமைக் கொடுத்து குறிப்பிட்ட இடத்தில் டெலிவரி செய்யும்படி அனுப்பி வைக்கிறான். அதில் அந்த சிறுவனும் பலியாக, அதன் பின் டிடெக்டிவ்-சில்வியா-வெர்லாக் இடையே நடக்கும் பரபரப்பான சம்பவங்களே படம்.
ஒரு கமர்சியல் த்ரில்லர் கதையை குவாலிட்டி ஆனதாக ஆக்க, ஹிட்ச்காக் எடுத்துக்கொள்ளும் அக்கறை தான் அவரை மதிப்பிற்குரிய திரைப்பட மேதையாக ஆக்கியது. இந்தப் படம் Joseph Conrad என்பவர் எழுதிய The Secret Agent எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானது. ஏற்கனவே Secret Agent என்ற பெயரை முந்தைய படத்திற்கு வைத்துவிட்டதால், ஹிட்ச்காக் Sabotage என்று பெயர் மாற்றினார். நாவலில் வெர்லாக் ஒரு கடை வைத்திருப்பதாகவே வரும். ஹிட்ச்காக் அதை தியேட்டர் என்று மாற்றினார். அதன்மூலம் கதைக்குச் சம்பந்தமான அல்லது முற்றிலும் எதிரான காட்சிகள் திரையில் ஓடுவதாக காட்சிகளை அமைத்து சுவாரஸ்யத்தைக் கூட்டினார். அந்த தீவிரவாதக் கும்பல் யார், அவர்களின் நோக்கம் என்ன போன்ற விஷயங்களையெல்லாம் Maccuffin என்று ஒதுக்கித் தள்ளினார். படம் பார்ப்போர் சிம்பிளாகப் புரிந்துகொள்ள என்ன தேவையோ, அதை மட்டும் வைப்பது ஹிட்ச்காக் ஸ்டைல்.

இந்தப் படத்தில் வரும் எல்லாக் கேரக்டர்களின் செயலுக்கும் அவர்களின் இயல்புக்கும் முரண் இருக்கும்படி அமைத்தார் ஹிட்ச்காக். பணத்தேவைக்காக தீவிரவாதக் கும்பலுடன் சேரும் வெர்லாக், உயிர்பலியை விரும்புவதில்லை. கடமையை நிறைவேற்ற வரும் டிடெக்டிவ், சில்வியாவின் மேல் காதல்கொண்டு கடமை தவறுகிறான். பாம் வைக்கும் சிறுவன், நடப்பதே தெரியாத அப்பாவி. கணவன் மேல் மதிப்புள்ள சில்வியாவும் நேரெதிர் காரியங்களையே இறுதியில் செய்கிறாள். இப்படித்தான் இருக்க வேண்டும் எனும் நியாய விதிகள் எல்லாம், விரும்பியோ விரும்பாமலோ கேரக்டர்களால் மீறப்படுகின்றன. வாழ்க்கையில் அபத்தத்தை போகிற போக்கில் சொல்கிறார் ஹிட்ச்காக்.

படத்தின் முக்கியக் குறை, ஹீரோ John Loder தான். ஒரு மாஸ் ஹீரோவுக்குரிய அடையாளமோ, நடிப்போ இல்லாமல் சாதாரணமாகச் செய்திருப்பார். கதையே அந்த டிடெக்டிவ் கேரக்டரின் பாயிண்ட் ஆஃப் வியூவில் தான் நடக்கிறது. ஆனால் அந்தப் படத்தைத் தோள்களில் தாங்கும் வலிமை அவருக்கு இல்லை. The 39 Steps பட ஹீரோவான Robert Donat-ஐத் தான் நடிக்க வைக்க விரும்பினார் ஹிட்ச்காக். அது முடியாமல் போனதால் ஜான் நடித்தார். ஒரு மாஸ் ஹீரோ இல்லாமல் படம் பண்ணும்போதெல்லாம், படம் நொண்டியடிக்கிறது என்று பலவருடங்கள் கழித்துச் சொன்னார் ஹிட்ச்காக். அதன் அர்த்தம், இந்தப் படம் பார்க்கும்போது தெரிகின்றது.

டிடெக்டிவ்வை விட வெர்லாக் கேரக்டரில் நடித்த Oscar Homolka-ன் நடிப்பு பிரமாதம். எனவே அவர் தான் ஹீரோவோ என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு, நம் கவனம் எல்லாவற்றையும் திருடிக்கொள்கிறார் Homolka. அவர் கொல்லப்படும் காட்சியில், அவர் காட்டிய சின்ன சின்ன எக்ஸ்பிரசன்கள், அவர் ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபித்தன. உயிர்பலியை விரும்பாத வில்லன் என்று இந்த கேரக்டர் சொல்லப்பட்டுவிட்டதால், இறுதியில் நடப்பது கொலையா அல்லது தற்கொலையா என்பதை நம் முடிவுக்கே விட்டிருப்பார் ஹிட்ச்காக்.
ஹீரோ சில்வியா மேல் காதல் கொள்வதையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஏறக்குறைய Vertigo-ல் இதே போன்ற சூழ்நிலை வரும். ஆனால் அதை நாம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சொல்லியிருப்பார் ஹிட்ச்காக். இது ஒன்றே கால் மணி நேரம் மட்டுமே ஓடும் சின்னப் படம் என்பதால், அந்த காதலுக்கு(!) வலு சேர்க்கும் காட்சிகள் இல்லை. இதில் கற்ற பாடம் தான், vertigo-ல் ஹிட்ச்காக்கிற்கு கை கொடுத்திருக்க வேண்டும்.

பார்சலில் பாம் இருப்பது தெரியாமல் சிறுவன், அதைக் கையில் எடுத்துக்கொண்டு நகரத்தை வலம் வரும் சீன் சஸ்பென்ஸ் வகைக்கு எடுத்துக்காட்டு. சஸ்பென்ஸ் காட்சிகளில் எப்படி டென்சனை ஏற்றுவது என்பதில் ஹிட்ச்காக் கை தேர்ந்தவர். அந்த பாம் 1.45க்கு வெடிக்கும் எனும் தகவலை நமக்குச் சொல்லிவிட்டு, கால் மணி நேரத்திற்கு புகுந்து விளையாடி இருப்பார். படத்தின் முதல்பாதியில், அந்த சிறுவனை நாம் விரும்பும்வகையில் காட்சிகளை அமைத்திருப்பார். எப்படியாவது தப்பித்துவிட மாட்டானா என நம்மை பதைபதைக்க வைத்திருப்பார் ஹிட்ச்காக். படத்தின் நடுவே வரும் அந்த பாம் சீனில் இருந்து தான், படம் ஜெட் வேகத்தில் பறக்கிறது.

தியேட்டர் பேக்ரவுண்டில் கதை நடப்பதால், படத்தில் சோகமான சீன் போகும்போது தியேட்டரில் காமெடி சீன் ஓடிக்கொண்டிருக்கும்; ஆடியன்ஸ் சிரித்துக்கொண்டிருப்பார்கள். இறுதியில் என்ன செய்வது என்று சில்வியா தியேட்டரில் ஓடும் வால்ட் டிஸ்னியின் ஒரு கார்டூன் சீனைப் பார்த்துத் தான் முடிவு செய்வாள். தியேட்டரை ஒரு ட்ராமடிக் விஷயமாக பயன்படுத்தியிருப்பார் ஹிட்ச்காக். அதே மாதிரியே பறவைகளை குறியீடாகப் பயன்படுத்துவது ஹிட்ச்காக்கிற்குப் பிடிக்கும். பெரும்பாலும் அழிவு என்பதைக் குறிக்க, பறவைகளை அவர் பயன்படுத்துவார். (பின்னாளில் இந்த கான்செப்ட்டில் அவரது மாஸ்டர்பீசான The Birds படத்தையே எடுத்தார்).

இந்தப் படத்திலும் பறவைகள் வருகின்றன. சனிக்கிழமை பாம் வெடிக்கும் என்பதை "the birds that will sing on Saturday" எனும் கோட் வேர்டினால் சொல்கிறார்கள். வெர்லாக் தன் மனைவியிடம் மன்னிப்புக் கேட்கும் சீனில், சில்வியா கோபத்துடன் வெளியேறிவிடுவார். அப்போது கேமிரா கொஞ்சம் ஜூம் அவுட் ஆகி, பறவைகளையும் கவர் செய்யும். இப்போது பார்த்தால், அந்தப் பறவைகளின் முன் மண்டியிட்டு வெர்லாக் அமர்ந்திருப்பது போல் காட்சிப்படுத்தியிருப்பார். பாம் வைக்க சிறுவனை அனுப்பும் காட்சியிலும் பறவைகளுடன் அவன் அமர்ந்திருப்பான். அந்த பறவைகள் சிறுவனையும் குறிக்கும்.
1936ல் படம் வெளியாகியிருந்தாலும், இந்தப் படத்தில் வந்த வெர்லாக் கொல்லப்படும் சீன் இன்றளவும் போற்றப்படுகிறது. பெரும்பாலான திரைப்படக்கல்லூரிகளில் பாடமாகப் படிக்கப்படுகிறது அந்த சீன். அதில் உள்ள விஷேசம், வசனங்கள் இல்லாமல் அந்த கேரக்டர்களின் மனதில் இருப்பதை ஹிட்ச்காக் நமக்கு உணர்த்தியது தான். சினிமா என்பதே அது தானே. எனவே ஹிட்ச்காக்கின் இந்த சீன், நுணுக்கமாக ஆராயப்படுகிறது. அந்தக் காட்சியில் பேசப்படும் சில வசனங்களும் அவர்களின் மனதில் உள்ளதை உணர்த்தாது. உணர்ச்சிகரமான டயலாக்குகளால் சொல்ல வேண்டியதை, ஹிட்ச்காக் கேமிரா மற்றும் எடிட்டிங் மூலமே செய்து காட்டினார். நடிப்பும் மிகையாக இல்லாமல் அளவாக இருக்கும்.

அப்பாவித்தனத்தையும் குற்றத்தையும் ஒன்றாக இணைத்து கேரக்டர்களைப் படைத்ததன் காரணமாக, இந்தப் படம் அப்போது பெரும் பாராட்டைப் பெற்றது. ஹிட்ச்க்காக்
 ஹாலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்டியபின், ’அப்படிச் செய்யாமல் சிம்பிளாகவே த்ரில்லரைக் கொடுத்திருக்கலாம். குழப்பமான படமாக இப்போது தெரிகிறது’ என்று புலம்பினார். ஆனால் அவரையும் மீறி, அந்தப் படம் இன்றும் கொண்டாடப்படுவகிறது!

----------------------------- SPOILER ALERT------------------------------------------------

தம்பி சாவுக்குக் காரணமான கணவன் Homolka டைனிங் டேபிளில் உட்கார்ந்திருக்கிறார். டின்னர் பரிமாற ரெடியாகிறார் Sylvia. அப்போது Homolka கொல்லப்படும் சீனை ஷாட் பை ஷாட் இமேஜ்களாக, கற்பனை வசனங்களுடன் உருவாக்கி இருக்கிறேன். அது இங்கே: 

ஹிட்ச்காக்கின் ஒரிஜினல் சீன் இங்கே:படத்தினை தரவிறக்க: http://kickass.to/sabotage-1936-b-w-480p-x264-t8774424.html

Youtube Link: http://www.youtube.com/watch?v=QGjKlSTbKLA
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

 1. படிக்கவே சுவாரஸ்யமா இருக்கு...
  torrent file or youtube link கிடைக்குமா???

  ReplyDelete
 2. ஆல்பிரட் ஹிட்ச்காக் நன்றாக,உங்களைப் பாதித்திருக்கிறார்.நல்ல விமர்சனம்.///ஒரிஜினலுக்கும்,உங்கள் சிந்தனைக்கும் பொருத்திப் பார்க்க சிறப்பாக இருந்தது/இருக்கிறது!

  ReplyDelete
 3. @தமிழ்வாசி பிரகாஷ் பதிவின் கீழே அப்டேட் பண்ணியுள்ளேன் பிரகாஷ்.

  ReplyDelete
 4. //Subramaniam Yogarasa said...
  ஆல்பிரட் ஹிட்ச்காக் நன்றாக,உங்களைப் பாதித்திருக்கிறார்.//

  உண்மை தான். நிறையவே பாதிக்கிறார்!

  ReplyDelete
 5. ஹிட்ச்காக் படங்களை பற்றி எழுதுகையில் உங்க தூரிகையில் கொஞ்சம் வர்ணம் கூடுகிறதே.. அட நல்லாயிருக்குன்னு சொன்னேன்யா!

  ReplyDelete
 6. @கோவை ஆவி கொஞ்சம் ஸ்டடி பண்ணிட்டு, எழுதறேன்...அதுசரி, அப்போ மற்ற பதிவுகள் எல்லாம் நல்லாயில்லையோ!!!

  ReplyDelete
 7. ஹிட்ச்ஹாக்கிட்ட சிக்கிட்டீங்க !
  இன்னும் நல்லா சிக்க வாழ்த்துகிறேன்.

  சைக்கோவை நூறு தடவைக்கு மேல் பார்த்து நானே சைக்கோவாகிப்போனன்.
  எனக்கு அவர் படங்கள் எல்லாமே மாஸ்டர்.
  அவைகளிடம் கற்றுக்கொண்டாலே போதும் நூறு தமிழ்ப்படம் பண்ணலாம்.
  நூறையுமே வெற்றிப்படமாக்கலாம்.
  அதுதான் ஹிட்ச்காக் படங்களில் இருக்கும் சூத்திரம்.

  ReplyDelete
 8. எனக்கு இது புது தகவலய்யா!

  ReplyDelete
 9. படத்தை இப்படி ரசிக்கனும்னு ரசனையோட சொல்லி இருக்கீங்க... அதோட வீடியோ கிளிப்பிங்ஸ் ஜோர், தெளிவான அணுகு முறை

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.