Saturday, July 12, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-14)

14. கதை சொல்லும் முறை

ஒரு ஹீரோ. அவனுக்கு ஒரு குறிக்கோள். அதற்கு தடை பண்ண ஒரு வில்லன். இந்த மூன்றையும் வைத்து, ஒரு கதை இப்படி ஆரம்பித்து இப்படி முடிகிறது என்று ஒரு ரஃப் ஐடியாவுக்கு வந்துவிடலாம். அதை வைத்து ஒரு பக்கம் முதல் நான்கு பக்கங்களுக்குள் ஒரு கதையை எழுதிவிடலாம்.

கதை எழுத ரெடியா? அதற்கு முன் சில முக்கியமான விஷயங்களை ஓஷோ மற்றும் ஹிட்ச்காக் மூலம் கற்போம். ஓஷோவா? சாமியார்க்கும் திரைக்கதைக்கும் என்னய்யா சம்பந்தம்ன்னு யோசிக்கிறீங்களா? சொல்றேன். சிக்கலான ஆன்மீக விஷயங்களை நகைச்சுவையாகச் சொல்வதில் வல்லவர் ஓஷோ ரஜனீஷ். அவருடைய ஜோக்குகள் உலகப் புகழ்பெற்றவை.

அப்படி ஒருமுறை ஜோக் பற்றிப் பேசும்போது, ஒரு ஜோக் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கியிருந்தார். அது எந்த புத்தகத்தில் வந்தது என்பதுகூட மறந்துவிட்டது. அவர் சொன்னதின் சாராம்சம் இது தான்: மக்களுக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை சொல்ல ஆரம்பிக்கிறோம். (தெரியாத விஷயம் என்றால் அதை ஓரிரு வரியில் விளக்குகிறோம்.) முதலில் அது சாதாரணமானதாகவே தோன்றும். கடைசிவரியில் ஒரு ட்விஸ்ட் வைக்கிறோம். இது இப்படித்தான் முடியும் என்றோ அல்லது அசுவாரஸ்யமாகவோ கேட்டுக்கொண்டிருந்தவருக்கு, அந்த ட்விஸ்ட் ஒரு சர்ப்ரைஸைக் கொடுக்கும்.
ஜோக் என்ற பெயரில் வரும் ஒருவரி கவுண்டர் பஞ்ச்களையோ அல்லது வார்த்தை விளையாட்டையோ அவர் சொல்லவில்லை. ஒரு சிறுகதை போல், சிறுகுறிப்பு போல் வரும் ஜோக்குகளுக்கு அதைச் சொன்னார். நீங்க கொஞ்சம் பொறுத்துக்கிட்டீங்கன்னா, ஒரு சுயதம்பட்டத்தோட இதை விளக்கிடலாம்.
எனது நானா யோசிச்சேன் பதிவில் வந்த எனது நகைச்சுவை அனுபவம் ஒன்று கீழே தர்றேன். படிங்க:

போலீஸ் ஸ்டோரி-1:

எங்க ஏரியால சீன் படத்தையும் ‘இங்கிலீஸ் படம்-A படம்’ன்னு சொல்வாங்க. ஒருநாள் ஸ்கூலை கட் அடிச்சிட்டு, ஜாக்கிசான் படம் பார்க்கப் போயிருந்தேன். நம்ம ஊரு ஆளு ஒருத்தரு பார்த்துட்டு வீட்ல போய்ச் சொல்லிட்டாரு. சொன்னவன் கரெக்டாச் சொல்ல வேண்டாமா? அதை விட்டுட்டு ‘சின்னைய்யா, உம்ம மகன் படிக்கப்போகாம இங்கிலீஸ் படம் பார்த்துட்டுத் திரியறான்.,கண்டுச்சு வைய்யும்’ன்னு சொல்லிட்டாரு. 

வீட்டுக்குப் போறேன், நைனா பஞ்சாயத்துக்கு ரெடியா இருக்காரு. ’என்னய்யா..படிக்க அனுப்புனா, படம் பார்த்துட்டுத் திரியறீகளாமே’ன்னு ஆரம்பிச்சாரு. ‘ஆமாப்பா..எங்க கிளாஸ்க்கு மட்டும்(!) லீவு விட்டாங்க..பசங்கள்லாம் கூப்பிட்டாங்க’ன்னு இழுக்கும்போதே ‘அதுக்கு?..இங்கிலீஸ் படத்துக்குப் போவீகளோ?’ன்னாரு. எனக்கும் முதல்ல மேட்டர் உறைக்காம’ ஆமாப்பா..சண்டை சூப்பரா இருக்கும்..பார்க்க காமெடியாவும் இருக்கும்ப்பா’ன்னு சொல்லவும் அப்பன்கிட்டயே டபுள் மீனிங்கான்னு காண்டாகிட்டாரு.

அப்புறம் தான் அவரு வேற இங்கிலீஸ் படத்தைப் பத்தி பேசறாருன்னு புரிஞ்சிக்கிட்டு ‘இல்லைப்பா..இது நல்ல படம் தான்..கராத்தே சண்டைப்படம்’ன்னேன். கொஞ்சம் டவுட் குறைஞ்சு ‘அப்படியா..என்ன படம்ப்பா அது? படத்துப் பேர் என்ன?’ன்னாரு. எனக்கு பக்குன்னு ஆகிடுச்சு. ‘என்னய்யா முழிக்கிறே? பேரைச் சொல்லு’ன்னாரு. வேற வழியே இல்லாம, பேரைச் சொன்னேன் “புராஜக்ட் A".

அப்புறம் நடந்ததைச் சொல்லணுமா!


படிச்சிட்டீங்களா? அதே சம்பவத்தை கீழே சின்ன மாற்றத்தோட எழுதியிருக்கேன். வேற வழியில்லை, படிங்க:


போலீஸ் ஸ்டோரி:

ஒருநாள் ஸ்கூலை கட் அடிச்சிட்டு, ஜாக்கிசான் படம் பார்க்கப் போயிருந்தேன். நம்ம ஊரு ஆளு ஒருத்தரு பார்த்துட்டு வீட்ல போய் சின்னைய்யா, உம்ம மகன் படிக்கப்போகாம இங்கிலீஸ் படம் பார்த்துட்டுத் திரியறான்.,கண்டுச்சு வைய்யும்ன்னு சொல்லிட்டாரு

வீட்டுக்குப் போறேன், நைனா பஞ்சாயத்துக்கு ரெடியா இருக்காரு. ’என்னய்யா..படிக்க அனுப்புனா, படம் பார்த்துட்டுத் திரியறீகளாமேன்னு ஆரம்பிச்சாரு. ‘ஆமாப்பா..எங்க கிளாஸ்க்கு மட்டும்(!) லீவு விட்டாங்க..பசங்கள்லாம் கூப்பிட்டாங்கன்னு இழுக்கும்போதேஅதுக்கு?..இங்கிலீஸ் படத்துக்குப் போவீகளோ?’ன்னாரு. எனக்கும் முதல்ல மேட்டர் உறைக்காமஆமாப்பா..சண்டை சூப்பரா இருக்கும்..பார்க்க காமெடியாவும் இருக்கும்ப்பான்னு சொல்லவும் காண்டாகிட்டாரு.

இல்லைப்பா..இது நல்ல படம் ..கராத்தே சண்டைப்படம்ன்னேன்

அப்படியா..என்ன படம்ப்பா அது? படத்துப் பேர் என்ன?’ன்னாரு

எனக்கு பக்குன்னு ஆகிடுச்சு

என்னய்யா முழிக்கிறே? பேரைச் சொல்லுன்னாரு

வேற வழியே இல்லாம, பேரைச் சொன்னேன்புராஜக்ட் A".

ஏன்னா எங்க ஏரியால சீன் படத்தையும்இங்கிலீஸ் படம்-A படம்ன்னு சொல்வாங்க. அதனால தான் அவர் கடுப்பாகிட்டாரு. அப்புறம் நடந்ததைச் சொல்லணுமா!

இரண்டிற்கும் வித்தியாசம் பெரிதாக ஒன்றும் இல்லை. மேலே சிவப்புக் கலரில் இருக்கும் விஷயத்தை முதலில் இருந்து கடைசிக்கு நகர்த்தியிருக்கிறேன். ஆனால் இரண்டும் கொடுக்கும் எஃபக்ட் வெவ்வேறானவை.
முதல் ஜோக்கை படிக்கும்போது, ‘எங்க ஏரியாவில் இங்கிலீஸ் படம் - ஏ படம்ன்னு சொல்வாங்க’ எனும் தகவல் உங்களுக்கு முதலிலேயே தரப்படுகிறது. அடுத்து ‘இங்கிலீஸ் படம் பார்த்துட்டு திரியறான்’ என்பது சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. முடிவில் புராஜக்ட் ஏ என்று சொன்னதும், ஒரு சர்ப்ரைஸும் ‘மாட்டுனான்’ எனும் சந்தோசமும் உங்களுக்கு கிடைக்கிறது. இரண்டாவது உதாரணத்தில் நைனா கடுப்பாவது ஸ்கூல் கட் அடித்ததற்கு மட்டும் தான் என்ற தோற்றம் வருகிறது. எனவே புராஜக்ட் ஏ என்று சொல்லும்போது, பெரிய சிரிப்பு வருவதில்லை. பின்னர் சிவப்புக் கலரில் விளக்கம் வரும்போது, ஒரு புன்னகை வேண்டுமானால் வரலாம்.

ஜாக்கிசான் நடித்த படம். அது இங்கிலீஸ் படம். எங்க ஏரியாவில் சீன் படத்தை இங்கிலீஸ் படம் என்று சொல்வார்கள். ஏ படம் என்றும் சொல்வார்கள், புராஜக்ட் ஏ. – இந்த ஐந்து இன்ஃபர்மேசனும் சேர்ந்து கொடுக்கும் எஃபக்ட் தான் அந்த நகைச்சுவை. எதை படிப்பவர்க்கு முதலில் தருவது, எதை பின்னர் தருவது என்பதில் தான் இருக்கிறது விஷயமே. முதல் ஜோக்கில் முதல்வரியிலேயே புராஜக்ட் ஏ படத்திற்குப் போனோம் என்று சொல்லாமல், படத்தின் பெயர் ஏன் தவிர்க்கப்பட்டுள்ளது என்று யோசியுங்கள்.

இதே சம்பவத்தை ‘குழந்தைகள் மீதான வன்முறை’ எனும் தலைப்பில் பேசும் முற்போக்கு அறிவுஜீவி சொன்னால், எப்படிச் சொல்வார் என்று கற்பனை செய்துபாருங்கள். செய்யாத தவறுக்காக குழந்தையின்மீது ஏவப்பட்ட கொடூர தாக்குதல் எனும் ரேஞ்சில் பில்டப் ஏறிவிடும். இதில் இன்னொரு ட்விஸ்ட் என்னவென்றால், என் அப்பா என்னை ஒருமுறைகூட அடித்தது கிடையாது. ‘அப்புறம் நடந்ததைச் சொல்லணுமா!’ என்பதில் உறங்குகிறது அந்த உண்மை! அதைச் சொல்லியிருந்தால், ஜோக் என்ன ஆகியிருக்கும் என்று பாருங்கள். (இன்னொரு உதாரணம்: பாம்பு மாசமா இருப்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?)

இது தான் ஒரு கதை சொல்லும்போதும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது. சிலர் ஆரம்பிப்பார்கள். ‘மச்சான்..இன்னிக்கு என்ன ஆச்சு தெரியுமா? செம காமெடிடா’ என்று ஒரு சம்பவத்தை பயங்கர சிரிப்புடன் விவரிப்பார்கள். நமக்குத்தான் சிரிப்பே வராது. உண்மையில் அது காமெடியான விஷயமாகவே இருக்கும். ஆனால் சொல்லும் ஆர்டரில் அது வெறும் சம்பவமாக வெளிப்பட்டு விடும்.

காரணம், எதை முதலில் சொல்வது, எதை சொல்லாமல் விடுவது என்பதில் கவனம் எடுக்காமல் சொல்வதால்தான். உங்களிடமும் ஒரு நல்ல கதை இருக்கலாம். ஆனால் அதை சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லவில்லை என்றால் சொதப்பிவிடும்.

இந்த ஓஷோவின் அறிவுரையை மனதில் நிறுத்துங்கள். அத்துடன் ஹிட்ச்காக்கின் அறிவுரையையும் சேர்த்தால்……….

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

  1. தொடர்ந்து படிக்க வேண்டும்.நாளை படித்து விட்டு..............

    ReplyDelete
  2. படம் எடுக்க மட்டுமல்ல பதிவு எழுதவும் கற்றுக்கொடுத்தது பதிவு! நன்றி!

    ReplyDelete
  3. படம் எடுக்க மட்டுமல்ல பதிவு எழுதவும் கற்றுக்கொடுத்தது பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆம், கற்றுக்கொடுத்தது ஓஷோ.

      Delete
  4. ஆம். எங்கள் வீட்டில் கூட இப்படி நடப்பதுண்டு. நகைச்சுவை என்று இல்லை. கொஞ்சம் சஸ்பென்ஸ் கூட்டி நாம் சொல்ல நினைக்கும் விஷயத்தை, ட்விஸ்ட் லைனை முதலிலேயே போட்டு உடைத்து கடுப்பேத்துவார்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஏன் இதுக்கு இப்படிச் சிரிக்காங்கன்னு சொல்ல முடியாம முழிச்சிருப்பீங்களே..சேம் ப்ளட்!

      Delete
  5. வார்த்தைகள் கோர்வையாக இருக்க வேண்டும் என்ற சூத்திரம் புரிகிறது !

    ReplyDelete
  6. புராஜக்ட் A, பாம்பு மட்டுமல்ல உங்களது பல அனுபவ பதிவுகளை உதாரணமாக கொடுக்கலாம்!

    ReplyDelete
  7. மிகச் சிறந்த பகிர்வு... வார்த்தைகளை மாற்றிப் போட்டு எழுதுவது எப்படின்னு இதைப் படித்து தெரிந்து கொள்ளலாம்...

    ReplyDelete
  8. மிகச் சிறந்த பகிர்வு.

    ReplyDelete
  9. எஸ்.வி ஜோக்குகளந்த வகைப் பட்டவை. உதாரணத்திற்கு ஒன்று
    " ஹலோ ஐயா இருகிறரா?
    ஐயா மேல இருக்கிறார்.
    சரி நான அப்புறம் போன் செய்கிறேனென்று போனைக் கட் பன்னுகிறார்.ஏனெனில் பேசியவர் பெண், இன்னும் சிரிப்பு வரவில்லையா? "மேல"

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.