Sunday, August 10, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-20)


20.Exposition எனும் நவீன வெளிப்பாடு
புதிதாக திரைக்கதை எழுதும் அமெச்சூர் படைப்பாளிகள் பலரும் மாட்டிக்கொள்வது, இந்த Exposition எனும் ’முன்கதை சொல்லும் உத்தி’யில் தான். Exposition என்றால் என்ன என்பது பற்றி இருவேறு கருத்துகள் உண்டு. கதையின் செட்டப் போர்சனான ‘ஹீரோ யார், என்ன செய்கிறான், அவன் வாழ்க்கை முறை என்ன?’ என்று விளக்கும் ஆக்ட்-1 தான் Exposition என்று வாதிடுவோர் இருக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை அது முன்கதை (Exposition) அல்ல, ஆக்ட்-1 தான்.
நாம் திடீரென்று ஹீரோவின் 25 வயதில் கதையை ஆரம்பிக்கிறோம். அதற்கு முன் அவன் வாழ்க்கையில் கதைக்குத் தேவையான சில சிறிய விஷயங்கள் நடந்திருக்கலாம். அதை பார்வையாளர்களுக்குச் சொல்ல வேண்டும். அவனது சில ஸ்பெஷல் குணங்களையும் சொல்ல வேண்டிவரலாம். அவனது குடும்ப பிண்ணனியைப் பற்றியும் சொல்ல வேண்டி வரலாம்.

இதையெல்லாம் நிகழ்காலத்தில் கதை நடக்கும்போதே சொல்ல வேண்டும், சுவாரஸ்யம் கெடாமல். உதாரணமாக இந்த ஓப்பனிங் சீனைப் பாருங்கள்:

ஹீரோ பைக்கை வீட்டின் முன் நிறுத்திவிட்டு வீட்டினுள் நுழைகிறான். ஹாலில் அவன் அம்மா அமர்ந்திருக்கிறார். அவனைப் பார்த்ததும் பேச ஆரம்பிக்கிறார்:

“ஏண்டா இப்படி படிச்சிட்டு வேலைக்குப் போகாம ஊரைச் சுத்துறே? நீ படிச்சு எங்களைக் காப்பாத்துவேன்னு எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைச்சோம். உன் மூத்த அக்காவை கோயம்புத்தூர்ல கட்டிக்கொடுத்தோம். புருசன்கிட்ட சண்டை போட்டுட்டு டைவர்ஸ் வாங்கிட்டு வந்துட்டா. உன் இளைய அக்கா, இன்னும் கல்யாணம் ஆகாம நிக்குறா. உன் மூத்த தங்கச்சி வாய் பேச முடியாத ஊமை. இளையவளுக்கு கண்ணு இப்பவே சரியாத் தெரியலை. உன் அப்பா என்னடான்னா, பகல் எல்லாம் டாஸ்மாக்கே கதின்னு கிடக்கிறார். நைட்டு மட்டும் தான் வீ்ட்டுக்கு வர்றார். அதனால நானும் இப்போ ஆறுமாசமா முழுகாம இருக்கேன். நீயாவது பொறுப்பா இருக்கக்கூடாதா?’

ஹீரோவின் பேக்ரவுண்டைச் சொல்வது தான் இந்த சீனின் நோக்கம். ஆனால் இப்படி அந்தம்மா பேசினால், எவ்வளவு நாடகத்தனமாக இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். வீட்டுநிலைமை ஹீரோவுக்கு நன்றாகவே தெரியும், நமக்குத் தான் தெரியாது. அதை மறந்துவிட்டு, ஹீரோவிடமே அம்மா இப்படி விளக்கினால் நியாயமா? (அஃப்கோர்ஸ், அந்த ஆறுமாச கர்ப்ப விஷயம் வேண்டுமானால் ஹீரோவுக்குத் தெரியாமல் இருக்கலாம்!)

இவையெல்லாம் கதையின் போக்கில் அவ்வப்போது வந்துவிழ வேண்டிய விஷயங்கள். இந்த தகவல்களைத் தருகிறோம் என்பதே உறுத்தாத வகையில், முன்கதையைச் சொல்ல வேண்டியது அவசியம். ஹீரோவின் முன்கதை மட்டும் அல்ல, ஹீரோயின் – வில்லன் என அனைத்து முக்கிய கேரக்டர்களின் முன்கதையும் நாம் சொல்ல வேண்டி வரும். அதைச் சொன்னால்தான், கதையின் போக்கு பார்வையாளர்களுக்குப் புரியும். அதே நேரத்தில் அதைச் சொல்கிறோம் என்பதும் தனித்துத் தெரியக்கூடாது. அது தான் முன்கதை சொல்லும் உத்தியின் (Exposition)-ன் ஸ்பெஷாலிட்டி.
சமீபத்தில் வந்த படங்களில் முன்கதை மோசமாக சொல்லப்பட்ட படம், இது கதிர்வேலன் காதல். சந்தானம் கேரக்டரை அறிமுகப்படுத்த இப்படி ஒரு சீன்:
ஹீரோ சோகமாக அமர்ந்திருக்கிறார். நண்பர் வந்து ‘என்ன மாப்ளே சோகமா இருக்கே?’ என்று கேட்கிறார். ‘இன்னிக்கு என் நண்பனைப் பிரிஞ்ச நாள். நாங்க எப்படி இருந்தோம் தெரியுமா?’ என்று கேட்டுவிட்டு, ஒரு ஓப்பனிங் சாங்.

அதுமுடிந்த உடன், ‘இப்போ எங்க மாப்ளே உன் ஃப்ரெண்ட்?’ என்று கேட்கிறார் நண்பர். ’ ஒரு பிரச்சினையினால பிரிஞ்சிட்டோம். ஆனா மீண்டும் சேர்வோம்; என்று சொல்கிறார் ஹீரோ.

எவ்வளவு நாடகத்தனமாக இருக்கிறது பாருங்கள். இதே போன்றே அக்காவின் முன்கதையும் சொல்லப்பட்டிருக்கும். இதே இயக்குநரின் முதல்படமான சுந்தர பாண்டியனில் நண்பர்களின் முன்கதை உறுத்தாமல் சொல்லப்பட்டிருக்கும். எனவே முன்கதை விஷயத்தில் அதிக கவனமாக இருங்கள். நல்ல க்ரியேட்டிவிட்டியுடன், போதுமான நேரம் எடுத்து இதைச் செய்யவில்லை என்றால், சினிமா நாடகமாக ஆகிவிடும்.

முந்தானை முடிச்சு படத்தில் பாக்கியராஜ் கைக்குழந்தையுடன் அறிமுகம் ஆவார். அவர் மனைவியைப் பற்றி முதலில் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். பிறகு அவர் இறந்துவிட்டார் என்ற ஒருவரி முன்கதை சொல்லப்படும். பிறகு கொஞ்ச நேரம் சென்றபின் ‘அவர்கள் நன்றாக வாழ்ந்தார்கள்’ என்று சொல்லப்படும். பிறகு ‘நான் இறந்தால் வேறு பெண்ணை மணக்கக்கூடாது’ என்று மனைவியிடம் அவர் சத்தியம் கொடுத்தது சொல்லப்படும். எல்லாமே போதுமான இடைவெளியில், கதையில் மேலும் முடிச்சைப் போடும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கும்.

அதே போன்றே முதல் மரியாதையும் சிறப்பாக முன்கதை சொல்லப்பட்ட விஷயம். சிவாஜியின் மனைவி வடிவுக்கரசி ராட்சசி, சகித்துக்கொண்டு வாழ்கிறார், ஜாலியான மனுசன் என்றாலும் ஊரில் மதிப்புடன் வாழ்பவர் என்று பல விஷயங்களும் உறுத்தாமல் காட்சிகளின் வழியாக சிறப்புடன் சொல்லப்பட்டிருக்கும்.

ஒரு நாவல் எழுதுகிறோம் என்றால் ‘ஹீரோ இந்த ஊரில் வசிக்கிறார். அவர் பின்புலம் இது’ என்று வார்த்தைகளிலேயே நேரடியாக வர்ணித்துவிடலாம். ஆனால் சினிமாவில் அதை தவிர்க்க வேண்டும். படத்தின் ஆரம்பத்திலேயே சொல்லியே ஆகவேண்டிய தவிர்க்க முடியாத சூழல் என்றால், Narration உத்தியில் வாய்ஸ் ஓவரில் தான் சொல்லியாக வேண்டும். புத்திசாலித்தனமாக வசனங்களில் மறைத்துச் சொல்வதாக நினைத்து மாட்டிக்கொள்வதை விட இந்த உத்தி நல்லது.
ஹீரோ நல்லவர் என்பதைச் சொல்ல வேண்டும் என்றால், அவர் நடக்கும்போது இன்னொருவர் ‘யாரு அது, மலைச்சாமியா? நல்ல மனுசன்யா. அடுத்தவங்க காசுக்கு ஆசைப்பட மாட்டான்’ என்று சொல்வது மோசமான முன்கதை சொல்லும் உத்தி. பாக்கியராஜ் ஒரு பேட்டியில் இதை எப்படிச் சொல்லலாம் என்று பேசினார்.

’ஒருவர் தன் பர்ஸ் கீழே விழுந்தது தெரியாமல் நடக்கிறார். ஹீரோ அதை எடுத்து அவரிடம் கொடுக்கிறார்.’ என்று சீன் வைத்தால் போதும். இதை மேலும் மெருகேற்ற, ஹீரோ ஒரு மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்க காசு இல்லாமல் நின்றுகொண்டிருக்கிறார். அப்போது அதே மாதிரி கீழே கிடந்த மணிபர்ஸை எடுத்து, தான் வைத்துக்கொள்ளாமல் திருப்பித் தருகிறார் என்றால் பெட்டராக இருக்கும்.

’மருந்து வாங்க என்ன செய்வார்?’ என்று நாம் யோசிக்கும்வேளையில், அவர் நல்லவர் எனும் முன்கதை நம் மண்டையில் ஏறிவிடும். Save the Cat!

(தொடரும்)


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

12 comments:

  1. வசனத்தை விட காட்சியாக சொல்வது சரிதான்.நான் எனது இளமை எழுதும் கவிதை நீ கதையில் கதாநாயகியின் குணத்தையும் அவளது தைரியத்தையும் அறிமுக காட்சியில் சொல்லியிருந்தேன். ஹீரோ அறிமுக காட்சியில் இது போதாதோ என்று நினைத்து அவனது நண்பர்கள் மூலமும் பில்டப் கொடுத்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம். வசனத்தால் சொல்ல வேண்டிய கட்டாயம் என்றால், பிட்டுப் பிட்டாகச் சொல்லலாம்.

      Delete
  2. நன்று,எப்படிச் சொல்ல வேண்டும் என்று சில உதாரணங்களுடன் விளக்கியது நன்று.///சில கதாசிரியர்கள் சொதப்பி விடுவது எப்படி என்று இப்போது புரிகிறது.///பாரதிராஜா வாசனை அடிக்கிறது,ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
  3. பாக்யராஜ் சொன்னதுதான் சரி...எம்ஜியார் சிவாஜி படங்களில் இதுபோல கண்ட நியாபகம் !

    ReplyDelete
    Replies
    1. எம்.ஜி.ஆர் படங்களில் நிறைய வந்திருக்குண்ணே!

      Delete
  4. //தனால நானும் இப்போ ஆறுமாசமா முழுகாம இருக்கேன்.//
    குறும்புக்காரர் அண்ணே நீங்க....

    ReplyDelete
  5. அட்டகாசம்... பாக்கியராஜின் விலக்கம்....கலக்கல் பதிவர்

    ReplyDelete
    Replies
    1. விளக்குவதில் பாக்கியராஜ் வல்லவர்.

      Delete
  6. அதென்ன கடைசியில் ஒரு புக் பேர் போட்டிருக்கீங்க! படிச்சிட்டீஙகளா!

    ReplyDelete
    Replies
    1. அந்த புக் பற்றி, முன்னுரையிலும் முந்தைய ஒரு பகுதியிலும் சொல்லி இருக்கிறேனே பாஸ்!

      Delete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.