Wednesday, August 13, 2014

ஹிட்ச்காக்: Alfred Hitchcock - யார்?

1899ஆம் வருடம் இதே நாளில் இங்கிலாந்தில் பிறந்தவர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக். கத்தோலிக்க கிறிஸ்தவரான, காய்கறிக்கடை வைத்திருந்த வில்லியம் ஹிட்ச்காக்கிற்கும் எம்மா ழேனுக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக். (தன்னை ஹிட்ச் அல்லது ஹிட்ச்காக் என்றே அழைக்க வேண்டும் என்று அவர் விரும்பியதால், ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் இனி ஹிட்ச்காக்!).
1920களில்..
ஹிட்ச்காக்கின் ஐந்தாவது வயதில் நடந்த ஒரு நிகழ்வு, முக்கியமானதாக கருதப்படுகிறது. அவரது சேட்டை தாங்காமல் அவரது தந்தை அவரிடம் ஒரு பேப்பரில் ஏதோ எழுதிக்கொடுத்து, உள்ளூர் போலீஸ் ஸ்டேசனில் போய் அதைக் கொடுக்கச் சொன்னார். இவரும் அதை எடுத்துப் போய்க்கொடுக்க, அதைப் படித்த போலீஸ் ஹிட்ச்காக்கை தூக்கி உள்ளே வைத்துவிட்டார்கள். ஏனென்றால் அதில் ஏறக்குறைய இப்படி எழுதியிருந்தது : ‘தவறு செய்தால் என்ன தண்டனை என்று அவனுக்குப் புரியவேண்டும். எனவே அவனை கொஞ்சநேரம் உள்ளே வைத்து, மிரட்டி அனுப்பிவையுங்கள்...முடியல!’

போலீஸாரும் சிறிதுநேரம் கழித்து ‘இப்போது புரிந்ததா? இனி தவறு செய்யக்கூடாது’ என்று அறிவுரை சொல்லி, ஹிட்ச்காக்கை விடுதலை செய்தார்கள். ஜெயிலில் இருந்த கொஞ்ச நேரத்தில் சிறுவன் ஹிட்ச்காக், பயந்துபோனார். பின்னர் வாழ்க்கை முழுவதுமே ‘எதற்கும் எளிதில் பயப்படக்கூடியவராக, குறிப்பாக போலீஸ் என்றால் நடுங்கக்கூடியவராக’ ஆனார் ஹிட்ச்காக். மனரீதியில் அவரால் அந்த பயத்தில் இருந்து மீள முடியவில்லை. எது தனது குறையோ, அதையே தன் வெற்றிக்குப் படிக்கட்டாக ஆக்கினார் ஹிட்ச்காக். ஆம். ‘பயம் என்றால் என்ன? எதெற்கெல்லாம் பயப்படுகிறோம்?’ என்பதில் தெளிவடைந்த அவர், பின்னாளில் தன் படங்களை ‘பய உணர்ச்சியைத் தூண்டும்’ த்ரில்லர்களாக அமைத்தார். பார்வையாளர்களின் உணர்ச்சிகளுடன் எப்படி விளையாடுவது என்பதில் கைதேர்ந்தவராக ஆனார். 

Henley Telegraph Company எனும் கேபிள் கம்பெனியில் தன் பதினைந்தாவது வயதில் வேலைக்குச் சேர்ந்தார். அதே நேரத்தில் ஓவியக்கலை பற்றியும் University of London-ல் படிக்க ஆரம்பித்தார். அதையறிந்த அவரின் கம்பெனி, தங்கள் விளம்பரத்திற்கு அவரை டிசைன் செய்து தரும்படி கேட்டது. சந்தோசமாக தன் கலைப்பயணத்தை அதன்மூலம் தொடங்கினார் ஹிட்ச்காக். அந்த கம்பெனி வெளியிட்ட நிறுவன மலர் இதழ்களில் கட்டுரைகளும் கதைகளும் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் கதை Gas(1919), ஒரு பெண் தன்னை யாரோ தாக்கியதாக உணர்வதும், அது மாயை - அந்தப் பெண்ணின் கற்பிதம் என்று கிளைமாக்ஸில் தெரிவதாகவும் இருந்தது. அதாவது, முதல் கதையிலேயே தன்னுடைய பாதை என்ன என்பதை அவர் உணர்ந்திருந்தார். மர்மம், மாயை, கொலை, சஸ்பென்ஸ் என்பதெல்லாம் ஹிட்ச்காக்கின் ஃபேவரிட் விஷயங்கள்!
திருமணத்தின் போது..
இன்றைய Paramount Pictures, 1920ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தங்கள் கிளையை ஆரம்பித்தது. பிரிட்டிஷ் படங்கள் தயாரிப்பதில் இறங்கியது. அந்த அமெரிக்க கம்பெனியில் வேலை செய்வதன் மூலம், சினிமா பற்றி மேலும் கற்றுக்கொள்ள முடியும் என்று நினைத்த ஹிட்ச்காக், அங்கே ‘டைட்டில் டிசைனர்’ வேலைக்கு விண்ணப்பித்தார். அது மௌனப்படக் காலம் என்பதால், படத்தின் முதலில் மட்டுமல்லாது இடையிலும் வசனங்களை டைட்டிலாக காட்ட வேண்டும். அதற்கு ஓவியத்திறன் மட்டுமல்லாது, எதையும் சுருக்கமாகச் சொல்லும் எழுத்துத்திறனும் வேண்டும். ஓவியம், கதை இரண்டிலும் அனுபவமுள்ள ஹிட்ச்காக், எளிதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். டைட்டில் டிசைனராக அவர் வாழ்க்கை, சினிமாவில் ஆரம்பித்தது.

சீக்கிரமே டைட்டில் டிபார்ட்மெண்ட்டுக்கு ஹெட்டாக ஆனார் ஹிட்ச்காக். டைட்டில் எழுதும்போது, திரைக்கதை ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டார். ஆர்ட் டைரக்டர் மற்றும் அசிஸ்டெண்ட் டைரக்டர் வேலை கிடைத்ததால், ஹிட்ச்காக். Islington Studios எனும் வேறொரு நிறுவனத்திற்கு அடுத்து மாறினார். அங்கே தான் பின்னாளில் அவர் மனைவியாக Alma Reville -ஐச் சந்தித்தார். ஹிட்ச்காக்கை விட பெரிய போஸ்ட்டில் இருந்தார் அல்மா. (இயக்குநர் ஆகும்வரை அல்மாவிடம் அடக்கியே வாசித்தார் ஹிட்ச்காக்..பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்!) ஜெர்மனியில் தயாரான The Blackguard எனும் படத்தில் ஆர்ட் டைரக்டராக வேலை செய்தார் ஹிட்ச்காக். அங்கே தான் German Expressionism பற்றி கற்றுத் தேர்ந்தார். அவரது படங்களில் ஸ்டைலாக, அது பின்னாளில் ஆகியது. 

1922ஆம் ஆண்டு, முதன்முதலாக Number 13 எனும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாதி ஷூட்டிங்கிலேயே படம் ட்ராப் செய்யப்பட்டது. அடுத்து அவர் இயக்க ஆரம்பித்த Always Tell Your Wife படத்திற்கும் அதுவே நிகழ்ந்தது. பின்னர் 1925ஆம் ஆண்டு தான் அவரது முதல் முழுமையடைந்த படமாக The Pleasure Garden படம் உருவானது. ஆனாலும் பெரும்பாலான இடங்களில் அது ரிலீஸ் ஆகவில்லை. அந்த நேரத்தில் தான் முதல் ஹிட்ச்காக் ஸடைல் படமான The Lodger(1927) ரிலீஸ் ஆனது. அந்த படத்தின் வெற்றி, ஹிட்ச்காக்கை பிரபல இயக்குநராக ஆக்கியது. அவரது முந்தைய படமும் அதன்பின்னரே மக்களைச் சென்றடைந்தது.
மகளுடன்..
எட்டு (முழுமையடைந்த) மௌனப்படங்களை எடுத்தபின்னர், ஹிட்ச்காக் பிரிட்டிஷ் சினிமாவின் முதல் பேசும்படமான The Blackmail(1929)-ஐ எடுத்தார். பேசும்படங்களை விட மௌனப்படங்களே உண்மையான சினிமா எனும் எண்ணம் ஹிட்ச்காக்கிற்கு இருந்தது. இருப்பினும் டெக்னாலஜி வளர்ச்சியுடன் மோதாமல், பேசும்படங்களைத் தொடர்ந்து எடுக்க ஆரம்பித்தார். பொதுவாக ஹிட்ச்காக் எதனுடனும், யாருடனும் மோதுவதில்லை. எதையும் சரியென்று இலகுவாக எடுத்துக்கொண்டு முன்னகரும் மனது அவருக்கு இருந்தது. 

மொத்தம் 14 பேசும்படங்களை எடுத்தார் ஹிட்ச்காக். அவற்றில் The 39 Steps, The Man Who Knew Too Much, Sabotage, Young and Innocent, The Lady Vanishes ஆகியவை முக்கியமானவை. அவரது புகழை ஹாலிவுட் ஸ்டுடியோவரை சென்று சேர்த்தன, இந்த பிரிட்டிஷ் படங்கள். எனவே ஹாலிவுட்டில் இருந்து அவருக்கு அழைப்பு வரத்துவங்கியது. அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். Rebecca(1940) எனும் ஹிட்ச்காக்கின் முதல் படம் ஹாலிவுட்டை மிரட்டி, சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதினைப் பெற்றது. அதன்பின், தொடர்ந்து 36 ஆண்டுகள் ஹிட்ச்காக்கின் மெஸ்மரிசத்தில் ஹாலிவுட் மயங்கிக்கிடந்தது.

ஆரம்பத்தில் சஸ்பென்ஸ் படம் எடுக்கும் ஆசாமி என்று தான் பலரும் அவரைப் பற்றி நினைத்திருந்தார்கள். இங்கிலாந்தில் சினிமா விமர்சகர்களாக உருவெடுத்து, பின்னாளில் இயக்குநர்களாக ஆன François Truffaut, Claude Chabrol மற்றும் Éric Rohmer ஆகிய மூவர் தான், ஹிட்ச்காக்கின் படங்களை ஆராயும்போது, சினிமாவுக்கு டெக்னிகலாக ஹிட்ச்காக் செய்திருக்கும் சேவையைக் கண்டுகொண்டார்கள்.

French New Wave என்று அழைக்கப்பட்ட, ஐரோப்பிய சினிமாவைப் புரட்டிப்போட்ட மாற்றத்தை தன் The 400 Blows மூலம் ஆரம்பித்து வைத்தவர் François Truffaut. ஹிட்ச்காக்கை அவர் எடுத்த பேட்டி  Hitchcock/Truffaut எனும் பெயரில் புத்தகமாக வெளியாகி பெரும் புகழ் பெற்றது. (இந்த ஹிட்ச்காக் தொடருக்கும் அதுவே அடிப்படை.) Point of View, Suspense, Surprise, Montage Editing என பலதளங்களில் ஹிட்ச்காக், உலக சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறார் என்பதை தங்கள் ஆய்வின் மூலம் வெளியே கொண்டுவந்தார்கள் இந்த சிஷ்யர்கள்.

இங்கிலாந்தில் உருவான ஆதர் தியரி (Author Theory)யும் ஹிட்ச்காக்கிற்கு பெருமை சேர்த்தது. ‘சினிமா என்பது கூட்டுமுயற்சி. ஓவியம் அல்லது கதை போன்று தனிப்பட்ட ஒருவரின் ஆக்கம் அல்ல சினிமா’ எனும் கருத்தினை ஆதர் தியரி உடைத்தது. ஒரு நல்ல டைரக்டர், வெவ்வேறு டெக்னிஷியன்/நடிகர்/கதைகளுடன் ஒரு படத்தை உருவாக்கினாலும், அவரது முத்திரையை தன் படங்களில் அவரால் பதிக்க முடியும். ஒரு சினிமா உருவாக்கத்தில் இயக்குநரின் முடிவே இறுதியானது என்பதால், அப்படி உறுதியாக முடிவெடுக்கும், தனி ஸ்டைல் கொண்ட இயக்குநரே சினிமாவின் ஆதர் என்று ஆதர் தியரி சொன்னது. அதற்கு சிறந்த உதாரணமாக ஹிட்ச்காக் இருந்தார்.

அவரது படங்களில் நீதிபோதனை விஷயங்கள் குறைவு. மேலும் பெரும்பாலான படங்கள் கம்ர்சியலாக வெற்றி பெற்றவை. எனவே அறிவுஜீவிகள், பல்ஃப் பிக்சன் நாவல் ரேஞ்சுக்கு அவர் படங்களை நினைத்து வந்தார்கள். இங்கிலாந்து விமர்சகர்களின் ஆய்வுகுப் பிறகே, ஹிட்ச்காக்கை எல்லாரும் ஸ்டடி செய்ய ஆரம்பித்தார்கள். இன்று உலகின் சிறந்த படங்கள் லிஸ்ட்டில் முதல் இடத்தில் அவரது Vertigo (Citizen Cane இரண்டாவது இடத்தில்.இரண்டுக்கும் தான் போட்டி.) இருக்கிறது. சிறந்த த்ரில்லராக North By Northwest இருக்கிறது. சிறந்த ஹாரர் படமாக The Birds இருக்கிறது. சிறந்த சைக்காலஜி படமாக Psycho இருக்கிறது. Rear Window, Rope போன்ற படங்கள், சினிமா மாணவர்கள் படிக்க வேண்டிய பாடங்களாக ஆகிவிட்டிருக்கின்றன.

இயக்குநராக 54 வருடங்கள், 53 படங்கள், புதிய கதை சொல்லும் உத்திகள்-கேமிரா உத்திகள்-எடிட்டிங் உத்திகள் என சினிமாவுக்கு அவர் கொடுத்த கொடைகள் ஏராளம். இன்றைய வெற்றிகரமான பல இயக்குநர்களுக்கும், martin scorsese போன்ற ஜாம்பவான்களுக்கும் ஆதர்சமாக இருப்பது ஹிட்ச்காக்கும். அவர் படங்களும். அவரது படமும், நடிகர்களும் ஆஸ்கார் வாங்கியிருந்தாலும் ஹிட்ச்காக் எந்தவொரு படத்திற்கும் ஆஸ்கார் வாங்கியதில்லை என்பது ஒரு கொடுமையான ஆச்சரியம். பின்னர் அவர்களே வெட்கப்பட்டு, வாழ்நாள் சாதனையாளர் விருதினைக் கொடுத்தார்கள். அந்த நேரத்தில் விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவராக, அவர் ஆகியிருந்தார்!

தலைவருக்கு 115வது பிறந்த நாள் வாழ்த்துகள்!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comment:

  1. எது தனது குறையோ, அதையே தன் வெற்றிக்குப் படிக்கட்டாக ஆக்கினார் ஹிட்ச்காக்.///எல்லோரும் கற்க வேண்டிய விஷயம்.///'உங்கள்' தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.