Sunday, November 30, 2014

திரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 29


1.   ஆயிரம் முகங்களுடைய ஹீரோ

 திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லித்தர பல ஆங்கில குருக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிமுறையை நமக்கு பரிந்துரைக்கின்றனர். சிலர் திரைக்கதையை சீக்வென்ஸ்களாக பிரித்து எழுதப் பரிந்துரைக்கின்றனர். சிலர் 3- ஆக்ட் வடிவம் போதுமென்கின்றனர். சிலரோ 7-ஆக்ட் வரை பரிந்துரைக்கின்றனர். சிலர் வடிவம் ஒரு பிரச்சினையே அல்ல, கதையைத் தெளிவாகச் சொன்னால் போதும் என்கின்றனர்.

புதிதாக படிக்க ஆரம்பிக்கும் நாம் இதில் குழம்பிப்போவது சகஜம் தான். ’மதுரைக்கு எப்படிப் போவது?’ என்று ஒருவரிடம் நாம் கேட்க, அவர் ‘ கிழக்கே பார்த்தும் போகலாம்...தெற்கே பார்த்தும் போகலாம்..மேற்கு திசையிலும் போகலாம்..ஒன்னும் பிரச்சினையில்லை’ என்று சொன்னால், நாம் என்ன செய்வோம்? எங்கேயும் போகாமல் அங்கேயே நிற்போம், இல்லையா? ஏறக்குறைய அது தான் எனக்கும் நடந்தது. ஒரு வருடத்திற்கு மேல் எதுவுமே செய்யாமல் எல்லா வழிமுறைகளையும் நான் பார்க்கும் சினிமாக்களில் அப்ளை செய்து பார்த்துக்கொண்டிருந்தேன். சில படங்களுக்குத் தான் சில வழிமுறைகள் பொருந்தின.

இந்த குழப்பத்தில் இருந்து என்னை வெளியே எடுத்தது, ’நம்முடைய நோக்கம் என்ன?’ எனும் கேள்வி தான். ஹாலிவுட்டில் உள்ள அத்தனை வழிமுறைகளையும் கற்றுத் தேர்வதைவிட, தமிழ் சினிமாவுக்குப் பொருத்தமான திரைக்கதை அமைப்பை கற்றுத் தேர்வது தான் நம்முடைய நோக்கம். அந்தக் கோணத்தில் ‘ஹாலிவுட் திரைக்கதை வழிமுறைகளை’ ஆராய்ந்தபோது, நான் கண்டடைந்தது அல்லது எனக்குச் சரியென்று தோன்றியது Blake Snyder-ன் பீட் ஷீட் அமைப்பு தான்.
அவர் அதை இரு மேதைகளின் பாணியைச் சேர்த்து, புதிதாக ஒரு வடிவத்தை அமைத்தார். அந்த இரு மேதைகள், Joseph Campbell மற்றும் Syd Field. இதில் சிட் ஃபீல்ட் சொன்ன சில அடிப்படை விஷயங்களை ஹிட்ச்காக் படங்களை வைத்து, நான் கற்றுத் தேர்ந்தேன். அவற்றைத் தான் இந்த தொடரின் முதல் பகுதியில் பார்த்தோம். இந்த பதிவில் Joseph Campbell பற்றிப் பார்ப்போம். பின்னர் Blake Snyder பற்றியும், அவரது பீட் ஷீட் எந்த அளவுக்கு நமக்கு சரியாக வரும், அதில் உள்ள குறைகள் என்ன என்பது பற்றியும் பார்ப்போம். (பீட் ஷீட்டை முடித்தபிறகு, சீன் எழுதுவது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.)

1949ல் Joseph Campbell என்பவர் எழுதிய The Hero with a Thousand Faces எனும் புத்தகம் வெளியானது. புராணங்களை ஆராய்ந்து, ஒரு ஹீரோவின் பயணம் ஒரு குறிப்பிட்ட வடிவில் இருப்பதைக் கண்டு சொன்னார் அவர். அவரது நோக்கம், அதை வைத்து மனிதர்களின் சைக்காலஜியை அலசுவதும், ஆன்மீகரீதியிலும் மனநலரீதியிலும் ஒரு குழந்தை/மனிதன் கடந்து வரும் பாதையைப் புரிந்துகொள்வதுமே!

மோசஸ், இயேசு கிறிஸ்து, புத்தர் என இதிகாச நாயகர்களின் வாழ்க்கையையும் கிரேக்க புராணங்களையும் ஆராய்ந்து இந்தப் புத்தகத்தை எழுதினார் ஜோசப் கேம்பல். திரைக்கதை பற்றி எல்லாம் அவர் யோசிக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் அவர் கண்டு சொன்னது, திரைக்கதை ஆக்கத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது.

ஹீரோவின் பயணத்தை Monomyth என்று அழைத்தார். அதை மூன்று பகுதிகளாகப் பிரித்தார். Departure, Initiation, Return என்று அவற்றை அழைத்தார். இது அரிஸ்டாட்டில் சொன்ன மூன்று அங்க வடிவத்துடன் ஒத்திருந்ததால், திரைக்கதை ஆசிரியர்களின் மூளையில் லைட் எரிந்தது.

Departure: ஹீரோ ஒரு சாமானிய உலகத்தில் இருந்து இன்னொரு இயல்புநிலை கடந்த இன்னொரு உலகத்திற்குள் பிரவேசிக்கிறான். (Set Up - தோன்றுதல்)

Initiation: அங்கே பல சக்திகளை எதிர்கொள்கிறான். (Confrontation – திரிதல்)

Return: அதில் வெற்றி கண்டு, மீண்டும் தன் பழைய நிலைக்கே திரும்புகிறான். (Resolution – ஒடுங்குதல்)
ஹீரோ ஒரு வட்டத்தில் 17 நிலைகளைக் கடந்து ஆரம்பித்த இடத்திற்கே வருவதாக கேம்பல் சொன்னார். தமிழில் இந்த அமைப்பில் உருவான படம், தேவர் மகன். கமலின் வருகையும், அவரது கேரக்டர் ஆர்க்கும் அந்த 17 நிலைகளில் பெரும்பாலானவற்றை ஒத்திருக்கும். அந்த 17 நிலைகளை இப்போது பார்ப்போம்:




1. Call to Adventure : ஹீரோவுக்கு ஒரு சவால் அல்லது எச்சரிக்கை விடப்படுகிறது. அவன் அதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டிய சூழல்.

2. Refusal of the Call : ஹீரோ அந்த சவாலை ஏற்றுக்கொள்வதில்லை. ஏற்கனவே இருக்கின்ற சொகுசான வாழ்க்கையை விட்டுவிட்டு, சாகசம் புரிய அவன் தயாராக இல்லை.

3. Supernatural Aid: ஹீரோ யாரோ ஒரு பெரியவர் அல்லது வழிகாட்டி ஒருவரிடம் அறிவுரை/உதவியைக் கேட்கிறான். 

4. Crossing of the First Threshold : ஹீரோ முதல் தடையை அந்த வழிகாட்டியிடமே எதிர்கொள்கிறான். நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலமாகவும் மனவலிமை மூலமாகவும் அவரை சம்மதிக்க வைக்கிறான்.

5. Belly of the Whale : தன் உலகத்தை விட்டு, ஹீரோ புதிய உலகத்திற்குள் பிரவேசிக்கிறான். வெற்றி பெற வேண்டுமென்றால், இந்த புதிய உலகத்திற்குள் அவன் புகுந்து புறப்பட வேண்டும்.

6. Road of Trials: ஹீரோவின் வலிமையையும் புத்திசாலித்தனத்தையும் சோதிக்கும் சில தடைகளை எதிர்கொண்டு வெல்கிறான்.

7. Meeting with the Goddess: இந்த வெற்றி ஹீரோவுக்கு ஓய்வையும் சொகுசையும் தருகிறது. ஆனாலும் இது தற்காலிக வெற்றி தான். ஹீரோ இங்கே கொஞ்சம் அசந்தாலும், எதிர்சக்தி ஹீரோவைக் காலி செய்துவிடும்

8. Woman as the Temptress : ஹீரோ தன் சொந்த ஆசைகளை எதிர்கொண்டு வெல்ல வேண்டும். தன் இறுதிக்கோளை அடைய, இந்த ஆசைகளிடம் இருந்து அவன் விடுபட்டு வர வேண்டும்.

9. Atonement with the Father: ஹீரோ தனக்குள் இருக்கும் ஒன்றுடனோ அல்லது தன் தந்தையுடனோ இரண்டறக் கலக்க வேண்டும்.

10. Apotheosis : ஹீரோ தனக்குள் இருக்கும் எல்லைகளைத் தாண்டிவிட்டான். எல்லாரையும் விட உயர்ந்து விட்டான். ஆனாலும் அவன் இந்த அங்கீகாரத்தை தன் உலகத்துடன் பகிர்ந்துகொள்ள, கடவுள்களுக்கு நிகரான உயர்ந்த நிலையை அவன் மறுக்க வேண்டும்.

11. The Ultimate Boon: ஹீரோ தன் இறுதி பரிசினை வெல்கிறான். அதன் மூலம் இந்த உலகத்தில் பிரிவை குணப்படுத்த முடியும். இந்த பரிசினை அவன் கடவுளிடமிருந்து திருடி இருக்கலாம் அல்லது கடவுளே கொடுத்திருக்கலாம்.

12. Refusal of the Return: ஹீரோ தன் குறிக்கோளை அடைய விரும்பவில்லை. ஒருவேளை தனக்குக் கிடைத்த ஆசீர்வாதம்/பரிசினை பகிரவில்லை அல்லது இந்த உயர்ந்த நிலையை அவன் எஞ்சாய் பண்ணுகிறான்.

13. The Magic Flight : ஹீரோ அதை திருடி இருந்தால், உலகின் மூலைக்கே விரட்டப்படுகிறான். அல்லது விரும்பி கொடுக்கப்பட்டிருந்தால் கடவுளின் துணையுடன் தன் வீட்டிற்கு விரைகின்றான்.

14. Rescue from Without : ஹீரோவால் தனியே இயல்புநிலைக்கு திரும்ப முடியாது. எனவே நண்பர்களின் துணையுடன் அதைச் செய்கிறான்.

15. The Crossing of the Return Threshold: ஹீரோ தனக்குக் கிடைத்த ஆசீர்வாதத்தை தன் உலகிற்கு கொண்டு வருகிறான். இது ஒரு ஒன் வே. கடவுளே நினைத்தாலும், அதை திரும்ப எடுக்க முடியாது.

16. Master of the Two Worlds: ஹீரோ தன் குறிக்கோளில் ஜெயித்துவிட்டதால், அவனால் இரு உலகிலும் சஞ்சரிக்க முடியும். இப்போது அவனே வழிகாட்டி ஆகிவிட்டான்.

17. Freedom to Live : புதிய சைக்கிள் ஆரம்பம்.ஹீரோவின் ஆட்சி ஆரம்பம்.

(தொடரும்)  
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 29"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, November 28, 2014

காவியத் தலைவன் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
தமிழ் சினிமாவில் உள்ள மரியாதைக்குரிய இயக்குநர்களில் ஒருவரான வசந்தபாலனின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் - நீரவ் ஷா - ஜெயமோகன் என பெருந்தலைகளின் கூட்டணியில் இன்று வெளியாகியிருக்கும் படம், காவியத் தலைவன்.
ஒரு ஊர்ல..:
நாடகசபா நடத்தி வரும் நாசரின் சீடர்கள் சித்தார்த்தும், பிருத்விராஜும். சீனியரான பிருத்விராஜுக்கும் சித்தார்த்திற்குமான இடையிலான நட்பும், உரசலும் தான் மையக்கதை. வெறுப்பையும் வஞ்சத்தையும் பிருத்விராஜ் வளர்த்துக்கொண்டே வர, அன்பை மட்டுமே பதிலுக்குக் கொடுக்கும் சித்தார்த் எனும் நாடகக் கலைஞனைப் பற்றிப் பேசுகிறது படம்.

உரிச்சா....:
உண்மையைச் சொல்வதென்றால், இந்தப் படத்திற்கு பயந்துகொண்டே தான் சென்றேன். ட்ரெய்லரைப் பார்க்கும்போது, படமும் நாடகம் போன்று இருக்குமோ என்ற பயம் இருந்தது. ஆனால் படத்தின் ஆரம்பத்தில் வரும் நாடகம் சம்பந்தப்பட்ட காட்சிகள் செம இண்டரஸ்ட்டிங். நாடகசபா நடத்தும் ஸ்வாமிகளாக நாசரும், அவரது சிஷ்யர்களாக ப்ருத்விராஜூம், சித்தார்த்தும் அந்த கேரக்டர்களாகவே மனதில் ஒட்டிக்கொள்கிறார்கள். நாசர் சித்தார்த்தை பாராட்டும்போதெல்லாம், ப்ருத்விராஜ் கடுப்பாவதை ஒரு சீனிலேயே புரிய வைத்துவிடுகிறார்கள்.

அடுத்து அதே நாடகசபாவிற்கு நடிகையாக வந்து சேர்கிறார் வேதிகா. அவர் மேல் ப்ருத்விராஜ் காதல் கொள்ள, அவரோ சித்தார்த்தை விரும்புகிறார். இது எதுவும் அறியாத சித்தார், ஜமீந்தார் பெண்ணான இளவரசியை காதலிக்கிறார். அந்தக் காதல் நாசருக்குத் தெரியவர, அதன்பின் நடக்கும் ரணகளம் அட்டகாசம். அந்தக் காதல் எல்லோருடைய வாழ்க்கையையும் புரட்டிபோடுகிறது. குறிப்பாக இண்டர்வெல் ப்ளாக் அருமை. அதுவரை படம் நல்ல விறுவிறுப்புடன் செல்கிறது.

நாடகக் கலைஞர்களின் வாழ்க்கை முறையை போரடிக்கமால் காட்சிப்படுத்தியிருப்பதும், அவர்களின் வித்யாகர்வமும் குருபக்தியும் அற்புதமாக திரையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ப்ருத்விராஜ் மனமாற்றத்தை ராவண ஓவியம் தீட்டப்படும் ஷாட்களுடன் சொல்வது அருமை.
ஆனால் இடைவேளைக்குப் பிறகு,  நாடகசபாவிலிருந்து விரட்டப்பட்ட சித்தார்த், மீண்டும் அங்கே வந்து சேரும் சீனுக்குப் பிறகு, ஒரு சலிப்பு வந்துவிடுகிறது. சித்தார்த் தேசபக்தி நாடகம் போடுவதும், போலீஸ் அவரை அடிப்பதும், மிரட்டுவதும் எவ்வித சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தவில்லை. கிளைமாக்ஸில் நாடகத்தன்மையே வந்துவிடுகிறது. கிளைமாக்ஸைவிட, ப்ருத்விராஜின் கிளைமாக்ஸ் நெஞ்சைத் தொட்டது.

கலை, இசை, எடிட்டிங், நடிப்பு, வசனம், இயக்கம் என எல்லாவற்றிலும் நல்ல குவாலிட்டி தெரிகின்றது. படத்தை ரசிக்க வைப்பதும் அது தான்.வசந்தபாலன் படங்களில் எதையும் நெகடிவ்வாக அணுகும் ஒரு போக்கு இருக்கும். இதில் அப்படியில்லாமல், பாசிடிவ்வாக படம் நகர்வது பெரும் ஆறுதல்.

கிட்டப்பா - கே.பி.சுந்தராம்பாள் காதல்கதையை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருந்தாலும், அந்த காதல்கதையில் விஷுவலாகக் காட்ட விஷேசமாக ஏதும் இல்லை என்பதே சோகம்!

சித்தார்த்:

இதுவரை ‘பாய்ஸ்’ சித்தார்த்தாக இருந்த இவரை இனிமேல் காவியத் தலைவன் சித்தார்த் என்று அழைக்கலாம். அருமையான நடிப்பு. அப்பாவியாகவும், நடிப்பு மேல் வெறி கொண்டவராகவும், காதலனாக, குற்றவுணர்ச்சியால் வாடுபவராக, நாடகக் கலைஞனாக பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். நாடக மேடையில் இவர் வரும் வெவ்வேறு வேஷங்கள் கச்சிதமாகப் பொருந்துகின்றன.(அந்த கட்டபொம்மன், திப்பு சுல்தான் தவிர்த்து!!). குறிப்பாக சூரபத்மனாக ப்ருத்விராஜ் ஓவர் ஆக்ட்டிங் செய்ய, இவர் இயல்பான நடிப்பை நடித்துக்காட்டி நாசரிடம் பாராட்டுப் பெறும் இடத்தில் கலக்கிவிட்டார். தீயா வேலை செய்யணும் குமாரு-ஜிகர்தண்டா- எனக்குள் ஒருவன் என இவர் படங்களை செலக்ட் செய்யும் விதத்தைப் பார்த்தால், தமிழ் சினிமாவில் வலுவாகக் காலூன்ற முடிவுசெய்துவிட்டார் என்றே தெரிகிறது. அதை இந்தப் படத்தில் காட்டியிருக்கும் நடிப்பிலும் பார்க்க முடிகிறது.

ப்ருத்விராஜ்:
சித்தார்த்துக்கு ஈகுவலான, ஆனால் கொஞ்சம் நெகடிவ்வான கேரக்டர். நடிப்பிற்கு நல்ல வாய்ப்புள்ள கேரக்டர் என்பதால், பல காட்சிகளில் கலக்குகிறார். ஸ்த்ரீ பார்ட்டாக, ராஜபார்ட்டாக அவர் போடும் வேஷங்களும், நாடகத்திற்கு கூட்டம் வரவில்லையென வெம்பும் காட்சிகளும் நன்றாக உள்ளன.

வேதிகா:

பரதேசியில் கிடைத்த வாய்ப்பை கெடுத்துக்கொண்டவர், இதில் கிடைத்த வாய்ப்பில் புகுந்து விளையாடியிருக்கிறார். அவரது அறிமுகக்காட்சியில் அவர் ஆடும் நடனமும், முகபாவங்களும் ஒரு நல்ல நடிகையாக அவர் வலம்வருவதற்கான தகுதிகொண்டவர் என்று நிரூபிக்கின்றன. என்ன நடந்தாலும், எத்தனை வருடங்கள் கடந்தாலும் சித்தார்த்தை நினைத்தே வாழும் அந்த கேரக்டரைசேஷன் அருமை.

சொந்த பந்தங்கள்:
நாசர் குருவாக வருகிறார். கண்டிப்பும், அன்பும், நாடகத்தின் மேல் பக்தியுமாக அவர் வரும் காட்சிகளில் நம் மனதைக் கொள்ளை கொள்கிறார். தம்பி ராமையா கொஞ்சம் சிரிக்க வைக்கிறார், சிங்கம்புலி கூட இருக்கிறார். ஜமீன் இளவரசியாக வரும் அனைகாவும் அவர் வரும் காட்சிகளும் அழகு.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- ஜமீன் வீட்டுக்கு இரவில் சித்தார்த் கேஷுவலாகப் போய் காதல் செய்துவரும் காட்சிகளில் லாஜிக்கே இல்லை. காவலாளி இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அம்மா-அப்பா கூடவா அங்கே இருக்க மாட்டார்கள்? காதலைச் சொல்வது தான் முக்கியம், மீதியை ஆடியன்ஸ் புரிந்துகொள்வார்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.
- யூகிக்க வைக்கும் காட்சியமைப்புகள்.
- இடைவேளைக்குப் பின் கதை நகராததால், வரலாற்றுப்பட ‘போர் ஃபீலிங்’ வருவது.
- உணர்ச்சிகரமான(!) கிளைமாக்ஸ்
- சித்தார்க்கும் ப்ருத்விராஜுக்கும் இடையிலான ‘அன்பு-வெறுப்பு’ போராட்டத்தைப் பார்க்கும்போது கடல் படத்தின் ‘அரவிந்தசாமி-அர்ஜுன்’ ஞாபகம் வருகிறது.

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையையும் அந்த காலகட்டத்தையும் கண்முன்னே கொண்டுவந்தது
- சுவாரஸ்யமான முதல்பாதி..குறிப்பாக சித்தார்த்தின் ஜமீன் காதல் நாசருக்குத் தெரிந்ததும் வரும் காட்சிகள்
- நாசர், சித்தார்த், பிருத்விராஜ் ஆகிய மூவரின் அற்புதமான நடிப்பு
- ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும், பிண்ணனி இசையும். (அதிக பாடல்கள் என்றாலும், பார்ப்பதற்கு அலுக்கவில்லை)
- சந்தானத்தின் கலை இயக்கம், நாடக மேடை, தனித்திருக்கும் ப்ருத்விராஜின் வீடு, நாடக கொட்டகை என நல்ல உழைப்பு
- நீரவ் ஷாவின் குளிர்ச்சியான, ஃப்ரெஷ்ஷான ஒளிப்பதிவு

பார்க்கலாமா?
பார்க்கலாம்.


மேலும் வாசிக்க... "காவியத் தலைவன் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, November 23, 2014

திரைக்கதை சூத்திரங்கள் – -2- பகுதி 28

 அரிஸ்டாட்டில் எனும் ஆரம்பம்

குருகுலக் கல்வி தான் நம் சமூக வழக்கம். மருத்துவமானாலும் சாஸ்திரங்கள் ஆனாலும் ஒரு குருவினை அண்டி கற்றுக்கொள்வதே நம் வழக்கம். இந்த முறையில் ஒரு மிகப்பெரிய குறை உண்டு. ஒரு குரு பரம்பரை அழிந்தால், அந்த கல்விச் செல்வங்களும் அவர்களுடன் அழிந்துவிடும். வானியல், சித்த மருத்துவம் என பல விஷயங்களில் நாம் அப்படி இழந்தவை அதிகம்.

கல்வியைப் பொதுவில் வைப்பது எனும் பழக்கமே இல்லாத சமூகம் நம்முடையது. அது இன்று மாறிவிட்டது என்று நீங்கள் நம்பினாலும், சினிமாவைப் பொறுத்தவரை இன்னும் தொடர்கிறது என்பதே வேதனை. நாடக காலம் முதல் டிஜிடல் சினிமா வரை எத்தனையோ ஜாம்பவான்கள் இங்கே சாதித்திருக்கிறார்கள்.

திரைக்கதை பற்றியோ, ஒளிப்பதிவு பற்றியோ, இயக்கம் பற்றியோ எதையாவது எங்காவது எழுதி வைத்திருக்கிறார்களா என்று தேடிப் பாருங்கள். இருக்கவே இருக்காது. ‘அவர் தமிழ் சினிமாவில் புதிய அலையைத் தோற்றுவித்தவர். இவர் நடிகர்களை அடிப்பார். அவருக்கும் அந்த நடிகைக்கும் காதல்ல்ல்ல்ல்’ என்பது போன்ற அரிய விஷயங்கள் தான் நமக்குக் கிடைக்குமேயொழிய, டெக்னிகலாக எதுவும் உங்களுக்குக் கிடைக்காது.

பட வாய்ப்பே இல்லாமல் சும்மா இருந்தாலும்கூட, தான் கற்றதை பொதுவில் வைப்போம் எனும் எண்ணம் பெரும்பாலோனோர்க்கு வருவதேயில்லை. காரணம், நம் வம்சம் அப்படி!

ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமா? ’வா..வந்து என்னிடம் அடிமையாக இரு. ஏவல் வேலைகளைச் செய். முடிந்தால், கற்றுக்கொள்’ எனும் நவீன குருகுல மனோபாவமே இன்னும் பெரும்பாலான இடங்களில் கோலோச்சுகிறது. ஒரு கேரக்டரை எப்படி வடிவமைத்தார்கள் என்றோ, ஒரு ஷாட்டை ஏன் அப்படி எடுத்தார்கள் என்றோ பொதுவில் யாரும் பேசுவதேயில்லை. (இப்போழுது பரவாயில்லை!)

அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், திரைப்படக் கல்லூரிகளுக்குத் தான் நீங்கள் போக வேண்டும். கல்வியே சென்ற தலைமுறையில் தான் பரவலாக்கப்பட்டிருக்கிறது. நல்ல வேலையும் சம்பளமும் இந்த தலைமுறையில் தான் பரவலாகக் கிடைக்கிறது. இதில் குடும்பத்தைக் காப்பாற்றுவதா, திரைப்படக் கல்லூரிக்குப் போவதா?

பிறநாட்டுப் படைப்பாளிகள் குறிப்பாக ஹாலிவுட் படைப்பாளிகள் அந்த விஷயத்தில் தங்கமோ தங்கம். ஹிட்ச்காக்கும், மார்டினோ ஸ்கார்ஸேஸியும் இன்னபிற பெரியவர்களும் கொடுத்திருக்கும் பேட்டிகளைப் பார்த்தால், பிரமிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு படத்தையும், சில முக்கிய காட்சிகளை, சில ஷாட்களை எப்படி எடுத்தோம் என்று விலாவரியாக விளக்குகிறார்கள். ‘அய்யய்யோ…அடுத்தவன் கற்றுக்கொள்வானே’ எனும் பயமே(!) இல்லை.

ஹிட்ச்காக் ஹாலிவுட் வரும் முன்பே, தனது ஐரோப்பியப் படங்களின் கதையை எப்படி உருவாக்கினோம் என்று மீட்டிங்கிலும் பேட்டிகளிலும் வெளிப்படையாகப் பேசுகிறார். இங்கே பில்டப்களும், துதிபாடல்களும் தான் நமக்குக் கிடைக்கின்றன. (பாலு மகேந்திரா, பாக்கியராஜ் போன்ற சிலர் மட்டும் விதிவிலக்கு. அவர்களின் பேட்டிகளில் நல்ல தகவல்கள் இருக்கும்)

இயல், இசை, நாடகம் என எல்லாவற்றிலும் நாம் தனித்தன்மை உடையவர்களாக இருந்தும், சினிமாவைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நம் மண்ணின் மைந்தர்களை நம்பிப் பிரயோஜனம் இல்லை என்பதே பொதுவான நிலை. எனவே தான் திரைக்கதை பற்றிக் கற்றுக்கொள்ள, ஆங்கிலப் புத்தகங்களை நாடினேன்.

பல புத்தகங்களைப் படித்தபின்னர், ஹிட்ச்காக் கொடுத்த 12 மணி நேரப் பேட்டியான “Hitchcock/Traufut புத்தகத்தைப் படித்தேன். ஆச்சரியகரமாக, இதுவரை நான் படித்த பல விஷயங்களையும் இந்தப் புத்தகத்தில் இவர் வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். இந்த தொடரின் முதல் பாகத்தில் வந்தவற்றில், பெரும்பாலானவை அவரிடம் நான் கற்றுக்கொண்டது தான்.

நம் கதை, நம் முன்னோர்களுடனே முடிந்துவிட்டாலும் ஹாலிவுட்டில் நிலைமை அப்படி இல்லை என்பது பெரும் ஆறுதல்.

கிரேக்க மேதையான அரிஸ்டாட்டில் தன் Poetics நூலில் நாடகம் பற்றி எழுதுகையில் ‘ஆரம்பம், மத்திமம், முடிவு ஆகிய மூன்றைக் கொண்ட நாடகமே முழுமையானது’ என்று சொன்னார். அந்த தீப்பொறி தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம். அதில் இருந்து ஒரு நாடகத்திற்கு மூன்று ஆக்ட்கள் அவசியம் என்றும் அவை ‘Set Up(அமைப்பு), Confrontation(எதிர்கொள்ளல்), Resolution(தீர்வு)’ என்றும் ஒரு நாடக இலக்கணம் உருவானது. இவற்றையே மூன்று அங்க வடிவம் (Three Act Structure) என்று அழைத்தார்கள்.

இது ஒரு அடிப்படையான இலக்கணம் தான். இது ஏறக்குறைய ‘தோன்றுதல், திரிதல், ஒடுங்குதல்’ எனும் நமது இலக்கணத்திற்கு இணையானது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். இது காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் ஒரு வடிவம் தான்.

இதை வைத்து ‘ ஹீரோ & முக்கிய கேரக்டர்கள் அறிமுகம் – ஒரு பிரச்சினை அல்லது சவால் – கிளைமாக்ஸ்’ என்று சீன் டெவலப் செய்யலாம். நாம் சென்றபகுதியிலேயே முப்பது சீன் எழுதும் அளவிற்கு டெவலப் ஆகிவிட்டோமே என்று நீங்கள் யோசிக்கலாம். நல்ல காமன் சென்ஸும், ஆடியன்ஸின் பல்ஸ் அறியும் சைக்காலஜியும் இருந்தால், 60 சீன்களையும் டெவலப் செய்ய இந்த தொடரின் முதல் பாகமே போதுமானது.

ஆனாலும் நமக்கு ஏதோவொன்று குறைவதால், தொடர்ந்து இணைந்து கற்போம்!

(தொடரும்)

மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் – -2- பகுதி 28"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, November 22, 2014

வன்மம் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
’கெஸ்ட் ரோல்’ ஸ்பெஷலிஸ்ட் விஜய் சேதுபது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கொஞ்சம் முன்னேறி டபுள் ஹீரோவாக நடித்திருக்கும் படம், வன்மம். யாமிருக்கே பயமே புகழ் கிருஷ்ணா இன்னொரு ஹீரோவாக நடிக்க, இன்று வெளியாகியிருக்கும் படம் வன்மம்.

ஒரு ஊர்ல..:

விஜய் சேதுபதியும் கிருஷ்ணாவும் நண்பர்கள். நண்பனின் உயிரைக்காக்க, ஹீரோயினின் அண்ணனைக் கொல்கிறார் விஜய் சேதுபதி. அந்தக் கொலையும், அதனால் நட்பில் விரிசல் வருவதும், அதன் பின்விளைவுகளுமே படம்.

உரிச்சா....:
நட்பை அடிப்படையாக வைத்து எத்தனையோ படங்கள் தமிழில் வந்துவிட்டன. இதுவும் அந்தவகைப் படம் தான். ஆனாலும், படத்தில் எழும் சிக்கலை வித்தியாசமானதாக ஆக்கியதால் கதையும் புதிதாகத் தெரிகிறது.

கிருஷ்ணாவின் ராசியோ என்னவோ, ’யாமிருக்க பயமே’ மாதிரியே இதிலும் படத்தின் முதல் அரைமணி நேரம் செம போர். அந்த அரைமணி நேரத்தில் விஜய் சேதுபதி அடக்கி வாசித்து, கிருஷ்ணாவிற்கு அதிக சீன்களை வாரி வழங்கியிருக்கிறார். கிருஷ்ணாவும் சுனைனாவும் காதலிக்கும் சீன்களில் கற்பனை வறட்சி. சுனைனாவின் அண்ணனாக நடித்துள்ள ‘கோலி சோடா’ மதுசூதனன் கொஞ்ச நேரமே வந்தாலும், செம நடிப்பு. அவர் கிருஷ்ணாவை வெட்ட வருவதும், விஜய் சேதுபதி அதைத் தடுக்கப்போய் அவரைக் கொல்வதும் செம ட்விஸ்ட்.

அதற்குப் பிறகு நண்பர்கள் பிரிகிறார்கள். கிருஷ்ணா சுனைனா குடும்பத்துடனும், விஜய் சேதுபதி வில்லனுடனும் சேருவார்கள் என்று நினைத்தால், அது இங்கே தலைகீழாக நடக்கிறது. ‘நீதி’ பட சிவாஜி போல் ஆகிறது விஜய் சேதுபதியின் நிலைமை. இரண்டாம்பாதி முழுக்க நல்ல விறுவிறுப்பு. படம் போரடிக்காமல் செல்கிறது. கிளைமாக்ஸை யூகிக்க முடிகிறது என்றாலும், யாருமே யூகிக்காத கிளைமாக்ஸ் வேண்டும் என்றால் எங்கே போவது???

நீண்டநாட்களுக்குப் பிறகு, கிராமத்துப் பிண்ணனியில் செண்டிமெண்ட்டுடன் ஒரு படத்தைப் பார்க்க நன்றாக இருக்கிறது. இயக்குநர் ஜெய் கிருஷ்ணா நாஞ்சில் நாட்டுக்காரராம். நாஞ்சில் நாட்டு அழகை அள்ளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். ஏறக்குறைய எல்லாருமே நன்றாக நாஞ்சில் தமிழ் பேசியிருக்கிறார்கள்.

கொலை மேல் கொலை விழுந்துகொண்டே போக, போலீஸை ஒன்றுமே செய்யாமல் வேடிக்கை பார்ப்பவர்களாக காட்டியிருப்பது ஒன்று தான் இரண்டாம்பாதியில் நெருடல்.

விஜய் சேதுபதி:

படத்தை ஒற்றை ஆளாய்த் தாங்கும் கதாபாத்திரம். மனிதர் வழக்கம்போல் நடிப்பில் பிய்த்து உதறுகிறார். நட்புக்காக கொலையே செய்யத்துணிவதும், அந்த நண்பனே காட்டிக்கொடுத்ததும் கலங்கி நிற்பதுமாக செம பெர்ஃபார்மன்ஸ். டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக இருந்தும், தன் நடிப்பால் இதை சிங்கிள் ஹீரோ சப்ஜெக்ட்டாக ஆக்கிவிடுகிறார். பஞ்ச் டயலாக் மட்டும் தான் பேசவில்லை, மற்றபடி ஒரு ஆக்சன் ஹீரோவாக இதில் ஆகியிருக்கிறார்.

கிருஷ்ணா:

சுறுசுறுப்பான ஆளாக இருக்கிறார் கிருஷ்ணா..ஆனால் முதல்பாதியில் புதிதாக ஏதும் இல்லாததால், இவரது நடிப்பு பெரிதாக நம்மை ஈர்ப்பதில்லை. இரண்டாம்பாதியில் விஜய் சேதுபதிக்கே நடிக்க வாய்ப்பு. கிருஷ்ணாவை பி&சி செண்டரில் பிரபலமாக்க இந்தப் படம் உதவலாம்.
சுனைனா:
ஃபுல் மேக்கப்பில் வருவது, ஹீரோவைத் திட்டுவது முதல்பாதி வேலை..அண்ணனை நினைத்து அழுவது மட்டுமே இரண்டாம்பாதி வேலை. பெரிதாக நடிக்க ஒன்றும் வாய்ப்பில்லை..இருக்கிறார், அவ்வளவு தான்.

சொந்த பந்தங்கள்:

’கோலி சோடா’ மதுசூதனனுடன் வரும் இரு இளைஞர்களும் கவனம் ஈர்க்கிறார்கள். நிறையப் பேர் நாஞ்சில் நாட்டு முகங்களாகவே தெரிகிறார்கள். விஜய் சேதுபதி அப்பா, கிருஷ்ணா அம்மா, அந்த வில்லன் என நல்ல நடிகர் செலக்சன். எல்லாருமே இயல்பான மனிதர்களாக வருவது ரசிக்க வைக்கிறது.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- முதல் அரைமணி நேரம்
- டம்மி போலீஸ்
- கம்மியான காமெடி
- வழக்கமான கிளைமாக்ஸ்

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- விஜய் சேதுபதி
- இரண்டாம் பாதி
- நாஞ்சில் மண்ணை ஸ்க்ரீனில் அப்படியே அள்ளிக்கொண்டு வந்தது...ஒளிப்பதிவும் வசனங்களும், நடிகர் தேர்வும் அருமை
-  தமனின் பாடல்கள்..குறிப்பாக ஓப்பனிங் சாங் மற்றும் மனமே..மனமே.

பார்க்கலாமா?

பார்க்கலாம்.

மேலும் வாசிக்க... "வன்மம் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, November 16, 2014

திரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 27

1.   மூன்று அங்கங்களையும் தாண்டி..

விளாத்திகுளம் வில்லுப்பாட்டில் ஆரம்பித்த சென்ற பகுதி 3 ஆக்ட் ஸ்ட்ரக்சரில் முடிந்தது. காரணத்தோடு தான் அதைச் செய்தேன்.

தமிழ் சமூகத்தின் சாபங்களில் ஒன்று, தன்னம்பிக்கை இல்லாமை. எதுவாக இருந்தாலும், நம்மால் செய்ய முடியாது என்றும் அது வெள்ளைக்காரத் துரைகளால் மட்டுமே ஆகக்கூடிய காரியம் எனும் அடிமை மனோபாவம் நம்முள் ஊறிக்கிடக்கிறது. உண்மையிலேயே நம் ஆள் ஒரு விஷயத்தைச் செய்தாலும், அதை மட்டம் தட்டி வேறு எதனுடனோ ஒப்பிட்டு, உலகில் எங்கோ ஒரு மூலையில் தற்செயலாக நடந்த ஒரு விஷயத்துடன் பொருத்தி, அந்த ஆளை முட்டாள் என்று நிரூபிக்கும் அறிவுஜீவித்தனம் இங்கே கொடிகட்டிப் பறக்கிறது.

இலக்கியம், ஆன்மீகம், சினிமா என எல்லாவற்றிலும் உள்நாட்டுச் சரக்கென்றால் அது தரமற்ற ஒன்று தான் எனும் மனோபாவம் இங்கே ஊறிக்கிடக்கிறது. திரைக்கதை எழுதப் போகும் நீங்கள், இந்த சமூகத்தின் இந்த மனநிலை பற்றியும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. நீங்கள் ஒரு குப்பைப் படம் எடுத்தால், பிரச்சினையில்லை. உண்மையிலேயே உருப்படியாக ஏதாவது செய்ய முயன்றீர்கள் என்றால், கடும் எதிர்ப்பையும் கேலியையும் பழியையும் சுமக்க வேண்டிவரும். அதற்கு இப்போதே தயாராகிக் கொள்ளுங்கள்.

ஆனாலும் உள்ளுக்குள் நீங்கள் தன்னம்பிகையுடனும், சுயமரியாதையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த முன்னோர் பற்றிய பெருமைகள் உங்கள் முன் வைக்கப்படுகின்றன. நீங்கள் பெருமை மிகுந்த ஒரு கதை சொல்லும் பரம்பரையின் நீட்சி என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

சென்ற பகுதியில் மூன்று அங்கங்கள் பற்றிப் பார்த்தோம். மூன்று அங்கங்கள் மட்டுமே போதாது எனும் புரிதல் நம் முன்னோர்களுக்கு அப்போதே வந்திருந்தது. எனவே நாடக இலக்கணங்கள் உருவாகி வர ஆரம்பித்தன. பரத முனிவரும் அகத்தியரும் நாடக இலக்கண நூல்கள் எழுதியிருந்ததாகவும், அவைகளைப் பின்பற்றியே நாடகங்கள் நடத்தப்பட்டதாகவும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். துரதிர்ஷ்டவசமாக அவைகள் இப்போது கிடைப்பதில்லை.

இப்போது நமக்குக் கிடைப்பதில் முக்கியமானது, சூரிய நாராயண சாஸ்திரிகள் எழுதிய ‘நாடகவியல்’ எனும் நாடக இலக்கண நூல். நடிப்பு பற்றியும், நவரசம் பற்றியும், நாடக இலக்கணம் பற்றியும் அதில் குறிப்பிட்டுள்ள பல விஷயங்கள் முக்கியமானவை. எனவே அந்த நூலை உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

நாடகம் என்பதை அங்கங்கள் அடிப்படையில் பத்து வகைகளாகப் பிரித்தார்கள். அதில் ஐந்து அங்கம் உடையதற்கு மட்டுமே நாடகம் என்று பெயர். ஆனாலும் நடைமுறையில் இன்று எல்லா வகைகளுமே நாடகம் என்றே அழைக்கப்படுகின்றன.

ஒரு தகவலுக்காக, அந்த பத்து வகைகள் பற்றிய சுருக்கமான குறிப்பைத் தெரிந்து கொள்ளுங்கள் :
நாடகம் :

ஐந்தில் குறையாத அங்கங்கள் கொண்டது. ஒன்பது சுவைகளைக் கொண்டது, ஆனால் இன்பம்(உவகை) அல்லது வீரத்தினை(பெருமை) செம்மையாகத் தெரிவித்து வியப்புச் சுவையுடன் முடிவது நாடகம்.

பிரகரணம்:
அந்தணன் - வணிகன் - அமைச்சர் ஆகிய மூவரில் ஒருவனை தலைவனாகக் கொண்டு, பத்தினி அல்லது பரத்தை அல்லது இருவரையும் தலைவியாகக் கொண்டு ஐந்து அங்கங்களைக் கொண்டு, உவகைச் சுவையை இனிது உரைப்பது பிரகரணம் ஆகும்.

பாணம் :
ஒரு அங்கத்தை உடைய ஓரங்க நாடகம்.
மிக்க காமத்தை அல்லது அதீத வீரத்தைக் காட்டுவதாய், ஒரே பாத்திரம் தான் அனுபவித்த இன்பத்தையும் பிறரது இன்ப அனுபவத்தையும் பெரிதும் பேசி பாடி ஆடுவதே பாணம் ஆகும்.

வியாயோகம்:

உவகையும் நகையும் மேலான சமநிலைச் சுவையும் நீங்கிய சுவைகளை உடையதாய், ஒரு அங்கத்தைக் கொண்டதாய், பெண்கள் காரணமாய் உண்டாகாத வலிமையான போரினைத் தெரிவிப்பது வியோயோகம்

சமவகாரம்:

தனித்தனியாக வேறுபட்ட எண்ணங்களைக் கொண்ட பல தலைவியர்களைக் கொண்ட, எல்லாச்சுவைகளையும், அதிகமாக வீரச்சுவையையும் கொண்ட, மூன்று அங்கங்களைக் கொண்டது. முதல் அங்கத்தில் காமத்தின் இன்பமும், இரண்டாம் அங்கத்தில் அறத்தின் இன்பமும், மூன்றாம் அங்கத்தில் இனிது விளங்குவதே சமவகாரம் ஆகும்.

இடிமம்:
நான்கு அங்கங்கள் உடையது
வெகுளிச்சுவையை மிகுந்து தோன்றுவதாய், இந்திரஜாலம்-தந்திரம்-மாயமும் வலிமையான சினமிக்க போரும், கலகங்களும் தீயநிமித்தங்களும் பலவாறு பொருந்திவருவது.
தேவர்களும் அசுரர்களும் பாத்திரங்களாக, இன்பம்-நகை-சமம் ஆகிய சுவைகள் நீங்கிய ஏனைய சுவைகள் உடையதாய் கூறப்படுவது இடிமம் ஆகும்.
ஈகாமிருகம்:
மான் போன்ற மிரட்சியுடைய, தன்மேல் விருப்பங்கொள்ளாத விண்ணுல பெண்ணொருத்தியை கவர்ந்து சென்றதைக் காட்டி, பெரிய போரினைச் செய்வதற்குத் தேவையான செயல்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து சம்பவித்து, அவைகள் ஒவ்வொன்றும் முற்றுப்பெறாமல், இன்பச்சுவையின் இழிவைப் புலப்படுத்தி, தமக்குள் மாறுபட்ட தலைவர்கள் இருவரைப் பெற்று, நான்கு அங்கங்கள் கொண்ட நாடகச்சாதி ஈகாமிருகம்.

அங்கம்:
ஒரு அங்கத்தை உடையது.
அவலச்சுவையை மட்டுமே பெரிதாக உரைப்பது. பெண்கள் மனம் கசிந்து அழும்படி, சமீபத்தில் இருப்பவர்கள் வாய்விட்டுக் கதறுந் தன்மையுடையதாய் வாக்குவாதம் நடக்கப்பெற்று, மானுடமக்கள் நாடகப் பாத்திரங்கள் ஆக விளங்குவதே அங்கம் ஆகும்.

வீதி:
ஒரு நாடகபாத்திரம், ஒரே அங்கத்தில் கைசிகி எனும் விருத்தியினை உண்மையாக விளங்குமாறு காட்டி, இன்பச்சுவை நன்றாகப் பொருந்த, ஆச்சரியம் மிக்க பல மொழிகளைப் பேசுவதும் அசரீரி வாக்கும் பொருந்தியது வீதி எனும் நாடகம் ஆகும்.

பிரகசனம்:
முனிவர், தேவர், அந்தணர் ஆகியோர் இடைவர, இழிவும் பழியும் பெற, வெறும் போலிகள் தலைமக்களாகவும், சாத்துவதியும் கைசிகியும் ஆகிய இவ்விரு விருத்திகளைக் காட்டி, நகைச்சுவையைப் பெரிதும் காட்டி, ஒன்று அல்லது இரண்டு அங்கங்களைக்கொண்டது பிரகசனம் ஆகும்.
நம்முடைய இலக்கியங்கள், சமூகம், முன்னோர் பற்றிய புரிதல் இல்லாமல் திரைக்கதை  எழுத ஆரம்பித்தால், ஹாலிவுட் அல்லது கொரிய படங்களின் பிடியில் தான் நீங்கள் விழ நேரிடும் என்பதாலேயே இவற்றை சென்ற இருபகுதிகளில் பார்த்தோம்.

அடுத்த பகுதிக்குப் போவதற்கு முன் ஒரு வேண்டுகோள். குறைந்த பட்சம் ராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் படிக்காமல் தயவு செய்து திரைக்கதை எழுத வராதீர்கள்.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 27"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.