Wednesday, November 23, 2011

பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_6

அன்பு நண்பர்களுக்கு,

சமூகங்களை வரலாற்றுப் பின்புலத்திலும், பொருளாதார அடிப்படையிலும், கல்வி கற்பதில் அவர்களுக்கு உள்ள சிரமத்தின் அடிப்படையிலும் ஆராய்ந்தபின்னரே, இடஒதுக்கீடு தேவை என்ற முடிவு எடுக்கப்பட்டது.

ஆனாலும், எல்லா பிராமண சாதிக்குடும்பங்களும் பொருளாதார ரீதியிலும், கல்வியிலும் நல்ல நிலைமையில் இருந்தவை அல்ல. இழவு வீட்டில் தோசம் கழித்து 50-100 வாங்கி சாப்பிட்டே கடைசிவரை வறுமையில் வாழ்ந்த அய்யரை எனக்குத் தெரியும். கணவன் சரியில்லாத நிலையில் இட்லிக்கடை வைத்துப் பிழைத்த மாமியும் எங்கள் பகுதியில் உண்டு.

பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தாலும், வசதியில் கல்வியில் முன்பே முன்னேறிவிட்ட குடும்பங்களும் இங்கு உண்டு. பெரிய பிஸினஸ்மேனின் பிள்ளைகூட அரசு வழங்கும் இலவச பாடப்புத்தகத்தை வாங்கிவிட்டு, அதை எடைக்குப்போட்டு காசு வாங்கி சினிமாவுக்குப் போன கதை நான் அறிவேன்.

ஆனால் இவையெல்லாம் சதவீத அடிப்படையில் பார்த்தால், மிகக்குறைவே. 1930களில் 90% பிராமண சமூகம் கல்வி கற்று நல்ல நிலையிலும், 90% பிற சமூகங்கள் கல்வியறிவற்று மோசமான நிலையிலும் இருந்ததால்தானே, இடஒதுக்கீடு கோரிக்கையே எழுந்தது?

ஜனநாய அரசு பெரும்பான்மை மக்களின் நிலையையே கணக்கில் கொள்ளும். அதுவே பல்வேறு சமுதாயங்கள் வாழும், சரியான ஜாதிமுறைக் கணக்கீடுகள் இல்லாத இந்தியாவில் சாத்தியம் ஆன விஷயம்.

அரசும் அத்தகைய வசதி படித்தோரை விலக்க, வருமானச் சான்றிதழ் பெறும் முறையை ஏற்கனவே வைத்துள்ளது. லஞ்சம் காரணமாக அது சரியானமுறையில் நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும், தற்போதைய கணிணி உலகில் வரி செலுத்துதல் ஆன் லைன் மயமாகிவிட்ட சூழலில், பெருவாரியான பிற்படுத்தப்பட்டோரை வடிகட்ட முடியும் என்றே நம்புகிறேன்.

அமைப்பு சாரா தொழிலில் உள்ளோரின் உண்மையான வருமானத்தை கணக்கிடுவதும், கண்காணிப்பதுமே இப்போதைய பிரச்சினை.

பெருவாரியான பிற்படுத்தப்பட்ட சமூகங்களை முன்னேற்றும் நோக்கிலேயே இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அந்த நோக்கம் சரியாக நிறைவேறிக்கொண்டிருக்கிறது என்பதற்கு அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து மேலெழுந்துவந்த விஞ்சானிகளே சாட்சி.

உண்மையில் இடஒதுக்கீடு நிரந்தரமான திட்டமாக கொண்டுவரப்படவில்லை. 10 வருடங்களுக்கு மட்டுமே என்று ஞாபகம். அதற்குள் இந்தச் சமூகங்கள் முன்னேறிவிடும் என்று நம்பப்பட்டது. 

ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வரலாற்று நோக்கில் 10 வருடம் என்பது சிறுதுளி.

என்னைப்பொறுத்தவரை இரண்டு தலைமுறைகளுக்காவது இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று நினைக்கின்றேன். அது தெளிவாக அவர்களுக்குச் சொல்லப்பட வேண்டும். 

ஆனாலும் தனிமனித உயர்வு என்பது எவ்வளவு சிக்கலானது என்பதை ஜோதிடம் அறிந்த நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவே 100% முன்னேற்றம் என்பது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்று. ஆனாலும் பெருவாரியான குடும்பங்களை முன்னேற்ற இடஒதுக்கீடு உதவவே செய்கிறது.

இரண்டு தலைமுறைகளாக இடஒதுக்கீடு போன்ற அரசு சலுகைகளை உபயோகித்து, மேலெழுந்துவிட்ட குடும்பங்கள், தங்களை இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கிக்கொள்ள வேண்டும். அதுவே அதே ஜாதியில் கீழ்நிலையில் வாழும் மக்களுக்கு, அவர்கள் செய்யும் கைம்மாறு.

நல்ல வேலையிலும், வசதியுடனும் உள்ள ஒருவர், இடஒதுக்கீட்டை உபயோகித்தால், முதலில் அவர் தன் ஜாதிக்கே கெடுதல் செய்கிறார். உண்மையில் அதற்கான எதிர்ப்புக்குரல் அந்த ஜாதிகளில் இருந்தே எழுந்து வரவேண்டும்.

வசதிபடைத்த பிற்படுத்தப்பட்டோரும் இட ஒதுக்கீட்டை உபயோகிப்பதால், இடஒதுக்கீட்டால் தங்களுக்கான வாய்ப்பு பறிக்கப்படுவதாக நீங்கள் புலம்புகிறீர்கள். உண்மையில் அவ்வாறு முதலில் புலம்ப வேண்டியதும் ,போராட வேண்டியதும் அந்த சமூகத்து அடித்தட்டு மக்கள் தான்.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சரியான முறை என்று நான் நினைக்கவில்லை. இன்று நல்ல வசதியுடன் இருக்கும் ஒருவர், ஓரிரு வருடங்களில் வீழ்ந்துவிடுவதை நாம் பார்க்க்கின்றோம். மேலும், இட ஒதுக்கீடு என்பதன் அடிப்படையே கல்விச்சூழலுக்குப் பழக்கமில்லாத சமூகங்களை சலுகை மூலம் முன்னேற்றுவதே.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கோருவோரிடம் பொதுவாக நான் ஒன்று கேட்பது உண்டு.

“நீங்கள் ஒரு வேலைக்கு/காலேஜ் சீட்டிற்கு அப்ளை செய்கிறீர்கள். 100 இடங்கள் அங்கு உள்ளன. உங்கள் ஜாதிக்கு இடஒதுக்கீட்டின்படி 5 இடங்களே ஒதுக்கப்படும். அங்கே உங்கள் ஜாதியைச் சேர்ந்த 50 பேர் வந்திருக்கிறார்கள். வசதியான 45 பேர் (நீங்கள் உட்பட) 90% மார்க்குடன் நிற்கிறீர்கள். வசதி குறைவான, வேலை செய்துகொண்டே படித்த பிராமண வீட்டுப் பிள்ளைகள் 5 பேர் 75% மார்க்குடன் வந்திருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் நீங்கள் பரந்த மனதுடன் அந்த வேலையை ஏழைப் பிராமணர்களுக்கு விட்டுக்கொடுப்பீர்களா?”

உங்கள் சமூகத்துப் பெரியவர்கள் / ஜாதிச் சங்கங்கள் மூலம் ‘இனிமேல் நம்மை விட பொருளாதாரத்தில் தாழ்ந்த பிராமணர் வந்தால், நாம் உடனே போட்டியில் இருந்து விலகி அவர்களுக்கு வழி விடுவோம்’ என்று ஒரு தீர்மானம் நிறைவேற்ற முடியுமா? அதற்கு பெருவாரியான வசதி + படித்த பிராமணக் குடும்பங்கள் என்ன எதிர்வினையாற்றும் என்று புரிகிறதல்லவா?

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டும் என்று தீவிரமாக பொதுமேடைகளில் பேசும் உங்கள் தலைவர்கள், வசதியானவர்களே. அவர்கள் தற்போதைய சமூகம் சார்ந்த இட ஒதுக்கீட்டுடன் பொருளாதார இடஒதுக்கீட்டையும் சேர்த்து நடைமுறைப்படுத்த குரல் கொடுப்பார்களா? ஏழைப் பிராமணருக்கு நீங்களே இடம் கொடுக்கவில்லையென்றால், பிற ஜாதியினர் எப்படி இடம் கொடுப்பார்கள்?

பொருளாதார இட ஒதுக்கீடு கோருவோரின் நோக்கம் இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழிப்பது தான். அதற்காகவே அவர்கள் பொருளாதார இடஒதுக்கீடு என்று கூக்கிரலிடுகிறார்கள். தற்போதைய நிலையில் பொதுப்பிரிவிலேயே ஏழ்மைநிலையில் உள்ள பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு கோரலாம்.

உண்மையில் இடஒதுக்கீடுத் திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய நேரம் தான் இது. இன்னும் சில வருடங்களில் வசதியான தன் ஜாதியினரை நோக்கி, ஏழை சாதியினர் தங்கள் வாய்ப்பு பறிக்கப்படுவதாக கூக்குரல் எழுப்பலாம். எழுப்ப வேண்டும்.

அதன்மூலமாக ஏற்கனவே இடஒதுக்கீட்டின் மூலம் கல்விச்சூழலுக்குள் வந்துவிட்ட குடும்பங்கள், பிற ஏழைக் குடும்பங்களுக்கு வழி விட வேண்டிய கட்டாயம் உருவாக்கப்படவேண்டும்.

பொருளாதார ரீதியில் மட்டுமே இடஒதுக்கீடு என்றல்லாமல் பொருளாதார ரீதியிலும் இட ஒதுக்கீடு என்பதே இப்போதைய தேவையென்று நினைக்கின்றேன்.

அனைத்து ஜாதிகளாலும், பிராமண ஜாதி உட்பட, இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தையும் முக்கியக் காரணியாக சேர்க்க போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அது நடைமுறைப்படுத்தப்பட்டால், தானாகவே பல குடும்பங்கள் இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கப்படும். அதன்மூலமாகவே இடஒதுக்கீட்டுப் பயனாளர்களைக் குறைக்க முடியும்.

அதுவே இடஒதுக்கீட்டு விகிதத்தை குறைக்கவும் வழிசெய்யும். அதுவே கொஞ்சம் கொஞ்சமாக உயர்வு தாழ்வற்ற சமுதாயமாக நம்மை மாற்றும்.

அன்புடன்
செங்கோவி


(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

21 comments:

  1. வடை எனக்கேவா....... நம்பவே முடியலையே..........

    ReplyDelete
  2. அவர்கள் சமஸ்க்ருதத்தை விட தமிழ் கேவலமான மொழி என்றும் சொல்வதுண்டு

    ReplyDelete
  3. என் தொடர் பதிவு என்ன ஆச்சி ???

    ReplyDelete
  4. இரவு வணக்கம்,பொன் சுவார்!////அனைத்து ஜாதிகளாலும், பிராமண ஜாதி உட்பட,இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தையும் முக்கியக் காரணியாக சேர்க்க போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.///அருமையான யோசனை."அம்மா"முதல்குரல் எழுப்புவாரா?(எழுப்பிட்டாலும்!)

    ReplyDelete
  5. வணக்கம் மாப்பிள!
    என்னுடைய தனிப்பட்ட கருத்து வருமானத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடே சரியானது அப்போதுதான் ஏழை குடும்பங்களை அந்த இட ஒதுக்கீடு சென்றடையும்.. ஆனால் இதில் இருக்கும் சிக்கல் போலிகளை களைவதே..!!?

    ReplyDelete
  6. செங்கோவி,மிக நேர்த்தியான முறையில் கருத்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். இதை நிறைய பிராமண நண்பர்கள் படிக்க வேண்டும் என்பதே என் அவா.

    ReplyDelete
  7. //ஆனால் இவையெல்லாம் சதவீத அடிப்படையில் பார்த்தால், மிகக்குறைவே. 1930களில் 90% பிராமண சமூகம் கல்வி கற்று நல்ல நிலையிலும், 90% பிற சமூகங்கள் கல்வியறிவற்று மோசமான நிலையிலும் இருந்ததால்தானே, இடஒதுக்கீடு கோரிக்கையே எழுந்தது?//

    இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை 1890 களிலேயே எழுந்துவிட்டது. முதல் முதலில் எழுப்பியவர் அயோத்திதாச பண்டிதர்.

    பண்டிதர் என்பது மருத்துவ குலம்.இவர்கள் முடி திருத்துபவர்களாகவும், மருத்துவர்களாகவும் இரண்டு தொழில்கள் செய்துள்ளனர்.

    அயோத்திதாச பண்டிதர் தனது தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு என்னென்ன வேண்டும் என்று கேட்டாரோ அவை அனைத்தும் அவர் காலத்திற்குப்பின்ன‌ர் 1916 களுக்குப்பிறகு ஒவ்வொன்றாக அந்த சமூகத்துக்குக் கொடுக்கப்பட்டது.
    கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு மேலாக அரசின் தனிக் கவனத்தைப் பெற்றும்
    இன்றளவும் அவர்கள் சமூகம் முன்னேறவில்லை என்பது வருத்ததிற்கு உரிய விஷயமே.

    அதற்குக் காரணம் அவர்களுக்கு உள்ளேயே இருக்கும் உட்சாதிப்பிரிவு தீண்டாமை, முன்னுக்கு வந்தவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டாமை.

    ஒரு பறையர் வேறு சாதியாகக் கருதப்படும் பள்ளர் இல்லத்தில் அல்லது பள்ளர் பறையர் இல்லத்தில் தண்ணீர் கூட அருந்த மாட்டார்கள்.இந்த வேறுபாடுகளுக்கும் பிராமணன் தான் காரணமா?அந்த இரண்டு சாதிகளும்
    அருந்ததியர்கள்(காலணி உற்பத்தி செய்வோர்) பக்கம் திரும்பிக் கூட பார்க்கமாட்டார்கள்.

    இவர்களுடைய அறியாமையை ஓட்டுக்காகப் பயன்படுத்திய அரசியல் கட்சிகள்
    அவர்களை அதே அறியாமையில் வைத்திருக்கவே விரும்புகின்றன.

    அதற்காகத்தான் குடிப்பழக்கத்தை நன்கு வேர் பிடிக்கச்செய்துவிட்டன திராவிடக் கட்சிகள்.மற்ற இடத்தில் புதிய காங்கிரஸ் கட்சியும்.(காந்தி காங்கிரஸ் அவரோடு செத்துவிட்டது)

    தலித் விடுதலைக்காக முன் கை எடுத்த அந்த சாதிகளையே சார்ந்த அயோத்திதாச பண்டிதர்,தாத்தா இரட்டைமலை சீனிவாசன்,எம் சி ராஜா,
    சுவாமி சகஜானந்தா,ஆகியவர்களைப்பற்றி நான் அறிந்த அளவுகூட ஒரு தலித் சகோதரர் அறிய மாட்டார்.

    எல்லாம் பெரியாரால்தான் வந்தது என்று கூசாமல் சொல்லும் பொய்களை உண்மை என்று ஏற்பர்.நான் கூறிய அனைத்து தலித் தலைவர்களும் நமது இந்திய, இந்து மரபு சார்ந்து இருப்பவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் கிடையாது. எனவே நாத்திக அரசு அவர்களை இருட்டடிப்பு செய்துவிட்டது.

    பிராமணன் குடும்பம் நன்றக இருப்பதற்குக் காரணம் குடி போன்ற பழக்க்ங்கள்
    பெரும்பான்மையோரிடம் இல்லை என்பதே. இப்போது வெளிநாடு சென்ற சிலர் பழகியிருக்கலாம்.அவர்களும் 45 வயது கடந்தவுடன், அல்லது தாய் தந்தை மறைந்த பிறகு பழக்கங்களை மாற்றிக் கொள்கிறார்கள்.

    நகரத்தில் தங்கள் சாதிப்பெயர் சொன்னால் வீடு வாடகைக்குக் கிடைக்காததல்
    வேறு உயர் சாதிப் பெயர் சொல்லி வாடகைக்கு வீடு எடுத்துவிட்டு,அதையே தானும் நம்பிக் கொண்டு, அப்படியே அந்த உயர் சாதியானாகவே மாறி திருமண பந்தம் ஏற்படுத்திக் கொண்டவர்கள் பலர்.இந்த அந்தரங்கம் வெளியில் வரக்கூடாது என்று தன் குடும்பத்தாரை தன் வீட்டுப் பக்கம் வரக்கூட்டாது என்று சொல்லிய மகன்களை நான் அறிவேன்.சொந்தத் தகப்பனை எங்கள் பண்ணையில் வேலை செய்பவர் என்று அறிமுகப்படுத்திய தலித் நண்பரை நான் அறிவேன்.

    உங்கள் இந்தப் பதிவு நல்ல நடுவு நிலையுடன் எழுதப்ப‌ட்டுள்ளது.

    தன் மகன் என்றும் பாராமல் ஒரு தாய் பசுவுக்கு ஞாயம் வழங்கிய அரசனைப் போல ஒரு தோற்றம் ஏற்படுகிறது.உங்களுடையது ஒற்றை குரலாக இருந்தாலும் உறுதியான குரல்.

    எது எதற்கோ கமிஷன் அமைக்கும் மத்திய அரசு இட ஒதுக்கீட்டு மறு பரிசீலனைக்குக்கு ஒரு கமிஷன் அமைக்க கூடாதா?

    "என்னிடம் இரண்டு பண்டங்கள் இருந்தால் ஒன்று பிராமணனுக்கு மற்றொன்று அப்பிராமணனுக்குக்கொடுப்பேன் என்று எண்ணிவிடாதீர்கள். இரண்டையுமே அப்பிராமணனுக்கே கொடுப்பேன். ஏனெனில் பிராமணர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் திறன் படைத்தவர்கள்.மற்ற‌வர்களுக்குத்தான் வழிகாட்டல் தேவையாக உள்ள்து"என்று கூறிய சுவாமி விவேகானந்தரின் கூற்றை நான் ஏற்கிறேன்.

    பிராமணனுக்கு எல்லா வடையும் கொடுக்க வேண்டாம்.எல்லா வடையையும் அப்பிராமணர்களுக்கே கொடுங்கள்.ஆனால் அப்பிராமணர்களில் பசித்தவன் யார், புளிச்சேப்ப‌க்காரன் யார் என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று நீங்களே குரல் கொடுங்கள்.

    அதற்காக பிராமணன் வழக்கம் போல் முன் கை எடுத்தால் அது 'பிராமண சதி' என்று முறியடிக்கப்படும்.

    எனவே அப்பிராமண நண்பர்களே! முறையான கோரிக்கையாக இட ஒதுகீட்டுக் கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வையுங்கள்.

    சாதி எப்படி நம்மிடையே கெட்டிப்பட்டதோ, அதுபோலவே இட ஒதுக்கீட்டுக் கொள்கையும் இரும்பு போல உறுதியாகிவிட்டது. அதனை உரு மாற்ற நிறைய பலம் தேவைப்படும்.

    உங்கள் சமச்சீர் பார்வைக்கு ஒரு நமஸ்காரம். பாராட்டுக்கள் செங்கோவி!

    ReplyDelete
  8. //அவர்கள் சமஸ்க்ருதத்தை விட தமிழ் கேவலமான மொழி என்றும் சொல்வதுண்டு//

    என்னுடைய பின்னூடங்களை கருத்தூன்றிபடித்து இருந்தால் 5 பதிவு தாண்டி ஆறாவது பதிவில் இப்படி ஒரு பின்னூட்டம் வருமா?

    இதைக்கூறிய அன்பர் தயவு செய்து அவருடைய குற்ற சாட்டைப் பற்றி
    விரிவாக எழுத வேண்டுகிறேன்.

    பெரியார்தான் 'தமிழ் காட்டுமிராண்டி பாஷை' என்று கூறினார்.

    எனக்குத் தமிழ் தாய் மொழி; சமஸ்கிருதம் தந்தை மொழி.

    சமஸ்கிருதம் தேவ பாஷை! தமிழ் என்றாலோ மஹாதேவ பாஷை!!

    ReplyDelete
  9. //ஆனால் இதில் இருக்கும் சிக்கல் போலிகளை களைவதே..!!?//

    ஆம் காட்டான் அவர்களே! உண்மைதான். அன்னல் எல்லாருமே போலிகளாக வந்துவிட முடியாது.கணிசமான ஏழைகளும் பயன் பெறுவார்கள்.

    எல்லா விதமான'பாசிபிலிடி ஃபார் சீட்டிங்' ஆய்வு செய்து முடிந்தவரை 100% இல்லாவிடாலும் 95% ஏமாற்றுக்காரரகளை வெளியேற்ற‌லாம்.

    முதலில் மறுபரிசீலனை செய் என்ற கோரிக்கை வைத்து அது ஏற்கப்படட்டும்.

    ReplyDelete
  10. சட்டம் ஒரு கழுதை.அதனை நாம் எப்படி ஓட்டுகிறோமோ அப்படி ஓடும்.

    ஒரு சட்டம் போட்டவுடனேயே அதை நமக்காக எப்படித் திரிக்கலாம் என்று மூளையை தீட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.அதையே த‌ங்கள் வயிற்றுப் பாட்டுக்கு ஆதாரமாகக் கொண்டுள்ளவர்கள் அப்படித்தன் செய்வார்கள்.

    ஆக‌வே சட்டத்தால் எதுவும் சாதிக்க முடியாது. அம்பேதகருக்கு, வேண்டிய சாதகமான சூழலை காந்திஜி ஏற்படுத்திக் கொண்டே இருந்தார்.காந்திஜி தலித்துக்களுக்காகப் போராடியது சமூக தளத்தில்.அம்பேதகர் சட்ட தளத்தில். சமூக தளத்தில் கிடைத்த வெற்றியாலேயே சட்டம் இயற்ற முடிந்தது.

    சட்டம் எப்படி திரிக்கப்படும் என்பதற்கு ஓர் உதாரணம்.சும்மனாச்சுக்கும்
    சிரிக்க சிந்திக்க.ஹிஹிஹி...

    "இங்கே துப்ப ப‌டாது" என்று அறிவிப்புப் பலகை மேலேயே ஒருவன் வெற்றிலை எச்சிலை துப்பினான்.கைது செய்து நீதிபதி முன்னர் நிறுத்தினர்.

    நீதிபதி:"ஏன் துப்பினாய்?"

    குற்றவாளி: "துப்பினால் படுமா என்று ஆராயச்சி செய்தேன்"

    நீதிபதி: 'என்ன சொல்கிறாய்?'

    குற்றவாளி:"துப்பினால் படாது என்று அறிவிப்புப்பலகை சொல்கிறது எனவே
    துப்பினால் படுகிறதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்யவே துப்பிப் பார்த்தேன்.அவர்களுடைய கூற்றுத் தவறு என்று முடிவு செய்தேன்.
    துப்பினால் அந்தப்பலகையில் படுகிறது கனம் கோர்ட்டார் அவர்களே.!"

    வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

    எனவே எந்த ஒரு சட்டமும் திரிக்கப்படலாம். கூடியவரை கவனம் எடுத்து சட்டம் இயற்றட்டும்,

    ReplyDelete
  11. வணக்கம் அண்ணாச்சி,

    நிறையவே பிசியாகிட்டேன்.

    அடியேனால் இந்த விவாதத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.
    காரணம் தமிழகத்தில் பிராமண அன்பர்களின் வாழ்க்கை பற்றிய போதிய அறிவு எனக்கு இல்லை!

    தங்களின் அடுத்த பதிவிலிருந்து என் வழமையான வருகை தொடரும்!

    மன்னிக்கவும்.

    ReplyDelete
  12. ஆழ்ந்து படிக்க வேண்டிய அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. பொருளாதார இட ஒதுக்கீடு குறித்து சில கருத்துகள்:

    எதிர்காலத்தில் குடும்ப அமைப்பு வழக்கொழிந்து போய் சாதிகளும் அதன் ரீதியான இட ஒதுக்கீடுகளும் மறைந்தாலும் நாட்டில் வறுமைக்கோட்டிற்குக் கீழ்
    இருப்போரின் விழுக்காட்டிற்கு ஏற்ப குறிப்பிட அளவு இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். அதன் நோக்கம் அரசின் வளங்களில் நலிந்த பிரிவினருக்கும் உரிய பங்கு அளிப்பதே. அப்படி ஒரு
    ஒதுக்கீடு இல்லாத பட்சத்தில் அனைத்து இடங்களையும் வசதியான மக்களே ஆக்கிரமித்து அது கலகம்,புரட்சிக்கு வழிவகுக்கும்.

    பொருளாதார ரீதியில் தாழ்ந்தவர்களை அடையாளம் காண இப்போதைய அரசாங்கக் கட்டமைப்பு சரியான முறைகளைக் கையாள்வதாகத் தெரியவில்லை. எதிர்காலத்தில் அவை உருவாகலாம்.

    ReplyDelete
  14. நல்ல கூர்மையான சிந்தனை. நான், என் தந்தை வழியில், பட்டம் பெற்ற இரண்டாவது தலைமுறை. விவரம் தெரிந்த நாள் முதல் இட ஒதுக்கீட்டிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். நீங்கள் சொல்லும் அதே காரணங்களையே, பெற்றோரிடமும், மற்றோரிடமும் கூறி வந்துள்ளேன்.' பிழைக்க தெரியாதவள்..திமிர் பிடித்தவள்..' என்ற பல பெயர்களுடன்!!நீங்கள் சொல்வதை சிந்திக்க சிறந்த அறிவெல்லாம் தேவையில்லை. திண்மையுடன் கூடிய நேர்மையும், கனிவும் இருந்தாலே போதும். நம் சகோதர-சகோதரிகளுக்கும் இந்த சிந்தனை நிகழும் வரை, பொறுமையாக, கெட்ட பெயர்களையும், கிண்டல்களையும் சேர்த்து வைப்போம். அடுத்த தலைமுறை எனக்கு நம்பிக்கை தருவதாகவே இருக்கிறது.

    ReplyDelete
  15. பகிர்வுக்கு நன்றி மாம்ஸ்....

    ReplyDelete
  16. ///dr.tj vadivukkarasi said...
    நல்ல கூர்மையான சிந்தனை. நான், என் தந்தை வழியில், பட்டம் பெற்ற இரண்டாவது தலைமுறை. விவரம் தெரிந்த நாள் முதல் இட ஒதுக்கீட்டிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். நீங்கள் சொல்லும் அதே காரணங்களையே, பெற்றோரிடமும், மற்றோரிடமும் கூறி வந்துள்ளேன்.' பிழைக்க தெரியாதவள்..திமிர் பிடித்தவள்..' என்ற பல பெயர்களுடன்!!நீங்கள் சொல்வதை சிந்திக்க சிறந்த அறிவெல்லாம் தேவையில்லை. திண்மையுடன் கூடிய நேர்மையும், கனிவும் இருந்தாலே போதும். நம் சகோதர-சகோதரிகளுக்கும் இந்த சிந்தனை நிகழும் வரை, பொறுமையாக, கெட்ட பெயர்களையும், கிண்டல்களையும் சேர்த்து வைப்போம். அடுத்த தலைமுறை எனக்கு நம்பிக்கை தருவதாகவே இருக்கிறது.///

    புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
    பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
    சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்
    தன்னி லேபொது வான வழக்கமாம்
    மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்
    மாத வப்பெரி யோருட னொப்புற்றே
    முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
    முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்.


    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
    திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
    செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்
    அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
    அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
    உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
    உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!


    போற்றி, போற்றி, ஜயஜய போற்றிஇப்
    புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே
    மாற்றி வையம் புதுமை யுறச்செய்து,
    மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே
    ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்
    அருளினா லொரு கன்னிகை யாகியே
    தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
    செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.

    ReplyDelete
  17. // Jagannath said...
    பொருளாதார இட ஒதுக்கீடு குறித்து சில கருத்துகள்:

    எதிர்காலத்தில் குடும்ப அமைப்பு வழக்கொழிந்து போய் சாதிகளும் அதன் ரீதியான இட ஒதுக்கீடுகளும் மறைந்தாலும் நாட்டில் வறுமைக்கோட்டிற்குக் கீழ்
    இருப்போரின் விழுக்காட்டிற்கு ஏற்ப குறிப்பிட அளவு இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். அதன் நோக்கம் அரசின் வளங்களில் நலிந்த பிரிவினருக்கும் உரிய பங்கு அளிப்பதே. அப்படி ஒரு
    ஒதுக்கீடு இல்லாத பட்சத்தில் அனைத்து இடங்களையும் வசதியான மக்களே ஆக்கிரமித்து அது கலகம்,புரட்சிக்கு வழிவகுக்கும்.

    பொருளாதார ரீதியில் தாழ்ந்தவர்களை அடையாளம் காண இப்போதைய அரசாங்கக் கட்டமைப்பு சரியான முறைகளைக் கையாள்வதாகத் தெரியவில்லை. எதிர்காலத்தில் அவை உருவாகலாம்.//


    I SECOND THIS. YOU ARE 100% CORRECT.

    ReplyDelete
  18. ?????? ???????? ????????????? ?????? ???????????? ?? ????????? ???????? ......?? ??? ?? ??? ??? ??? ?? ?? ?? ?? ??

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.