பதிவிற்கு போவதற்கு முன் ஒரு விளம்பரம்..
இந்த வாரம் முழுக்க 2013ம் ஆண்டு வெளியாகிய திரைப்படங்கள் பற்றிப் பார்ப்போம். இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. அதில் நம்மை தியேட்டருக்கு இழுக்காத டப்பா படங்களை விட்டுவிட்டு, நம் கவனத்தைக் கவர்ந்த படங்களை மட்டும் இங்கே ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்வோம். அந்த வரிசையில் இன்று நம்மை கதறக் கதற அலற வைத்த பெஸ்ட் 5 மொக்கைப் படங்களைப் பார்ப்போம், வாருங்கள்:
வெட்டி பிளாக்கர் நண்பர்கள் நடத்தும் வலைபதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி..விபரங்களுக்கு: http://velangaathavan.blogspot.com/2013/11/vettibloggers.html
இந்த வாரம் முழுக்க 2013ம் ஆண்டு வெளியாகிய திரைப்படங்கள் பற்றிப் பார்ப்போம். இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. அதில் நம்மை தியேட்டருக்கு இழுக்காத டப்பா படங்களை விட்டுவிட்டு, நம் கவனத்தைக் கவர்ந்த படங்களை மட்டும் இங்கே ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்வோம். அந்த வரிசையில் இன்று நம்மை கதறக் கதற அலற வைத்த பெஸ்ட் 5 மொக்கைப் படங்களைப் பார்ப்போம், வாருங்கள்:
மொக்கை # 5: நய்யாண்டி
தேசிய விருது பெற்ற சற்குணமும் தனுஷும் இணைந்து, இப்படி ஒரு படத்தைக் கொடுப்பார்கள் என்று யாரும் நினைக்கவில்லை. தொப்புள் பிரச்சினை வேறு கிளம்பி, சீப் பப்ளிசிட்டியைக் கொடுத்தும் படம் தேறவில்லை. ஒரு மலையாளப்படமான ‘மேல் பரம்பில் ஆண்வீடு’-ன் ரீமேக் இது. ஆனால் அந்த படத்தை ஏற்கனவே பாண்டியராஜனை ஹீரோவாக வைத்து ’வள்ளி வரப் போறா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக்கி விட்டார்கள் என்ற துயரமான செய்தி பின்னர் கிடைத்தது.
இண்டர்வெல் விடும்போதே பலரும் தியேட்டரைவிட்டே எகிறிக்குதித்து ஓடும் கண்கொள்ளாக் காட்சிகளை தந்த படம் இது. ஏனோதானோவென எடுக்கப்பட்டது போல், பல காட்சிகளும் இருந்தன. தனுஷ்க்கு பெரிய அடி. மரியான் படமும் ஏறக்குறைய இந்த லிஸ்ட்டில் வர வேண்டியது என்றாலும், ஒளிப்பதிவு-இசை என சில விஷயங்களால் தப்பியது. இந்தப் படத்தில் எல்லாமே மொக்கையாகப் போய்விட்டது, சில பாடல்களைத் தவிர.
மொக்கை # 4: சுட்டகதை
சூது கவ்வும், பீட்சா ரேஞ்சில் பில்டப் செய்யப்பட்ட படம். நம்பி உள்ளே போனவர்களை, நசுக்கி வெளியே விட்டார்கள். படத்தில் ஒரு கேரக்டர்கூட சீரியஸ்னஸ் இல்லாமல், எல்லாருமே ஹெக்கேபிக்கே என ஏதோ மெண்டல் ஹாஸ்பிடலுக்குள் வந்த ஃபீலிங்கை ஏற்படுத்தினார்கள்.
படத்தைவிடவும் பெரும் கொடுமையாய் படம் பற்றிய அறிவுஜீவி விளக்கங்களும் இயக்குநர் தரப்பில் இருந்து வந்து குவிந்தன. காமிக்ஸ் வடிவில் எடுக்கப்பட்ட படம், ஜனங்களுக்குத் தான் அறிவில்லை என்று செல்வராகவன் ரேஞ்சுக்கு விளக்கம் வந்தது. (அதைப் படிச்சிட்டுத் தான் நான் படம் பார்த்தேன்!) தமிழ் சினிமாவில் காட்சிப்படுத்துதலில் காமிக்ஸை கனகச்சிதமாகப் பயன்படுத்துபவர், மிஷ்கின் ஒருவர் தான்.அவரது எல்லாப் படங்களையுமே காமிக்ஸ் ஆக்கியும் படித்துவிடலாம்.
இப்படி ஒட்டுமொத்தமாக லூசு கேரக்டர்களை மட்டுமே வைத்து நான் எந்த காமிக்ஸையும் படித்ததில்லை. காமிக்ஸிற்கும் சினிமாவின் காட்சிப்படுத்தலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதை விளக்குவது நம்மை பதிவின் ’உயர்ந்த’ நோக்கத்தை விட்டு வெளியே செல்ல வைக்கும் என்பதால், நாவலை நாவல் வடிவிலேயே எடுத்தால் எப்படி முட்டாள்தனமாகவே இருக்குமோ அப்படியே காமிக்ஸ் கதை என்று தான் நினைத்ததை இயக்குநர் சினிமா ஃபார்மேட்டுக்கு மாற்றாமல் அப்படியே எடுத்தது!
வழக்கமான ஹீரோ-பஞ்ச் டயலாக்-டூயட் இல்லாமல் எடுக்கப்படும் படங்களையும் சந்தேகக் கண்ணுடன் பார்க்க வைத்தது இந்தப் படம். அந்த தவறைச் செய்ததாலேயே இந்த லிஸ்ட்டில் இந்தப் படத்தை கட்டாயம் சேர்க்க வேண்டியதானது.
மொக்கை # 3: அன்னக்கொடி
படத்தின் பூஜையில் இருந்தே பயங்கர பில்டப் செய்யப்பட்ட படம். ஆனால் படம் வெளியானபிறகு தான் தெரிந்தது, மகனை புரமோட் பண்ண பாரதிராஜாவின் இன்னொரு அட்டாக் என்று! எப்போதெல்லாம் இந்த வேலையில் இறங்குகிறாரோ, அப்போதெல்லாம் நாம் கதற வேண்டியதாகிறது. பாவம், ராதா மகள். அவரது உழைப்பு எல்லாம் வீணானது. படத்தில் ஹீரோ என்று ஒரு ’கொடுத்து வைத்த’ டம்மி பீஸும் இருந்தது.
ஆண்மையற்றவன், ஆனாலும் அயிட்டம்-ஹீரோயின் என எல்லாரையும் அணுகுபவன், கல்யாணமும் முடிப்பவன் என ஒரு குழப்படியான மனோஜ் கேரக்டரும், கில்மா ரேஞ்சு கதையுமே படத்தை பப்படம் ஆக்கியது. பொதுவாகவே ‘ஆண்மையற்றவன்’ என்ற கான்செப்ட்டை ரசிகர்கள் ரசிப்பதில்லை. கல்யாணமாகாத பலருக்கும் அந்த டவுட் உண்டென்பதால், இந்த டாபிக்கை மூன்று மணிநேரம் உட்கார்ந்து பார்க்க எவனும் வரமாட்டான். வந்தவனும் பாதியில் ஓடி விடுவான். இயக்குநர் வஸந்த எடுத்த ஒரு நல்ல படமும், இதனாலேயே தோல்வியைத் தழுவியது. அந்தப் படமாவது நல்ல மேக்கிங்..இங்கே அதுவும் இல்லை.
மொக்கை # 2: அலெக்ஸ் பாண்டியன்
மூன்று முகம் படத்தில் ரஜினி செய்த கேரக்டரால், தமிழ் சினிமாவில் அலெக்ஸ் பாண்டியன் என்ற பெயருக்கு ஒரு மரியாதை இருந்தது. அதை காலி செய்து, பேரைக் கேட்டாலே அலறும்படி ஆக்கியது இந்தப் படம். கார்த்தி-சந்தானம் காம்பினேசன் என்ற நம்பிக்கையில் படம் பார்க்கப்போனவர்கள் எல்லாம் நொந்து நூலாகும் வண்ணம், தெலுங்கு மசாலாப்படங்களை விடவும் மோசமான படமாக இது அமைந்தது.
கதையிலேயே பெரிய லாஜிக் மிஸ்டேக் இருந்தது. போலி மருந்துகளை தமிழகத்தில் விற்பனை செய்ய விரும்பும் ஒருவன், அதற்கு அனுமதி தர மறுக்கும் முதலமைச்சரின் மகளைக் கடத்தி மிரட்டுகிறான். பெயருக்கு அனுமதி தந்துவிட்டு, மகளை மீட்டவுடன் அனுமதியை ரத்து செய்வது பெரிய விஷயம் அல்ல. மருந்துகளை சீஸ் பண்ணவும் முடியும். ஒரு விஷயத்தை தமிழ்நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்ல வேண்டுமானால், மிரட்டலாமேயொழிய, உள்ளே வர மிரட்டுவது ஆப்பசைத்த குரங்கின் புத்திசாலித்தனம் தான். அதைவிடக் கொடுமை, அனுஷ்காவிற்கு கார்த்தி மேல் வரும் காதல். கார்த்தியும் ‘அப்படியா..சரி, ரொம்ப கெஞ்சுறே..நானும் லவ் பண்ணித்தொலைக்கேன்’ என்ற ரேஞ்சில் காதலை ஏற்றுக்கொள்வார்.
எந்தவித லாஜிக்கும் இல்லாத சண்டைக்காட்சிகளில் தான், மக்கள் மரணத்தின் எல்லையைத் தொட்டார்கள். எதிரே வரும் டாடாசுமோவின் டயரை கார்த்தி வெட்டியபோது, தங்கள் கழுத்தையே வெட்டியிருக்கலாம் என்ற ஃபீலிங் படம் பார்த்தோருக்கு வந்தது. இவ்வளவு ஆழத்திற்கு குழி பறித்துவிட்டு, மண்ணைப் போட்டு மூட, படத்தில் வந்த விஷயம் ஆபாசமான வசனங்கள். கார்த்தியைக் காப்பாற்றி வீட்டிற்கு கூட்டிவரும் ஒரு பெண்மணி, தன் மூன்று மகள்களை கார்த்தியுடன் அப்படி கும்மாளமடிக்க விடுவதும், அவரே எண்ணெய் தேய்த்துவிடுவதும் பிட்டுப்படங்களில் மட்டுமே காணக்கூடிய விஷயங்கள்.
மொக்கை # 1 : ஆல் இன் ஆல் அழகுராஜா
இன்னும் அதிர்ச்சி விலகவில்லை!...ராஜேஸ் படமா இது என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு இந்தப் படம் அமைந்தது. கார்த்திக்கு இது மோசமான தோல்வி. சகுனிக்கு தியேட்டர் நிரம்பியது. அதில் உஷாரான பலர், அலெக்ஸ்பாண்டியனுக்கு வரவில்லை. அடுத்து அலெக்ஸ் பாண்டியனும் ‘அப்படி’ என்று ஆனது. எனவே ‘விமர்சனம் கேட்டுவிட்டு.படித்துவிட்டு பார்க்கப்பட வேண்டிய லிஸ்’ட்டில் கார்த்தி படங்களும் சேர்ந்தன.
அழகுராஜாவில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பேசினார்கள், பேசினார்கள் பேசியே கொன்றார்கள். நமக்குத்தான் சிரிப்பு வரவேயில்லை. தியேட்டரில் ஒருவரை ஒருவர் திரும்பித் திரும்பி பார்க்கும்படி ஆனது. காஜல் அகர்வால் மட்டும் இல்லையென்றால், கடைசிவரை இந்தப் படத்தை பார்த்திருக்கவே முடியாது. எப்படி இதுபோன்று ஒரு படத்தை எடுத்தார்கள் என்று இன்னும் நமக்குப் புரியவில்லை.
அலெக்ஸ் பாண்டியனிலாவது கார்த்தி ஏதாவது செய்தார். இதில் ஒன்றுமே இல்லை. அலெக்ஸ் பாண்டியன் படம் மாதிரி நம்மளை கட்டி வச்சு, ஒருநாள் முழுக்க அடிக்கிறதுகூடப் பரவாயில்லை. ஆனா ஒருநாள் முழுக்க நம்மை கட்டிவச்சு, ஒன்னுமே செய்யாம/பேசாம குறுகுறுன்னு நம்மளை பார்த்துக்கிட்டே இருந்தா எப்படி இருக்கும்? ‘டேய்..ஏதாவது பண்ணுடா’ என்று நாம் கெஞ்சியும் அங்கே ரியாக்சனே இல்லாமல் போனால்..அது தான் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’. இதை காசு கொடுத்து அனுபவித்தோம் என்பது தான் ஜீரணிக்க முடியாத கொடுமை. எனவே தான் மொக்கைப் படங்களில் நம்பர் ஒன்னாக ஆனது ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’.
அடுத்த பதிவு : ஜாம்பவான்களைக் கவுத்திய பெஸ்ட் 5 படங்கள்
டிஸ்கி: இந்த வரிசைப்படுத்தல் என் தனிப்பட்ட ரசனை சார்ந்தது. மாற்று ரசனைக்கு எம் வந்தனங்கள்!
36 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.