Tuesday, November 26, 2013

இரண்டாம் உலகம் மற்றும் செல்வராகவன் எனும் மலராத பூக்கள்!

செல்வராகவனுக்கு இருக்கும் ‘ஓப்பனிங்’ எப்போதுமே நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கக்கூடியது. ஏனென்றால் செல்வராகவன் குத்துப்பாட்டு, பஞ்ச் டயலாக் பேசும் ஹீரோக்களை வைத்து படம் எடுப்பவர் அல்ல. அதே நேரத்தில் வீடு-பசி-உதிரிப்பூக்கள் போன்ற வாழ்வியல் தரிசனம் தரும் படத்தை தருபவரும் அல்ல. செல்வராகவனின் படங்களின் மையக்கரு அல்லது அவரது ஸ்பெஷாலிட்டி, தமிழ் சினிமா பேசத்தயங்கிய பாலியல் வறட்சியைப் பேசியது தான்.  இன்னும் சொல்வதென்றால், அவர் வணிக சினிமாவிற்குள்ளேயே, மாறுபட்ட முயற்சிகளை மேற்கொள்பவர். எனவே அவருடைய படங்கள் உலக சினிமா/கலைப் படங்கள் கேட்டகிரி என்று சொல்வதைவிட, ஹாலிவுட் வணிக சினிமா கேட்டகிரியில் வருபவையே. தரமான வணிக சினிமாவைத் தர முயல்பவர் என்று சொல்லலாம். 
செல்வராகவன் கடைசியாக அனைத்துத் தரப்பினரும் மகிழும்படி கொடுத்த திரைப்படம், 7ஜி ரெயின்போ காலனி. அதற்கு முன்னால் காதல் கொண்டேன். புதியவகையான கதை சொல்லல்,காதலின் மெல்லிய உணர்வுகளை திரையில் கொண்டுவரும் நுணுக்கமான திறமை போன்றவற்றால், தமிழின் நம்பிக்கை தரும் இயக்குநராக செல்வராகவன் இடம்பிடித்தார். அதே நேரத்தில் சேது என்ற காதல் படம் மூலம் அறிமுகமான பாலா, காதலை உதறி அடித்தட்டு மக்களை நோக்கி தன் படைப்புத்திறனைச் செலுத்த ஆரம்பித்தார். செல்வராகவனும் ‘புதுப்பேட்டை’ மூலம் தான் ஒரு ‘கில்மாத் தர’ இயக்குநர் மட்டுமல்ல என்று நிரூபிக்கும் முயற்சியில் இறங்கினார்.

செல்வாவிற்கு பிரச்சினை ஆரம்பித்தது அங்கே இருந்து தான். உண்மையில் புதுப்பேட்டை, தமிழில் ஒரு உன்னதமான முயற்சி. ஒரு தாதாவின் வாழ்க்கையை, சென்னையில் இருண்ட பக்கத்தை யதார்த்தமாகச் சொல்ல முயன்ற படம். தமிழில் முதல் ‘நியோ நாய்ர் (Neo-Noir)' ஆக, ஆகியிருக்க வேண்டிய படம். இரண்டாம்பாதி திரைக்கதை சொதப்பலால், நல்ல முயற்சி என்ற அளவிலேயே அது முடிந்துபோனது.பின்னர் 5 வருடங்கள் கழித்து வந்த ஆரண்ய காண்டம், அந்த பெயரை தட்டிச் சென்றது. புதுப்பேட்டைக்கு வந்த விமர்சனங்கள் சொன்னது இது தான் : நல்ல முயற்சி, இரண்டாம் பாதியில் தான் திரைக்கதை தறிகெட்டு ஓடிவிட்டது. இருப்பினும் தவிர்க்க முடியாத படம்.
பின்னர் தெலுங்கில் ‘யாரடி நீ மோகினி’ எடுத்தார். தரத்தில், மேக்கிங்கில் அது ஒரு ஆவரேஜ் படம். அதை தன்னுடைய படமாக செல்வா காட்டிக்கொள்ள விரும்ப மாட்டார் என்றே நம்புவோம். பின்னர் ஆயிரத்தில் ஒருவன் படத்தை எடுத்தார். தமிழில் ஒரு ஃபேண்டஸி படம் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ஆனால் படம் பார்த்தபோது, செல்வாவை நினைத்து பரிதாபப்படவே முடிந்தது. நிச்சயமாக அதுவும் தமிழில் ஒரு நல்ல முயற்சி. இரண்டாம்பகுதிக்கு திரைக்கதை எழுதிவிட்டுத்தான் ஷூட்டிங் போனாரா என்று திகைக்கும் அளவிற்கு, பெர்ஃபக்சன் இல்லாமல் படம் அலைபாய்ந்தது. அது ஒரு அற்புதமான கதை. ’தங்களுக்குள் போரிட்ட சோழ-பாண்டிய வம்சங்கள் இப்போதும் இருந்தால்...இப்போதும் அந்த போர் தொடர்ந்தால்..’எனும் செமயான நாட் அது. நல்ல கதையும் ஃபேண்டஸியும் போதும் என்று திரைக்கதை பற்றி அதிகம் செல்வா, அலட்டிக்கொள்ளாததின் அவலமே ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம்.

அடுத்துவந்தது மயக்கம் என்ன. தமிழில் பியூட்டிஃபுல் மைண்ட் போன்று வந்திருக்க வேண்டிய படம். அந்த திரைப்படத்தின் பெரும்பாலான விமர்சனங்கள் சொன்னது இது தான் : முதல்பாதிக்காக பார்க்கலாம். இரண்டாம் பகுதியில் என்னென்னவோ நடக்கிறது. செல்வாவிற்கு ஒரு நல்ல அல்லது கெட்ட பழக்கம் உண்டு. தனது படத்தின் திரைக்கதையை அவரே முழுக்க எழுதுவாராம். உதவியாளர்களிடன் சீன் கலெக்ட் பண்ணுவதில்லை என்று படித்திருக்கிறேன். ஆரம்ப காலத்தில் புதிய சிந்தனையாக அவர் படங்கள் தெரிந்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்போதும் அப்படித்தான் எழுதுகிறாரோ என்று சந்தேகம் வருகிறது.

இதுவரை படித்ததில் புதுப்பேட்டை-ஆயிரத்தில் ஒருவன் - மயக்கம் என்ன படங்களுக்குள் ஒரு துயரமான ஒற்றுமையை நீங்கள் கவனித்திருக்கலாம். அவை மூன்றுமே வித்தியாசமான முயற்சிகள், அடிப்படையில் நல்ல வலுவான கதை, நல்ல முதல் பகுதி, மோசமான இரண்டாம்பகுதி! துரதிர்ஷ்டவசமாக இரண்டாம் உலகத்திற்கும் இது பொருந்திப்போகிறது. 2006ல் வந்த புதுப்பேட்டையில் ஆரம்பித்து, 2013ல் வந்திருக்கும் இரண்டாம் உலகம் வரை ஒரே புராணம் தான் ‘நல்ல முயற்சி’. இன்னும் எத்தனை வருடங்களுக்கு செல்வா முயற்சி செய்துகொண்டே இருக்கப்போகிறீர்கள்?
உண்மையில் செல்வாவிற்கு என்ன தான் பிரச்சினை? அருமையான கருவை எடுத்துக்கொள்கிறார். அற்புதமான திரைக்கதை வடிவத்தையும்(நியோ நாய்ர்-ஃபண்டஸி என..) எடுத்துக்கொள்கிறார். ஆனால்...ஆனால் அவசரக்குடுக்கையாக, திரைக்கதையை முழுக்க எழுதுவதில்லை அல்லது அரைவேக்காட்டுத்தனமாக, மோசமான ஃபினிஷிங் உடன் எழுதுகிறார். முக்கால்கிணறு தாண்டியதுமே, அவருக்கு ஓவர் கான்ஃபிடென்ஸ் வந்துவிடுகிறது. அவரே ‘எப்பேர்ப்பட்ட முயற்சி..என்னா ஒரு கதை..என்னா ஒரு மேக்கிங்’ என்று புல்லரித்துப்போகிறார். சினிமா என்பது கதையோ, மேக்கிங் ஸ்டைலோ அல்ல; திரைக்கதை தான் சினிமா. முழுமையின்றி அந்தரத்தில் தொங்கும், விடை காணப்படாத கேள்விகள் ஒட்ட்டடை போல் படிந்திருக்கும் ஸ்க்ரிப்ட்டை வைத்துக்கொண்டு, ‘எவ்வளவு பெரிய முயற்சி..இதை குறை சொல்கிறீர்களே?’ என்று அழுவதில் அர்த்தம் இல்லை.

காதல் கொண்டேன் வெற்றிவிழா நிகழ்ச்சியை டிவியில் பார்த்தபோதுதான், அது ஒரு லோ பட்ஜெட் படம் என்றே தெரிந்தது. துல்லியமான திரைக்கதையே படத்தை பிரமாண்டமாகக் காட்டியது. படத்தின் பட்ஜெட் ஒரு கோடிக்கும் கீழ் தான். ஆனால் இன்று 60 கோடிகள் கிடைத்தும், அந்த திருப்தியை நமக்கு செல்வாவால் ஏன் கொடுக்க முடியவில்லை? கதையிலும் ’முழுமையான’ திரைக்கதையிலும் பிரமாண்டத்தைக் கொண்டுவந்தாலே போதும், 6 கோடியில் அற்புதமாக படம் எடுத்துவிடலாம். இல்லையென்றால் வெறுமனே கதையும், காட்சிகளில் பிரமாண்டமும் மட்டுமே போதும் என்பவர்களுக்கு மட்டுமே செல்வாவின் படங்கள் அற்புதமாகத் தோன்றும்.

ஃபேண்டஸி படம் பற்றி செல்வா என்ன வகையான கருத்தைக் கொண்டிருக்கிறார் என்றும் தெரியவில்லை. அவதார் படம் தான் ஃபேண்டஸியின் உச்சம். ஆனால் மிக எளிமையான கதை. (ஒரு பதிவுலக நண்பர் வியட்நாம் காலனி படத்தின் கதைக்கும், அவதார் கதைக்கும் உள்ள ஒற்றுமையை விளக்கியிருந்தார். பெயர் மறந்துவிட்டது). அந்த எளிமையான கதைக்குப் பின் ஒரு வலுவான குறியீடு இருந்தது.

 ‘உங்களை நாகரீகமாக்குகிறோம்’ என்ற பெயரில் வேட்டையாடப்பட்ட செவ்விந்தியர் முதல் ஆப்பிரிக்கர்வரை பலரின் துயரத்தை அந்தப் படம் சொன்னது. நாகரீகம் என்ற பெயரால் அழிக்கப்பட்ட மனிதர்கள், கலைகள். கலாச்சாரங்கள் அனைத்திற்கும் அவதார் கதை பொருந்தும். அது தான் அந்த படத்தின் ஆன்மா. அது தான் நம்மை முழு திருப்தியுடன், தியேட்டரில் இருந்து அனுப்பி வைத்தது. இல்லையென்றால் இரண்டாம் உலகத்தில் கிடைத்த வெறுமையான உணர்வு தான், அவதாருக்கும் கிடைத்திருக்கும். ஃபேண்டஸி படம் என்பது கற்பனையான உலகத்தை, உண்மையான ஆன்மாவுடன் சிருஷ்டிப்பது. சிஜிக்காரனை மட்டும் நம்பி எடுப்பது ஃபேண்டஸி படம் அல்ல, பொம்மைப் படம்.
ஒரு படத்தின் கமர்சியல் வெற்றி என்பது வேறு விஷயம். வெறும் மழையாலேயே ஓடாமல் போன படங்களின் சோகக்கதையெல்லாம் இங்கே உண்டு. அந்த நாள் முதல் ஆரண்ய காண்டம் வரை வணிகரீதியில் தோற்றுப்போன தரமான படங்களும் இங்கே உண்டு. ஆனால் அந்த படத்தைப் பார்த்ததுமே அந்த இயக்குநர்கள் மனநிறைவடைந்திருப்பார்கள், நல்ல சினிமாவுக்கு ஏங்கும் ரசிகர்களும் அதே உணர்வை அடைந்திருப்பார்கள். செல்வாவின் சமீபத்திய படங்கள், அத்தகைய நிறைவை அளிக்கின்றனவா?  சுருக்கமாகக் கேட்பதென்றால், காதல் கொண்டேன் படம் கொடுத்த நிறைவு, செல்வாவிற்கு இந்த படங்களில் கிடைத்ததா?

இங்கே கதை/திரைக்கதையையும் ஒருவரே செய்வதால், விமர்சகர்கள் திரைக்கதையை விமர்சிப்பதோடு செல்வாவை விட்டுவிடுகிறார்கள்.  20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் உலகம் 25-30 கோடியில் முடியலாம். ஆனால் 60 கோடி செலவாகியிகிறதென்றால், ஒரு இயக்குநராக செல்வா தோற்றுவிட்டார் என்றே அர்த்தம். தெளிவான திட்டமிடலும் ஒரு இயக்குநருக்கான அடிப்படைத் தேவை. ’இரண்டாம் உலகத்திற்கு வரவேற்பில்லை என்றால், இனி சினிமாவே எடுக்க மாட்டேன்’ என்று செல்வா பேட்டியளித்திருந்தார். நிரந்தர ஓய்வில் அல்ல, ஒரு நீண்ட ஓய்வில் போய் செல்வராகவன் தன்னைத் தானே இத்தகைய கேள்விகளால் சுயபரிசோதனை செய்வது அவசியம். இன்னும் செல்வராகவனை நாம் நம்புவதாலேயே, இந்த வேண்டுகோள்!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

25 comments:

  1. வழக்கமான விமர்சனம் எல்லாம்
    சாதாரண ரசிகனுக்கு மட்டும்
    ஆனால் தங்கள் விமர்சனம்
    செல்வராகவன் படிக்க வேண்டும்

    ReplyDelete
  2. முதர்ச்சியான பார்வை....செல்வாவின் முதல் முன்று படங்கள் (துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7G) அதித காமத்தை மைய படுத்தியே இருக்கும்.. அதிலும் துள்ளுவதோ இளமை இரண்டாம் ரக B கிரேடு செக்ஸ் மூவி லிஸ்டில் சேர வேண்டியது.....து.இ விகடன் விமர்சனத்தில் கூட, "பணம் சம்பாதிக்க எத்தனையோ வழி இருக்கும் போது ஏன் சினிமாவை தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று எழுதி இருந்தார்கள். இது மாதிரியான விமர்சனங்கள் தான் செல்வாவை வித்தியாச முயற்சிக்கு (!!) தள்ளின, அதில் இருந்து அவருக்கு சரிவு ஆரம்பித்தது. ஒரு விசியத்தை தொடும் முன்பு, அதை பற்றி சரியான பேக் கிரௌண்ட் வொர்க் செய்து இருக்க வேண்டும்.. இல்லையென்றால் தோல்விகள் தொடரும்..

    ReplyDelete
  3. அவதாரின் கரு ஒரு நாவலில் இருந்து எடுக்கப்பட்டது, டைட்டானிக் ஏற்கனவே வந்த பல படங்களை மெருகேற்றி CGயில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது,Green Screen டெக்னாலஜியை மிக நுட்பமாக பயன்படுத்திய திரைப்படம். ஜாஸ் கதை கூட ஏற்கனவே வந்த திமிங்கல படக் கதையை மாற்றி வுட்டாலக்கடி செய்து எடுத்து பெரிய வெற்றி பெற்றது. கேமரூன் ஒவ்வொரு தன்னுடைய ஒவ்வொரு படங்களையும் எங்காவது ஒரு இடத்தில் உருவிக்கொள்கின்றார், ஆனால் நம் ஆட்கள்தான் சுடுவதாக நம்மக்கள் குதிக்கின்றார்கள்...செல்வராகவன் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து எடுக்கின்றார், 7G கூட தன்னுடைய நண்பனின் கதை என்று கூறியிருந்தார், புதுப்பேட்டை கொக்கிகுமார் என்கின்ற ஒரு தாதாவைப் பற்றியது என்றும் சில ஒரிஜினல் ரவுடிகளிடம் பழகி அவர்களுடன் சில நாட்கள் வாழந்து அவர்களுடைய மேனரிசங்களை அப்படியே பயன்படுத்தியிருப்பார்..செ.ரா.மிகச்சிறந்த கலைஞன் என்பதில் கருத்து வேறுபாடுகிடையாது ஆனால் இனி கவனமுடன் இல்லாமல் போனால் காணாமல் போய்விடுவார் என்பது நிதர்சனம். அதை புரிந்து கொள்வார் என்றே நம்புவோம்.

    ReplyDelete
  4. ஆழமான அலசல்!சேது கூறியிருப்பது போல!!ரசிகப் பேரு மக்களுக்கும் கூட ரசனை கேட்டு விட்டதோ என்றும் கேட்கத் தோன்றுகிறது.///உங்கள் விமர்சனம்,கொஞ்சக் கால ஓய்வுக்குப் பின் செல்வராகவன் கவனத்துக்கு வந்தால்/வருவது நல்லது!

    ReplyDelete
  5. ஆழமான அலசல்!சேது கூறியிருப்பது போல!!ரசிகப் பெரு மக்களுக்கும் கூட ரசனை கெட்டு விட்டதோ என்றும் கேட்கத் தோன்றுகிறது.///உங்கள் விமர்சனம்,கொஞ்சக் கால ஓய்வுக்குப் பின் செல்வராகவன் கவனத்துக்கு வந்தால்/வருவது நல்லது!

    ReplyDelete
  6. "இப்படியே நீங்கள் எங்கள் படங்களை நிராகரித்தால் இனி செய்வதற்கு ஒன்றுமில்லை. வெறும் காமடி படங்களுக்குத்தான் இங்கு மதிப்பு''. இதில் 'எங்கள்' எனும் சொல்லுக்குள் மணிரத்னத்தையும் அடக்கி இருக்கிறார் செல்வா. பாலா, செல்வா வகையறா இயக்குனர்களின் பிடிவாதப்படங்கள் பெரும் விவாதங்களுக்கு வேண்டுமானால் உட்படலாம். ஆனால் தயாரிப்பாளர், வெகுஜனங்களை திருப்திப்படுத்தாதவரை ஆழ் கிணற்றில் இருந்து கூக்குரலிட்டுக்கொண்டே இருப்பதை தவிரை வேறு வழியில்லை என்பதுதான் நிதர்சனம்.

    ReplyDelete
  7. இன்னுமா நம்புகிறீர்கள்?? தேவுடா.....

    ReplyDelete
  8. //sethu said...
    வழக்கமான விமர்சனம் எல்லாம்
    சாதாரண ரசிகனுக்கு மட்டும்
    ஆனால் தங்கள் விமர்சனம்
    செல்வராகவன் படிக்க வேண்டும்//

    நன்றி பாஸ்.

    ReplyDelete
  9. //ராஜ் said...
    ஒரு விசியத்தை தொடும் முன்பு, அதை பற்றி சரியான பேக் கிரௌண்ட் வொர்க் செய்து இருக்க வேண்டும்.. இல்லையென்றால் தோல்விகள் தொடரும்..//

    கரெக்ட் ராஜ்..பாலியல் சார்ந்த விஷயங்கள் தவிர,செல்வாவிற்கு வேறு விஷயங்களில் பேக் க்ரவுண்ட் நாலேட்ஜ் இல்லை போலும்!

    ReplyDelete
  10. //வீடு சுரேஸ்குமார் said...
    அவதாரின் கரு ஒரு நாவலில் இருந்து எடுக்கப்பட்டது, டைட்டானிக் ஏற்கனவே வந்த பல படங்களை மெருகேற்றி CGயில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது,Green Screen டெக்னாலஜியை மிக நுட்பமாக பயன்படுத்திய திரைப்படம். ஜாஸ் கதை கூட ஏற்கனவே வந்த திமிங்கல படக் கதையை மாற்றி வுட்டாலக்கடி செய்து எடுத்து பெரிய வெற்றி பெற்றது. கேமரூன் ஒவ்வொரு தன்னுடைய ஒவ்வொரு படங்களையும் எங்காவது ஒரு இடத்தில் உருவிக்கொள்கின்றார், ஆனால் நம் ஆட்கள்தான் சுடுவதாக நம்மக்கள் குதிக்கின்றார்கள்.//

    நான் இங்கே சுடுவதற்கு எதிரா குதிக்கலை பாஸ்..அந்த கருத்துக்குக்கு எதிரா தனிப் பதிவே போட்டிருக்கேன்!

    ReplyDelete
  11. //புதுப்பேட்டை கொக்கிகுமார் என்கின்ற ஒரு தாதாவைப் பற்றியது என்றும் சில ஒரிஜினல் ரவுடிகளிடம் பழகி அவர்களுடன் சில நாட்கள் வாழந்து அவர்களுடைய மேனரிசங்களை அப்படியே பயன்படுத்தியிருப்பார்.//

    உண்மை தான் பாஸ்..எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகப் போகிறதே!

    ReplyDelete
  12. // Subramaniam Yogarasa said...
    /உங்கள் விமர்சனம்,கொஞ்சக் கால ஓய்வுக்குப் பின் செல்வராகவன் கவனத்துக்கு வந்தால்/வருவது நல்லது!//

    அடுத்து சின்ன பட்ஜெட் என்று சொல்லியிருக்கிறார்..பார்ப்போம்.

    ReplyDelete
  13. // ! சிவகுமார் ! said...
    பாலா, செல்வா வகையறா இயக்குனர்களின் பிடிவாதப்படங்கள் பெரும் விவாதங்களுக்கு வேண்டுமானால் உட்படலாம். ஆனால் தயாரிப்பாளர், வெகுஜனங்களை திருப்திப்படுத்தாதவரை..//

    உண்மை சிவா..பீடத்தில் ஏறினால் பிடிவாதம் வந்துவிடும் போல!

    ReplyDelete
  14. //அமுதா கிருஷ்ணா said...
    இன்னுமா நம்புகிறீர்கள்?? தேவுடா.....//

    பாவம், ரொம்ப பட்டுட்டாங்க போல!

    ReplyDelete
  15. அருமையான அலசல்...

    திறமையிருந்தும் மமதையால் தன்னைத்தானே செதுக்கிக் கொள்ளாத சிற்பி செல்வா...

    ஆயிரத்தில் ஒருவன் வந்தபோது அடுத்த படத்தில் பார்க்கலாம் என்றோம்... இப்போ மீண்டும் சொல்கிறோம்...

    பார்க்கலாம்... செல்வா எழுகிறாரா என...

    ReplyDelete
  16. நல்ல ஒரு அலசல் செல்வா இன்னும் திருந்த வேண்டும் என்று சொல்லுகின்றீர்கள்.ம்ம் பார்போம் இன்னொரு காதல் கொண்டேன் போல சிறப்பாக இனி ஒன்று செய்கின்றாரா என்று!

    ReplyDelete
  17. மற்றவை சரி! புதுப்பேட்டை படம் பற்றிய கருத்து மட்டும் நான் ஒத்துக்கொள்ளப் போவதில்லை! எல்லோரும் செல்வாவை இன்னும் நம்புகிறோம். திரைக்கதையில் தனி மெனக்கெடல் வேண்டும் தான் செல்வா!

    ReplyDelete
  18. மற்றவை சரி! புதுப்பேட்டை படம் பற்றிய கருத்து மட்டும் நான் ஒத்துக்கொள்ளப் போவதில்லை! எல்லோரும் செல்வாவை இன்னும் நம்புகிறோம். திரைக்கதையில் தனி மெனக்கெடல் வேண்டும் தான் செல்வா!

    ReplyDelete
  19. செல்வராகவனைப்பற்றி அவரே அறிந்திராத, உணராத பல விசயங்களை அலசியுள்ளீர்கள் செங்கோவி. என்னைக்கேட்டால் செல்வா பற்றி இதுதான் சொல்வேன்.. புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்ட மாதிரி...

    உணர்வுகளை மையப்படுத்தி செல்வா எடுத்தப் படங்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத படைப்புகள் . ஆனால் என்று உலக சினிமா என்கிற நினைப்பு அவருக்கு வந்ததோ அப்போதிலிருந்து தன் தனித்தன்மையிலிருந்து மாறிவிட்டார் என்றே தெரிகிறது. தமிழில் டப் செய்யப்பட அவதார், ஹாரிபார்டரின் வசூல் அவரை மிரட்சியடைய வைத்திருக்கலாம். அதனால் அந்தப் பாதையை தேர்ந்தெடுப்பார் என நினைக்க தோன்றுகிறது. எப்படி படமெடுத்தாலும், நீங்கள் சொல்வதுபோல் தெளிவான திரைக்கதை இல்லைஎன்றால் இரண்டாம் உலகம் கதிதான் ஏற்படும்

    ReplyDelete
  20. //சே. குமார் said...
    அருமையான அலசல்...

    திறமையிருந்தும் மமதையால் தன்னைத்தானே செதுக்கிக் கொள்ளாத சிற்பி செல்வா...//

    உண்மை..உண்மை..அருமையாகச் சொன்னீர்கள் குமார்.

    ReplyDelete
  21. //தனிமரம் said...
    பார்போம் இன்னொரு காதல் கொண்டேன் போல சிறப்பாக இனி ஒன்று செய்கின்றாரா என்று!//

    அவரது அடுத்த படம் அப்படி அமையும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  22. // JOHNSONcam3 said...
    எல்லோரும் செல்வாவை இன்னும் நம்புகிறோம். திரைக்கதையில் தனி மெனக்கெடல் வேண்டும் தான் செல்வா!//

    ஆம், நமக்கும் செல்வா மேல் இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

    ReplyDelete
  23. //Manimaran said...
    உணர்வுகளை மையப்படுத்தி செல்வா எடுத்தப் படங்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத படைப்புகள் . ஆனால் என்று உலக சினிமா என்கிற நினைப்பு அவருக்கு வந்ததோ அப்போதிலிருந்து தன் தனித்தன்மையிலிருந்து மாறிவிட்டார் என்றே தெரிகிறது. //

    கரெக்டாச் சொன்னீங்க மணிமாறன்.

    ReplyDelete
  24. நீங்கள் இறுதியாக குறிப்பிட்ட வரி என்னை மிகவும் கவர்ந்தது..

    ReplyDelete
  25. //Parathan Tl said... [Reply]
    நீங்கள் இறுதியாக குறிப்பிட்ட வரி என்னை மிகவும் கவர்ந்தது..//

    நன்றி பரதன்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.