Tuesday, November 19, 2013

பாட்ஷாவும் நானும் - புத்தகம் ஒரு பார்வை

தமிழ் வணிக சினிமாவில் மறக்கமுடியாத படம், பாட்ஷா. ரஜினி ரசிகர்களுக்கு ஆல் டைம் ஃபேவரிட் படம் அது. எனவே பாட்ஷாவின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா எழுதிவெளியான புத்தகம் என்பதால், பலநாட்கள் தேடி திருநெல்வேலியில் வாங்கினேன்.

முதலில் புத்தகத்தின் ஒரே ஒரு குறையைச் சொல்லிவிடுகிறேன். புத்தகத்திற்கு பெயர் 'பாட்ஷாவும் நானும்' என்பதற்குப் பதிலாக, 'ரஜினியும் நானும்' என்று தான் வைத்திருக்க வேண்டும். இயக்குநர் சூப்பர் ஸ்டாரை சந்தித்தது முதல், அண்ணாமலை-வீராவில் பணியாற்றிய அனுபவங்கள் வரை 100 பக்கங்களுக்கு சொல்லி முடித்தபிறகே பாட்ஷா கதைக்கு வருகிறார்.

ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம்/துரதிர்ஷடம் எப்படி அடிக்கும் என்பதுடனே புத்தகம் ஆரம்பிக்கிறது. கவிதாலயா தயாரிப்பில் ரஜினி நடிப்பில், வஸந்த் இயக்கத்தில் அண்ணாமலை படத்தின் பூஜை விளம்பரம் பத்திரிக்கைகளில் வெளியானது. நம்மைப் போன்றே சுரேஸ் கிருஷ்ணாவும் அதை பார்க்கின்றார். ஆனால் வஸந்த், இந்தப் படத்தை(!) இயக்க முடியாது என்றுகூறிவிட, சுரேஸ் கிருஷ்ணாவுக்கு அடிக்கிறது யோகம்.

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஹிட் படமான அண்ணாமலை எடுக்கப்பட்ட கதையைப் படித்தால், பகீரென்று இருக்கிறது. படத்தின் கதையைக்கூட முழுதாக முடிவு செய்யாமல்,திரைக்கதையும் இல்லாமல் அவசரகதியில் படம் அறிவிக்கப்படுகிறது. அறிவிக்கப்பட்ட இயக்குநரும் ஓடி விடுகிறார். எங்கேயோ இருக்கும் சுரேஸ் கிருஷ்ணாவை அழைத்து, ஒரு வரிக்கதையை மட்டும் சொல்லி ஷூட்டிங் ஆரம்பிக்கிறார்கள். ஒரு பெரிய இயக்குநரின் தயாரிப்பில், ஒரு பெரிய நடிகரின் நடிப்பில் உருவாகும்படத்திற்கு, இப்படியும் ஷூட்டிங் போவார்களா என்று கதிகலங்கும் அளவிற்கு இருந்திருக்கிறது நிலைமை. அண்ணாமலைக்கு மட்டும் தான் அப்படி போனார்களா அல்லது பல படங்களுக்கும் அப்படித்தான் போனார்களா என்று தெரியவில்லை. 

சுரேஸ் கிருஷ்ணா பொறுப்பேற்ற பிறகே ஷூட்டிங் ஒரு பக்கம் போய்க்கொண்டேயிருக்க, திரைக்கதையும் டெவலப் ஆகிறது. இப்படி அவசரகதியில் எடுக்கப்பட்டாலும், முழுமையடையும்போது ஒரு பெர்ஃபெக்ட் மசாலாப் படமாக உருவானது தான் ஆச்சரியம். ஒரு கமர்சியல் ஹீரோவின் படத்தில் என்ன எதிர்பார்ப்பார்கள் என்று புரிந்து, செண்ட்டிமெண்ட்-நகைச்சுவை-சவால்-சண்டை என எல்லாமே சரிவிகிதத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். 

முதன்முதலாக 'சூப்பர் ஸ்டார்' என்பதற்கு தேவாவின் இசையில் ஸ்பெஷல் டிசைன் உருவாக்கப்பட்ட கதையையும் சொல்கிறார் சுரேஸ் கிருஷ்ணா.  அப்படியெல்லாம் ஸ்பெஷலாக எதுவும் வேண்டாம் என்று ரஜினி சண்டையிட, குரு பாலச்சந்தர் 'நீ ஒத்துக்கிட்டாலும், இல்லேன்னாலும் நீ ஒரு சூப்பர் ஸ்டார் தான். ஏன் இதை டைட்டில்ல போட தயங்கறே?' என்று அறிவுரை சொல்லியபிறகே, வேறுவழியின்றி சம்மதிக்கிறார் ரஜினி. ரஜினிகாந்த் எனும் மனிதனின் பணிவு தான் அவரை இந்த உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது என்று நமக்குப் புரிகிறது.

ஹிந்தியில் அமிதாப்பிற்கு தம்பியாக ரஜினி நடித்த படம், ஹம். அது தான் பாட்ஷா படத்திற்கு இன்ஸ்பிரேசன். பாட்ஷாவில் வந்த புகழ்பெற்ற காட்சியான 'உண்மையைச் சொன்னேன்' போன்றெ ஒரு காட்சி, ஹிந்தியில் படமாக்கப்பட்டு படத்தில் இடம்பெறாமல் போயுள்ளது.அந்தக் காட்சியால் கவரப்பட்ட ரஜினி, அதை தமிழில் தான் பண்ண வேண்டும் என்று அப்போதே முடிவு செய்கிறார். அண்ணாமலை படம் முடியவுமே, ரஜினி சுரேஷ் கிருஷ்ணாவிடம் பாட்சா கதையின் அவுட் லைனைச் சொல்லி விடுகிறார். ஆனாலும் உடனே எடுத்தால் அண்ணாமலையுடன் கம்பேர் செய்வார்கள் என்பதால், இடையில் வீரா படத்தினை எடுக்க முடிவு செய்கிறார் ரஜினி. புத்தகம் வீரா படம் உருவான விதம் பற்றியும் விரிவாகப் பேசுகிறது.

’பாட்ஷா’ என்பது தான் படத்தின் பெயர் என்று உறுதியாக முடிவு செய்துவிடுகிறார். பின்னர் அதற்கு ஒரு காரணம் வேண்டும் என்பதால், சரண்ராஜ் கேரக்டர் கதையில் கொண்டுவரப்படுகிறது. முதல்பாதியில் அமைதியான ரஜினியை மட்டுமே காட்டுவது என்று முடிவு செய்கிறார்கள். ரஜினியை கம்பத்தில் கட்டி அடிக்கும் காட்சி எடுப்பதை அறிந்து, தயாரிப்பாளர் வீரப்பன் அலறுகிறார். ‘அவர் எவ்வளவு பெரிய ஸ்டாரு? அவரை அடிவாங்குற மாதிரி எடுக்கிறீங்களே? ரசிகர்கள் இதை எப்படி ஒத்துப்பாங்க?’ என்று சுரேஷ் கிருஷ்ணாவிடம் எகிறுகிறார். இவர் எல்லாக் காரண காரியங்களையும் எடுத்துச் சொன்னபிறகும், திருப்தியின்றி வானமே அதற்காக அழுவது போல் ‘புதுமையான’ மழை பேக்கிரவுண்ட் சேர்க்கப்படுகிறது. இப்படி பல சுவாரஸ்யமான விஷயங்களை விளக்கியபடியே செல்கிறது இந்தப்புத்தகம். 
இந்தப் புத்தகத்தில் நம்மை ஆச்சரியப்படுத்திய விஷயம் ஒன்று உண்டு. பொதுவாகவே  ரஜினிகாந்திற்கு கதை-திரைக்கதையில் பெரிய அறிவு கிடையாது என்ற பிம்பமே உலவுகிறது. அவர் எடுத்த வள்ளியும் அதற்கு ஒரு காரணம்.  ஆனால் இந்தப் புத்தகம் நமக்கு ரஜினியின் இன்னொரு முகத்தைக் காட்டுகிறது. பாட்ஷா கெட்டப்பை ரஜினியே முடிவு செய்கிறார். அண்ணாமலை-வீரா-பாட்ஷா எனமூன்று படங்களிலுமே, குறிப்பாக பாட்ஷாவில் ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியின்  பங்களிப்பு இருக்கிறது. எதை, எப்படிச் சொன்னால் சரியாக வரும் என்று யோசித்தே ஒவ்வொரு காட்சியையும் முடிவு செய்கிறார். குறிப்பாக'ரசிகர்களுக்குப் பிடிக்குமா?' என்ற ஒற்றைக் கேள்விதான், அவரது எல்லா முடிவுக்கும் அடிப்படையாக இருக்கிறது.

முள்ளும் மலரும் போன்ற தனக்குப் பிடித்த படங்களை விட்டுவிட்டு, ரசிகனையும் தயாரிப்பாளரையும் திருப்திப்படுத்தும் படங்களை தந்தால் போதும் என்று அவர் முடிவு செய்ததால்தான், சூப்பர் ஸ்டாராக ஆனார். நாம் நல்ல நடிகனை நாம் இழந்தோம் என்பதையே இந்தப் புத்தகம் சொல்லாமல் சொல்கிறது. சினிமா ரசிகர்கள் படிக்க வேண்டிய, விறுவிறுப்பான நடையில் ஒரு கமர்சியல் படக்கதை போன்ற பாணியில் எழுதப்பட்டிருக்கும் புத்தகம் தான் இந்த 'பாட்ஷாவும் நானும்'.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

18 comments:

  1. நன்று!"ரஜனி"யின் மறுபக்கம் என்றும் கொள்ளலாமோ?///எம்.ஜி.ஆர் அளவுக்கு இல்லாவிடினும்,ரசிகர்களின் எதிர் பார்ப்பை இன்று வரை(சில தவிர)பூர்த்தி செய்யும் ஒருவர்,"ரஜினி" யே

    ReplyDelete
  2. புத்தகம் குறித்த உங்கள் பார்வை மூலம் ரஜினியின் இன்னொரு பக்கம் தெரிகிறது.

    ReplyDelete
  3. இன்னும் இன்நூல் கையில் கிட்டவில்லை முடிந்தாள் பார்ப்போம் சென்னையில் கிடைக்கும் போது வேண்டி வாசிப்போம்! ரஜனியின் இன்னொரு திறமையை அறியும் ஆவலுடன்!

    ReplyDelete
  4. காசு எவ்வளவு?, எந்த பதிப்பகம், எங்க கிடைக்கும். இதெல்லாம் எழுதனும் விமர்சனம்னா. ஓகேவா. குட் பாய். நெக்ஸ்ட் டைம் பண்ணனும் என்ன?. அப்படித்தான் சொன்னா கேட்டுக்கணும். சமத்து பிள்ளைள்ள செங்கோவி.

    ReplyDelete
  5. நிறைய சுவாரஸ்யங்கள். இன்னும் எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. எந்த பதிப்பகம்?. இணையத்தில் கிடைக்குமா என்று தேடுகிறேன். பாபாவைப் பற்றி ஒன்னுமே சொல்லலியா பாஸ் ?.

    ReplyDelete
  6. ரஜினி எனக்கு பிடிக்கும்.. ஆனா அவர் கமல் மாதிரி ஒரு சிறந்த கிளாஸ் நடிகரா வந்திருக்க வேண்டியவர்.. மாஸ் பக்கம் போயிட்டாரு.. இப்போ இளைய தலைமுறை அஜித், சூர்யாவும் தடம் மாறுகிறார்கள்.. கிளாஸ் படம் பண்ணக் கூடிய திறமை இருந்தும் வசூலுக்காக மட்டுமே அப்படி பண்ணுவதை தவறாக பார்க்கிறேன்..

    ReplyDelete
  7. எல்லாம் அருணாச்சலத்தின் விதிக்கப்பட்ட பாதை...!

    ReplyDelete
  8. //Subramaniam Yogarasa said...
    நன்று!"ரஜனி"யின் மறுபக்கம் என்றும் கொள்ளலாமோ?///எம்.ஜி.ஆர் அளவுக்கு இல்லாவிடினும்,ரசிகர்களின் எதிர் பார்ப்பை இன்று வரை(சில தவிர)பூர்த்தி செய்யும் ஒருவர்,"ரஜினி" யே//

    உண்மை தான் ஐயா..எல்லாத் தரப்பு மக்களையும் கவர்ந்தவர் அவர்.

    ReplyDelete
  9. //சே. குமார்said...
    புத்தகம் குறித்த உங்கள் பார்வை மூலம் ரஜினியின் இன்னொரு பக்கம் தெரிகிறது. //

    ஆமாம் குமார்.

    ReplyDelete
  10. //தனிமரம்said...
    இன்னும் இன்நூல் கையில் கிட்டவில்லை முடிந்தாள் பார்ப்போம் சென்னையில் கிடைக்கும் போது வேண்டி வாசிப்போம்! ரஜனியின் இன்னொரு திறமையை அறியும் ஆவலுடன்! //

    வாங்குங்கள் தனிமரம்.

    ReplyDelete
  11. //Balasankar S said...
    காசு எவ்வளவு?, எந்த பதிப்பகம், எங்க கிடைக்கும். இதெல்லாம் எழுதனும் விமர்சனம்னா. ஓகேவா. குட் பாய். நெக்ஸ்ட் டைம் பண்ணனும் என்ன?. அப்படித்தான் சொன்னா கேட்டுக்கணும். சமத்து பிள்ளைள்ள செங்கோவி.//

    அண்ணாச்சி, இது புத்தக விமர்சனம் இல்லை. இதற்கு முந்தைய புத்தக விமர்சனங்களில் நீங்கள் கேட்ட விவரங்களை கொடுத்தே வந்திருக்கிறேன். இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்று உண்மையில் தெரியாது. ஏனென்றால் சென்னையில் ஆரம்பித்து மதுரை, திருநெல்வேலியில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர், ஒரு திடீரென நடந்த ஒரு புத்தகத்திருவிழாவில் தற்செயலாகக் கிடைத்தது..இணையத்தில் நேற்றே தேடியவரையில் டிஸ்கவரி பேலசில் கிடைக்கிறது. விலை 120 என்று ஞாபகம்!! கையில் புக்கும் இல்லை!

    ReplyDelete
  12. //Manimaran said...
    நிறைய சுவாரஸ்யங்கள். இன்னும் எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. எந்த பதிப்பகம்?. இணையத்தில் கிடைக்குமா என்று தேடுகிறேன். பாபாவைப் பற்றி ஒன்னுமே சொல்லலியா பாஸ் ?. //

    பாட்ஷாவுடன் முடித்துவிட்டார்..புத்தகம் இப்போது கையில் இல்லை மணிமாறன்..இன்னொரு பாகம் வரும் என்று சொன்னார்கள். பாபா பற்றி அதில் வரலாம். இங்கே பாட்ஷாவுடன் முடிந்தது.

    ReplyDelete
  13. //கோவை ஆவிsaid...
    ரஜினி எனக்கு பிடிக்கும்.. ஆனா அவர் கமல் மாதிரி ஒரு சிறந்த கிளாஸ் நடிகரா வந்திருக்க வேண்டியவர்.. மாஸ் பக்கம் போயிட்டாரு.. இப்போ இளைய தலைமுறை அஜித், சூர்யாவும் தடம் மாறுகிறார்கள்.. கிளாஸ் படம் பண்ணக் கூடிய திறமை இருந்தும் வசூலுக்காக மட்டுமே அப்படி பண்ணுவதை தவறாக பார்க்கிறேன்..//

    உண்மை தான் ஆவி..என்ன செய்ய, வணிக சினிமாவுக்குத்தானே அதிக வரவேற்பு.

    ReplyDelete
  14. //திண்டுக்கல் தனபாலன்said...
    எல்லாம் அருணாச்சலத்தின் விதிக்கப்பட்ட பாதை...! //

    ரைட்டு.

    ReplyDelete
  15. சுவையான புத்தகப்பகிர்வு! உடனே வாசிக்கத்தோன்றும் வகையில் சுவாரஸ்யமாக பகிர்ந்தமைக்கு நன்றி!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. @செங்கோவி
    விலை ரூ.125. விலாசம்:Westland ltd., Venkat towers,165,P.H.Road, Maduravoyal, Chennai-95. புத்தகத்தில் உள்ள விலாசம் இது.

    ReplyDelete
  17. //Min malar said... [Reply]
    @செங்கோவி
    விலை ரூ.125. விலாசம்:Westland ltd., Venkat towers,165,P.H.Road, Maduravoyal, Chennai-95. புத்தகத்தில் உள்ள விலாசம் இது.//

    தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.