அன்பு நண்பர்களுக்கு வணக்கம். நல்ல சினிமாவுக்கு அடிப்படையாக இருப்பது திரைக்கதை. அந்த திரைக்கதைக்கு அடிப்படையாக இருக்கும் சில விஷயங்கள் பற்றியும், திரைக்கதை வடிவம் பற்றியும் இந்தத் தொடரில் பேசலாம் என்று இருக்கிறேன். ஒரு சினிமா ரசிகன் என்ற நிலையிலேயே இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கிறேன். இதுவரை நான் பார்த்த படங்கள் மற்றும் படித்த புத்தகங்களின் மூலம் நான் புரிந்துகொண்டிருப்பதையே இங்கே சொல்லப் போகிறேன்.
தமிழில் ஏற்கனவே நம் ‘வாத்தியார்’ சுஜாதா, திரைக்கதை எழுதுவது எப்படி என்று எழுதியிருக்கிறார்.(அதை நான் படித்ததில்லை!) பதிவுலக நண்பர் கருந்தேள் ராஜேஸும் ‘திரைக்கதை எழுதுவது இப்படி’ என்று எழுதிக்கொண்டு வருகிறார். எனவே புதிதாக இன்னொரு தொடருக்கான அவசியம் என்ன என்ற நியாயமான சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஆங்கிலத்தில் திரைக்கதை பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன; இன்னும் எழுதப்பட்டு வருகின்றன.
அதனோடு ஒப்பிடும்போது தமிழில் திரைக்கதை பற்றி வந்த புத்தகங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே நான் மட்டுமல்ல, சினிமா மேல் ஆர்வம் உள்ள அனைவருமே இந்த டாபிக் பற்றி எழுதினாலும் தப்பில்லை என்றே நினைக்கின்றேன். மேலும் அதிகளவு இத்தகைய புத்தகங்கள் வருவது, தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை மேம்பெடுத்தும். அது திரைக்கதையின் முக்கியத்துவத்தை சினிமாத்துறையினருக்கு தொடர்ந்து நினைவூட்ட உதவும். சிலர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் சீன் எழுதும் அவலத்தை ஒழிக்கும் என்று நம்புகிறேன்.
அதனோடு ஒப்பிடும்போது தமிழில் திரைக்கதை பற்றி வந்த புத்தகங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே நான் மட்டுமல்ல, சினிமா மேல் ஆர்வம் உள்ள அனைவருமே இந்த டாபிக் பற்றி எழுதினாலும் தப்பில்லை என்றே நினைக்கின்றேன். மேலும் அதிகளவு இத்தகைய புத்தகங்கள் வருவது, தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை மேம்பெடுத்தும். அது திரைக்கதையின் முக்கியத்துவத்தை சினிமாத்துறையினருக்கு தொடர்ந்து நினைவூட்ட உதவும். சிலர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் சீன் எழுதும் அவலத்தை ஒழிக்கும் என்று நம்புகிறேன்.
தொடருக்குப் போவதற்கு முன் நேர்மையாக சிலருக்கு நன்றி சொல்லி விடுவோம். ஏனென்றால் இந்த தொடரில் வரும் கருத்துக்களுக்கு அவர்களே அடிப்படை. அடியேன், வெறும் மீடியம் மட்டுமே.
1. என் அம்மா : நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே, ஸ்கூலில் இருக்கும் என்னை தியேட்டருக்கு கூட்டிச்சென்றவர். டீச்சரிடம் ‘ஊருக்குப் போறோம்’ என்று பொய் சொல்லிவிட்டு, அழைத்துச் செல்வார். நடிகர் திலகத்தின் பல நல்ல படங்களையும், ரத்தக்கண்ணீர், நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற பொக்கிஷங்களையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர். எனவே சினிமாவை எனக்கு அறிமுகப்படுத்திய அம்மாவிற்கு நன்றி.
2. எனது கிராமத்து நண்பர்கள் : எங்கள் கிராமமான செண்பகப்பேரியில் கொத்துவேலை அல்லது தீப்பெட்டி ஆபீஸில் வேலை செய்வோரே அதிகம். நண்பர்கள் என்று நான் சொன்னாலும், உண்மையில் என்னைவிட நான்கைந்து வயது மூத்தவர்கள். அவர்கள் தினமும் இரவில் சிகரெட் குடிக்க ஊருக்கு வெளியே செல்வது வழக்கம்.(டாஸ்மாக் இல்லாத மரியாதையான காலம் அது!). அப்போது நானும் சும்மா கூடப் போவேன். அங்கே சினிமா பற்றியே பெரும்பாலும் பேச்சு ஓடும். புதிதாக படம் ரிலீஸ் ஆனது என்றால், இன்றைய ஃபேஸ்புக் விவாதம் போன்றே விரிவான அலசல் அங்கே நடக்கும். ‘இந்தப் படம் ஓடும்..ஓடாது’ என்று தெளிவாகச் சொல்வார்கள். அறிவுஜீவித் தனத்தால் பாதிக்கப்படாத சாமானிய ரசனையை அங்கே காணலாம். ஒரு வணிக சினிமாவில் மக்கள் எதிர்பார்ப்பது என்ன என்று புத்தகங்களை விட, அவர்களே உணர்த்தினார்கள்.
3. Aristotle : குருவெக்கெல்லாம் குரு. 2500 வருடங்களுக்கு முன்னால், நாடக இலக்கணங்கள் பற்றி இவர் எழுதிய ‘The Poetics' தான் இன்றைய எல்லா திரைக்கதை நூல்களுக்கும் அடிப்படை.
4. Syd Field : Screenplay-The foundations of screenwriting
4. Robert Mckee : Story_ Substance, Structure, Style and the principles of Screenwriting
5. Lajos Egri : Art of Dramatic Writing
ஆனால் மேலே குறிப்பிட்டவற்றை நேரடியாக நான் இந்தத் தொடரில் உபயோகப்படுத்தப்போவதில்லை. அவற்றில் இருந்து கற்றுக்கொண்டவை அறிந்தும் அறியாமலும் இங்கே வரும் என்பதாலேயே மொத்தமாக நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
திரைக்கதை பற்றிய புத்தகங்களில் என்னை அதிகம் பாதித்தது Blake Snyder எழுதிய Save the Cat தான். அந்த புத்தகம் அளவிற்கு எளிமையாக தெளிவாக எந்தப் புத்தகமும் சொன்னதில்லை. எனது அமெரிக்க நண்பர் மைக்கேலால் அறிமுகப்படுத்தப்பட்ட புத்தகம் இது. நான் திரைக்கதை பற்றி முதலில் படித்த புத்தகமும் இது தான். அதன்பிறகே மேலே குறிப்பிட்ட புத்தகங்களை கண்டறிந்தேன். (உண்மையில் இது தலைகீழாக படிப்பது போல!). இந்த தொடரைப் படிக்கும் நண்பர்களுக்கு ப்ளேக் ஸ்னிடர் (Blake Snyder) எழுதிய கீழ்க்கண்ட புத்தகங்களைப் பரிந்துரைக்கிறேன்:
Save the Cat! The Last Book on Screenwriting You'll Ever Need (2005)
Save the Cat! Goes to the Movies: The Screenwriter's Guide to Every Story Ever Told (2007)
Save the Cat! Strikes Back: More Trouble for Screenwriters to Get Into… and Out Of (2009)
இந்த தொடரில் ப்ளேக் ஸ்னிடர் எழுதிய Save the Cat -லிருந்து சில பகுதிகள்; குறிப்பாக அவரது 21 Beat sheet கான்செப்ட்டை விளக்கும் பக்கங்கள், நேரடியாக மொழிபெயர்க்கப்படும். அவர்களின் புத்தகத்தின் எந்தப் பகுதியையும் எடுத்தாளும் அனுமதியை அவர்களிடம் வாங்கியிருக்கிறேன் என்பதையும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே இந்தத் தொடரில் வணிக சினிமாவுக்கான அடிப்படைத் தேவைகள் என்ன, ஏன் சில படங்கள் மட்டுமே நம்மை ஈர்க்கின்றன, எங்கே தவறு நடக்கிறது என என் சொந்த அனுபவங்கள்/படிப்பின் அடிப்படையிலும், திரைக்கதை சூத்திரங்களை Save the Cat புத்தகத்தின் அடிப்படையிலும் பார்ப்போம், வாருங்கள்.
0 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.