Wednesday, July 30, 2014

இருக்கு ஆனா இல்லை- திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
குவைத் வாழ் தமிழர்களின் தயாரிப்பில் உருவாகி சென்ற வாரம் வெளியான படம், இருக்கு ஆனா இல்லை. ரம்ஜான் லீவ் முடிந்து தியேட்டர் இன்று தான் ஓப்பனிங் என்பதால், இன்று இங்கே ரிலீஸ். VIP, சதுரங்க வேட்டை எனும் இரு ஹிட் படங்களுடன் வெளியானதால், அதிகம் கவனிக்கப்படாமல் போய்விட்ட படம் இது.
ஒரு ஊர்ல..:
ஹீரோ ஒரு ஆக்சிடெண்ட்டில் சிக்கிப் பிழைக்கிறான். அதே ஆக்சிடெண்ட்டில் முன்பின் தெரியாத ஒரு பெண்(ஹீரோயின்) இறக்கிறார். ஹீரோவைத் தொடர்ந்து வந்து, பேயாக ஹீரோ வீட்டிலேயே தங்குகிறார். தான் யார் என்று கண்டுபிடித்துத் தரும்படி ஹீரோவைக் கேட்கிறார். அந்த பேயின் பேக்ரவுண்டை ஹீரோ கண்டுபிடிப்பதும் ஆபத்தில் இருக்கும் ஹீரோயினின் சகோதரியைக் காப்பாற்றுவதுமே கதை.

உரிச்சா....:
ஆதவன் தன் நண்பர்களுடன் சரக்கடித்தபடியே ஹீரோவின் கதையைச் சொல்வதாக திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள். அது சுவாரஸ்யமாகவே இருக்கிறது.
சொங்கியாக, எதைத் தொட்டாலும் விளங்காத ஆளாக ஹீரோ விவந்த் அறிமுகம் ஆகிறார். அடுத்து நடக்கும் ஆக்ஸிடெண்ட்டும், தொடர்ந்து வரும் பேய் எபிசோடும் ரசிக்க வைக்கின்றன. பிறகு பேய் ஹீரோயினும்(அறிமுகம் ஈடன்) ஹீரோவும் நண்பர்கள் ஆகிறார்கள். தான் யார் என்று மறந்து போய்விட்டதாகவும், அதைக் கண்டுபிடித்துச் சொன்னால், தான் திரும்பிப் போய்விடுவதாகவும் ஹீரோயின் சொல்கிறார்.

ஹீரோ தேடுவதும், கூடவே இருவருக்குமான உறவு நெருக்கமாவதுமாக படம் இடைவேளைவரை நன்றாகவே செல்கிறது. ஹீரோயின் யார் என்று கண்டுபிடிப்பதுடன் இடைவேளை விடுகிறார்கள்.
பிரச்சினையே அதில் தான் ஆரம்பிக்கிறது. கண்டுபிடித்தவுடனே படம் முடிந்துவிட்ட ஃபீலிங் நமக்கு வந்துவிடுகிறது. ஹீரோயின் ட்வின்ஸ் என்றும் இன்னொரு ஹீரோயின் ஹாஸ்பிடலில் ஆபரேசனுக்காக அட்மிட் ஆகியிருப்பதாகவும், அவரைக் கொன்றுவிட்டு அவர் உடல் உறுப்புகளைத் திருட ஹாஸ்பிடல் முயல்வதாகவும் கதையைக் கொண்டுபோய் இருக்கிறார்கள்.

அடுத்து, தன் அக்காவைக் காப்பாற்றும்படி ஹீரோயின் கேட்க, ஹீரோ அந்த வேலையையும் ஒத்துக்கொள்கிறார். அதையாவது அதிரடி ஆக்சன்களுடனோ, சஸ்பென்ஸுடனோ சொன்னார்களா என்றால், இல்லை. சப்பையான வில்லன் டாக்டர், அவரை எதிர்கொள்ள முடியாமல் கிளைமாக்ஸ்வரை சுற்றிசுற்றி ஓடிவரும் ஹீரோ என படம், டெம்போவை இழக்கிறது.

இடையில் செகண்ட் ஹீரோயினுடன் ஒரு சவசவ காதல் எபிசோடு வேறு. அந்த கேரக்டர், இந்தக் கதைக்கு எதற்கு என்பது டைரக்டருக்கே வெளிச்சம். ஆதவனும் இடைவேளைக்குச் சற்றுமுன் காணாமல் போகிறார். கிளைமாக்ஸுக்குக் கொஞ்சம் முன் வந்து, மீண்டும் கிச்சுகிச்சு மூட்டுகிறார். அவர் வந்தபின்பே, ஓரளவு ரிலாக்ஸாக இருக்கிறது.

ஹீரோயின் யார் என்று கண்டுபிடிப்பது தான் ஹீரோவின் குறிக்கோள். இவ்வாறு குறிக்கோள் அமைக்கும்போது, ஹீரோயின் யார் எனும் உண்மை அதிர்ச்சியூட்டுவதாகவும், ஹீரோவுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டியது அவசியம். ’அவரா?..அவர் ஒரு பொண்ணு’ என்பது போல் உண்மை சப்பென்று இருக்கிறது. அதன்பின் இரண்டாவது குறிக்கோளாக ‘ஹீரோயினின் அக்காவைக் காப்பாற்றுவது’ வருகிறது. அதில் ஹீரோவின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது.

இண்டர்வெல்வரை இருந்த விறுவிறுப்பை, இரண்டாம்பாதியில் மெயிண்டெய்ன் செய்யத் தவறிவிட்டு, மீண்டும் கிளைமாக்ஸில் விறுவிறுப்பாகி படம் முடிகிறது. இயக்குநர் சரவணனுக்கு இது நல்ல ஆரம்பம். இன்னும் இறங்கி அடிக்க வேண்டும், பாஸ்!

விவந்த்:
அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு இயல்பாக இருக்கிறார். வாரிசு நடிகர்களைவிட நன்றாக நடிக்கிறார். முன்பு ஜெயா டிவியின் வீஜே-யாக இருந்தாராம்.(அதெல்லாம் பெருமையான்னு கேட்டால்…!!) நம்பிக்கை தரும் அறிமுகம். நல்ல எதிர்காலம் இருக்கிறது.
 ஈடன்:
பேய் என்றாலும் கும்மென்று அழகாக இருக்கிறார். சும்மா நாலு பாட்டுக்கு வந்துவிட்டுப் போகும் கேரக்டர் இல்லை. படத்தின் கதையே இவரை மையப்படுத்தித் தான். புதுமுகம் என்றாலும், அந்த கேரக்டரை அசால்ட்டாக செய்திருக்கிறார். நல்ல நடிப்பு. ஹீரோவை ஆரம்பத்தில் மிரட்டுவது, பின் நட்பாவது, பிரியும்போது காதலை உணர்வது என ரசிக்க வைக்கிறார். தமிழன் விரும்பும் அம்சங்களுடன் இருப்பதால், ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
மனீஷா:
இரண்டாவது ஹீரோயின் என்று சொன்னார்கள். சவசவ என்று இருக்கிறார். ஏற்கனவே இடைவேளைக்குப் பின் படம் டல் ஆகிறது, இவர் வேறு ஒரு டூயட் பாடி இம்சிக்கிறார். நல்ல பாடல் அது, ஆனாலும் பார்க்க முடியவில்லை.
ஆதவன்:
படத்தில் இருக்கும் பெரும் ஆறுதல்..பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் ஓவர் சவுண்டில் பேசிக்கொண்டே இருக்கிறார். தனக்கென ஒரு உடல்மொழியை டெவலப் பண்ண வேண்டியது அவசியம். பீட்சா டெலிவரி பாய் போன்ற உடல்மொழி, நகைச்சுவைக்கு உதவாது. இன்னும் கொஞ்சம் நடிங்க பாஸ்!
சொந்தபந்தங்கள்:
ஒய்.ஜி.மகேந்திரன் ’சைண்டிஸ்ட் இலக்கியவாதி’ கெட்டப்பில் நல்ல டாக்டராக வருகிறார். ஒரு தயாரிப்பாளர் ஐ.டி.கம்பெனி பி.எல்லாக வந்து, ஆதவனால் கலாய்க்கப்படுகிறார். இன்னொரு தயாரிப்பாளர் ஒரு சீனில் வில்லனாக வருகிறார். படத்தில் வரும் இன்னொரு முக்கிய கேரக்டர், ஹீரோயினின் அம்மா. யாரோ புதுமுகம் நடித்திருக்கிறார். இரண்டாம்பாதியில் கொஞ்ச நேரம் அம்மா செண்டிமெண்ட் ஓடுகிறது. அவர் புதுமுகம் என்பதால், பெரிய அட்டாச்மெண்ட் வரவில்லை. கதையில் அது ஒரு முக்கியமான கேரக்டர் என்பதால் செலவைப் பார்க்காமல், நல்ல அம்மா நடிகையைப் போட்டிருக்கலாம். 

நெகடிவ் பாயிண்ட்ஸ்:
  • ஆதவனை பாதியில் காணாமல் போகச் செய்தது. அவர் இல்லாத இரண்டாம்பாதிக் காட்சிகளில் நகைச்சுவை என்பதே இல்லை.
  • இரண்டாவது ஹீரோயினும், அந்த கேரக்டரும் 
  • முதல்பாதியை வேகமாக, சுவாரஸ்யமாக நகர்த்திவிட்டு, இரண்டாம்பாதியில் வேகத்தை இழந்தது 
  • முற்றிலும் புதுமுகங்களை நடிக்க வைத்ததால், பெரும்பாலான மக்கள் இந்தப் படத்தை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. முந்தைய பேய்பட ஹிட்டான யாமிருக்க பயமே-வில் ஹீரோ-ஹீரோயின் ஓரளவு தெரிந்தவர்கள், ஓவியா பெரிய அளவில் தெரிந்தவர். எனவே படம் பிக்கப் ஆக, அது உதவியது. இங்கே அது ஒரு குறை தான். 
  • ஹீரோயின் பேச்சைக் கேட்டு ஆபீஸில் வேலை செய்பவர்களை சப்பென்று அடித்ததால், வேலை போய்விட்டதாக ஹீரோ முதல்பாதியில் சொல்கிறார். இரண்டாம்பாதியில் அதே ஆபீஸில் இருந்து அமெரிக்கா அனுப்புவதாக வருகிறது. இடையில் ஒரு சீன், எடிட்டிங்கில் போய்விட்டதா என்று தெரியவில்லை.
  • இரண்டாவது ஹீரோயினுக்கு வரும் டூயட் பாடல்..முடியலை பாஸ்!

பாசிடிவ் பாயிண்ட்கள்:
  •       வித்தியாசமான தீம்
  •    முதல்பாதி முழுக்க வரும் நகைச்சுவையும் சுவாரஸ்யமான காட்சிகளும் 
  •   ஷமீரின் பிண்ணனி இசையும், ‘இது என்ன?’ ‘இருக்கு ஆனா’ பாடல்களும்
  •     பேய் எஃபக்ட்டைக் கூட்டிய ஒளிப்பதிவு
  •     புதுமுகங்கள் என்றாலும், நடிப்பில் பெரிய குறையில்லாமல் இயக்கி இருப்பது
  •       அந்த கிளைமாக்ஸ் சீன்..வில்லன் இறப்பது அட்டகாசம்
  •    ஹி..ஹி..ஹீரோயின்!

  பார்க்கலாமா? :
முதல்பாதிக்காகவும் கிளைமாக்ஸுக்காகவும் ஒருமுறை பார்க்கலாம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

  1. ஆதவனுக்காக இந்த படத்தை ஒரு தடவை பார்க்கலாம்.
    நீங்கள் சொன்ன மாதிரி, நல்ல தீமை டைரக்டர் வேஸ்ட் பண்ணிட்டார்.

    ReplyDelete
    Replies
    1. ஜஸ்ட் லைக் ஹெவென் என்ற ஆங்கில படத்தை காபி இது, புது டீம்ன்னு ஒன்னும் இல்லை

      Delete
    2. அந்தப் படம் பார்க்கும்போதே, ஹீரோயின் செத்திருக்க மாட்டார், அதனால் தான் மேலோகம் செல்லவில்லை என்று யூகித்து வைத்திருந்தேன். ஆனால் கோமாவில் இருப்பது அக்கா என்று சொல்லிவிட்டார்கள்.

      நீங்கள் சொன்ன ஒரிஜினலின் கதையும் நான் யூகித்ததும் ஒன்று போல் இருக்கிறது. முதல்பாதியை அங்கே இருந்து சுட்டவர், இரண்டாம் பாதிக்கு திருதிருவென விழித்திருக்கிறார். தகவலுக்கு நன்றி நண்பரே.

      Delete
  2. ஓவியா பெரிய அளவில் தெரிந்தவர்.// ஆமா ஆமா.. ஓவியா "பெரிய அளவில்" தெரிந்தவர் தான்!!

    ReplyDelete
  3. உரிச்சா...//

    இந்த வார்த்தைய கண்டு பிடிச்ச உம்மை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மே... கே எஸ் ரவிகுமார் அன்னான் உம்மை தேடுறதா தகவல்...

    ReplyDelete
  4. வெளியூரி(நாட்டி)லிருந்து கருத்திட முடியவில்லை.///நல்ல விமர்சனம்,எப்படியோ ஹீரோயின் ............ஹி!ஹி!!ஹீ!!!

    ReplyDelete
  5. இப்போது தான் பார்த்தேன்.நல்ல படம்.///உங்கள் விமர்சனம் சரியானது.///பாசிடிவ் பாயிண்ட்:ஹி..ஹி..ஹீரோயின்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.