Sunday, February 19, 2017

Facebook Posts - August 2016


திரைக்கதை சூத்திரங்கள் தொடரை நான் எழுதியபோது, திரைக்கதை மன்னன் பாக்கியராஜ் திரைக்கதை பற்றி புத்தகம் எழுதியிருக்கும் விஷயமே எனக்குத் தெரியாது. ஒரு பேட்டியில் இயக்குநர் சுந்தர்.சி சொன்னபோது தான் எனக்கே தெரிந்தது. புத்தகத்தின் பெயர்: வாங்க, சினிமா பற்றிப் பேசலாம்.


தேடியதில் எங்குமே கிடைக்கவில்லை. சமீபத்தில் ப்யூர் சினிமா ஸ்டோர் மூலம் மீண்டும் விற்பனைக்கு வந்தது. ஆனாலும் என்னால் வாங்க முடியாத சூழ்நிலை. சென்னை சென்றிருந்தபோது, இன்ப அதிர்ச்சியாக வாத்தியார் கணேஷ் பாலா அவர்கள், அந்த புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாக அளித்தார்கள். கோடான கோடி நன்றிகள் ஐயா.

சினிமா மாணவர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. திரைக்கதை மன்னனின் படங்கள் போன்றே, அவரது புத்தகமும் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. தனது வெற்றிகளைப் பற்றி மட்டும் ஜம்பம் அடிக்காமல், தோல்விகளைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அதில் இருந்து:

இப்படி பத்து படங்கள் வரை வெற்றிப்படிகளில் ஏறிய நான், அதன்பின் மூன்று படங்களில் சறுக்கினேன். முதலாவது ‘தாவணிக் கனவுகள்’.

இதில் நான் எடுத்துக்கொண்ட பிரச்சினை பலருக்கும் இருக்கும், மனதைத் தொடும் ஒரு பிரச்சினை தான். திருமண வயதில் நிற்கும் தங்கைகளை கரையேற்ற ஒரு அண்ணன் என்ன பாடுபடுகிறான் என்பது படத்தின் மையக்கரு. ஆனால், இந்த பிரச்சினையை நாயகன் சமாளித்த விதம் தான் நடைமுறையில் அதிகம் ஒத்துவராத ஒரு வழியாக ஆகிவிட்டது.

ஒரே நாளில் அவன் சினிமா நட்சத்திரமாக உயர்ந்து...எத்தனை பேர் சினிமாவில் ஓஹோவென்று வந்து தங்கள் பிரச்சினையை தீர்த்துக்கொள்கிறார்கள்? இது எதார்த்தம் இல்லாத ஒன்றாயிற்றே? அதுவும் இல்லாமல், முதல்பாதியில் ‘தங்கைக்காகப் போராடும்’ சாமானியனாக என்னைப் பார்த்தவர்கள், இரண்டாம்பாதியில் நடிகரான நிஜ பாக்கியராஜ் போலவே பார்த்துவிட்டார்கள். 

அடுத்ததாக, ‘சின்ன வீடு’.

இந்த கதையில் வரும் பிரச்சினையும், தீர்வும் நடைமுறைக்கு உகந்த யதார்த்தமானது தான். இந்த படம் சரியாகப் போகாததற்குக் காரணம், எனது இமேஜ் தான். ஒரு படம் எவ்வளவு தான் நல்ல கதையுடன் இருந்தாலும், அந்த நடிகரின் இமேஜுக்கு மாறானதாக இருந்தால் அந்தப் படம் வெற்றி பெறாது.
அடுத்து, ஆராரோ ஆரிரரோ.

’எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனாலும் ஏதோவொன்று குறைகிறது’ என்றார்கள். பாலகுமாரனும் அதையே சொன்னார். ஆனாலும் அது என்ன என்று பிடிபடவில்லை. ஆராரோ ஆரிரரோ வெளியாகி ஒரு மாதம் கழித்து, ஒரு ஆங்கிலப்படம் பார்த்தேன். அப்போது தான் நான் திரைக்கதையில் செய்த தவறு புரிந்தது. அந்த படம் ‘Look, Who is talking?'.

------------------

”உன் அக்கா இன்னைக்கு நைட் ஊரைவிட்டு ஓடப்போறாடா” என்று சுடலைத் தாத்தா சொன்னபோது, எனக்கு பகீரென்று இருந்தது.

அக்கா என்றால் சொந்த அக்கா அல்ல...பெரியப்பா பெண்.

ஓடப் போகிறாள் என்றால், காதல் விவகாரம் அல்ல..அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, இரண்டு பிள்ளைகள் உண்டு.

அதற்காக, கள்ளக்காதலும் அல்ல..குடும்பத்தோடு தான் ஓட ப்ளான் செய்திருந்தாள்.

அப்போது மளிகைக்கடை வைத்திருந்தோம். கடையில் இருந்த அப்பாவிடம் வந்து விஷயத்தைச் சொன்னேன்.

“நினைச்சேண்டா..ஊரெல்லாம் கடன். வெளியூரில் இருந்தெல்லாம் கடன்காரன் வந்து நிற்கறான்..அதான் எல்லாருக்கும் மொட்டை போட ப்ளான் பண்ணிட்டா” என்றார்.
அக்காவின் சாமர்த்தியத்தை நினைத்து, என் முகம் மலர்ந்தது. பாம்பின் கால் அறிந்த அப்பா பாம்பு சொன்னது ”நமக்கும் சேர்த்துத்தாண்டா மொட்டை போடப் போறா..நம்ம கடையிலயும் 300 ரூபா பாக்கி” என்று.

'என்ன அநியாயம்..மனுஷின்னா ஒரு நேர்மை வேண்டாமா?'என்று எனக்கு கோபம் வந்துவிட்டது.
பெரியப்பாவுடன் அப்பாவுக்கு பேச்சுவார்த்தை கிடையாது. நான் மட்டும் தான் பேசுவேன். எனவே அக்கா ஓடிவிட்டால், அப்பா போய் காசு கேட்க முடியாது. அப்படீன்னா, இப்பவே போய் நியாயமும் காசும் கேட்போம் என்று புறப்பட்டேன்.

அக்காவுக்கு என்மேல் பாசம் அதிகம். நான் கேட்டதும் ‘உங்களை எல்லாம் ஏமாத்துவனாடா..இப்போ 150 ரூபா இருக்கு..வச்சுக்கோ..மீதியை அப்பாகிட்டே வாங்கிக்கோ” என்றாள்.

பெரியப்பாவையும் அழைத்து ‘அப்பா..இவனுக்கு 150 ரூபா கொடுத்துட்டேன்...இன்னும் 150 கொடுக்கணும்” என்று அவள் ஆரம்பித்ததுமே “சரிம்மா.சரிம்மா.நான் பார்த்துக்கறேன்”என்று ஒத்துக்கொண்டார்.

‘ஊருக்கு எப்படியோ..நமக்கு நல்லவங்களா இருக்காங்களே’ன்னு ஃபீல் ஆகி, நைனாகிட்டே வந்து சொன்னேன். ”என் அண்ணனா..ரைட்டு”என்று சிரித்துக்கொண்டார்.

அக்கா குடும்பம் என் ஆசியுடன் ஓடிப்போனது.
ஒரு மாதம் கழித்து, மீதி 150 ரூபாயை வாங்க கிளம்பினேன்.

ஒரு சேரில் பெரியப்பா அமர்ந்திருக்க, பெரியம்மா கீழே அமர்ந்து வெற்றிலை மடித்துக்கொடுக்க, ஒரு நல்ல ரொமாண்டிக் சீனில் உள்ளே நுழைந்தேன்.
‘நரி ரொமான்ஸ் பண்ணுது..என் காசு வந்திடும்’ என்று சந்தோசம் வேறு.
“பெரியப்பா..அந்த 150 ரூபா வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன்” என்று ஆரம்பித்தேன்.
அவர் ரொமாண்டிக் சிரிப்பு மாறாமல் என்னை(யும்) பார்த்தார்.
“எந்த 150 ரூபா?” என்று கேட்டார். ரொமாண்டிக்காக கேட்ட மாதிரி தான் இருந்தது; ஆனால் கேள்வி என்னை தூக்கிவாரிப்போட்டது.
“அக்கா தர வேண்டிய காசு...”
“அதான் போற அன்னிக்கே கொடுத்துட்டாளே”என்று அடுத்த குண்டைப் போட்டார்; அருகில் இருந்த பெரியம்மாவை பார்த்துச் சிரித்தபடியே!
ஆஹா..பெரிய மனுசன் ஏதோ ப்ளானோட இருக்கான் போலிருக்கேன்னு நமக்கு கலக்குது.
“அக்கா அன்னிக்கு என்னப்பா சொன்னா?”
நானே குழம்பி “என்ன சொன்னா?” என்றேன்.
“150 ரூபா கொடுக்கணும்னு சொன்னாளா?”
“ஆமா...ஆமா”
“150 ரூபா கொடுத்திட்டேன்னு சொன்னாளா?”
“ஆ...மா”
“அப்போ சரியாப் போச்சுல்ல?”
“பெரியப்பாஆஆ”
“என்னடா?”
“மொத்தம் முன்னூறு..அதுல...”என்ற என்னை இடைமறித்து “300ங்கிற வார்த்தையே அவ சொல்லலையே..150 தரணும்..150 தந்துட்டேன்னு தானே சொன்னா?”என்றார் தெளிவாக!
“தந்தாச்சுன்னா உங்ககிட்டே ஏன்யா சொல்லப்போறா?”என்றேன் அழாத குறையாக.
“இப்படில்லாம் என்னை நீயும் உன் அப்பனும் ஏமாத்திடக்கூடாதுன்னு தான்ப்பா” என்றார் அசால்ட்டாக.
அடப்பாவி..நீயெல்லாம் ஒரு பெரிய மனுசனா என்று நான் நொந்த சமயத்தில், பெரிய மனுஷி வாயைத் திறந்தார்.
“இங்க பாரு..முட்டாய் வாங்கித் திங்க காசு வேணும்னா பெரியப்பாகிட்டே கேளு, தப்பில்லை..அதுக்கு நாலணா கேளு..இல்லே எட்டணா கேளு..இப்படி 150 ஓவாயா கேட்கிறது?”
நான் மட்டும் மானஸ்தனாக இருந்திருந்தால், அன்றே உயிரை விட்டிருப்பேன். நல்லவேளையாக அப்படியெல்லாம் இல்லாததால், இப்போ ஃபேஸ்புக்கில் நடமாட முடிகிறது!

ஆனால் வீட்டிற்குத் திரும்பி வந்த என்னிடம் அப்பா ஒரு பேச்சுக்குக்கூட ‘என்னப்பா, அண்ணன் காசு கொடுத்தானா?’என்று கேட்கவில்லை. உடன்பிறப்பு மேல் அம்புட்டு நம்பிக்கை!!

---------------

சிவாஜி கணேசன் என்றால்
நடிகர் திலகம் - வீரபாண்டிய கட்டபொம்மன் - கர்ணன் - சிவபெருமான் - பாசமலர்-ஏன், விக்ரம் பிரபுகூட உங்களுக்கு ஞாபகம் வரலாம்.

ஆனால் அவர் அரசியலில் இருந்தது யாருக்குமே ஞாபகம் வராது. காங்கிரஸ்-ஜனதா-சொந்தக்கட்சி என்று பல ரவுண்ட் அடித்து, மீடியாக்களால் ‘இவர் இருக்கிற கட்சி/கூட்டணி உருப்படாது’ என்று கிண்டலடிக்கப்பட்டது யாருக்கும் இப்போது ஞாபகத்தில் இல்லை. அவரது சொந்தக்கட்சியில் உறுப்பினராக இருந்து கொடி பிடித்த நான் கூட, அந்த கூத்துக்களைப் பற்றி எழுதுவதில்லை.

சிவாஜி என்றால், சினிமாவில் அவர் செய்த சாதனைகள் தான் இன்று நிற்கின்றன.

பிற்காலத்தில், கேப்டன் விஷயத்திலும் அதுவே நடக்கும்; நடக்க வேண்டும்!
அவரது பிறருக்கு உதவும் குணமும், எளிய மக்களுக்காக அவர் செய்த படங்களுமே வரலாற்றில் நிற்கும் என்று நினைக்கிறேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கேப்டன்!

------------------------
ரகுவரன் என்றால் நம் நினைவுக்கு வருவது பாட்ஷா ஆண்டனி .

அடுத்து, புரியாத புதிர் கணவன் கேரக்டர்
அதற்கு அடுத்து, அமர்க்களத்தில் அவர் செய்த டான் துளசி தாஸ் கேரக்டர்.
அமர்க்களம் பார்க்குபோதெல்லாம், இது பாட்ஷா படத்தின் தொடர்ச்சி என்று தோன்றும். ஏனென்றால்...
பாட்ஷாவால் குடும்பம்/குழந்தையை பிரிந்து ஜெயிலுக்குப் போகிறார் ரகுவரன். திரும்பி வந்து தன் குடும்பத்தை தேடுகிறார். குடும்பம் கொல்லப்பட்டதை அறிந்து, பாடஷாவுடன் மோதி அழிந்து போகிறார். (நக்மா தான் அந்த குழந்தையா எனும் விபரீத சந்தேகமும் பலருக்கு உண்டு)
ஒருவேளை அவர் குழந்தை உயிரோடு இருந்திருந்தால்...பாட்ஷா அந்த குழந்தையை வளர்த்திருந்தால்..பாட்ஷா 'டான்' ரஜினியாக இல்லாமல் 'போலீஸ் ஆபிசர்' நாசராக இருந்திருந்தால்...அது தான் அமர்க்களம்.
டான் ரகுவரன் தன் குடும்பத்தை பிரித்த நாசரை பழிவாங்க வருகிறார். நாசர் பெண் ஒரு ரவுடியை காதலிக்க வைக்கிறார். பிறகு தான் தெரிகிறது, அந்த பெண் தான் தன் குழந்தை என்று. இது தான் அமர்க்களம் படத்தின் கதை. கதைப்படி ரகுவரன் தான் ஹீரோ, அஜித் அல்ல!!
இது தற்செயலான ஒற்றுமையா அல்லது ஆன்ட்டனி கேரக்டரின் தொடர்ச்சி தான் துளசிதாஸா என்பது இயக்குநருக்கே வெளிச்சம்!

-----------------------

முன்னொரு காலத்தில் தூர்தர்சனில் ‘வீடு’ படம் பார்த்தேன். வீடு வந்து சேர்ந்தபின்னும், அந்த படத்தில் வந்த பிண்ணனி இசை மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
இசை பற்றி நமக்கு பெரிய அறிவு இல்லையென்றாலும், மனதை உருக்கும் ஒரு இசையை வீடு கொடுத்தது. பிறகு,ஏறக்குறைய 20 வருடங்களுக்குப் பிறகு, அந்த இசையை இணையம் வந்தபின் தேடினேன்.
அது ’How to Name it?’ ஆல்பத்திற்காக இசைஞானி போட்ட ’How to name it’ எனும் இசைக்கோர்ப்பு என்று கண்டுகொண்டேன். கேட்டால், கண்ணெல்லாம் கலங்கிவிடும். துக்கம் தொண்டையை அடைக்கும். அப்படி ஒரு இசை.
அதே போன்ற ஒரு இசையை சமீபத்தில் "In the Mood for Love"படத்தின் தீம் மியூசிக்கில் கேட்டேன். உருக்கிவிட்டார்கள்.
Yumeji's Theme எனும் அந்த இசை, அற்புதமான விஷுவல்ஸுடன் இங்கே :
இதை டவுன்லோடு செய்து, 100முறைக்கு மேல் கேட்டுவிட்டேன். இன்னும் கேட்பேன்!

----------------------
சமீபத்தில் பரவலான கவனத்தைப் பெற்ற படம், மெட்ரோ. சென்சார் சர்ட்டிஃபிகேட்டே தரமாட்டோம் என்று சென்சார் போர்டு சொல்ல, ரிவைசிங் கமிட்டிக்குப் போய் ஏ சர்ட்டிஃபிகேட்டுடன் ரிலீஸ் ஆன படம் இது. படத்தைப் பார்த்தபோது, சென்சார் போர்டின் நடவடிக்கை ஓரளவு சரியென்றே தோன்றியது.
செயின் பறிப்பு பற்றி ஆய்வு செய்து இந்த படத்தை உருவாக்கியிருப்பதாக இயக்குநர் சொல்லியிருந்தார். அது உண்மை தான். அதிக டீடெய்லுடன், நல்ல திரைமொழியுடன் எடுக்கப்பட்டிருக்கும் மோசமான திரைப்படம் இந்த மெட்ரோ.
விழிப்புணர்வு தான் தன் நோக்கம் என்று இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் சொன்னாலும், படத்தைப் பார்க்கும்போது அப்படித் தோன்றவில்லை. ஏனென்றால், பாதிக்கப்பட்டோரின் ஆங்கிளில் இருந்து ஒரு காட்சியும் இல்லை. (ஹீரோ பாதிக்கப்படுவது செயின் பறிப்பு சம்பவத்தால் அல்ல)
படத்தின் ஆரம்பக்காட்சியில் ஹீரோ ஒருவனை சித்திரவதை செய்வது விலாவரியாக காட்டப்படுகிறது.
செயின் பறிப்பில் ஒரு குழந்தை பைக்கில் இருந்து பறந்து வந்து தரையில் மோதி...!
போலீஸ் ஒருவனை விசாரிக்கும்போது, அவன் வாயில் ஐஸ் கட்டிகளைப் போட்டு.......
கிளைமாக்ஸில் வில்லனை ஹீரோ கொல்கிறார். எப்படியென்றால், அவன் கழுத்தில் ஹெல்மெட்டை மாட்டி, டடடட என எலும்பு நொறுங்கும் ஓசையுடன் கழுத்தைத் திருப்பி சடெக்!
- இப்படி படத்தில் வரும் ஹீரோ, ஹீரோவின் நண்பன் செண்ட்ராயன், வில்லன் குரூப், போலீஸ் என எல்லோருமே மிகமிக கொடூரமான ஆட்களாக வருகிறார்கள். இந்த வன்முறை மிகவும் ரசித்து, சிலாகித்து, நுணுக்கமான விவரங்களுடன் இயக்குநர் காட்சிப்படுத்துகிறார். படத்தின் சிக்கலே இது தான்.
ஒரு வில்லனையோ அல்லது சில கேரக்டர்களையோ மோசமாக சித்தரிக்க, கொடூர வன்முறைக்காட்சிகளை வைக்கலாம். ஆனால் அத்தனை பேருமே பாலா பட கேரக்டர்களாக உலவினால் என்னாகும்? பாலா படத்திற்கு நேரும் கதி தான் ஆகும்!
படத்தின் திரைக்கதையும் வணிக வெற்றியை மனதில் வைத்து எழுதப்படவில்லை. அதை இய்க்குநரே ஒரு பேட்டில் ‘இத்தகைய ராவான படங்களும் வரவேண்டும்’ எனும் நோக்கத்தில் எடுத்ததாக சொல்கிறார்.
ஒரு அழகான குடும்பம்..அதில் வழி தவறும் தம்பி..மேலும் கெட்டுப்போகிறான் அந்த தம்பி..மேலும் மேலும் கெட்ட சம்பவங்கள் தம்பியால் நடக்கின்றன..அவன் வீட்டிலேயே உச்சகட்ட வன்முறை அவனால் அரங்கேறுகிறது..வில்லனையும் காலி செய்து, தம்பி மெயின் வில்லன் ஆகிறான். - இப்படி ஒரு பையனின் சீரழிவையே படம் விவரிக்கிறது. ஹீரோயின் மட்டுமல்லாது ஹீரோவுமே தொட்டுக்கொள்ள ஊறுகாய் தான் படத்தில்..இதனால் என்ன ஆகிறது என்றால், படம் நகர நகர, நாம் அன் ஈஸியாக ஃபீல் செய்ய ஆரம்பிக்கிறோம். மிகமிக தப்பான இடத்தில் வந்து மாட்டிக்கொண்ட உணர்வு கூடிக்கொண்டே போகிறது நமக்கு. இயக்குநரின் நோக்கமே அது தான் என்று நினைக்கிறேன். ஆனால் இதை ஒரு ஹாரர் ஃபிலிமில் அவர் செய்திருக்கலாம்.
இத்தகைய த்ரில்லரில், இப்படி ஒரு நெகடிவ் வழிமுறையைக் கையாண்டால் படம் கமர்சியலாக வெற்றி பெறுவது கஷ்டம்.
அம்மா இறந்ததை ஹீரோ துப்பறியக் கிளம்புகிறான் என்று முதல்சீனை ஆரம்பித்திருந்தால், இன்னும் பெட்டராக இருந்திருக்கும். கதையில் உடனே நாம் இன்வால்வ் ஆகியிருப்போம். இருப்பினும் ஒரு இருண்ட உலகத்தை யதார்த்தத்துடன் கொடூரமாக காட்டியிருப்பதால், திடமனது கொண்டோர் ஒருமுறை பார்க்கலாம்!
ஒரு நல்ல ஃபிலிம் மேக்கராக வருவதற்கான எல்லா அறிகுறிகளும் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனிடம் தெரிகின்றன. எனவே கொடூரமான, சைக்கோத்தனமான, பாலாத்தனமான சிந்தனைகளை விட்டு அவர் வெளியே வந்தால், ஜொலிப்பார்!

----------------------

சந்தைக்கு வந்த கிளி பாட்டுல கவுதமியை பார்க்கிறவன் ரசிகன்.
குரூப்ல ஆடுற ஷர்மிலியை பார்க்கிறவன், கலா ரசிகன்!
----------------------
எனக்கு பிபி வந்த கதை - பாசமுள்

குடும்ப குத்து விளக்காக
ஒரு தங்கச்சி பிறக்க,
குடும்பமே சீராட்டி வளர்க்க,
அவ இஞ்சினியர் தான் ஆவேன்னு அடம்பிடிக்க
காசு இல்லையேம்மான்னு நைனா கலங்க
நான் இருக்கேன்ன்னு அண்ணன் களம் இறங்க

பொண்ணு படிச்சு வேலைக்குப் போக,
கடனை அடைப்பாள்ன்னு அண்ணன் நம்ப
'என் சம்பளம் எனக்கே’ன்ன்னு தங்கை கொடிபிடிக்க
அத்தனை சம்பளமும் அக்கவுண்ட்டில் சேமிப்பா குவிய

கடனை அண்ணன் தானே அடைக்க,
அடுத்து மாப்பிள்ளை பார்ப்போம்னு கிளம்ப
'ஆல்ரெடி ஐயாம் இன் லவ்வு'ன்னு அவ சொல்ல
'வேற சாதியை ஒத்துக்க மாட்டேன்’னு நைனா குதிக்க
'போய்யா என் டுபுக்கு'ன்னு ரெஜிஸ்ட்டர் மேரேஜ் நடக்க

கொஞ்ச நாளில் அண்ணன் சமாதானம் ஆக
தங்கை, குடும்பத்துடன் ஐக்கியம் ஆக
திடீரென தங்கைக்கு சுகமில்லாமல் போக
அண்ணன் வீட்டில் வந்து படுத்துக்கொள்ள
அண்ணன் அதை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்ய

ஊருக்குப் போன என்னை பார்த்த கந்து வட்டி அங்கிள்
'என்னய்யா, மாசம் ஐயாயிரம் சம்பாதிக்காத
உன் அண்ணன் ஐம்பதாயிரம் வட்டிக்கு கேட்கிறான்னு சொல்ல,
நான் சும்மாயிராமல் எதுக்குன்னு கேட்க

தங்கச்சிக்கு ஹாஸ்பிடல் பீஸ் கட்டன்னு அவர் சொல்ல
பிபி ஏறி மயக்கம் போட்டு விழுந்தேன்.

--------------------
Sydney Lumet எழுதிய அருமையான புத்தகம், Making Movies. அப்படி ஒரு புத்தகம் தமிழில் வராதா என்று ஏங்கியிருக்கிறேன். அந்த ஏக்கத்தை தீர்த்து வைத்திருக்கிறது மிஷ்கின் எழுதியிருக்கும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரையாக்கமும் திரைக்கதையும்’புத்தகம்.

சினிமா மாணவர்கள் அனைவரின் கையிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. ஷாட் பை ஷாட், ’ஏன் இந்த ஷாட் வைக்கப்பட்டது..அதன் மூலம் இயக்குநர் சொல்ல முயன்றது என்ன?’என்று விலாவரியாக விவரிக்கிறார் மிஷ்கின்.
திரைக்கதையைப் பற்றி மட்டும் தான் விவரித்திருப்பார் என்று எண்ணி வாங்கிய எனக்கு, ஷாட் பை ஷாட் விவரிப்பு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்த படத்தின் ஸ்பெஷலே, கண் இமைக்காமல் கதை சொல்லும் சீன் தான். அது தான் இந்த புத்தகம் எழுத முக்கியக் காரணம் என்கிறார் மிஷ்கின். ஃப்ளாஷ்பேக் என்றால் நடந்தது காட்சியாக விரியும் அல்லது வசனமாக சொல்லப்படும். அப்படி இல்லாமல் ஒரு குழந்தைக்கு கதை சொல்வதன் மூலம் ஹீரோவின் முன்கதை சொல்லப்பட்டது, உலகசினிமாவிலேயே இது தான் முதல்முறை. எப்போதுமே புதுமையாக எதையாவது முயற்சி செய்யும்போது, இதே போன்று ஏற்கனவே யாராவது செய்திருக்கிறார்களா என்று ஒரு ரெஃபரென்ஸுக்கு பார்த்துக்கொள்வது ஃபிலிம் மேக்கிங்கில் வழக்கம்.
அப்படி எந்த ரெஃபரென்ஸும் இல்லாமல், நண்பர்களின் எச்சரிக்கையையும் மீறி, மிஷ்கின் இந்த காட்சியை வைத்ததை இந்த புத்தகம் விலாவரியாகச் சொல்கிறது. 621 பக்க புத்தகத்தில் 362 பக்கங்களில் ஃபிலிம் மேக்கிங் பற்றி விளக்கி எழுதியிருக்கிறார் மிஷ்கின். ஸ்டோரிபோர்டுகளையும் இணைத்திருப்பது கூடுதல் போனஸ். சினிமா பற்றி தமிழில் வந்திருக்கும் புத்தகங்களில் டாப், மிஷ்கினின் இந்த புத்தகம் என்று உறுதியாகச் சொல்லிவிடலாம்.
புத்தகத்தில் இருந்து :
.... ஒவ்வொரு திருநங்கையும் தன் வயிற்றில் பிள்ளை உருவாகவேண்டுமென்று கனவு காண்கிறாள். அந்தக் கனவிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் கழிக்கிறாள். ஆனால், அது நடக்கவே நடக்காது. அதற்குப் பதிலாக ஒரு தோட்டாவை அந்த வயிற்றுக்குள் வாங்கிக்கொள்கிறாள். பாரதி இறந்துபோகும்பொழுது தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு, ஏதோ கருக்கலைந்துவிட்டதுபோல ரத்தக்கறைகளுடன் காணப்படுவாள். இது நான் அவளுக்குச் செய்கிற நியாயம்.
.....நான் என்னுடைய ஷாட் டிவிசனை, ஒரு பெரிய விளையாட்டாகவும், நடனமாகவும் பார்க்கிறேன். என்னால் ஓடியும் ஆடியும் விளையாட முடியாத இடத்தில், எனக்கான சுதந்திரத்தை இழக்கிறேன். என்னுடைய ஷாட் டிவிசன் சாய்சஸ் அதிகமாக இருக்கும்....நான் கதை எழுதும்போதே காட்சிக்கான ஷாட் டிவிசனையும் வரையறுக்கிறேன்.
- ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரையாக்கமும் திரைக்கதையும்’ புத்தகம்.- பேசாமொழி பதிப்பக வெளியீடு- விலை ரூ.600.

------------------------
1990களில் புலன்விசாரணை, கேப்டன் பிரபாகரன், மக்களாட்சி, அரசியல் என ஆர்.கே.செல்வமணி பல அரசியல் படங்களை எடுத்தார்.
பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து படம் எடுப்பது அவர் வழக்கம். வரிவிலக்கு கிடைக்காது அல்லது தியேட்டரே கிடைக்காது எனும் மிரட்டல்கள் எல்லாம் இல்லாத பொற்காலம் அது.
அமைதிப்படை எடுத்த மணிவண்ணன்கூட அதன்பிறகு கலைஞரைப் பார்த்து சகஜமாக சிரித்துப்பேசிய அபூர்வ ஜனநாயக காலகட்டம்.
ஆனால் இன்று டாஸ்மாக்கிற்கு எதிராக சீன் வைத்தால், வரிவிலக்கு கிடைக்காது. ஆளும்கட்சிக்கு எதிராக சீன் வைத்தால் அல்லது ஆளும்கட்சியை பகைத்துக்கொண்டால், அவர்களின் விஸ்வரூபத்தை சந்திக்க நேரிடும் எனும் துர்பாக்கியநிலை.
இந்த சூழ்நிலையில் வருவதால், ஜோக்கர் ஒரு எதிர்பார்ப்பிற்குரிய படமாக ஆகிறது. படம் வெற்றியடைய வாழ்த்துகள்!
------------------

Be happy to be lonely.
Be lonely to be happy.

--------------

எதை இழந்தாய்? எதற்காக அழுகிறாய்?
எதை இழந்தாயோ அது இங்கேயே திருப்பிக் கொடுக்கப்படும் - இன்னும் பெட்டராக!!

By ஸ்வாமி செங்கோவியானந்தா

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.