Sunday, February 19, 2017

Facebook Posts - December 2016



2016 - சூப்பர் ஹிட் படங்கள் :

200 படங்களுக்கு மேல் ரிலீஸ் ஆனாலும், 2016ஆம் ஆண்டில் சூப்பர் ஹிட் கேட்டகிரியில் சேர்ந்தது, இந்த ஐந்து படங்கள் தான்.
1. கபாலி :
இந்த படத்திற்கு விளக்கம் தர வேண்டியதே இல்லை. டீசரில் ஆரம்பித்தது கபாலி அட்டகாசம். ஃப்ளைட் முதல் அரசியல் இதழான ஜூ.வி.வரை கபாலியே ஆக்ரமிக்க, படத்தின் மார்க்கெட்டிங் பார்த்து பாலிவுட்டே மிரண்டது. ‘கபாலி பார்க்கவில்லை என்றால் தெய்வக்குற்றம் ஆகிவிடும்எனும் ரேஞ்சில் மக்களை ஆட்டிப்படைத்தது கபாலி. ’சூப்பர் ஸ்டார் நாற்காலி இன்னும் என்னிடம் தான் இருக்கிறதுஎன்று நிரூபித்தார் ரஜினி.
2. தெறி:
இந்த ஆண்டு வந்த ஒரேயொரு விஜய் படம். சத்ரியனை மிக்ஸியில் போட்டு அரைத்து அட்லி செய்த சட்னிக்கு நல்ல வரவேற்பு. மீனா மகளின் துள்ளல் நடிப்பும் பாராட்டைப் பெற்றது. கத்திக்குப் பிறகு இதிலும் விஜய் கொஞ்சம் நடித்திருந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர் மிகவும் நம்பிய புலி(2015) காலை வாரினாலும், தெறி அவரின் வசூல் மன்னன் பட்டத்தை உறுதி செய்தது.
3. ரஜினி முருகன் :
பொதுவாக ரிலீஸ் ஆகாமல் இழுத்தடிக்கும் படங்கள் ஓடாது எனும் செண்டிமெண்ட் உண்டு. அதையெல்லாம் மீறி சிவகார்த்திகேயன் சூப்பர் ஹிட் வெற்றியை ரஜினி முருகன் மூலம் அடைந்தார். கடனில் சிக்கிப் போராடிய லிங்குசாமிக்கு ரஜினி முருகன் வெற்றி, பெரும் ஆறுதல். ஃபேமிலி ஆடியன்ஸையும் குழந்தைகளையும் கவரும் அம்சங்களுடன் .. பார்ட் 2 போன்று வந்தது ரஜினி முருகன். ராஜ்கிரணையும் காமெடியில் பார்த்தது புதிய அனுபவமாக இருந்தது. ’நம்பி வாங்க..சந்தோசமாப் போங்கஎன்று சொன்ன சொல்லைக் காப்பாற்றினார்கள்.
4. பிச்சைக்காரன் :
ஸ்டார் வேல்யூ, கோடிகளில் மார்க்கெட்டிங் என்றெல்லாம் இல்லாமல் சாதாரணமாக வெளியாகி, நல்ல படம் என்று மவுத் டாக் பரவி சூப்பர் ஹிட் ஆன படம், பிச்சைக்காரன். தமிழ் சினிமாவின் மரியாதைக்குரிய இயக்குநர்களில் ஒருவரான சசிக்கும் விஜய் ஆண்டனிக்கும் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது பிச்சைக்காரன். அம்மா செண்டிமெண்டை புதிய கோணத்தில் உபயோகித்ததால், தமிழ்நாட்டில் மட்டுமல்லாது ஆந்திராவிலும் பிச்சைக்காரனுக்கு நல்ல வசூல்!
5. இது நம்ம ஆளு :
இயக்குநர் பாண்டி ராஜ் சிம்புவின் இந்த படத்தை ஒப்புக்கொண்டபோதே பலரும்ஏன் இந்த விபரீத விளையாட்டு?’ என்றார்கள். ஆனாலும் துணிந்து இறங்கி, போராடி, கெஞ்சி, கதறி, வீம்பு பண்ணி, ‘அடப் போங்கடாஎன்று பசங்க-2 படத்தையே முடித்து, ஹீரோயின் பஞ்சாயத்தை தீர்த்து வைத்து, மியூசிக் எப்போ சார் போடுவீங்க என்று ட்விட்டரில் சிம்பு தம்பியிடம் கேட்டு, நவரசங்களையும் அனுபவித்துக் கொட்டி பாண்டி ராஜ் எடுத்த படம் இது. சிம்புவை வைத்து ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணுவதே பெரும் வெற்றி தான் என்பதால், இந்த சூப்பர் ஹிட் லிஸ்ட்டில்இது நம்ம ஆளுக்கு சிறப்பான இடம் அளிக்கப்படுகிறது.

----------------
ஒரு வெற்றி கிடைக்காதாஎன்று ஏங்கித் தவிக்கும்போது, சில படங்கள் வந்து சிலரின் மானத்தைக் காப்பாற்றி விடும். இந்த ஆண்டு, அப்படி வெளியான ஐந்து படங்கள் பற்றிப் பார்ப்போம்.
1. தில்லுக்குத் துட்டு :
இனிமேல் ஹீரோ தான்என்று சந்தானம் முடிவு செய்தாலும், ரசிகர்களின் ஆதரவு கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருந்தார். ஓப்பனிங் சாங்குடன் வரும் சீரியஸ் ஹீரோ சந்தானத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ‘நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு?’ என்று அவருக்காக நாம் ஃபீல் பண்ணியபோது, தில்லுக்குத் துட்டு வெற்றிகரமாக ஓடி ஹீரோ சந்தானத்திற்கு ஒரு வெளிச்சத்தைக் காட்டியது. தொடர்ந்து அவர் செலக்ட் செய்திருக்கும் படங்களைப் பார்க்கும்போது, இந்த வெற்றியை அவர் தக்கவைத்துக்கொள்வார் என்றே தெரிகிறது.
2. இருமுகன் :
மொக்கை கதைக்காக உடலை வருத்திக்கொள்வது, ஒரு டைரக்டரை நம்பி இரண்டு வருடத்தை ஒரே படத்திற்கு ஒதுக்கி ஏமாந்து போவது, வயதைக் காட்டும் முகச்சுருக்கம், பத்து எண்றதுக்குள்ள கிடைத்த ரிசல்ட் என்று சீயான் விக்ரமுக்கு கொஞ்சகாலமாகவே கெட்ட நேரம் தான். நல்ல படங்களும் கவிழ்த்துவிட, கமர்சியல் படங்களும் ஓடாமல் போகஇனி அவர் அவ்வளவு தானோ?’ என்று நினைக்கும்போது, இருமுகன் வந்து ஹிட் அடித்தது. யாரும் எதிர்பாராதவகையில் மரியாதைக்குரிய வெற்றியை தேடித்தந்தது. சீயான் மீண்டு வந்ததில் நமக்கும் சந்தோசமே! (லவ் கேரக்டரின் மேனரிசத்தில் அசத்தினாலும், மேக்கப் கொடூரம் ப்ரோ!)
3. கொடி :
மாரி, தங்கமகன், தொடரி என தொடர்ந்து மூன்று ஃப்ளாப்களை கொடுத்த தனுஷ்க்கு நிம்மதியைக் கொடுத்தது கொடியின் வெற்றி. நீண்டநாட்களுக்குப் பிறகு ஒரு அரசியல் படம், இரட்டை வேடம், த்ரிஷாவின் கேரக்டர் என்று பல ப்ளஸ் பாயிண்ட்களுடன் வெளியாகி வெற்றிக்கோட்டைத் தொட்டது கொடி. வி..பி.யின் அதிரிபுதிரி ஹிட்டுக்குப் பிறகு வந்த படங்கள் எல்லாம் சொதப்பிய நிலையில், கொடி தனுஷின் மார்க்கெட்டை மீண்டும் உயர பறக்க வைத்திருக்கிறது. அடுத்து நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா...சாரி, என்னை நோக்கிப் பாயும் தோட்டா & வட சென்னை ஆகிய படங்கள் தனுஷின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டும் என்று நம்புகிறேன்.
4. மருது :
2013
ல் வந்த பாண்டிய நாடு தான் விஷாலின் கடைசி ஹிட் மூவி. அதன்பிறகு வந்த நா.சி.மனிதன், பூஜை, ஆம்பள, கதகளி, பாயும்புலி எல்லாம் தோல்விப்பட வரிசையில் சேர்ந்தன. இந்த நிலையில் தான் முத்தையா இயக்கத்தில்மருதுவை நம்பி இறங்கினார். ஹீரோவை மையப்படுத்தாமல் மூன்று பெண்களை மையப்படுத்திய முழுமையான கதை, கிராமத்து கதைக்களம், பாட்டி கேரக்டர் ஆகிய பாசிடிவ் கேரக்டர்களைக் கொண்டிருந்ததால், விஷாலில் வெற்றிப்பட வரிசையில் சேர்ந்தது மருது. இரண்டு மணிநேரப் படத்தில் ஹீரோ இல்லாமலேயே அரைமணி நேரத்திற்கு மேல்பட்ட காட்சிகள் நகர்ந்ததும், அதற்கு விஷால் ஒத்துக்கொண்டதும் பாராட்டப்பட வேண்டிய ஆச்சரியம். இயக்குநர் முத்தையா, சுயசாதிப் பெருமையை மட்டும் தன் படங்களில் குறைத்துக்கொண்டார் என்றால், ஹரி போன்று ஒரு நல்ல கமர்சியல் இயக்குநராக வலம் வரலாம்.
5. சென்னை - 28 இரண்டாம் இன்னிங்ஸ் :
பிரியாணி, மாசு(!) என பெரிய ஹீரோக்களை வைத்து எடுத்த படங்கள் எல்லாம் கவிழ்த்துவிட, மீண்டும் தனது ஃபேவரிட் மைதானத்திற்குள், முதல்பட டீமுடன் இறங்கினார். முதல் பாகம் அளவிற்கு வெற்றி இல்லையென்றாலும், தான் இன்னும் ஃபார்மில் இருப்பதை வெங்கட் பிரபு நிரூபித்தார். முதல்பாக ரசிகர்கள் இரண்டாம் பாகத்தைப் பார்த்தபோதுநமக்கும் வயசாகிடுச்சுஎன்பதை உணர்ந்து ஃபீல் செய்தது தமிழ் சினிமா கண்டிராத அவலம். காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது!!

------------------------
ஒவ்வொரு வருடமும் ஆடியன்ஸுக்கும் தமிழ்சினிமாவிற்கும் மரியாதை செய்யும் விதமாக மிகச்சில படங்கள் வரும். அந்தவகையில் வெளிவந்த ஐந்து படங்கள் இவை.
1. இறுதிச்சுற்று:
நல்ல படங்கள் வெற்றியடைவது அபூர்வமான விஷயம். அந்த வகையில் வருட ஆரம்பத்திலேயே, மாதவனின் கம்-பேக் மூவியான இறுதிச்சுற்று பரவலான பாராட்டைப் பெற்றது. இரண்டு வருடங்களுக்கு
மேல் திரைக்கதைக்காக மட்டுமே செலவளித்து, பல வீராங்கனைகளின் அனுபவங்களைச் சேகரித்து எடுக்கப்பட்ட படம். ஒரு மாஸ்டருக்கும் சிஷ்யைக்குமான மோதலையும் காதலையும்
உணர்வுப்பூர்வமாக சித்தரித்து வெற்றி பெற்றார் இயக்குநர் சுதா கொங்கரா. அதிலும் கிளைமாக்ஸில் மாதாவன் மேல் ரித்திகா சிங் தாவி ஏறிக்கொள்ளும் காட்சி அட்டகாசம். குத்துச்சண்டை
வீராங்கனையாக இருந்தும், நடிப்பிலும் ரித்திகா சிங் அசத்தியது எல்லாருக்குமே ஆச்சரியம் தான்.
2. விசாரணை :
சந்திரகுமார் எழுதிய லாக்கப் நாவலை அடிப்படையாக வைத்து, வெற்றிமாறன் இயக்கிய உலகசினிமா. தொந்தரவு செய்யும் (! Disturbing movies) படங்கள் என்பதே தமிழில் அரிதாக வரும்
விஷயம். விசாரணை, எவ்வித சமரசமும் இல்லாமல் அப்படி எடுக்கப்பட்ட படம். இடைவேளை வரை உண்மைக்கு நெருக்கமாக இருந்து, அடி ஒவ்வொன்றையும் இடி மாதிரி நம்முள் இறக்கியிருந்தார்கள்.
இடைவேளைக்குப்பின் சாதிக்பாட்சா தற்கொலை விவகாரத்தை கோடிட்டுக் காட்டியிருந்தார்கள். இதில் நடித்தஆடுகளம்முருகதாஸுக்கும் துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்திருக்க
வேண்டும். ஜஸ்ட் மிஸ். ஒவ்வொரு சிஸ்டமும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, தனக்குக் கீழே இருப்பவர்களின்மேல் எப்படி வன்முறையைப் பாய்ச்சுகிறது என்பதை அடித்துப் பேசியது விசாரணை. ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ்ப்படம் என்ற பெருமையை தமிழ்சினிமாவுக்கு தேடித்தந்தது விசாரணை.
3. ஜோக்கர் :
என்னங்க சார் உங்க சட்டம்?’ என்று பாடல் வெளியீட்டிலேயே பலரின் பாராட்டையும் கவனத்தையும் பெற்ற படம். திரைமொழி, காட்சிவழி கதை சொல்லல் என்பதை எல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, நாட்டுநடப்பை வெளுத்துவாங்கியபொலிடிக்கல் டிராமாஜோக்கர். குக்கூவில் சறுக்கினாலும் ஜோக்கரில் தன்னை நிலைநாட்டிக்கொண்டார் ராஜு முருகன். ஆரண்ய காண்டத்திற்குப் பிறகு திக்குத்தெறியாமல் திரிந்த குரு சோமசுந்தரத்திற்கு மீண்டும் நல்ல பெயரை தேடித்தந்தது ஜோக்கர். படத்தில் தெறித்த சமூக அக்கறைக்காகவே கொண்டாடப்பட வேண்டிய படம் ஜோக்கர்.
4. மனிதன் :
சல்மான்கான் ரோட்டோரம் படுத்திருந்த அப்பாவிகளை கார் ஏற்றிக்கொன்ற வழக்கினை அடிப்படையாகக் கொண்டு வந்த ஹிந்திப் படம், ஜாலி எல்.எல்.பி. அதன் ரீமேக்காக எடுக்கப்பட்ட படம், மனிதன். வழக்கமான கெக்கேபிக்கே படங்களை விட்டுவிட்டு, வித்தியாசமான படங்களை நோக்கி உதயநிதி நகர்ந்த வருடம் இது. கெத்து காட்டி மொத்து வாங்கினாலும், மனிதனில் மனிதர் நல்ல பெயரைப் பெற்றார். ராதாரவியும் பிரகாஷ்ராஜும் நீண்டநாளைக்குப் பிறகு மனதில் நிற்கும் கேரக்டர்களில் வந்து அசத்தினார்கள். இந்திய நீதிமுறை எப்படி பணக்காரர்களுக்கு சாதகமாக இருக்கிறது, இங்கே எளியவர்களின் உயிருக்கு இருக்கும் மரியாதை என்னவென்று தெளிவாகவும் நிதானமாகவும் பேசியதற்காகவே, மனிதனை மதிக்கலாம்!
5. உறியடி :
சாதி அரசியல், வன்முறை ஆகிய சுழலுக்குள் சிக்கிய மாணவர்களின் கதையைப் பேசியது உறியடி. அறிமுக இயக்குநர் விஜயகுமார் முதல் படத்திலேயே நம் கவனத்தைக் கவர்ந்தார். இது ஏறக்குறைய உண்மைக்கதை என்பது அன் - அஃபிஷியல் நியூஸ். ஒரு சிறுநகரம், ஒரு காலேஜ், ஒரு பார் என சிறு ஏரியாவை எடுத்துக்கொண்டு புகுந்து விளையாடியிருந்தார்கள். அதிலும் அந்த இண்டர்வெல் ப்ளாக் அதிரடியாக இருந்தது. இயல்பான முகம் கொண்ட விஜயகுமார், சசிகுமார் போல் வேறு இயக்குநர்களின் படங்களிலும் நடிக்க ஆரம்பிக்கலாம்.
போனஸ் : அழகுக் குட்டிச் செல்லம் :
இந்த படத்தின் பாசிடிவ் & நெகடிவ் பாயிண்ட்டே, அதன் கதையை எளிதாகச் சொல்லிவிட முடியாது என்பது தான். இதற்கு வந்த விமர்சனங்களில் படித்தவர்கள் குழம்பிப்போனார்கள். வெவ்வேறு கேரக்டர்கள், எல்லோருக்கும் குழந்தைகளை மையமாக வைத்து பிரச்சினை, எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் தற்செயல் நிகழ்வுகள் என மிகவும் சிக்கலான திரைக்கதையை தெளிவாக, அதிலும் குழந்தைகளின் திரைப்படமாக எடுத்திருந்தார்கள் இநக்குநர் சார்லஸும் தயாரிப்பாளர் ஆண்டனியும். மிகவும் நல்ல முயற்சி எனும் அளவில் அழகுக்குட்டிச் செல்லமும் இந்த லிஸ்ட்டில்!

----------------------
இந்த ஆண்டு எவ்வளவோ மொக்கைப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனாலும் நாம் நம்பிக்கை வைத்த கலைஞர்களில், நம்மை அதிகம் ஏமாற்றியவர்கள் இவர்கள்.
ஹீரோ - ஜீவா:
2014- யான் எனும் காவியத்தை கொடுத்த களைப்பில் 2015ல் ஓய்வெடுத்த ஜீவா, 2016ல் போக்கிரி ராஜா, திருநாள், கவலை வேண்டாம் ஆகிய படங்களில் நடித்து நம்மை மேலும் கவலைக்கு உள்ளாக்கினார் ஜீவா என்றாலே நம் நினைவுக்கு வருவது ராம்- - கற்றது தமிழ் போன்ற நல்ல படங்கள் தான் அருமையான நடிகர் அவர். யார் கண் பட்டதோ ' இனி மசாலா படம் தான் ' என்று திசை மாறிவிட்டார்
அவருடைய கேரியரை பார்த்தால் ராம் போன்ற நல்ல படங்கள் தான் வெற்றி பெற்றிருக்கின்றன சிவா மனசுல சக்தி தவிர்த்து அவர் நடித்த கமர்சியல் படங்கள் எல்லாமே தோல்வி தான். ஒரு பேட்டியில் ' நாலு பேரை அழ வைப்பதைவிட நாப்பது பேரை சிரிக்க வைப்பது நல்லது ' என்று கமர்சியல் ரூட்டிற்கு விளக்கம் கொடுத்தார்
உண்மையில் அவர் நடித்த கமர்சியல் படங்கள் தான் நம்மை அழ வைத்திருக்கின்றன. மீண்டும் நல்ல இயக்குநார்களுடன் இணைந்து, நல்ல படைப்புகளை அவர் தர வேண்டும் என்பதே நம் ஆசை!
ஹீரோயின் - ஹன்சிகா :
சின்ன குஷ்பூஎன்று அழைக்கப்பட்டாலும், சிட்டி தவிர்த்து மற்ற ஏரியாக்களில் ஹன்சிகா பெரிய அளவில் ரீச் ஆகவில்லை என்பதே யதார்த்தம். குஷ்புவின் ரீச், பட்டிதொட்டிவரை படுபயங்கரமாக இருந்தது. ஆனால் லட்சுமி மேனன், ஸ்ரீதிவ்யா அளவிற்குக்கூட ஹன்சிகா பி& சி செண்டர்களில் பிரபலம் ஆகவில்லை.
அதற்கு முக்கியக் காரணம், பெயர் சொல்லும்படியான கேரக்டர்கள் எதையும் அவர் செய்யாதது தான். வெறுமனே வந்து சிரித்துவிட்டுப் போனால் கனவுக்கன்னி ஆகிவிடலாம் என்ற தப்புக்கணக்கு அவரிடம் எப்போதும் உண்டு.
2015ல் (ரோமியோ ஜூலியட் தவிர்த்து) ஆம்பிள, வாலு, புலி என எல்லாமே ஊற்றிக்கொள்ள, கூடவே சிம்புவிடன் லவ் & பிரெக்கப் வேறு பேரை டேமேஜ் செய்தது. தொடர்ந்து இந்த ஆண்டில் அரண்மனை, மனிதன், போக்கிரி ராஜா & உயிரே உயிரே-வில் நடித்தார்.
முதல் இரண்டு படங்கள் ஓரளவு ஓடினாலும், இரண்டிலுமே துக்கடா கேரக்டர் தான். போக்கிரி ராஜாவும் உயிரே உயிரேவும் அவர் நிலைமையை இன்னும் சிக்கல் ஆக்கியது.
தற்போதுபோகன்மட்டுமே ஹன்சிகாவிற்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. தமன்னா மாதிரி இனியாவது நல்ல வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் இன்னொரு ரவுண்டு வரலாம்.
இயக்குநர் - பாலா :
பாலாவின் நல்ல படம் எடுத்தாலே கொடூரமாகத்தான் இருக்கும். இதில் அவர் கொடூரமாக படம் எடுத்தால்,,.!
தாரை தப்பட்டை பார்க்க தியேட்டருக்குப் போனவர்கள் எல்லாம் தெறித்து ஓடிவந்தார்கள். பாலா தன்னை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என்று விமர்சனங்கள் எழுந்தன.
பாலா படம் என்றால் விளிம்பு நிலை மனிதர்கள், சைக்கோ கேரக்டர்கள், கொடுமையான கிளைமாக்ஸ் இருக்க வேண்டும் என்று பாலாவையே அறிவுஜீவிகள் நம்ப வைத்துவிட்டார்கள். பிதாமகனில் ஆரம்பித்தது, தாரை தப்பட்டையில் முற்றி நிற்கிறது. இந்த புதைகுழியில் இருந்து பாலா மீண்டு வருவது தமிழ்சினிமாவிற்கு நல்லது. நமக்குத் தேவை காணாமல் போனசேது பாலா’..இந்த விளிம்பு-களிம்பு பாலா எல்லாம் போதும் சாமி!
--------------------------------------------
சரி...நாடு எப்படியோ நாசமாகப் போகட்டும்..நாம் உலகை உய்விக்கும் பணியைத் தொடர்வோம்.
2016ஆம் ஆண்டு நிறையும் தருணத்தில், தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநருக்கான எனது தேர்வு இது:
சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி :
ஆறு படங்கள்..அத்தனையிலும் வெரைட்டியான ரோல்கள்.
சேதுபதியில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக வந்து வெற்றிக்கொடி நாட்டினார். காதலும் கடந்து போகும் படத்தில் ரொம்ப அசால்ட்டான உடல்மொழியுடன் வந்து ரசிக்க வைத்தார்..இறைவியில் அப்பாவியான விசுவாசி, தர்மதுரையில் டாக்டர்-குடிகாரன் எனும் இருவேறு நிலைகள், ஆண்டவன் கட்டளையில் யதார்த்த நாயகன் என தொடர்ந்து பட்டையைக் கிளப்பினார். இருப்பினும், நாம் கண்ணு வைத்துவிடுவோம் என்பதால் றெக்கயில் மசாலா ஹீரோவாகவும் நடித்து வைத்தார். முந்தைய படங்களில் கான்ஃபிடன்ஸுடன் நடித்தவருக்கு, மசாலா நாயகனாக நடிப்பதில் பயங்கர கூச்சம் இருந்தது. ஒரு வெட்கச்சிரிப்புடனே 50 (100?) பேரை அடித்து நொறுக்கினார். தான் ஒரு நல்ல நடிகன் என்பதை இந்த வருடமும் அழுத்தமாக நிரூபித்தார் விஜய் சேதுபதி.
சிறந்த நடிகை - தமன்னா:
நக்மா மாதிரியே தமிழ்நாட்டில் இருந்து விரட்டப்பட்ட நடிகை..இனி அவ்ளோ தான் என்று நினைத்தபோது, சென்ற வருடமே வீரம்-பாகுபலி என கலக்கினார். இந்த வருடமும்தோழா, தர்மதுரை, தேவி, கத்திச்சண்டைஎன நான்கு வெரைட்டியான படங்களில் நடித்து, நம் மனதையும் வெள்ளையாக்கினார். கார்த்தியுடன் மீண்டும் நடிக்கிறார் என்பதே கோடம்பாக்கத்தை பரபரக்க வைத்தது. அடுத்து தர்மதுரையில் தன்னம்பிக்கை மிக்க பெண்ணாக வந்து அசத்தினார்.(நைட்டிக்கு சால் போட்டதை சொல்லவில்லை!). அதிலும்நீ என்னை லவ் பண்ணேல்ல?’என்று விஜய் சேதுபதி கேட்ட இடத்தில் அவர் எக்ஸ்பிரசன் அட்டகாசமாக இருந்தது. அடுத்து தேவி..அப்பாவி கிராமத்துப் பெண் & மாடர்ன் பேய் என இரண்டு கெட்டப்புகளில் வெளுத்து வாங்கி, இன்னும் வெள்ளையானார். திருஷ்டிக்குத் தான் கத்திச்சண்டையில் நடித்தாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.
சிறந்த இயக்குநர் - ’காக்கா முட்டைமணிகண்டன்:
காக்கா முட்டை மூலம் இந்திய அளவில் பேசப்பட்ட மணிகண்டன், இந்த வருடமும் ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை என இரண்டு தரமான படங்களை கொடுத்தார். ‘சினிமா என்பது எண்டர்டெய்ன்மெண்ட் அல்ல, எக்ஸ்பீரியன்ஸ்என்பதை கொள்கையாகவே வைத்திருப்பவர். அதை நடைமுறையிலும் செயல்படுத்திக்காட்டினார். ஆண்டவன் கட்டளை படத்தினை மிக யதார்த்தமாக எடுத்திருந்தார். போலி பாஸ்போர்ட்/விசா, கோர்ட் சீன்கள் எல்லாம் பார்த்தபோது, நிஜ சம்பவங்களையே பார்ப்பது போன்ற உணர்வைப் பெறமுடிந்தது. அதற்குரிய டீடெய்லிங் படத்தில் இருந்தது. அதனாலேயே நல்லதொரு ஃபீல் குட் மூவி என்று பரவலாக பாராட்டைப் பெற்றது. அவரதுகடைசி விவசாயிபடத்தின் டைட்டிலே, அதுவும் இன்னொரு தரமான படமாக இருக்கும் என்று சொல்கிறது.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக வருவார் என்றே நம்புகிறேன்.

-------------------
-------------------------

என்னைப் பெற்றவர், தனது சொந்த சித்தப்பா-சித்திக்கு என்னை தத்துக்கொடுத்தார். அவர்களின் மகனாகவே கிராமத்தில் நான் வளர்ந்தேன். பெற்றவர் நகரத்தில் பெரும் பணக்காரர்..எனது (தத்தெடுத்த) அப்பா-அம்மாவோ ஏழைகள். இரண்டு குடும்பங்களும் நல்லது கெட்டதில் சந்தித்துக்கொண்டாலும், ஏனோ பெரிய ஒட்டுறவில்லை. உறவு விட்டுவிடக்கூடாதே என்று என்னை மட்டும் அவ்வப்போது பிறந்த வீட்டிற்கு போய் வரச் சொல்வார்கள். ஒரு அண்ணன், இரண்டு அக்கா இருந்தும் நாந்தான் அங்கே செல்வேனே ஒழிய, அவர்கள் யாரும் எங்கள் வீட்டுப்பக்கம் வரமாட்டார்கள்.
என் அப்பா வயதானவர்..சில உடல்நோய்களைக் கொண்டவர்..குளிர்காலம் வந்தால் மருத்துவமனையில் அட்மிட் ஆகுமளவிற்கு நிலைமை போகும். ஃபேமிலி டாக்டர் தான்..நான் பிறந்த வீட்டிற்கு அடுத்த தெருவில்தான் ஹாஸ்பிடல். ஆனாலும் பெற்றவரோ உடன்பிறந்தோரோ தவறியும் வந்து பார்க்கமாட்டார்கள். கிராமத்தில் கடை வைத்திருந்தோம். பெரும்பாலும் அரைப்பரிட்சை நடக்கும்நேரம் தான் அப்பா ஹாஸ்பிடலில் அட்மிட் ஆவார். கடையைப் பூட்டினால் பூவாவிற்கு வழியில்லை. எனவே தனியே ஹாஸ்பிடலில் அப்பா படுத்திருக்க, நான் பரிட்சைக்கு படித்தபடியே துணையிருக்க, அம்மா கடையில் இருப்பார். நான் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டுபோய் அப்பாவிற்கு கொடுத்துவிட்டு, ஸ்கூலுக்குப் போய் பரிட்சையும் எழுதிவிட்டு, மதியச்சாப்பாடு எடுத்துவந்து கொடுத்து...என்று ஓடிக்கொண்டிருப்பேன். எதிரில் பைக்கில் பிறந்தவீட்டார் வந்தாலும், கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டே இருப்பார்கள்.
+2 முடித்ததும் எஞ்சின்யரிங் சீட் கிடைத்துவிட்டது. ஆனால் ஃபீஸ் கட்ட அப்பாவிடம் பணம் இல்லை. நகரத்தில் லயன்ஸ் கிளப்பிடமும் சில அறக்கட்டளைகளிடமும் உதவிகேட்கலாம் என்று முடிவுசெய்தோம். ‘என் பிள்ளையை ஏன் பிச்சைக்காரனா அலையவிட்டே?’ என்று பெற்றவர் சண்டைக்கு வந்துவிடக்கூடாதே என்ற பயத்தில் என் அப்பா-அம்மா என்னை பெற்றவரிடம்அவனே ஃபீஸ் கட்டுவானா?’ என்று ஒருவார்த்தை கேட்கச் சொன்னார்கள். கேட்டேன்..’என்கிட்டே ஏதுப்பா காசு?..அதையெல்லாம் அவங்க தான் பார்த்துக்கணும்என்று பதில் வந்தது. பிறகு பிச்சை எடுத்து கல்லூரியில் சேர்ந்தேன்.
மூன்றாவது வருடம் படிக்கும்போதே அப்பா இறந்துபோனார். இறப்பிற்கு பெற்றவர் வரவேயில்லை. படிப்பு பாதியில் நிற்கிறதே..அந்த கிழவி பிள்ளையை வைத்துக்கொண்டு என்ன செய்வாள் என்ற கவலையும் அங்கே இல்லை. ‘விடுடா பார்த்துக்கலாம்என்று என் அம்மாவே கடைக்குச் சரக்கு வாங்கிவந்து விற்று, மீதி ஒரு வருடத்தையும் படிக்க வைத்தார்.
நான் வேலையில் சேர்ந்த சில மாதத்தில், என்னைப் பெற்ற புண்ணியவானும் இறந்துபோனார். அம்மாவும் சொந்தங்களும் என்னிடம்சொத்தில் பங்கு கேட்கலாம் வாஎன்றார்கள். நான் வேண்டவே வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். அப்போது என் சம்பளம், வெறும் இரண்டாயிரம் ரூபாய். சிறு கிராமத்து வீடு தவிர்த்து வேறு சொத்துகளும் கிடையாது. பெற்றவருக்கு நகரத்தில் ஒரு பெரிய வீடும், புறநகரில் இருபது வீடுகளும் சொந்தமாக இருந்தன. அவன் சொத்து எனக்குத் தேவையேயில்லை என்று மறுத்துவிட்டேன்.
அதற்கு நான் சொன்ன காரணம்...
சரியான நேரத்தில் இருபதில் ஒரு வீடு கிடைத்திருந்தாலும் நல்ல பள்ளியில் படித்திருப்பேன்...என் அப்பா இவ்வளவு உழைத்து உடம்பைக் கெடுக்காமல் இன்னும் கொஞ்ச வருடம் வாழ்ந்திருக்கலாம்..அப்பா இறந்து அனாதையாய் நின்றபோது, ஒரு ஆறுதலுக்குக்கூட வந்து நிற்காத ஆளின் சொத்தை வாங்குவது அசிங்கம்..அதைவிட பிச்சை எடுக்கலாம்..என் அப்பா கொடுத்த டிகிரி இருக்கிறது. அதை வைத்து நான் சம்பாதிப்பேன்
என் அம்மாவிற்கு பெரிய வருத்தம்..தான் தத்து எடுத்ததால்தான் நான் சொத்து இல்லாமல் நிற்பதாக! நான் கலங்கவில்லை..நம்பிக்கையுடன் உழைத்தேன். இன்று அவர்களிடம் இருந்ததைவிட பலமடங்கு காசு ஆண்டவன் அருளாலும் என் அப்பா-அம்மா அருளாலும் என்னிடம் இருக்கிறது. உடன்பிறந்தோர் நல்ல நிலையில் இல்லை என்று யாரோ எப்போதோ சொன்னார்கள். அவர்களை சந்திக்க வேண்டும் என்றுகூட எனக்குத் தோணவில்லை. எங்களைப் போன்ற சிம்மராசிக்காரர்கள் எதையும் மறப்பதும் இல்லை; மன்னிப்பதும் இல்லை.
இப்படி ஒரு பேக்கிரவுண்டுடன் தீபா பேட்டியைப் பார்த்தபோது, குமட்டிக்கொண்டு வந்தது

 தெளிவாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, தீபா உளறிக்கொட்டிய முத்துக்கள் இவை :
என் அப்பா இறந்ததற்குக் காரணம், ஜெயலலிதா தான். அவர் சுதாகரனை வளர்ப்புமகனாக அறிவித்ததால்தான் மனம் நொந்து, என் அப்பா இறந்தார்.
என் கல்யாணத்திற்குக்கூட அத்தை வரவில்லை. அதன்பிறகும் வந்து என்னைப் பார்க்கவில்லை.
என் அம்மா இறப்பிற்குக்கூட அத்தை வரவில்லை. ஆறுதல் சொல்லவோ, துக்கம் விசாரிக்கவோ அவர் வரவில்லை.
என் அப்பா இறந்த 1995க்குப் பிறகு அவர் என் வீட்டிற்கே வரவில்லை.
அவ்வப்போது போயஸ்கார்டன் போன என்னையும் 2004க்குப் பிறகு சந்திக்கவில்லை.
2007ல் போனபோது நேரில் சந்திக்காமல் இண்டர்காமில் பேசிய அவர்நானே உன்னை தொடர்புகொள்கிறேன்என்று சொல்லி பார்க்காமலே விரட்டிவிட்டார். அதன்பிறகும் என்னை பார்க்கவே இல்லை.
கடந்த 12 வருடங்களாக நான் இருக்கிறேனா, செத்தேனா என்று கூட அவர் கவலைப்படவில்லை.
ஆனால்...........
இவ்வளவு நல்ல அத்தையின் சொத்துக்கள் அனைத்தும் எனக்கு வேண்டும்..கட்சி பொதுச்செயலாளர் பதவியும் வேண்டும்..அதுமட்டும் போதாது, முதல்வர் பதவியும் வேண்டும்.
உங்களுக்கு எப்போது அரசியல் ஆர்வம் வந்தது?’ எனும் கேள்விக்கு தீபாவின் பதில் தான் இருப்பதிலேயே டாப் :
அத்தை ஜெயிலுக்குப் போன நேரம்..வேறு யாரோ முதல்வராக வரப்போவதாக பேச்சு அடிபட்டது. அப்போது தான் நாமே வரலாமே என்று யோசித்தேன். (அடேங்கப்பா!)
தீபா, தன் பாட்டியின் சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட போயஸ்கார்டன் இல்லத்தை சட்டப்படி உரிமை கோரலாம். ஜெயலலிதா இருக்கும்போதே கேட்டிருக்கலாம், இப்போதும் வழக்கு தொடரலாம்..தப்பில்லை.
ஆனால்...
தன் தந்தையின் மரணத்திற்கு காரணமாக, தன் தாயின் இறப்புக்குக்கூட வராத, 12 வருடங்களாக மூஞ்சியிலேயே முழிக்காத ஒரு அத்தை இறந்ததும் ஓடிவந்துசொத்து எனக்குத்தான்...எல்லாப் பதவியும் எனக்குத்தான்என்று சொல்வது எல்லாம் 1% சுயமரியாதை உள்ளவர்கூட செய்யும் காரியம் அல்ல...ஆசையும் பேராசையும் தான் தீபாவின் அடித்தளமாகத் தெரிகிறது.
தீபாவின் சகோதரர் தீபக்கை அரவணைத்த ஜெயலலிதா, தீபாவை ஏன் விரட்டி அடித்தார் என்று இன்று தான் புரிந்தது. (1990களில் ஜூனியர் விகடனில் தீபா ஒரு பேட்டி கொடுத்தார்..அடுத்த ஜெ. நான் தான் எனும் ரீதியில் பில்டப் கொடுத்ததாக ஞாபகம்!)
இதனால் தான் சென்ற பதிவில் சொன்னேன் : ஜெயலலிதா மட்டும் தீபாவை அருகில் சேர்த்திருந்தால், பத்து வருடம் முன்பே ஜெ அப்போல்லாவில் அட்மிட் ஆகியிருப்பார்.!!

------------------------

வீடியோ வந்த புதிதில் அதன் எதிர்காலத்தையும் தமிழ்நாட்டு எதிர்காலத்தையும் கணித்தது இரண்டே குரூப் தான்:
1. ‘பூமாலைவீடியோ இதழ் வெளியிட்ட மாறன் பிரதர்ஸ்
2. ’வினோத் வீடியோ விஷன்சசிகலா குரூப்
நாம தான் விவரம் இல்லாமல் எஞ்சினியர் படிச்சு வீணா போயிருக்கோம்.
--------------------------------
2011ல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
மக்களுக்காகவே வாழ்ந்த மம்மி ஒத்துக்கொள்ளவில்லை.
பிறகு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உயர்நீதிமன்றமும் டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்டது.
ஒரு பிள்ளைக்குத் தேவை என்னவென்று ஒரு தாய்க்குத் தெரியும் என்பதால்...
கால அவகாசம் கேட்டார்கள்..பிறகு, பூட்டுகிறோம் என்று சொல்லி முன்வாசலை அடைத்துவிட்டு பின்வாசலில் சரக்கு விற்றார்கள்..கொஞ்சம் நகர்த்தி வைத்துவிட்டு இது தேசிய நெடுஞ்சாலை லிமிட் இல்லை என்றார்கள்..தன்னால் முடிந்தமட்டும் குடிமக்களின் தாகம் தீர்க்க போராடியது தமிழக அரசு.
மொத்த டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 6800க்கு மேல்..நீதிமன்றம் பூட்டச்சொன்னது வெறும் 500 கடைகளை!..அதென்ன அரசு பள்ளிக்கூடங்களா, இழுத்து மூடுவதற்கு!
பல்வேறு கட்சிகளின் போராட்டங்கள், சசிபெருமாள் மரணம், மக்களின் கொந்தளிப்பு என எவற்றுக்கும் மசியாமல் அரசின் சேவை தொடர்ந்ததால், விஷயம் உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இப்போது உச்சநீதிமன்றம், இந்தியா முழுக்க தேசிய & மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது.
கடவுள் அருளாலும் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பினாலும் இப்போதாவது மதுக்கடைகள் நீக்கப்படும் என்று நம்புகிறேன்.
வெறும் பரபரப்பு அரசியலுக்கு மதுவை எதிர்க்காமல், இறுதிவரை போராடி வென்ற பாமகவிற்கும் வழக்கறிஞர் பாலுவிற்கும் எமது நன்றிகள்.
----------------------
நான் பணிபுரிந்த இடங்களில் இருந்த/இருக்கும் கேரள நண்பர்கள் எப்போதும் நம்மை இழிவுபடுத்த பயன்படுத்தும் விஷயம், ‘தமிழன் சினிமா நடிகன் பின்னால் தான் போவான்..அங்கே தலைவர் என்று யாரும் இல்லைஎன்பது.

நாமும் அப்படித்தான்..பொதுக்கூட்டத்தை வேடிக்கை பார்க்கவும், தியேட்டரை அடுத்த தலைவரைத் தேடவும் பயன்படுத்திய முட்டாள்கூட்டம் தான் நாம்!
ஆனாலும் தற்போது நிலைமை மாறியிருக்கிறது என்றே நம்புகிறேன்.
தற்போதைய துக்க சூழ்நிலையிலும் சில கேரள மீடியாக்கள் தங்கள் விஷம பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன. தமிழன் மீண்டும் சினிமாக்காரன் பின்னால் தான் போவான் என்பதை நக்கலுடன் பரப்ப ஆரம்பித்திருக்கின்றன.
வரட்டும்டா..யார் வேண்டுமானாலும் வரட்டும்...கேப்டனையே கிறுக்கன் ஆக்குன தமிழங்கடா நாங்க..வர்றவன் அதை மனசுல வச்சுக்கிட்டு வரட்டும்!!!!!
----------------
தமிழகத்தின் தைரியம் மறைந்தது!
முதல்வரின் ஆத்மா சாந்தியடையட்டும்!

-----------------------
தற்போதைய இந்திய & தமிழக அரசியல் சூழலில், முதல்வர் நலமுடன் மீள்வது அவசியம்.
ஏனோ மனது பாரமாக உணர்கிறேன். நலம்பெற பிரார்த்திப்போம்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.