அன்புள்ள செங்கோவிக்கு,
.................................... கீழே உள்ள பதிவைப் பாருங்கள் :
பிராமணர்கள் யார்? (http://bharathipayilagam.blogspot.com/2011/09/blog-post.html )
இதைப் பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?
இங்கணம்
****
---------------------------------------------------------------------------------------------------------
அன்புச் சகோதரிக்கு,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.நீங்கள் அனுப்பிய கட்டுரையைப் படித்தேன். அந்தக் கட்டுரையின் சாராம்சம் பலவருடங்களாக பிராமணர்களுக்குள் விவாதிக்கப்பட்டு/போதிக்கப்பட்டு வருவது தான். இது மீண்டும் மீண்டும் இளைய தலைமுறைப் பிராமணர்களிடம் எடுத்துச் சொல்லப்பட்டு வருகிறது. அவ்வாறு செய்வதில் பெரிய தவறொன்றும் இல்லை தான்.
ஒவ்வொரு சமூகமும் தன்னைப் பற்றிப் பெருமிதம் கொள்ள இத்தகைய விளக்கவுரைகள் அவசியமே. ஆனால் பிரச்சினை இதை வெளியே உள்ளோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும்போது வருகிறது. நீங்கள் அந்த நோக்கத்தில் எனக்கு அனுப்பவில்லையென்றும், பிராமணர் அல்லாத ஒருவனின் கருத்தை அறியும் ஆர்வத்துடனே எனக்கு அனுப்பினீர்கள் என்றும் அறிவேன். அந்தக் கட்டுரை பெரிதென்பதால், பதிலும் பெரிதாகலாம், பொறுத்தருள்க.
பிராமண சமூகத்தின் மனமயக்கங்களில் ஒன்று தன்னையும் ‘பிராமணன்’ என்றே உணர்வது. பிராமண சமூகத்தில் பிறந்ததனால் மட்டுமே அவ்வாறு ஆகிவிடமுடியும் என்று நம்பிக்கொள்கிறீர்கள். நமது முன்னோர்களான முனிவர்களையும், ரிஷிகளையும், துறவிகளையும் உங்களைப் போன்ற பிராமணர்களாக உரிமையுடன் நினைத்துக்கொள்கிறீர்கள்.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் வர்ணத்திற்கும் ஜாதிக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல் குழப்பிகொள்வது தான். வர்ணம் என்பது எப்போதும், இப்போதும் நான்கு வகையே. ஜாதி என்பது எப்போதும் நான்காக இருந்தது இல்லை.
இதை உங்களுக்கு விளக்க கிருஷ்ணரைத் தான் அழைக்கவேண்டும்.
‘நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் - இயல்பின் அடிப்படையில்’ என்கிறான் கண்ணன், பகவத் கீதையில்.
அதை பிறப்பின் அடிப்படையில் படைத்ததாக அவன் எப்போதும் சொல்லவில்லை. குணத்தின் அடிப்படையில், ஒருவரது இயல்பின் அடிப்படையில் படைத்ததாகவே சொல்கிறான்.
அத்தகைய பிராமணர்கள் அப்போதும் இப்போதும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள். விஸ்வாமித்திரர் கதை சொல்வதும் அதைத் தான். ஷத்ரிய குலத்தில் பிறந்தாலும், அவர் ஷத்ரியர் அல்ல.
இயல்பின் அடிப்படையில் பிராமணராய் ஆனார். அதை அப்போதைய சமூகமும் ஏற்றுக்கொண்டது. அதற்கான வாய்ப்பு அப்போது திறந்தே இருந்தது.
“எவனொருவன் அனுபவத்தால் இறுதிப்பொருளை, நேருக்கு நேராக தெரிந்து காமம்
,ரோகம் முதலிய குற்றங்களில்லாதவனாய்
பாபம்,மாற்சரியம்,விருப்பம்,ஆசை,மோகம் முதலியவை
நீங்கியவனாய்,இடம்பம்..அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய்
இருக்கின்றானோ,,இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணன் என்பது
சுருதி,ஸ்மிருதி,புராண இதிகாசமென்பவற்றின் அபிப்பிராயமாகும்” -
---- பிராமணனுக்குரிய லட்சணங்களாக சொல்லப்படும் இந்த வரையறை, அனைத்து ஜாதி மக்களுக்குமான அழைப்பே ஆகும். அவர்களில் யாரெல்லாம் இத்தகைய இயல்பினை உடையவராய் பிறந்துள்ளாரோ, யாரெல்லாம் இத்தகைய இயல்பினைப் பெற ஆர்வத்துடன் போராடுகின்றாரோ, அவர்கள் எல்லாரும் பிராமணர்களே.
எனக்குத் தெரிந்த ஒரு பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் மூன்று ஆண்குழந்தைகள். கடைசிப் பிள்ளைக்கு ஆன்மீகத்தின் மேல் தீவிர நாட்டம். பெற்றோர் வற்புறுத்தலால் இஞ்சினியரிங் முடித்தார். ஆனாலும் தினமும் தியானத்தில் ஆழ்ந்தார். வேலைக்குப் போனார். நமது சாமியார்களின் ஆசிரமங்களில் ஒன்று விடாமல் சுற்றினார்.
ஒருகட்டத்தில் வேலை எல்லாவற்றையும் உதறிவிட்டு, தான் ஆன்மீகத்தில் தீவிரமாக இறங்கப்போவதாகச் சொல்லிவிட்டு, வீட்டைவிட்டே ஓடிவிட்டார். அவரால் ஒரு அலுவலகத்திற்குள் கட்டுண்டு இருக்க முடியவில்லை. அவரது குடும்பத்திற்கு பொருளாதாரச் சிரமங்கள் இருந்தன. ஆனாலும் அதுபற்றி அவர் கவலைப்படவேயில்லை. அவரது நாட்டம் எல்லாம் பிரம்மத்தின் மீதே.
அதே இயல்பை நீங்கள் பாரதியிடமும் பார்க்க முடியும். தேடல் நிறைந்த எல்லா மனிதர்களும் பிராமணர்களே. அலுவலக வேலையில் சுகம் கண்டுகொண்டு, அதனால் கிடைக்கும் வசதியில் சொகுசாக வாழ்ந்துகொண்டு, நம்மையும் பிராமணர் என்றோ, பிராமண வழித்தோன்றல் என்றோ நினைத்தால்.....சாரி!
ஆன்மீகத் தேடல் நிறைந்த அந்த நண்பரும், பாரதியும் தான் பிராமணர்கள், பிராமணர்களின் வாரிசுகள். அவர்களே அப்படி அழைத்துக்கொள்ள தகுதியானவர்கள். நிச்சயம் நாம் அல்ல. அப்படி அழைத்துக்கொள்வோரைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் நாம் செய்வதற்கில்லை.
ஜாதி என்பது பலகூறுகளால் ஆனது. ஒரு ஜாதியில் எப்போதும் சில பெரிய பிரிவுகள் இருக்கும். நாயக்கர் கம்பளத்து நாயக்கர், காட்டு நாயக்கர் என பல பிரிவாகப் பிரிவர். முக்குலத்தோர் மறவர்-கள்ளர்-அகமுடையார் என பிரிவர். அந்த பிரிவுகளில் நுழைந்தால் அவை கிளைகள் என்ற பெயரில் மேலும் பிரியும். அந்தக் கிளைகளும் உள்ளுக்குள் ‘கொத்து’க்களாக மேலும் பிரிபடும்.
உண்மையில் இவை என்ன? நாம் தலைகீழாகவே இவற்றைப் பார்க்கின்றோம்.
ஆதியில் கூடி வாழத்தொடங்கிய மனித இனம், பாதுகாப்புக் காரணங்களுகாகவும், சுமூக சூழ்நிலைக்காகவும் சிறுசிறு கூட்டமாக தன்னை தொகுத்துக்கொண்டது. வாழும் இடத்தைப் பொறுத்து
அவை தன்னை பல்வேறு பெயர்களாக அழைத்துக்கொண்டது. அவையே அடிப்படைக் கொத்துகளாக அமைந்தன. வாழ்வியல் தேவைகளினாலும், நாகரீக வளர்ச்சியினாலும் அவை தன்னை ஒத்த பிற கொத்துக்களுடன் தொகுத்துக்கொண்டு கிளைகளாக வளர்ச்சியுற்றன.
அதையடுத்துவந்த நிலப்பிரபுத்துவ / மன்னராட்சிக் காலகட்டத்தில், ஆட்சிநலனுக்காக ஒத்த கிளைகள் ஜாதிகளாக திரட்டப்பட்டன. மன்னர்பிரான் பெரும்பாலும் எல்லா ஜாதிகளில் இருந்தும் பெண் எடுத்து, சுமூக உறவைப் பேணினார். அந்த மரியாதைக்குப் பிரதிபலனாக அந்த ஜாதிகளும்-கிளைகளும்-கொத்துக்களும் மன்னராட்சிக்கு விசுவாசமாய் நடந்துகொண்டன.
அந்த நேரத்திலேயே வர்ணமும் ஜாதியும் ஒன்றாகக் குழப்பப்பட்டன. பிராமண வர்ணம் எப்போதும் உயர்ந்தது. புத்தர் போன்ற ஷத்ரிய குலத்தில் பிறந்த பிராமணர்கள், அனைத்துத் தரப்பாலும் மதிப்புடன் போற்றப்பட்ட காலம் அது. நிர்வாக வசதிக்காக ஜாதிகளாக மக்கள் தொகுக்கப்பட்டபோது, ஆட்சியாளர்களின் வசதிக்காகவே ’பிறப்பின் அடிப்படையில் வர்ணம்’ என்பது
நிலைநாட்டப்பட்டது.
வைசிய ஜாதியில் பிறந்த எல்லாருமே வணிகத்தில் சிறந்தவர்கள் அல்ல. காரணம் அவர்கள் இயல்புப்படி அதாவது வர்ணப்படி வைசியர்கள் அல்ல. ஆனாலும் ஆதிவாசிக் குழுக்களாக வாழ்ந்த நம் சமூகம் நாடு என்ற வரையறையின் கீழ் தொகுக்கப்பட, இந்த கட்டாய ’வர்ணச் சாயம் பூசுதல்’ அவசியம் ஆயிற்று.
இயல்பில் ஷத்ரியனாக இல்லாமல், ஷத்ரிய ஜாதியில் பிறந்த பலரின் வாழ்வும், இந்த வரையறையினால் பாதிக்கப்படவே செய்தது. மேலும், ஆதி திராவிட சாதிகள், இந்தத் திட்டத்தால் நசுக்கப்பட்டன.
ஆனாலும் பெருவாரியான அளவில் இந்த சிஸ்டம் வெற்றியடைந்தது.
ஆனால் கண்ணன் பகவத் கீதையில் எச்சரித்த வர்ணக் கலப்பு அப்போதே நடந்துவிட்டது. ‘வர்ணக்கலப்பு’ பல அபாயங்களைக் கொண்டுவரும் என்றே கண்ணன் சொல்கிறான். அவன் சொல்வது ஜாதிக்கலப்பு பற்றியல்ல. மல்டிபிள் பெர்சனாலிட்டி பற்றி.
அடிப்படையில் ஷத்ரிய குணமுள்ள ஒருவன், பிராமண குலத்தில் பிறந்தால், மூர்க்கன் என்றே அவர்களால் அழைக்கப்படுவான். அதன்பிறகு அவன் ஆன்மீக ஈடுபாடு உள்ளவனாக நடிக்க ஆரம்பிப்பான். முழுமையான ஷத்ரியனாகவும் இல்லாமல், பிராமணனாகவும் ஆகாமல் வர்ணக்கலப்பால் சீரழிவான். (அத்தகைய அரைவேக்காட்டுத் தனமான ஆட்களை திருச்செந்தூர் முருகன்
கோவில் கருவறையிலேயே பார்த்திருக்கிறேன்.)
அந்த முறையின்மூலம் ஆட்சியாளர்களும், பிராமணர்களும் சமூகத்தின் மேல்மட்டத்தில் தங்கள் இருப்பை நிலைநிறுத்திக்கொண்டார்கள். அதற்கு பெரிய சதித் திட்டம் ஏதும் காரணம் என்று நான் நினைக்கவில்லை. இப்போது எப்படி பிற்படுத்தப்பட்ட சாதிகள், அதிகாரத்தில் தங்களை மட்டுமே நிலைநாட்டியுள்ளனவோ, அதே போன்று இயல்பாகவே அது நடந்தேறியது. சமூகக் கட்டுமானம் சாதிமுறை மூலம் நிலைநிறுத்தப்பட்டது.
நிலப்பிரபுத்துவக் காலம்வரை எல்லாம் சுமூகமாகவே நடந்தது. ஆங்கிலேயரின் வருகைக்குப் பின் அந்த அமைப்பு சிதறடிக்கப்பட்டது. அதற்குக் காரணம் அதைவிட வலுவான அமைப்பான ஜனநாயகம் அவர்களுக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆகியிருந்தது. எனவே நிலப்பிரபுத்துவ அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கப்பட்டு, சுதந்திர இந்தியா ஜனநாயக இந்தியாவாக மலர்ந்தது.
காந்தியும் ஆரம்பக் கட்டங்களில் வர்ணம், ஜாதி இரண்டையும் குழப்பிக்கொண்டிருந்தார். நம் முன்னோர்களைப் போலவே அவரும் ஜாதி அமைப்பே நம் சமூகக்கட்டுமானத்திற்கு அடிப்படை, அதுவே நம்மை ஒன்றிணைத்துக் காக்கும் என்று நம்பினார்.
ஆனால் இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர், ஜாதி மேல்கீழாக மக்களை பிரித்து வைத்திருப்பதையும், அதனால் விளைகின்ற அதர்மங்களையும் கண்டார். அதன்பின், தன் நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக்கொண்டார். அதன்பிறகு அவர் சொன்னது தான் இன்றளவும் உண்மை :
நவீனக் காலகட்டத்தில் எந்த வேலை செய்தாலும் ஒருவர் உடலால் உழைப்பது அவசியம், தவிர்க்க முடியாதது. எனவே இனி உடலால் உழைக்கும் நாம் அனைவரும் சூத்திரர்களே.
அதுவே இன்றைய யதார்த்தம். கீழ்மட்டத் தொழில்களாக கருதப்பட்ட கழிவறையை சுத்தம் செய்வது, சவரம் செய்வது போன்ற வேலைகளை இன்று எல்லா சாதியினரும் தன் வீட்டில் செய்துகொண்டிருக்கிறார்கள்.
அன்புடன்
செங்கோவி
டிஸ்கி: சென்ற பகுதிக்கு குறிப்பிடத்தக்க பின்னூட்டங்கள் அளித்த ஸ்பீடு மாஸ்டர், டாக்டர்.வடிவுக்கரசி, கிருஷ்ணன் ஐயாவிற்கு நன்றி.
டிஸ்கி: சென்ற பகுதிக்கு குறிப்பிடத்தக்க பின்னூட்டங்கள் அளித்த ஸ்பீடு மாஸ்டர், டாக்டர்.வடிவுக்கரசி, கிருஷ்ணன் ஐயாவிற்கு நன்றி.
214 comments:
«Oldest ‹Older Newer› Newest»Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.