Showing posts with label குடும்ப நிர்வாகம். Show all posts
Showing posts with label குடும்ப நிர்வாகம். Show all posts

Monday, October 7, 2013

தம்பதிகள், குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடலாமா?

குழந்தையின்மை என்பது 
நவீன சமுதாயத்தைப் 
பீடித்திருக்கும் புற்றுநோய்! - Vicki Donor படத்திலிருந்து.

மீப காலமாகவே புதுமணத் தம்பதிகளிடம் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறைந்த பட்சம் இரண்டு வருடங்களுக்காவது வாழ்க்கையை எஞ்சாய் பண்ண வேண்டும், இருவரும் வேலை பார்த்து பணம் சேமித்துக்கொள்ள வேண்டும என பல நியாயமான காரணங்களின் அடிப்படையில் இந்த முடிவானது தம்பதிகளால் எடுக்கப்படுகிறது. ஆனால் இத்தகைய முடிவை எடுக்கும் முன், நாம் சில விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது.

சொல்லு..கேட்போம்!
 குழந்தையற்ற ஒரு தம்பதியால் தத்தெடுத்து வளர்க்கஏப்பட்டவன் என்ற முறையில், ஒரு பெண் மலடிப்பட்டத்துடன் வாழ்வதன் கொடுமையை நான் மற்றவரை விட நன்கறிவேன். என்ன தான் சமூகம் நாகரீகம் அடைந்துவிட்டதாகக் கூறினாலும், சொந்தக்காரர்கள் மத்தியில், விஷேச தினங்களில் சமூகத்தின் உண்மைக் குணம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். யாராவது தற்செயலாக ஏதாவது கூறினால்கூட, அதுவும் சமூகத்தின் கேலியாகவே தாய்மையடையாத பெண்ணால் உணரப்படும். தவிர்க்கப்பட வேண்டிய, ஆனால் தவிர்க்க முடியாத உளச்சிக்கல் அது.

இரண்டு ஆண்டுகள் சந்தோசமாக புதுமண வாழ்வை அனுபவிப்பது நல்ல விஷயம் தான். ஆனால் அதற்காக குழந்தைப் பிறப்பைத் தவிர்ப்பது, பின்னாளில் உங்களுக்கு வேதனையான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதே உண்மை. ரெண்டு வருசம் தள்ளிப்போட்டால் குழந்தை பிறக்காதென்று மருத்துவம் சொல்கிறதா? என்று நீங்கள் என்மீது பாயலாம். நான் மருத்துவன் அல்ல, நான் கண்ட பலரின் அனுபவங்களின் அடிப்படையிலேயே இதைப் பேச விழைகின்றேன்.

முதலாவதாக, புதுமணத் தம்பதிகள் குறிப்பாக பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. ஆண்களைப் பொறுத்தவரை, திருமணம் ஆகும்வரை பெண் என்பவள் வெறும் சதைப்பிண்டம் தான். அவளுக்குள்ளும் ஒரு மனது உண்டு என்பதோ. அவளும் வலியும், வேதனையும், வருத்தமும், அவமானமும் அடையக்கூடிய ஒரு உயிர் என்றோ ஆண்களுக்கு உறைப்பதில்லை. ஆணைப் பொறுத்தவரை, பெண் என்பவள் செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டும் ஒரு டாய், அவ்வளவே!
அடப்பாவி!
ஆனால் திருமணத்திற்குப் பின், 24 மணி நேரமும் ஒரு பெண்ணுடன் வாழும்போதே, ஆண் அவளை செக்ஸைத் தாண்டி பார்க்கத் துவங்குகிறான். இன்னொருவகையில் சொல்வதென்றால், பார்க்க வைக்கப்படுகின்றான். அவளும் தன்னைப் போலவே கோபப்படுவாள்/வருத்தப்படுவாள், தனக்கு தன் வீட்டார் போலவே அவளுக்கும் ஒரு பின்புலமும், பாசம் காட்டும் ஜீவன்களும் உண்டு, அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் உண்டு என்று ஆண் கல்யாணத்திற்குப் பிறகே புரிந்து கொள்கிறான்.

பெரும்பாலும், ஒரு வருட காலமாவது ஆகிறது அவனுக்கு உறைக்க! இது நல்ல விஷயம் தான். அதே நேரத்தில் இது பெண்ணின் மீதான ஈர்ப்பைக் குறைத்துவிடுகிறது. இதையே பெரியவர்கள் நாகரீகமாக ‘ஆசை அறுபது நாள்..மோகம் முப்பது நாள்’ என்று சொல்லி வைத்தார்கள். இரண்டு ஆண்டுகள் கழித்து, அந்தப் பெண் (இப்போது பெண்மணி) மீதான ஈர்ப்பு என்பது, அவர்களுக்கிடையிலான உறவின் தன்மையைப் பொறுத்ததாக ஆகிவிடுகிறது. அன்பான உறவு நீடித்தால் ஓகே. இல்லையென்றால்.........!

அடுத்ததாக, பொருளாதாரப் பிரச்சினைகள். பணத்தேவை என்பது  இரண்டாயிரம் சம்பளத்தில் ஆரம்பித்து இரண்டு லட்சத்தைத் தாண்டினாலும் தீருவதில்லை. நாம் இது தான் இலக்கு என்று ஒரு ஸ்டேட்டஸுக்கு உயரும்போது, மற்றொரு இலக்கு வந்து நிற்கிறது. இன்று பெரும்பாலும் ஆண்-பெண் இருவரும் சம்பாதிக்கும் நிலையில், அது உண்டாக்கும் ஈகோ சார்ந்த பிரச்சினைகள் வேறு. இவை உண்டாக்கும் மன அழுத்தங்கள், பாலியல் ஈர்ப்பைக் குறைப்பது மட்டுமல்லாது விந்தணு எண்ணிக்கையையும் குறைப்பதை இன்றைய மருத்துவம் கண்டுகொண்டுள்ளது.

அடுத்ததாக, சம்பந்தி வீட்டார் தொல்லை. நமது சமூகத்தைப் பொறுத்தவரை திருமண வாழ்வு என்பது இரு மனம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமல்ல. அது இரு குடும்பங்களின் உறவு மட்டுமல்ல. அது இருவேறு வம்சங்களின் உறவு. ‘எங்க செய்முறை வேற..இப்படிச் செய்யலியா? நாங்க என்ன குறைஞ்சவங்களா?’ என்று சொந்தபந்தங்கள் கிளப்பும் பஞ்சாயத்துகளிலேயே, பாதி மனநோயாளியாக ஆக வேண்டியிருக்கும். மாமியார் பிரச்சினை போனஸ். கூடவே நாத்தனாரும் இருந்துவிட்டால், அமோகம் தான்.

குறித்துக்கொள்ளுங்கள் புதுமணத் தம்பதிகளே...ஒரு குழந்தையைப் பெற்றெடுக்காதவரை மாமியாரும் நாத்தனாரும், அந்தப் பெண்ணை இந்தக் குடும்பத்தின் அங்கத்தினராக, பையனின் மேல் உரிமையுள்ளவளாக மனதளவில் ஏற்றுக்கொள்வதே இல்லை. என்னுடைய பல நண்பர்களும், குழந்தையைப் பெற்றபிறகே தங்கள் சகோதரி(நாத்தனார்)களிடம் இருந்து விடுதலை பெற்றிருக்கிறார்கள். (‘இவங்களுக்கு குழந்தை இல்லாட்டியும் நல்லதே’ என்று எண்ணும் நல்ல உள்ளங்களையும் நான் கண்டிருக்கிறேன்!)

இன்றைய வாழ்க்கை முறை, நம் உடலில் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் விளைவுகள் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். சீக்கிரமே வயதிற்கு வருவது, கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, கருவுறாமை, கருச்சிதைவு என்று முந்தைய தலைமுறை கண்டிராத பல விஷயங்களையும், பெரும்பாலான இன்றைய தலைமுறை கண்டுகொண்டிருக்கிறது. குறிப்பாக அதிக உடல் உழைப்பற்ற, ஏ.சி.வாழ்க்கை முறையின் விளைவுகளோ இவை என்று நான் ஐயுறுகிறேன்.
ஓகே..யோசிக்கிறேன்!
எனவே தான் நவீன வாழ்க்கைமுறை உங்கள் உடலை சிதைக்கும் முன், ஆண்-பெண் ஈர்ப்பு குறையும் முன், சமூக-பொருளாதார சிந்தனைகள் உங்களை முடக்கும் முன் குழந்தைச் செல்வங்களைப் பெற்றெடுங்கள். இந்த விஷயத்தில் எந்தவொரு தாமதத்தையும் அனுமதிக்காதீர். ‘இன்னும் விஷேசமில்லையா?’ எனும் பெரியோரின் கேள்வியை தொல்லையாக எடுத்துக்கொள்ளாதீர். அது தொல்லை அல்ல, அனுபவத்தால் விளைந்த எச்சரிக்கை.

‘ஆண்டவன் நமக்கு கொடுப்பது என்று முடிவு செய்திருந்தால், இரண்டு வருடம் கடந்தாலும் கொடுக்கத்தானே செய்வான்?’ என்று தத்துவரீதியாக நீங்கள் யோசிக்கலாம். இருந்தாலும், எளிதாக உங்களுக்குள் முடிய வேண்டிய விஷயத்தை சிக்கலாக்கி, ஆண்டவனை வேறு தொந்தரவு செய்ய வேண்டுமா என்று யோசியுங்கள்.

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட் பேறல்ல பிற.


மேலும் வாசிக்க... "தம்பதிகள், குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடலாமா?"

Thursday, October 20, 2011

செலவைக் குறைக்க..கோடீஸ்வரன் ஆக!(அடேங்கப்பா..)

சென்ற வாரம் ஃபேமிலி ப்ளானிங் பற்றிய பதிவிற்கு நீங்கள் கொடுத்த ஆதரவை யாம் மெச்சினோம். பார்த்திபன் தாரத்தைப் பற்றி மட்டுமல்லாது பொருளாதாரத்திலும் நீங்கள் காட்டும் ஆர்வம் எமக்கு ஊக்கமளிப்பதால்.....
பொருளாதாரத்தில் நமக்குப் பிடிக்காத வார்த்தை செலவு தான். வரவு மட்டுமே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றோம். ஆனாலும் என்ன செய்வது, நமக்கு வரும் வரவு என்பது ஒருவருக்கு செலவு தானே?

செலவைக் குறைப்பது என்று முடிவு செய்தவுடன் பலரும் செய்வது உடனே பயங்கர சிக்கனவாதியாக ஆகிவிடுவது. ஒன்று, தாராளமாகச் செலவளிப்போம், அல்லது நேர் எதிர்முனைக்குச் சென்று கஞ்சனாக ஆகிவிடுவோம். ஆனால் இப்படி இறுக்கிப் பிடிப்பது ரொம்ப நாள் நீடிக்காது. கொஞ்சநாளிலேயே திரும்பவும் கன்னாபின்னாவென்று செலவளிக்க ஆரமபித்துவிடுவோம். எனவே நிதானமாக இதை(யும்) அணுகுவது எப்படி என்று பார்ப்போம்.

சிக்கனமாக குடும்பம் நடத்தவும் சேமிக்கவும் அடிப்படைத் தேவை, நாம் செலவளிக்கும் பணத்திற்கு தெளிவாக கணக்கு வைத்திருப்பது. அது ஐம்பது பைசாவாகவே இருந்தாலும் கணக்கில் வையுங்கள். ’என்னய்யா இது..நப்பித்தனமா இருக்கே’ன்னு யோசிக்கிறீர்களா..உங்களுக்குத் தெரிந்த பணக்காரர்கள்/பிஸினஸ்மேன் பலரும் அப்படி துல்லியமாக கணக்கு வைக்கும் பழக்கம் உள்ளவர்கள் தான். எனக்குத் தெரிந்த ஒரு பிஸினஸ்மேன் பழைய பேப்பர்காரரிடம் ஒரு ரூபாய்க்கு அரைமணிநேரம் வாதாடியதைப் பார்த்திருக்கிறேன். 

உங்கள் செலவுகளைக் கணக்கு வைப்பது முக்கியம். அதற்குத் தேவை ஒரு எக்செல் ஷீட். தினமும் இரவில் தூங்கப்போகும் முன் கணக்கு எழுதுவதையும் முக்கிய வேலையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான மாதிரி எக்செல் கீழே :
மூன்று மாதங்களுக்கு எதையுமே குறைக்க முற்படாமல், வழக்கம்போல் வாங்கி வாருங்கள். அதை இங்கே எழுதியும் வாருங்கள். மூன்றாவது மாத முடிவில், குடும்பத்தோடு உட்கார்ந்து என்ன செலவு செய்திருக்கிறோம்-மூன்று மாத உழைப்பில் எவ்வளவு மீதம் ஆகியுள்ளது என்று பாருங்கள். உங்களுக்குத் தெரியும்,உங்கள் பணம் எங்கெல்லாம் வீணாகப் போகிறது..அதை எப்படித் தவிர்ப்பது என்பது!

மேலே உள்ள ஷீட்டில் எழுதும் முன்பு, தினசரிச் செலவுகளை இன்னும் தெளிவாக தனியாக எழுதிக்கொள்வது நல்லது. அதற்கு இந்த மாதிரியான ஷீட் உதவும் :
உங்களுக்கு ஏற்றபடி இந்த இரு அட்டவணைகளையும் மாற்றிக்கொள்ளுங்கள். இப்போது முதல் ஷீட்டைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

ஒரு மாதத்தின் முதல்நாளில் அல்லது சம்பள நாளில் உங்கள் மொத்தக் கையிருப்பு ( பேங்க் பேலன்ஸ், கையில் உள்ள கேஷ் போன்ற அனைத்தும் சேர்த்து). இந்த அட்டவணையை இரண்டாகப் பிரித்துக் கொள்ளுங்கள். 
முதலாவது ’ப்ளான்’. இதில் இந்த மாதம் தோராயமாக என்னென்ன வரவு மற்றும் செலவு வரும் என்று குறித்துக் கொள்ளுங்கள். (சில மாதங்கள் கழித்து இதை 90% உங்களால் அனுமானிக்க முடியும்)

இரண்டாவது பகுதியில் அன்றாட வரவு/செலவுகளின் தொகுப்பை குறித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்றாற்போல் இதனை மாற்றிக்கொள்ளுங்கள். மாதக் கடைசியில் ஆக்சுவல் பகுதியில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசமே அந்த மாத உங்கள் சேமிப்பு. இந்த அட்டவணையில் அது 3000 ரூபாய் தான். ’இப்படி மாதம் மூவாயிரம் சேர்த்து என்னிக்கு உருப்பட’-என்று யோசனை வருகிறதல்லவா? கரெக்ட், அந்த யோசனை தான் உங்களை மேம்படுத்தும், முன்னேற்றும்.

அடுத்து உள்ள அசெட் பகுதி உங்கள் கைவசம் உள்ள பணத்தினைக் காட்டும். லையபிலிட்டி பகுதி உங்கள் கடன்களைக் காட்டும். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் பாசிடிவாக இருந்தால், நீங்கள் சரியான வழியில் செல்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லையேல், நீங்கள் உங்கள் செலவுகளை ரொம்பவே கண்காணிக்க வேண்டும். இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் இந்த மாதத்திற்கான க்ளோசிங் பேலன்ஸ்; அதுவே அடுத்த மாதத்திற்கான ஓப்பனிங் பேலன்ஸ் ஆகும்.

இங்கே சொல்லப்படும் விஷயங்கள் அனைத்தும் ,என் சொந்த வாழ்க்கையில் நான் பயன்படுத்தி வெற்றி கண்டவையே. அதையே உங்களுக்கும் சொல்கின்றேன். இங்கே சொல்லப்படுபவை உங்களுக்கும் பயன்பட்டால், அதைவிட நமக்கு மகிழ்ச்சி தருவது வேறு ஒன்றும் இல்லை!

விரைவில் வேறொரு டாபிக்குடன் பொருளாதாரம் பற்றிப் பார்ப்போம். அதுவரை...

வணக்கம்!

மேலும் வாசிக்க... "செலவைக் குறைக்க..கோடீஸ்வரன் ஆக!(அடேங்கப்பா..)"