’ஒரு தலைவர் பெரும்பான்மையான மக்களால் புகழப்படுகிறார் என்றால், அவர் ஒரு அயோக்கியனாகத் தான் இருக்க வேண்டும்’ என்று எண்ணும் மனநிலைக்கு நம்மை தற்காலத் தலைவர்கள் கொண்டு சென்றுள்ளனர். இப்படி ஒரு துரதிர்ஷ்டமான நிலை, உலகில் வேறெங்கும் நிலவுகிறதா எனத் தெரியவில்லை.
அப்படி நம்மால் மிகத் தவறாகப் பார்க்கப்படும் நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியைப் பற்றி, தெளிவான பார்வையைக் கொடுக்கும் புத்தகமே ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’.
நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, பழுப்பேறிய கிழிந்த ’சத்திய சோதனை’ புத்தகம் எனக்குக் கிடைத்தது. அதில் இருந்த சம்பவங்களும் கருத்துக்களும் நான் வளர்ந்த சூழ்நிலைக்கு முற்றிலும் புதிதாக இருந்தது. சத்தியத்தைப் பற்றியும் அஹிம்சையைப் பற்றியும் ஆழமான புரிதலைக் கொடுத்தது அந்தப் புத்தகம். அதன்பிறகான எனது அத்தனை சிந்தனைகளும் காந்தியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்டவையே.
நான் காந்தியின் ரசிகன் ஆனேன். அவர் மேல் மிகப்பெரிய மரியாதையை அடைந்தேன். ஆனால் அதை என் பள்ளி நண்பர்களிடமும் கல்லூரி நண்பர்களிடமும் வெளிப்படுத்தியபோது, எனக்குக் கிடைத்தது கேலியும் கிண்டலுமே. காந்தியைப் பற்றி பலவாறான அவதூறுகள் சகஜமாக அவர்களால் பேசப்பட்டன.
காந்தியைப் பற்றி பழித்துப் பேசுபவர்களே புத்திசாலிகளாகவும், காந்தியவாதிகள் அசமந்தமாகவும் இச்சமூகத்தால் பார்க்கப்படுவதை உணர்ந்தேன். எத்தனை எத்தனை அவதூறுகள்..
காந்தி ஒரு மோசமான அப்பா..அவர் பிள்ளைகள் எதுவும் உருப்படவில்லை..
தாழ்த்தப்பட்டோரின் விரோதி காந்தி..
வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடித்தவர் காந்தி..
முஸ்லிம்களின் விரோதி காந்தி..
இந்துக்களின் துரோகி..
ஏமாற்றுக்காரர்..
முஸ்லிகளுக்கு அதிக சலுகை காட்டி, போலி மதச்சார்பின்மையை அன்றே ஆரம்பித்து வைத்தவர்..
பகத்சிங் தூக்கிலப்படுவதை தடுக்காதவர்..
நேதாஜியின் மறைவுக்கு காரணமானவர்..
இவ்வாறு பல அவதூறுகள்..விவாதித்து, விவாதித்து அலுத்துப்போன விஷயங்கள்..அதன்பிறகு நான் காந்தியைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டேன்..
சென்ற வருடம் தன் இணைய தளத்தில் ஜெயமோகன் காந்தி பற்றிப் பேச ஆரம்பித்தார். வலுவான ஆதாரங்களுடன் காந்தியின் தரப்பை முன் வைத்தார். நீண்ட விவாதமாக சென்றது அது. அந்த விவாதங்களின் தொகுப்பே ‘இன்றைய காந்தி ‘என்ற நூல்.
காந்தியைப் பற்றி பலவித அவதூறுகள் எப்படித் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன, அவை எந்த அளவிற்கு பொய்யானவை என பொட்டில் அடித்தாற்போன்று எழுதியுள்ளார். நான் இழந்து விட்ட காந்தியை மீண்டும் நமக்கு மீட்டுத் தந்தார் ஜெயமோகன். மானுடம் தன்னை முன்னேற்றிக் கொள்வதற்கான வழி காந்தியமே..அதுவே இனி உலகை வழி நடத்தும் என அறைகூவல் விடுகிறார் ஜெயமோகன்.
’காந்தியின் மகனே சொன்னார், அவர் ஒரு மோசமான தந்தை என்று’. -இதுவே காந்தியைப் பற்றிய முக்கிய அவதூறு. காந்தியின் மகன் ஹரிலால் அப்படித் தான் சொன்னார், மேடை மேடையாகப் பேசினார். மதுவுக்கும் பெண்ணாசைக்கும் அடிமையான ஹரிலால் தொடர்ந்து காந்தி சாகும் வரை காந்தியைத் திட்டி வந்தார். அதைப்பற்றி விலாவாரியாகப் பேசுபவர்கள், காந்தியின் மற்ற மூன்று பிள்ளைகளைப் பற்றி எதுவும் சொல்வதில்லை.
அவர்கள் காந்தியை மதித்ததைப் பற்றியோ, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதைப் பற்றியோ, காந்தியைப் பற்றி அவர்கள் சொன்ன கருத்துகளைப் பற்றியோ யாரும் ஜாக்கிரதையாக எதுவும் சொல்வதில்லை. ஒரு பிள்ளை(ஹரிலால்)-யின் கருத்தைச் சொல்பவர்கள், மற்ற மூன்று பிள்ளைகள் காந்தியைப் பற்றிக் கொண்டிருந்த மதிப்பைச் சொல்ல மறுப்பதேன்? அது நமக்கு ஒத்து வராத கருத்து என்பதாலா?
’காந்தியின் மீதான தாக்குதல், உண்மையில் நமது தேசத்தின் மீதான தாக்குதல். காந்தியின் மீதான அவதூறுகளுக்குப் பின்னால் ஏதோவொரு அன்னிய நாட்டின் ஆதரவு உண்டு’ என்பதைத் திட்டவட்டமாக நிறுவுகிறது இந்நூல்.
ஒரு நண்பர் என்னிடம் காரசாரமாக ‘தன் பிள்ளைகளுக்கே நல்ல தந்தையாக இல்லாதவரை எப்படி மகாத்மாவாக, தேசத் தந்தையாக ஏற்றுக் கொள்ள முடியும்?’ என காந்தியப் பற்றி எதுவுமே படிக்காமல் வாதிட்டார். நான் அவரிடம் கீழ்க்கண்டவாறு சொன்னேன்: ‘ஒரு நல்ல தந்தையாக இருக்கும் தலைவரைத் தான் மகாத்மாவாக ஏற்பீர்கள் என்றால், கலைஞர் கருணாநிதியைத் தான் மகாத்மா என்று சொல்ல வேண்டும்’.
ஒரு சினிமாப் படத்தைப் பற்றிக் கருத்துச் சொல்லக்கூட, அந்தப் படத்தைப் பார்த்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால் நம் தேசத் தலைவர்கள் பற்றிப் பேச, அவர்களைப் பற்றி எதுவும் படித்திருக்கத் தேவையில்லை, வம்புப் பேச்சே போதும் என்று நாம் இருப்பது சரி தானா?
காந்தியைப் பற்றி அளவிட நமக்குத் தெரியாத ஆராய்ச்சித் தகவல்கள் தேவையில்லை. நமக்குத் தெரிந்த இரு தகவல்களே போதும்.
1. உலக வரலாற்றில், ஒரு சுதந்திரப்போராட்டத்தை தலைமையேற்று நடத்திச் சென்றவர் யாரோ, அவர் தான் அந்த நாடு விடுதலை அடைந்ததும் அதிபராக ஆகி, பதவியை அனுபவிப்பர். காந்திக்கு அம்மாதிரியான எண்ணங்கள் சிறிதும் இருந்ததில்லை.
2.’காந்திக் கணக்கு’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட சுதந்திரப்போராட்டத்தின் மொத்த நிதியும் காந்தியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. அதிலிருந்து ஒரு பைசாவைக் கூட தனக்கோ, தன் குடும்பத்தினருக்கோ அவர் எடுத்துக் கொள்ளவில்லை.
நம் தேசத்தந்தையைப் பற்றிப் புரிந்துகொள்ள நேரமும் மனமும் உள்ள இந்தியர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் ‘இன்றைய காந்தி’. (இது கட்டுரை வடிவில் ஜெயமோகனின் இணையதளத்திலும் கிடைக்கிறது.)
நூல் விபரம்:
நூல் : இன்றைய காந்தி
ஆசிரியர் : ஜெயமோகன்
பதிப்பகம் : தமிழினி பதிப்பகம்
ஆன்லைனில் வாங்க: http://www.udumalai.com/?prd=Indraya%20Gandhi&page=products&id=6320
52 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.