’அஜித்தின் ஐம்பதாவது படம். சமீபத்தில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று’ என்றெல்லாம் இருந்தாலும் பெயருக்கு ஏற்றாற்போல் கிளைவுட் நைன், ஞானவேல்ராஜ், சன், சித்தி என பலரும் இந்தப் படத்தை வைத்து மங்காத்தா ஆடி, ஒரு வழியாக தமிழகத்தில் இன்று ரிலீஸ் ஆகும் படம். (குவைத்தில் சித்தி ரிலீஸ் செய்யவில்லை!!). வழக்கம்போல் விமர்சனம் படத்தை முந்திக்கொண்டு பாய்கிறது இங்கு...
அஜித் நாற்பது வயது நிரம்பிய சஸ்பெண்ட் ஆகியிருக்கும் போலீஸ் அதிகாரி. அர்ஜூன் கிரிக்கெட் சூதாட்டக் கும்பலை வளைத்துப் பிடிக்க நிறுத்த நியமிக்கப்படும் ஸ்பெஷல் ப்ராஞ்ச் போலீஸ் ஆஃபீசர். கிரிக்கெட் சூதாட்டத்தின் மையமாக மும்பையும் அதன் முக்கியப் புள்ளியாக ஜெயப்ரகாஷும் இருக்கிறார்கள். ஜெயப்ரகாஷின் மகளான த்ரிஷாவும் அஜித்தும் லவ்வர்ஸ். ஐபிஎல் போட்டி நடைபெறும் நேரத்தில் 500 கோடி ரூபாய் பணம் மொத்தமாக மும்பை வந்து பிரியப்போவதை அர்ஜீன் தெரிந்து கொண்டு, மும்பையில் தன் டீமுடன் களமிறங்கிறார்.
ஜெயப்ரகாஷிடம் வேலை செய்யும் அடிப்பொடி வைபவ் தன் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அந்தப் பணத்தை பிரிக்க திட்டமிடுகின்றனர். சஸ்பெண்ட் ஆன போலீஸ் அதிகாரி அஜித்தும் த்ரிஷா மூலம் ஜெயப்ரகாசை நெருங்கி, அந்தப் பணத்தை நோட்டம் இடுகிறார். பணம் வந்து சேரும் நாளில் போலீஸ் கெடுபிடி அதிகம் ஆக, ஜெயப்ரகாஷ் குரூப் அதிகம் உஷாராகிறது. திருட ப்ளான் போட்ட 4 பேரும் அஜித்தும் ஒன்றாக கைகோர்த்து பணத்தை லவட்டுகிறார்கள். ஒரு பக்கம் அர்ஜூன் விரட்ட, மறுபக்கம் ஜெயப்ரகாஷ் விரட்ட, அது போதாதென்று திருடிய 5 பேரும் மாற்றி மாற்றி அடித்துக்கொள்கின்றனர். இறுதியில் அந்தப் பணம் யாருக்குச் சேர்ந்தது...திட்டம் போட்ட அஜித்திற்கா, வில்லன் குரூப்பிற்கா, போலீஸிற்கா..அல்லது அம்போவா என்பதை வெள்ளித்திரையில் காண்க.
கதையே இல்லாமல் படம் எடுக்கிறார்கள் என்று பலரும் சொன்னதாலோ என்னவோ வெங்கட் பிரபு இவ்வளவு சிக்கலான கதையை எடுத்துக்கொண்டு களம் இறங்கி இருக்கின்றார். அஜித் - ஜெயப்ரகாஷ்-த்ரிஷா-அர்ஜுன் - 4 பேர் - என எல்லோருமே கதையின் முக்கிய பாத்திரங்களாக இருப்பதால் எல்லோரின் கேரக்டரையும் தெளிவாக சொல்ல வேண்டிய கட்டாயம். அப்படி எல்லோரையும் சொல்லி முடிக்கவே 45 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. இன்னும் எத்தனை புது கேரக்டர் வரபோகுதோ என்று பயப்படும் அளவிற்கு ஒவ்வொரு சீனிலும் ஒரு கேரக்டர் வந்துகொண்டே இருக்கிறது. அது செட்டில் ஆனவுடன் ஆரம்பிக்கிறது மங்காத்தா ஆட்டம். அதன் பிறகு செம விறுவிறுப்பு தான்..திரைக்கதைக்கு அதிகம் மெனக்கட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.
நெகடிவ் கேரக்டரில் அஜித்.....தலயின் ஐம்பதாவது படம். பொதுவாக இந்த மாதிரி முக்கியமான படத்தை எல்லோரும் சோலோ ஹீரோவாகவே செய்ய விரும்புவார்கள். அப்படி இல்லாமல் இந்தக் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டதே தைரியமான முடிவு தான். நாற்பது வயது ஆள், அதுவும் போலீஸ் என்று சொல்லிவிட்டதால் தொப்பையும் நரைத்த முடியும் நச்சென்று பொருந்திப்போகிறது. வயதிற்கேற்ற மெச்சூரிட்டியுடன் ப்ளான் செய்வதும் பணத்தின் மேல் உள்ள ஆசையால் எதற்கும் துணிவதுமாக அஜித் கலக்கி எடுக்கிறார். தொப்பை என்று கிண்டல் பண்ணுவோருக்கு பதிலடியாக ‘ஆமாய்யா பார்த்துக்கோ’ எனும்படி ஒரு பாடலில் சட்டை இல்லாமலே........செம தில் தான்! இந்தப் படத்தில் ஆடவும் செய்திருக்கிறார், நாற்பது வயதிற்கே உரிய கூச்சங்களுடன். அஜித் ரசிகர்களுக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் தல திரும்பக் கிடைத்திருக்கிறார்.
கமலா காமேஷ் (அதாங்க த்ரிஷான்னும் சொல்வாங்களே..) அஜித்திற்கு பொருத்தமான ஜோடியாக எனக்குத் தோன்றவில்லை. ஆனாலும் நல்ல ட்ரெஷிங் சென்ஸ் இருப்பதால் பார்க்கமுடிகிறது..இதற்கு மேல் சொன்னால் த்ரிஷா ரசிகர்கள் கோபித்துக்கொள்வார்கள் என்பதால்......
’வேஸ்ட் பண்ணிட்டாங்க மக்கா’ன்னு புலம்பும்படியாக வைபவ்-க்கு ஜோடி ஆக்கிட்டாங்க. தலக்கு ஒரு சீன்ல அஞ்சலி ஒரு கும்பிடு போடுகிறது. அம்புட்டுதேன். அஞ்சலிக்கும் ஒரு தனி டூயட்..அதிலேயே நாம் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டதால் மனது சற்று ஆறுதல் அடைகிறது.
அர்ஜூன் இப்போதும் தான் ஒரு ஆக்சன் கிங் என்று நிரூபிக்கிறார். சண்டைக்காட்சிகளில் அதே வேகம். அஜித்திற்கு இணையாக கதையில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர். இருவரும் மோதும் காட்சி அமர்க்களம். வைபவ் உள்ளிட்ட நான்கு பேரில் வழக்கம்போல் பிரேம், நம் கவனத்தை ஈர்க்கிறார். படத்தில் காமெடிக்கு இவர் மட்டுமே என்பதால் அடர்த்தியான திரைக்கதையில் பெரிய ரிலீஃபாக இவர் இருக்கிறார்.
படத்தில் குறையென்று பார்த்தால்........ அதிக கேரக்டர்களும், ஆரம்பத்தில் அதை ஞாபகம் வைக்க ரசிகர்கள் அவஸ்தைப்படுவதும் முக்கியக் குறை. அடுத்து காமெடி என்ற பெயரில் அந்த நான்கு பேர் குறிப்பாக பிரேம் அஜித்துடன் அடிக்கும் லூட்டி+டயலாக்குகள் நிறைய நேரம் மொக்கையாகவே உள்ளது. இவ்வளவு தூரம் கதைக்கு மெனக்கெட்டவர்கள் லாஜிக்கும் கொஞ்சம் பார்த்திருக்கலாம்.
போலீஸ்காரர் என்று தெரிந்தும் ஜெயப்ரகாஷ் அஜித்தை சந்தேகபடாதது, மும்பையில் எல்லா கேரக்டரும் தமிழ் பேசுவது, தேவையில்லாமல் வரும் மியூட் செய்யப்பட்ட ஆங்கில.தமிழ் கெட்ட வார்த்தகள், எதிர்பார்த்த கிளைமாக்ஸ், அஜித்தின் பணவெறிக்கு காரணாமாக எதுவும் சொல்லப்படாதது(நிஜத்துக்கு அது சரி தான்..சினிமாவில் நம் மக்களுக்கு காரணம்/நியாயம் தேவை) இந்த மாதிரிக் கதைக்கு இரண்டு வகையான கிளைமாக்ஸ் தான் வைக்க முடியும்..அந்த இரண்டுமே இந்தப் படத்தில் வருகிறது.
யுவன்சங்கர் ராஜா படத்தின் பெரிய பலம். பாடல்களில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார், அஜித்தே ஆடும் அளவிற்கு! சிக்கலான திரைக்கதைக்கு பிரவீண் & ஸ்ரீகாந்த் எடிட்டிங் கைகொடுக்கிறது. பிரேம் சம்பந்தப்பட்ட சில மொக்கை சீன்களை இன்னும் கொஞ்சம் ’கட்’டி இருக்கலாம். சக்தி சரவணனின் ஒளிப்பதிவு வர்ணஜாலம் காட்டுகிறது. ஓப்பனிங் மங்காத்தா சாங்கில் லட்சுமிராயில் ஆரம்பித்து முழு படத்தையே கலர்ஃபுல் திருவிழாவாக ஆக்குகிறது அவர் ஒளிப்பதிவு.
படம் நல்ல படமா, இல்லையா என்றால்..........ஏகன்/அசலை விட பலமடங்கு பெட்டர். நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு திருவிழா தான். மற்றவர்களும் ரசிக்க முடியும். வெங்கட் பிரபு வைத்திருக்கும் அந்த கிக்கிலிபிக்கிலி குரூப்பைக் கொஞ்சம் அடக்கி, இன்னும் படத்தை ஷார்ப் ஆக்கியிருக்க முடியும். இருப்பினும் சமீபத்தில் வந்த கமர்சியல் படங்களை ஒப்பிடும்போது இது பெட்டர் தான். அஜித்திற்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் ஓகே ரகத்தில் ஒரு படம்.
மங்காத்தா - ஆட்டம் மோசம் இல்லை!
140 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.