Monday, January 26, 2015

திரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 34

Blake Snyder-ன் பீ ஷீட்டில் இன்று.........
 
7. B Story :
ஒரு ஹீரோ.
அவன் வாழ்வில் ஒரு சம்பவம்.
அதனால் கிடைக்கிறது ஒரு குறிக்கோள்.
அதில் பல தடைகள்..டிஷ்யூம்..டிஷ்யூம்.
கிளைமாக்ஸ்.

இது தான் மெயின் ஸ்டோரி..அதாவது A Story. இப்படியே போய்க்கொண்டிருந்தால், ஆடியன்ஸுக்குப் போரடித்துவிடும். நமக்கும் போதுமான சீன் தேறாது! என்ன தான் ஆக்சன் இருந்தாலும், ரிலாக்ஸ் பண்ண வேறு சில விஷயங்களையும் அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும். அது தான் B story எனப்படும் கிளைக்கதை.

இந்த கிளைக்கதை என்பது தமிழ் சினிமாவில் 90% காதல் கதை தான். ஹீரோவுக்கு ஹீரோயினுடன் மோதல், தொடர்ந்து காதல், காதல் மலர்ந்தவுடன் மெயின் கதையின் வில்லனால் ஹீரோயினுக்குத் தொந்தரவு, எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து ஹீரோவின் கிளைமாக்ஸ் பதிலடி. இது தான் தமிழ் சினிமாவில் மெயின் கதையும் கிளைக்கதையும் பின்னிப்பிணையும் டெம்ப்ளேட்.

மெயின் கதையே காதல் கதை தான் என்றால், ஹீரோவுக்கு அன்பு கிடைக்காத துயரக்கதையோ அல்லது ஹீரோவுக்கு தீர்க்க முடியாத நோய்(எயிட்ஸ்??) வந்த கதையோ அல்லது மொக்கையாக வில்லனின் ஒருதலைக்காதலோ கிளைக்கதையாக எழுதப் படும்.

இந்தக் கால நெட்டிசன்கள் புத்திசாலிகள் என்பதால், நீங்கள் பி ஸ்டோரியை ஓப்பன் செய்ததுமே கிளைமாக்ஸ்வரை அது எப்படிப் போகும் என்று சொல்லிவிடுவார்கள். யூகிக்க முடிந்த திரைக்கதை என்று விமர்சனம் எழுதி வெறுப்பேற்றுவார்கள். இதில் இருந்து தப்ப, பி ஸ்டோரியை சுவார்ஸ்யமான சீன்களால் நிரப்புவது அவசியம். காதல் எபிசோட் கலக்கல் என்று சொல்ல வைக்க வேண்டும்; ஜாக்ரதை.

காதலைத் தவிர்த்து வேறுவகை பி ஸ்டோரிகள் அபூர்வமாக தமிழ் சினிமாவில் வருவதுண்டு. உதாரணம், பில்லா.

பில்லாவில் இரண்டு கிளைக்கதைகள் உண்டு. ஒன்று, ஹீரோயினின் பழி வாங்கும் படலம். இரண்டாவது தேங்காய் ஸ்ரீனிவாசனின் பழி வாங்கும் படலம். முதலாவது கிளைக்கதை காதல் தான் என்றாலும், மிகவும் வித்தியாசமானதாய் அமைந்திருந்தது. அந்த மாதிரி புதுமையாகச் சொல்வது தான் திரைக்கதை ஆசிரியனுக்கு இருக்கும் சவால்.

தேவர் மகனில் வரும் கிளைக்கதையான கௌதமியுடனான காதல், அதை சிவாஜி எதிர்கொள்ளும் விதம், ’ஒய் சக்தி ஒய்’ சீன், ரேவதி  கௌதமியிடம் கெஞ்சுவது என வழக்கமான ‘மோதல்-காதல்-பிரச்சினை’ டெம்ப்ளேட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும்.

பி ஸ்டோரியை புத்திசாலித்தனமாக வித்தியாசமானதாக ஆக்குவது தான் உங்கள் சவால். ஹீரோவின் மெயின் பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு விஷயமாக உங்கள் பி ஸ்டோரி ஆக்குவது தான் இதில் உள்ள சீக்ரெட். தேவர் மகனில் ரேவதி கல்யாணமும், பில்லாவில் தேங்காய் ஸ்ரீனிவாசனின் உதவியும் தான் ஹீரோவின் மெயின் பிரச்சினையைத் தீர்க்க முக்கியக் காரணிகளாக இருக்கும். மெயின் கதைக்கு ஒட்டாமல் கிளைக்கதை இருந்தால், ரொம்ப பழைய ட்ரிக்காகத் தெரியும்!

எனவே பி ஸ்டோரியை சாதாரணமாக நினைத்து, ஹீரோயினை ஹீரோ ஈவ்-டீஸிங் செய்யும் காட்சிகளால் நிரப்பிவிடாதீர்கள். ஹீரோ குறிக்கோளை அடைய உதவும் விஷயமாகவும், மெயின் கதையில் இருந்து ஆடியன்ஸை ரிலாக்ஸ் பண்ணும் விஷயமாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.

8. Fun & Games :
ஹீரோ வில்லனை ஒழிக்கலாமா இல்லையா எனும் மனப்போராட்டத்துக்குப் பின் மெயின் கதையில் வருவது இந்தப் பகுதி. ஹீரோ வில்லனை எதிர்க்கிறார் அல்லது வில்லனை எதிர்க்கத் தயாராகிறார். இது சீரியஸான பகுதி அல்ல, கொஞ்சம் லைட்டாக மெயின் கதை நகரும் பகுதி.

உதாரணமாக பில்லாவில் ரஜினி/அஜித் பில்லாவாக நடிக்க ரெடியாகும் பகுதி. பில்லா அல்லது பில்லாவின் குரூப் மேல் ரஜினிக்கு கோபம் ஏதுமில்லை. கேஷுவலாகவே அந்த ட்ரெய்னிங்கை எடுத்துக்கொள்கிறார். அந்த ட்ரெய்னிங்கும், புதிய இடத்தில் அவர் சந்திக்கும் வேடிக்கையான நிகழ்வுகளும் இந்த ஃபன் & கேம்ஸ் பகுதியில் வரும்.

காதல் கதை என்றால் காதலர்கள் ஜாலியாக தங்கள் காதலின் வசந்த காலத்தை அனுபவிக்கும் பகுதி இது. மொத்தத்தில் கதையை நகர்த்தியபடியே ஆடியன்ஸை சிரிக்க வைக்கும் பகுதி, ஃபன் & கேம்ஸ்.

நம் தமிழ் சினிமவில் ஃபன் & கேம்ஸுக்கு என்றே ஒரு சிறப்புப் பகுதி உண்டு. அது, நகைச்சுவைப் பகுதி. சமீபகாலமாக கதைக்கு வெளியே நகைச்சுவைக் காட்சிகள் வரக்கூடாது எனும் அறிவுஜீவிக் கருத்துகள் அதிகம் எழுதப்படுகின்றன. இது ஏ செண்டருக்கு மட்டுமே செல்லுபடியாகும் கருத்து.

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் ஹிட்ஸில் இன்னும் அசைக்க முடியாத இடங்கள் உடையவை, கரகாட்டக்காரன், சின்னத்தம்பி, நாட்டாமை. மூன்று படங்களே ஆவரேஜ் மெயின் கதை & கிளைக்கதையைக் கொண்ட படங்கள். ஆனால் அவை அதிரிபுதிரி ஹிட் ஆனதற்குக் காரணம், நகைச்சுவையும் சூப்பர் ஹிட் பாடல்களும் தான்.

இது கூத்து நடைபெற்ற காலம் தொட்டே, மெயின் கதைக்கு இடையே நகைச்சுவைப் பகுதிகள் வருவது நம் மரபு. எனவே இதைப் பற்றி பெரிய அசூயை தேவையில்லை. மணிரத்னம், கௌதம் மேனன் போன்ற ஏ செண்டருக்கு படம் எடுக்கும் ஜாம்பவான்கள்கூட இதைச் செய்திருக்கிறார்கள். எனவே ஹாலிவுட் பாணியை அப்படியே காப்பி எடுக்கிறேன் பேர்வழி என்று தயாரிப்பாளரை ஓட்டாண்டி ஆக்குவதை விட, இது பெட்டர்.

தனி நகைச்சுவைக் காட்சிகளை கண்டிப்பாக வைக்க வேண்டிய அவசியம் இல்லை; ஆனால் அதை வைக்க நீங்கள் விரும்பினால் தயங்க வேண்டாம் என்பதே என் பாயிண்ட். (நம் மரபில் உள்ள இத்தகைய விஷயங்கள் பற்றி, ஹாலிவுட் காப்பிகேட்டாக நீங்கள் மாறுவதைத் தடுப்பது பற்றி ப்ளேக் ஸ்னிடரை முடித்தபின் பார்ப்போம்.)

இன்று பார்த்த இரு விஷயங்களையும் குறிப்பிட்ட பக்கத்தில் துவங்கி, குறிப்பிட்ட பக்கத்தில் முடிக்கச் சொல்கிறார் ப்ளேக் ஸ்னிடர். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, இவை படம் முழுக்க விரவியிருப்பதே வழக்கம். எனவே Debate-க்கு அப்புறம் இவை ஆரம்பித்தாலும் இங்கேயே முடிய வேண்டிய அவசியம் இல்லை, படத்தின் இரண்டாம்பகுதியிலும் இவை தொடரலாம். ஹாலிவுட்டை அப்படியே இன்ச் பை இன்ச் காப்பி பண்ண வேண்டாம்!!

(தொடரும்)

மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 34"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, January 22, 2015

கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் - சினிமா அறிமுகம்

விநியோகஸ்தர்-சீரியல் ஆக்டர்-வசனகர்த்தா-திரைக்கதை ஆலோசகர் என்று பல முகங்கள் இருந்தாலும், கேபிள் சங்கருக்கு அடையாளம் ‘பதிவர்-சினிமா விமர்சகர்’ என்பது தான். காரணம், மற்றவற்றை விட இதில் அவர் அடைந்த புகழ் அதிகம். சினிமாவில் இருந்துகொண்டே நேர்மையான விமர்சனங்கள் எழுதுவது எளிதல்ல. அதனால் அவருக்கு வந்த சில மிரட்டல்களையும் நானறிவேன். இருந்தாலும் இப்போதுவரை நேர்மையைக் கைவிடாத மனிதர் அவர்.
அகிரா குரோசோவாவில் ஆரம்பித்து பல உலக சினிமாக்கள் பற்றிய அறிவு இருந்தாலும், அதையெல்லாம் எழுதி படம் காட்டாமல் ‘கமர்சியல் சினிமா’ தான் நமக்கு நல்லது எனும் தெளிவு கொண்டவர். தமிழ் சினிமாவைப் புரட்டிப்போடப் போகிறேன் என்றெல்லாம் சொல்லி நம்மை பீதியூட்டாமல் ‘இது ஒரு நல்ல பொழுதுபோக்குப் படமாக இருக்கும்’ என்று அறிவித்துவிட்டே ‘தொட்டால் தொடரும்’ படத்தைத் தொடங்கினார். இதோ, இந்த வாரம் வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ்.

ஏற்கனவே பாடல்கள் நம் மனதைக் கொள்ளை கொண்டுள்ளன. அதே போன்று படமும் நம்மைக் கவரும் என்று நம்புகிறேன். சினிமா வியாபாரத்தை கரைத்துக் குடித்தவர் என்பதாலும், அவருக்கு இருக்கும் திரைக்கதை அறிவினாலும் நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான படமாக இதை உருவாக்கியிருப்பார்.

இது ஒரு லவ் & ஆக்சன் த்ரில்லராக உருவாகியிருக்கிறது. தமன் சூட்டிங்கில் பட்ட கஷ்டங்களும், அவரது சின்சியாரிட்டியும் இன்னொரு நல்ல ஹீரோ தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துவிட்டார் என்றே பறைசாற்றுகின்றன. திருத்தமான முகம் இருந்தும், பொங்கி வரும் அழகிருந்தும் போக்கற்ற படங்களில் நடித்து வந்த அருந்ததிக்கு, இந்தப் படம் ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும். 
ஃபேஸ்புக்கில் ஆயிரம் பேர் ஃப்ரெண்ட்டாகச் சேர்ந்தாலே கெத்து காட்டும் ஆட்களுக்கு மத்தியில், யாரையும் மதித்துப் பேசும் பண்பான மனிதர் நம் கேபிள் சங்கர். அவரது நல்ல குணத்திற்கே, வெற்றி அவரைத் தேடி வரும். அவரைப் போன்ற மனிதர்கள் ஜெயிக்க வேண்டும்.

எனவே நண்பர்கள் அனைவருக்கும் கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் படத்தினைப் பரிந்துரைக்கிறேன். இப்போதுவரை குவைத்தில் படம் ரிலீஸ் ஆவது கன்ஃபார்ம் ஆகவில்லை. எனவே படத்தின் விமர்சனத்தை பார்க்காமலேயே, இப்போதே எழுதிவிடுகிறேன். :)

பார்க்கலாமா?:
கண்டிப்பாகப் பார்க்கலாம்!


மேலும் வாசிக்க... "கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் - சினிமா அறிமுகம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, January 15, 2015

ஐ - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் படம், கூடவே அந்நியனுக்குப் பிறகு விக்ரமுடன் இணைகிற படம் என்பதால், படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. சென்ற வருடம் இப்படி அதிக எதிர்பார்ப்புக்குள்ளான படங்கள் பலவும் பப்படம் ஆன நிலையில், ஐ படம் நம்பிக்கையைக் காப்பாற்றியிருப்பது பெரும் ஆறுதல்.


ஒரு ஊர்ல..:
எதிரிகளால் உருக்குலைக்கப்பட்ட ஹீரோ, அவர்களைப் பழி வாங்குகிறார்....அம்புட்டுத்தேன்! 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் காதலையும் பழிவாங்கலையும் விட்டு புதிதாக யோசிக்க மாட்டோம் என்று நம் ஆட்கள் அடம்பிடிப்பது ஏனென்று புரியவில்லை. நல்ல ஒரு சைன்ஸ் ஃபிக்சன் கதையாக இருக்கும் என்று எதிர்பார்த்தோருக்கு, படத்தின் கதை ஏமாற்றத்தையே தருகிறது. ஹீரோ-ஹீரோயிடன் காதல்-வில்லனுடன் மோதல் என்பதையும் தாண்டி ஷங்கர் போன்ற ஜாம்பவான்கள் யோசிக்க வேண்டிய நேரம் இது.

உரிச்சா....:
இந்த சராசரிக் கதையை சூப்பர் கதையாக ஆக்குவது ஷங்கர்+ பி.சி.ஸ்ரீராமின் பிரம்மாண்டமான காட்சியமைப்பும் விக்ரமின் நடிப்பும் தான். ‘Think Big2' கேட்டகிரி ஆளான ஷங்கர், இதிலும் அதையே செய்திருக்கிறார். ஹீரோ வடசென்னை சேரிப்பையனாக இருந்தாலும், காட்சிகளில் ரிச்னெஸ்ஸைக் கொண்டுவந்துவிடுகிறார்.

மணப்பெண் கோலத்தில் இருக்கும் ஹீரோயினை, அகோர விக்ரம் கடத்துவதுடன் படம் ஆரம்பிக்கிறது. கூடவே ஃப்ளாஷ்பேக்கும் ஓப்பன் ஆகிறது. ஷங்கரின் முந்தைய படங்களைப் போல் ஃப்ளாஷ்பேக் இரண்டாம்பாதியில் வருவதில்லை. நிகழ்காலம் கொஞ்சநேரம், அதிலிருந்து ஃப்ளாஷ்பேக் கொஞ்ச நேரம் என்று படம் நகர்கிறது. சில இடங்களில் இந்த ஃப்ளாஷ்பேக், யாருடைய பாயிண்ட் ஆஃப் வியூவில் நகர்கிறது என்று நமக்கே குழப்பமும் வந்துவிடுகிறது.
ஆனால் படத்தினை மிகவும் சுவாரஸ்யமாகக் கொண்டு செல்கிறார்கள். மிஸ்டர்.இந்தியா ஆகும் கனவோடு இருக்கும் விக்ரம், ஜிம் நடத்துகிறார். அங்கே சந்தானமும் பவர் ஸ்டாரும் நடத்தும் காமெடி ஒரு பக்கம், மாடலாக இருக்கும் ‘மாடர்ன் கண்ணகி’ எமி ஜாக்சனுக்கு பிரபல மாடலாக இருக்கும் வில்லன் தரும் தொல்லைகள் ஒரு பக்கம் என கதை நகர்கிறது. எமிக்கு எனிமி தொல்லை ஜாஸ்தி ஆவதால், விக்ரமை போட்டிக்கு மாடலாக களமிறக்குகிறார்.(லாஜிக் எல்லாம் பார்க்கக்கூடாது.) நடிப்பு ராட்சஷான விக்ரமுக்கு படத்தில் நடிப்பு வராமல் போக, எமி விக்ரமைக் காதலிப்பதாகச் சொல்லி கெமிஸ்ட்ரியை உண்டாக்குகிறார். அதில் நடிப்பு வந்து(!) விக்ரம் பிச்சு உதற, பிரபல மாடலாகிறார். கூடவே எதிரிகளும் உருவாகிறார்கள்.

ஒவ்வொரு எதிரியாக விக்ரம் தண்டிப்பதும், ஃப்ளாஷ்பேக்கும் ஒன்றாக நகர்வதால் ஃப்ரெஷ்ஷான படம் பார்த்த ஃபீலிங் கிடைக்கிறது. லீனியராக கதை சொல்லியிருந்தால், படம் சப்பையாகப் போயிருக்கும். அதே நேரத்தில் இது ஒரு பெர்ஃபெக்ட்டான நான் - லீனியர் படமாகவும் உருவாகவில்லை. திடீர், திடீரென ஃப்ளாஷ்பேக் ஓப்பன் ஆவதும், மாடல் வில்லனைத் தண்டித்தபின்னும் படம் நகர்வதும் நம்மைக் கொஞ்சம் கிர்ரென்று ஆக்குகிறது.

ஆவென்று வாய் பிளந்து பார்க்க வைக்கும்படியான பிரம்மாண்ட காட்சியமைப்பு, அதில் ஜொள் வரவைக்கும் எமியின் தாராள தரிசனம், விக்ரமின் அட்டகாசமான நடிப்பு, சுவாரஸ்யமான சீன்கள் என்று கலந்துகட்டி அடித்திருப்பதால், ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி நமக்கு வந்துவிடுகிறது. அது தான் ஷங்கரின் ஸ்டைல். அது இப்போதும் வெற்றியைத் தேடித்தருகிறது.

விக்ரம் :
என்ன மனுசன்யா இந்த ஆளு...அந்த கேரக்டருக்காக அப்படியே உடம்பை உருக்கி, ஏற்றி என்னன்னெமோ செய்திருக்கிறார். அவரது கடின உழைப்புக்கு முதலில் ஒரு சல்யூட். முகத்தில் முதுமை எட்டிப்பார்த்தாலும், கொஞ்ச நேரத்திலேயே நம் மனதில் இடம்பிடித்துவிடுகிறார். சென்னைத் தமிழும், பாடி பில்டர் உடம்புமாக அட்டகாசமாக அறிமுகம் ஆகிறார். அடுத்து ஸ்டைலிஷான மாடலாக வரும்போதும், உறுத்தாமல் பொருந்திப்போகிறார். அகோர உருவத்திற்காக அவர் போட்டிருக்கும் மேக்கப்பையும் மீறி, அவர் நடிப்பு தெரிவது தான் அவருக்குப் பெரும் பாராட்டைப் பெற்றுத்தருகிறது. இப்போதெல்லாம் கெட்டப் சேஞ்ச் என்றால், ரப்பர் முகமூடியை மாட்டிக்கொண்டு கண்ணை மட்டும் உருட்டுவது என்று ஆகிவிட்ட சூழ்நிலையில், விக்ரம் நடிப்பில் புதிய பரிணாமத்தைக் காட்டியிருக்கிறார். இதை ஷங்கர் படம் என்று சொல்வதைவிட, விக்ரம் படம் என்றே சொல்லலாம்.

எமி ஜாக்ஸன்:
தாண்டவத்தில் தண்டமாக வந்த பொண்ணா இது? ஹாலிவுட் பட ரேஞ்சில் ’காவர்ச்சி’யை அள்ளி விட்டிருக்கிறார். கண்டிப்பான குவைத் சென்ஸார், பல காட்சிகளை கொத்திக் குதறியிருக்கிறார்கள். அதையும் மீறி வந்த காட்சிகளிலேயே, இப்படி. இடைவேளைக்குப் பின் நடிப்பதற்கும் வாய்ப்பு. அவர் நடித்தாலும், அவர் நாக்கில் தமிழ் ததிங்கிணத்தோம் போடுவது க்ளோசப்பில் தெரிகிறது. டப்பிங் மட்டும் இல்லையென்றால், கஷ்டம் தான். ஆளே மெழுகுபொம்மை போல் இருப்பார் என்பதால், மாடல் கேரக்டருக்கு கன கச்சிதம்.


சந்தானம் :
எமிக்கு அடுத்து நம்மை ரிலாக்ஸ் செய்யும் ஒரே ஆள். அதுவும் இண்டர்வெல்லுக்குப் பின் சந்தானம் மட்டும் தான் ஒரே ரிலாக்ஸ்..தண்டிக்கப்பட்ட எதிரிகளிடம் பேட்டி எடுப்பதும், வழக்கம்போல் ஒன்லைன்களால் போட்டுத்தாக்குவதுமாக, அமர்க்களம் செய்திருக்கிறார். எந்திரனில் வேஸ்ட்டாக வந்தாலும், இதில் பட்டையைக் கிளப்பிவிட்டார். கூடவே பவர் ஸ்டாரும் இணைய, செம ரகளை.

சொந்த பந்தங்கள்:
வில்லனாக ராம்குமார்(சிவாஜி) வருகிறார். பிரபுவையும் சிவாஜியையும் மிக்ஸ் செய்து உருவாக்கிய உண்டக்கட்டி போல் இருக்கிறார். சில காட்சிகளில் சிவாஜியை நினைவுபடுத்தும் குரல்..அது தான் வில்லனாக அவரை ஏற்கவைக்க இடைஞ்சலாக இருக்கிறது. மாடலாக வரும் வில்லனும் நல்ல நடிப்பு. அதுக்கும் மேல நடித்திருப்பது சுரேஷ் கோபி.

நெகடிவ் பாயிண்ட்ஸ்:

- ’ஹீரோவை அகோரமான ஆளாக ஆக்கிவிடுகிறார்கள். பதிலுக்கு ஹீரோவும் அவர்களை அப்படியே ஆக்குகிறார்’ என்பது தான் கதை என்பதால், ஹீரோவும் வில்லன்களும் பல காட்சிகளிலும் கோரமாக வருகிறார்கள். இதனால் குழந்தைகள் இந்தப் படத்தைப் பார்ப்பது கஷ்டம். நமக்கே சில குளோசப் ஷாட்களைப் பார்க்கும்போது, அருவருப்பாக இருக்கிறது. ஷங்கருக்கு கிராபிக்ஸ் மேல் அலாதிப் பிரியம் உண்டு. அதை படத்தை அழகுபடுத்துவதற்காகப் பயன்படுத்தும்வரை பிரச்சினை இல்லை. இதில் கொஞ்சம் டூ மச் தான்.
- அரதப்பழசான கதை.
- மெர்சலாயிட்டேன் பாடலின் விஷுவல் கான்செப்ட், வக்கிரத்திலும் வக்கிரம். பாய்ஸ் ஷங்கர் இன்னுமா இருக்கிறார்?
- மசாலாப் படம் தான் என்றாலும், பல இடங்களில் லாஜிக் பற்றிக் கவலையில்லாமல் படத்தை எடுத்திருக்கிறார்கள். மாடல் வில்லன் தண்டிக்கப்படும் சீன், ஹீரோவின் ப்ளானாக இருக்க வாய்ப்பேயில்லை. எத்தனை அடிபட்டாலும் ஏற்கனவே டேமேஜ் ஆகியிருக்கும் ஹீரோ, தொடர்ந்து வீறுகொண்டு எழுவது ஆக்சன் காமெடி!
- மெர்சலாயிட்டேன், பூக்களே தவிர மற்ற பாடல்கள் செம போர். அதிலும் படம் விறுவிறுப்பாக நகரும்போது, பாடல்கள் வரும்போது கடுப்பாகிறது.
- படத்தின் நீளம். அந்த ட்ரெய்ன் சண்டைக்காட்சியிலேயே கிளைமாக்ஸ் ஃபீல் வந்துவிடுகிறது. அப்புறமும் இழுத்திருக்கிறார்கள். சில காட்சிகளே மிகவும் நீளமாக இருக்கின்றன. உதாரணம், நான்கு வில்லன்களும் விக்ரமை என்ன செய்தோம் என்று சொல்லும் காட்சி.
பாசிடிவ் பாயிண்ட்ஸ்:

- விக்ரம்..........மட்டும் இல்லேன்னா, படம் பப்படம் தான்.
- பிரம்மாண்டம்
- பி.சி.ஸ்ரீராமின் கேமிரா
- ஏ.ஆர்.ரஹ்மானின் இரண்டு பாடல்களும், பிண்ணனி இசையும்
- ரசிக்க வைக்கும் வசனங்கள்..’சைடு வகிடு எடுத்து சாஃப்ட்டாப் பேசினால் சரத்பாபுன்னு நினைச்சிட்டயா?’ ஒரு உதாரணம்.
- காதல், கவர்ச்சி, காமெடி, செண்டிமெண்ட், ஆக்சன் என எல்லா மசாலா ஐட்டங்களையும் சரியான விகிதத்தில் பரிமாறியிருப்பது.
- டெக்னிகலாக தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருப்பது. ‘100 கோடியில் எடுத்தோம்’ என்று உதார் விட்டுத் திரியும் பார்ட்டிகளுக்கு மத்தியில், உண்மையிலேயே காசைச் செலவளித்து எடுக்கப்பட்டிருக்கும் படம். ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு நன்றி.

பார்க்கலாமா?

தாராளமாகப் பார்க்கலாம்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

மேலும் வாசிக்க... "ஐ - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, January 12, 2015

திரைக்கதை சூத்திரங்கள்-II-பகுதி 33

ப்ளேக் ஸ்னிடரின் பீட் ஷீட்டைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் இன்று....

4. Catalyst (வினையூக்கி):

இதுவரை ஹீரோவின் நார்மல் வாழ்க்கை எப்படி இருக்கிறது, யாரெல்லாம் முக்கியக் கேரக்டர்கள் என்பதைக் காட்டிவிட்டோம். இனி கதைக்குள் நுழைய வேன்டிய தருணம் இது. சாதாரணமாகச் சென்றுகொண்டிருக்கும் ஹீரோவின் வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கிறது. அது அவனது வாழ்க்கையை வேறு திசையில் மாற்றப்போகிறது அல்லது தலைகீழாக எல்லாவற்றையும் புரட்டிப்போடப் போகிறது. அந்தச் சம்பவமே/சீனே, கேட்டலிஸ்ட் ஆகும்.

தேவர் மகனில் வடிவேலு, கமல் & கவுதமிக்காக கோவில் பூட்டை உடைக்கும் சீன், கேட்டலிஸ்ட்டிற்கு நல்ல உதாரணம். ‘படித்தவன், தன்னுடன் படிக்கும் ஆந்திராப் பெண்ணைக் காதலிப்பவன், ஊரில் பெரிய குடும்பம், அவர்களுக்கு ஒரு எதிரிக் குடும்பம்’ என செட்டப்பில் எல்லாவற்றையும் சொன்னபிறகு, இந்த சீன் வருகிறது. சாதாரணமாகத் தெரியும் இந்த சீனில் இருந்து தான் ஹீரோவின் வாழ்க்கை மாறப்போகிறது.

பில்லா படத்தைப் பொறுத்தவரை, பில்லா சாவது தான் கேட்டலிஸ்ட் சீன். அது தான் இன்னொரு ரஜினி/அஜித்தின் வாழ்க்கையை மாற்றப் போகும் சீன். கத்தி படத்தைப் பொறுத்தவரை, ஜீவாவை ‘கதிரேசன்’ விஜய் காப்பாற்றும் சீன் தான் கேட்டலிஸ்ட். காதல் கதைகளைப் பொறுத்தவரை, பெரும்பாலும் இருவரும் சந்திக்கும் சீனே கேட்டலிஸ்ட் ஆக இருக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், கேட்டலிஸ்ட் சீனிலேயே ஹீரோ ஆக்சனில் இறங்கும் அவசியம் இல்லை. இந்த விஷயம் எல்லாவற்றையும் மாற்றப்போகிறது என்று ஹீரோவுக்கோ ஆடியன்ஸுக்கோ அப்போதே தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இப்பொழுது கேட்டலிஸ்ட் பற்றி உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த கேட்டலிஸ்ட் சீனை எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் கொண்டுவருகிறீர்களோ, அவ்வளவுக்கு படம் விறுவிறுப்பானதாக ஆகும். இன்டர்வெல்வரை செட்டப்பை இழுத்துவிட்டு, பிறகு கேட்டலிஸ்ட்டுக்கு வந்தால், அலெக்ஸ்பாண்டியன் கதி தான் ஏற்படும்!


சமீபத்தில் வந்த பிசாசு படத்தின் முதல் காட்சியே கேட்டலிஸ்ட் சீன் தான். செட்டப் என்று அரைமணிநேரம் அறுக்கும் கதையே இல்லை. அதனால்தான் படம் 1:50 நிமிடங்களில் முடிந்தது, விறுவிறுப்பாகவும் இருந்தது.

5. Debate (மனப்போராட்டம்):

காலையில் ஆபீஸ்க்குப் போய்க்கொண்டிருக்கிறீர்கள். ஒரு ரவுடிக்கும்பல் ஒருவனை விரட்டியபடி செல்கிறது. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களிடம் ஓட்டு வாங்கி ஜெயித்த கவுன்சிலர்/எம்.எல்.ஏ, ஒரே வருடத்தில் பலகோடி மதிப்புள்ள இடத்தை வாங்கி, ஒரு பெரிய பங்களாவைக் கட்டுகிறார். என்ன செய்வீர்கள்?

உண்மையைச் சொல்வதென்றால், ஒன்றும் செய்ய மாட்டீர்கள். 'நமக்கு எதுக்கு வம்பு' என்று ஒதுங்கிச் செல்வீர்கள். படம் பார்க்கும் ஆடியன்ஸும் அப்படித்தான். எனவே ஹீரோ வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக்கொண்டு ஆக்சனில் இறங்கினால், ஆடியன்ஸ் கதையை விட்டு வெளியேறிவிடுவார்கள்.

கேட்டலிஸ்ட்டில் ஏதோவொன்று நடந்துவிட்டதாலேயே ஹீரோ ஆக்சனில் இறங்கினால், மிகவும் செயற்கையாக இருக்கும். 'இதைச் செய்யலாமா? இதனால் வரும் பின்விளைவுகள் என்ன? இதைச் செய்யும் தகுதி தனக்கு இருக்கிறதா?' எனும் அனலிஸை ஹீரோ செய்ய வேண்டும். அது ஒரு நிமிடமாக இருக்கலாம் அல்லது பத்து நிமிடமாகவும் இருக்கலாம். 'ஐய்ய்..சாமி சோறு போடுது' ரேஞ்சில் ஹீரோ வில்லனை ஒழிக்க கிளம்பக்கூடாது. 

இன்னொரு முக்கியமான விஷயம், இதை ஹீரோ செய்யவில்லையென்றால் ஹீரோவுக்கு ஏதாவது ஒரு இழப்பு இருக்க வேண்டும். அது, ஹீரோவின் ஊர்மக்களின் உயிராகவும் இருக்கலாம் அல்லது காதலாக இருக்கலாம் அல்லது நேர்மை/அன்பு போன்ற ஹீரோவின் இயல்பாகவும் இருக்கலாம்.

டிபேட் என்பது தனிக் காட்சிகளாகவும் இருக்கலாம் அல்லது செட்டப்பிலேயே கலந்துவிட்ட காட்சிகளாகவும் இருக்கலாம். ஆக்ட்-2விற்குள் நுழையும்போது, இந்த மனப்போராட்டம் ஆடியன்ஸ் மனதிலும் நடந்திருக்க வேண்டும். ‘ஆமாம்யா, அவன் கிளம்புறது சரி தான்’ எனும் எண்ணம் ஆடியன்ஸுக்கு வந்திருக்க வேண்டும்.

தேவர் மகனில் கமலின் ரியாக்சன் 'என்னை விட்ருங்கய்யா..நான் போறேன்' என்பது தான். 'நான் படித்தவன். இந்த மக்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள். அவர்களின் அறிவுக்கண்ணைத் திறக்கப்போறேன்' என்று உடனே ஆக்சனில் இறங்குவதில்லை. பில்லாவிலும் 'டூப்' பில்லா உடனே ஒத்துக்கொள்வதில்லை. அந்த இரு குழந்தைகளின் படிப்பிற்கு போலீஸ் உத்தரவாதம் கொடுத்தபிறகே ஹீரோ களத்தில் இறங்குகிறார். கத்தி படத்திலும் ஜீவா யார் என்றும், அந்த ஊர் பற்றியும் தெரியும்வரை கதிரேசன் களத்தில் இறங்குவதில்லை.

ஹீரோவுடன் அடியன்ஸை ஒவ்வொரு ஸ்டெப்பிலும் ஒன்ற வைப்பதே நல்ல திரைக்கதை. எனவே இந்த டிபேட் விஷயத்தில் கவனமாக இருங்கள்.
 6. Break Into Two:

ஹீரோ தன் நார்மல் உலகில் வாழ்ந்துவருகிறார். அப்போது ஒரு கேட்டலிஸ்ட் சம்பவம் நடக்கிறது. அதன்பின் ஹீரோவின் மனப்போராட்டம். அது முடிந்ததும், ஹீரோ தன் குறிக்கோளை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கும் தருணம், இந்த பிரேக் பாயின்ட்.

இந்த சீன் (ஹாலிவுட்) திரைக்கதையில் 25ஆம் பக்கத்தில் வரவேண்டும் என்று ப்ளேக் ஸ்னிடர் சொல்கிறார். தமிழ் சின்மாவிற்கு அவர் சொல்லும் பக்க கணக்குகள் அப்படியே பொருந்தாது. எனவே அவர் சொல்லும் இந்த 'பீட் சீன்கள்’ இருக்கிறதா, முடிந்தவரை அவர் சொல்வதற்கு அருகே வருகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

தமிழ் சினிமாவில் நான் கவனித்த இன்னொரு விஷயம், இந்த 'இரண்டாம் அங்கத்தில் நுழையும் சீன்' இன்டர்வெல்லில் தான் வருகிறது. ஒன்றே கால் முதல் ஒன்றரை மணி நேரம் கழித்து! திரைக்கதையில் ஒரு பக்கம் என்பது படத்தில் ஒரு நிமிடம் என்பது ஒரு தோராயக் கணக்கு. அதன்படி பார்த்தால், 75-90ஆம் பக்கத்தில் இந்த சீன் வரும். பாடல், ஃபைட் சீன்களுக்கு உரிய நேரத்தையும் கழித்துக்கொண்டால் 60-75 பக்கங்களுக்குள் இந்த சீன் வந்து விடும்.

தேவர் மகனில் இன்டர்வெல் ப்ளாக் தான் இந்த சீன். அப்போது தான் கமல், முழு விருப்பத்துடன் தேவர் மகனாக வந்து நிற்கிறார். பல படங்களில் ஹீரோ வில்லன்களை ஒழிப்பேன் என்று சவால்விட்டு, நம்மை பாத்ரூமுக்கு அனுப்பி வைப்பது உங்களுக்கும் இப்போது ஞாபகம் வருகிரதில்லையா?

டிபேட்டிற்கு அதிக நேரம் தேவைப்படாத கதை என்றால், செட்டப்பிற்கு அரை மணி நேரம் + டிபேட் பத்து நிமிடம் என 40ஆம் பக்கத்திலேயே இந்த சீனைக் கொண்டு வந்துவிட முடியும். பில்லா படத்தில் அப்படித் தான் வரும். டூப்பாகப் போக ரஜினி/அஜித் ஒத்துக்கொள்வது இன்டர்வெல்லிற்கு முன்பே வந்துவிடும்.

குறிக்கோளை அடைய ஹீரோவிற்கு ட்ரெய்னிங் தேவைப்படுவது அல்லது புதிய இடத்திற்கு ஹீரோ நகர்வது என்பது போன்ற சூழ்நிலை இருந்தால், இந்த ஆக்ட் பிரேக் 40ஆம் பக்கத்திற்குள்ளேயே வந்துவிடும்.

சரி..ஹீரோ ஒருவழியாக ஆக்ட்-1ல் இருந்து ஆக்ட்-2விற்குள் குதித்துவிட்டார். இனி.....

(தொடரும்)

மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள்-II-பகுதி 33"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, January 6, 2015

திரைக்கதை சூத்திரங்கள்-II-பகுதி 32

 Blake Snyder-ன் பீட் ஷீட்டில் இன்று நாம் பார்க்க இருப்பவை : Theme Stated and Set-up.

2. Theme Stated (கரு சொல்லப்படுதல்):

இது முன்பு பார்த்த 'ஓப்பனிங் இமேஜின்' வசன வடிவம் என்று சொல்லலாம்.

ஒரு நல்ல திரைக்கதை என்பது, ஏதாவதொரு தீம்-ஐ மையப்படுத்தியே எழுதப்படும். உதாரணம், காதல்-தப்பிப் பிழைத்தல்-பாசம். படத்தின் கரு என்ன என்பதை ஏதாவது கேரக்டர் நேரடியாகவோ அல்லது கேள்வி வடிவிலோ சொல்வது தான் Theme Stated.

முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசி தான் கதைநாயகி என்று முன்பே பார்த்தோம். அவர் அப்பாவிடம் அடிவாங்கும் இரண்டாவது சீனில் சொல்வார் : "இந்த ஊர்ல எல்லா ஆம்பளையும் வப்பாட்டி வச்சிருக்கான். எனக்கு இந்த ஊரு மாப்பிள்ளை வேண்டாம்ப்பா."

அது காமெடியாக அப்போது தெரிந்தாலும், பாக்கியராஜ் மேல் அவர் காதல் கொள்ள அதுவே முக்கியக் காரணமாக பின்னால் வரும்.

சமீபத்திய உதாரணம்: டொக்கு ஆயிட்டீங்களா?

ஆரண்ய காண்டம் படம், சுப்பு-சம்பத்-ஜமீன் தார் ஆகிய மூவரின் வாழ்க்கையைப் பேசும் ஆரண்ய காண்டத்தின் மையம், சிங்கப்பெருமாள். அந்த மூவரின் வாழ்க்கையையும் புரட்டிப்போடும் ஆளாக சிங்கப்பெருமாள் வருகிறார். அதற்குக் காரணம், டொக்கு ஆகிட்டோமோ எனும் பயம். அதையே அந்த மூன்று கேரக்டர்களும் வெவ்வேறு சீன்களில் சிங்கப்பெருமாளிடம் சொல்கிறார்கள்:

உங்களால முடியலேன்னா, என்னை ஏன் அடிக்கிறீங்க?
டொக்கு ஆயிட்டீங்களா?
கிழட்டுக்கோழி தோத்துப்போச்சு.

இது தான் தமிழ் சினிமாவில் வந்த மிகச்சிறந்த 'தீம் ஸ்டேட்டேட்' எனலாம்.

முதலில் சாதாரணமாகத் தெரியும் இத்தகைய வசனங்கள், படம் நகர நகர முக்கியமானதாக ஆகிக்கொண்டே வரும். ஆடியன்ஸின் சப்-கான்ஸியஸ் மைண்டை, கருவிற்கு ஏற்ப தயார் செய்வதில் ஓப்பனிங் இமேஜுக்கும், இந்த வசனத்திற்கும் முக்கியப் பங்கு உண்டு.

ஒரு படம் எதைப் பற்றியது, எதை நோக்கி நகரப்போகிறது என்று குறிப்பால் உணர்த்துபவை இந்த வசனங்கள்.

ஆனால் மிகவும் ஜாக்ரதையாக கையாள வேண்டிய விஷயம் இது. பணத்தை விட அன்பே முக்கியம் என்பது தான் கரு என்பதற்காக, 'பணம் போதும்ன்னு இன்னைக்கு நீ நினைக்கலாம். ஆனால் என்னைக்காவது அன்புக்காக ஏங்குவே' என்பது போன்ற அரதப்பழசான வசனங்களை எழுதிவிடாதீர்கள்.

இது முடிந்தவரை மறைமுகமாக, ஆடியன்ஸுக்கு உடனே உறுத்தாதவகையில் இருப்பது அவசியம்.

அதற்காக இதை எழுதிவிட்டுத்தான் அடுத்த சீனையே நீங்கள் எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை. இரண்டு டிராஃப்ட் முடிந்தபிறகே, நம் படம் என்ன மாதிரி டோனில் வரப்போகிறது என்று பிடிபடும். அப்போது இதை எழுதினால்கூடப் போதுமானது.

3. Set Up:

படத்தின் முக்கிய கேரக்டர்கள் யார், யார்? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்பது போன்ற, கதையின் அடித்தளத்தை விவரிக்கும் காட்சிகள் தான் செட்டப். ஹாலிவுட்டைப் பொறுத்தவரை முதல் பத்து நிமிடங்களில் இவை சொல்லப்பட்டுவிடும்.

தமிழ் சினிமாவில் முதல் 20 நிமிடத்தில் அல்லது அரைமணிநேரத்தில் சொல்லப்படும் விஷயம், செட்டப். இதை எவ்வளவு சுருக்கமாகச் சொல்லிவிட்டு, முக்கிய கதைக்குள் நகர்கிறோமோ, அவ்வளவுக்கு திரைக்கதை கச்சிதமாக இருக்கும். இல்லையென்றால், என்ன தான் சொல்ல வர்றாங்க என்று ஆடியன்ஸ் சலித்துக்கொள்ளும் நிலை தான் ஏற்படும்.

சின்னத்தம்பியில் ஆரம்பித்து சிவாஜிவரை இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். வேலையில்லாப் பட்டதாரி போன்ற படங்கள் விதிவிலக்கு. விதிவிலக்குகளை நம்பி, திரைக்கதை எழுதுவது அதிக ரிஸ்க்கான விஷயம் என்பதால், 'இதான் மேட்டர்' என்று சட்டுப் புட்டென்று சொல்லிவிடுங்கள்.

எல்லா முக்கிய கேரக்டர்களையும் காட்ட முடியாதென்றால், அவர்களைப் பற்றிய குறிப்பினை விட்டுவைப்பது நல்லது.

எங்கிருந்தோ வந்தாள் திரைப்படத்தில் சிவாஜி, சின்னத்தம்பி பிரபுவை விடவும் பயங்கரமான அப்பாவி. சின்னத்தம்பியாவது கல்யாணம் மட்டும் தான் முடிப்பார்; சிவாஜி கல்யாணத்தை முடிக்காமல் 'எல்லாவற்றையும்' முடித்துவிடுவார். அதை நிரூபிக்க முடியாமல் ஹீரோயின் ஜெயலலிதா தவிக்கும்போது, கிளைமாக்ஸில் முத்துராமன் வந்து பிரச்சினையைத் தீர்த்துவைப்பார். அந்த கேரக்டர் இருப்பது நமக்கு முன்பே சொல்லப்பட்டிருக்கும், கிளைமாக்ஸில் தான் காட்டப்படும். இதே போன்ற சூழலை 'அண்ணா நகர் முதல் தெரு'விலும் பார்க்கலாம். (ஆனால் சத்திராஜ் நல்லவர்!).

எந்திரன் படத்தை எடுத்துக்கொண்டால், முதல் பத்து நிமிடத்திலேயே சைண்டிஸ்ட்-ரோபோ-ஐஸ்வர்யா ராய் பற்றிய தெளிவான சித்திரம் நமக்குக் கிடைத்துவிடும். படத்தின் ஹீரோ யார், அவர் குணநலன் என்ன? ஜாலியான ஆளா? சீரியஸான ஆளா? பின்னால் ஒரு பிரச்சினை வரும்போது, எப்படி ரியாக்ட் பண்ணுவார்? என்பது போன்ற 'கேரக்டர்' பற்றி நாம் முன்பு பார்த்த விஷயங்களை விஷுவலாகச் சொல்ல வேண்டிய இடம், இந்த செட்டப்.

செட்டப்பில் நீங்கள் செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயமாக ப்ளேக் ஸ்னிடர் சொல்வது, '6 தீர்க்க வேண்டிய விஷயங்கள்'. ஹீரோவின் கேரக்டரில் இருக்க வேண்டிய குறைகளாக மினிமம் ஆறு விஷயங்கள் இருக்க வேண்டும் என்று சொல்கிறார். 

வசந்தமாளிகை படத்தை எடுத்துக்கொண்டால்...

குடிகாரன்
செல்வத்தில் மிதப்பவன்; ஆனாலும் அன்பு செலுத்த ஆள் இல்லாதவன்
வாழ்க்கையை எஞ்சாய் பண்ணுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யாதவன்

என்று தான் ஹீரோ கேரக்டர் அறிமுகம் ஆகும். ஆனால் படம் நகர நகர,

குடியை நிறுத்தியவன்
காதலில் விழுந்தவன்
தொழிலாளர்களுக்குப் பரிந்து பேசுபவன்,

என அந்த கேரக்டர் வளர்ந்துகொண்டே இருக்கும்.  ஆம், ப்ளேக் ஸ்னிடர் சொல்வது 'குணச்சித்திர வளைவு' என்று நாம் முன்பு பார்த்த விஷயத்தைத் தான். குணச்சித்திரவளைவின் முதல்பகுதியை, செட்டப்பில் வைத்து விட வேண்டும். அதே போன்றே 'நட்டுவச்ச ரோஜாச் செடியையும்'.

நீங்கள் ஏற்கனவே முப்பது சீன்களுக்கு எழுதிவைத்த கதையில், இவையெல்லாம் மிஸ் ஆகியிருக்கும்.  இந்த '6 தீர்க்க வேண்டிய விஷயங்கள்' மூலம் மேலும் சில சீன்களையும் சுவாரஸ்யத்தையும் நீங்கள் திரைக்கதையில் சேர்க்க முடியும்.

ஹீரோவின் குறிக்கோள் என்ன என்பதையெல்லாம் இதில் நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஹீரோவின் ஆர்டினரி வாழ்க்கையை இதில் காட்டுகிறீர்கள். அது எப்படி, எதனால் பாதிக்கப்படுகிறது என்பதை அடுத்து வரும் பகுதிகளில் சொன்னால் போதுமானது.
 
(தொடரும்)
 
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள்-II-பகுதி 32"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.