Showing posts with label பிராமணீயம். Show all posts
Showing posts with label பிராமணீயம். Show all posts

Tuesday, December 22, 2015

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்! – மேலும் சில கேள்விகள்/பதில்கள்


கேள்வி: நீங்கள் நாத்திகரா?
பதில்: நிச்சயமாக இல்லை. நான் ஒரு தீவிர மதநம்பிக்கையுள்ள இந்து.

கேள்வி: அப்புறம் ஏன் இதை ஆதரித்துப் பேசுகிறீர்கள்?
பதில்: நீங்க தானே பாஸ் ‘நாத்திகர் ஏன் இதைப் பேசறா? இது ஆத்திகர் பிரச்சினை. ஆத்திகர் பேசட்டும்’னு சொன்னீங்க?

கேள்வி: எல்லா பிராமணரும் அர்ச்சகர் ஆக முடியாது, தெரியுமா? பிராமணரே என்றாலும், குறிப்பிட்ட குலம் கோத்திரத்தில் பிறந்திருக்க வேண்டும் தெரியுமா?

பதில்: அப்படியென்றால், நீங்கள் எங்கள் பக்கம் நிற்க வேண்டும் செண்ட்ராயன்! அந்த ஏற்றத்தாழ்வையும் சட்டம் மூலம் ஒழிக்கலாம், வாருங்கள்!


கேள்வி: அவாளுக்கு வேண்டுமென்றால், பாடி காடி முனீஸ்வரர் போன்று தனியாக கோவில்கட்டி விடலாமே?

பதில்: அதை நீங்கள் சொந்தமாக உழைத்துக் கட்டிய கோவிலில் இருந்தல்லவா சொல்ல வேண்டும்? நீங்கள் உட்கார்ந்திருப்பதே, எங்கள் சொத்து. இதில் ஓனர் மாதிரிப் பேசலாமா?


கேள்வி: ஏதோ சில கோவில்களில் தான் கொஞ்சம் நல்ல வரும்படி வருகிறது. பல கோவில்களில் எங்களாவே கஷ்டப்படறா,தெரியுமோ?

பதில்: அப்படியென்றால், உங்களில் சிலர் மட்டும் உண்டு கொழுத்துக்கொண்டு, மற்றவர்களை பட்டினியில் போட்டிருக்கிறார்கள். இது தவறு என்பதை நாங்களும் ஒத்துக்கொள்கிறோம். எனவே எல்லா அரசு வேலையிலும் இருப்பது போல், இங்கேயும் ட்ரான்ஸ்ஃபர் சிஸ்டம் கொண்டுவரலாமா? அப்பாவியான அந்த பிராமணர்களுக்காக, நீங்கள் அதைத்தானே கேட்டிருக்க வேண்டும்? பரவாயில்லை, இப்போது கேட்போம்.


கேள்வி: காசுக்காகத்தானே இந்த 207பேர் வர்றா? வருமானமில்லாத கோவிலில் போட்டால் நிப்பாளா? ஓடிற மாட்டா?

பதில்: மேலே சொன்ன ட்ரான்ஸ்ஃபர் பதில் தான் இதற்கும். ஒரு சாரார் மட்டும் வருமானமுள்ள கோவில்களில் செழிக்க, மற்றவர்கள் நிரந்தரமாக கஷ்டப்படக்கூடாது இல்லையா? எனவே, ட்ரான்ஸ்பர்!


கேள்வி: காசை எதிர்பார்க்காமல் பக்தி உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் எங்களவா பல கோவில்களில் சேவை செய்கிறார், தெரியுமா?

பதில்: நன்றாகவே தெரியும். எங்கள் ஊர் குலதெய்வம் கோவிலில் என் தாத்தா தான் பூசாரி. அவருக்குப் பிறகு யார் என்று கேள்வி வந்தபோது ‘நோ..நோ..ஐ ஆம் எஞ்ஞினியர்’ என்று சொல்லி தப்பி ஓடிவந்துவிட்டேன். பிறகு வேறு யாராவது பொறுப்பை ஏற்றுக்கொள்வார்களா என்று பார்த்தால், யாருமில்லை.

பிறகு, பக்கத்து நகரான கோவில்பட்டியில் இருந்து ஒருவரை அழைத்து வந்தோம். செவ்வாய், வெள்ளி மட்டும் வருவதாக ஏற்பாடு. மாதச் சம்பளம், ஆயிரம் ரூபாய். இதே மாதிரி மேலும் சில கோவில்களில் அவர் வேலை செய்கிறார். மாதச்சம்பளம் ஐந்தாயிரம் வந்தால் பெரிது.

எனவே, தட்டில் விழும் காசு தான் அவரை வாழ வைக்கிறது. கஷ்ட ஜீவனம். ஆனாலும் அம்மனை அவர் தன் குழந்தையைப் போல சீராட்டுவார். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வார். இன்றைக்கு அம்மன் அங்கே இருப்பதே அவரால் தான் என்பேன். இல்லையென்றால், பூஜையின்றி எப்போதோ கோவில் களையிழந்து போயிருக்கும்.

இதே போன்று பல பிராமணர்களை எனக்குத் தெரியும். அவர்களில் சேவைக்கு எப்போதும் நான் தலைவணங்குகிறேன். அவர்களின் கஷ்டத்திற்கு நீங்களும், உங்களின் சிஸ்டமும் ஒரு காரணம் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்? வாரிசுரிமை இல்லையென்று சட்டம் சொன்னாலும், சில குடும்பத்தினர் மட்டுமே வருமானமுள்ள கோவில்களை பிடித்துவைத்திருப்பது உங்களுக்கேதெரியும். ஆனால் போராட்டம் என்பது அபச்சாரம் என்று ரத்தத்தில் ஊறியிருப்பதால், வேறு யாராவது தான் போராடி இதை மாற்ற வேண்டும், இல்லையா?


கேள்வி: தகுதியற்ற நபர்களும் இந்த சட்டத்தால் வேலைக்கு வந்துவிடலாம், இல்லையா?

பதில்: மாமனார் ஊரில் ஒரு கோவிலை எடுத்துப் பெரியதாக கட்டி நிர்வகிக்கிறார். அந்தக் கோவில் அர்ச்சகரும் சேவைக்கு ஒரு நல்ல உதாரணம். வம்சவம்சாக, இதே தொழிலில் இருக்கும் குடும்பம். அம்மனை அலங்கரித்து தீபம் காட்டினார் என்றால், அம்மனே நேரில் வந்துவிட்டது போல் உடல் சிலிர்க்கும். ஆனால் அவர்கள் பிராமணர்கள் அல்ல, புலவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இதே போன்றே வேளார், பிள்ளைவாள் அர்ச்சகர்களும் உண்டு.

பிராமணர்களிடம் இருக்கும் மாயை, தாங்கள் மட்டுமே தகுதியானவர் – தங்களை மட்டுமே ஆண்டவன் அர்ச்சகராக அனுப்பி வைத்திருக்கிறான் என்பது. அது உண்மையல்ல என்று கொஞ்சம் யோசித்தாலே புரியும். பழனி கோவிலையும், சமயபுரம் கோவிலையும் டெவலப் செய்து, உங்களுக்குக் கொடுத்ததே நான் – பிராமின்ஸ் தானே? தகுதி இல்லையென்றால், அவையெல்லாம் டெவலப் ஆகியிருக்குமா? மற்ற கோவில்களில் தான் தெய்வம் குடியிருக்குமா?

இருப்பினும்………………………உங்கள் கேள்வியில் உள்ள நியாயத்தை நான் ஒத்துக்கொள்கிறேன்.

தகுதியற்ற நபர்களை அர்ச்சகராகப் பார்க்க நேரிட்டால், உங்களுக்கு எப்படி வலிக்கும் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பூசாரி, தன் இடுப்பில் பான்பராக் சொருகியிருந்ததைப் பார்க்கும்போது எனக்கு வலித்திருக்கிறது. திருச்செந்தூர் பூசாரிகள் எப்போதும் பக்தர்களிடம் நாய் மாதிரி எரிந்து விழும்போதும் எனக்கு வலித்திருக்கிறது. அவர்கள் எல்லாம் பிராமணர்கள் என்பதை விட்டுத்தள்ளுவோம்.

இப்போது வரும் நான் – பிராமின்ஸில் சிலரும் அப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால், நீங்கள் கொதித்தெழுவீர்கள். இதுவரை உங்களவா தவறு செய்தபோது கொதிக்காத ரத்தம் அப்போது கொதிக்கும். எனவே கோவில்களில் நடக்கும் தவறுகளைத் தடுக்க, சரியான அமைப்பை நீங்கள் உருவாக்குவீர்கள். ஏற்கனவே அப்படி ஒரு அமைப்பு இருந்தால், அது செயல்பட ஆரம்பிக்கும். இது கோவில்களுக்கு நல்லது தானே?

அப்புறம் இன்னொரு விஷயம்…மேலே ஒரு புலவர் குடும்பம் பற்றிச் சொன்னேன், இல்லையா? அதில் அந்தக் குடும்பத்துப் பையனும் அரசு நடத்திய ஆகம பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றிருக்கிறார். இந்த சட்டம் அமலுக்கு வந்தால், வம்சவம்சமாக வறுமையில் வாடிய ஒரு பூசாரிக் குடும்பத்திற்கு ஒரு வழி பிறக்கும்.

நாத்திகர்கள் இந்த விஷயத்தை முன்னெடுப்பதால், அர்ச்சகர்களின் தகுதி பற்றி சந்தேகம் வருவது இயல்பு தான். ஆனால் உண்மையில் பல பூசாரி குடும்பங்கள் இந்த சட்டத்தால் பயன்பெறும் என்பதே யதார்த்தம்.


கேள்வி: சரி, பயிற்சி பெற்றவர் ஆகமவிதிகளின்படி நடக்கலாம். அவர் குடும்பமும் அப்படியே நடக்கலாம். ஆனால் அவர்களின் சொந்தங்கள் அப்படி ஆச்சாரமாக இருப்பார்கள் என்று சொல்ல முடியுமா? அந்த வீடுகளில் இவர் அன்னந்தண்ணி எடுக்காமல் இருப்பாரா?

பதில்: உங்கள் கேள்விக்கு என்ன அர்த்தம் என்றால்…

ஒரு பிராமணர் அர்ச்சகராக இருக்கிறார். அவர் மற்ற சொந்தக்கார பிராமண வீடுகளில் புழங்குகிறார். அத்தனை பிராமணர்களும் ஆச்சாரத்துடன் தான் இருக்கிறார்கள். அவர்களின் சொந்தத்தில் ஒருவர்கூட, ஆச்சாரம் கெட்டவர்கள் இல்லை. அத்தனையும் சொக்கத் தங்கங்கள். ஆனால் மற்றவர்கள் மட்டும் தான் மோசம், இல்லையா?

நான் டெல்லியில் வேலை செய்தபோது, என் அலுவலக /அறை நண்பன் ஒருவன் இருந்தான். மாலை ஆனதும், கையில் சிகரெட்டுடனும் பிராந்தி பாட்டிலுடன் தான் உட்காருவான். அவன் ஒரு பிராமின். அவன் அப்பா ஒரு கோவில்குருக்கள்.

என்ன செய்யலாம், குருக்களை வேலையை விட்டுத் தூக்கிவிடலாமா? குருக்களின் சொந்தக்கார குருக்களையும் வேலையை விட்டுத் தூக்கிவிடலாமா? அதை விடுங்கள், காஞ்சிபுரம் கில்மா குருக்களின் சொந்தக்கார குருக்களை என்ன செய்யலாம்?

முதலில், பிராமணர்கள் அத்தனை பேரும் சுத்தமானவர்கள்; மற்ற எல்லோரும் அசுத்தமானவர்கள் என்று நினைப்பதை விட்டொழியுங்கள். உங்கள் பிரச்சினைக்கெல்லாம் மூல காரணமே, இந்த மனநிலை தான்!


கேள்வி: இந்து மதத்தை அழிக்கவே, ஆச்சாரத்தைக் கெடுக்கும் இந்த சட்டத்தை நாத்திகர்கள் கொண்டுவருகிறார்களா?
 
பதில்: ஒட்டுமொத்த நோக்கில், இந்து மதத்திற்கு நன்மை செய்வதாகவே இது அமையும். ஆந்திராவிலும், கேரளாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் தான் இது. இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இது காலத்தின் கட்டாயம். 

மேலும், விதவை மறுமணம், பெண் விடுதலை போன்ற விஷயங்களை எல்லாம் இதே நாத்திகர்கள் எழுப்பியபோது, நீங்கள் இதே வாதத்தைத் தான் முன்வைத்தீர்கள். இப்போது அந்த விஷயங்களால், அதிக பயன்பெற்றிருப்பது நீங்கள் தான்.

அதே போன்றே, இந்த மாற்றத்தையும் ஒருநாள் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.................ஒரு சக இந்து!


மேலும் வாசிக்க... "அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்! – மேலும் சில கேள்விகள்/பதில்கள்"

Sunday, December 20, 2015

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்! - பாகம் 1

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்!


நான் காந்தியத்தை கற்றுக்கொள்ள ஆரம்பித்த கொஞ்சநாட்களிலேயே என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம், காந்தியத்திற்கும் பிராமண சுபாவத்திற்கும் உள்ள சில ஒற்றுமைகள். நமக்கெல்லாம் தெரிந்த ஒற்றுமை அஹிம்சை. அதையும் தாண்டி பல ஒற்றுமைகள் அங்கே உள்ளன.

எப்போதும் சமரசத்திற்கு தயாராக இருப்பதும், முதலில் கிடைப்பதை தக்க வைத்துக்கொண்டு பிறகு அடுத்த அடியை எடுத்து வைப்பது, எந்த நிலையிலும் எதிராளியுடனான உறவை முறித்துக்கொள்ளாமல் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருப்பது போன்றவை முக்கியமான அம்சங்கள்.

ஒரு கற்பனை உதாரணத்தை இப்போது பார்ப்போம். ஒரு அலுவலகத்தில் சனிக்கிழமையும் வேலைக்கு வரவேண்டும் என்று புதிய ரூல்ஸ் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். எல்லோரும் போய், அன்றைக்கு ஃபார்மலில் வராமல் கேஷுவல் ட்ரெஸ்ஸில் வரலாமா என்று கேட்கிறார்கள். பாஸ் தீர்ப்பு சொல்கிறார், ”வரலாம்..ஆனால் லெக்கின்ஸுக்கும் டைட்டான ஜீன்ஸிற்கும் அனுமதி இல்லை.”.

இப்போது நான் - பிராமின்ஸ், குறிப்பாக நம் போராளிகள் எப்படி ஹேண்டில் செய்வார்கள் என்று பார்ப்போம். முதலில் அவர்கள் புரட்சி மோடுக்குப் போவார்கள். ’பெண்ணிய விடுதலை, ஆடை சுதந்திரம், அடே காமக்கொடூரா...நாங்கள் என்ன உடுத்துவது என்று முடிவு செய்ய நீ யாரடா, உன் பொண்ணே காலேஜுக்கு லெக்கின்ஸ் தான் போட்டுட்டுப் போறா..உன் லட்சணம் தெரியாதா?’போன்ற வார்த்தைகள் வெடித்துச் சிதறும்.

தீர்ப்பு சொன்ன பாஸ் இன்னும் கடுப்பாகி, ‘நான் சொன்ன தீர்ப்பை வாபஸ் வாங்குகிறேன். எப்போதும்போல் ஃபார்மல்ஸிலேயே வாங்கடா நொண்ணைகளா!’ என்று ஆப்பு வைப்பார். ’உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா’என்பது புரிந்தாலும், ‘வெற்றி..வெற்றி..பாஸ் பயந்துட்டார்’ என்று கெத்தாக நிற்கும் புரட்சிக்கூட்டம்.

இதையே பிராமின்ஸ் எப்படி டீல் செய்வார்கள் தெரியுமா? முதலில் ‘வெற்றி..வெற்றி..பாஸ் மாதிரி நல்லவரைப் பார்ப்பது அரிது. லெக்கின்ஸ், ஜீன்ஸ் தவிர்த்து மற்ற கேஷுவல்ஸூக்கு அனுமதி அளித்த பரந்தாமனே போற்றி’ என்று சொல்லி, முதலில் கிடைத்த தீர்ப்பை மட்டுமல்லாது தீர்ப்பு சொன்ன பாஸையும் தன் பக்கம் கொண்டுவருவார்கள். கொஞ்சநாள் பாஸ் சொன்னதை கர்மசிரத்தையாக கடைப்பிடிப்பார்கள்.

அப்போது ஏதாவது ஒரு முட்டாள் ஒரு பத்திரிக்கையில் லெக்கின்ஸ் பற்றி ஒரு கட்டுரை எழுதுவான் (அல்லது இவர்களே ஒரு முட்டாளைவிட்டு எழுத வைப்பார்கள்.) ஊரே லெக்கின்ஸ் பிரச்சினைக்காக பற்றி எரியும். அப்போது பாஸிடம் போவார்கள். ‘சார், நம்ம ஆபீஸைப் பற்றியும் எவனாவது எழுதிடப்போறான். கம்பெனிப் பேர் கெட்டுவிடக்கூடாது என்பதால், லெக்கின்ஸ்/டைட் ஜீன்ஸையும் அனுமதிங்க சார்’ என்று பாஸ் மற்றும் கம்பெனியின் நலனுக்காகவே பிறப்பெடுத்தமாதிரி பேசுவார்கள். லெக்கின்ஸுக்கும் அனுமதி கிடைக்கும்.

ஒருவன் தனக்கு எதிராக 25%ம், ஆதரவாக 75%ம் கருத்து சொல்கிறான் என்றால், அவனை தகுந்த விதத்தில் ‘டீல்’ செய்து 100% எதிரியாக ஆக்குவது பெரும்பாலான நான் - பிராமின்ஸ் ஸ்டைல். ஆனால் தனக்கு எதிரான 25%-ஐ மறந்துவிட்டு, ‘வள்ளலே வாழ்க’ என்று ஃப்ளெக்ஸ் போர்டு மாட்டிவிடுவது பிராமின்ஸ் ஸ்டைல். (பிராமின்ஸ் பாராட்டிவிட்டான் என்றால், அது தனக்கு எதிரானது தான் என சில மண்டூஸ் கொதித்தெழுவார்கள் என்பதும் இதில் உள்ள சூட்சுமம்!)

பிராமணர்களை குறை சொல்லும் தொனியில் இதை நான் சொல்லவில்லை. அவங்ககிட்டே இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்று தான் சொல்கிறேன். (இந்த ஸ்டைல், எனக்கு அலுவலத்தில் மிகுந்த பயன் அளிப்பதை கண்கூடாக கண்டிருக்கிறேன். :) )

இப்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கும் சட்டம் பற்றி வந்த தீர்ப்பினைப் பார்ப்போம்.

1971ல் நடந்த சேஷம்மாள் வழக்கிலேயே ‘அர்ச்சகர் பதவி என்பது வாரிசுரிமை அடிப்படையில் வருவது அல்ல’ என்று தீர்ப்பு வந்துவிட்டது. ஆனால் ‘ஆகமவிதிகள் அறிந்த, தகுதியானவரைத்தான் அர்ச்சகர் ஆக்க வேண்டும்’ என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டது.

வழக்கம்போல் ‘அடே, உச்சிக்குடுமி நீதிமன்றமே’என்று பொங்கிவிட்டு, நாம் சைலண்ட் ஆகிவிட்டோம். பிறகு 2006ல் தெளிந்து ‘அனைத்து சாதியினருக்கும் ஆகமவிதிகள் கற்றுக்கொடுத்தால் போதுமே..சட்டப்படி அது செல்லுமே’ எனும் முடிவுக்கு அப்போதைய திமுக அரசு வந்தது. ‘அனைத்து சாதியினரும் அர்ச்சர் ஆகலாம்’ எனும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதற்கான பயிற்சிக்கூடங்களும் ஏற்படுத்தப்பட்டு, 207 பேர் தேர்ச்சிபெற்றார்கள்.

இதை எதிர்த்து பிராமணர்கள் உச்சநீதிமன்றம் போனார்கள். இப்போது தீர்ப்பு வந்திருக்கிறது. என்னவென்று....?

1. தமிழக அரசு கொண்டு வந்த, அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் அரசாணையை நீக்க முடியாது. அது செல்லும். (75% பாசிடிவ்)
2. ஆனால் ஆகம விதிகளின்படி தான் நியமனம் நடைபெற வேண்டும். (25% நெகடிவ்)

சரி, இதை ஊடகங்கள்...குறிப்பாக பிராமண ஊடகங்கள் தீர்ப்பு வந்த உடனேயே செய்தி வெளியிடுகின்றன. என்னவென்று...........??

"அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டம் ரத்து!”

இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ‘அறிவிருக்கா? தீர்ப்பை முழுசாப் படிச்சியா?’என்று கேட்க வேண்டிய விஷயம். ஏன் இப்படி செய்தி வெளியிட்டார்கள் என்று, முந்தைய லெக்கின்ஸ் உதாரணம் படித்த உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். உடனே ஃபேஸ்புக்கில் பலர் புரட்சி மோடுக்கு போனார்கள். ‘ஏ, உச்சிக்குடுமி நீதிமன்றமே..’என்று ஆரம்பித்தார்கள். பிராமணர்களுக்கு கொண்டாட்டம், அவர்கள் எதிர்பார்த்தது இதைத் தானே!

பகுத்தறிவுவாதிகள் என்ற போர்வையில் இறங்கும் சில மாற்றுமத போராளிகள்கூட ‘ச்சீ..இந்துக்களே, நாண்டுக்கிட்டு சாகுங்கள்’எனும் ரேஞ்சில் தங்கள் காரியத்தை செவ்வனே செய்தார்கள். கம்யூனிஸ்ட், வைகோ போன்றோர், உடனே மேல்முறையீடு செய்யுங்கள் என்று அறிக்கையும் விட்டார்கள். நல்லவேளையாக எப்போதும் உளறிக்கொட்டும் கி.வீரமணியும், கூடவே சுப.வீ.யும் இதில் தெளிவான அறிக்கை கொடுத்தார்கள்.

உண்மையில், இந்த தீர்ப்பு ‘அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்றே சொல்கிறது.

1. தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்படவில்லை.
2. ஆகமவிதிகளின் படி தான் அர்ச்சகர் நியமனம் செய்யப்படவேண்டும்.

ஓகே..இதில் ஆகமவிதிகள் ‘பிராமணர் தான் அர்ச்சகர் ஆகவேண்டும்’ என்று சொல்வதாக பிராமணர்கள் அடித்துவிட, எப்போதும்போல் ஃபேஸ்புக் புரட்சி நடந்தது. உண்மையில், எந்தவொரு ஆகமத்திலும் அர்ச்சகரின் ஜாதி பற்றி குறிப்பிடப்படவே இல்லை. அதாவது ஆகமங்களின்படி ‘அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்பது தான் கதையில் பெரிய ட்விஸ்ட்!

1971ல் முட்டாள்தனமாக பொங்கி கோட்டைவிட்டது போன்றே, இப்போதும் நடக்க வேண்டும் என்பது தான் பிராமணர்களின் ஆசை. அதனால்தான் பிராமண ஊடகங்களும், பிராமணர்களும் ‘சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுத்து..எல்லோரும் ஆத்துக்குப் போய் புள்ளகுட்டிகளை படிக்க வைங்கோ..போங்கோ..போங்கோ’என சபையைக் கலைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். அதை உண்மை என்று நம்பும் அப்பாவி நான் - பிராமின்ஸ் இந்துக்களே, இப்போது காந்திய வழியில் இறங்குவோம். நிதானமாக இதை அணுகுவோம்.

தீர்ப்பின்படி, இப்போது நிலவரம் என்ன?

1. தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்படவில்லை. (எனவே அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்.)
2. ஆகமவிதிகளின் படி தான் அர்ச்சகர் நியமனம் செய்யப்படவேண்டும். (ஆகமவிதிகள் பிராமணர்தான் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. எனவே அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்.)


‘அதர்வண வேதத்தில் ஏவுகணை தொழில்நுட்பம் இருக்கு. சாம வேதத்தில் சொன்னபடி, ஏரோப்ளேனே செய்யலாம். உண்மையான இந்துவாக இருந்தால், இதைப் பகிருங்கள்’ என்று வரும் அண்டப்புளுகுகளை ஷேர் செய்யும் அப்பாவிகள் நீங்கள் என்பதால் தான், ’ஆகமத்தின்படி பிராமணர்தான் அர்ச்சகர் ஆகணும்’ எனும் புரளி பாரம்பரிய ஊடகங்கள் மூலமாகவே பரப்பப்படுகின்றன. முதலில் அதை நம்பாதீர்கள், பரப்பாதீர்கள். ‘வெற்றி..வெற்றி’ என்று நாம் கூவ வேண்டிய நேரமிது. இப்போதும் ஏமாந்து போகாதீர்கள்.

இன்னொரு வேடிக்கையான தகவல். இந்து அறநிலையத்துறையின் கீழ் இருப்பது 36000 கோவில்கள். அதில் ஆகமவிதிப்படி இருப்பது 1200 கோவில்கள் தான் என்று அவாளே சொல்கிறார். ஆகமவிதிகள் தான் பிரச்சினை என்றால், முதலில் 1200 கோவில்கள் தவிர்த்து, மற்ற கோவில்களில் இந்த 207 பேரை நியமிக்கலாம் தானே?

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழக அரசே ஆகமவிதிகள் பயின்ற, தகுதியான நபர்களை அர்ச்சகர் ஆக்கலாம். ஏற்கனவே 207 பேர் தகுதி பெற்று இருக்கிறார்கள். அவர்களை உடனே அர்ச்சகராக நியமிப்பது தமிழக அரசின் கடமை.

 எனவே இளையராஜாவை எங்காவது பார்த்தால் ‘இந்த 207 பேரையும் அர்ச்சகராக நியமிப்பீர்களா?’என்று கேட்கும்படி ஊடக நண்பர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

------------------------------------

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் – கேள்வி 1:
பிராமணர்களை அழிக்க வேண்டும் என்பதற்காகவே கொண்டுவரப்படுகிறதா இந்த சட்டம்?

பதில்:

நாத்திகர்கள் இதை முன்னெடுப்பதால், இந்த சந்தேகம் வருவது இயல்பு தான். இந்த சட்டத்திற்குப் பின்னால் இருக்கும் நோக்கம், பிராமணர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ஆதிக்க சாதிகளுக்குமே எதிரான, உயர்வான நோக்கம். பிறப்பை மட்டுமே தகுதியாகப் பார்க்கும் இழிநிலையை மாற்றுவது தான் இதன்பின்னால் இருக்கும் நோக்கம். இந்த நோக்கத்தினால் பாதிப்பு பிராமணர்களுக்கு மட்டும் என்பதே பெரும் பொய்.

நமது சமூக அமைப்பில் தொழில்கள் ஜாதிவாரியாக பிரிக்கப்பட்டிருந்தன. ஒரு ஜாதியில் பிறந்தோர், இன்னொரு ஜாதியினரின் தொழிலைச் செய்ய முடியாது. உதாரணமாக, காவல் தொழில் தென்மாவட்டங்களில் தேவர் சாதி போன்ற ஆதிக்கசாதியினர் கையில் இருந்தது. காவல் அமைப்பில் ஒரு அங்கமான தலையாரி பதவியும் வாரிசு அடிப்படையிலேயே காலங்காலமாக இருந்து வந்தது.

அப்படித்தான் கோவில்பட்டி அருகே, என் நண்பனின் ஊரிலும் இருந்துவந்தது. தலையாரி குடும்பம் என்றே ஒரு குடும்பம் அங்கே இருந்தது. பரம்பரை பரம்பரையாக அவர்களின் வாரிசுகளே தலையாரிகளாக இருந்துவந்தார்கள். வாரிசு அடிப்படையில் பதவி என்பது வர்ணாசிரமத்தை கட்டிக்காக்கும் விஷயம் என்பதால், வாரிசுரிமை 1970களில் நீக்கப்பட்டது. (சரியான ஆண்டு, நினைவில் இல்லை).

அப்போது தலையாரியாக இருந்த தேவருக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அவர் மகன் வளர்ந்து பெரியவன் ஆனபோது, அதாவது தேவர் ஓய்வுபெற்றபோது பெரும்சிக்கல் எழுந்தது. 1980களில் அவரது பையனுக்கு வாரிசுரிமை அடிப்படையில் வேலை மறுக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, வேறொருவர் அந்த வேலையைப் பெற்றார். அவர் ஒரு தலித். சிக்கலின் தீவிரம், இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

வாரிசு, தேவர் என்றாலும் ஒரு அப்பாவி. எப்படியும் அப்பா வேலை கிடைத்துவிடும் என்று நம்பி வளர்ந்தவர். அது இல்லையென்றானதும், பதறிப்போனார். சொந்தங்கள் மீசை முறுக்கி, என்ன செய்யலாம் என்று ஆலோசித்தன. தலித்தை கொன்றுவிட்டால் என்ன எனும் யோசனை உதித்தது. இது தெரிந்த தலித், ஊரைவிட்டு ஓடிப்போனார்.

தலித்தைக் கொன்றாலும் வேலை வாரிசுக்கு கிடைக்காது, ஜெயில்வாசம் தான் மிஞ்சும் எனும் அறிவுரை தேவர்சாதியில் இருந்த சில பெரியோர்களாலேயே சொல்லப்பட்டது. எனவே சட்டப்படி, நீதிமன்றத்தை நாடி வேறு ஊரிலாவது வேலை கேட்போம் என்று முடிவுசெய்து கோர்ட் படியேறினார்கள்.

அந்த தலித் தலையாரியாக அந்த ஊரில் ரிட்டயர்டு ஆகும்வரை பணியாற்றினார். ஊரில் 90% தேவர்கள் தான். சிலசில முணுமுணுப்புகள் எழுந்தாலும், மிகக்கவனமாக பணியாற்றி, அந்த தலித் நல்ல பெயர் எடுத்தார். அவர் என் அப்பாவின் நண்பர் என்பதால், எனக்கு முழுக்கதையும் தெரியும். அதுபற்றி பேசும்போது அவர் ஒருமுறை சொன்னார்: காலங்காலமாக எங்கள் முன்பு நெஞ்சு நிமிர்த்தி நடந்தவர்கள். இப்போது என்னிடம் வந்து நிற்கவேண்டும் என்றால் கூசவே செய்யும். நாம் தற்செயலாக ஏதாவது செய்தால்கூட, அவர்களின் ஈகோ அடிவாங்கும். இப்போது நடந்துகொண்டிருப்பது ஒரு பெரிய சமூக மாற்றம். அதைப் பொறுமையாக, அட்ஜஸ்ட் செய்து தான் நாம் நடத்திக்காட்டவேண்டும். அடுத்த தலைமுறையில் இவ்வளவு எதிர்ப்பு இருக்காது.

அப்படித்தான் ஆனது. 2000ஆம் ஆண்டிற்கு அப்புறம், அவர் தலையாரியாக இருப்பது யாருக்கும் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஏனென்றால், தலித்கள் கலெக்டராக இருப்பதே சாதாரணமான நேரத்தில், தலையாரி ஒன்றும் பெரியவிஷயம் இல்லையே!

சரி, கோர்ட்டுக்குப் போன தேவரின் வாரிசு கதையைப் பார்ப்போம். 20 வருடங்களுக்கு மேலாக போராடினார். தாங்கள் இந்த நாட்டிற்கு(ஜமீனுக்கு) செய்த உயிர்த்தியாகங்கள் மற்றும் சேவைகளை எல்லாம் பட்டியல் போட்டார். எனவே, நியாயப்படி இந்த வேலை தனக்கு வருவது தான் சரியாக இருக்கும் என்று மன்றாடினார். ஆனாலும் கோர்ட் ‘இனியும் பிறப்பின் அடிப்படையில் தகுதியை நிர்ணயிக்க முடியாது’ என்று மறுத்துவிட்டது. பலவருட நீதிமன்றப் போராட்டம், சொந்தங்கள் மத்தியில் தலைகுனிவு, வறுமை எல்லாம் சூழ, தன் நாற்பதாவது வயதில் அவர் மனநிலைப் பாதிப்புக்கு உள்ளானார். நாற்பத்தி இரண்டாவது வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

‘இந்த நாட்டிற்கு ஒரு ஆபத்தென்றதும், வேல்கம்புடன் போருக்குப் போனது நாங்க. மற்ற ஜாதிகளின் பாதுகாப்பிற்காக, தாலியறுத்தது நாங்க. எல்லோரும் வணிகம் செய்து துட்டு எண்ணிக்கொண்டிருந்தபோது, எத்தனை பேர் செத்தார்கள் என்று பதறிக்கிடந்தது நாங்க. எங்க தியாகத்திற்கு பொருள் இல்லையா?’ என்று அந்த வீட்டுப்பெண்கள் கதறினார்கள்.

இன்றைக்கு பிராமணர்கள் அதையே கேட்கிறார்கள். ஒரு கோவிலுக்காக ஒரு குடும்பம் காலங்காலமாக உழைத்திருக்கிறது என்றால், அவர்களுக்குத் தானே அர்ச்சகர் வேலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.

ஆனால் இங்கே ‘பிறப்பால் அனைவரும் சமம்’ எனும் சமூகநீதி நிலைநாட்டப்படுவது தான் முக்கியம். ஒருவனின் தகுதி என்பது, அவனின் சொந்த உழைப்பால் தான் வரவேண்டும். ஒரு குலத்தில் பிறந்ததாலேயே அவனுக்கு தகுதி உண்டு என்பதோ இல்லை என்பதோ ஜனநாயகப் பண்பும் அல்ல, மனிதநேயமும் அல்ல.

இன்றைக்கு பிராமணர்கள் சந்திக்கும் இந்த கஷ்டத்தை(?), ஏற்கனவே ஏதோவொரு விதத்தில் எல்லா ஜாதிகளும் அனுபவித்துத்தான் இங்கே சமூகநீதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எல்லா ஜாதிகளுமே தங்களுக்கான தொழிலை, பிறருடன் பகிர்ந்துகொண்டாக வேண்டிய கட்டாயம் இங்கே எப்போதோ வந்துவிட்டது. நீங்கள் கொஞ்சம் மேலே உட்கார்ந்து இருந்ததால், உங்களுக்கு இது தெரியாமல் போயிருக்கலாம்.
மொத்தத்தில், பழைய நாட்கள் போய்விட்டது. இந்த மாற்றம் பிடிக்கிறதோ இல்லையோ, இதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். ’எல்லோரும் மனுஷா தான்’ என்று இப்போதாவது உணர்வது தானே நியாயம்!

(தொடரும்)
 
மேலும் வாசிக்க... "அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்! - பாகம் 1"

Saturday, December 10, 2011

பிராமண நண்பர்களுக்கு..(வர்ணம், ஜாதி, இடஒதுக்கீடு) _ நிறைவுப் பகுதி


அன்பு நண்பர்களுக்கு,

வர்ணம், இடஒதுக்கீடு என்று நாம் பேசிக்கொண்டே போனாலும், ஜாதி/ஜாதிப்பற்று/ஜாதி வெறி பற்றிப் பேசாமல் இந்த விவாதத்தை முடிப்பது முறையாகாது. 

‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என ஆரம்பித்து பல்வேறு விதங்களில் ’ஜாதியே இல்லை’ என்று சொல்லப்பட்டு வந்தாலும், ஜாதி என்பது இன்னும் இருந்துகொண்டே தான் இருக்கிறது. ஜாதியை ஒழிப்பது என்பதன் சாத்தியம் பற்றி இன்னும் சந்தேகம் கொள்ளவே வேண்டியிருக்கிறது. அதற்குக் காரணம், பெரும்பாலான மக்கள் இன்னும் ஜாதியைக் கைவிடத் தயாராக இல்லை என்பதே.

ஜாதி ஏன் நம் மக்களுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது என்று யோசிக்கிறேன்...

ஜாதி என்பது சமூகத்தை மேல்கீழாக அடுக்கும் அவலமான ஒன்றாக இருக்கும் அதே நேரத்தில், அதே ஜாதி தான் நம் வம்சத்தின் நீட்சியாக இருக்கிறது. ஜாதியைத் தூக்கி எறிதல் என்பது நம் பாட்டனை-பூட்டனை-முன்னோரை தூக்கி எறிவதாய் ஆகிவிடுமோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

சிவகங்கை தான் எங்கள் பூர்வீகம்..அந்த வானம் பார்த்த பூமியில் பிழைக்க வழியின்றி தெற்கு நோக்கி நகர்ந்தனர் என் முன்னோர். அவர்களின் அந்த முடிவும், அதன்பிறகான அவர்களின் உழைப்புமே இன்றைய என் நிலைக்கு அடிப்படை. என் தந்தையார் இருந்த ஒரு காட்டையும் விற்றே என்னைப் படிக்க வைத்தார். இவ்வாறு பலரின் தியாகங்களும், கடின உழைப்பும் சேர்ந்ததே என் வம்சம். அதுவே என் ஜாதியில் ஒரு அங்கம். ஜாதியைக் கைவிடு எனும்போது, இவர்களை என்ன செய்வது?

அதே நேரத்தில், படித்த நாகரீக மனிதனாக ஜாதிய ஏற்றத்தாழ்வால் ஏற்பட்ட/படுகின்ற அவலங்களை ஏற்றுக்கொள்வதும் நம்மால் இயலவில்லை. ஏறக்குறைய படித்து, கிராமச் சூழலில் இருந்து வெளியேறும் பலரும் சந்திக்கும் அறச்சிக்கல் இதுவே.
நீங்களும் இதையே வேறுவிதத்தில் உணர்ந்திருப்பீர்கள். பலரும் வெளியில் ஜாதியை ஒழிப்பதாகப் பேசிவிட்டு தனக்கோ தன் குழந்தைகளுக்கோ திருமணம் முடிக்கையில், கவனமாக தன் ஜாதியிலேயே மணம் முடிப்பதைப் பார்க்கிறோம்(நான் உட்பட). இளம்பருவத்தில் ஜாதியை ஒழிப்போம் என்று கோஷமிட்ட பலரும் வயதான காலத்தில் ஜாதிப்பற்றில் மூழ்குவதையும் நாம் பார்க்க்கிறோம்.

என் நண்பர் ஒருவர் தீவிரமான பகுத்தறிவுவாதி. ஆனால் சீமானைக் குறை சொல்லிப் பேசினால்/எழுதினால் மட்டும் டென்சன் ஆகிவிடுவார். ‘சீமானே மாற்றுசக்தி’ என்று தீவிரமாக நம்பினார்/நம்puகிறார். எனக்கு நீண்டநாள் கழித்தே சீமானின் ஜாதியும் நண்பரின் ஜாதியும் ஒன்று என்று தெரிந்தது. இதேபோன்று பிரபலங்களைத் தாங்கிப்பிடிக்கும் ஆட்களில் பெரும்பாலானோரின் ஜாதி, அந்தப் பிரபலங்களின் ஜாதியாகவே இருப்பதைக் காணலாம். ஏதேனும் ஒரு வடிவில் ஜாதியுணர்வு, நம் மக்கள் மறைத்தாலும் வெளிப்பட்டுவிடுகிறது.

ஜாதி என்ற கத்தியின் கைப்பிடியாக வம்ச நீட்சியும், கூர்முனையாக ஏற்றத்தாழ்வும் இருக்கிறது.எனவே ஜாதியை ஒழிப்பது என்பது சிக்கலான ஒன்றாகவே இன்னும் இருக்கிறது. ‘இந்த ஜாதிமுறை இப்படியே நீடிப்பது சரிதானா?’ என்ற நியாயமான கேள்வியும் நம்மை உலுக்குகின்றது.(இதைப்பற்றி ஜெயமோகனும் ஒரு பதிவு எழுதியிருந்தார்..படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..)

இப்போது ஜாதிய அடையாளங்களை வெளியே காண்பிப்பதில், சொல்வதில்  நாம் தயங்கும் நிலை இப்போது உருவாகியுள்ளது. முன்பெல்லாம் நேரடியாக ‘நீ என்ன ஜாதி’ என்று கேட்பார்கள். இப்போது கேட்பதில்லை அல்லது சுற்றி வளைத்துக் கேட்கின்றனர். பெரியாரால் விளைந்த நன்மைகளுள் ஒன்றாக இதனைக் கொள்ளலாம். 

சமூக ஜாதிய அடுக்கில் நடுவில் உள்ளவன் என்ற முறையில் இருபக்கத்தையும் நான் உணர்ந்தே இருக்கின்றேன். பிராமணர்களின் ஜாதி வெறி எங்கள் மேல் காட்டப்பட்டதையும் அனுபவித்துள்ளேன். என் சுய ஜாதியினர் தன் ஜாதிவெறியை தாழ்த்தப்பட்டோர் மேல் காட்டுவதையும் கண்டுள்ளேன். அதுவே இந்த ஜாதி முறைகள் பற்றிய மறுபரிசீலனையை நாம் செய்வது அவசியம் என்று எண்ண வைத்தது.நம்மை ஒருவன் தன் ஜாதியைக் காரணமாகக் காட்டி அவமானப்படுத்தும்போது ஏற்படும் அவமானமும் கோபமுமே, நாம் பிறரிடம் நம் ஜாதியைப் பற்றிக் காட்டும்போது ஏற்படும் என்ற ‘அறிவு’, நமக்கு இருக்க வேண்டியது அவசியம்.

நிலப்புரபுத்துவக் காலகட்டத்தில் சரியாக இருந்த பல விஷயங்கள், இந்த நவீன ஜனநாயகக் காலகட்டத்தில் தவறானதாக ஆகிவிட்டதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் செய்தது சரி தான் என்றால் ‘ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை’ என்று ஒளவையார் தான் பாட வேண்டிய அவசியம் என்ன? ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி அக்ரகாரத்தை விட்டே துரத்தப்பட்டது ஏன்? நம் முன்னோர்கள் செய்தது சரி தான் என்று இன்னும் பிடிவாதமாகச் சாதிப்பது, நம்மிடையே எவ்வித நல்லுறவையும் ஏற்படுத்தாது. நம் முன்னோர் அவர்கள் காலகட்டத்தில் கூறப்பட்ட சமூக ஒழுங்கின்படி, சில விஷயங்களைக் கடைப்பிடித்தனர். அதனை இனியும் தொடர்வது இக்காலகட்டத்திற்கு ஒவ்வாத ஒன்று என்பதை நாம் முதலில் மனதார ஒத்துக்கொள்ள வேண்டும்.

இன்று கல்வியும் பணமுமே ஒருவரது வாழ்நிலையை தீர்மானிக்கிறது. இனியும் ஜாதிய ஏற்றத்தாழ்வை நாம் தொடர முடியாது, தொடரவும் கூடாது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, ஜாதிகளுக்கிடையிலான உறவு என்பது சர்ச்சைகளற்ற இயல்பான ஒன்றாக ஆக முடியும்.பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் தங்களுக்கிடையே உறவை/நட்பைப் பேணுவதில் பெரிய சிக்கல் இல்லை. அதே எண்ணத்துடன் பிற பிரிவுகளில் உள்ள ஜாதிகளுடனும் பழகுவது அவசியம் ஆகிறது.அதற்குத் தடையாக இருப்பது நம் ஜாதியினர்/முன்னோர் செய்ததெல்லாம் சரி தான் என்று நாம் நம்புவதும், அதே முறையை தொடர விரும்புவதுமே.

பிற ஜாதிகளுடனான உறவைப் பற்றிப் பேசும்போதெல்லாம் வாசந்தி எழுதிய ஒரு கதை ஞாபகத்திற்கு வரும்..

ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கதாநாயகன், ஆதிக்க ஜாதி பண்ணையாரை அவர் வீட்டில் சந்திப்பான். அவர் ‘உட்காருங்க தம்பி..நான் ஜாதியெல்லாம் பார்ப்பதில்லை’ என்று உபசரிப்பார். பிறகு கிளம்பி வெளியே வரும்போது, அங்கே கிணற்றடியில் இருக்கும் பாத்திரத்தை கதாநயாகன் ’பண்ணையார் அனுமதியின்றி’ தொட்டுவிடுவான். ‘யாரைக் கேட்டடா தொட்டாய்?’ என்று பண்ணையார் அடிக்கப் பாய்ந்துவிடுவார்.

அதாவது, சம உரிமை என்பது நாங்களாக மனமிரங்கிப் போடும் பிச்சை என்ற ஆதிக்க சாதி மனோபாவத்தை தெளிவாகக் காட்டிய கதை அது. (கதைப் பெயரோ, முழுக்கதையோ ஞாபகம் இல்லை..சாரி). முற்போக்கு வாதிகளாக காட்டிக்கொள்ளும் ஆதிக்க சாதியினர் செய்வதும் ஏறக்குறைய இதையே..’நான்லாம் ஜாதி பார்க்கறதில்லைப்பா..தயங்காம என் வீட்டுக்கு வா..கூச்சப்படாம உட்கார்ந்து சாப்பிடு’ என்பது போன்ற பேச்சுகள், மனதில் இன்னும் படிந்திருக்கும் ஜாதிய அழுக்கை காட்டுபவையே.

எனவே நாம் இத்தைய போலி முற்போக்கு வாதியாக ஆகிவிடாமல் தவிர்ப்பது அவசியம். அதற்கான உண்மையான வழி ‘நாம் ஒரு ஜாதியில் பிறந்தாலேயே உயர்ந்தவர் ஆகிவிட மாட்டோம். அது நம் நடத்தையால், எண்ணத்தால் வருவது. உள்ளே நாம் யாரோ அதுவே நம் ஜாதி’ என்று உளமார நாம் உணர்வதே ஆகும். உங்களுடன் இத்தனை நாள் விவாதித்ததில் நாம் அத்தகைய எண்ணவோட்டத்தில் தான் இருக்கிறோம் என்று உணர்ந்துகொண்டேன். அது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

ஜாதியை தற்போதைய சூழலில் ஒழிக்க முடியாவிட்டாலும் (ஏன் ஒழிக்கவேண்டும் என்று இன்னும் நமக்கு முழுதாக புரியாவிட்டாலும்), ஜாதிய ஏற்றத்தாழ்வை நம் மனதில் இருந்து அகற்றுவது அவசியம் ஆகிறது. ஏறக்குறைய 17 வருடங்களாக என் பிறந்த மண்ணை விட்டு வெளியே நான் இருக்கின்றேன். இங்கே ஜாதிய அடையாளம் தேவைப்படவேயில்லை. இத்தனை வருடங்களில் என் ஜாதி என்ன என்பதை நான் வெளிப்படுத்திக்கொண்டதும் இல்லை. இவ்வளவு விவாதித்தும் நீங்களும் என் ஜாதி என்ன என்று கேட்கவில்லை, நானும் சொல்லவில்லை. இதுவே ஜாதியின், ஜாதிய அடையாளத்தின் தேவை சமூகத்தில் தீர்ந்துகொண்டிருக்கிறது என்பதற்குச் சான்றாகும்.

தற்போதைய நிலையில் நான் கோவில்பட்டிக்காரன் என்பதை என்ன உணர்வோடு நான் நினைக்கின்றோனே அதே உணர்வோடே ’ நான் *** ஜாதிக்காரன்’ என்றும் நினைக்கின்றேன். கோவில்பட்டியிலும், அந்த ஜாதியிலும் பிறந்தது இயல்பாக நடந்துவிட்ட ஒன்று. கோவில்பட்டிக்காரன் மட்டுமே புத்திசாலி-நல்லவன்-உயர்ந்தவன் என்று நினைப்பது எவ்வளவு அறியாமையோ, அதேயளவு அறியாமை ‘இந்த ஜாதி மட்டுமே உயர்ந்தது’ என்று நம்புவதும்.

இந்த விவாதத்தில் இருக்கும் நாம், சமூகத்தை தலைகீழாகப் புரட்டிப்போட முயலும் புரட்சியாளர்கள் அல்ல..சாமானியர்களே என்பதாலேயே வெளிப்படையாக இவற்றைப் பேசுகின்றேன்..நம் மனசாட்சிக்கு உட்பட்டு, நியாய-தர்மத்துடன் கூடிய வாழ்வை வாழ்வதற்கான முயற்சியில் இருக்கும் மனிதர்கள் தானே நாம்..அத்தகைய நியாய வாழ்விற்கு ஒத்துவரும்வரையே ஜாதிக்கு நம் வாழ்வில் இடம் உண்டு.

நீங்கள் தொடர்ந்து இந்த விவாதத்தைப் பொதுவில் வைக்கச் சொல்கிறீர்கள்..நாம் பேசுகின்ற பாஷை எந்த அளவிற்கு படிப்போர்க்குப் புரியும் என்று தெரியவில்லை..’ஜாதிக்கான இடம் நம் வாழ்வில் என்ன? அது சார்ந்த விஷயங்களால் ஏற்படும் விளைவுகள் என்ன?’ என்று மதநம்பிக்கையுள்ள - ஜாதி வட்டத்திற்குள்ளும் உள்ள சாரசரி மனிதர்கள் பேசிக்கொண்டதன் தொகுப்பு என்று இதைச் சொல்லலாமா? இதைப் பொதுவில் வைப்பதன்மூலம், இதேபோன்ற வசைகளற்ற விவாதம் படிப்போரிடையே நடைபெறும் என்று நம்புகிறீர்களா என்ன..!

’என் முன்னோர்கள் செய்தது அனைத்தும் சரி தான்’ என்று பேசுவதோ, ’உன் முன்னோர் கெட்டவர்கள்..அதனால் நீயும் கெட்டவனாகத்தான் இருப்பாய்’ என்று நம்புவதோ இருசமூகங்களுக்கிடையில் நல்ல உறவை ஒருபோதும் ஏற்படுத்திவிடாது.

முடிவாக நாம் வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம், நம் முன்னோர்கள் நவீன ஜனநாயகத்தை புரிந்துகொள்ளாமல் பழைய நினைவுகளுடன் பல தவறுகளைச் செய்தார்கள் என்பதையே. அடுத்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அந்தப் பழைய தவறுகளையும் அதனால் விளைந்த வெறுப்பையும் இனியும் நாம் அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துவிடக்கூடாது.

அதுவே நாம் அனைவரும் இதைப் படிப்போர்க்குச் சொல்லும் செய்தியாக இருக்கட்டும்.

அனைவருக்கும் நன்றி.

அன்புடன்
செங்கோவி

மேலும் வாசிக்க... "பிராமண நண்பர்களுக்கு..(வர்ணம், ஜாதி, இடஒதுக்கீடு) _ நிறைவுப் பகுதி"

Tuesday, December 6, 2011

பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_7

செங்கோவி,

//அரசும் அத்தகைய வசதி படித்தோரை விலக்க, வருமானச் சான்றிதழ் பெறும் முறையை ஏற்கனவே வைத்துள்ளது. //

நீங்கள் சொல்வது வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீட்டிலா?  பள்ளியிலோ / கல்லூரியிலோ இது நடைமுறையில் இருப்பது போல் தெரியவில்லை. 

//உங்கள் சமூகத்துப் பெரியவர்கள் / ஜாதிச் சங்கங்கள் மூலம் ‘இனிமேல் நம்மை விட பொருளாதாரத்தில் தாழ்ந்த பிராமணர் வந்தால், நாம் உடனே போட்டியில் இருந்து விலகி அவர்களுக்கு வழி விடுவோம்’ என்று ஒரு தீர்மானம் நிறைவேற்ற முடியுமா? அதற்கு பெருவாரியான வசதி + படித்த பிராணக் குடும்பங்கள் என்ன எதிர்வினையாற்றும் என்று சொல்ல முடியுமா?//

இது எல்லா சமூகங்களிலுமே அவசியமாக ஏற்படவேண்டிய மாற்றம். இதெல்லாம் நடக்கும் என்று நம்புவோம்.  இந்த சிந்தனையைப்பரப்ப நம்மால் ஆன முயற்சிகளை செய்யலாம்.

இங்கே நீங்கள் எழுதிய அனைத்துமே மாற்றுக்கருத்து இல்லாமல் ஏற்கவேண்டியதே.  வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை விட்டுத்தள்ளுங்கள்.  அதை நான் எதிர்க்கவில்லை.  படிப்பு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை இல்லையா?  அதிலேயே விரும்பிய படிப்பை படிக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமா?

ஒருவருக்கு விருப்பம் இல்லாததை வலியத் திணிப்பது எந்த விதத்தில் நியாயம்?  ஒரு ஊரில் ஒரே ஒரு அரசு கல்லூரியும் மற்றும் நிறைய தனியார் கல்லூரிகளும் இருப்பது ஏன்?  எல்லாருமே வேலைக்குப்போக வேண்டும் என்ற நோக்கத்தில் படிப்பதில்லை.  

என்கூட படித்த நிறைய தோழிகள் படிப்பு முடிந்ததும் கல்யாணம் செய்துகொண்டு செட்டிலாவது என்பதில் தெளிவாக இருந்தனர்.  வேலைக்குப்போக வேண்டும் என்ற குறிக்கோள் எல்லாரிடமும் இல்லை.  அப்படி இருக்க வேலைவாய்ப்பில் எல்லாருமே போட்டிக்கு வரப்போவதில்லை.  ஆனால் படிப்பு அப்படியா?  ஒவ்வொருவரும் ஒரு டிகிரியாவது முடிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்தானே?  இப்போது அது அவசிய தேவையாகவும் ஆகிவிட்டதுதானே?

மேலும் எனக்கு அடிக்கடி தோன்றும் ஒரு விஷயம் (இதை நான் வாதத்திற்காக எழுதவில்லை, உங்கள் கருத்தை அறியவே எழுதுகிறேன்), இப்படி தமிழ்நாட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட / சாத்தியப்படாத திறமையுள்ள அநேகம் பேர் (இதில் என் சமூகத்தை குறிப்பிடவில்லை, பொதுவாகவே சொல்கிறேன்) வெளி மாநிலங்களுக்கோ / நாடுகளுக்கோ வேலை தேடி ஓடிவிடுகிறார்களே?

இது தமிழ்நாட்டுக்கு இழப்பு இல்லையா?

அன்புடன்
*******
 -----------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பு நண்பருக்கு,

 //நீங்கள் சொல்வது வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீட்டிலா?  பள்ளியிலோ / கல்லூரியிலோ இது நடைமுறையில் இருப்பது போல் தெரியவில்லை.  //

பள்ளி / கல்லூரிக்கும் அது உண்டு. நான் படித்தபோது (நியாயமான) வருமானச் சான்றிதழ் பெற 30 ரூபாய் லஞ்சம் கேட்டார்கள். இப்போது எவ்வளவோ?

//படிப்பு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை இல்லையா?  அதிலேயே விரும்பிய படிப்பை படிக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமா?  ஒருவருக்கு விருப்பம் இல்லாததை வலியத் திணிப்பது எந்த விதத்தில் நியாயம்? //

உங்கள் கேள்வி நியாயமானது தான். முதலிலேயே சொன்னபடி10% மக்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாவது ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாததாக உள்ளது. நாம் மேலே விவாதித்தபடி, படிப்படியாக இடஒதுக்கீட்டு பயனாளர்கள் குறைக்கப்படுவதே இதற்கான தீர்வு.அதை கட்டாயமாக மாற்ற முடியாது. இயல்பாகவே அந்த மாற்றம் நடக்க வேண்டும்.

//இப்படி தமிழ்நாட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட / சாத்தியப்படாத திறமையுள்ள அநேகம் பேர் (இதில் என் சமூகத்தை குறிப்பிடவில்லை, பொதுவாகவே சொல்கிறேன்) வெளி மாநிலங்களுக்கோ நாடுகளுக்கோ வேலை தேடி ஓடிவிடுகிறார்களே?  இது தமிழ்நாட்டுக்கு இழப்பு இல்லையா? //

தமிழ்நாட்டில் பிரபல ஐ.டி.கம்பெனியில் என் நண்பன் ஒரு அமெரிக்க மருத்துவமனையை மேம்படுத்த புராஜக்ட் செய்துகொண்டிருக்கிறான். நான் சிங்கப்பூரில் ஒரு கப்பல் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்தேன். நாங்கள் கட்டிய கப்பல், நம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக, நம் கோதாவரி படுகையில் பெட்ரோல் எடுக்கிறது. இது தான் தாராளமயமாக்கலுக்குப் பின்னான இன்றைய நிலை. ஒருவன் இங்கேயே இருப்பதால், இந்தியாவை முன்னேற்றுகிறான் என்று அர்த்தம் இல்லை. வெளிநாட்டில் இருப்பதால், இந்தியாவிற்கு பயனில்லை என்றும் அர்த்தம் இல்லை. 

மேலும் இந்தியாவிற்கு அந்நிய முதலீட்டை அளிப்பதில் வெளிநாட்டுக்கு ஓடிப்போன மக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

மேலும், எல்லோருக்கும் இங்கேயே வேலை செய்யும் அளவிற்கு இங்கே வேலை வாய்ப்புகளும் இல்லையே..அது திரும்ப நம்மை 1980க்குத் தானே கொண்டு செல்லும்? அப்படிப் பல திறமைசாலிகள் ஓடியபின்னும் ‘இந்தியா - சீனா’ தான் அடுத்த பொருளாதார சக்திகள் என்றுதானே அந்த ஓடிப்போன திறமையாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாடுகளே சொல்கின்றன?

நான் வேலை பார்த்த வெளிநாடுகளில் என்னுடன் சீனாக்காரன், ஃபிலிப்பைன்ஸ்காரன், இங்கிலாந்துக்காரன் என பல்வேறு நாட்டுக்காரனும் ‘ஓடி வந்து’ வேலை செய்தார்கள்/செய்கிறார்கள். 

அதற்கு என்ன காரணம் சொல்வீர்கள்? அவர்களால் சீனா/ஃபிலிப்பைன்ஸ்/இங்கிலாந்து முன்னேற்றம் தடைபட்டுவிட்டது என்றா? அவர்கள் திறமையை வெளிப்படுத்த அங்கே வாய்ப்பில்லை என்றா?

இந்த ‘ஓட்டத்திற்கு’ அடிப்படைக் காரணம் துட்டு தானெயொழிய ‘திறமையை வெளிப்படுத்தும் அவா’ அல்ல. இங்கேயே மாதம் 2 லட்சம் சம்பளம்..ஒரு வேலையும் செய்ய வேண்டாம்..ப்ளாக் படித்தால் போதும் என்றால், ‘அதெல்லாம் முடியாது..நான் திறமையை வெளிப்படுத்தணும்’ என்று யாராவது ஓடுவார்களா என்ன?

அத்தகைய ஓட்டங்கள் எங்கும் நடப்பது, தவிர்க்க முடியாதது..திரைகடல் ஓடியும் திரவியம் தேடுதல் முற்காலத்தில் இருந்தே நடைபெறும் விஷயம்.

எனவே ஓட விரும்புவோர் ஓடட்டும். அதை அனுமதிப்பதும் ஜனநாயகம் தான்.

அன்புடன்
செங்கோவி

----------------------------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம் செங்கோவி!

//வேலை தேடி ஓடிவிடுகிறார்களே?//

இந்த ஓடிவிடுகிறார்கள் என்பதை நான் சாதாரண அர்த்தத்திலேயே சொன்னேன், நீங்கள் எதுவும் தவறாகப்புரிந்துகொள்ளவில்லையே?  நானும் வெளிநாட்டில் தான் வெளியிலேயே இருக்கிறேன்.  நான் சொன்னது எனக்கும் சேர்த்தே.

உண்மையிலேயே நான் இதை ஒரு கருத்துப் பரிமாறுதலாகத்தான் நினைக்கிறேன்.  முதலிலேயே சொன்னதுபோல் இதை இன்னும் ஆழமாகப்புரிந்து கொள்ளும் முயற்சிதான் இது.

//வெளிநாட்டில் இருப்பதால், இந்தியாவிற்கு பயனில்லை என்றும் அர்த்தம் இல்லை. மேலும் இந்தியாவிற்கு அந்நிய முதலீட்டை அளிப்பதில் வெளிநாட்டுக்கு ஓடிப்போன மக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. //

இது எனக்கும் புரிகிறது.  நான் இழப்பு என்றே குறிப்பிட்டிருந்தேன்.  அவர்களால் பயனில்லை என்று சொல்லவில்லையே.  வெறும் பணம் அதாவது அந்நிய முதலீடு மட்டும் வந்தால் போதுமா?  

உதாரணமாக இப்போது நாசாவில் வேலை பார்ப்பவர்களில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள்.  அதனால் அமெரிக்காதானே அதிக பலன் பெறுகிறது?  எந்த ஒரு துறையிலும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டாமா?  ஐ.டி. துறை நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கிறது, உண்மைதான்.  ஆனால் மற்ற துறைகள்? 

கட்டுமானத்துறையில் சிறந்த பலர் வெளிநாட்டில்தானே வேலை செய்கின்றனர்?  அவர்களை வைத்து இந்தியாவை மேம்படுத்த முடியாதா?  இந்தியா குடிசைகளால் நிரம்பியிருக்கக் காரணம் என்ன?  மருத்துவத்துறையை எடுத்துக்கொண்டால் இப்போது சோனியாவுக்கு மருத்துவம் பார்த்தவர் கூட ஒரு இந்தியர் என்று படித்தேன்.  புற்றுநோய் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதாக.  

ஆனால் இந்தியாவில் ஒரு அரசாங்க ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் டாக்டரின் தரம் உங்களுக்குத் தெரிந்ததுதானே?  நிறைய சிறந்த மருத்துவர்களும் இருக்கிறார்கள்.  நான் எல்லோரையும் சொல்லவில்லை.  ஆனால் பெரும்பான்மையானவர்கள்?  

இந்த அரசாங்க ஆஸ்பத்திரியில் போய்விட்டு ஒருமுறை அவதிப்பட்ட அனுபவத்தை வைத்தே இதை சொல்கிறேன். 

இதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன?

அன்புடன்,
********
----------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பு சகோ,

//வெறும் பணம் அதாவது அந்நிய முதலீடு மட்டும் வந்தால் போதுமா?  உதாரணமாக இப்போது நாசாவில் வேலை பார்ப்பவர்களில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள்.  அதனால் அமெரிக்காதானே அதிக பலன் பெறுகிறது?  எந்த ஒரு துறையிலும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டாமா?  //

வேண்டும் தான்..ஆனால் அமெரிக்கா அளவிற்கு விஞ்சானத்திற்கு செலவளிக்க நாம் இன்னும் தயாராகவில்லை. நமது மக்களின் அடிப்படைத் தேவைகளே தீர்க்கப்படாத நிலையில் அதிக நிதியை விஞ்சானத்திற்கு ஒதுக்குவது சாத்தியமும் அல்ல.

அவ்வாறு இருக்கும்போது, குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யுங்கள் என்று கட்டாயப்படுத்தவும் முடியாது. திறமையை வெளிப்படுத்த வாய்ப்பில்லாததால் மட்டுமே ஓடுவதாக உங்கள் கருத்து தொனித்தது. அதனாலேயே பணம் இந்த விஷயத்தில் முக்கிய காரணி என்று சொன்னேன்.

அப்துல் கலாம் போன்றோர் இங்கிருந்தே தன் திறமையை வெளிப்படுத்திய்வர்கள் தானே..

அவர்கள் ஓடுவதற்குக் காரணம் ஜாதி-இட ஒதுக்கீடு போன்றவற்றை விட அதிக சம்பளம் தர முடியாத, ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்க முடியாத நம் அரசின் நிதிநிலைமையே முக்கியக் காரணம். விண்வெளி ஆராய்ச்சியை விடவும் அடிப்படைக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்வது நம் வளர்ச்சிக்கு அவசியம்.

எனவே தான் சொன்னேன்..ஒடுவதும் தவறல்ல..அரசின் நிலையும் அப்படியே.

இருப்பினும், இவ்வாறு இங்கு படித்தோர் வேறு யாருக்கோ வேலை செய்வது அடிப்படையில் நமக்கு இழப்பு தான்.

நான் ஏற்கனவே சொன்னபடி, நாசா போன்ற இடங்களில் எல்லா நாட்டவருமே வேலை செய்கிறார்கள். எனவே இது இட ஒதுக்கீடு மட்டுமே சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. முழுக்க இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டாலும், ஓடுவதற்கு வேறு காரணங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்படும்.

மேலும், என்ன தான் ஒருவர் 50 வருடம் நாசாவில் இருந்தாலும் அவரை இந்தியன் என்று தானே நாமும் சொல்கிறோம், அமெரிக்கர்களும் சொல்கிறார்கள்.

நம்மால் என்ன சம்பளம்/நிதி ஒதுக்க முடியுமோ, அதைக்கொண்டு முன்னேற வழிவகைகளைப் பார்ப்பதே நல்லது. அதில் வரும்/வந்து கொண்டிருக்கும் முன்னேற்றமே போதுமானது. அமெரிக்கா போல் பொருளாதாரப் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளாமல் நாம் தப்பிக்க அதுவே உதவும்.

//இந்த அரசாங்க ஆஸ்பத்திரியில் போய்விட்டு ஒருமுறை அவதிப்பட்ட அனுபவத்தை வைத்தே இதை சொல்கிறேன். //

அரசு அலுவலகங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் போன்றவை சீர்திருத்தப்பட வேண்டியது அவசியம். ஆனால் அதற்கும் நம் விவாதப்பொருளான ‘ஜாதி-வர்ணம்-இட ஒதுக்கீட்டிற்கும்’ நேரடிச் சம்பந்தம் இல்லையே...அது எல்லா ஜாதிகளும் உணரும் பிரச்சினை தானே..

அன்புடன்
செங்கோவி


(தொடரும்)
மேலும் வாசிக்க... "பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_7"

Wednesday, November 23, 2011

பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_6

அன்பு நண்பர்களுக்கு,

சமூகங்களை வரலாற்றுப் பின்புலத்திலும், பொருளாதார அடிப்படையிலும், கல்வி கற்பதில் அவர்களுக்கு உள்ள சிரமத்தின் அடிப்படையிலும் ஆராய்ந்தபின்னரே, இடஒதுக்கீடு தேவை என்ற முடிவு எடுக்கப்பட்டது.

ஆனாலும், எல்லா பிராமண சாதிக்குடும்பங்களும் பொருளாதார ரீதியிலும், கல்வியிலும் நல்ல நிலைமையில் இருந்தவை அல்ல. இழவு வீட்டில் தோசம் கழித்து 50-100 வாங்கி சாப்பிட்டே கடைசிவரை வறுமையில் வாழ்ந்த அய்யரை எனக்குத் தெரியும். கணவன் சரியில்லாத நிலையில் இட்லிக்கடை வைத்துப் பிழைத்த மாமியும் எங்கள் பகுதியில் உண்டு.

பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தாலும், வசதியில் கல்வியில் முன்பே முன்னேறிவிட்ட குடும்பங்களும் இங்கு உண்டு. பெரிய பிஸினஸ்மேனின் பிள்ளைகூட அரசு வழங்கும் இலவச பாடப்புத்தகத்தை வாங்கிவிட்டு, அதை எடைக்குப்போட்டு காசு வாங்கி சினிமாவுக்குப் போன கதை நான் அறிவேன்.

ஆனால் இவையெல்லாம் சதவீத அடிப்படையில் பார்த்தால், மிகக்குறைவே. 1930களில் 90% பிராமண சமூகம் கல்வி கற்று நல்ல நிலையிலும், 90% பிற சமூகங்கள் கல்வியறிவற்று மோசமான நிலையிலும் இருந்ததால்தானே, இடஒதுக்கீடு கோரிக்கையே எழுந்தது?

ஜனநாய அரசு பெரும்பான்மை மக்களின் நிலையையே கணக்கில் கொள்ளும். அதுவே பல்வேறு சமுதாயங்கள் வாழும், சரியான ஜாதிமுறைக் கணக்கீடுகள் இல்லாத இந்தியாவில் சாத்தியம் ஆன விஷயம்.

அரசும் அத்தகைய வசதி படித்தோரை விலக்க, வருமானச் சான்றிதழ் பெறும் முறையை ஏற்கனவே வைத்துள்ளது. லஞ்சம் காரணமாக அது சரியானமுறையில் நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும், தற்போதைய கணிணி உலகில் வரி செலுத்துதல் ஆன் லைன் மயமாகிவிட்ட சூழலில், பெருவாரியான பிற்படுத்தப்பட்டோரை வடிகட்ட முடியும் என்றே நம்புகிறேன்.

அமைப்பு சாரா தொழிலில் உள்ளோரின் உண்மையான வருமானத்தை கணக்கிடுவதும், கண்காணிப்பதுமே இப்போதைய பிரச்சினை.

பெருவாரியான பிற்படுத்தப்பட்ட சமூகங்களை முன்னேற்றும் நோக்கிலேயே இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அந்த நோக்கம் சரியாக நிறைவேறிக்கொண்டிருக்கிறது என்பதற்கு அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து மேலெழுந்துவந்த விஞ்சானிகளே சாட்சி.

உண்மையில் இடஒதுக்கீடு நிரந்தரமான திட்டமாக கொண்டுவரப்படவில்லை. 10 வருடங்களுக்கு மட்டுமே என்று ஞாபகம். அதற்குள் இந்தச் சமூகங்கள் முன்னேறிவிடும் என்று நம்பப்பட்டது. 

ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வரலாற்று நோக்கில் 10 வருடம் என்பது சிறுதுளி.

என்னைப்பொறுத்தவரை இரண்டு தலைமுறைகளுக்காவது இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று நினைக்கின்றேன். அது தெளிவாக அவர்களுக்குச் சொல்லப்பட வேண்டும். 

ஆனாலும் தனிமனித உயர்வு என்பது எவ்வளவு சிக்கலானது என்பதை ஜோதிடம் அறிந்த நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவே 100% முன்னேற்றம் என்பது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்று. ஆனாலும் பெருவாரியான குடும்பங்களை முன்னேற்ற இடஒதுக்கீடு உதவவே செய்கிறது.

இரண்டு தலைமுறைகளாக இடஒதுக்கீடு போன்ற அரசு சலுகைகளை உபயோகித்து, மேலெழுந்துவிட்ட குடும்பங்கள், தங்களை இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கிக்கொள்ள வேண்டும். அதுவே அதே ஜாதியில் கீழ்நிலையில் வாழும் மக்களுக்கு, அவர்கள் செய்யும் கைம்மாறு.

நல்ல வேலையிலும், வசதியுடனும் உள்ள ஒருவர், இடஒதுக்கீட்டை உபயோகித்தால், முதலில் அவர் தன் ஜாதிக்கே கெடுதல் செய்கிறார். உண்மையில் அதற்கான எதிர்ப்புக்குரல் அந்த ஜாதிகளில் இருந்தே எழுந்து வரவேண்டும்.

வசதிபடைத்த பிற்படுத்தப்பட்டோரும் இட ஒதுக்கீட்டை உபயோகிப்பதால், இடஒதுக்கீட்டால் தங்களுக்கான வாய்ப்பு பறிக்கப்படுவதாக நீங்கள் புலம்புகிறீர்கள். உண்மையில் அவ்வாறு முதலில் புலம்ப வேண்டியதும் ,போராட வேண்டியதும் அந்த சமூகத்து அடித்தட்டு மக்கள் தான்.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சரியான முறை என்று நான் நினைக்கவில்லை. இன்று நல்ல வசதியுடன் இருக்கும் ஒருவர், ஓரிரு வருடங்களில் வீழ்ந்துவிடுவதை நாம் பார்க்க்கின்றோம். மேலும், இட ஒதுக்கீடு என்பதன் அடிப்படையே கல்விச்சூழலுக்குப் பழக்கமில்லாத சமூகங்களை சலுகை மூலம் முன்னேற்றுவதே.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கோருவோரிடம் பொதுவாக நான் ஒன்று கேட்பது உண்டு.

“நீங்கள் ஒரு வேலைக்கு/காலேஜ் சீட்டிற்கு அப்ளை செய்கிறீர்கள். 100 இடங்கள் அங்கு உள்ளன. உங்கள் ஜாதிக்கு இடஒதுக்கீட்டின்படி 5 இடங்களே ஒதுக்கப்படும். அங்கே உங்கள் ஜாதியைச் சேர்ந்த 50 பேர் வந்திருக்கிறார்கள். வசதியான 45 பேர் (நீங்கள் உட்பட) 90% மார்க்குடன் நிற்கிறீர்கள். வசதி குறைவான, வேலை செய்துகொண்டே படித்த பிராமண வீட்டுப் பிள்ளைகள் 5 பேர் 75% மார்க்குடன் வந்திருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் நீங்கள் பரந்த மனதுடன் அந்த வேலையை ஏழைப் பிராமணர்களுக்கு விட்டுக்கொடுப்பீர்களா?”

உங்கள் சமூகத்துப் பெரியவர்கள் / ஜாதிச் சங்கங்கள் மூலம் ‘இனிமேல் நம்மை விட பொருளாதாரத்தில் தாழ்ந்த பிராமணர் வந்தால், நாம் உடனே போட்டியில் இருந்து விலகி அவர்களுக்கு வழி விடுவோம்’ என்று ஒரு தீர்மானம் நிறைவேற்ற முடியுமா? அதற்கு பெருவாரியான வசதி + படித்த பிராமணக் குடும்பங்கள் என்ன எதிர்வினையாற்றும் என்று புரிகிறதல்லவா?

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டும் என்று தீவிரமாக பொதுமேடைகளில் பேசும் உங்கள் தலைவர்கள், வசதியானவர்களே. அவர்கள் தற்போதைய சமூகம் சார்ந்த இட ஒதுக்கீட்டுடன் பொருளாதார இடஒதுக்கீட்டையும் சேர்த்து நடைமுறைப்படுத்த குரல் கொடுப்பார்களா? ஏழைப் பிராமணருக்கு நீங்களே இடம் கொடுக்கவில்லையென்றால், பிற ஜாதியினர் எப்படி இடம் கொடுப்பார்கள்?

பொருளாதார இட ஒதுக்கீடு கோருவோரின் நோக்கம் இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழிப்பது தான். அதற்காகவே அவர்கள் பொருளாதார இடஒதுக்கீடு என்று கூக்கிரலிடுகிறார்கள். தற்போதைய நிலையில் பொதுப்பிரிவிலேயே ஏழ்மைநிலையில் உள்ள பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு கோரலாம்.

உண்மையில் இடஒதுக்கீடுத் திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய நேரம் தான் இது. இன்னும் சில வருடங்களில் வசதியான தன் ஜாதியினரை நோக்கி, ஏழை சாதியினர் தங்கள் வாய்ப்பு பறிக்கப்படுவதாக கூக்குரல் எழுப்பலாம். எழுப்ப வேண்டும்.

அதன்மூலமாக ஏற்கனவே இடஒதுக்கீட்டின் மூலம் கல்விச்சூழலுக்குள் வந்துவிட்ட குடும்பங்கள், பிற ஏழைக் குடும்பங்களுக்கு வழி விட வேண்டிய கட்டாயம் உருவாக்கப்படவேண்டும்.

பொருளாதார ரீதியில் மட்டுமே இடஒதுக்கீடு என்றல்லாமல் பொருளாதார ரீதியிலும் இட ஒதுக்கீடு என்பதே இப்போதைய தேவையென்று நினைக்கின்றேன்.

அனைத்து ஜாதிகளாலும், பிராமண ஜாதி உட்பட, இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தையும் முக்கியக் காரணியாக சேர்க்க போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அது நடைமுறைப்படுத்தப்பட்டால், தானாகவே பல குடும்பங்கள் இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கப்படும். அதன்மூலமாகவே இடஒதுக்கீட்டுப் பயனாளர்களைக் குறைக்க முடியும்.

அதுவே இடஒதுக்கீட்டு விகிதத்தை குறைக்கவும் வழிசெய்யும். அதுவே கொஞ்சம் கொஞ்சமாக உயர்வு தாழ்வற்ற சமுதாயமாக நம்மை மாற்றும்.

அன்புடன்
செங்கோவி


(தொடரும்)

மேலும் வாசிக்க... "பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_6"