Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, September 28, 2025

காந்தி முதல் விஜய் வரை...

கரூர் பெருந்துயரம். மக்களின் கதறல்கள் கலங்க வைக்கின்றன. 'இந்தியர்களுக்கு தன்னை ஆளத் தெரியாது. காட்டுமிராண்டிகள்' என்ற சர்ச்சிலின் வாக்கினை இன்னும் நாம் உண்மையாக்குகிறோமோ என்ற ஐயம் எழுகிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில் எப்போதெல்லாம் வன்முறை வெடிக்கிறதோ, மக்கள் கட்டுப்பாட்டை இழந்து வெறியாட்டம் ஆடுகிறார்களோ, அப்போதெல்லாம் காந்தி சுதந்திரப் போராட்டத்தை நிறுத்தினார். மக்களை ஜனநாயகத்திற்கு பழக்கப்படுத்துவது தான் முதல் கடமை என்று நினைத்தார்.
சர்ச்சில் சொன்னதில் உள்ள உண்மையை காந்தி உணர்ந்திருந்தார். வருடக்கணக்கில் கூட அவர் சுதந்திரப் போராட்டங்கள் ஏதும் செய்யாமல், மக்களை நல்வழிப்படுத்த அலைந்து திரிந்தார். அதனால் 'பிரிட்டாஷாரின் கைக்கூலி' என்று தீவிர எண்ணம் கொண்டோரால் பழிக்கப்பட்டார். அந்த வசைகளை பொருட்படுத்தாமல், ‘முதலில் சுதந்திரம் வாங்கி நாம் பதவியில் அமர்வோம்’ என்று நினைக்காமல் உழைத்ததால் இந்தியா எனும் தேசமும் காங்கிரஸ் எனும் பேரியக்கமும் உருவானது. காந்தியிடம் இருந்து பெரியார் பிரிந்தார். ஆனால் காந்திய வழிமுறைகளை எடுத்துக்கொண்டார். பதவி பற்றி எண்ணாமல், மக்களுக்கு முதலில் விழிப்புணர்வை ஊட்டினார். வலுவான திராவிடக் கட்டமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தார். பெரியாரிடம் இருந்து அண்ணா பிரிந்தார். ஏற்கனவே பெரியாரால் அரசியல்படுத்தப்பட்ட கூட்டம் அண்ணா பின்னால் நின்றது. அண்ணாவுக்குப் பின் அதே கூட்டம் கலைஞர் பின்னால் நின்றது. பின் எம்.ஜி.ஆர் அதே அரசியல்படுத்தப்பட்ட கூட்டத்தில் ஒரு பகுதியை தன்னுடன் கூட்டிக்கொண்டு, அதிமுக ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர் ஆரம்பித்தது புதுக்கட்சி அல்ல. ஏற்கனவே வலுவான கட்டமைப்பு இருந்த கட்சி தான் இரண்டாகப் பிரிந்தது. புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் குறைந்தது பத்து வருடங்களாவது கட்சி கட்டமைப்பை வளர்க்கவும், தொண்டர்களை நல்வழிப்படுத்தவும் உழைக்க வேண்டும். அல்லது கேப்டனின் வழியை பின்பற்றலாம். கேப்டன் கட்சி ஆரம்பித்தபோது, பண்ரொட்டி ராமச்சந்திரன் போன்ற பிற கட்சி சீனியர்களை தன் கட்சிக்குள் கொண்டுவந்தார். அவரது ரசிகர் மன்றக் கட்டமைப்பும் மூத்தோரின் அனுபவமும் சேர்ந்தபோது, அரசியல்கட்சியாக தேமுதிக உருமாறியது. அரசியல் என்பது அதிகாரம் மட்டும் அல்ல. தன்னை நம்பும் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடும் விளையாட்டு. இதைத் தான் விஜய் போன்ற புதுக்கட்சிகளின் தலைவர் முதல் தொண்டர்வரை மனதில் நிறுத்த வேண்டும். முதலில் உங்களை தகுதிப்படுத்திக்கொள்ளுங்கள். பதவி தேடி வரும்.
மேலும் வாசிக்க... "காந்தி முதல் விஜய் வரை..."

Thursday, June 14, 2012

குரங்கு கையில் சிக்கிய பூமாலை - ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்

பொதுவாகவே நமது பிரதமர் மன்மோகன்சிங்கின் மத்திய அரசு, அடிப்படை மக்களின் பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்பாடாத, ஷேர் மார்க்கெட் இண்டெக்ஸ் மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளம் என்று செயல்படும் அரசு. ஆனால் பல மாநிலங்களின் விவசாயிகளின் தற்கொலைகள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, நூறு நாட்கள்-ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்ற நல்ல திட்டத்தை அதிசயமாக அறிமுகப்படுத்தியது மன்மோகன் அரசு.

விவசாயக் கூலிகளுக்கு வருடத்தில் எல்லா நாட்களுமே வேலை இருப்பதில்லை. இடையில் வேலையில்லாமல் இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு மத்திய அரசே வேலை கொடுக்கும் திட்டம் இது. கிராமப்புற நீர்நிலைகளை தூர்வாருதல், கரைகளை மேம்படுத்தல் போன்ற பணிகளை பொதுவாக தனியாருக்கு காண்ட்ராக் விடுவது வழக்கம். அவர்கள் லஞ்சம்/ஊழல் போக, மீதிப் பணத்தில் ஏதோ கொஞ்சம் வேலையை முடிப்பார்கள். எனவே அதற்குப் பதிலாக அந்தப் பகுதி மக்களிடமே அந்த வேலையைக் கொடுத்துவிட்டால், தன் சொந்த ஊரின் நலனுக்காக அக்கறையுடன் வேலை செய்வர். ’வேலையற்ற விவசாயிகளுக்கு வேலை கொடுத்த மாதிரியும் ஆச்சு, காண்ட்ராக்ட்டில் நடக்கும் தில்லுமுல்லுகளை ஒழித்த மாதிரியும் ஆச்சு’ என்ற நல்ல சிந்தனையுடன் கொண்டுவரப்பட்டது இந்தத் திட்டம். ஆனால் உண்மையில் நடப்பது என்ன?


ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்தால், 100 ரூபாய் கூலி தர வேண்டும். நேர்மையின் சிகரமான நம் அதிகாரிகளும் பஞ்சாயத்து தலைவர்/உறுப்பினர்களும், மக்களுக்கு அருமையான ஆஃபர் வழங்கினார்கள். ‘நீங்கள் வேலையே செய்ய வேண்டாம். 70 ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்.மீதியை நாங்கள் பங்கிட்டுக்கொள்கிறோம்’ என்பதே அந்த ஆஃபர். அதைக்கேட்டு நம் மக்கள் கொதித்தெழுந்தார்கள். ‘வேலையே செய்ய வேண்டாம் என்பது சரி.ஆனால் 30ரூபாயை எடுத்துக்கொள்வது எந்த வகையில் நியாயம்?’ என்று கேட்டு எங்கள் பகுதி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதன்பின் அதிகாரிகள் இறங்கி வந்தார்கள். 80 ரூபாயில் பேரம் படிந்தது.

இப்போது தினமும் காலையில் 150க்கும் மேற்பட்ட மக்கள் சரியான நேரத்தில் ஆஜராகிறார்கள். அவர்கள் வேலை செய்ய வேண்டிய பகுதி நிலத்தில் கோடு போட்டு பிரித்துக் கொடுக்கப்படுகிறது.  அதை கொஞ்ச நேரம் சும்மா கொத்த வேண்டும்..இரண்டு சட்டி மண்ணை அள்ளி பக்கத்தில் எங்கேயோ போட வேண்டும். (அதை ரோடு ஓரம் போட்டு, மழை நேரத்தில் மினி பஸ் சேற்றில் சிக்கிய கூத்தும் நடந்தது). அவ்வளவு தான் வேலை. பிறகு அருகில் இருக்கும் மரத்தடியில் உட்கார்ந்து கொள்ளலாம். வீட்டிற்கும் போய்க்கொள்ளலாம். இன்ஸ்பெக்சனுக்கு மேல்அதிகாரிகள் வரும்போது மட்டும் அனைவரும் சின்சியராக நடிக்க வேண்டும். இதுவே திட்டம் செயல்படுத்தப்படும் முறை.

’தன் சொந்த மண்ணாயிற்றே..அதனை மேம்படுத்துவது நம் பணியாயிற்றே’ என்ற அக்கறையோ புரிதலோ இந்த மக்களுக்கு இல்லாமல் போனது ஆச்சரியமாக உள்ளது. மக்களே ஊழல்வாதிகள் ஆகிப்போன கொடுமை தான் தாங்க முடியாததாக உள்ளது. ‘கவர்மெண்ட் காசு தானே..காவ்ர்மெண்ட் வேலை தானே’ என்ற அலட்சிய மனோபாவம் அடித்தட்டு மக்கள் வரை பரவியுள்ளது. இவர்களைப் பார்க்கும் இவர்களது குழந்தைகளின் மனதிலும் ‘நாளைக்கு படித்துவிட்டு, அரசு வேலைகளுக்குப் போனாலோ, படிக்காமல் அரசியல்வாதியாகப் போனாலோ இப்படித் தான் நடந்து கொள்ளவேண்டும்’ என்றல்லவா பதிந்து விடும்? ‘அன்னிக்கு திடீர்னு செக் பண்ண ஆபீசருங்க வந்துட்டாங்க மாமா..அம்மா வீட்டுல இருந்து திடுதிடுன்னு ஓடுனா..ஹா..ஹா’ என்று ஒரு பிள்ளை சொல்வதைக் கேட்டபோது கஷ்டமாக இருந்தது. லட்சக்கணக்கான கோடிகளில் நடக்கும் ஊழல்களைவிட, இந்த 30 ரூபாய் ஊழல் விளைவிக்கும் சமூகக்கேடு அதிகம்.

சொந்த மக்களின் முன், சொந்தக் குழந்தைகளின் முன் திருடர்களாக வாழ்வதும், அதைப் பற்றிய பிரக்ஞை கிஞ்சித்தும் நம் மக்களுக்கு இல்லாமல் போனதும் தான் கொடுமை. சமூகரீதில் இத்தகைய பாதிப்பு என்றால், தொழில்ரீதியில் இந்தத் திட்டம் கொடுக்கும் பாதிப்பு மிகமிக அதிகம். வருடத்திற்கு 100 நாள் மட்டுமே என்று இருந்த இந்தத் திட்டம், திடீரென வருடம் முழுமைக்கும் விரிவுபடுத்தப் பட்டது. 


என் மாமா ஒருவர் விவசாயி. நெல் பயிரிட்டு விட்டார். நெல் விளைந்ததும் அறுக்க வேண்டும். வேலைக்கு ஆட்களைக் கூப்பிட்டால், யாரும் வரத் தயாரில்லை. (விவசாய வேலைகள் இல்லாத நேரம் மட்டுமே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது விதி...ஆனால் நம் விதி?) ‘சும்மா உட்கார்றதுக்கே 80 ரூபாய் தர்றாங்க..நாங்க எதுக்கு வேலைக்கு வரணும்?’ என்று மக்களே கேட்டபோது மாமா நொந்து போனார். பிறகு பஞ்சாயத்து தலைவரைப் பார்த்து கெஞ்சி ‘அய்யா..ஏதாவது வேணும்னா வாங்கிக்கோங்க..ரெண்டு நாளைக்கு உங்க திட்டத்தை நிறுத்தி வைங்க’ என்று சொன்னபிறகு, அந்த அருமையான திட்டம் இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் பெரும் சிக்கலை உண்டாக்கியுள்ளது இந்தத் திட்டம். விவசாயிகள் நலனுக்கு என்று கொண்டு வரப்பட்ட திட்டம், விவசாயத்திற்கே ஆபத்தாக ஆனதை என்னவென்பது? எங்கள் பகுதியில் உள்ள தீப்பெட்டி/பட்டாசுத் தொழில்களும் இதனால் நசித்துப்போகும் நிலைமை.


பொதுவாக நாட்டில் நடக்கும் ஊழலை வெளிக்கொண்டுவரும் சில கட்சிகளும் அமைப்புகளும் மீடியாக்களும் இதைப் பற்றிப் பேசுவதேயில்லை. சென்ற மாதம் பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ‘தமிழகத்தில் இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு 2500 கோடி ரூபாய் ஒதுக்கினோம். இந்த ஆண்டு 5000 கோடி ரூபாய் ஒதுக்கவுள்ளோம்’ என்று சொல்லியுள்ளார். ’விவசாயம்னு ஒன்னு இருந்தாத் தானே விவசாயக்கூலிகள் பிரச்சினை வரும்? எப்படியாவது விவசாயத்தை ஒழிச்சிடுவோம்’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்களோ என்று தோன்றுகிறது.

பொதுநல அமைப்புகள் யாராவது இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கி, விவசாயிகளைக் காப்பது அவசியம். இல்லையென்றால் தக்காளி கிலோ 200 ரூபாய்க்கு வாங்க வேண்டிய நிலை வருவது நிச்சயம்.

மேலும் வாசிக்க... "குரங்கு கையில் சிக்கிய பூமாலை - ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்"

Saturday, August 27, 2011

ராஜீவ் உயிருக்கு ஈடாக இன்னும் எத்தனை உயிர்கள் தேவை?

’எங்கள் தேசத்தலைவரைக் கொன்றுவிட்டு எங்களிடமே நியாயம் கேட்கின்றீர்களா, சொரணைகெட்டவர்களே’ - சமீபத்தில் ஒரு இணையதளத்தில் ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்குதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், மதி.சாந்தன் ஆகியோர் பற்றிய கட்டுரைக்கு வந்த பின்னூட்டம் அது.

அந்தப் பின்னூட்டம் எனது டெல்லி வாழ்க்கையில் நான் சந்தித்த வட இந்தியர்களின் மனநிலையை அப்படியே பிரதிபலிப்பதாய் அமைந்தது. ஆங்கில செய்தித்தாள்களையே படிக்கும் என் சக அலுவலுக நண்பன், இறுதிக்கட்டப்போரில் முள்ளிவாய்க்கால் வீழ்ந்த செய்தி பார்த்துவிட்டு ‘இனி செத்தாங்க. ஒருத்தன்கூட உயிரோட இருக்கக்கூடாது. எங்க ராஜீவையே கொன்னீங்கள்ல..சாவுங்கடா” என்றான். அருகில் இருந்த எனக்கு கோபம் சுரீர் என்று வர “இங்கே கசாப் வீடு புகுந்து சுடுகின்றான்..பாராளுமன்றத்துக்குள்ளேயே தாக்குதல் நடத்துகின்றார்கள். பாகிஸ்தானை ஒடுக்க துப்பில்லாத நம் அரசு, அங்கு மட்டும் பாய்ந்து குதறுவது ஏன்? அங்கு இறப்பது புலிகள் மட்டுமே அல்ல..அப்பாவி மக்களும். அதை நினைவில் வை” என்று வாதத்தில் இறங்கினேன். அவனும் பதில் பேச ரசாபாசம் ஆயிற்று. முடிவில் இவனும் இயக்கத்து ஆளோ என்ற சந்தேகத்துடன் எல்லோரும் பார்க்கும் நிலையே எனக்கு வந்து சேர்ந்தது.

அந்த பின்னூட்டமும், வட இந்திய நண்பனும் பிரதிபலிப்பது ஒட்டுமொத்த சாமானிய இந்தியர்களின் மனோபாவத்தையே. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ‘ராஜீவைக் கொன்னுட்டாங்க. பதிலுக்கு அவங்களை தண்டிக்கணும்’ எனப்தே. மற்றபடி ஈழப்போராட்ட வரலாறு பற்றியோ, ராஜீவ் கொலை வழக்கு விசாரணை பற்றியோ அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. தமிழர்களின் மனநிலையும் இனப்படுகொலை வரை அதுவாகவே இருந்தது. இப்போதும் பெருவாரியான மக்கள் ‘ராஜீவை கொன்னது தப்பு தானே..அப்போ தண்டிக்கப்பட வேண்டியது தான்’ என்றே நினைக்கின்றனர். அவர்களை நோக்கியே நாம் இப்போது பேச வேண்டியது அவசியம்.

ராஜீவ் கொலை என்பது அந்த வகையில் புலிகளின் அரசியல் தற்கொலையே. அரசியல்ரீதியாக அவர்கள் தனிமைப்பட்டுப் போக, அதுவே முக்கியக் காரணம் ஆயிற்று. நியாயரீதியில் புலிகள் தரப்பில் காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், செப்டம்பர் 11க்குப் பின் மாறிவிட்ட உலக அரசியல் சூழலில் புலிகளை வெறும் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தி முடக்க ராஜீவ் கொலையே முக்கிய ஆயுதம் ஆயிற்று.

முதலில் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது ராஜீவ் கொலைவழக்கின் விசாரணை இன்னும் முடிந்துவிடவில்லை, அது பாதியிலேயே விடை தெரியாத பல கேள்விகளுடன் நிற்கின்றது என்பதையே. ஏதோ எல்லோரையும் விசாரித்து முடித்து இறுதித் தீர்ப்பாக இந்த தூக்குதண்டனை வழங்கப்பட்டுவிடவில்லை.

மூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் 1991ம் வருடமே ராஜீவ் கொலை பற்றிய நீதிமன்ற விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகளை தமிழன் எக்ஸ்பிரசில் எழுதினார். இன்னும் அதற்கு நம் புலனாய்வு அமைப்பு விடை கண்டுபிடிப்படாத நிலையில் மேலும் பல கேள்விகள் இங்கே இருந்தும் வந்து சேர்ந்தது.

இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படைக் கேள்விகள் இவையே :

1. ராஜீவின் அனைத்துப் பொதுக்கூட்டங்களிலும் முண்டியடித்துக்கொண்டு, அவருடன் நின்று போஸ் கொடுத்து தன் கோஷ்டியை வலுப்படுத்திகொள்ளும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், சரியாக குண்டு வெடிக்கும் நேரம் ராஜீவை தனியே விட்டது ஏன்? ராஜீவின் நிகழ்ச்சி நிரலில் முதலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூர், திடீரென சேர்க்கப்பட்டது ஏன்?

2. ராஜீவ் 1991 மே 21ல் கொலை செய்யப்படுகிறார். அதற்கு முந்தைய நாள் இரவு சேலம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சுப்பிரமணியசாமி, அவசராவசரமாக டெல்லி செல்ல வேண்டும் என்று கூறிவிட்டுக் கிளம்பினார். ஆனால் மறுநாள் வரை அவர் டெல்லி செல்லவில்லை. இடையில் அவர் சென்றது எங்கே? சந்திராசாமியை சென்னையில் சந்தித்ததாகவும், இருவரும் பெங்களூர் சென்றதாகவும் ஜெயின் கமிசனில் எழுந்த குற்றச்சாட்டுக்கு இன்று வரை சுவாமி பதிலளிக்கவில்லை. அவர்கள் பெங்களூர் சென்றது சிவராசன் குழுவினர் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவா?

3. சந்திராசாமியின் பின்புலத்தில், கர்நாடக காங்கிரஸ்காரரான மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?

4. ராஜீவ் கொலை நடந்தது இரவு 10.10 மணிக்கு. மூப்பனார் மற்றும் ஜெயந்தி நடராஜனால் ராஜீவ் உடல் கண்டெடுக்கப்பட்டு, அவர் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது 10.40 மணிக்கு. ஆனால் 10.25க்கு தன் கட்சிக்காரர் திருச்சி வேலுச்சாமியிடம் ஃபோனில் பேசிய சுப்பிரமணியசாமி ‘ராஜீவ் செத்துட்டார்?’ என்கிறார்.இந்தியாவில் யாருக்குமே தெரியாத அந்தத் தகவல் சுவாமிக்கு தெரிந்தது எப்படி? ஜெயின் கமிசன் விசாரணையில் இந்த விசயம் கேட்கப்பட்டபோது ‘இலங்கையில் இருந்து ஒரு நபர் தகவல் கொடுத்ததாகச் சொன்னார். அது யார், ஏன் குறிப்பாக சுவாமிக்கு தகவல் கொடுத்தனர் என்று கேட்டதற்கு பதில் இல்லை.ஏன்?

5. ’ராஜீவ் கொலை பற்றி முன்னரே சோனியாவுக்குத் தெரியும்’ என்று சுப்பிரமணியசுவாமியே ஒரு பேட்டியில் சொன்னார். மற்றவர்கள் மேல் பொடா/தடா பாய்ச்சும் காங்கிரஸ், இதைக்கேட்டபின்னும் சுவாமியை ராஜீவ் கொலை வழக்கில் விசாரிக்க பயந்தது ஏன்?

6. சாதாரண குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவரையே வெளிநாடு செல்ல அனுமதிக்காத அரசு, இந்த முக்கிய வழக்கில் சம்பந்தப்பட்ட சந்திராசாமி 2007ல் வெளிநாட்டுக்கு ஓட அனுமதித்தது ஏன்?

7. ஜெயின் கமிசன் ‘ சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை மேலும் விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லையே..ஏன்?

8. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை? அமெரிக்க சி.ஐ.ஏ. ஏஜண்ட் என்று வர்ணிக்கப்படும் சுப்பிரமணிய சுவாமியின் பங்கும் இதில் உறுதிப்பட்ட நிலையில். அமெரிக்க சதி பற்றி ஏன் விசாரிக்கவில்லை? இந்திய அரசு பயந்ததா?

9. அப்போதைய காங்கிரஸ் கூட்டாளியான ஜெயலலிதாவிற்கு, ராஜீவ் கொலை பற்றி முன்னரே தெரியுமா?

மேலதிக கேள்விகளை எழுப்பும் முன்னாள் சிபிஐ அதிகாரியின் வீடியோ பேட்டி இங்கே!

ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் ஏற்றுவது சரி தானே என்று எண்ணிக்கொண்டிருக்கும் இந்தியர்கள், இந்த விரிவான பின்புலத்தில் இந்தத் தீர்ப்பின் அபத்தத்தைப் பார்க்க வேண்டியது அவசியம். சந்திரசாமி, சுப்பிரமணியசாமி என்று ஆரம்பிக்கும் குற்றவாளிகள் பட்டியல், விடுதலைப்புலிகள், பிற விடுதலை அமைப்புகள், அமெரிக்க சி.ஐ.ஏ. என்று நீள்வதைக் கவனியுங்கள். இவர்களை விசாரிக்க தைரியமற்ற நமது புலனாய்வு அமைப்பு, இந்த வழக்கை இழுத்து மூட கொடுக்கும் பலியே இந்த மூன்று உயிர்கள்.

இந்தத் தண்டனை ராஜீவ் கொலையாளிகளை தண்டிக்க அல்ல, உண்மையான கொலையாளிகளை தப்புவிக்கவே என்பதை நாம் உணர்வோம்.இந்த தண்டனை நிறைவேற்றல் மூலமாக காங்கிரஸ் பல அரசியல் காய்களை நகர்த்துகின்றது.

முதலாவது அன்னா ஹாசாரேயால் உருவாகியுள்ள சலசலப்பை அடக்க, மீடியாவை திசை திருப்ப இது உபயோகமாகும்.

ராஜீவ் கொலையாளிகள் தண்டிக்கபடவேண்டும் என்று நினைக்கும் பெருவாரியான இந்தியர்களை திருப்திப்படுத்த இது உதவும்.அடிவாங்கி இருக்கும் காங்கிரஸ் இமேஜை இது சரி செய்யலாம்.

தமிழகத்தில் புதிதாக ஈழத்தாய் அவதாரம் எடுத்து, காங்கிரஸ்க்கு பெரிய குடைச்சல் கொடுக்கும் ஜெயலலிதாவிற்கு வைக்கப்படும் செக் ஆக இது இருக்கலாம். மேலே எழுப்பப்பட்ட கடைசிக்கேள்விக்கான விடையில் அடங்கியுள்ளது ஜெ.வின் எதிர்வினை.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றால்,அது மேல்மட்டத்தில் இருந்து ஆரம்பிக்கட்டும். பேரறிவாளன் இரண்டு பேட்டரிகளை மே முதல் வாரத்தில் வாங்கினாராம். சிவராசனுக்கு அதை கொடுத்திருக்கலாம் எனபது குற்றச்சாட்டு. இந்த கொலை பற்றி சிவராசன், தானு தவிர வேறு யாருக்கும் கடைசிவரை தெரியாது என்பதே நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்படும் விஷயம். அப்படி இருக்க, பேரரறிவாளன் அறியாமல் செய்த விஷயமாகவே இது ஆகிறது.

ஈழ விடுதலை அமைப்புகளுக்கு பெட்ரோல் முதல் ஆயுதங்கள் வரை தமிழகத்தில் இருந்து சப்ளை ஆகிக்கொண்டிருந்த நேரம் அது. அந்த நேரத்தில் ஒரு இலங்கைத் தமிழருக்கு பேட்டரி வாங்கித் தந்தவருக்கு தூக்கா? (அந்த பேட்டரியை சிவராசனிடம் கொடுத்தார் என்பதற்கும் ஆதாரம் இல்லை..அது யூகமே!)

நமது நண்பர், சக பதிவர் மதி.சுதாவின் அண்ணனான குற்றம்சாட்டப்படுள்ள சாந்தன், வெளிநாடு செல்வதற்காக இந்தியாவுக்கு கடல்வழியாக வந்தவர். அப்போது ஈழத்தமிழர்கள் அவ்வாரு வருவது நம் அரசாங்களாலேயே கண்டுகொள்ளப்பாடாமல் இருந்த விஷயம். வெளிநாடு செல்லவேண்டும், தன் குடும்பநிலையை உயர்த்த வேண்டும் என நம்மைப் போன்றே எண்ணிய சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் அவர். அவர் இந்தியாவில் ஆவணங்கள் இன்றி நுழைந்த ஒரே காரணத்தினாலேயே இறந்துவிட்ட வேறு சாந்தனுக்குப் பதிலாக பலிகடா ஆக்கப்பட்டவர் அவர்.

இந்த வழக்கை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்திய ஆட்சியாளர்கள்/அதிகார வர்க்கம் ஆரம்பம் முதலே முனைப்புடன் செயல்படுகிறது. புலி பற்றிய பயத்தில் பிதற்றாமல், அந்த எளிய உயிர்களின் மேல் உங்கள் கவனத்தை வைக்கவேண்டிய நேரம் இது. இங்கு நீதி நிலைநாட்டப்படவில்லை, குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது என்பதை உணருங்கள்.

இப்போது தமிழக முதல்வர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதை நிறுத்தக்கோர முடியும் என்கிறார்கள். வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட இன உணர்வாளர்கள் இந்த விஷயத்தை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர். நீங்கள் சார்ந்துள்ள / சாராத அமைப்புக்கு இந்த விஷயத்தில் நியாயத்தின் அடிப்படையில் உங்கள் தார்மீக ஆதரவைத் தாருங்கள்.
நன்றி!
மேலும் வாசிக்க... "ராஜீவ் உயிருக்கு ஈடாக இன்னும் எத்தனை உயிர்கள் தேவை?"

Monday, August 15, 2011

ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் டைரியில் இருந்து...(சுதந்திர தின ஸ்பெஷல்)

எனக்கு இன்று திரு. முத்துக்கிருஷ்ணன் (லால்குடி) அவர்களிடம் இருந்து சுதந்திர தின வாழ்த்துச் செய்தி வந்து சேர்ந்தது. அதனைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். காரணம், அன்னாரின் தந்தையார் ஒரு காந்தியவாதி என்பதும், சுதந்திரப் போராட்டத் தியாகி என்பதுமே. அடிப்படையில் காந்திய வாதியான எனக்கு சுதந்திர தினப் போனஸாக அவரது தந்தையின் போராட்ட அனுபவம் பற்றிய நாட்குறிப்பை அனுப்பி இருந்தார்கள். 


அந்தப் போராட்ட நாட்களில் சாதிமத வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையாகக் கட்டுப் பாட்டுடன் காந்தியடிகளின் தலைமையின் கீழ் எவ்வாறு இயங்கினர் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. அதுவே நமக்கு வழிகாட்டியும் ஆகும்..எனது தள வாசகர்களும் அறியும் வண்ணம் ஐயாவின் அனுமதியுடன் இங்கே அதைப் பிரசுரிக்கின்றேன்...

திரு.காந்திஆசிரமம் கிருஷ்ணன் அவர்களின் நாட்குறிப்பில் இருந்து...

 நான் காந்தி ஆசிரமத்தில் சேர முடிவு செய்ததே அதன் மூலம் சத்தியாக் கிரகம் செய்து சிறை செல்வது என்ற எண்ணத்தில்தான். உப்பு சத்தியாக்கிரக காலத்தில் 1930 - 31 இல் எனக்கு சிறை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 1932ம் வருட இயக்கத்தில் ஆங்காங்கே பலர் சிறை சென்று கொண்டிருந்தனர். ஆசிரம ஊழியர்கள் சிலரும் சிறை சென்று விட்டனர்.

திரு.கே.மாரப்ப கவுண்டர் நாமக்கல்லில் காந்தி ஆசிரம கதர் விற்பனை ஏஜன்டாக இருந்தார். அவருடன்தான் நான் தங்கியிருந்தேன். இயக்கத்தை மேற்கொண்டு எப்படித் தொடர்ந்து நடத்துவது என்று அங்குள்ள தேச பக்தர்கள் ஆலோசித்து வந்தார்கள். நாமக்கல் மாரியம்மன் கோவிலுக்கு எதிரே காங்கிரஸ் ஆபீஸ். அங்கு தினமும் கூடி ஆலோசித்தோம்.

ஒரு குறிப்பிட்ட நாளில் சில பேர் சேர்ந்து தேசியப் பாடல்களைப் பாடிக் கொண்டு ஊர்வலமாகச் சென்று கடை வீதியில் அன்னிய துணிக்கடைகளின் முன் சாத்விக மறியல் செய்வதெனத் தீர்மானித்து, மாவட்ட கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரி, நாமக்கல் இன்ஸ்பெக்டர் முதலியோருக்கு தேதி, இடம், நேரம் எல்லாம் குறிப்பிட்டுக் கடிதம் எழுதித் தபாலில் சேர்த்தோம். 1932 பிப்ரவரி மாதம் முதல் அல்லது இரண்டாவது சனிக்கிழமை  பிற்பகல் 3 30 மணிக்கு மாரியம்மன் கோவிலிலிருந்து புறப்படுவதாக அறிவிப்பு செய்திருந்தோம்.

எங்கள் குழுவுக்குத் தலைவர் 1) திரு. வரதராஜ முதலியார். இவர் நாமக்கல்லில் யூனியன் பிரஸ் என்ற அச்சகத்தின் உரிமையாளர்.2)திரு.சந்தான முதலியார் - இவர் சில தறிகள் வைத்து நடத்தி வந்தார்.3)திரு.கணபதி முதலியார்- இவர் தவில் வித்வான்.உலகப்புகழ் பெற்ற‌  நாகஸ்வர வித்வான் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் தாய் மாமன். 4)அடியேன் அ. கிருஷ்ணன் (நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவன்.)5) திரு.அப்துல் கஃபார் - இவர் முகம்மது ஊஸ்மானின் (ஏற்கனவே சிறை சென்றவர்) இளையவர்.6) திரு. அனுமந்த ராவ்.(ஹனுமி என்று அழைக்கப்பட்டவர்), பின்னாட்களில் லாரி புரோக்கராகவும், லாரி டிரைவராகவும் வேலை பார்த்தவர். 7) திரு.என் ஏ. கிருஷ்ணமூர்த்தி - இவர் பின்னாட்களில் எல்.ஐ.சி ஏஜன்டாக இருந்தார். 8) திரு.காசி விஸ்வநாதப் பண்டாரம் - (இவர் பின்னாட்களில் திராவிட கழகத்தில் சேர்ந்தார்).  முதல் மூன்று பேர்களும் அந்நாளிலேயே நாற்பது வயதைத் தாண்டியவர்கள். குடும்பஸ்தர்கள். மற்றவர்கள் 25 வயதுக்குட்பட்டவர்கள்.

 நாங்கள் அறிவிப்பு அனுப்பியதின் பேரில், அந்த மூன்று பெரியவர்களையும் தனித் தனியாக அவர்களின் வீடுகளில் சென்று, காவல் துறையினர் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டாமென்றும், இனி யாராயிருந்தாலும் கைது செய்ய வேண்டாமென்றும் அவர்களை அடித்துத் துரத்த வேண்டுமென்றும் மேலிடத்து உத்திரவு வந்திருப்பதாகவும், ஆகவே தங்களுக்குத் தர்மசங்கடமான நிலை இருப்பதாகவும், சத்தியாக்கிரகம் செய்ய வேண்டாமென்றும், இன்ஸ்பெக்டர் சொல்லி அனுப்பியதாகவும் தெரிவித்தனர்.

சப் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி அய்யங்கார், என்னை மாரப்ப கவுண்டர் வீட்டில் சந்தித்து 'ஏம்ப்பா! எங்க கழுத்தை அறுக்கிறே!, திருச்செங்கோட்டிலே சத்தியாக்கிரகம் பண்ணுவதுதானே, இங்கு ஏன் வந்து தொந்தரவு கொடுக்கிறே? உன் பிடிவாதத்தால்தானே அந்த மூன்று முதலியார்களும் பிடிவாதமாக இருக்கிறார்கள்!உங்களையெல்லாம் அடித்துத் துரத்தும்படி சர்க்கார் உத்திரவு. இன்ஸ்பெக்டரும் தெய்வ பக்தி உடையவர்; சங்கடப்படுகிறார். எனக்கோ ஒரே பிள்ளை. உங்களையெல்லாம் எப்படி நானடிப்பேன்? ஆகையினால் அந்த முதலியார்களிடமும் சொல்லி திட்டமிட்ட சத்தியாக்கிரகத்தைக் கைவிடுங்கள்' என்று கெஞ்சாத குறையாகக் கேட்டுக் கொண்டார்.

நாங்கள் முன் வைத்த காலைப் பின் வாங்குவ தில்லையென்று தீர்மானித்து விட்டோம்.  நாமக்கல் ஊரில், சனிக்கிழமை வாராந்திர சந்தை தினம். நாங்கள் திட்டமிட்டபடி பிற்பகல் மூன்றரை மணிக்கு 8 பேர்களும், 'வந்தே மாதரம்!' 'அல்லாஹூஅக்பர்' 'மகாதமா காந்திஜிக்கு ஜே!' என்ற கோஷங்கள் எழுப்பிக் கொண்டு, மாரியம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டோம். அதற்கடுத்த பத்து கஜ தூரத்தில், கிராம முன்சீஃப் சாவடி, PWD Section Office, Girls High School போன்றவை இருந்தன. அன்பர்கள் சுமார் 200 பேர்களுக்கு மேல் கூடியிருந்து எங்களை உற்சாகப்படுத்தி, வழியனுப்பி வைத்தனர். ஆனால், PWD Section Office முன்னிலையில், ஒரு மேஜை போட்டு அதன் மேல் ஒரு நாற்காலியில், சப் மாஜிஸ்ட்ரேட் திரு ராமஸ்வாமி நாயுடு உடகார்ந்திருந்தார்.

அவருக்கு இடப்புறமும், வலப்புறமுமாக போலீஸ் இன்ஸ்பெக்டரும், சப் இன்ஸ்பெக்டரும் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தனர். 16 போலீஸ்காரர்கள் போலீஸ் உடையில், ரோட்டை மறித்து சுவர் வைத்தாற் போல் கையில் அரை அங்குல விட்டமும் நாலடி நீளமும் உள்ள பிரம்புகள் கையில் தாங்கி நின்று கொண்டிருந்தனர். சாதாரண உடையில் சி.ஐ.டி. போலீஸ்காரர்கள் சிலர் கூட்டத்தினிடையே கலந்து நின்றனர். போலீஸ் ரைட்டர், சப்மாஜிஸ்ட்ரேட் ஆபீஸ் குமாஸ்தாக்கள் இருவர், கையில் நோட்டுப்புஸ்தகங்களுடன் நின்று கொண்டிருந்தனர். எங்களை மேலே செல்லவொட்டாமல், 16 போலீசாரும், நின்று கொண்டனர். அவர்களை நெருங்கியதும் ஒரு போலீஸ் விசில் பெரிய சத்தத்துடன் கேட்டது. உடனே சப் இன்ஸ்பெக்டர், “இது சட்ட விரோதமான செயல். 144 சட்டத்தை மீறுகிறீர்கள். ஐந்து நிமிடத்தில் நீங்கள் கலைந்து செல்லாவிடில், உங்களை அடித்துத் துரத்துவோம்.” என்று உரத்த குரலில் கூறினார்.

“சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்தே துஞ்சிடோம்; இனி அஞ்சிடோம்!” என்ற பாரதி பாடலை மிக ஆவேச உணர்ச்சியுடன் நான் பாடினேன். எல்லோரும் சேர்ந்து 'அச்சமில்லை! அச்ச மில்லை' என்ற பாடலை பாடிக் கொண்டும், கோஷங்கள் இட்டுக் கொண்டும், நின்றிருந்தோம். ஐந்து நிமிடங்கள் சென்றதும், மாஜிஸ்ட்ரேட், 'சார்ஜ்' என்றார். உடனே 16 போலீஸ்காரர்களும் தங்கள் கைகளில் வைத்திருந்த பிரம்புகளால் எட்டு பேர்களையும் கண்மண் தெரியாமல் அடித்தார்கள்.

நாங்கள் நின்று கொண்டே அடிகளை வாங்கிக்கொண்டு, கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தோம். என்னைத் தவிர மற்ற ஏழு பேர்களும், உள்ளூர்வாசிகள். ஆகவே அவர்கள் உறவினர்கள், நண்பர்கள் வந்து அவர்களை இழுத்துச் சென்றார்கள். ஆனால் முதல் மூன்று பெரியவர்கள் மட்டும் “செத்தாலும் திரும்ப மாட்டோம்.” என்று உறுதியாகக் கூறி விட்டனர். 15 நிமிடங்கள் ஆனதும், சப் இன்ஸ்பெக்டர் 'ஸ்டாப்' என்று சத்தம் கொடுத்தார். உடனே 16 போலீஸ்காரர்களும் அடிப்பதை நிறுத்தி விட்டு, முன் போல் வழி மறித்து சுவர் வைத்தால் போல் நின்று கொண்டனர். சப் இன்ஸ்பெக்டர் மீண்டும் 'கலைந்து போகும்படி' சொன்னார். 15 நிமிடங்கள் இடைவெளிக்குப் பின், மீண்டும் மாஜிஸ்ட்ரேட், 'சார்ஜ்' என்று குரல் கொடுத்தார்.

16 போலீஸ்காரர்களும் மீண்டும் தங்கள் கைகளில் வைத்திருந்த பிரம்புகளால் நான்கு பேர்களையும் கண்மண் தெரியாமல் அடித் தார்கள். உடனே நாங்கள் தரையை முத்தமிட்டவாறு ரோட்டில் படுத்துக் கொண்டோம். முதல் தடவை, தலை, கண், காது, உடல் முன் பின் பக்கங்கள், எல்லாப் பகுதிகளிலும் அடிகள் விழுந்தன. இத்தடவை உடலின் பின் பகுதி களில மட்டுமே அடிகள் விழுந்தன, அது திருச்சி - சேலம் நெடுஞ்சாலை; திருச்செங்கோடு - நாமக்கல் ரோடு. ஆகவே, அங்கங்கே பஸ்கள், வண்டிகள், தட்டாரத் தெரு வழியாகத் திருப்பி யனுப்பப்பட்டன.

சந்தை தினமானதால், 5 மணி யளவில், 5000க்கும் மேறபட்ட கிராமத்து மக்கள், ஆண் பெண்கள் கூடிவிட்டனர். ”முதலியாரே! உத்தரவு கொடு! - இவங்கள் என்ன, முப்பது நாப்பது பேர்கள் தானே, நாங்கள் நினைத்தால் இவர்கள் அனைவரையும் கொன்று தீர்த்து விடுகிறோம். இந்தக் கணறாவியைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருப்பதா?” என்று கூச்சல் போட்டனர். வரதராஜ முதலியார் கையெடுத்துக் கும்பிட்டபடியே, ஆத்திரமடைந்துள்ள மக்களைப் பார்த்து, “அப்படி ஏதும் அசம்பாவிதமாகச் செய்து விடாதீர்கள். இது சத்தியாக்கிரகம். நீங்கள் பலாத்காரத்தில் இறங்கினால் காந்தியடிகள் மிகுந்த வேதனைப் படுவார். ஆகவே இந்த சத்தியாக்கிரகம் வெற்றி பெற,நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.” என்று உரத்த குரலில் கூறினார். மாஜிஸ்ட்ரேட், போலீஸ்காரர்களுக்கு மிகுந்த தர்ம சங்கடமான நிலை உண்டாகி விட்டது. மீண்டும் இரண்டு முறை 'சார்ஜ்' சொல்லி  விட்டு, எங்கள் நால்வரையும் அப்படி அப்படியே விட்டு விட்டு அரசு உத்தியோகஸ்தர்கள் அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.

கூட்டத்தினர் ஓடி வந்து டாக்டர்கள் சாம்பசிவ அய்யர், சௌந்தர ராஜன் இருவரையும் அழைத்து வந்து, அவர்களின் மருத்துவ மனைகளுக்கு எங்களை வண்டிகளில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். குண்டாந்தடிகளால் தாக்கியிருந்தால் திருப்பூர் குமரனுக்குக் கிடைத்த அமரத்துவம் எங்களுக்கும் கிடைத்திருக்கும். பிரம்புகளால் அடித்ததால், உடல் முழுவதும், பெருமளவு உடலின் பின் பகுதியில், தடித்த காயங்களும், ரத்தக் கசிவுகளும் ஏற்பட்டிருந்தன.

ரோட்டு மண்ணில் நாங்கள் படுத்துக்கொண்டதால், காயங்களிலெல்லாம் ரோட்டுப் புழுதி மண் ஒட்டிக்கொண்டிருந்ததால், ஒவ்வொரு காயமும் தனித் தனியாகக் கழுவி, பஞ்சு வைத்துக் கட்ட வேண்டியதாயிற்று. நான் 24 வயது வாலிபன். வரதராஜ முதலியாரும், கணபதி முதலியாரும், சதைப்பற்றுள்ள தேக முடையவர்கள். சந்தான முதலியார் மெலிந்த உடல்வாகு உடையவர். அவர் மிகவும் கஷ்டப்பட்டார். அந்த மூவருக்கும், அவரவர்கள் வீட்டிலேயே சிகிச்சை நடந்தது. எனக்கு கே. மாரப்ப கவுண்டர் வீட்டில் டாக்டர் வந்து புண்களுக்கு மருந்து போட்டார். ஞாயிறு, திங்கள் இரண்டு நாட்களில், நாங்கள் ஓரளவு குண மடைந்து வந்தோம். சி.ஐ.டி. போலீசார் வந்து, எங்கள் நிலைமைகளை விசாரித்து அறிந்து சென்றார்கள்.

செவ்வாய்க்கிழமை காலை, நான் இருக்குமிடத்துக்கு, சப்இன்ஸ்பெக்டர் ரங்கசாமி அய்யங்கார் வந்து, "மேற்கொண்டு என்ன செய்ய உத்தேசம்" என்று கேட்டார். இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் சத்தியாக்கிரகம் செய்வேன் என்றேன்.  அன்று மாலையில், திரு கே. மாரப்ப கவுண்டர் வீட்டுக்கு ஒரு குதிரை வண்டி வந்தது. ஒரு போலீஸ்காரர் வந்து 'உங்களை இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்கு அழைத்து வரச்சொன்னார்.' என்றார்.

நான் உடனே புறப்பட்டு குதிரை வண்டியில் சென்றடைந்தேன்.அங்கு ஏற்கனவே மூன்று முதலியார்களும் அவரவர் வீடுகளிலிருந்து தனித்தனி குதிரை வண்டிகளில், வந்து சேர்ந்திருந்தனர். இன்ஸ்பெக்டர் சாமி. சிதம்பரனார் எங்களைப் பார்த்து, "மேற் கொண்டு என்ன செய்ய உத்தேசம்?" என்று கேட்டார். "புண் ஆறியபின், மீண்டும் அதே இடத்திலிருந்து 144 தடை உத்த‌ரவை மீறி அன்னிய துணிக்கடைகளின் முன் சாத்விக மறியல் செய்வோம்" என்றோம். "அப்படி யானால் உங்களைக் கைது செய்வேன்" என்றார். நாங்கள் மீண்டும் சத்தியாக்கிரகம் செய்யத்தான் போகிறோம்" என்றோம். "உங்களை அரெஸ்டு செய்திருக்கிறேன். " என்றார். நாங்கள் கைதானோம். ஓட்டலில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டு பரிமாறப்பட்டது. சாப்பிட்டு முடிந்ததும் எதிர்ப்புறம் உள்ள சப்ஜெயிலில் எங்களை அடைத்தார்கள்.

தலையணை, போர்வை ஏதும் இல்லாமல், வெறும் கல் தரையில் படுத்தது மிகவும் சிரமமாகத்தான் இருந்தது.  எங்கள் நால்வரைத் தவிர, வேறு குற்றங்கள் புரிந்த காவற்கைதிகளும், அந்த 15 X 10 அடி அறையில் ஆறு பேர்கள் இருந்தார்கள். அவர்களில் ஆஸ்துமா நோயாளி இரவு முழுவதும் இழுப்பு வேதனையில் இருந்தார்.

மற்றவர்கள் நிலையோ விரும்பத் தக்கதாய் இல்லை. ஆகவே, நாங்கள் நால் வரும் எங்கள் கதைகளைப் பேசிக்கொண்டே தூங்காமல் இரவைக் கழித்தோம் உடம்பில் அடிபட்ட காயங்கள் பல இன்னும் குணமாகவில்லை. ஆகவே, அந்த கரடுமுரடான‌ கல் தரையில் புரண்டு படுக்கும் போது, நாங்கள் பட்ட வேதனை சொல்லி முடியாது. மறுநாட் காலை ஆறு மணிக்கு இரும்புக் கதவுகளைத் திறந்தார்கள். இரண்டிரண்டு பேர்களாக சுமார் முப்பது கைதிகளை நிறுத்தி வைத்து, எண்ணிப் பார்த்து கழிவறைக்கு 'மார்க்' செய்யப் பட்டோம்.

அதைப் பற்றி (சுகாதாரத்தைப் பற்றி,) சொல்லாமல் விடுவது நல்லது. ஏதோ நரகம் எனகிறார்களே அது இதுதானோ என எண்ணிக் கொண்டோம். பல் துலக்கி முகம் கை கால் கழுவிக் கொண்ட பின் எங்கள் முப்பது பேர்களையும், (நாங்கள் நான்கு பேர்கள் மட்டுமே அரசியல் கைதிகள்). ஒரு இடத்தில் மண் தரையில் உட்கார வைத்து எத்தனையோ பேர்கள் மாறி மாறி உபயோகித்த நசுங்கி உருக் குலைந்த அலுமினியத் தட்டுகளில், அரிசிக் கஞ்சியை ஊற்றி அனைவரிடமும் ஒவ்வொரு தட்டாகக் கொடுத்தார்கள். வேண்டா வெறுப்பாகச் சிறிது சாப்பிட் டோம் மீதியை அங்குள்ள தொட்டியில் கொட்டினோம். பத்து மணியளவில் எங்கள் நால்வரையும் சப்டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்கு நான்கு போலீஸ் ஜவான்கள் இட்டுச் சென்றனர்.

எங்களை விசாரித்த சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட், என் பெயரில் - தொழில் என்ற இடத்தில், vagrant என்று போட்டிருந்ததைப் பார்த்து, "What do you mean by this?" என்று சற்றுக்கோபமாக ஹெட் கிளார்க்கைப் பார்த்துக் கேட்டார். " He is not employed, Sir!" என்றார். என்னைப் பார்த்து 'நீங்கள் ஏதாவது வேலை பார்த்தீர்களா?' என்றார். 'நான் இரண்டு ஆண்டுகளாக திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் வேலை பார்த்து வருகிறேன். சத்தியாக்கிரகம் செய்வதற்காக,ராஜினாமா செய்தேன். ஆசிரமத்தில் சேருவதற்கு முன்பு திருநெல்வேலி ஜில்லா போர்டிலும், அதற்கு முன்பு, தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை பார்த்தேன்.' என்றேன்.

 "You see! you change it as at present unemployed." இவ்வளவுக்கும் ஹெட்கிளார்க் ராமஸ்வாமி அய்யங்கார் என்னை நனகு அறிந்தவர்.வக்கீல்கள், சப்டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட்டின் நேர்மையையும் அந்த சூழ்நிலையில் அவர் காட்டிய தைரியத்தையும் பாராட்டினர்.  மேற்கொண்டு அவர் வழக்கை விசாரித்தார். "நாங்கள் சத்தியாக்கிரகிகள்; ஆகவே எதிர் வழக்காட மாட்டோம். 144 தடை யுத்தரவை மீறித்தான் அன்னியத் துணிக் கடை மறியலுக்குப் புறப்பட்டோம்", என்றோம்.

இரண்டு செக்ஷ‌ன்களில் ஒவ்வொன்றுக்கும் ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையளித்து இரண்டும் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தார். அவரவர் வீடுகளிலிருந்து தனித் தனியாக போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டதால், கையில் பணமோ மாற்று உடையோ எடுத்து வரவில்லை. நண்பர்களும் உறவினர்களும் கூட, பயத்தால் எங்களை வந்து பார்க்கவுமில்லை....
 
மேலும் வாசிக்க... "ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் டைரியில் இருந்து...(சுதந்திர தின ஸ்பெஷல்)"

என் இனிய இந்தியாவே........!

சுதந்திர இந்தியா தனது 65வது பிறந்த நாளைக் கொண்டாடும் நேரம் இது.

இந்த சுதந்திரத்தை அடைய எத்தனையோ நல்ல உள்ளங்கள் தங்கள் வீடு, தொழில்களை இழந்தனர், பலர் தங்கள் உயிரையும் நாட்டுக்காக அர்ப்பணித்தனர். அந்த புண்ணிய ஆத்மாக்களை நாம் நினைவுகூற வேண்டிய நேரம் இது. அவர்களின் தியாகத்திற்கான அடிப்படை இந்தியா பற்றி அவர்கள் கண்ட கனவே.

அந்தக் கனவை நாம் நிறைவேற்றி விட்டோமா என்று பார்த்தால், உண்மையில் இல்லையென்றே சொல்ல வேண்டும். தனித்தன்மை வாய்ந்த யாரிடமும் அடிபணியாத உறுதியான இந்தியாவே அவர்களின் கனவு. அந்தக் கனவை நாம் இன்னும் எட்டிப் பிடிக்காவிடினும், பல சறுக்கல்களை இந்தியா சந்தித்துக்கொண்டிருந்த போதிலும் நாம் முன்னேற்றப் பாதையில் உள்ளோம் என்பதை மறுக்கலாகாது. 

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் காலத்தில் பஞ்சம் தாங்காமல் உலக நாடுகளிடம் கையேந்தும் நிலையிலேயே நாம் இருந்தோம். அதிலிருந்து இப்போது நாம் அடைந்திருக்கும் வளர்ச்சியை உற்றுநோக்க, சீரான பாதையில் நாம் நடைபெற்றுக் கொண்டிருப்பது விளங்கும். உலகில் எத்தனையோ நாடுகள் இருக்க நம்மையும் சீனாவையும் அடுத்த பொருளாதார சக்திகளாக வளர்ந்த நாடுகளே சுட்டும் இடத்தில் தான் இப்போது நாம் உள்ளோம்.

இந்தியாவின் தனித்தன்மைகள் என்றால் காந்தியமும் ஜனநாயகமுமே. அன்பை மட்டுமே ஆயுதமாக ஏந்தி, எதிரிகளை வெல்ல முடியும் என்று நிரூபித்தவர்கள் நாம். இப்போது நம் சக நாடுகளின் மேல், நம் சொந்தங்களின் மேல் கொடூரமான வன்முறையை ஏவி அவர்களின் ரத்தம் குடித்த பாவிகளுள் ஒருவராக நிற்கின்றது இந்தியா. 

ஆட்சியாளர்களின் தனிப்பட்ட விரோதங்களைத் தீர்த்துக்கொள்ள, ஒட்டுமொத்த இந்திய அதிகாரமும் பயன்படுத்தப்பட்டுள்ளது, அதன் பலனாய் பல்லாயிரக் கணக்கான மக்கள் சாகடிக்கப்பட்டுள்ளனர். இதைத் தடுக்க நம் ஜனநாயகத்தில் வழியிருந்தது. அத்துனை எம்.பிக்களின் ராஜினாமாவும், ஒட்டுமொத்த சட்டமன்றக் கலைப்பும் இந்திய ஆட்சியாளர்களை அடிபணிய வைத்திருக்கும். குடும்பப் பாசத்தாலும், அதிகாரப் போட்டியாலும் நாம் அந்த வாய்ப்பை மறுதலித்தோம். அதன்பலனாய் தீராப் பழியை சுமந்துகொண்டு நிற்கின்றோம்.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களாக பட்டாசு வெடிப்பையும் இனிப்புப் பரிமாறலையும் நாம் செய்துகொண்டிருந்தாலும், நெஞ்சில் குத்திய முள்ளாய் அந்த அவலம் வலியைத் தந்துகொண்டே உள்ளது. கொடூரமான இனப்படுகொலையில் மாண்ட உயிர்களின் சாபமும், உறவினர்களின் வேதனையும் இந்த நாட்டின் மீது விழத்தானே செய்யும்? நாடு என்பது என்ன? வெறும் ஆட்சியாளர்கள் மட்டுமா? உண்மையில் மக்கள் தானே நாடு. நாம் தானே இந்தியா. 

அந்த வகையில் இந்த சுதந்திர நாளில் அந்த ஆத்மாக்களிடமும், அவர்களின் உறவுகளிடமும் மானசீக மன்னிப்புக் கேட்போம். எங்களை, எங்கள் பிள்ளைகளை எங்கள் வம்சத்தை சபித்து விடாதீர்கள் என்று வேண்டிக்கொள்வோம். வாயிருந்தும் ஊமைகளாய், சுதந்திரம் இருந்தும் பயன்படுத்தாத அடிமைகளாய் ஆனதற்காக அந்த எளிய ஆத்மாக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வோம். 
ஈழப் படுகொலை மறந்து, சுதந்திர தினக் கொண்டாட்டம் என்பதை மனசாட்சியற்ற செயலாகவே நாம் உணர்கிறோம். தன் தாய்நாட்டின் சுதந்திர தினத்தைக்கூட துக்கத்துடன் நம்மைக் கொண்டாட வைத்த நமது பேய் மனம் கொண்ட ஆட்சியாளர்களைச் சபிப்போம். புற்று நோய் பரவட்டும்!

நம் தாய் நாட்டை சுதந்திர பூமியாக்கப் போராடிய இரு பெரும் தரப்புகளான காந்தியடிகளையும் சுபாஷ் சந்திரபோஸையும் நன்றியுடன் நினைவு கூர்வோம். 

எத்தனையோ பிரிவினைவாதங்கள் தொடர்ந்து ஓதப்பட்டாலும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் அடிப்படைப் பண்பை இழக்காமல் வீறு நடை போடுவோம். 
ஜெய் ஹிந்த்!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
மேலும் வாசிக்க... "என் இனிய இந்தியாவே........!"

Tuesday, August 2, 2011

விஜயலட்சுமியின் எழுச்சியும் சீமானின் வீழ்ச்சியும்

சீமான் என்ற பெயரைக் கேட்டாலே நரம்புகள் முறுக்கேறும் என்ற நிலை சில மாதங்களுக்கு முன்வரை இருந்தது. அரசியலில் அவரே மாற்று சக்தியாக வருவார் என்று பலரும் கனவு கண்டனர். நமது தேர்தல் ஸ்பெஷல் தொடரில் எழுதிய சீமானும் சீமானும் தாத்தாக்களும் பதிவில் சீமானைப் பற்றிய சில அடிப்படைக் கேள்விகளை நாம் முன்வைத்தோம். பிறகு சில நாட்கள் கழித்து கவிஞர் தாமரையும் இதே போன்ற கேள்விகளை சீமானிடம் அறிக்கை வாயிலாக எழுப்பினார். ‘இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’ என்று திருவாய் மலர்ந்துவிட்டு தேர்தல் பணியில் தீவிரமாய் இறங்கினார் சீமான்.

பொதுவாக தமிழி உணர்வாளர்கள் மீது எனக்கு சாஃப்ட் கார்னர் உண்டு. ஆனாலும் எதனாலோ சீமானை முழுக்க நம்ப மனம் ஒப்பவில்லை. தமிழின் முக்கிய இயக்குநராக தம்பி என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் தன் முத்திரையை பதித்த சீமான், திடீரென்று நடிகர் அவதாரம் எடுத்தபோதே இவர் தீவிர அரசியலுக்கு திட்டமிடுகிறார் என்பது புரிந்தது. பலநாட்கள் உணர்ச்சி வேகத்தில் பொங்கிப் பொங்கி கட்டியமைத்த புரட்சிவாதி பிம்பத்தில் இப்போது கீறல் விழுந்திருக்கின்றது.

நடிகை விஜயலட்சுமி சீமான் மீது முதலில் புகார் கொடுத்தபோது, யாருமே அது பற்றிப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. காரணம் இதே விஜயலட்சுமி ஏற்கனவே இதே புகாரை ஒரு கன்னட நடிகர் மீதும் டிவி நிகழ்ச்சி இயக்குநர் மீதும் சுமத்தி இருந்தது தான். ஏதோவொரு வேகத்தில் நடிக்க வந்துவிட்டு, பின் நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள போராடும் நடவடிக்கையா அல்லது மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையா என்று புரியாத விவகாரங்கள் தான் அவை. புலி வருது கதையாக இவர் சீமான் மீது புகார் சொன்னபோது யாரும் விஜயலட்சுமியை நம்பவில்லை.

குற்றம் சுமத்துபவர் தவறான நபர் என்பதால் குற்றம் சுமத்தப்பட்டவர் நல்லவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குற்றம் சுமத்தப்பட்டவர் சில விஷயங்களில் நல்லவர் என்பதால் எல்லா விஷயத்திலும் அவர் நல்லவராக இருக்க வேண்டியதில்லை.
விஜயலட்சுமியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து சீமானின் நடவடிக்கைகள் தான் நம் சந்தேகத்தை மேலும் வலுவாக்குகின்றன. ஜெ.ஆட்சிப்பொறுப்பேற்றதும் ஜெ. ’ராஜ பக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினார். நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயமே இது. இதனை ஒரு அறிக்கை விட்டுப் பாராட்டி இருந்தாலும் போதும். ஆனால் செந்தமிழன் சீமான் உடனே பாராட்டு விழாவினை அறிவித்தார். இதில் கேவலமான விஷயம் என்ன வென்றால் யாருக்காக அந்தப் பாராட்டு விழா நடத்தினாரோ அந்த ஜெயலலிதா இதில் கலந்து கொள்ளவில்லை என்பது தான்.

ஆனாலும் அண்ணன் சீமான் அசராமல் பாராட்டு விழா நடத்தினார். அதில் அவர் பேசிய அனல் பறக்கும் பேச்சின் ஒரு பகுதி இது: “துணிச்சல் மிக்க பெண்மணி அவர். இதற்காக நன்றி என்ற வார்த்தையோடு நாம் நிறுத்திக் கொள்ளக்கூடாது. புரட்சித் தலைவி என்ற பட்டத்துக்கு அவர் பொறுத்தமானர். அவரை புரட்சித் தலைவி என்று அழைப்பதற்காக தமிழர்களாகிய நாம் பெறுமைப்பட வேண்டும்.” நிச்சயம் இவரது பேச்சைக் கேட்டு தனக்குப் போட்டியாய் ஒருவரா என்று ஓ.பன்னீர்செல்வம் பயந்து போயிருப்பார் என்பது நிச்சயம். 

‘ஒரு நல்ல தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி’ என்று ஒரு பக்க அறிக்கையுடன் முடிக்க வேண்டிய விஷயத்தை இவ்வளவு பெரிய அளவில் சீமான் செய்தது ஏன்? ’புரட்சித் தலைவியின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்த என் தம்பிமார்கள் அனைவரும் அணி திரள வேண்டும்.’ என்று அவர் பேசியதைக் கேட்டபோது இவரை நம்பிக் கூடிய அந்த தம்பிமார்கள் மீது பரிதாபமே மிஞ்சியது. தன்னுடைய தனிப்பட்ட பிரச்சினையில் இருந்து தப்ப தன்னை நம்பி வந்த தம்பிமாரை அடகு வைக்கின்றாரா சீமான் என்பதே இப்போது எழும் சந்தேகம்.

அதனைத் தொடர்ந்து விஜயலட்சுமி ‘மதுரையில் சீமான் நிபந்தனை ஜாமீனில் இருந்தபோது 15 நாட்கள் அவருடன் இருந்தேன். இதை போலீஸார் விசாரித்தாலே தெரிந்து கொள்ளலாம். இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பவே ஜெ.வுக்கு பாராட்டு விழா நடத்தினார்’ என்று குற்றம் சுமத்தினார். அவரது வாதம் முழுக்க புறக்கணிக்கத் தக்கதாக இல்லை. காவல்துறை அந்த வழக்கை தீவிரப்படுத்தினால் பல உண்மைகள் வெளிவரும். 

தமிழினத்தின் விடியலுக்காகவே பிறந்து வந்த சீமான் ‘சம்ச்சீர்க் கல்வி விஷயத்தில் அதிமுக அரசு சரியாகச் செயல்படுகிறது’ என்று பாராட்டினார். பாராட்டிய இரண்டு நாளில் உயர்நீதிமன்றத்தின் செருப்படி விழுந்தது. தொடர்ந்து உச்சநீதி மன்றமும் செருப்பால் அடித்தது. அதன்பிறகு ’பாராட்டு விழா நடத்தியும் திருப்தி பெறாத சீமான் மீண்டும் ஜெ.வை நேரில் சந்தித்து அதே விஷயத்திற்கு ’நன்றி’ சொல்லிவிட்டு விட்டு வந்திருக்கிறார்.
இப்போது அனைவரின் எதிர்பார்ப்பும் ஜெ.எப்படி இந்த விஷயத்தை முன்னெடுக்கப்போகிறார் என்பதே. தனக்கு நிகராக யாராவது வளர்ந்தால் அவர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி, மண்டியிட வைப்பது ஜெ.வின் ஸ்டைல். இதற்கு உதாரணமாக ராமராஜன் முதல் நிறையப் பேர் உண்டு. அந்த வகையில் அடுத்து கேப்டவுன் வருவார் என்று நாம் எதிர்பார்த்திருந்த வேளையில் தானே முன்வந்து சிக்கியுள்ளார் ‘மாற்று சக்தி’ சீமான். 

சீமானின் மண்டியிடல் ஜெ.வைத் திருப்திப்படுத்தினால், விஜயலட்சுமியின் புகார் கண்டுகொள்ளாமல் விடப்படும். அல்லது முழுக்க சீமானின் டவுசரைக் கழட்டுவதே நல்லது என்று ஜெ. முடிவு செய்தால். சீமான் உள்ளே போக வேண்டி வரலாம்!
மேலும் வாசிக்க... "விஜயலட்சுமியின் எழுச்சியும் சீமானின் வீழ்ச்சியும்"

Wednesday, June 15, 2011

எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்?

தற்போதைய கல்வி சீர்திருத்தத்தில் சமச்சீர் கல்வி அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு பிரச்சினை எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற சட்டம். மேற்பார்வைக்கு இது குழந்தைகளின் மேல் அக்கறை கொண்டு, அவர்களது கல்விச்சுமையைக் குறைக்க வந்த திட்டம் என்று தோன்றினாலும், உண்மையில் அவர்களுக்கு பெரும் கெடுதலையே இந்தச் சட்டம் செய்கிறது.

இந்தச் சட்டப்படி, ஒரு மாணவன் படித்தாலும் படிக்காவிட்டாலும் எட்டாம் வகுப்பு வரை ஃபெயில் ஆக்க முடியாது. படிப்பறிவு பெறாத பெற்றோர் விழிப்புணர்வு பெற்று ’நாங்க தான் படிக்கவில்லை. எங்கள் பிள்ளைகளாவது படிக்கட்டும்’ என்று பள்ளிக்கு அனுப்பும் காலம் இது. நானும் அப்படிப் படித்து வந்தவனே. இந்தச் சட்டத்தைப் பற்றி சிந்திக்கும்போது என் நினைவுக்கு வருவது இரு நபர்கள்..
முதலாவது என்னுடன் படித்த நண்பன் ராமன். அவனது அப்பாவும் அம்மாவும் படிக்காத கூலித் தொழிலாளிகள். ஐந்தாம் வகுப்பு வரை எங்கள் கிராம அரசுப் பள்ளியில் படித்த ராமன் ஆறாவது படிக்க டவுனில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டான். ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்தாலும் தமிழ் ததிங்கிணத்தோம் தான். இங்கிலீஸ் சுத்தமாகத் தெரியாது. எனவே ஆறாம் வகுப்பில் ஃபெயில் ஆனான். அவன் அப்பாவும் ‘ஒழுங்கா படிக்கலேன்னா, சாந்துச்சட்டி தாம்லே’ என்று தெளிவாகச் சொல்லி விட்டார்.  அது அவனை மிகவும் யோசிக்க வைத்தது. சாந்துச்சட்டி என்பது கொத்து வேலைக்கு பயன்படுவது. எனவே ராமன் பயந்து போய் படிக்க ஆரம்பித்தான். இன்று அவன் ஒரு ஐ.டி.கம்பெனியில் வேலை செய்கிறான்.

அடுத்தவர் என் அண்ணி. என் அண்ணனின் மகன் எட்டாம் வகுப்பு தேர்ச்சிக் கார்டு தபாலில் வந்தது. அன்று நானும் இருந்தேன். பிரித்துப் பார்த்தால் மகன் ஃபெயில்! அண்ணியார் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். ”நீயாவது உங்கப்பா மாதிரி இல்லாம படிச்சு முன்னேறுவேன்னு பார்த்தா, இப்படி ஃபெயிலாகி நிக்குறியே..நம்ம தலையெழுத்தே அவ்வளவு தானா?” என்று அழுது தீர்த்தார். அது அவனைப் பாதித்தது. அதன் பிறகு அவன் ஒழுங்காகப் படிக்க ஆரம்பித்தான்..

முதல் தலைமுறை மாணவர்கள் நிலை இது தான். படிப்பு என்பது வேப்பங்காயை விடவும் கசப்பான விஷயம். பெரும்பாலான மாணவர்கள் படிப்பது ஆசிரியரின் கண்டிப்புக்குப் பயந்தும், ஃபெயிலாகி விடுவோம் என்ற அவமானத்திற்குப் பயந்தும் தான். 

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஒரு மாணவனுக்கு ஆனா ஆவன்னா தெரியாவிட்டாலும், அவன் எட்டாம் வகுப்பு வரை வந்துவிட முடியும். அப்ப்டி வந்த ஒருவன், 14 வயதிற்குப் பின் திடீரென படித்தால் தான் பாஸ் என்றால் அவன் என்ன செய்வான்? டீன் ஏஜில் நுழைந்த பிறகா ஒருவன் படிப்பில் திடீர் அக்கறை கொள்வான்?

சம்பளம் வாங்கி வேலை செய்யும் ஒரு ஆசிரியரின் திறமை மதிப்பிடப் படுவது மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை வைத்துத் தான். எட்டாம் வகுப்பு வ்ரை ஆல் பாஸ் என்றால், அவர்கள் சரியாகத் தான் பாடம் நடத்துகிறார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? எப்படியும் ஆல் பாஸ் எனும்போது எதற்காக அவர்கள் அக்கறையோடு பாடம் நடத்த வேண்டும்? அப்படியென்றால் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பெறப்போகும் சம்பளம் வீண் தானா? 

இந்தப் பதிவிற்காக இப்படி எல்லாம் சிந்தித்த வேளையில், ஒரு அரசுப்பள்ளியில் ஆசிரியராக வேலை செய்யும் என் சித்தப்பா ஒருவரைத் தொடர்பு கொண்டேன். மேலே உள்ள கேள்விகளைக் கேட்டேன். 

அதற்கு அவர் சொன்னது:”நீ கேக்குறது சரி தான்பா..பாடத்தை ஏண்டா கவனிக்கலேன்னே ’எப்படியும் பாஸ் தானே போடப்போறீங்க சார்..அப்புறம் ஏன் படி படின்னு இம்சை பண்றீங்க’ன்னு கேட்குறானுக. என்னை மாதிரி மனசாட்சிக்குப் பயந்தவங்க தான் சிலபஸ் முடிக்கிறோம்..மத்தவங்க ‘எப்படியும் இவனுக கவனிச்சுப் படிக்கப் போறதில்லை. அப்புறம் ஏன் தொண்டை வத்த நாம கத்தணும்’னு நினைக்கிறாங்க. கிராமத்து மாணவங்க வாழ்க்கையே வீணாப் போகுது”
தனியார் பள்ளிகளாவது 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் காட்ட, இந்தச் சட்டத்தை மதிக்காமல் ஆரம்பத்தில் இருந்தே கண்டிப்புடன் பாடம் நடத்தலாம். ஆனால் அரசுப்பள்ளிகளின் நிலை என்ன ஆகும்? ஒருவேளை இந்தச் சட்டமே ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகளை அழிக்க, தனியார்+அரசால் செய்யப்பட்ட சூழ்ச்சியோ?

மாணவர்களின் புத்தகச் சுமையையும் பாடச்சுமையையும் குறைக்க முனையாத அரசு இதில் மட்டும் தீவிரம் காட்டுவது ஏன்? மாணவர்கள் படிக்காவிட்டாலும் பாஸ் என்பதை விட தேர்ச்சி மதிப்பெண்ணான 35ஐ 20-25ஆகக் குறைக்கலாமே?

மேலும் வாசிக்க... "எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்?"

Wednesday, March 23, 2011

மானமிகு வைகோவை விரட்டிய தமிழர்கள்! (தேர்தல் ஸ்பெஷல்)

டிஸ்கி: வைகோவை மானங்கெட்டவர் என்று ஒரு அரசியல்வாதி பேசியதை எதிர்த்து 2011-ல் எழுதப்பட்ட பதிவு.
 
 
எங்கள் கிராமத்தில் வாழும் பேச்சியக்கா கணவனை இழந்தவர். ஒரே ஒரு குழந்தை மட்டுமே. அதுவும் பொறுக்கவில்லை அந்தக் கடவுளுக்கு. குழந்தையின் இதயத்தில் ஓட்டை என்றும் ஆபரேசன் செய்ய 5 லட்சமாவது வேண்டும் என்றும் டாக்டர்கள் இடியை இறக்கினார்கள். ஏழைப் பெண் இடிந்து போய் பல இடங்களில் பணம் கடனாகக் கேட்டுப்பார்த்தார். இவ்வளவு பெரிய தொகையை அந்த ஏழைப்பெண்ணை நம்பி யார் தான் கொடுப்பார்கள்? 

அப்போது தான் அந்த போஸ்டர் அக்காவின் கண்ணில் பட்டது. எங்கள் பக்கத்து ஊருக்கு கொடியேற்ற வைகோ வருவதாக அந்த போஸ்டரில் போட்டிருந்தது. வைகோவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். சுத்த மானங்கெட்ட அரசியல்வாதி அவர். ஆனால் நல்லவேளையாக அக்காவிற்கு அது தெரியவில்லை. அக்கா குடும்பம் அதிமுக. எனவே யாரிடமும் சொல்லாமல் ஒரு வெள்ளைப்பேப்பரில் தன் நிலைமையை எழுதினார்.

வைகோ கார் எங்கள் ஊர் வயல்காட்டுப் பாதை வழியே தான் கொடியேற்றப் போக வேண்டும். அங்கு போய் கையில் பேப்பருடன் நின்று கொண்டார். வைகோவின் கார் வந்தது. அக்கா கையை நீட்டினார். ஒரு தன்மானமுள்ள அரசியல்வாதியோ, தமிழனோ காரை நடுக்காட்டில் நிறுத்துவானா? ஆனால் வைகோ தான் சுத்த மானங்கெட்டவராயிற்றே. காரை நிறுத்தி ‘யாரும்மா நீங்க? ஏன் இங்க வெயில்ல நிக்கீங்க’ன்னு கேட்டார். அக்காவிற்கு பேச முடியவில்லை. அழுதுகொண்டே அந்த பேப்பரை நீட்டினார். மனுவா? ச்சே..ஒரு நல்ல அரசியல்வாதி நடுக்காட்டிலா மனுவை வாங்குவார்? 

நாளைக்கு ஆஃபீசுக்கு வா என்று சொல்லிவிட்டு அன்றிரவே டெல்லிக்கு பறந்தால்தானே அவர் பொழைக்கத் தெரிந்த அரசியல்வாதி. வைகோ அந்த விஷயத்திலும் சுத்த வேஸ்ட். மனுவை வாங்கிப் படித்தார். மிகுந்த வருத்தத்துடன் ‘கவலைப்படாதீங்கம்மா. நாளைக்கு எங்க கட்சி ஆபீசுக்கு வந்து இவரைப் பாருங்க. கண்டிப்பா உதவி செய்றோம்’ என்று அருகில் இருந்தவரை அறிமுகப்படுத்தி விட்டு விடை பெற்றார். அப்படியே ஓடிப்போயிருந்தாக் கூட பரவாயில்லை.

ஆனால் மறுநாள் சொன்னபடியே எல்லா உதவிகளும் செய்யப்பட்டன. அந்தக் குழந்தையை திருநெல்வேலிக்கு கட்சிக்காரர்களே அழைத்துச் சென்று ஆபரேசனும் செய்ய உதவினர். இன்று குழந்தை நலம். அந்த உதவி கட்சி நிதியில் செய்யப்பட்டதா அல்லது மானங்கெட்ட தனமாக கூட்டணி வைத்துக் கிடைத்த எம்.பி நிதியில் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை.
இப்படி ஒரு விவரங்கெட்ட அரசியல்வாதியைப் பார்த்திருக்கிறீர்களா? ஒருவர் உதவி கேட்டால் ‘நீ எந்தக் கட்சி? உறுப்பினர் அடையாள அட்டை எங்கே? ஓஹொ.அதிமுகவா? அப்புறம் என்ன இதுக்கு எங்கிட்ட வந்தே?’ன்னு தானே ஒரு மானமுள்ள அரசியல்வாதி கேட்பான்? அடுத்து ‘நீ என்ன ஜாதி? ஓஹோ.அந்த ஜாதியா..நீங்கள்லாம் எனக்கு ஓட்டுப் போட மாட்டீங்களே.அந்தக்கட்சிக்குத் தானே போடுவீங்க. உங்க ஊரே அப்படித்தானே? என் கட்சியா இல்லாட்டியும் பரவாயில்லை, என் ஜாதியா இருக்க வேண்டாமா?’ன்னு கேட்க வேண்டாமா? அப்படி கேட்க வேண்டும் என்று கூடத் தோன்றாமல் மனுவை வாங்கி தேம்பித் தேம்பி அழுதா உருப்பட முடியுமா?

குடுகுடுப்பைக்காரன் மாதிரி மக்களோடு மக்களா கெக்கேபிக்கேன்னா ஒரு அரசியல்வாதி இருக்குறது? ஜெயலலிதாவை வழில பாத்து மனு கொடுத்தவங்க யாராவது இருக்கீங்களா? கருணாநிதிகிட்ட இப்படி வேறொரு கட்சிக்காரன் உதவி வாங்குனதா சரித்திரம் இருக்கா? (அவர் நீ என்ன ஜாதின்னு கேட்கமாட்டாரு..நீ என்ன முறை.. பேரனா மகனான்னு தான் கேட்பாரு!)
அவங்களை மாதிரி தன்மானத்தோட இருக்க வேண்டாமா வைகோவும்? அப்புறம் எப்படி மக்கள் மதிப்பாங்க?

ஆனால் எனக்கு ஒரே ஒரு ஆறுதல் என்னன்னா, நம்ம மக்கள் தன்மானச் சிங்கங்களா, மாசுமறுவற்ற தங்கங்களா இருக்குறது தான். வைகோ அந்த அக்காவிற்கு உதவி செஞ்சதைப் பார்த்ததும் அக்கா குடும்பமோ உறவினர்களோ மதிமுகவில் சேரலை. மானங்கெட்ட வைகோவும் அந்த டீலிங்-கைப் பேசாமல் உதவி செஞ்சுட்டார். எங்க ஊர்ல எல்லாருக்கும் இது தெரியும். ஆனாலும் யாரும் வைகோவிற்கு ஓட்டுப்போடலை. ஏன்? ஏன்னா நாங்க மானமுள்ள தமிழர்கள்.

நான் சொல்றதாவது உங்களுக்குப் புதுசா இருக்கலாம். ஆனால் செய்தித்தாளில் வந்த ஒரு கூத்தைக் கேளுங்க. விருதுநகர் பக்கத்துல நெடுஞ்சாலைல நடுராத்திரியில் ஒரு விபத்து. ஒரு குடும்பமே அடிபட்டு ரத்தக்களறியாக் கிடக்கு. மானமுள்ள தமிழன்லாம் பாத்துட்டு காரை நிப்பாட்டாமல் போனார்கள். அப்பப் பார்த்து நம்ம மானங்கெட்ட வைகோ வந்துட்டார். தன் காரில் அவங்களை ஏத்தி, ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டுத் தான் போனாரு. அதோட விட்டாப் பரவாயில்லை. காலைல ஃபோன் வேற. ‘நீங்க நல்லா இருக்கீங்களா’ன்னு. இப்படி வெண்ணைத்தனமா இருந்தா தமிழன் எப்படி அவரைத் தலைவரா ஏத்துக்க முடியும்? 

சமீபத்தில் ஒரு போலீஸ்காரர் வெட்டப்பட்டு கிடந்தப்போ, கார் ரத்தக்கரை ஆகிடுமேன்னு ஆம்புலன்சுக்கு ஃபோன் போட்ட அமைச்சரை வீடியோவில் பார்த்திருப்பீங்க. அப்படி விவரமா இருக்கப்போய்த் தான் அவர் அமைச்சரா இருக்காரு, வைகோ கலிங்கப்பட்டில கல்லு உடைக்கப் போய்ட்டாரு.

இந்த விஷயமும் விருதுநகர்காரங்களுக்குத் தெரியும். ஆனா அவங்க விவரமானவங்க. வைகோ போன தேர்தல்ல விருதுநகர்லயே நின்னாரு. நம்ம மக்கள் பார்த்தாங்க..இவர் ஜெயிச்சு டெல்லிக்குப் போய்ட்டா யாரு ஆக்ஸிடண்ட் கேஸ்களை அட்டெண்ட் பண்றது? ஜெ.வோ கலைஞரோவா வருவாங்க? அவங்கள்லாம் தலைவர்கள் ஆச்சே. அதனால நல்லபடியா வைகோவை தொகுதில தோற்கடிச்சுட்டாங்க. இப்போ கருணையே வடிவான ‘அம்மா’வும் ‘நீயே ஜெயிக்கலை..உனக்கெதுக்கு 21 தொகுதி’ன்னு வைகோவை விரட்டி விட்டிடுச்சு.

வைகோ கட்சி ஆரம்பிச்சப்போ தனியா நின்னாரு. ஆனால் நாம யாரு?  இந்த மாதிரி கூறுகெட்ட ஆளை முதல்வரா ஆக்குவோமா? டெபாசிட்டைக் காலி பண்ணோம். நாம ஓட்டுப் போடணும்னா கலர் கலரா போஸ்டர் ஒட்டணும்..வீதி வீதியா பெட்ரோல் செலவழிச்சுச் சுத்தணும். எல்லாத்துக்கும் மேல ஓட்டுக்கு காசும் கொடுக்கணும். ஆனால் அந்த தலைவர் செலவழிக்க மட்டும் தான் செய்யனும். செலவைச் சமாளிக்க ஊழல் செஞ்சாத்தான் முடியும். அதுக்கு ஆட்சில ஒரு தடவையாவது இருக்கணும். அதுக்கும் விட மாட்டோம். 

ஆனால் செலவைச் சமாளிக்க முடியாமல் யார்கூடவாவது கூட்டணியும் சேரக்கூடாது. சேர்ந்தா மானங்கெட்டவன். நம்மளை மாதிரி மானத்தோட இருக்க வேண்டாமா? எங்களுக்காக தேர்தலப்போ செலவளி. ஆனால் ஊழலோ கூட்டணியோ கூடாது. இவ்வளவு விவரமா யோசிக்கிற மக்களுக்குத் தலைவரா இருக்குற தகுதி வைகோவுக்கு இருக்கா?

எப்பத் தனியா நின்னாலும் தோற்கடிப்போம். யார்கூடவாவது கூட்டணி சேர்ற வரைக்கும் துரத்தி துரத்தி அடிப்போம். கூட்டணி வச்சுட்டா மானங்கெட்டவன்னு சொல்வோம். ஏன்னா நாங்க மானமுள்ள தமிழர்கள்.இது தான் எங்கள் கொள்கை. இது மாதிரி வைகோகிட்ட கொள்கை ஏதாவது இருக்கா? 

1991-ல ஜெ.வுக்கு ஆதரவு தெரிவிச்சு ஓட்டுப்போட்டோம். 1996ல் ச்சீ..ச்சீ..இதுவும் பொம்பளையான்னுட்டு கலைஞ்சருக்கு ஓட்டுப் போட்டோம். 2001ல் கலைஞரெல்லாம் ஒரு மனுசனா-ன்னு கேட்டுட்டு மானத்தோட புரட்சித் தலைவிக்கு ஓட்டுப் போட்டோம். 2006ல் திரும்பக் கலைஞருக்கே ஆதரவு. இதெல்லாம் நாம செய்யலாம். ஏன்னா நாம மானமுள்ள தமிழர்கள். அதுக்கான எல்லாக் காரணமும் நம்மகிட்ட இருக்கும்.  ஆனால் வைகோவும் நம்மை மாதிரியே ஜெ-கலைஞர்னு மாறலாமா? என்ன அநியாயம்..

ஜெ.வின் பாசிச ஆட்சியை ஒழிப்பேன்னு சொல்லிட்டு ஜெ.கூடயே கூட்டணி வச்சாரு மானங்கெட்ட வைகோ! ஆனால் பிறந்ததில் இருந்தே மானத்தோட வாழுற ஜெ. ஏன் இப்படிப் பேசுனவரைச் சேர்த்துக்கிச்சு? கேட்க மாட்டோம். ஏன்னா ஜெ.வும் நாங்களும் வைகோவைக் கேவலப்படுத்தி துரத்தியதில் பார்ட்னர்ஸ்.

மானங்கெட்டு திமுக கூடவே மறுபடி கூட்டணி வச்சாரு வைகோ. ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியை ஒழிப்பேன்னு வீரவசனமும் அடுத்த தேர்தல்ல பேசுனாரு வைகோ. சரி, அப்படிபட வைகோவை ஏன் கலைஞர் இப்போ ’தம்பீ வா’-ன்னு அழைக்காரு. அவரும் நம்மளை மாதிரி மானமுள்ள தமிழனங்கிறதாலயா?

மக்கள் எப்படியோ அப்படியே தலைவர்களும் உருவாகி வருவார்கள். வைகோவை தலைவராகப் பெறும் தகுதி நம் மக்களுக்கு இல்லை.

மேலும் வாசிக்க... "மானமிகு வைகோவை விரட்டிய தமிழர்கள்! (தேர்தல் ஸ்பெஷல்)"

Sunday, March 20, 2011

போராட்டக் குணத்தை இழந்த போர்வாள் வைகோ (தேர்தல் ஸ்பெஷல்)

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவது என்ற முடிவை மதிமுக எடுத்துள்ளது. நிச்சயம் இது சுயமரியாதை கொஞ்சமாவது மிச்சம் உள்ள எந்த வொரு மனிதரும் எடுக்கும் முடிவே. அந்த வகையில் இப்போதாவது வைகோ தன் சுயமரியாதையை மீட்டதில் சந்தோசமே.

ஆனால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பது எந்த அளவிற்கு சரியானது என்று தெரியவில்லை. நாம் ஏற்கனவே முந்தைய தேர்தல் பதிவில் சொன்ன மாதிரி, காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளிலும், மதிமுகவிற்கு வாக்கு வங்கி உள்ள தொகுதிகளிலும் மதிமுக நிற்க வேண்டும் என்பதே தமிழின உணர்வாளர்களின் ஆவல்.

ஏற்கனவே தேர்தல் கமிசனின் அங்கீகாரத்தை இழந்துள்ள நிலையில், இந்தத் தேர்தலை முழுக்க புறக்கணிப்பது கட்சிக்கு நல்லதல்ல. மேலும் மதிமுகவின் நாயக்கர் சமூக ஓட்டை விஜயகாந்த்திற்கு தாரை வார்த்ததாகவே இது ஆகும். ஏற்கனவே பெரும்பாலான நாயக்கர் இன ஓட்டுக்களை விஜயகாந்த கவர்ந்துவிட்ட நிலையில், இந்த முடிவு மதிமுகவிற்கு பெரும் பாதகமாகவே முடியும்.

வேறு வழியின்றியே அதிமுகவை ஆதரிப்பதாக சீமான் போன்றோர் சொல்லி வரும் நிலையில், வைகோ இந்த நல்ல வாய்ப்பை உதறுவது நல்ல முடிவல்ல. வைகோ என்ற போர்வாள் மனதளவில் தளர்ந்து விட்டாரா? தனியே நிற்கக்கூடிய நல்ல வாய்ப்பு வந்துள்ள நிலையிலும் பின் வாங்குவது ஏன்? சீமான், நெடுமாறன் போன்ற உணர்வாளர்கள் வைகோவை இந்தத் தேர்தலில் நிற்குமாறு அறிவுறுத்துவதே சரியாக இருக்கும். அவர்கள் அம்மாவில்ம் விலை போகவில்லை என்பதற்கு அதுவே சாட்சியாகும்!

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஜெயலலிதாவின் அணுகுமுறையில் ஆரம்பத்திலிருந்தே எந்த மாற்றமும் இல்லை. அவரது அணுகுமுறையில் அகந்தை, ஆணவம், தன்னிச்சையான போக்கு ஆகியவையே திட்டவட்டமாகப் புலப்பட்டது’ என்று நேரடியாக ஜெ.வை தாக்கியதிலிருந்தே இனி சமரசத்திற்கு இடமில்லை என்றே படுகிறது.

மதிமுக தொண்டர்களை இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னாலும், நடைமுறையில் அவர்கள் வேறு யாருக்காவது ஓட்டுப் போடவே செய்வர். அதனால் மதிமுக தேர்தலில் நிற்பதன் மூலமே எஞ்சியிருக்கும் தொண்டர்களைத் தக்க வைக்க முடியும். இல்லையென்றால் கட்சி கரைந்து விடும் என்பதே யதார்த்தம்.

பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, கார்த்திக்கின் ஏதோவொரு டப்பா கட்சி எல்லாம் இந்தத் தேர்தலில் துணிந்து நிற்கும்போது வைகோ தயங்குவது ஏன்? காங்கிரஸுக்கு எதிரான ஓட்டு சிதறக்கூடாது என்பதனாலா? இனியும் ஜெ.வைப் பற்றி வைகோ கவலைப்படலாமா?

அதிமுக, திமுக வின் மேல் வெறுப்பில் இருக்கும் சில நடுநிலையாளர்கள், வைகோ என்ற தனி மனிதருக்காக மதிமுகவிற்கு ஓட்டுப் போடுவதைக் கண்டிருக்கிறேன். அவர்களுக்கு இருக்கும் அந்த ஆப்சனையும் வைகோ மூடுவது சரியா? நல்ல மனிதர்களும் அரசியலை விட்டு ஒதுங்கும் நிலையில், மிக்ஸியும் கிரண்டரும் தான் எங்கள் தலைவிதியா?

தனியாக நின்றால் கேவலமாகத் தோற்க வேண்டியிருக்கும் எனப் பயப்படுகிறாரா? நல்ல அரசியலுக்காக ஏங்கும் எம் போன்ற சாமானியர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தோற்றுக் கொண்டுதானே இருக்கிறோம். எங்களோடு சேர்ந்து நீங்களும் தோற்பது, உண்மையில் கௌரவமே!
மதிமுக தேர்தலில் நிற்க வேண்டும். அதற்கு தமிழின உணர்வாளர்கள் முயற்சி எடுக்க வேண்டும். இல்லையென்றால் மதிமுக என்ற கட்சி இத்தோடு அழிந்து போகும்!
மேலும் வாசிக்க... "போராட்டக் குணத்தை இழந்த போர்வாள் வைகோ (தேர்தல் ஸ்பெஷல்)"

Thursday, March 17, 2011

வைகோவை விடுதலை செய்த ஜெயலலிதாவுக்கு நன்றி!

அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிடும் பட்டியலை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா. இதன் மூலம் வைகோவிற்கு அதிமுக கூட்டணியில் இடம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. முதலில் இதற்காக ’மூன்று மாத கால்ஷீட்டுடன் சென்னை வந்திருக்கும் ‘ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்.
ஏழு வருடங்களாக கூட்டணி தர்மத்தை மீறாமல், கடந்த தேர்தல்களில் அதிமுகவிற்காக கடும் பிரச்சாரம் மேற்கொண்ட வைகோவிற்கு அன்புச்சகோதரி காட்டியுள்ள மரியாதை, பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்ற பழமொழிக்கு எடுத்துக் காட்டாக ஆகியுள்ளது. 

தீவிர அதிமுகவாசிகளான என் நண்பர்களே அதிர்ச்சியில் உள்ளார்கள். ‘இந்தம்மா என்ன தான் நினைச்சுக்கிட்ட்டு இருக்கு’என புலம்புகிறார்கள்.  வைகோவும் கார்த்திக்கும் சேர்ந்தால் விஜயகாந்த் ஏற்படுத்திய அதே இழப்பை அதிமுக கூட்டணிக்கு ஏற்படுத்த முடியும். விஜயகாந்த்தின் வரவால் தான் இந்தத் தெனாவட்டு என்றால் இது சுத்த மடத்தனம்.
வி..டு..த..லை...விடுதலை!
மதிமுக ஓட்டுகளையும் நம்பியே கம்யூனிஸ்ட்டுகள் இருந்தனர். இப்போது மதிமுகவும் நாமகவும்(அதாங்க கார்த்திக் கட்சி) இல்லையென்றால், அவர்களுக்கு இழப்பே ஏற்படும். தற்பொழுது கம்யூனிஸ்ட்களும் தேமுதிகவும் தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மதிமுகவின் பெரிய பலம் உற்சாகமான விசுவாசமான தொண்டர்கள். வைகோ என்ற தனி மனிதரின் மேல் உள்ள மரியாதையில் திரண்ட கூட்டம் அது. தேர்தல் வேலை செய்வதில் அவர்கள் காட்டும் தீவிரத்தைப் பார்த்து அசந்திருக்கிறேன். அந்த தொண்டர் படை இல்லாமல் தேர்தலைச் சந்திப்பது அதிமுகவிற்கு பேரிழப்பே.

கார்த்திக் திமுகவிடம் பெட்டி வாங்கிக்கொண்டு தனியே நின்று ஓட்டைப் பிரித்து உதவினார். அவரையும் சீட்டு தருவதாகச் சொல்லி கூப்பிட்டு, கழுத்தறுத்து நடு ரோட்டில் நிறுத்தியுள்ளார் ஜெ. வைகோவை விட கார்த்திக் பரவாயில்லை, நேற்றே வெளியேறி விட்டார். வைகோவையும் வெளியேறி வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்! ’தன்னை நம்ப வைத்து கழுத்தறுத்து தேவரினத்தை அவமதித்து விட்டதாக’ கார்த்திக் தன் பிரச்சாரத்தை முன்னெடுத்தால் அதிமுகவின் ஓட்டு வங்கியான தேவரின ஓட்டுகள் கலையும்.

திமுகவிற்கும் காங்கிரஸ்க்கும் இணக்கமான உறவில்லாத இந்தச் சூழ்நிலையில் வைகோ செய்ய வேண்டியதெல்லாம் காங்கிரஸ் நிற்கும் 63 தொகுதிகளிலும் தீவிரமாக எதிர்த்துப் போட்டியிடுவதே. அதற்கு சீமான் போன்ற இன உணர்வாளர்கள் உதவ வேண்டியது கடமையாகும். மீண்டும் தமிழின உணர்வுடன் ஒரு கூட்டணி இங்கு அமைக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

காங்கிரஸ் நிற்கும் தொகுதிகள் மட்டுமல்லாது கோவில்பட்டி, சிவகாசி, விளாத்திகுளம் போன்ற மதிமுக செல்வாக்கு பெற்ற தென்மாவட்ட தொகுதிகளில் நின்றால் நிச்சயம் மரியாதையான வெற்றியைப் பெற முடியும். குறைந்தது அதிக வாக்குகளைப் பெற்று கட்சி அங்கீகாரத்தையும் மீட்க முடியும். முதலில் காங்கிரசுக்கு மாற்றாகவாவது மதிமுகவை நிலை நிறுத்த முடியும்.

பொதுஜனங்கள் மத்தியில் ஜெயலலிதாவின் போக்கு கடும் அதிருப்தியை உண்டு பண்ணியுள்ளது.  வேறு வழியின்றி ஜெ.வை ஆதரிக்கத் துணிந்த தமிழின உணர்வாளர்களும் வைகோவின் நிலையைப் பார்த்து வருத்தப் படுகின்றனர். மதிமுக தொண்டர்களும் விட்டது சனியன் என உற்சாகமாக உள்ளனர். ஆனால் தலைவர் தயாரா?


மேலும் வாசிக்க... "வைகோவை விடுதலை செய்த ஜெயலலிதாவுக்கு நன்றி!"

Wednesday, March 16, 2011

நான் எந்தக் கட்சியைச் சேர்ந்தவன்? (தேர்தல் ஸ்பெஷல்)

தேர்தல் ஸ்பெஷல் தொடரில் இதுவரை ஒவ்வொரு தலைவர்களைப் பற்றியும் பார்த்து வந்தோம். தேர்தல் வேறு நெருங்கி விட்டதால் இனியும் இப்படி நிதானமாக அலசிக்கொண்டிருக்க முடியாது.. எனவே ஜெயலலிதா-கலைஞரை மையமாக வைத்து இனி கூட்டணி அலசல் செய்யலாம் என்று இருக்கிறேன். இப்போது ஏதாவது ஒரு கூட்டணியை ஆதரிக்க வில்லையென்றால் வெறும் திண்ணைப் பேச்சாகவே இந்த தொடர் வரலாற்றில்(!) கருதப்பட்டு விடும். ஆகவே நான் எந்தக் கட்சியின் சார்பு நிலை எடுப்பது என்று யோசிக்கிறேன்...
என் தாய்-தந்தையர் தீவிர திமுக ஆதரவாளர்கள். ‘என்ன இருந்தாலும் எம்.ஜி.ஆரு ஒரு நடிகன் தானப்பா’ என என் அப்பா (இருந்த வரை) அடிக்கடி இளக்காரமாகச் சொல்வார். எம்.ஜி.ஆருக்கே அப்படியென்றால் ஜெயலலிதாவைப் பற்றி கேட்கவே வேண்டாம்..வைகோ மீது அவருக்கு தனி மதிப்புண்டு. அதிமுககாரங்க எங்க வீட்டுக்கு ஓட்டு கேட்டு வரவே மாட்டாங்க. 

ஆனால் பெரும்பாலான என் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். ஒருமுறை ஒரு பாராளுமன்றத் தேர்தல் நடந்தபோது வைகோ போட்டியிட்டார். அவருக்கு எதிராக யாரோ ஒரு அதிமுககாரர்! தேர்தல் நேரத்தில் நான் அதிமுக நண்பர்களுடன் தேர்தல் வேலை பார்த்தேன். தேர்தலுக்கு முதல் நாள் இரவும் ஓட்டு ஸ்லிப் கொடுத்தோம். மிகமுக்கிய புள்ளிகளுக்கு மட்டும் சரக்கு சப்ளை. இப்போதுள்ளது போல் அப்போது பணம் விளையாடவில்லை. கட்சிப்பொறுப்பில் உள்ளவர்களுக்கு மட்டும் சில ஆயிரங்கள் மிஞ்சும். அதுவும் தண்ணியாகச் செலவழியும்!

விடியவிடிய வேலை செய்துவிட்டு, மறுநாள் ஓட்டுப்போட எல்லாரும் ஒன்றாகச் சென்றோம். மெசின் கிடையாது. ஓட்டுச் சீட்டு தான். மதிமுக சின்னம் மேலே இருந்தது. இரட்டை இலை கீழே இருந்தது. இரண்டிற்கும் இடையில் நல்ல கேப்!. நான் மதிமுகவிற்கே குத்தினேன். அதை அதிமுக பூத் ஏஜெண்டாக இருந்த நண்பர் பார்த்துவிட்டார். ‘டேய்..மேல ஏண்டா குத்துறே’ன்னு கத்திவிட்டார். உடனே அவரை வெளியே அனுப்பிவிட்டார்கள்.

நான் வெளியே வந்தபோது மொத்த அதிமுக நண்பர்களிடம் அவர் சொல்லிக்கொண்டிருந்தார். ‘அநியாயமா கவுத்திட்டான்யா...ஏண்டா அந்தாளுக்குப் போட்டே’ன்னு கேட்டார். ‘வைகோ பார்லிமெண்டில் நன்றாக வாதம் செய்பவர். நம் பகுதி பிரச்சினைகளுக்காக பலமுறை பேசி இருக்கிறார்.ஆனால் அதிமுக சார்பில் நிற்கும் அந்த மனிதர் யார் என்றே நமக்குத் தெரியலையே.. அந்தம்மா இப்படித்தான் யாரையாவது புதுசா நிப்பாட்டுது. அவங்களும் சம்பாதிச்சிட்டு ஒதுங்கிடுதாங்க.அதான்..’ என்றேன். மற்ற அதிமுக நண்பர்கள் புன்சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தெரியும் ‘ரொம்ப படிச்சாலே பிரச்சினை தான்’னு!

சமீபத்தில் ஒரு ஜாதிக்கட்சி தலைவர் புதிதாகக் கிளம்பினார். என் பெரியப்பா அதில் ஒரு முக்கிய புள்ளி. எனவே அவர் மூலம் என்னைப் பற்றி கேள்விப்பட்டு, என்னிடம் நேரடியாகப் பேசினார். ’என்னைப் போன்ற படித்த இளைஞர்களுக்கு இன உணர்வு மிகமிக முக்கியம்’ என்றும் ‘கட்சிக்கு ஆள் சேர்த்துத் தருமாறும், ஏதாவதொரு பொறுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும்’என்றும் உணர்ச்சிப் பிழம்பாய் எடுத்துச் சொன்னார். ’எப்படியும் திமுக/அதிமுக கூட்டணியில் இரண்டு இடங்கள் வாங்கிவிட வேண்டும். அதில் ஒரு சீட் என் பெரியப்பாவிற்கு ’என்பது கூடுதல் டீலிங்! ஆனாலும் கடைசிவரை நான் ஒத்துழைக்க மறுத்து விட்டேன். என் பெரியப்பாவும் முடிந்தவரை முயற்சித்தார். அவர்களுக்கு ஒரு படித்த ‘பழமான’ முகம் தேவைப்பட்டது போலும். 

என்னைப் பொறுத்தவரை எந்தவொரு ஜாதியும், இருக்கின்ற பெரிய கட்சிகளின் பெயரில் கூடுவதே நம் ஜனநாயகத்திற்கு நல்லது. மேலும் ஜாதியின் பெயரால் கூடுவது நம் சமூக அமைதிக்கு நல்லதல்ல என்பது அனுபவப் பூர்வமாகவே எனக்குத் தெரியும். தேவர்-கவுண்டர் போன்றோருக்கு பிடித்தமான கட்சியாக அதிமுகவும், நாயக்கர்களுக்கு பிடித்ததாக மதிமுக-தேமுதிகவும், நாடார்களுக்கு நெருங்கியதாக திமுகவும் இருப்பது பலவகையில் நன்மையே..ஒரு பிரச்சினை என்று வரும்போது இவர்கள் கட்சிரீதியாகவே மூவ் பண்ணி, விஷயத்தை முடிப்பதைக் கண்டிருக்கிறேன். இது ஜாதி வெறியை ஜாதி அபிமானம் என்ற அளவிற்காவது குறைக்கும் என்பது என் அனுபவம்.

1991ல் ஜெ-சசியின் மோசமான ஆட்சி பிடிக்காமல் அடுத்து வந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்தேன் (தலைவர் வாய்ஸ் வேற..ம்..அது ஒரு கனாக்காலம்!)..தொடர்ந்து அதிமுகவிற்கும் திமுகவிற்கும் அவ்வப்போதைய நிலைமையைப் பொறுத்து வாக்களித்திருக்கிறேன். மேலே சொன்னபடி, இரு பெரியகட்சிகளுமே எனக்கு வேண்டியவையே. அதனால் யாராவது ஒருவருக்கு ஓட்டுப் போடுவது பெரிய பிரச்சினையாக இல்லை!

இப்போ உங்களுக்கே புரிஞ்சிருக்கும் நான் எந்தவொரு கட்சி சார்பும் இல்லாதவன்னு. ஓட்டுப் போடறவங்கள்ல 30% பேரு என்னை மாதிரி தான். கட்சி சார்புல விழுகிற ஓட்டுதான் வெற்றியைத் தீர்மானிக்கும்னா ஒரே கட்சி ஆட்சியில் தொடர்ந்திருக்கும். ஆனால் இங்கெ அப்படி இல்லை. எனது நண்பர்கள்/உறவினர்கள் சிலரும் என்னை மாதிரியே..நாங்க தான் ஆட்சியைத் தீர்மானிகிறதே..மற்றபடி, கட்சியின் தீவிர விசுவாசிகள்/தொண்டர்கள் கட்சி என்ன செய்தாலும் விட்டுத் தர்றதே இல்லை. அவங்களுக்கே ஓட்டு போடுவாங்க..என் தாய்-தந்தையர் உதய சூரியனுக்கு ஓட்டு போட்ட மாதிரி..என் நண்பர்கள் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டமாதிரி!

பெரும்பாலான மற்ற வலைப்பூக்களில் வரும் தேர்தல் கட்டுரைகளுக்கும் என் பதிவுகளுக்கும் உள்ள மிகப்பெரும் வித்தியாசமே ’நான் ஒரு சாமானியன்..சராசரி தமிழரை பிரதிபலிப்பவன்..சராசரித் தமிழனும் என்னைப் போன்றே குழப்பத்தில் இருப்பவன்’ என்பதே. ’அம்மா ஆட்சிக்கு வரணும்னு ஜிங்சா அடிப்பதாக’வும் கமெண்ட் வாங்கியிருக்கிறேன். ’தீவிர திமுக அனுதாபி’ என்றும் கமெண்ட் விழுந்திருக்கிறது. 

எந்தவிதமானதொரு கொள்கைக்கும் கட்சிக்கும் கட்டுப்படாத சாமானிய மனதின் சிந்தனைகளே இந்தத் தொடர். தற்போதைய ஆட்சி தொடர வேண்டுமா வேண்டாமா என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!


மேலும் வாசிக்க... "நான் எந்தக் கட்சியைச் சேர்ந்தவன்? (தேர்தல் ஸ்பெஷல்)"