Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Thursday, February 20, 2014

போண்டா சாரும் கஸ்டமர் கேரும்

டிஸ்கி: இன்னைக்கு ‘ஆஹா கல்யாணம்’ன்னு ஒரு படம் ரிலீஸ் ஆகியிருக்கு. ஏதோ ஒரு சூப்பர் ஹிட் இந்திப்படத்தின் ரீமேக்ன்னு சொன்னாங்க. ஆனாலும் போஸ்டர் மற்றும் படப்பெயரைப் பார்த்தாலே, பயமா இருந்ததால நான் போகலை. யாராவது பார்த்துட்டு சொல்லட்டும். நம்ம சொம்பு, நமக்கு முக்கியம்! (இப்போ பிரம்மன் ரிலீஸ் ஆகிடுச்சு..காலையில் விமர்சனம் வரும்!)

நான் பி.ஈ. ஃபைனல் இயர் படிக்கும்போது, புராஜக்ட் பண்ண வேண்டிய நேரம் வந்தது. அப்போ போண்டா சார்கிட்ட புராஜக்ட் பண்ணுவோம்ன்னு முடிவு பண்ணோம். போண்டாங்கிறது நாங்க வச்ச பட்டப்பேரு. ஆளு பார்க்க அழகா இருப்பாரு. கன்னம் எல்லாம் உப்பிப்போய், முகமே போண்டா மாதிரி இருந்ததால போண்டா சார் ஆனார். ரொம்ப நல்ல மனுசன் வேற. அதனால அவர் தான் நமக்கு சரிப்பட்டு வருவார்ன்னு அவரைப் பிடிச்சோம். 
பெட்ரோல் எஞ்சினை எல்.பி.ஜி. எஞ்சினா மாத்தி, பெர்ஃபாமன்ஸ் அனலைஸிஸ் பண்ணி, ஒரு தீஸிஸ் சப்மிட் பண்ணலாம்ன்னு சொன்னார். காலேஜ் லேப்ல இருந்த பெட்ரோல் எஞ்சினையே கன்வெர்ட் பண்ணலாம்ன்னு ப்ளான்.

அதைக் கேட்டதும் நமக்குத்தான் பக்குன்னு ஆகிடுச்சு. ஏன்னா, அப்போ எங்க கிராமத்துலேயே கேஸ் அடுப்பு கிடையாது. அதனால எல்.பி.ஜி. பத்தி நாம தினத்தந்தி மூலமா தெரிஞ்சிக்கிட்டதெல்லாம், அது வரதட்சணைக் கொடுமைக்கு யூஸ் ஆகிற ஒரு வெப்பன்னு தான். கலர் வேற சிவப்பா அடிச்சு, மண்டி ஓடு சிம்பல்லாம் போட்டிருப்பாங்களா, பார்த்தாலே வயத்தைக் கலக்கிடும். அதை வச்சு புராஜக்ட் பண்ணனும்ங்கிறதை என்னால நினைச்சுப்பார்க்கவே முடியலை. 

அதானால “சார்..ராமர் பிள்ளை பெட்ரோல் பத்தி வேணா அனலைஸிஸ் பண்ணுவோமே?’ன்னு கெஞ்சிக் கேட்டும் மனுசன் ஒத்துக்கலை. வேற வழியே இல்லாம களத்துல குதிச்சோம். எஞ்சின், எஞ்சின்னு டெக்னிக்கலா பேசினால் உங்களுக்குப் புரிகிறதோ, இல்லையோ! எனவே...கீழே உள்ள ஸ்டில்லில் நமீதாவின் உட்காரும் இடத்திற்கு கீழே மறைந்து இருப்பது தான் எஞ்சின் ஆகும்!

அப்போ மதுரைல ரெண்டு பேர் தான் பெட்ரோல் எஞ்சினை கேஸ் எஞ்சினா மாத்திக்கிட்டு இருந்தாங்க. அதுல ஒருத்தர் 5000 ரூபாய் வாங்கி, எஞ்சினை கன்வெர்ட் பண்ணிக் கொடுத்தார். அப்புறம் எங்க ஆராய்ச்சியை ஆரம்பிச்சோம். நான்கு நாட்களா எஞ்சினை ஓட்டி, நாங்க எழுதுன ரிப்போர்ட் இப்படி இருந்தது:

அதாகப்பட்டது:
எஞ்சின் ஓடுது

ஒரு ஊருல:
எஞ்சின் ஓடுது

உரிச்சா:
எஞ்சின் ஓடுது

நெகடிவ் பாயிண்ட்ஸ்:
எஞ்சின் ஓடுது

 பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
எஞ்சின் ஓடுது

நாலு நாள் கழிச்சு வந்து பார்த்த போண்டா சார் ,காண்டாகிட்டார். ‘ஏன்பா, நாலு நாள் எஞ்சினை ஓட்டி, எஞ்சின் ஓடுதுன்னு தான் கண்டுபிடிச்சீங்களா?’ன்னு கொதிச்சுட்டார். அப்புறம் எப்படி புராஜக்ட்டை முடிச்சோம்ன்னு விளக்கிச் சொன்னா, தேடி வந்து என் டிகிரி சர்டிபிகேட்டை பிடிங்கிட்டுப் போயிடுவாங்க என்பதால், அதை விட்டுவிட்டு மெயின் மேட்டருக்கு வருவோம்.

எஞ்சின் மாத்த 5000 ரூபாய் கேட்ட ஆள் என்ன சொன்னாரென்றால் ‘நாளைக்கு காலைல வந்து 5000 ரூபா கொடுத்திடுங்கப்பா..அடுத்த வாரம் வந்து எஞ்சினை மாத்திக் கொடுத்துடறேன்’ என்று. நாங்களும் காலையில் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு வந்து, போண்டா சாரிடம் சொன்னோம். அப்போது அவர் சொன்னது தான் மெயின் மேட்டர். ‘தம்பி..இந்தியால காசை முழுசா கொடுத்திட்டு சர்வீஸ் வாங்கணும்ன்னு நினைச்சா ஆப்பு வச்சிடுவாங்க. அட்வான்ஸ் வேணா கொடுக்கலாம். முழு வேலையும் முடிச்சு, எஞ்சின் ஓடுன அப்புறம் தான் காசுன்னு சொல்லிடுங்க. இங்க மட்டும் இல்லை, எங்கேயுமே ஃபுல் பேமெண்ட் பண்ணிடாதே’ன்னு சொன்னார். அது எவ்வளவு கரெக்ட்டுன்னு படிச்சு முடிச்சு, வெளில வந்து சில இடத்துல அனுபவப்பட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.
அப்புறம் நண்பர்கள், சொந்தங்கள், மனைவிகள்..ச்சே, மனைவின்னு எல்லாருக்கும் அந்த போண்டா தியரியை சொல்றது நம்ம வழக்கம். அப்படி ஒரு தடவை சென்னைல இருந்த ரூம் மேட்கிட்டயும் சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்தது. வாராவராம் ட்ரெஸ் அயர்ன் பண்ணி வாங்கிக்கிட்டு இருந்தோம். அப்போ நண்பர் என்ன முடிவு பண்ணார்ன்னா, ஒன்னாம் தேதியே அட்வான்ஸா மொத்தமா ஒரு அமவுண்ட் கொடுத்திடுவோம்ன்னு நண்பர் முடிவு பண்ணார். நான் அவர்கிட்ட போண்டா தியரியை சொல்லவும் டென்சன் ஆகிட்டார். ‘அடே பூர்ஷ்வாப்பயலே, உழைக்கு மக்களை தவறாக நினைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள். அந்நிய நாட்டு கம்பெனியில் அடிமை உத்தியோகம் பார்க்கும் உனக்கு, அடித்தட்டு மக்களைப் பற்றிப் பேச என்னடா தகுதி இருக்கிறது?’ன்னு பொங்கித் தீர்த்துட்டார். அப்புறம் அவர் மட்டும் ஒன்னாம் தேதியே முழுக்காசும் கொடுத்தார். நான் வழக்கம்போல்!

எனக்கு மூன்றாவது நாளே எல்லாத்துணியும் வந்து சேர்ந்தது. அவருக்கு ரெண்டு செட் மட்டும் வந்தது, ‘சார்..கொஞ்சம் டைட் ஒர்க்கு சார்..ரெண்டு நாள்ல மீதி துணியை கொடுத்திடறேன்’ என்று அவர் சொல்லவுமே நான் போண்டா தியரியை பிராக்டிகலாகப் பார்க்கும் அனுபவத்திற்கு தயாரானேன். ரெண்டுநாளில் ஒன்றும் வரவில்லை. பின் இவரே தேடிப்போய் ‘போடறதுக்கு ட்ரெஸ் இல்லைய்யா’ என்று புலம்பிய பின், ‘அப்படியே ஒரு நிமிசம் நில்லுங்க சார்’ என்று சொல்லிவிட்டு ஒரு செட் மட்டும் ரெடி செய்து கொடுத்தார் அயர்ன்காரர். அப்புறம் அந்த மாதம் முழுக்கவே ஒவ்வொரு செட்டாக நின்று வாங்கித்தான் கொடுத்த காசை கழிக்க வேண்டி வந்தது. எப்படியோ, அந்த மாத முடிவில் அதுவரை புரட்சிக்காரனாக இருந்த நண்பர், மனுசனாக ஆகிவிட்டார். போண்டா தியரியின் மகத்துவத்தை அவரும் ஒரு வழியாக ஏற்றுக்கொண்டார்.
வருகின்ற வருமானத்தை சரியாக ப்ளான் செய்து செலவளிக்கும் வழக்கம், நம் மக்களுக்கு குறைவு. அடுத்த ஒரு மாதத்திற்கான காசு, ஒரே நாளில் கொடுத்தால் ஒரு வாரத்தில் அதை செலவளித்து முடித்துவிடுவதே நம் வழக்கம். எனவே அடுத்து யார் காசு கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு முன்னுரிமை தரவே மனது போகும். ஆகவே மக்களே, போண்டா தியரியை மைண்ட்ல வைத்துக்கொள்ளுங்கள். வாயில தோசை, அப்புறம் தான் கைல காசு!

மேலும் வாசிக்க... "போண்டா சாரும் கஸ்டமர் கேரும்"

Sunday, August 25, 2013

மன்மோகன் சிங்கை குறை சொல்லும் அப்பாடக்கர்களே..

ஏதோ கொஞ்சம் ரூபா மதிப்பு குறைந்துவிட்டது. உடனே 2 X 2 என்றால் என்னவென்று கால்குலேட்டர் இல்லாமல் கணக்கப்போடத் தெரியாத சவலைகள், பொருளாதார மேதை திரு.மன்மோகன் சிங் அவர்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அவ்வளவு கேவலப்படுத்துகிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக திரு.மன்மோகன் சிங் அவர்கள் செய்த சாதனைகளையும், ஒரு இந்தியனாக அவர் பிறந்ததற்காக, நாம் பெருமைப்படுவதன் அவசியத்தையும் விளக்குவதே இந்தப் பதிவு.
 பத்தாண்டுகளுக்கு முன்பு உலகைப் பிடிக்க ஆரம்பித்த பொருளாதாரத் தேக்க பூதம், 2007ல் முழுவீச்சில் எல்லா நாடுகளையும் சிக்கலில் தள்ளியது. பெரியண்ணன் அமெரிக்காவே ஆடிப்போய் விட்டது. அங்கேயே வேலையில்லாத் திண்டாட்டம், புதிய தொழில்கள் தொடங்கமுடியா நிலை, நிறுவனங்கள் கையில் போதிய நிதி/ஆர்டர் இல்லாமை என அமெரிக்கா டவுசர் கழண்ட காலம் அது. அப்போது டாலரின் மதிப்பு 40 ரூபாய்களில் இருந்தது.

அமெரிக்காவை அமெரிக்கர்களே காப்பாற்ற முடியாத நேரத்தில், மன்மோகன் அவர்கள் அவதார்-ஆக உருவெடுத்தார்,

அப்போது அமெரிக்காவிடம் ஒரு போர்க்கப்பல் இருந்தது. அந்த கப்பல், 30 வருடங்கள் முழுமையாக உபயோகப்படுத்தப்பட்ட, அடுத்து உடைத்து வீசப்படவேண்டிய கப்பல். அப்போது நம் அவதார் கண் திறந்தார். அந்தக் கப்பலை இந்தியக் கப்பல்படைக்காக 400 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்வதாக அறிவித்தார். அதே 400 கோடி ரூபாய் நிதி திரட்டவே நெய்வேலி என்.எல்.சி.-யை தனியார் மயமாக்குவதாக, தற்போது அவதார் சொல்வதில் இருந்து, 400 கோடி என்பது லேசுப்பட்ட சமாச்சாரம் அல்ல என்று நாம் அறிந்து கொள்ளலாம்!

அமெரிக்கா என்பது மக்கள் அல்ல. அங்குள்ள நிறுவனங்கள் தான். அது ஒரு முழு முதலாளித்துவ தேசம். ஆனாலும் அதிசயமாக மக்கள் ஒரு விஷயத்திற்காக ஒன்றுகூடிப் போராடி, வெற்றிகண்டர்கள். அது, அங்கே இனிமேல் அணு உலை கட்டக்கூடாது என்பது தான். அணு உலை அமைக்கும் நிறுவனங்கள் எல்லாம் நொடித்துப்போயின.

நிறுவனங்கள் நொடித்தால், வேலை இழப்பு, வேலையில்லாத் திண்டாட்டம். என்ன செய்வது என்று அவர்கள் திகைத்தபோது, அவதார் மீண்டும் கருணை காட்டினார். இந்தியாவில் பலத்த எதிர்ப்பையும் மீறி அணுசக்தி ஒப்பந்தம் மூலம் 20 உலைகளுக்கு மேல் அமைக்கப் போவதாக அறிவித்தார். 'ஆஹா..ஆஹா..2000 வருடங்கள் கழித்து வருவதாகச் சொல்லிச் சென்ற இயேசுபிரான் இவர் தானோ?' என்று அமெரிக்கர்களே குழம்பும் வண்ணம், அடுத்தடுத்து தனது பொருளாத அறிவின் மூலம் பல திட்டங்களை செயல்படுத்தினார். அதுவும், இந்தியாவில் இருந்தபடியே. அடடா..அடடா!

ஏதோ நம்மால முடிஞ்சது..!
 இப்போதுகூட வால்மார்ட் போன்ற ஏழை பொட்டிக்கடை முதலாளிகளுக்கு இந்தியாவின் வாசலைத் திறந்துவிட்டிருக்கிறார். அவர்கள் கடை வைத்தாலும் மக்கள் வாங்க வேண்டுமே? 'இவர்கள் ரேசனிலேயே வாழ்வதற்கு அரிசி, பருப்பும், சாவதற்கு மண்ணெண்ணெயும் வாங்கிக்கொண்டிருக்கிறார்களே' என்று சிந்தித்த நம் பொருளாதரச் சிற்பி, மெதுவாக ரேசன் கடைகளை அழிக்கும் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, இனிமேல் உங்கள் அக்கவுண்ன்டிலேயே காசு போட்டு விடுவோம். நீங்கள் அதை எடுத்துக்கொண்டு, இப்போதைக்கு அண்ணாச்சி கடையிலும், பின்னாளில் வால்மார்ட்டிலும் பொருள் வாங்கிக்கொள்ளலாம். இந்திய அரசின் நிர்வாகச் சுமையைக் குறைத்த மாதிரியும் ஆச்சு, அமெரிக்க பொட்டிக்கடை அண்ணாச்சிகளுக்கு கஸ்டமர் பிடித்துக்கொடுத்த மாதிரியும் ஆயிற்று.

எவ்வளவு தீர்க்க தரிசனம் உள்ள, பொருளாதார சிந்தனைச் சிற்பி அவர். இவ்வாறாக, பல்வேறு திட்டங்கள் தீட்டி, திவாலாகப் போன அமெரிக்காவையே காப்பாற்றிய மன்மோகனையா குறை சொல்கிறீர்கள்? ஒரு இந்தியனால் அமெரிக்கா மேலெழுகிறது என்பது உலக அரங்கில் நமக்கெல்லாம் பெருமை என்று புரியவில்லையா அறிவிலிகளே?

டாலரில் நாம் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தும் நேரம் இது என்று சொல்கிறார்கள்.  கூடவே வட்டியும் உண்டு. அதனாலேயே ரூபாய்,அளவுக்கதிகமாக மதிப்பு வீழ்த்தப்படுவதாக பொருளாத உலகில் ஒரு கிசுகிசு உலவுகிறது. அதாவது 40 ரூபாய் கடன் வாங்கிவிட்டு, தற்போதிய மதிப்பில் 65 ரூபாய் திருப்பிச் செலுத்தப் போகிறோம். அமெரிக்காவிற்கு எவ்வளவு பெரிய நன்மையை நாம் செய்கிறோம்! அப்பேர்ப்பட்ட வல்லரசையே தூக்கி நிறுத்தும் நிஜ வல்லரசு நம் பொருளாதார மேதை மன்மோகன் என்பதை நினைவில் வையுங்கள்.

எங்கள் மண்ணுமோகனிடம் நேர்மை இல்லாமல் இருக்கலாம், சூடுசுரணை இல்லாமல் இருக்கலாம்..ஏன், தேச பக்திகூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரிடம் பொருளாதர அறிவு இல்லை என்று சொல்லாதீர்கள். தான் நினைத்ததை முடித்த, அமெரிக்க ரட்சகர் அவர்.

வாழ்க மண்ணு! வளர்க அமெரிக்க சிட்டிசன் ஆகிவிட்ட அவர் பொண்ணு!



மேலும் வாசிக்க... "மன்மோகன் சிங்கை குறை சொல்லும் அப்பாடக்கர்களே.."

Thursday, October 20, 2011

செலவைக் குறைக்க..கோடீஸ்வரன் ஆக!(அடேங்கப்பா..)

சென்ற வாரம் ஃபேமிலி ப்ளானிங் பற்றிய பதிவிற்கு நீங்கள் கொடுத்த ஆதரவை யாம் மெச்சினோம். பார்த்திபன் தாரத்தைப் பற்றி மட்டுமல்லாது பொருளாதாரத்திலும் நீங்கள் காட்டும் ஆர்வம் எமக்கு ஊக்கமளிப்பதால்.....
பொருளாதாரத்தில் நமக்குப் பிடிக்காத வார்த்தை செலவு தான். வரவு மட்டுமே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றோம். ஆனாலும் என்ன செய்வது, நமக்கு வரும் வரவு என்பது ஒருவருக்கு செலவு தானே?

செலவைக் குறைப்பது என்று முடிவு செய்தவுடன் பலரும் செய்வது உடனே பயங்கர சிக்கனவாதியாக ஆகிவிடுவது. ஒன்று, தாராளமாகச் செலவளிப்போம், அல்லது நேர் எதிர்முனைக்குச் சென்று கஞ்சனாக ஆகிவிடுவோம். ஆனால் இப்படி இறுக்கிப் பிடிப்பது ரொம்ப நாள் நீடிக்காது. கொஞ்சநாளிலேயே திரும்பவும் கன்னாபின்னாவென்று செலவளிக்க ஆரமபித்துவிடுவோம். எனவே நிதானமாக இதை(யும்) அணுகுவது எப்படி என்று பார்ப்போம்.

சிக்கனமாக குடும்பம் நடத்தவும் சேமிக்கவும் அடிப்படைத் தேவை, நாம் செலவளிக்கும் பணத்திற்கு தெளிவாக கணக்கு வைத்திருப்பது. அது ஐம்பது பைசாவாகவே இருந்தாலும் கணக்கில் வையுங்கள். ’என்னய்யா இது..நப்பித்தனமா இருக்கே’ன்னு யோசிக்கிறீர்களா..உங்களுக்குத் தெரிந்த பணக்காரர்கள்/பிஸினஸ்மேன் பலரும் அப்படி துல்லியமாக கணக்கு வைக்கும் பழக்கம் உள்ளவர்கள் தான். எனக்குத் தெரிந்த ஒரு பிஸினஸ்மேன் பழைய பேப்பர்காரரிடம் ஒரு ரூபாய்க்கு அரைமணிநேரம் வாதாடியதைப் பார்த்திருக்கிறேன். 

உங்கள் செலவுகளைக் கணக்கு வைப்பது முக்கியம். அதற்குத் தேவை ஒரு எக்செல் ஷீட். தினமும் இரவில் தூங்கப்போகும் முன் கணக்கு எழுதுவதையும் முக்கிய வேலையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான மாதிரி எக்செல் கீழே :
மூன்று மாதங்களுக்கு எதையுமே குறைக்க முற்படாமல், வழக்கம்போல் வாங்கி வாருங்கள். அதை இங்கே எழுதியும் வாருங்கள். மூன்றாவது மாத முடிவில், குடும்பத்தோடு உட்கார்ந்து என்ன செலவு செய்திருக்கிறோம்-மூன்று மாத உழைப்பில் எவ்வளவு மீதம் ஆகியுள்ளது என்று பாருங்கள். உங்களுக்குத் தெரியும்,உங்கள் பணம் எங்கெல்லாம் வீணாகப் போகிறது..அதை எப்படித் தவிர்ப்பது என்பது!

மேலே உள்ள ஷீட்டில் எழுதும் முன்பு, தினசரிச் செலவுகளை இன்னும் தெளிவாக தனியாக எழுதிக்கொள்வது நல்லது. அதற்கு இந்த மாதிரியான ஷீட் உதவும் :
உங்களுக்கு ஏற்றபடி இந்த இரு அட்டவணைகளையும் மாற்றிக்கொள்ளுங்கள். இப்போது முதல் ஷீட்டைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

ஒரு மாதத்தின் முதல்நாளில் அல்லது சம்பள நாளில் உங்கள் மொத்தக் கையிருப்பு ( பேங்க் பேலன்ஸ், கையில் உள்ள கேஷ் போன்ற அனைத்தும் சேர்த்து). இந்த அட்டவணையை இரண்டாகப் பிரித்துக் கொள்ளுங்கள். 
முதலாவது ’ப்ளான்’. இதில் இந்த மாதம் தோராயமாக என்னென்ன வரவு மற்றும் செலவு வரும் என்று குறித்துக் கொள்ளுங்கள். (சில மாதங்கள் கழித்து இதை 90% உங்களால் அனுமானிக்க முடியும்)

இரண்டாவது பகுதியில் அன்றாட வரவு/செலவுகளின் தொகுப்பை குறித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்றாற்போல் இதனை மாற்றிக்கொள்ளுங்கள். மாதக் கடைசியில் ஆக்சுவல் பகுதியில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசமே அந்த மாத உங்கள் சேமிப்பு. இந்த அட்டவணையில் அது 3000 ரூபாய் தான். ’இப்படி மாதம் மூவாயிரம் சேர்த்து என்னிக்கு உருப்பட’-என்று யோசனை வருகிறதல்லவா? கரெக்ட், அந்த யோசனை தான் உங்களை மேம்படுத்தும், முன்னேற்றும்.

அடுத்து உள்ள அசெட் பகுதி உங்கள் கைவசம் உள்ள பணத்தினைக் காட்டும். லையபிலிட்டி பகுதி உங்கள் கடன்களைக் காட்டும். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் பாசிடிவாக இருந்தால், நீங்கள் சரியான வழியில் செல்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லையேல், நீங்கள் உங்கள் செலவுகளை ரொம்பவே கண்காணிக்க வேண்டும். இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் இந்த மாதத்திற்கான க்ளோசிங் பேலன்ஸ்; அதுவே அடுத்த மாதத்திற்கான ஓப்பனிங் பேலன்ஸ் ஆகும்.

இங்கே சொல்லப்படும் விஷயங்கள் அனைத்தும் ,என் சொந்த வாழ்க்கையில் நான் பயன்படுத்தி வெற்றி கண்டவையே. அதையே உங்களுக்கும் சொல்கின்றேன். இங்கே சொல்லப்படுபவை உங்களுக்கும் பயன்பட்டால், அதைவிட நமக்கு மகிழ்ச்சி தருவது வேறு ஒன்றும் இல்லை!

விரைவில் வேறொரு டாபிக்குடன் பொருளாதாரம் பற்றிப் பார்ப்போம். அதுவரை...

வணக்கம்!

மேலும் வாசிக்க... "செலவைக் குறைக்க..கோடீஸ்வரன் ஆக!(அடேங்கப்பா..)"

Friday, October 14, 2011

செலவைக் குறைக்க…சேமிப்பை அதிகரிக்க!

பொருளாதாரம் பற்றிய பதிவு போட்டு ரொம்ப நாள் ஆனது போல் தெரிகிறது. எனவே இன்று Family Planning பத்திப் பார்ப்போம்.  (ஃபேமிலியை சிக்கனமா நடத்துவதுக்கு ப்ளான் செய்வது தானே ஃபேமிலி ப்ளானிங்?)
செலவை கட் பண்ணுங்கப்பா!
பணம் செலவளிப்பதில் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று உடைப்புப் பிரச்சினை, மற்றொன்று ‘திரும்ப வரும் கடன்’ பிரச்சினை. 

உங்களிடம் 100 ரூபாய் முழு நோட்டு இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம்.அதை மாற்றாமல் வைத்திருந்தால், அது அப்படியே இருக்கும்.(ஆமா..). ஆனால் மாற்றி விட்டீர்கள் என்றால், மாயம் செய்தது போன்று உடனே காலி ஆகி விடும். உடைக்காதவரை அது நம் சொத்து. உடைத்துவிட்டால் ‘கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சு..ஆத்தை விட்டு பறந்து போயிடுச்சு’ கதை தான். இது உடைப்புப் பிரச்சினை என்று ‘அழைக்கப்படுகிறது’.

எனவே நாங்கள் பேச்சுலராக இருந்த காலத்தில், அருகில் உள்ள மளிகைக்கடையில் கணக்கு வைத்துக்கொள்வது வழக்கம். சோப்பில் ஆரம்பித்து கறிவேப்பிலை வரை எதற்கும் கேஷ் கிடையாது. அக்கவுண்ட் தான். அந்த கடையில் விலை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனாலும் உடைப்பதால் வரும் சேதாரத்தை ஒப்பிடும்போது, அந்த விலையுயர்வு குறைவு தான்.

இந்த ’உடைப்பு’ விஷயத்தை கோவையில் என்னுடன் வேலை பார்த்த நண்பர்களுக்கும் சொல்லியிருந்தேன். அதில் ஒருவர், மிஸ்டர் எக்ஸ் ரொம்பவே விவரமாக அதை ஃபாலோ செய்தார். திங்கட்கிழமை ஒரு நண்பரிடம் ‘மாப்ள..ஒரு பத்து ரூபா இருந்தா கொடேன்..அப்புறம் தர்றேன்’ என்று சொல்லி வாங்கிக்கொண்டார். அன்றே அது செலவாகியது.அடுத்த நாள் வேறொரு நண்பரிடம் ‘பெட்ரோல் போடணும்..ஒரு முப்பது ரூபா மட்டும் கொடு’ என்று வாங்கிக்கொண்டார். அன்று மாலையே என்னிடம் ‘ஒரு இருபது ரூபா கொடுய்யா” என்று வாங்கிக்கொண்டார்.
வடை போச்சே!
இப்படியே அந்த ஒரு வாரத்தையும் 5-10-20 ரூபாய் நண்பர்களிடம் வாங்கியே ஓட்டினார். வெள்ளிக்கிழமை கணக்குப் பார்த்தால் 100 ரூபாய் செலவாகியிருந்தது. நேராக ஏடிஎம் போனார். 100 ரூபாயை மட்டும் எடுத்தார். எல்லோருக்கும் செட்டில் செய்துவிட்டார். இப்படியே இரண்டு வாரங்கள் வெற்றிகரமாக ஓட்டிவிட்டார். அதற்கு அடுத்த வாரம் அவரின் ட்ரிக்கை கண்டுபிடித்து கும்மி விட்டோம். ‘நீ சொன்னது சரிதானா-ன்னு டெஸ்ட் பண்ணேன்..கரெக்ட் தாம்யா..எனக்கு வாரம் 300ரூபாய்க்கு மேல செலவாகும். இப்போ 100 ரூபாய் தான் ஆகுது’ன்னு கும்மு வாங்கினப்போ சொன்னார்.

இந்த உடைப்பு மேட்டரை நீங்களும் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம். எனவே, செலவைக்குறைக்க முதல் வழி உடைப்பைத் தவிர்ப்பதே. ஏதாவது வாங்க வேண்டுமென்றால் சிறுசிறு பொருட்களுக்கெல்லாம் கடைக்கு ஓடாமல், மொத்தமாக வாங்கப்போவது நல்லது. ஆனால் இப்போது டெபிட் கார்டு மூலம் பர்ச்சேஸ் செய்வதால் எனக்கு உடைப்புப் பிரச்சினை இல்லை. உங்களுக்கும் அப்ப்டியே இருக்கலாம். இருப்பினும் இதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இரண்டாவது ’வரும் கடன்’ பிரச்சினை. வாராக் கடன் தானே பிரச்சினை..திரும்பி வரும் கடனில் என்ன பிரச்சினை என்று நீங்கள் யோசிக்கலாம். அந்த மாத சேமிப்பாக நம்மிடம் 500 ரூபாய் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அப்போது ஒரு நண்பர் அவசர உதவியாக 500 ரூபாயைக் கேட்கிறார். நாமும் கொடுத்து விடுகிறோம். பொதுவாக அது திரும்ப வராது. அல்லது பலநாள் போராடி, திரும்பத் திரும்ப சலிக்காமல் கேட்டபின் ‘இவன் விட மாட்டான் போலிருக்கே’ என்று அவர் நொந்துபோய் திரும்பக் கொடுக்கலாம்.

அப்படி பலநாள் போராடி வாங்கியதும் சந்தோசத்தின் உச்சிக்குப் போய் விடுவோம். அது அந்த மாத சேமிப்பு. எனவே சேமிப்பாக எங்காவது முதலீடு செய்யப்பட வேண்டியது என்பதையே சுத்தமாக மறந்துவிட்டு ‘மாப்ள..படத்துக்குப் போலாமா..அப்படியே நைட் டின்னருக்கு ஏதாவது ஹோட்டலுக்குப் போகலாம்’னு ஜாலியா செலவழித்தே அதைக் காலி செய்து விடுவோம். அதுக்கு வாங்காமலேயே இருந்திருக்கலாம்.

எனவே, கொடுத்த கடன் திரும்பி வரும்போது, எந்த பணத்தை/எதற்காக வைத்திருந்த பணத்தைக் கொடுத்தோம் என்று யோசியுங்கள். அதே காரணத்திற்கே அதைச் செலவளியுங்கள். முடிந்தால் ’திரும்பி வரும் கடன்- பணம் சேமிப்புக்கு மட்டுமே..அவன் திருப்பித் தரலேன்னா என்ன செய்திருப்போம்’ என்று யோசித்து அதை சேமிப்பாக முடக்குங்கள்.
இந்த பையனுக்குள்ளயும் என்னமோ......
உடைப்புப் பிரச்சினைக்கு இணையான பிரச்சினை டெபிட் கார்டு பர்ச்சேஸ் மூலம் வருகிறது. பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் செல்ஃப் சர்வீசாக நாமே வண்டி நிறைய பொருட்களை அள்ளும் வசதியை வைத்திருக்கிறார்கள். எனவே 10 பொருட்கள் வாங்க்போனால், 30 பொருட்களோடு வருகிறோம். 

அதனைத் தவிர்க்க எளிய வழி போகும்பொதே ஒரு பேப்பரில் தேவையானதை லிஸ்ட் பண்ணிக்கொண்டு போவது. கடையில் வேறேதெனும் அவசியம் தேவை என்று தோன்றினாலும், நாளை வருவோம் என்று ஒருநாள் தள்ளிப்போடுங்கள். வீட்டிற்கு வந்தபினும் அதே தேவை இருப்பதாகத் தோன்றினால், வாங்கலாம். அதில் 75% பொருட்களை நிச்சயம் வாங்க மாட்டீர்கள்.

இப்போதைக்கு இதை நினைவில் வையுங்கள். அடுத்த வாரம் ’ஃபேமிலி ப்ளானிங்(!)’ பற்றி இன்னும் கொஞ்சம் பார்ப்போம்.

மேலும் வாசிக்க... "செலவைக் குறைக்க…சேமிப்பை அதிகரிக்க!"

Friday, September 2, 2011

பணக்காரர் ஆக பாபிலோன் சொன்ன 7 டிப்ஸ்!

டிஸ்கி : அது நடிகை பாபிலோனா அல்ல, பாபிலோன் நாடு..நன்றாகப் படிக்கவும்.

சிறுவயதில் பள்ளிப்பாடத்தில் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று பாபிலோனின் தொங்கும் தோட்டம் என்று படித்திருப்பீர்கள்.(மீண்டும் டிஸ்கியைப் படிக்கவும்). அப்படிப் புகழ்பெற்ற பாபிலோனின் மன்னர் சார்கன் மக்கள் மேல் அக்கறை கொண்டவர்.
தன் மக்களில் ஒரு சிலர் மட்டும் பணக்காரர் ஆகிக்கொண்டே போக பலரும் ஏழையாக இருப்பது ஏன் என்று கவலை கொண்டார் மன்னர். மந்திரியை அழைத்து ஏன் இப்படி நடக்கிறதென்று கேட்டார்.

அதற்கு மந்திரி “ஒருவேளை அந்த சிலருக்கு மட்டும் எப்படி பணக்காரர் ஆவதென்ற வித்தை தெரிந்திருக்கலாம். அப்படித் தெரிந்துகொண்டு சிலர் முன்னேறுவதைத் தவறென்று சொல்ல முடியாதே?” என்று கேட்டார்.

“நீர் சொல்வதும் சரி தான்..ஆனால் அந்த ரகசியம் தெரிந்தவர் ஏன் அதை தெரியாதோருக்கும் சொல்லக்கூடாது அமைச்சரே?..யார் இந்த பாபிலோனின் பெரும் பணக்காரர்?” என்றார் மன்னர்.

”ஆர்கட் தான்..கடும் வறுமையுடன் இளம்வயதில் கஷ்டப்பட்டவன். இப்போது நம் நாட்டிலேயே அவன் தான் பணக்காரன். அவனை நாம் கேட்கலாம் “ என்று மந்திரி சொன்னதை மன்னரும் ஆமோதித்தார்.

அரசவைக்கு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டான் ஆர்கட். மக்களும் அங்கே குழுமினர். மன்னரே விஷயத்தை எடுத்துச் சொன்னார்.

“ஆகவே ஆர்கட், ஏழையாக இருந்த நீ எப்படி பணக்காரன் ஆனாய் என்று மக்களுக்குச் சொல். அவர்களும் அவ்வாறே செய்து முன்னேறட்டும்” என்றார் மன்னர்.

ஆர்கட் பேச ஆரம்பித்தான் :

எனது இளம்பருவத்தில் நான் மிகவும் ஏழையாக இருந்தேன். காலியான பர்ஸும், பணக்காரன் ஆகவேண்டுமென்ற தீராத ஆசையுமே என்னிடம் அப்போது இருந்தது. எனது மெலிந்து நலிந்து போயிருந்த என் பர்ஸை பெருக்க வைக்க என்ன வழிகள் என்று தீவிரமாக யோசித்தேன். ஏழு ஸ்டெப்ஸைக் கண்டு பிடித்தேன். அதை இங்கே சொல்கிறேன், கேளுங்கள்.

1. பர்ஸைப் பருக்க வையுங்கள் :

’பர்ஸ் என்ன நமீதாவா..பெருக்க வைக்க?’ என்று விதண்டாவாதம் பேசினால் உருப்படவே மாட்டீர்கள், கடைசி வரை கேர் ஆஃப் ப்ளாட்ஃபார்ம் ஆகவே இருக்க நேரிடும். எனவே நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்.  நீங்கள் மாதா மாதம் சம்பளம் வாங்கும்ப்போது, உங்கள் பர்ஸ் தடிமனாக இருக்கிறது. நாளாக நாளாக அனைத்துப் பணமும் காலியாகி பர்ஸ் மெலிந்து விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பர்ஸை குண்டாக்குங்கள். 


அதற்கான எளிய வழி, நீங்கள் சம்பாதிப்பதில் 10%-ஐ எக்காரணம் கொண்டும் செலவளிக்க எடுக்காதீர்கள். அது பர்ஸிலேயே இருக்கட்டும்.(சரிய்யா..பேங்குலயே இருக்கட்டும்)

நீங்கள் மாதம் பத்தாயிரம் சம்பாதிப்பவராக இருந்தால்கூட, எக்காரணம் கொண்டும் 1000 ரூபாயை வெளியே எடுத்துவிடாதீர்கள். அது உங்கள் பணம் அல்ல, உங்கள் எதிர்காலத்தின் பணம் என்று ஞாபகம் வையுங்கள். அவ்வாறு உங்கள் பேங்க் பேலன்ஸ் ஏறஏற, பணக்காரர் ஆவது பற்றி பாசிடிவ்வாக உணர ஆரம்பிப்பீர்கள்.

2. செலவைக் குறைங்கப்பா :

’சம்பாதிக்கிறதுல 10%ஆ..சான்ஸே இல்லை’ என்று நீங்கள் புலம்புவது கேட்கிறது. ’மனமிருந்தால் மார்க்கம் உண்டு..மணமானால் மாப்பிள்ளை குண்டு ‘ என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? 


உங்கள் மாதாந்திரச் செலவுகளை எக்ஸெல்லிலோ, நோட்டிலோ எழுதி வையுங்கள். ஒவ்வொரு ரூபாயும் எந்த வழியில் செலவாகிறது என்று குறித்து வாருங்கள். கொஞ்ச நாட்களில் உங்களுக்கே தெரியும், எந்தச் செலவைச் சுருக்கினால் இந்த 10% சேமிப்பை செய்ய முடியும் என்று.

சம்பாத்தியத்தில் 10% எடுத்து வைத்துவிட்டு, மீதியில் மட்டுமே குடும்பத்தை ஓட்டுவோம் என்று உறுதி கொண்டீர்கள் என்றால், பணக்காரர் ஆவதின் இரண்டாவது படியை வெற்றிகரமாகக் கடந்துவிட்டீர்கள் என்றே அர்த்தம்.

3. பணத்தைப் பெருக வையுங்கள்:

’இப்பத்தான் பர்சைப் பெருக்க வையின்னான்..அடுத்து பணத்தையுமா.பணத்தை எப்படி,,’-ன்னு நீங்கள் விவகாரமாக யோசிப்பது புரிகிறது. இப்போது உறுதியுடன் நீங்கள் 10% -ஐ சேமித்து வருவது பாராட்டத்தக்கது. ஆனால் அந்தப் பணத்தை வெறுமனே பேங்கிலோ வீட்டிலோ வைத்தால் என்ன ஆகும்? 

பண வீக்கம் என்ற அரக்கனைப் பற்றித் தெரியும் இல்லையா? செங்கோவி சொன்ன பயங்கரமான பீரோ உதாரணம் ஞாபகம் இருக்கிறது, இல்லையா?

எனவே அந்தப் பணத்தை பணவீக்கத்திற்கு எதிராக, உங்களுக்கு ஆதரவாக உழைக்க விடுங்கள். பணவீக்கம் வருடத்திற்கு 7% என்றால், உங்கள் பணம் இண்ட்ரஸ்ட்டாக சம்பாதிப்பது 7 %க்கு மேல் இருக்க வேண்டும். இல்லையென்றால், அது தன் மதிப்பை இழந்து கொண்டே போகும். எனவே 7%க்கு மேல் அதிக வருமானம் எங்கே கிடைக்கும் என்று பார்த்து முதலீடு செய்யுங்கள்.


நீங்கள் பணத்திற்காக வேலை செய்வது போலவே, பணம் உங்களுக்காக வேலை செய்யட்டும்.
4. சேமிப்பை இழப்பில் இருந்து காப்பாற்றுங்கள் :

இப்போது அடுத்த முக்கியமான ஸ்டெப்..பணவீக்கத்துக்குப் பயந்து 50% வட்டி தர்ற டுபாக்கூர் ஃபைனான்ஸ் கம்பெனிங்ககிட்ட உங்க பணத்தைக் கொடுத்தா என்ன ஆகும்? தலையில் துண்டு தான் இல்லையா? எனவே எங்கே உங்கள் முதல் பாதுகாப்பாக இருக்குமோ, அங்கே முதலீடு செய்யுங்கள்.

 எந்தச் சூழ்நிலையிலும் முதலுக்கு மோசம் வராத இடமாகப் பார்த்து முதலீடு செய்யுங்கள். அது நீங்கள் கஷ்டப்பட்டுச் சேமித்த பணம். நாம் அவ்வாறு கஷ்டப்பட்டது அவற்றை இழப்பதற்கு அல்ல. எனவே தங்கத்தில் முதலீடு செய்ய சரியான நேரம் வரும்போது, தங்கம் வாங்குங்கள். நிலத்தில், அரசுப்பத்திரங்களில், பங்குச்சந்தையில் என உங்களுக்குச் சரியான இடம் பார்த்து முதலீடு செய்யுங்கள். அறிந்தோரிடம் ஆலோசனை கேளுங்கள்.

5. பணம் சம்பாதிக்கட்டும் பணத்தை! :

இவ்வாறு உங்கள் சேமிப்பு சரியான இடத்தில் உங்களுக்காக உழைத்து சம்பாதித்துக்கொடுக்கும். இப்போது என்ன செய்வீர்கள்? உடனே பீட்ஸாவும் புடவையும் வாங்கி, எஞ்சாய் செய்தீர்கள் என்றால், கவுண்டர் செந்தில் முகத்தில் முழித்த மாதிரி ஊஊ தான்! 

உங்கள் பணம் சம்பாதித்த பணத்தை மீண்டும் முதலீட்டிலேயே போடுங்கள். வீடு வாங்கி வாடகைக்கு விட்டதால் வரும் பணம் என்றால் வாடகையைச் செலவழிக்காமல் வங்கியில்போடுங்கள். வங்கியில் இருந்து வட்டி வருகிறதென்றால், அதைத் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள். அந்தப் பணம், உங்கள் முதலீட்டு முறைகளில் ஒன்றுக்கே திரும்பச் செல்லட்டும். 

அது உழைப்பில் பிறந்த, உழைக்கப் பிறந்த பணம். அதை ஸ்வாஹா செய்யாமல் உழைக்க விடுங்கள்.

6. காப்பீடு செய்யுங்கள் :

சம்பாதிப்போர் பெரும்பாலானோர் செய்யும் தவறு இன்சூரன்ஸ் திட்டங்கள் எதிலும் சேராமல் இருப்பது. உங்களையும், உங்கள் முதலீட்டையும் காப்பீடு செய்யுங்கள். செலவுகள் அதிகரித்துக்கொண்டே போகும் இக்காலத்தில், உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காவும் மருத்துவம் உள்ளிட்ட காப்பீடுகளை இப்போதே எடுத்து வையுங்கள். எதிர்பாராத நேரத்தில் அது உதவும்.

7. உங்கள் சம்பாதிக்கும் திறனைக் கூட்டுங்கள் :

இந்த மாதிரி நம் பணம் நமக்காக உழைக்க ஆரம்பித்தவுடன், பலரும் செய்யும் தவறு சந்தோசத்தில் தனது சம்பாத்தியத்தைப் பெருக்குவதில் கோட்டை விடுவது தான். பணத்திற்குப் போட்டியாக நீங்களும் உழைக்க வேண்டிய நேரம் இது. பலநாள் போராடி, செலவுகளைக் குறைத்து செல்வந்தர் ஆக ஒரு வழியினை உருவாக்கி விட்டீர்கள்.

இன்னும் 10%-ஐ தனியே ஒதுக்கிக்கொண்டே இருக்கின்றீர்கள். உங்கள் சம்பளம் கூடக்கூட அந்த 10% தொகையும் கூடும், அதன் மூலம் முதலீடும் கூடும் ,அதன்மூலம் நம் வருங்காலத்திற்கான செல்வமும் கூடும். 

எனவே சொகுசு கண்டு, சோம்பி விடாதீர்கள். Rich Dad-Poor Dad புகழ் ராபர்ட் கியோசாகி ஒரு முறை சொன்னது போல் பணக்காரர் ஆவது நீண்ட நாள் எடுக்கும், போரடிக்கும் பயணம். 

ஆனால் அதுவே பாதுகாப்பானது.

ஆர்கட் தன் பேச்சினை முடித்துக்கொண்டு சொன்னான் : உலகில் நீங்கள் கனவு காண்பதை விடவும் அதிக செல்வம் கொட்டிக்கிடக்கிறது. இப்போதே நான் சொன்னபடி திட்டமிட்டு உழைக்க ஆரம்பியுங்கள். முன்னேறுங்கள், செல்வந்தர் ஆகுங்கள். அது உங்கள் உரிமை!

என்ன பாஸ், இந்த 7 ஸ்டெப்ஸை யூஸ் பண்ணி முன்னேற நீங்களும் ரெடியா?

டிஸ்கி : இது 1926ஆம் ஆண்டு George S. Clason என்பவரால் எழுதப்பட்ட Richest Man in Babylon புத்தகத்தில் வந்த ஒரு அத்தியாயத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. அந்தப் புத்தகம் இலவசமாக இணையத்தில் பலராலும் விநியோகிக்கப்படுவது. 

ஒரிஜினலைக் கெடுத்து, நான் செய்துள்ள டகால்ட்டி வேலைகளை அறிய விரும்புவோரும், ஆங்கிலத்தில் அதைப் படிக்க விரும்புவோரும் இங்கே இருந்து 20 பகுதிகளாக மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ளலாம். இது ஒருவேளை PDFஆக esnips.com, scripd போன்றவற்றில் கிடைக்கலாம். 

மேலும் வாசிக்க... "பணக்காரர் ஆக பாபிலோன் சொன்ன 7 டிப்ஸ்!"

Wednesday, August 24, 2011

அமெரிக்கா டர்ர்ர்....தங்கம் விலை விர்ர்ர் - ஏன்? (எளிய விளக்கம்)


உங்ககிட்ட 1991ம் வருசம் ஆயிரம் ரூபாய் இருந்ததாக வைத்துக்கொள்வோம்..அதை ஒரு பீரோவில் பத்திரமாகப் பூட்டி வைக்கின்றீர்கள். இருபது வருடம் கழித்து இப்போது பீரோவைத் திறந்து பார்த்தால், உள்ளே எவ்வளவு இருக்கும்?

‘என்னய்யா இது கூமுட்டைத்தனமான கேள்வி..ஆயிரம் ரூபாய் தான் இருக்கும்’ன்னு நீங்கள் டென்சன் ஆவது தெரிகின்றது.ஆனால் ஆயிரம் ரூபாய் அப்போது இருந்த அதே மதிப்புடன் தான் இப்போது இருக்கிறதா? அப்போது எங்கள் ஊர் தியேட்டரில் டிக்கெட் விலை 3 ரூபாய். 333 ஷோ இந்த ஆயிரம் ரூபாயை வைத்துப் பார்க்க முடியும். இப்போது டிக்கெட் விலை 60 ரூபாய். (முதல் நாள் என்றால் >150 தான்). உங்களால் 16 ஷோ தான் பார்க்க முடியும். என்ன ஆயிற்று அந்தப் பணத்தின் மதிப்பு?

இதுக்குப் பேர் விலைவாசி ஏற்றம் என்று நாம் சொல்கிறோம். பொருட்களின் விலை ஏற்றத்தை வைத்தே இதை நாம் குறிப்பிடுகிறோம். பொருளாதார வல்லுநர் இதையே பணத்தின் மதிப்புக்கு நேரும் பாதிப்பை வைத்து பணவீக்கம்(Inflation) என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கணக்கிட்டு, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு எத்தனை சதவீதம் பொருட்களின் விலையானது கூடி உள்ளது / அதாவது பணத்தின் மதிப்பானது குறைந்து உள்ளது என்று கணக்கிடப்படுவதே பணவீக்க விகிதம்.

மீண்டும் ஃப்ளாஷ்பேக்கிற்குப் போவோம். நீங்கள் அதே 1991ம் வருடம் ஆயிரம் ரூபாய்க்கு 2 கிராம் தங்கம் வாங்கி வைக்கின்றீர்கள். அதை அதே பீரோவில் பூட்டி வைக்கின்றீர்கள். இருபது வருடம் கழித்து, இப்போது திறந்து பார்த்தால்.........அதே 2 கிராம் தங்கம் தான் இருக்கும், ஆனால் 5600 ரூபாய் மதிப்புடன்.

பணத்தை பணமாக வைத்திருப்பதன் ஆபத்து புரிகின்றதா? அது ஒவ்வொரு வருடமும், இன்னும் சரியாகச் சொல்லப்போனால் ஒவ்வொரு நாளும் தன் மதிப்பை இழந்து கொண்டே உள்ளது. சராசரியாக 7.5% என்ற அளவில் பணவீக்க விகிதம் உள்ளது. அதாவது சென்ற ஆகஸ்ட்டில் நீங்கள் நூறு ரூபாய் வைத்திருந்தால், அது தன் மதிப்பில் 7.5 ரூபாயை இழந்து இன்று வெறும் 92.5 ரூபாயாகவே உங்கள் கையில் உள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட உலகப் பங்குச் சந்தைகளில் பல லட்சம் கோடிகளில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தினமும் பல லட்சம் கோடியில் வர்த்தகம் நடந்துகொண்டே உள்ளது. அவர்களுக்கு ஒரு நாள் பணத்தை சும்மா வைத்திருந்தாலும், அது பணவீக்கத்தால் பெரிய அளவில் மதிப்பை இழக்கும்.


தற்பொழுது அமெரிக்காவில் கிளம்பியுள்ள கடன் தர வரிசைப் பிரச்சினை, பங்குச்சந்தைகளை கடும் வீழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஐரோப்பிய வங்கிகளும் கடும் நிதிச்சிக்கலில் இருப்பதாக வரும் தகவல் வேறு ;எந்தப் புற்றில் எந்தப் பாம்போ என்று முதலீட்டு நிறுவனங்களை பதற வைக்கிறது. எனவே தங்களிடம் உள்ள பங்குகளை பயத்தில் விற்றுத் தள்ளுகிறார்கள். அப்படி விற்ற பின் கிடைக்கும் பணத்தை கையில் வைத்திருந்தால், பணவீக்கம் அதைச் சாப்பிட்டு விடும். கொதிக்கும் எண்ணெய்க்குப் பயந்து, நெருப்பில் விழுந்த கதையாகி விடும். அப்போ என்ன தான் செய்வது?

மேலே உள்ள உதாரணத்தைப் படித்த உங்களுக்குப் புரிந்திருக்கும், அதை தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பு என்று. அதையே அவர்களும் செய்கிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் திடீரென்று தங்க மார்க்கெட்டில் நுழைந்தால் என்ன ஆகும்?

ஒரு பொருளுக்கு தேவை அதிகமானால், அதன் விலை உயரும் என்று பொருளாதார விதி சொல்கிறது. நம் விதியும் அதையே சொல்வதால், வேறு வழியின்றி தங்கம் விலை ஏறுகின்றது. நம் மாதிரி குடும்பஸ்தர்களுக்கு அதுவே ஆப்பு வைக்கின்றது. 

எனவே தங்க விஷயத்தில் பணவீக்கம் மற்றும் பங்குச்சந்தை செலுத்தும் ஆதிக்கத்தை கவனத்தில் வைப்போம். உபரியாக(!) பணம் இருந்தாலோ, அல்லது திருமணத் தேவைகளுக்காக வாங்க வேண்டி இருந்தாலோ விலை சற்றுக் குறைவாக இருக்கும் நேரத்தில் (அதாவது உலகம் ஷேமமாக இருக்கும் நேரத்தில்) வாங்கி வைப்போம். 

5 வயது குழந்தைக்கு 1991ல் தங்கம் வாங்கி வைத்திருந்தால், இப்போது அவர்களின் மனநிலை எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். தங்க முதலீட்டை தள்ளிப்போடாமல் இருப்பதன் அருமை புரியும்.

இன்னும் இது பற்றிப் பேசினால், டெக்னிகல் விஷயங்களுக்குள் நுழைந்து தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டிவரும் என்பதால்............விடு ஜூட்!
மேலும் வாசிக்க... "அமெரிக்கா டர்ர்ர்....தங்கம் விலை விர்ர்ர் - ஏன்? (எளிய விளக்கம்)"

Friday, August 19, 2011

அமெரிக்கா வாங்கும் அடி - நமக்கும் ஆப்பாகுமா?

அமெரிக்கக் கனவான்கள் மீண்டும் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு முந்தைய இரு ரிசசன்களிலும் (2001. 2008) ஆப்பு வாங்கி, வேலையை இழந்தவன் என்பதால், இப்போதைய நடப்புகளை உற்று கவனித்து வருகிறேன். 

2007ல் பங்குச்சந்தை பல புதிய உச்சங்களைப் பெற்று மேல்நோக்கிச் சென்றுகொண்டே இருந்தது. அப்போது மெதுவாக நிதி நிறுவனங்களில் பண நெருக்கடி, கொடுத்த கடன் திரும்பவில்லை என்று முணுமுணுத்தார்கள். தொடர்ந்து வேலையிழப்பு விகிதம் அதிகரிக்கிறதே என்று சில பொருளாதார பத்தி எழுத்தாளர்கள் புருவம் சுருக்கினர். ’நாம் ஒருவேளை ரிசசனை நெருங்கிக்கொண்டிருக்கிறோமோ..ச்சே..ச்சே..இருக்காது. நாம் இருப்பது வலிமையான அமெரிக்கா ஆச்சே’ என்று மெதுவாக விஷயத்தை ஓப்பன் செய்தனர். அடுத்து 2008 ஜனவரியில் ஸ்டாக் மார்க்கெட்டில் அடி விழுந்ததும் ‘வந்தாச்சு..வந்தாச்சு..ரிசசன் வந்தாச்சு..இப்போ என்ன செய்யணும்னா..’ என்று அட்வைஸ் செய்ய ஆரம்பித்தார்கள்.
இப்போது நம் கவலையெல்லாம், அதே வரிசையில் விஷயங்கள் நடக்கத் தொடங்கியிருப்பது தான். பேங்குகள் மூடப்படும் விகிதம் 9% அதிகரித்திருப்பதாக ஒரு அறிக்கை சொல்கிறது. வேலையிழப்பு விகிதம் சென்ற மாதத்தை விட 66% அதிகரித்திருப்பதாக மற்றொரு செய்தி சொல்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தின் மிக நெருக்கடியான காலகட்டம் என்று பொருளாதார வல்லுநர்கள் அலறுகிறார்கள்.

இந்த பொருளாதார மேதைகளும், கம்பெனிகளும் வெளியில் சொல்லாத விஷயம் ஒன்று உண்டு. 2008ல் ஆரம்பித்த ரிசசன் 2010ல் முடிந்ததாக வெளியில் சொல்லப்பட்டாலும் அது உண்மை அல்ல. அதன் தொடர்ச்சியே இப்போது நாம் காண்பது. (அதற்கு உதாரணமாக சிங்கப்பூரில் இன்றும் சூடு பிடிக்காத, வங்கி நிதி பெருமளவில் தேவைப்படும் ஷிப் பில்டிங் பிசினஸ்) அப்போது ரிசசன் பிரச்சினையை அணைக்க கரன்சியை பிரிண்ட் செய்து அப்போதைக்கு விஷயத்தை மூடியது அமெரிக்கா. அப்போதே பலரும் ‘இது சரியான வழி அல்ல’ என்று சொன்னார்கள். ஆனாலும் அப்போது அமெரிக்காவிற்கு வேறு வழியில்லை. அதன்பிறகு அதை மறந்து போனார்கள். அவர்களுக்கு என்ன தான் பிரச்சினை?

அதற்கு அண்ணன் ரிச்சர்ட் நிக்சன் காட்டிய வழியே அடிப்படைக் காரணம். ’ஒரு நாடு எவ்வளவு கரன்சியை அச்சிடுகிறதோ, அதற்கு இணையான தங்கத்தை தன் ரிசர்வ் பேங்கில் ஈடாக வைத்திருக்க வேண்டும்’ என்ற கரன்சி மதிப்பை நிர்ணயிக்கும் பொதுவிதியை நிக்சன் தூக்கிக்கடாசினார். தேவைப்படும்போது செனட் ஒப்புதலுடன் பிரிண்ட் செய்துகொள்ளலாம் என்ற திட்டத்தை கொண்டுவந்தார். . இதன் மூலம் ஏராளமான ’பேப்பர்’ கரன்சி பல வருடங்களாக பிரிண்ட் செய்யப்பட்டது. 
தன் நாட்டாமைத்தனத்தால் பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்குவதற்கான பொது கரன்சியாக டாலரை முன்னிறுத்தியது அமெரிக்கா. அந்த வகையில் வெறும் பேப்பரை எல்லா நாடுகளுக்கும் கரன்சி என்ற பெயரில் ஏற்றுமதி செய்தது. இப்போது இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் அந்த பேப்பரை கோடிக்கணக்கில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றன. அதை அமெரிக்காவிடம் திரும்பக் கொடுத்து, அதற்கு ஈடான தங்கள் கரன்சியை கேட்டாலே போதும், நம் நிதிநிறுவன அதிபர்கள் போல் அமெரிக்கா ஓட வேண்டியிருக்கும். 

உற்பத்தித்துறை சுத்தமாக வீழ்ந்து போன நிலையில், ;நாடு முன்னேற செலவளி’ என்ற மந்திரத்துடன் அமெரிக்கப் பொருஆதாரம் தள்ளாடி நடைபோடுகிறது. கொஞ்ச வருடங்களுக்கு ஒருமுறை பணத்தட்டுப்பாடு வருவதும், அச்சடித்து அதை சமாளிப்பதுமாக ஓட்டிய அமெரிக்கா, இப்போது நெருக்கடியின் உச்சத்தை எட்டியிருப்பதாகவே தெரிகின்றது. மீண்டும் அச்சடிக்க செனட் ஒப்புதல் வாங்கியாகிவிட்டது. ’ஆனால் இப்படியே எத்தனை நாள்?’ என்ற பயமே இப்போது அனைவரையும் பிடித்து ஆட்டுகிறது.

தற்போதைய நிலையில் தொழில் துறையில் அடுத்து என்ன நடக்கும் என்பது நாம் அறிந்ததே..நம் கம்பெனியை தூக்கி நிறுத்துவதற்கென்றே இருக்கும் மேனேஜ்மெண்ட் புண்ணியவான்கள் எப்படியெல்லாம் இதை உபயோகித்து லாபத்தை கூட்டலாம் என்று பார்ப்பார்கள். போனஸ், இன்க்ரிமெண்ட் பற்றி பேசவே மாட்டார்கள். ஒருத்தன் தலையில் மூன்று ஆள் வேலையை ஏற்றி, புதிதாக ஆள் எடுப்பதை தவிர்ப்பார்கள். இதுவரை கம்பெனி லாபத்தில் இயங்குவதையும், அதனால் சேர்ந்துள்ள உபரிநிதி பற்றியும் பேசுவதை விடுத்து, ‘கம்பெனியைக் காப்பாற்ற நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்று சொல்லி மேலும் கசக்கிப் பிழிய எல்லா ஏற்பாடுகளையும் செய்வார்கள். நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பதை இறுக்கினால், அவற்றைச் சார்ந்த புராஜக்ட்கள் நிறுத்தப்படும். தொடர்ந்து ஐடி போன்ற சேவைத் துறைகளும் அடி வாங்கும்.

பொதுவாக எங்கள் துறையில் 3டி மாடல் செய்ய ஒருவர், அதில் இருந்து 2டி டிராயிங்(ஐஸோ) எடுக்க இன்னொருவர். அதில் ஸ்ட்ரெஸ் அனலிஸ் செய்ய இன்னொருவர். எல்லாவற்றையும் செக் பண்ண குவாலிட்டி ஆள்/எஞ்சினியர் ஒருவர் என்றே இருப்பர். ஆனால் சென்ற 2008 ரிசசனை அடுத்து வேலை தேடியபோது, அனைத்துக் கம்பெனிகளும் சொல்லி வைத்தாற்போல் மேற்சொன்ன நான்கு வேலையும் தெரியுமா என்று கேட்டு விரட்டி அடித்தார்கள்.

இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது நம் வேலையை மட்டுமல்லாது பிறரது வேலைகளையும் தெரிந்து வைத்துக்கொள்வதும் நம் தகுதியை மேலும் வளர்த்துக் கொள்வதுமே. அதுவே நம்மை இனிவரும் காலங்களில் காப்பாற்றும். ‘இது என் வேலையல்ல’ என்று எதையும் ஒதுக்காமல் அதையும் தெரிந்து கொள்வோம்!

மேலும், பாஸ்-ஐ கொஞ்சநாளைக்கு முறைக்காமல் குத்து மார்னிங் சொல்வதும் நலம் பயக்கும்!

மேலும் வாசிக்க... "அமெரிக்கா வாங்கும் அடி - நமக்கும் ஆப்பாகுமா?"