நம் மதிப்பிற்குரிய தலைவர் ஹிட்ச்காக்கிடம் என்னால் உடன்பட முடியாத ஒரு விஷயம் உண்டு. அது MacGuffin கான்செப்ட். அது என்னவென்றால்..
ஹிட்ச்காக்கின் North by Northwest படத்தில் ஹீரோவை ’Mr.கப்ளான்’ என நினைத்துக்கொண்டு வில்லன் கும்பல் துரத்துகிறது. ஹீரோ தப்பி ஓடியபடியே கப்ளான் என்ற ஒருவர் இல்லவே இல்லை என்று கண்டுபிடிக்கிறார். ”ஏன்” வில்லன் கோஷ்டி கப்ளானை துரத்துகிறது என்ற ஹீரோவின் கேள்விக்கு ரகசிய போலீஸ் அதிகாரி(?- Spy Master) சொல்லும் பதில் சுருக்கமாக ஒரே லைனில் ‘You could say he(வில்லன்) is a sort of importer-exporter..Government secrets, perhaps.’
மொத்தப்படத்திலும் ஹீரோவை எதற்காக அப்படித் துரத்தினார்கள் என்பதற்குப் பதில் இந்த ஒற்றை வரி தான். ஹிட்ச்காக்கின் பல படங்களிலும் பரபரப்பாக நடக்கும் பல சம்பவங்களுக்குக் காரணம் என்ன என்பதற்கு பெரிய விளக்கம் இருக்காது. Birds படத்தில் பறவைகள் ஏன் தாக்குகின்றன என்பதற்கு ஒற்றைவரி விளக்கம்கூடக் கிடையாது. அந்த விளக்கத்தை, காரணத்தை, படம் முழுக்க மறைத்து வைக்கப்படும் அந்த சீக்ரெட்டை MacGuffin என்று கேலியாகக் குறிப்பிடுகிறார் ஹிட்ச்காக். அதன்பொருள், அவரைப்பொறுத்தவரை, நத்திங்!
ஒருத்தனோட வாழ்க்கை அல்லது உயிர் பெரும் போராட்டத்தில் இருக்கும்போது, அவன் ”எப்படி” தப்பிக்கிறான் என்பதில்தான் சுவாரஸ்யம் இருக்கிறதேயொழிய, அதன் ”காரணம்” என்ன என்பது அவ்வளவு முக்கியம் இல்லை. படத்தின் ஓட்டத்தில் காரணத்தை விளக்க வேண்டியதில்லை என்பது தான் MacGuffin கான்செப்ட். தமிழ்ப்படங்களைப் பொறுத்தவரை, இந்த கான்செப்ட் செல்லுபடியாகும் என்று நான் நம்பவில்லை. ஜெண்டில்மேனோ இந்தியன் தாத்தாவோ ஒரு ஃப்ளாஷ்பேக் போட்டு ‘நான் ஏன் இப்படி ஆனேன்னா........’ என்று விளக்கினால்தான் நமக்கு பூரண திருப்தி வரும். ஆனால் ஹிட்ச்காக் சொல்வது, அது தேவையில்லை என்று. அவர் அப்படித்தான் படங்களை எடுத்தார், ஜெயித்தார்.
ஒத்துக்கவே முடியாத கான்செப்ட் என்று நான் ஒதுக்கி வைத்ததை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது நான் சிகப்பு மனிதன். நார்கொலாப்ஸியால் அவதிப்படும் விஷால் இருக்கும்போதே, ரவுடிகளால் கற்பழிக்கப்படுகிறார் லட்சுமி மேனன். அவர்களை ”எப்படி” பழிவாங்குகிறார் ஹீரோ என்று பரபரப்பாக படம் நகரும்போது, இயக்குநர் திரு காரணத்தை(MacGuffin) ஒரு ஃப்ளாஷ்பேக் போட்டு விளக்குகிறார் பாருங்கள், என்னடா காரணம் இது என்று எல்லோருமே டரியல் ஆகிவிட்டார்கள். ரவுடிகள் ஒரு பெண்ணைக் கற்பழிக்கிறார்கள் என்பதற்கு காரணமே தேவையில்லை, அவர்கள் ரவுடிகள் என்று முதல் சீனில் காட்டியதே போதும். அதுவே போதுமான MacGuffin.
அந்த ஃப்ளாஷ்பேக் தான் படத்தைக் கெடுத்தது. படம் பார்க்காதவர்களுக்கு இப்போது அந்த புனிதமான ஃப்ளாஷ்பேக்கைச் சொல்கிறேன். (சாப்பிட்டுக்கொண்டிருந்தால், இதைப் படிக்க வேண்டாம்.)
வில்லன் சுந்தர்-விஷால்-ஜெகன் - இன்னொரு கோடீஸ்வர டகால்ட்டி ஆகிய நான்கு பேரும் நண்பர்கள். சுந்தர் பொண்டாட்டிக்கும் அந்த டகால்ட்டிக்கும் லின்க்கு..அது விஷாலுக்கு தெரியுது. விஷாலுக்கு சுந்தர்+ டகால்ட்டி ரெண்டுபேருமே ஃப்ரெண்டு ஆச்சே..அதனால வில்லன்கிட்டயும்/சுந்தர்கிட்டயும் சொல்ல முடியாம, சுந்தர் பொண்டாட்டி இனியாகிட்ட இப்படில்லாம் பண்ணாதே..சுந்தர் பாவம்ங்கிறார்..அப்போ ஒரு ட்விஸ்ட்..சுந்தர் தான் பொண்டாட்டியை காசுக்காக ஃப்ரெண்டுகூட கள்ளக்காதல்ல இறக்கி விடுறார்ன்னு. டகால்ட்டியை ஏமாற்றி கோடிக்கணக்குல காசை ஆட்டையைப் போடறது தான் இனியா+சுந்தர் ப்ளான். (இனியாவுக்கா? கோடிக்கணக்குலயா?ன்னு லாஜிக் பார்க்கக்கூடாது!)
மேட்டர் தெரிஞ்ச விஷால், அந்த டகால்ட்டிஃப்ரெண்டுகிட்டப் போய் ஏமாறாதே..(ஒர்த் இல்லே)ன்னு சொல்லிடுறாரு. அவர் வந்து கோபத்தில் இனியாவை அடிக்க, இனியா செத்திடுது.சுந்தர் அந்த டகால்ட்டியை கொன்னுடுறாரு..இப்போ எல்லாத்துக்கும் காரணம் விஷால்(???) தான்னு விஷாலைப் பழிவாங்க அடியாள் வச்சு கும்கி மேனனை ரேப் பண்ண வச்சிடுறாரு..கர்ர்ர்....த்த்தூ!
இந்த MacGuffin-ல் இருக்கிற பிரச்சினைகளைப் பார்ப்போம்:
1. இது கேவலமானது
2. இது மிகக்கேவலமானது
3. இது மிகமிகக்............
101. ஃப்ளாஷ்பேக் என்பது பெரும்பாலும் ஹீரோவின் தரப்பிலிருந்தே சொல்லப்பட்டு வந்திருக்கிறது. குறிப்பாக ஹீரோ செய்யும் சட்டப்படி தவறான காரியத்தை(திருட்டு, பழிக்குப்பழி....) நியாயப்படுத்தவே ஃப்ளாஷ்பேக் பயன்படுத்தப்படுகிறது. நமக்கும் நம் சட்டங்கள் பற்றித் தெரியும் என்பதால், ‘கரெக்ட்டுத்தான்பா' எனும் முடிவுக்கு ஃப்ளாஷ்பேக் முடியவும் வந்துவிடுவோம். ஃப்ளாஷ்பேக்கின் முக்கிய நோக்கமே நியாயப்படுத்தல் தான். மேலே சொன்ன ஃப்ளாஷ்பேக் வில்லனுடையது. வில்லன் இந்த ஃப்ளாஷ்பேக் மூலம் தன் செயலை நியாயப்படுத்த முடியுமா? நியாயப்படுத்திவிட்டால் அவன் வில்லனாக இருக்க முடியுமா? எனவே எவ்வளவு விலக்கினாலும், அந்த ஃப்ளாஷ்பேக்கினால் நன்மை ஏதும் இல்லை.
102. ஃப்ளாஷ்பேக்கினால் இன்னொரு நன்மை உண்டு. அது வில்லன் எவ்வளவு கொடூரமானவன் என்று காட்ட உதவலாம். இந்த ஃப்ளாஷ்பேக்கினால் பொண்டாட்டியை கூட்டிக்கொடுக்கிறவன் என்ற தகவல் மூலம் கேவலமானவன் என்ற முடிவுக்கு வரத்தான் முடிகிறதே தவிர, கொடூரமானவன் என்று நினைக்க முடியவில்லை.
103. இந்த ஃப்ளாஷ்பேக்கினால் விளைந்த இன்னொரு கெடுதல், படத்தின் முக்கிய மேட்டரான நார்கொலாப்ஸியையே படம் பார்க்கிறவர்கள் மறந்துபோனது தான். முதல்பாதியை விட ஃப்ளாஷ்பேக்கில் வீரியம்(!) அதிகம். இந்தியன் ஃப்ளாஷ்பேக்கில் பெண்கள் துகிலுரியப்பட்டதாக காட்டியது, ஃப்ளாஷ்பேக் முடிந்தபின்னும் தாத்தா வேகம் எடுக்க உதவியது. நாமும் அவரின் நியாயத்தை உணர்ந்தோம். அதுவரை நடந்த சம்பவங்களையும் அடுத்து வரும் சம்பவங்களையும் நியாயப்படுத்த, அந்த ஃப்ளாஷ்பேக் உதவியது. ஆனால் இங்கே? பார்வையாளனுக்கு அதிர்ச்சியையும் வெறுப்பையும் உண்டாக்கியதைத் தவிர, அந்த ஃப்ளாஷ்பேக்கால் என்ன நன்மை?
’சரிய்யா..ஒரு கள்ளக்காதல் மேட்டருக்கு ஏன்யா ஹிட்ச்காக்கை எல்லாம் இழுக்கறே?’ என்று நீங்கள் டரியல் ஆகலாம். ஏனென்றால் படம் வெளியாகும் முன்பு இயக்குநர் திரு கொடுத்த ஒரு பேட்டியில் ”ஹிட்ச்காக்கை தனக்கு ரொம்ப பிடிக்கும்..அவர் பாணியில் படம் இயக்க விரும்புகிறேன்’ என்ற ரீதியில் சொல்லியிருந்தார். நான் சிகப்பு மனிதனின் முதல்பாதியில் அவர் சொன்னதை நிரூபித்திருந்தார். ஆனால் இரண்டாம்பாதியில், குறிப்பாக MacGuffin மேட்டரில் தவறிவிட்டார். அதைச் சுட்டிக்காட்டவே ஹிட்ச்காக் கையைப் பிடித்து இழுக்கும்படி ஆகிவிட்டது...மன்னிக்கவும்!
14 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.