நீண்டநாட்களாக நாம் எதிர்பார்த்திருந்த சந்தோஷச் செய்தி வந்து விட்டது. ஆம், நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை இரவு சென்னை திரும்புகிறார்.
எந்திரன் என்ற மெஹா ஹிட் கொடுத்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் ரஜினிகாந்த். இந்தியப் படவுலகம் என்றால் பாலிவுட் மட்டும் தான் என்பதை உடைத்து, மற்ற மாநிலப்படங்களும் உள்ளன என்று சர்வதேச அளவில் உணர்த்திய பெருமை சூப்பர் ஸ்டாரையே சேரும். சிவாஜி முதல் எந்திரன் வரை ரஜினி பட ரிலீஸ் என்பது சர்வதேசத் திருவிழா என்று ஆகியது.
வெளிநாடு வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது பிற மாநிலத்தவரும் ரஜினி படம் பார்க்க ஆர்வம் காட்டுவதை நேரில் பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. அத்தகைய வரவேற்பின் மூலம் நமது தமிழ்சினிமாவும் பிறருக்கு அடையாளம் காட்டப்பட்டது.
தமிழகத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், இந்தியில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை என்ற குறை ரஜினியின் வரலாற்றில் இருந்தது. எந்திரன் மூலம் அதுவும் தீர்ந்தது. சிவாஜி ரிலீஸ் ஆனபோது ‘அமிதாப்பா-ரஜினியா’ என்று பட்டிமன்றம் நடத்திய வடநாட்டுச் சேனல்கள்கூட எந்திரனைக் கண்டு மிரண்டன. இந்திய அளவில் தன்னுடைய பெயரை எந்திரன் மூலம் நிலைநாட்டினார்.
பொதுவாகவே இரு படங்களுக்கிடையே போதிய இடைவெளி விடும் சூப்பர் ஸ்டார், இந்த முறை ராணா வேலைகளில் உடனே இறங்கினார், எந்திரன் வெற்றி கொடுத்த கண் திருஷ்டி அறியாமல். படத்துவக்க விழா அன்றே ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார்.
அதன்பிறகு தான் எத்தனை எத்தனை செய்திகள்..இனி அவ்வளவு தான்.அவருக்கு நேரம் சரியில்லை, உயிர் பிழைப்பாரா-என பல ஆராய்ச்சிகள் இங்கு நடத்தப்பட்டன. ஆண்டவனின் அருளும் ரசிகர்களின் அன்பும் இருக்கையில் அவ்வளவு சீக்கிரம் பிறரின் எதிர்பார்ப்பு நிறைவேறிவிடுமா என்ன?
கடந்த மாதமே அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாகச் செய்திகள் வந்தன. கடந்த ஒரு மாதமாக சிங்கப்பூரில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி, உடல்நிலை சீராகிவிட்டதை உறுதிப்படுத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா தந்தையை அழைத்து வர சிங்கப்பூர் பயணமானார். இப்போது அடுத்த நல்ல செய்தியும் வந்துவிட்டது.
நாளை இரவு சென்னை திரும்புவதாக உறுதியான தகவல் இப்போது வெளியாகி உள்ளது. பலநாட்களாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் செய்து வந்த பிரார்த்தனை வீண் போகவில்லை. நாளை மீண்டும் நம் முன் தோன்றுகிறார் சூப்பர் ஸ்டார். அவரை வரவேற்க தடபுடலான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ரஜினி படம் ரிலீஸ் என்பதே திருவிழா எனும்போது, ரஜினியே ஒரு சிக்கலில் இருந்து ரிலீஸ் ஆகி வருவது மெகா திருவிழா தான். சென்னை திரும்பிய பின் சில நாட்களில் ராணா படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்கிறார்கள். நாம் ஏற்கனவே சொன்னது போல் நமக்கு முக்கியம் ரஜினியே, ராணா அல்ல. இனி அவர் நடித்துத் தான் சாதிக்க வேண்டும் என்று எதுவும் இல்லை. உடல்நிலை ஒத்துழைத்துத் தொடர்ந்தால் மகிழ்ச்சியே.
நாளை அவர் முகம் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர், நாமும்!










