Friday, February 28, 2014

தெகிடி - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
படப்பெயரைப் பார்த்தால் தமிழ் மாதிரியே தெரியவில்லை. நடிகர்கள் யாரும் மனம் கவரும் ஆட்கள் இல்லை. ஆனாலும் நாளைய இயக்குநர்-2ல் முதல் பரிசு வென்ற ரமேஷ் இயக்கிய படம் என்பதாலும் த்ரில்லர் படம் என்பதாலும் சி.வி.குமாரின் தயாரிப்பு(ரிலீஸ்) என்பதாலும் துணிந்து போனேன். 
ஒரு ஊர்ல..:
எம்.ஏ,க்ரிமினாலஜி முடிக்கும் ஹீரோவுக்கு ஒரு டிடெக்டிவ் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. சில நபர்களைப் பின் தொடர்ந்து அவர்களைப் பற்றி ரிப்போர்ட் சப்மிட் பண்ணும்படி அசைன்மெண்ட் தரப்படுகிறது. அந்த நபர்களில் ஹீரோயினும் ஒருவர். இவரும் ரிப்போர்ட் தர, அடுத்தடுத்து அந்த நபர்கள் வரிசைப்படி கொல்லப்படுகிறார்கள். ஹீரோ ஹீரோயினை காப்பாற்றினாரா? யார் அவர்களைக் கொல்வது? விசாரிக்கச் சொன்ன க்ளையண்ட் யார்? என ஹீரோ துப்பறிவதே கதை.

உரிச்சா....:
ஒரு துப்பறியும் படத்திற்கே உரிய நீட்டான திரைக்கதை. அமைதியாக ஆரம்பித்து, முதல் கொலை விழுந்தது முதல் பரபரப்பாகச் செல்கிறது. அதிக நடிகர் கூட்டம் இல்லாமல், முக்கிய பாத்திரத்தில் ஏழு பேர் மற்றும் துணைப்பாத்திரங்களாக இன்னும் ஏழுபேர் என சுருக்கமாக ஆட்களை நடிக்க வைத்திருப்பதே படத்திற்கு க்ரிப்பைக் கொடுக்கிறது.

ஹீரோ அசோக் செல்வனுக்கு முதல் வேலைக்கான ஆஃபர் வர, சென்னை வருகிறார். அவர் வேலையில் சேரும் டிடெக்டிவ் நிறுவனத்தின் பாலிசிகளில் ஒன்று, ஃபாலோ செய்யப்படும் நபருடன் டைரக்ட் காண்டாக் வைக்கக்கூடாது என்பது. அதன்படியே நடக்கும் ஹீரோ, ஹீரோயின் விஷயத்தில் மட்டும் காதலால் பாலிசியை மீறுகிறார். அதுவரைக்கும் சாதாரணமாகச் செல்லும்படம், அதன்பின் நடக்கும் சம்பவங்களால் சூடு பிடிக்கிறது.

கொஞ்சம் நடிகர்கள் தான் என்பதால் மெயின் வில்லன் இவராகத் தான் இருப்பார் என இரண்டு பேரை கெஸ் பண்ண முடிகிறது. ஆனாலும் படம் முடிகையில் கொடுக்கும் ட்விஸ்ட், அருமை. 
ஒரு ஹாலிவுட் பட ஸ்டைலில் நகரும் படத்தில் மிஸ் ஆவது, பரபரப்பான ஆக்சன் சீகுவென்ஸ் தான். வெறுமனே புலனாய்வும், தேடுவதும் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பைக் கொடுக்கிறது. அதனால் தான் முதல்பாதியிலும் இரண்டாம்பாதியிலும் செமயான ஆக்சன் ஃபைட் அல்லது சேஸிங்கை ஹாலிவுட்டில் வைத்துவிடுவார்கள். ஆனால் அது இல்லாததால், ஹீரோ பெரிதாக ஒன்றுமே செய்யவில்லையோ என்று தோன்றிவிடுகிறது. வெறும் மைண்ட் கேம், படிக்க நன்றாக இருக்கலாம், விஷுவலுக்கு அது மட்டும் போதாதே!

இன்னொரு குறை, ஹீரோவையே ஓவர் டேக் பண்ணும் ஜெயப்ரகாஷ் கேரக்டர். பிறகு இயக்குநர் சுதாரித்து தனி ரூட்டில் ஹீரோவை துப்பறிய விட்டாலும் ஜெயப்ரகாஷ்க்கு முன் ஹீரோ பம்மிக்கொண்டு சப்பையாக தோன்றுவது, இத்தகைய த்ரில்லர் படங்களில் இருக்கக்கூடாத ஒரு விஷயம். ஹீரோவை சாமானியனாக காட்டியதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், படம் விறுவிறுப்பாகச் செல்லும் நல்ல த்ரில்லர் தான். அதிலும் கடைசியில் சொதப்பாமல், லாஜிக்கலாக எல்லாக் கொலைகளுக்கும் காரணம் சொல்லி இருப்பது அருமை.

அசோக் செல்வன்:
வில்லாவுக்கு அடுத்து தனி ஹீரோவாக இவருக்கு இரண்டாவது படம். அசோக் செல்வனுக்கு வில்லாவில் அடித்த பேய் இன்னும் தெளியவில்லை போல. எப்போதும் சீரியஸான ஆளாகவே வருகிறார். முகமே அப்படியா, அல்லது சீரியஸான கேரக்டர் என்று இயக்குநர் ரொம்ப மிரட்டி விட்டாரா என்று தெரியவில்லை. ஏ செண்டருக்கு இது போதும். பி அண்ட் சி செண்டரை ரீச் செய்ய வேண்டும் என்றால், இன்னும் இறங்கி அடிக்கணும் பாஸ்!

ஜனனி அய்யர்:
அவன் இவனில் நடித்து பின்னர் காணாமல் போன ஜனனிக்கு இது நல்ல ஒரு ரீ எண்ட்ரி. அவருக்கு ப்ளஸ்ஸே கண்கள்(மட்டும்?) தான். அதில் பலவித எக்ஸ்பிரசன்ஸ் காட்டி, நம்மைக் கவர்கிறார். அவருக்குத் தெரியாமலேயே ஹீரோ அவரைக் காப்பாற்ற முயல்வதால், த்ரில் ஏரியாவுக்குள் அவருக்கு பெரிதாக வேலையில்லை. காதல் போர்சன் மட்டும் என்பதால் கலர்ஃபுல்லாகவே வந்து போகிறார். 
 
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- சுரத்தேயில்லாத ஹீரோ கேரக்டர்
- பாடல்கள், (நல்லவேளை டூயட் இல்லை!)
- பேசியே துப்பறிந்து முடித்தது..கும்மாங்குத்து மிஸ்ஸிங்
- சில இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங். உதாரணமாக...இரண்டாம்கட்ட வில்லனின் ஒரிஜினல் பெயர் பூர்ண சந்திரன். சடகோபன் என்ற பெயரில் ஹீரோவை ஏமாற்றுகிறார். ஆனால் அவர் பற்றிய நியூஸ் வந்த பேப்பரில் பொய்ப் பெயரையே போட்டிருப்பது!
- முக்கியமாக, படத்தின் பெயர். சூதாட்டம் என்று அர்த்தமாம்..முடியல!..உங்க தமிழ் +டேக்ஸ் ஆர்வத்தை நாங்க பாராட்டறோம். ஆனாலும் இந்த மாதிரி பேரைக் கேட்டாலே நம்மாளுக தெறிச்சு ஓடிடுவாங்க பாஸ். 

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- நீட்டான திரைக்கதை..வெல்டன் ரமேஷ்.
- காளி நடித்திருக்கும் நண்பன் கேரக்டர். வில்லாவிலேயே கவனிக்க வைத்தவர். இதில் நண்பன்+காமெடியனாக புரமோசன். சீக்கிரமே தமிழில் முக்கியமான நடிகராக ஆவார். நல்ல நடிப்பு.
- பிண்ணனி இசை
- ’பண்ணையார்’ ஜெயப்ரகாஷின் நடிப்பு
- சஸ்பென்ஸை கடைசிவரை மெயிண்டெய்ன் செய்தது
- இரண்டு மணிநேரத்தில் படத்தை முடித்தது

பார்க்கலாமா? :

த்ரில்லர் பட விரும்பிகள், பார்க்கலாம்.


மேலும் வாசிக்க... "தெகிடி - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

29 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, February 25, 2014

The Wolf of Wall Street - சினிமாப் பார்வை

சென்ற வருடம் அதிக பரபரப்புடன், அதிகளவு விளம்பரத்துடன் வெளியான படம். கமர்சியலாக படம் சூப்பர் ஹிட்டும்கூட. இப்போது விருதுகளை வாங்கிக் குவிக்கவும் ரெடியாகிக்கொண்டிருக்கிறது. படத்தைப் பற்றி நல்லபடியாகக் கேள்விப்பட்டதால், நல்ல பிரிண்ட் வந்தால்தான் பார்ப்பேன் என்று அடம்பிடித்து காத்திருந்து பார்த்தேன். இங்கே, குவைத்தில் ரிலீஸ் ஆனது என்றே நினைக்கிறேன். தமிழ்ப்படத்தையே சென்சாரில் குதறிவிடுவார்கள். வூல்ஃபை விடுவார்களா? எனவே காசு கொடுத்து, பாதிப்படம் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்து, இப்போது டொரண்டினேன்.
கதையைப் பற்றி ஏற்கனவே நீங்கள் அறிந்திருக்கலாம்.  ஷேர் மார்க்கெட்டில் வாரன் பஃபெட் முதலீட்டாளர்களில் சிங்கம் என்றால், ஜோர்டான் பெல்ஃபோர்ட் என்பவர் ஸ்டாக் புரோக்கர்களில் சிங்கமாக(ஓநாயாக?) வாழ்ந்தவர். பென்னி ஸ்டாக் எனப்படும் ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி மற்றும் அதற்கும் கீழான கம்பெனி ஸ்டாக்குகளை முதலீட்டாளர்கள் தலையில் கட்டுவதில் வல்லவர். ஷேர் மார்க்கெட் என்பதே அங்கீகரிக்கப்பட்ட சூதாட்டம் தான். 

அதில் இத்தகைய திறமையான ஏமாற்றுப்பேர்வழிகளும் இறங்கினால் என்ன ஆகும்? ஷேர் மார்க்கெட்டில் பணம் சம்பாதிக்க முடியும் என்று நம்புகிற, ஆனால் அதற்குரிய ஃபண்டமெண்டல் அனலைஸிஸ் எதுவும் பண்ணாத முதலீட்டாளர்கள் தான் இத்தகைய ஸ்டாக் புரோக்கர்களுக்கு இலக்கு. எனது நெருங்கிய நண்பர் ஸ்டாக் புரோக்கராக இருந்து, மனசாட்சியால் மனம் வெறுத்து, இப்போது வேறுவேலை செய்கிறார். அவரது பீரியடில் வந்த ஒரு ப்ளாக் ஃப்ரைடேயால் இரு முதலீட்டாளர்கள் தற்கொலை செய்துகொண்டதும் நடந்தது. 

இதுவரை எத்தனையோ ஸ்டாக் மார்க்கெட் பற்றிய படங்கள் வந்திருந்தாலும், இந்தப் படம் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஸ்டாக் புரோக்கர்களின் மெண்டாலிட்டியை, அவர்கள் எப்படி முதலீட்டாளர்களை ஸ்லோ பாய்சனாக காலி செய்கிறார்கள் என்பதை ஸ்டாக் புரோக்கரின் பார்வையில் தெளிவாகப் பேசுகிறது. இதுவரை வந்த ஃபினான்ஸியல் சம்பந்தப்பட்ட படங்களில் ஒரு டீசென்ஸி இருக்கும், அவர்கள் ஹை கிளாஸ் ஆட்கள் என்பதான தோற்றம் இருக்கும். இதில் படம் முழுக்க F*** பாமை போட்டபடியே இருக்கிறார்கள். பெண்கள், போதை மருந்து, தான் வாழ முதலீட்டாளரை காவு கொடுக்கும் ஈவிரக்கமற்ற தன்மை என எல்லாமே பட்டவர்த்தனமாக சொல்லபடுகிறது.
ஒவ்வொரு சீனிலும் வழியும் அழகியல் தான் நம்மை அசர வைக்கிறது. காட்சிகளில் பிரம்மாண்டம், கண்டெண்ட்டில் அதிர்ச்சி என ஒவ்வொரு சீனுமே ஷாட் பை ஷாட் நம்மைக் கவர்கிறது. செக்ஸைக் கொண்டாடிய மனிதன் என்பதை விலாவரியாக விளக்கியிருக்கிறார்கள். இவையெல்லாம் சரியாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இது நல்ல படம் என்று சொல்ல முடியுமா என்று சந்தேகம் வருகிறது. குறிப்பாக படத்தில் வரும் செக்ஸ் சீன்கள் தரும் அதிர்ச்சி/கிளுகிளுப்பை நீக்கிவிட்டுப் பார்த்தால், மிஞ்சுவது என்ன? ஒரு பெரிய இயக்குநரின் படம், பெரிய நடிகரின் படம், பிரம்மாண்டப்படைப்பு என்பதைத் தாண்டி இவ்வளவு வரவேற்பைப் பெறும் அளவிற்கு இந்த படம் ஒர்த் ஆனது தானா?

மார்டின் ஸ்கார்ஸேஸியின் எல்லாப் படங்களும் என் கலெக்சனில் உண்டு. அவரது டாக்ஸி டிரைவர், ஷட்டர் ஐலேண்ட் ஆகிய படங்கள் என் திரைக்கதை கலெக்சனில் உண்டு. நிச்சயம் நம் மதிப்பிற்குரிய, திறமையான படைப்பாளி தான் அவர். ஆனால் இந்தப் படத்தின் திரைக்கதை உண்மையில் மிகவும் சலிப்பைத் தருகிறது.(மீண்டும் சொல்றேன், கிளுகிளுப்பை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால்..!) திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான காட்சிகள், வாழ்க்கையைக் கொண்டாடுகிறான் என்பதை உணர்த்தும் ஆரம்ப செக்ஸ் சீன்களை நாம் எஞ்சாய் பண்ணினாலும் தொடர்ந்து அவற்றிலேயே படம் உழலும்போது, இதை கொண்டாட வேண்டிய திரைக்கதையாக நம்மால் நினைக்க முடியவில்லை.

படத்தில் மற்றொரு குறை, பாதிக்கப்பட்ட முதலீட்டாளரின் தரப்பு ஒரு இடத்தில்கூட பதிவு செய்யப்படாத தன்மை. தன்னைப் பற்றி மட்டுமே யோசித்து வாழ்ந்த பெல்ஃபோர்ட் மாதிரியே, கொண்டாட்டத்தை மட்டுமே யோசித்து எடுக்கப்பட்ட படமாகவே தெரிகிறது. இதனால் விளைந்த தீமை என்னவென்றால், நாமும் இதுபோல் பெண்கள் மற்றும் போதை மருந்துகளுடன் வாழ்க்கையை எஞ்சாய் பண்ணலாம், பண்ணிவிட்டு நார்மல் லைஃபுக்கும் ஒரு கட்டத்தில் திரும்பலாம் என்ற தவறான நம்பிக்கையை கொடுக்கிறது. போதை மருந்துகள் மற்றும் பெண்களின் பின்னே போவது என்பது திரும்பி வரமுடியாத maze க்குள் சிக்கிக்கொள்வது போல் தான். பெல்ஃபோர்ட் திரும்பி வந்தார் என்பதாலேயே, அதை பெரிதுபடுத்திக் காட்டுவது சரியான விஷயம் என்று தோன்றவில்லை. இந்த படத்திற்கு வந்த ரெஸ்பான்ஸ் எல்லாமே ‘என்னமா கொண்டாடி இருக்கான்யா மனுசன்’ என்பதாகத் தான் இருக்கிறது. அது தான் இந்தப் படம் சராசரி ரசிகனுக்கு சொன்ன சேதி.
குட் ஃபெல்லாஸ் ஹீரோவுடன் சராசரி ரசிகன் தன்னை முழுமையாக ஐக்கியப்படுத்திக்கொள்வதில்லை. ஏனென்றால் ரசிகனுக்கு வன்முறை என்பது தள்ளி நின்று ரசிக்கும் விஷயம் தான். ஆனால் செக்ஸும் கோகெய்னும் அப்படி அல்ல. எளிதாக பெல்ஃபோர்ட்டுடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ள  சராசரி ரசிகனால் முடியும். இது முழுக்க, முழுக்க உண்மைக்கதை என்றாலும், அதை இவ்வளவு பெரிய படமாக எடுத்து கொண்டாட வேண்டிய அவசியம் என்ன வந்தது? அப்படியென்றால், கள்ளக்காதல் கதைகளை எடுத்துவிட்டுக்கூட, உண்மையில் நடப்பது தானே என்று சொல்லிவிடலாமே? 

எனவே டெக்னிக்கலாக படம் என்னதான் சிறந்து இருந்தாலும், அவை சினிமா ஆர்வலர்களுக்கு வேண்டுமானால் உதவுமே ஒழிய, சராசரி ரசிகனுக்கு அவை கதை சொல்ல உதவும் உப காரணிகள் மட்டும் தான். கதையும், அதன்மூலம் அவன் புரிந்து கொள்வது என்ன என்பதும் தான் இங்கே முக்கியம். டிகாப்ரியோவின் நடிப்பு, மார்ட்டின் ஸ்கார்ஸேஸி மீதான மரியாதை மற்றும் கிளர்ச்சியைத் தூண்டும் செக்ஸ் சீன்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், நமக்கு எஞ்சுவது பெரும் ஏமாற்றமே! டெக்னிகல் காரணங்களுக்காக, ஸ்கார்ஸேஸியின் படங்களுடன் இதுவும் என் கலெக்சனில் இருக்கும். ஆனால் பார்க்க வேண்டிய படம் என்று இதை பரிந்துரைக்க முடியுமா என்பது சந்தேகமே! 


டிஸ்கி: நிச்சயம், என் அருமைத் தோழர்களான சீன் பட ரசிகர்களுக்கு இதை பரிந்துரைப்பேன். அதிலும் Margot Robbie வரும் காட்சிகள், ஓ......மை........காட்.....ஓமைகாட்.....ஓமைகாட்.....ஓமைகாட்!!!!


மேலும் வாசிக்க... "The Wolf of Wall Street - சினிமாப் பார்வை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

16 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, February 23, 2014

ஆஹா கல்யாணம் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
தெலுங்கு நடிகர்களின் முகம், ஹிந்திப்படம் போன்ற போஸ்டர் டிசைன் கூடவே சப்பையான படப்பெயர் ஆகிய காரணங்களால் மிரண்டுபோய் பார்க்காமல் தவிர்த்த படம். ஆனாலும் படம் பார்த்த நண்பர்கள் நல்ல படம் என்று பாராட்டித் தள்ளியதால் துணிந்து நேற்றுப் போய் பார்த்துவிட்டேன். மொக்கைப் படத்தையே அசராமல் பார்க்கிற நாமே இவ்வளவு யோசித்தால், நல்ல படமா என்று நாலு இடத்தில் கேட்டுவிட்டு பின் திருட்டு விசிடி/நெட்டில் பார்க்கும் மக்கள் எப்படி தியேட்டருக்கு வருவார்கள்? தெலுங்கில் மட்டும் ஓடினால் போதும் என்று நினைத்துவிட்டார்களோ என்னவோ? விருந்தாளி இல்லாமல் வீணான நல்ல விருந்து என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு ஊர்ல..:
ஒரு பெரிய வெட்டிங் ப்ளான்னராக வரவேண்டும், காதல் கசமுசாவையெல்லாம் நினைக்ககூட நேரமில்லை என்று இருக்கிறார் நாயகி. காதல் தான் மெயின் என்ற குறிக்கோளுடன் நாயகி கூடவே இருக்க, பார்ட்னராக ஒட்டிக்கொள்கிறார் ஹீரோ. கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோயின் காதலுக்கும் மனதில் இடம் கொடுக்க, ஹீரோ கொஞ்சம் கொஞ்சமாக நாயகியின் லட்சியத்தின் முக்கியத்துவத்தை உணர்கிறார். நிலைமை தலைகீழ் ஆகும்போது, இருவரும் (+நாமும்) உணர்ச்சிவசப்பட்ட ஒரு தருணத்தில் கசமுசா ஆகிவிடுகிறது. மேட்டர் முடிஞ்சதால் தான் நாயகன் ஒதுங்குகிறான் என நாயகி நினைக்கத் துவங்க, லட்சியத்துக்குப் பிறகே காதல் என நாயகன் இருக்க, ரிலேசன்ஷிப்பும் பார்ட்னர்ஷிப்பும் டமார் ஆகிறது. அப்புறம் எப்படி சேர்கிறார்கள் என்பதே கதை.

உரிச்சா....:
குஷி மாதிரி ஈகோவை பேஸ் பண்ணிய கதை. கல்லூரி முடிந்து ஹீரோயின் பிஸினஸ் கற்றுக்கொள்ள ஆரம்பிக்க, கூடவே ஒட்டிக்கொள்ளும் ஹீரோ காதலுடன் அவரையே சுற்றிச் சுற்றி வர செம ஜாலியாகவே படம் ஆரம்பிக்கிறது. இயல்பான நிகழ்வுகளைக் கொண்டு பின்னப்பட்டிருக்கும் எளிமையான திரைக்கதை நம்மை எளிதாக வசீகரிக்கிறது. ஒரு ஈகோயிஸ்ட் மற்றும் தன்னம்பிக்கையான ஹீரோயினும், எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்ளும் ஹீரோவும் சீக்கிரமே நமக்கு பிடித்துப்போகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வாணி கபூர், நானியை விரும்ப ஆரம்பிப்பதை அழகாக சொல்லி இருக்கிறார்கள். 

ஹிந்திப்படங்களில் வரும் பிரம்மாண்ட கலர்ஃபுல் கல்யாண காட்சிகளைப் பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாகவே இருக்கும். இதில் அவற்றை அப்படியே கலர்ஃபுல்லாக கொண்டு வந்திருக்கிறார்கள். படத்தின் பலமும் அது தான், பலவீனமும் அது தான். படத்தின் ஒவ்வொரு சீனும் தமிழ்ப்படம் அல்ல என்று கட்டியம் கூறுகிறது. தமிழக கல்யாணத்தில் நார்த் இண்டியன் ட்ரெஸ் போட்டு பலே பலே என்று ஆடும்போது, நமக்கு கண்ணைக் கட்டி விடுகிறது.(அதற்குக் காரணம், வாணி கபூரும் தான்!) தமிழில் தான் எல்லோரும் பேசுகிறார்கள், சென்னையில் தான் கதை நடப்பதாக வருகிறது. ஆனாலும் நேட்டிவிட்டி என்பது சுத்தமாக எங்குமே இல்லை. ஹீரோவோ தெலுங்கு உச்சரிப்பில் தமிழைப் பேசுகிறார். வாணி கபூரோ ஹிந்திப்பட ஹீரோயின் மாதிரி தான் இருக்கிறாரே ஒழிய தமிழ்நாட்டு பிராமணப்பெண் என்று நம்பவே முடியவில்லை. (Highயங்கார் பெண்மணியின் பிண்ணனி குரலில் மட்டும் அவ்வப்போது பிராமண பாஷை வருகிறது)
உண்மையில் குஷி மாதிரி சூப்பர் ஹிட் ஆகி இருக்க வேண்டிய படம். புலிவால் படம் பற்றிய பதிவில் சொன்னது போல், தமிழுக்காக எதையும் மாற்றாமல் அப்படியே சீன் பை சீன் கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருக்கிறார்கள். ஹீரோயினும் ஹீரோவும் சேரும் அந்த காட்சியில்கூட, ஹீரோயின் தண்ணி அடித்துவிட்டு, ஹீரோவுடனே படுப்பதாகக் காட்டுகிறார்கள். சென்னை வாழ் தமிழனே இதை ஜீரணிப்பது கஷ்டமாயிற்றே, எப்படி ஐயா மற்ற ஏரியாக்களில் ஏற்றுக்கொள்வார்கள்? இருவரும் சேர காதல் மட்டுமே போதாதா? சென்னையில் குடும்பத்துடன் வாழும் பெண், ஏன் ஹீரோவுடன் அடிக்கடி தங்குகிறார் என்றுகூட லாஜிக்கலாக ஒரு காரணம் சொல்லக்கூடாதா?

படத்தின் சூழல், நடிகர்கள், உச்சரிப்பு எல்லாமே அந்நியமாக போய்க்கொண்டு இருக்கும்போது, காட்சிகளும் அடுத்து அப்படியே அரங்கேறுகின்றன. செக்ஸ் முடிந்தபின், ‘சரி..விடு’ என்று கேஷுவலாக ஹீரோ கடந்துபோகிறார். ஹீரோயின் கண்ணீரை கண்ணுக்குள் அடக்கிக்கொண்டு நிற்கிறார். ’ங்கொய்யால..’ என்று ஆரம்பித்து பிரித்து மேய்ந்திருக்க வேண்டாமா? இதையெல்லாம் பார்க்கிற அளவுக்கு நம்ம ரசிகர்கள் இன்னும் டெவலப் ஆகலை, ஆகவும் வேண்டாம்யா! ஹிந்தியில் வேண்டுமானால், இதெல்லாம் சகஜம் ஆகியிருக்கலாம். அவர்கள் டெல்லி பெல்லி கொண்டவர்கள். நமக்கு அந்த மாதிரி சேட்டையே ஆகாது இல்லியா?

நல்ல கதை, அருமையான திரைக்கதை. ஜாலியாகவே நகரும் படம் என எல்லாம் இருந்தும், கலர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்று இறங்கி, ஹிந்தி டப்பிங் படம் பார்ப்பது போன்ற உணர்வைக் கொண்டுவந்திருக்கிறார்கள். ஏதோ சில ஹிந்திப்படங்களைப் பார்த்திருப்பதால், ஏன் இப்படி பிஹேவ் பண்றாங்கன்னு புரிஞ்சிக்க முடிஞ்சது. மத்தவங்க பாடு கஷ்டம் தான்!

நானி:
கேஷுவல் பார்ட்டியாக, ஹீரோயினிடன் அடி வாங்குபவராக ரொம்பவே அடக்கி வாசித்திருக்கிறார். அவரது தெலுங்கு முகமும், தமிழ் உச்சரிப்பும் பெரிய உறுத்தல். படம் ஆரம்பித்து கொஞ்ச நேரத்திற்கு, ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது. அப்புறம் ரொம்ப நேரத்திற்கு, கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது. மற்றபடி, நல்ல நடிப்பு. 

வாணி கபூர்:
படத்தையே தாங்கிப் பிடிக்கும் கலர் தூண். என்ன ஒரு ஸ்க்ரீன் பிர்சன்ஸ், கரீஷ்மா. படம் முழுக்க குறையாத உற்சாகத்துடன் வருகிறார். பாடல் காட்சிகளில் இடுப்பை ஒடிப்பதில், படத்தில் இருக்கும் சிம்ரனே காணாமல் போகிறார். கீர்த்தி ரெட்டியைவும் ஷில்பா ஷெட்டியைவும் மிக்ஸ் பண்ணிய முக அமைப்பு. இதில் ஆச்சரியம், நடிப்பும் வருவது தான். தெலுங்கில் பெரிய ரவுண்டு வருவார். அப்போ தமிழில்? அம்மணி அரைப் பனைமர உயரம். நம்ம ஹீரோக்களுக்கு கஷ்டம் தான். மேலும், நம் மன்ற விதிகளை அப்ளை செய்தால், அம்மணி பெயில் தான்!

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- நேட்டிவிட்டியே இல்லாமல் எடுத்தது
- தமிழனை கன்வின்ஸ் பண்ணும் லாஜிக்களே இல்லாமல், மாடர்ன் கல்ச்சரில் கதாபாத்திரங்கள் நடந்துகொள்வது. (உதாரணமாக..நிச்சயமான துபாய் மாப்பிள்ளையுடன் ஒன்றுமே நடக்காதது போல் ஹீரோயின் கடலை போடுவது, கிளைமாக்ஸில் ஜஸ்ட் லைக் தட் அவரை கழட்டி விடுவது என தமிழனை டெரர் ஆக்கும் காட்சிகள்)
- நானி ஏன் ஒதுங்கிப்போகிறார் என்பதை சொல்லாமல் மறைக்க, வலுவான காரணம் ஏதும் இல்லை
- படத்திற்கு கெட்டி மேளம் என்றுகூட பெயர் வைத்திருக்கலாம். ஆஹா கல்யாணம் என்ற பெயரும் போஸ்டர் டிசைனும் கொஞ்சமும் கவரவில்லை

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- வாயில் நீர் ஊற வைக்கும் வாணி கபூர் (கொடுத்த காசு அம்மணிக்கே சரியாப் போச்சு..படம் ஃப்ரீ தான்)
- படம் முழுக்க வரும் மெல்லிய புன்சிரிப்பை வரவழைக்கும் வசனங்கள் (உன்னை கெட்டவன்னு நினைச்சேன்..இப்போத்தான் தெரியுது, நீ ஒரு அறிவு கெட்டவன்னு!)
- கலர்ஃபுல்லான படம். ஜிகுஜிகுவென்று ஜொலிக்கிறது, ஒவ்வொரு சீனும்.
- பிருந்தாவின் நடனம் (நன்றி: வாணி கபூர்)
- தரண் குமாரின் இசை

பார்க்கலாமா? :

’ஹிந்திப் படம் தான். நமக்குப் புரியணுமேன்னு நல்லவங்க தமிழ்ல பேசுறாய்ங்க’ என்று மைண்ட்டை செட் செய்து உட்கார்ந்தால், கண்டிப்பாக பார்க்கலாம்.

மேலும் வாசிக்க... "ஆஹா கல்யாணம் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

22 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, February 22, 2014

மிச்சக்காசு - குறும்பட விமர்சனம்

சமீப காலமாக ஈழத்தில் இருந்து நம்பிக்கையூட்டும் படைப்புகள் வெளிவரத் துவங்கியுள்ளன. அந்தவகையில் சென்ற வாரம் வெளியாகி, பலரின் பாராட்டைப் பெற்றுள்ள குறும்படம், பதிவர் ம.தி.சுதாவின் மிச்சக்காசு.

ம.தி.சுதா இயக்கிய துலைக்கோ போறியள் மற்றும் அவர் நடித்த போலி ஆகிய குறும்படங்கள், நம் மனதைக் கவரவில்லை என்பதே உண்மை. தொழில்நுட்பரீதியில் அவை மிகவும் பின் தங்கி இருந்தன. எனவே மிச்சக்காசு குறும்படத்தையும் கொஞ்சம் அவநம்பிக்கையுடனே பார்த்தேன்.  சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பதற்கிணங்க, அவர் இந்தப் படத்தில் தேறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

கதை என்பது நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு நிகழ்வு தான். கடைகளில் பொருள் வாங்கும்போது, மீதிக்காசு பெரும்பாலும் கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக சாக்லேட்டைக் கொடுப்பது நம் மக்களின் வழக்கம். சமீபத்தில் கேபிள் சங்கர், டோல் கேட்டிலேயே அப்படி கொடுப்பதாக எழுதி இருந்தார். கடைகளில் மிச்சக்காசுக்கு பதிலாக கிடைக்கும் சாக்லேட்டை சேர்த்து வைக்கும் ஒரு சிறுவன், அன்று மாலையே வாங்கிய பொருளுக்கு காசு தருவதற்குப் பதிலாக சேர்த்து வைத்த சாக்லேட்டை கொடுத்து, கடைக்காரரை அதிர்ச்சிக்கும் நம்மை இன்ப அதிர்ச்சிக்கும் ஆளாக்குவது தான் படம்.
குறும்படம் என்றாலே ராக்கெட் சைன்ஸ் ரேஞ்சுக்கு கான்செப்ட் யோசிப்பது, கருத்து சொல்வது என்று இல்லாமல், யதார்த்தமாக வாழ்க்கையின் ஒரு துளியை நச்சென்று காட்டி இருக்கிறார்கள். 

வீட்டில் அமர்ந்திருக்கும் பையனிடம் அம்மா கடைக்குப்போ என்று சொன்னதும், அவன் காட்டும் எக்ஸ்பிரசன் அருமை. சலிப்புடன் போகிறான் என்பதை அழகாக காட்டியுள்ளார்கள். அதே போன்றே கடைசியில் கடைக்காரராக வரும் மதி.சுதா, நாக்கைக் கடித்தபடி கொடுக்கும் எக்ஸ்பிரசனும். படத்தில் நாம் ரசித்த இன்னொரு விஷயம், அந்த அம்மா கேரக்டரை வாய்ஸிலேயே முடித்ததும், ஆட்டோவில் பயணிக்கும்(!) நாய் கேரக்டரும்.

குறும்படத்தில் குறை என்றால், மிச்சக்காசுக்கு பதிலாக சாக்லேட் கொடுக்கிறார்கள் என்பது தான் படத்தின் முக்கிய மேட்டர். அப்படி கொடுக்கிற விஷயத்தை வசனத்திலோ காட்சியிலோ முதலில் தெளிவாகச் சொல்லவில்லை. இந்த விஷயத்திற்கு பழக்கப்பட்ட நமக்கு, என்ன நடக்கிறதென்று எளிதில் புரியும். மற்றவர்களுக்கு குறும்படம் முடியும்போது தான் தெரிய வரும். ‘மிச்சக்காசு இல்லை, இந்தா சாக்லேட்’ என்ற வசனமோ அல்லது, அந்த சாக்லேட்டிற்கு ஒரு குளோஷப்-ஷாட்டோ வைத்திருக்கலாம். இறுதியில் சிறுவனின் பையில் இருந்து எடுக்கும்போது தான் மொத்த விஷயமும் மற்றவர்களுக்கு விளங்கும்.

நகைச்சுவைப் படத்திற்கே உரிய எளிய இசை, சுதாவின் முந்தைய படங்களை விட பெட்டரான ஒளிப்பதிவு, சிறுவன் சங்கரின் நடிப்பு என எல்லாமாகச் சேர்ந்து, ஒரு நல்ல சிம்பிளான குறும்படம் பார்த்த ஃபீலிங்கை கொடுத்துவிட்டன.

AAA Internation Award  நிகழ்வில்   சிறந்ததிரைக்கதைக்கான விருதினை மிச்சக்காசு குறும்படம் வாங்கியுள்ளதாக அறிகிறேன். குறும்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எமது வாழ்த்துகள்!
மேலும் வாசிக்க... "மிச்சக்காசு - குறும்பட விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, February 21, 2014

பிரம்மன் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
வில்லேஜ் கெட்டப்பை விட்டுவிட்டு, முதன்முதலாக சிட்டி ஸ்டைல் பாண்டியாக சசிகுமார் நடித்து வெளிவந்திருக்கும் படம் பிரம்மன். முதன்முதலாக சந்தானம் சசியுடன் ஜோடி(!) சேர, கூடவே சூரியும் இருக்க நல்ல கமர்சியல் மூவியாக வரும் என்று எதிர்பார்ப்பை எகிற வைத்த படம். என்ன ஆச்சுன்னு பார்ப்போம், வாருங்கள்.

ஒரு ஊர்ல..:
ஒரு தியேட்டரை லீசுக்கு எடுத்து நஷ்டத்தில் நடத்திக்கொண்டிருக்கும் சசிக்குமாருக்கு ஹீரோயின் மேல் காதல்.(பின்னே, ஹீரோயின் பாட்டி மேலயா....?) . சசியின் பாலிய..ச்சே, பால்ய.., ..சிறுவயது நண்பன் சினிமாவில் பெரிய டைரக்டராக இருக்கிறார். தியேட்டரை தொடர்ந்து நடத்த சிக்கல் வர, காதலும் இரு வீட்டார் எதிர்ப்பால் சிக்கல் ஆக, நண்பனிடம் உதவி கேட்க சென்னை போகிறார். தியேட்டர்-காதல்-நட்பு மூன்றிலும் எப்படி ஜெயிக்கிறார் என்பதே கதை.

உரிச்சா....:
இன்றைய சூழ்நிலையில் ஒரு தியேட்டரை, அதிலும் பழைய படங்கள் மட்டுமே ஓடும் தியேட்டரை நடத்துவது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பதை நகைச்சுவையாக காட்டுவதுடன் முதல்பாதி ஆரம்பிக்கிறது. சிறுவயது முதலே அந்த தியேட்டர்மேல் இருக்கும் பிரியத்தால், லீசுக்கு எடுத்து நஷ்டத்துடன் நடத்துவதும், சசி காதலைவிட தியேட்டரை பெரிதாக மதிப்பதும் ஓரளவு டச்சிங்காகவே இருந்தது.

கூடவே ஆப்பரேட்டர்+நண்பனாக சந்தானம் இருப்பதால், முதல்பாதி ஜாலியாகவே நகர்கிறது. சசி காதலில் விழுவதும், ஹீரோயினின் அண்ணனுக்கே சசியின் தங்கை வாழ்க்கைப்பட, பணத்தைத் தவிர காதலுக்கு வேறு பிரச்சினை குறுக்கே இல்லை என்றும் ஆகிறது. தியேட்டர் செண்டுமெண்ட் + காதல் கலாட்டாக்கள்+சந்தானம் ஒன்லைனர்கள் என முதல்பாதி ஓகே என்று சொல்லும் நேரத்தில் தான் நட்பு சேப்டரை ஓப்பன் செய்கிறார்கள்.

இரண்டாம்பாதியில் சென்னைக்கே நண்பனைத் தேடி சசி போக, சூரியுடன் சென்னையில் அலப்பறை ஆரம்பிக்கிறது. நண்பனைத் தேடிப் போன இடத்தில் தற்செயலாக டைரக்டர் ஆகும் சான்ஸ் இவருக்கே கிடைப்பதும்(என்னது?-ன்னு ஜெர்க் ஆகக்கூடாது..அது அப்படித்தான்!), அப்புறம் அவசர அவசரமாக சினிமாவைக் கற்றுக்கொண்டு(!) இவர் படத்திற்கு பூஜை போடும் நேரத்தில் நண்பனுக்காக அந்த சான்ஸ்+கதையை விட்டுக்கொடுக்க, அடுத்து நண்பனுக்காக காதலை விட்டுக்கொடுக்க, அதனால் க்ரிப்பான திரைக்கதையையும் விட்டுக்கொடுத்து, படத்தை நாடகம் ஆக்கிவிடுகிறார்கள்.

தியேட்டர், காதல் பிரச்சினையே போதுமானதாக இருக்கும்போது, நட்பைக் கொண்டுவந்து, அதன் செண்டிமெண்ட்டை சாறு பிழிந்து, ‘நட்புன்னா....’ன்னு வழக்கமான சசி பட டயலாக்குகளைப் பேசி, எங்கெங்கோ அலை பாய்ந்திருக்கிறார்கள். நண்பனுக்கு திருமணம் நிச்சயம் ஆகிறது, பார்த்தால் அது ஹீரோயின் என்பதெல்லாம் சிவாஜி-பாலாஜி கால ட்விஸ்ட் மக்கா! இன்னுமா அதை வச்சு படம் ஓட்டலாம்ன்னு நினைக்கிறீங்க? அதுக்கு கிளைமாக்ஸ் என்னவா இருக்கும்ன்னு பேரரசு ஃபேன்ஸ்க்குக்கூடத் தெரியுமே!

படத்தில் பாராட்ட வேண்டிய விஷயம், இன்றைய தியேட்டர்களின் நிலைமையையும் தியேட்டருக்கும் சசிக்குமான பிணைப்பையும் அழகாகச் சொன்னது தான். ஆனால் வேறு தொழில் பார்த்துக்கொண்டேகூட, அந்த தியேட்டரை நடத்தலாம். வேறு வேலைக்கும் போகாமல், ‘பணத்தை பெருசா நினைக்கிறவன் இல்லை நானு’ என்று கூமுட்டைத்தனமாக பஞ்ச் பேசிக்கொண்டு, கிடைக்கிற பணத்தையெல்லாம் சசி விட்டுக்கொடுப்பது எல்லாம் ஓவரோ ஓவர்.

இன்றைய சினிமாவின் நிலையையும் ’அசிஸ்டெண்ட் டைரக்டர் ‘சூரி போர்சனில் ஜாலியாக சொல்லி இருக்கிறார்கள். இரண்டாம்பாதியில் நம்மை உட்கார வைப்பது அது தான். மொத்தத்தில் ஒரே படத்திலேயே தியேட்டர் பாசம்-காதல்-நட்பு-தியாகம் என எல்லாவற்றையும் தீவிரமாகச் சொல்ல முயற்சித்து, கோட்டை விட்டுவிட்டார்கள்.

சசிகுமார்:
வில்லேஜ் கெட்டப்பில் இருந்து டவுன் கெட்டப்பிற்கு மாறி இருக்கிறார். சசியிடம் பிடித்த விஷயமே, சுறுசுறுப்பு தான். இதிலும் துருதுருவென வருகிறார். வீட்டில் திட்டு வாங்கும் உருப்படாத பையனாக, காதலியை விரட்டி விரட்டி காதலிப்பவராக, சந்தானத்திற்கும் ஈடு கொடுப்பவராக சசி எப்போதும்போல், அவர் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார். ராஜூ சுந்தரம் புண்ணியத்தில், உறுத்தாத டான்ஸ் ஸ்டெப்களுடன், ஃபாரின் டூயட்டும் பாடி விட்டார், இந்தப் படத்தில்.
லாவண்யா:
புதுமுகமாக அறிமுகம் ஆகியிருக்கிறார். ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார். சிரிக்கும்போது கன்னத்தில் குழிவிழும்போது, பிரபு மாதிரி அழகாக இருக்கிறார்.(நான் சரியாத்தான் பேசறனா?) நடிப்பிலும் ஓகே தான்.  ஒரு ரவுண்ட் வருவார் என்று நினைக்கிறேன்.

சந்தானம்:
முதல்பகுதியின் கலகலப்புக்கு உத்தரவாதம் தருபவர். இரண்டாம்பாதியில் கதை சென்னைக்கு நகர்ந்துவிட, இவரும் தியேட்டரை பொறுப்புடன் நடத்தும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக ஆகிவிடுகிறார். வழக்கமான ஒன் லைனர்கள் தான். ஆனாலும் கலகலக்க வைத்துவிடுகிறார்.

சூரி:
சினிமாவில் வாய்ப்பு தேடும் மனிதராக வருகிறார். வந்த ஒரே நாளில் சசி டைரக்டர் ஆகிவிட, அவரை பின்னால் இருந்து இயக்குபவராக, கோ-டைரக்டராக ஆகிறார். சினிமாவில் உள்ள சில பந்தா பரமசிவன்களை நன்றாகவே ஓட்டி இருக்கிறார்கள். சந்தானத்துடன் சேர்ந்து ஒரு காட்சிகூட இல்லை.
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- மெதுவாகச் செல்லும் திருப்பங்களை யூகிக்க வைக்கும் திரைக்கதை
- நட்பு, நட்புக்கு தியாகம் என்று இழுவையான கடைசி முக்கால்மணி நேரம்
- லாஜிக் பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாதது
- யதார்த்ததைப் புரிந்துகொள்ளத, எரிச்சலைக்கிளப்பும் ஹீரோ கேரக்டர்
- தியேட்டருக்காக காதலை தூக்கி எறிவது, நட்புக்காக காதலை தியாகம் செய்வது என சட்டை ரேஞ்சுக்கு காதலை டீல் பண்ணியது. அது இறுதியில் இருவரும் சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்பே இல்லாமல் செய்துவிட்டது.

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- - சசிக்குமார்
-  சந்தானம் மற்றும் சூரியின் காமெடி 
- தியேட்டர் போர்சன் (வெயிலை ஞாபகப்படுத்தினாலும்)
- அவ்வப்போது வரும் நல்ல வசனங்கள்
- டிஎஸ்பியின் இசையில் பாடல்கள். (முதல்பாட்டு ஆறு படத்தில் வந்த அதே பீட்!)
- அந்த இயல்பான தங்கச்சி கேரக்டர்
- ஒரு பாடலுக்கு ஆடும் பத்மப்ரியா
- சசி படத்திற்கு ஒரு புதிய லுக்கை கொடுத்தது (நண்பன் போர்சன் தான் அக்மார்க் நாடோடித்தனம்!)
பார்க்கலாமா? :

முதல்பாதி+ காமெடிக்காக........ஒருமுறை!மேலும் வாசிக்க... "பிரம்மன் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, February 20, 2014

போண்டா சாரும் கஸ்டமர் கேரும்

டிஸ்கி: இன்னைக்கு ‘ஆஹா கல்யாணம்’ன்னு ஒரு படம் ரிலீஸ் ஆகியிருக்கு. ஏதோ ஒரு சூப்பர் ஹிட் இந்திப்படத்தின் ரீமேக்ன்னு சொன்னாங்க. ஆனாலும் போஸ்டர் மற்றும் படப்பெயரைப் பார்த்தாலே, பயமா இருந்ததால நான் போகலை. யாராவது பார்த்துட்டு சொல்லட்டும். நம்ம சொம்பு, நமக்கு முக்கியம்! (இப்போ பிரம்மன் ரிலீஸ் ஆகிடுச்சு..காலையில் விமர்சனம் வரும்!)

நான் பி.ஈ. ஃபைனல் இயர் படிக்கும்போது, புராஜக்ட் பண்ண வேண்டிய நேரம் வந்தது. அப்போ போண்டா சார்கிட்ட புராஜக்ட் பண்ணுவோம்ன்னு முடிவு பண்ணோம். போண்டாங்கிறது நாங்க வச்ச பட்டப்பேரு. ஆளு பார்க்க அழகா இருப்பாரு. கன்னம் எல்லாம் உப்பிப்போய், முகமே போண்டா மாதிரி இருந்ததால போண்டா சார் ஆனார். ரொம்ப நல்ல மனுசன் வேற. அதனால அவர் தான் நமக்கு சரிப்பட்டு வருவார்ன்னு அவரைப் பிடிச்சோம். 
பெட்ரோல் எஞ்சினை எல்.பி.ஜி. எஞ்சினா மாத்தி, பெர்ஃபாமன்ஸ் அனலைஸிஸ் பண்ணி, ஒரு தீஸிஸ் சப்மிட் பண்ணலாம்ன்னு சொன்னார். காலேஜ் லேப்ல இருந்த பெட்ரோல் எஞ்சினையே கன்வெர்ட் பண்ணலாம்ன்னு ப்ளான்.

அதைக் கேட்டதும் நமக்குத்தான் பக்குன்னு ஆகிடுச்சு. ஏன்னா, அப்போ எங்க கிராமத்துலேயே கேஸ் அடுப்பு கிடையாது. அதனால எல்.பி.ஜி. பத்தி நாம தினத்தந்தி மூலமா தெரிஞ்சிக்கிட்டதெல்லாம், அது வரதட்சணைக் கொடுமைக்கு யூஸ் ஆகிற ஒரு வெப்பன்னு தான். கலர் வேற சிவப்பா அடிச்சு, மண்டி ஓடு சிம்பல்லாம் போட்டிருப்பாங்களா, பார்த்தாலே வயத்தைக் கலக்கிடும். அதை வச்சு புராஜக்ட் பண்ணனும்ங்கிறதை என்னால நினைச்சுப்பார்க்கவே முடியலை. 

அதானால “சார்..ராமர் பிள்ளை பெட்ரோல் பத்தி வேணா அனலைஸிஸ் பண்ணுவோமே?’ன்னு கெஞ்சிக் கேட்டும் மனுசன் ஒத்துக்கலை. வேற வழியே இல்லாம களத்துல குதிச்சோம். எஞ்சின், எஞ்சின்னு டெக்னிக்கலா பேசினால் உங்களுக்குப் புரிகிறதோ, இல்லையோ! எனவே...கீழே உள்ள ஸ்டில்லில் நமீதாவின் உட்காரும் இடத்திற்கு கீழே மறைந்து இருப்பது தான் எஞ்சின் ஆகும்!

அப்போ மதுரைல ரெண்டு பேர் தான் பெட்ரோல் எஞ்சினை கேஸ் எஞ்சினா மாத்திக்கிட்டு இருந்தாங்க. அதுல ஒருத்தர் 5000 ரூபாய் வாங்கி, எஞ்சினை கன்வெர்ட் பண்ணிக் கொடுத்தார். அப்புறம் எங்க ஆராய்ச்சியை ஆரம்பிச்சோம். நான்கு நாட்களா எஞ்சினை ஓட்டி, நாங்க எழுதுன ரிப்போர்ட் இப்படி இருந்தது:

அதாகப்பட்டது:
எஞ்சின் ஓடுது

ஒரு ஊருல:
எஞ்சின் ஓடுது

உரிச்சா:
எஞ்சின் ஓடுது

நெகடிவ் பாயிண்ட்ஸ்:
எஞ்சின் ஓடுது

 பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
எஞ்சின் ஓடுது

நாலு நாள் கழிச்சு வந்து பார்த்த போண்டா சார் ,காண்டாகிட்டார். ‘ஏன்பா, நாலு நாள் எஞ்சினை ஓட்டி, எஞ்சின் ஓடுதுன்னு தான் கண்டுபிடிச்சீங்களா?’ன்னு கொதிச்சுட்டார். அப்புறம் எப்படி புராஜக்ட்டை முடிச்சோம்ன்னு விளக்கிச் சொன்னா, தேடி வந்து என் டிகிரி சர்டிபிகேட்டை பிடிங்கிட்டுப் போயிடுவாங்க என்பதால், அதை விட்டுவிட்டு மெயின் மேட்டருக்கு வருவோம்.

எஞ்சின் மாத்த 5000 ரூபாய் கேட்ட ஆள் என்ன சொன்னாரென்றால் ‘நாளைக்கு காலைல வந்து 5000 ரூபா கொடுத்திடுங்கப்பா..அடுத்த வாரம் வந்து எஞ்சினை மாத்திக் கொடுத்துடறேன்’ என்று. நாங்களும் காலையில் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு வந்து, போண்டா சாரிடம் சொன்னோம். அப்போது அவர் சொன்னது தான் மெயின் மேட்டர். ‘தம்பி..இந்தியால காசை முழுசா கொடுத்திட்டு சர்வீஸ் வாங்கணும்ன்னு நினைச்சா ஆப்பு வச்சிடுவாங்க. அட்வான்ஸ் வேணா கொடுக்கலாம். முழு வேலையும் முடிச்சு, எஞ்சின் ஓடுன அப்புறம் தான் காசுன்னு சொல்லிடுங்க. இங்க மட்டும் இல்லை, எங்கேயுமே ஃபுல் பேமெண்ட் பண்ணிடாதே’ன்னு சொன்னார். அது எவ்வளவு கரெக்ட்டுன்னு படிச்சு முடிச்சு, வெளில வந்து சில இடத்துல அனுபவப்பட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.
அப்புறம் நண்பர்கள், சொந்தங்கள், மனைவிகள்..ச்சே, மனைவின்னு எல்லாருக்கும் அந்த போண்டா தியரியை சொல்றது நம்ம வழக்கம். அப்படி ஒரு தடவை சென்னைல இருந்த ரூம் மேட்கிட்டயும் சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்தது. வாராவராம் ட்ரெஸ் அயர்ன் பண்ணி வாங்கிக்கிட்டு இருந்தோம். அப்போ நண்பர் என்ன முடிவு பண்ணார்ன்னா, ஒன்னாம் தேதியே அட்வான்ஸா மொத்தமா ஒரு அமவுண்ட் கொடுத்திடுவோம்ன்னு நண்பர் முடிவு பண்ணார். நான் அவர்கிட்ட போண்டா தியரியை சொல்லவும் டென்சன் ஆகிட்டார். ‘அடே பூர்ஷ்வாப்பயலே, உழைக்கு மக்களை தவறாக நினைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள். அந்நிய நாட்டு கம்பெனியில் அடிமை உத்தியோகம் பார்க்கும் உனக்கு, அடித்தட்டு மக்களைப் பற்றிப் பேச என்னடா தகுதி இருக்கிறது?’ன்னு பொங்கித் தீர்த்துட்டார். அப்புறம் அவர் மட்டும் ஒன்னாம் தேதியே முழுக்காசும் கொடுத்தார். நான் வழக்கம்போல்!

எனக்கு மூன்றாவது நாளே எல்லாத்துணியும் வந்து சேர்ந்தது. அவருக்கு ரெண்டு செட் மட்டும் வந்தது, ‘சார்..கொஞ்சம் டைட் ஒர்க்கு சார்..ரெண்டு நாள்ல மீதி துணியை கொடுத்திடறேன்’ என்று அவர் சொல்லவுமே நான் போண்டா தியரியை பிராக்டிகலாகப் பார்க்கும் அனுபவத்திற்கு தயாரானேன். ரெண்டுநாளில் ஒன்றும் வரவில்லை. பின் இவரே தேடிப்போய் ‘போடறதுக்கு ட்ரெஸ் இல்லைய்யா’ என்று புலம்பிய பின், ‘அப்படியே ஒரு நிமிசம் நில்லுங்க சார்’ என்று சொல்லிவிட்டு ஒரு செட் மட்டும் ரெடி செய்து கொடுத்தார் அயர்ன்காரர். அப்புறம் அந்த மாதம் முழுக்கவே ஒவ்வொரு செட்டாக நின்று வாங்கித்தான் கொடுத்த காசை கழிக்க வேண்டி வந்தது. எப்படியோ, அந்த மாத முடிவில் அதுவரை புரட்சிக்காரனாக இருந்த நண்பர், மனுசனாக ஆகிவிட்டார். போண்டா தியரியின் மகத்துவத்தை அவரும் ஒரு வழியாக ஏற்றுக்கொண்டார்.
வருகின்ற வருமானத்தை சரியாக ப்ளான் செய்து செலவளிக்கும் வழக்கம், நம் மக்களுக்கு குறைவு. அடுத்த ஒரு மாதத்திற்கான காசு, ஒரே நாளில் கொடுத்தால் ஒரு வாரத்தில் அதை செலவளித்து முடித்துவிடுவதே நம் வழக்கம். எனவே அடுத்து யார் காசு கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு முன்னுரிமை தரவே மனது போகும். ஆகவே மக்களே, போண்டா தியரியை மைண்ட்ல வைத்துக்கொள்ளுங்கள். வாயில தோசை, அப்புறம் தான் கைல காசு!

மேலும் வாசிக்க... "போண்டா சாரும் கஸ்டமர் கேரும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

32 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, February 16, 2014

புலிவால் - ஜஸ்ட் மிஸ்.

மகாநதில மகளை மீட்க கெஞ்சுற கமலை ஏத்துக்கிட்ட நாம், அதே கேரக்டர்ல ரஜினியை ஏத்துப்போமாங்கிறது சந்தேகம் தான். ரஜினி பஞ்ச் டயலாக் பேசறதை ரசிச்ச நம்மால், சுள்ளான்கள் பஞ்ச் விடறதை பொறுக்க முடிவதில்லை. சில விஷயங்களை, சிலர் பண்ணாத்தான் ஒத்துக்க முடிகிறது.
ஆங்கிலத்துல பெரிய ஹிட்டான 'சிக்ஸ்த் சென்ஸ்' படத்தை தமிழில் எடுத்தால், நாம் ரசிப்போமான்னு காலேஜ் டேஸ்ல நண்பர்கள் மத்தியில் விவாதித்திருக்கிறோம். முழுக்க வசனங்களால் நிரம்பிய அந்தப் படம், தமிழ்ல டப் பண்ணி வந்தாக்கூட ஓடி இருக்காது. ஆங்கிலப்படம் என்றால் விறுவிறுப்பாக இரண்டு ஆக்சன் சீகுவென்ஸும், நான்கு கிஸ் சீன்ஸும் இருக்க வேண்டியது கட்டாயம்.
அதே போன்றே லாஜிக் இல்லாமல் மேஜிக்கை மட்டுமே நம்பி வரும் 'டைனோசர், பாம்பு, பல்லி, பூரான்' போன்ற ஹீரோக்கள் நடித்த படத்தை, தமிழில் யாராவது எடுத்தால் 'என்னய்யா லாஜிக்கே இல்லாம எடுத்திருக்கான்?' என்று கும்மி விடுவோம்.

 ஒவ்வொரு மொழிப் படத்தையும் எப்படிப் பார்ப்பது என்று நாம் நம்மை அறியாமலே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். (யப்பா..We are conditioned  என்பதன் தமிழாக்கம்..அவ்வ்!). மலையாள கமர்சியல் படங்கள், தமிழ் கமர்சியல் படங்களைவிட 15 வருடங்கள் பின் தங்கியவை என்பதே என் அபிப்ராயம். குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்க வேன்டிய கட்டாயத்தாலும், அவர்கள் பெரிய அளவில் யோசிக்காமல் இருக்கலாம். (நேரம் போன்ற குறைந்த பட்ஜெட்டில் டெக்னிகலாக மிரட்டும் சில படங்கள் விதிவிலக்கு!)
எனவே மலையாள பிட்டுப்படங்கள் மற்றும் கலைப்படங்களைத் தவிர்த்து வேறு எதனைப் பார்த்தாலும், நமக்கு சலிப்பே மிஞ்சும். நான் கொச்சினில் இருந்த காலத்தில், சேட்டன்கள் பெருமையுடன் வழங்கிய கமர்சியல் பட  சிடிகளை கதறியபடி திருப்பிக் கொடுத்திருக்கிறேன். புலிவால் பற்றிய விமர்சனங்களிலும் அத்தகைய கதறல் தெரிந்ததால், தரவிறக்கிப் பார்த்தேன்.
நிச்சயம் ரீமேக் செய்யப்படக்கூடிய கமர்சியல் கதை தான். அன்னாடங் காய்ச்சியாக, வேலை பார்க்கும் இடத்தில் சுப்பீரியரின் அவமரியாதையைக்கூட சகித்துக்கொண்டு, எவ்வித மரியாதையும் இன்றி வாழும் ஒரு ஹீரோ(விமல்), செல்வாக்கு, பெண்கள் என பணம் தரும் எல்லா விஷயங்களையும் அனுபவித்தபடி வாழும் இன்னொரு ஹீரோ(பிரசன்னா). இரண்டாவது ஆளின் குடுமி முதல் ஆளின் கையி ல் சிக்குவது என 'அட' போட வைக்கும் கான்ஃபிளிக்ட்டுடன் கூடிய கதை.

அந்த பணக்காரன் சார் என்று அழைத்ததும், முதன்முதலாக வாழ்க்கையில் அப்படி மரியாதையாக அழைக்கப்பட்ட சந்தோசமும், அது தரும் போதையும் தலைக்கேற, விமல் அடுத்து என்னவெல்லாம் செய்வார் என்று கற்பனையுடன் நாம் உட்கார்ந்தால், நமக்கு மிஞ்சுவதென்னவோ ஏமாற்றம் தான்.

டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வேலை செய்யும்போது, இன்சல்ட் பண்ணிய பெண்ணில் தலைமேல் சாணியைக் கரைத்து ஊற்றச் சொல்கிறார். தன்னைத் தொடர்ந்து அவமானப்படுத்தும் சூப்பர்வைசரின் கன்னத்தில் அடிக்கச் சொல்கிறார். பிரசன்னாவும் அதைச் செய்கிறார். 'இதான் உங்க டக்கா?' என்று பார்க்கும் நமக்குத் தான் கடுப்பாகிறது. தமிழ்நாட்டு ஸ்கூல் டிராமாக்களில்கூட, இத்தகைய சீன்களை இந்தக்காலத்தில் பார்க்க முடியாது.

பணத்திமிரில் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று அலையும் பிரசன்னா - பணம் இல்லாததால் சுயமரியாதையின்றி வாழும் விமல் எனும் எதிரெதிர் துருவங்கள் சந்திக்கையில், எவ்வளவு விளையாடலாம்? பிரசன்னாவின் பணத்திமிரை காலி செய்யலாம் அல்லது விமல் தன் தாழ்வு மனப்பான்மையை விட்டு வெளியேறலாம்.
அல்லது பணக்காரனின் பவரை யூஸ் பண்ணி, தன் எதிரிகளைப் பழி வாங்கலாம். அதை ரசிக்க, அந்த எதிரி ஸ்ட் ராங்கான ஆட்களாக இருக்க வேண்டும். சப்பையை அடிக்க பாட்ஷாவை அனுப்பி, நாம் கோபப்படும்படி காமெடி செய்யக்கூடாது. அதைத் தான் புலிவாலில் செய்திருக்கிறார்கள். கமர்சியல் மூவி விஷயத்தில், தெலுங்குப்படங்கள் பெட்டர் என்றே தோன்றுகிறது. மலையாளத்தில் நன்றாக ஓடிய படம், எனவே மெயின் கதையை கொஞ்சமும் மாற்றாமல் அப்படியேஎடுக்க வேண்டும் என்று எடுத்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் நல்ல ஒரு ஆக்சன் படமாக வந்திருக்க வேன்டிய படம், வீணாகி விட்டது மட்டும் நன்றாகவே தெரிகிறது.
இந்த படத்தில் நல்ல விஷயம் என்னவென்றால், எப்போதும் மலச்சிக்கல் வந்தவன்போல் முகத்தை வைத்திருக்கும் விமலுக்கு, இந்த கேரக்டர் கச்சிதமாகப் பொருந்திப்போனது தான்.  
ஓவியாவை பிரசன்னா கல்யாணம் பண்ண, டேப்பை..ச்சே, வீடியோவை ரிலீஸ் செய்திருக்க வேண்டியதில்லை. இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம். விமலே அந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, பிரசன்னாவை மிரட்டுவதாக வைத்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும். அப்புறம் அந்த வில்லன் கேரக்டர்..அக்மார்க் மக்கு மல்லுத்தனம். ஆம் ஆத்மி வில்லனாக வருவதை சேட்டன்கள் வேன்டுமானால் ரசிக்கலாம். ஒரு கமர்சியல் படத்தில் இப்படி சொத்தையான ஆளை வில்லத்தனத்திற்கு யூஸ் பண்ணுவது ரொம்ப தப்பு. தலைவர் ஹிட்ச்காக் பாணியில் சொல்வதென்றால் 'Bigger the Villain..Better the movie! (எவன்டா அந்த புக்கை இவன்கிட்டகொடுத்ததுன்னு டென்சன் ஆகாதீங்கப்பா!)
மொத்தத்தில் ராமராஜன் நடித்த ஆக்சன் படம் பார்த்தால், என்ன ஃபீலிங் கிடைக்குமோ, அது தான் புலிவால் பார்த்துக் கிடைத்தது. Better Luck, Next time! (அப்பாடி, நம்மளும் இங்கிலீஸ் வார்த்தையைச் சொல்லி பதிவை முடிச்சிட்டோம்!)
மேலும் வாசிக்க... "புலிவால் - ஜஸ்ட் மிஸ்."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

24 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, February 14, 2014

இது கதிர்வேலன் காதல் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
ஓகே..ஓகே-வின் வெற்றிக்கூட்டணியான உதயநிதி-சந்தானமும் சுந்தர பாண்டியன் என்ற சூப்பர் ஹிட்டான படத்தைக் கொடுத்த இயக்குநர் பிரபாகரனும் இணையும் படம் என்பதால், படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு. இங்கே தியேட்டர் ஹவுஸ்ஃபுல். அஜித்-விஜய்-சூர்யா படங்களுக்குத்தான் இப்படி ஆகிப் பார்த்திருக்கிறேன். (கார்த்தியும் விஜய் சேதுபதியும் இப்படி இருந்து, இரண்டே படங்களில் காலி ஆனார்கள்) ஜாலியான படம் என்ற இமேஜ், கூட்டத்தைக் கூட்டிவிட்டது. படம் அந்த எதிர்பார்ப்பை தக்க வைத்ததா என்று பார்ப்போம்.
ஒரு ஊர்ல..:
ஆஞ்சநேய பக்தராக மதுரையில் வாழ்பவர் உதயநிதி. ஏற்கனவே ஃப்ரெண்டாக பழகும் வில்லனை, நல்லவன் என ஏமாந்து லவ் பண்ணும் மூடுக்கு வந்துகொண்டிருக்கும் கோயம்புத்தூர்ப் பெண் நயந்தாரா. இருவருக்கும் காதல் எப்படி வருகிறது, அதில் எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதே கதை.

உரிச்சா....:
மிக சுவாரஸ்யமான கதை தான். படம் ஆரம்பித்த ஐந்து நிமிடத்திலேயே எதிரெதிர் கேரக்டர்களாக சிக்கல்களுடன் ஹீரோ-ஹீரோயினைக் காட்டும்போது, நன்றாகவே இருக்கிறது. கோயம்புத்தூரில் வாழும் ஹீரோ அக்கா, கோபித்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறார் எனும்போதே, ஹீரோ அங்கே போகப்பொகிறார் என்று தெரிந்துவிடுகிறது. அதன்பின் முதல் ஒரு மணி நேரத்திற்கு அடுத்து என்ன நடக்கும் என்று தெளிவாக  சொல்ல முடிகிறது. பெரிய சுவாரஸ்யமான சீன்கள் இல்லாமல், முதல் ஒரு மணி நேரம், ஃபேமிலி செண்டிமெண்ட், அக்கா-மாமா கதை, லூஸ்டாக் வில்லன் கேரக்டர் என மொக்கையாக படம் நகர்கிறது. 

ஹீரோ, ஹீரோயினின் எதிர்வீட்டுக்கே குடி போவது, பின்னால் சுத்துவது, ஹீரோயினின் பாய் ஃப்ரெண்ட் கெட்டவனாக இருப்பது என அரதப்பழசான ஐடியாக்களுடன் படம் போய்க்கொண்டிருக்கும்போது, அவ்வப்போது வரும் சந்தானம் தான் காப்பாற்றுகிறார். பின்னர் சந்தானம் காதலுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பிக்கும்ப்போது தான், படம் ஓகே..ஓகே ஆகாவிட்டாலும், ஓகே ஆகிறது.
ஹீரோயினுக்கு பாய் ஃப்ரெண்ட் கெட்டவன் என தெரிந்த பின், படம் இன்னும் கொஞ்சம் கலகலப்பாக நகர்கிறது. வில்லன் என்று இருந்தாலும், ஃபைட்டெல்லாம் வைத்து நம்மை இம்சை பண்ணாதது சந்தோசம் தான். படத்தை முடிந்தவரை ஜாலியாகக் கொண்டு செல்ல நினைத்திருக்கிறார்கள். அதனால் ஹீரோவின் காதல் மேலும் நமக்கு பெரிய அக்கறை வரவில்லை. எனவே சேருவார்களா,இல்லையா எனும் எதிர்பார்ப்பு நமக்கு எழவேயில்லை.

ஓடிப்போன அக்கா, ஒன்னுமில்லாத விஷயத்திற்கு கோபித்துக்கொண்டு சொந்த வீட்டுக்கா வருவார்? இது போன்று லாஜிக் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாத காட்சிகள். அதைவிட அடுத்த சீனுக்கு லீடாக ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு, வேறொரு சீன் வருகிறது. சந்தானம் உதயந்தியிடம் ஃபோன் நம்பர் கொடுத்துவிட்டு ‘எதுவும்னா ஃபோன் பண்ணுடா?’ என்கிறார். அடுத்த சீனில் உதயநிதி ஃபோன் செய்வது, அக்காவிற்கு. அக்கா ஃபோன் பேசி முடிக்கும்போது காலிங் பெல் அடிக்கிறது. ‘மாமா வந்திருப்பார்..கதவைத் திற’ என்கிறார். கதவைத்திறந்து உதயநிதி போவது மொட்டை மாடிக்கு. அங்கே மாமா எக்ஸர்ஸைஸ் செய்துகொண்டிருக்கிறார். பிறகு தான் புரிகிறது, அது அடுத்த நாள் காலை சீன் என்று. இப்படி குழப்பம் தரும் சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

பின்னால் சுற்றுவது, சந்தானம் ஐடியா கொடுப்பது என ஓகே..ஓகே போன்றே பல காட்சிகள் வருகின்றன. ஆனாலும் சந்தானம், உதயநிதியின் அப்பாவை சமாதனப்படுத்த மதுரை வரும் காட்சியில் ஆரம்பித்து கிளைமாக்ஸ்வரை, படம் செம ஜாலி + விறுவிறுப்பு. அந்தக் கடைசி அரைமணி நேரம் தான், வெளியில் வரும் நம்மை திருப்தியாக அனுப்பி வைக்கிறது.

இறுதியில் அப்பா-மகன் - காதல் பற்றி வரும் வசனங்கள், அருமையிலும் அருமை. சுந்தர பாண்டியன் பட இயக்குநர் என்பது அதில் தான் தெரிகிறது. அதுபோலவே படம் முழுக்க அவ்வப்போது வரும் நல்ல வசனங்கள் நம் மனதைக் கவர்கின்றன. கூடவே, சந்தானத்தின் ஒன் லைன்களும்.

உதயநிதி:
உங்கிட்ட எக்ஸ்பிரசன் எதிர்பார்க்கிறது தப்பு என சந்தானம் கலாய்த்தாலும், கிளைமாக்ஸில் மனிதர் ஒருவழியாக நடித்துவிட்டார். முந்தைய படத்தில் இருந்த கேமிராக்கூச்சம் இதில் இல்லை. ஜாலியான, கவலைகள் அற்ற பையன் என்பதற்கு பொருந்திப்போய்விட்டார். சந்தானத்திற்கும் இவருக்கும் கெமிஸ்ட்ரி(!) நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது. நயந்தாராவை கலாய்ப்பது, காதலுடன் பார்ப்பது, கடைசிக்காட்சியில் அப்பாவுடன் பேசும் காட்சி ஆகியவற்றில் நல்ல நடிப்பு.

சந்தானம்:
படத்தைக் காப்பாற்றுவதே இவர் தான். ஓகே..ஓகே அளவிற்கு இல்லையென்றாலும், வருகின்ற காட்சிகளில் எல்லாம் சிரிக்க வைத்து விடுகிறார். கிளைமாக்ஸில் மதுரையில் நடப்பது தான் செம காமெடி. ஒரு நிமிடத்தில் கலக்கிவிட்டார்கள். சந்தானம் மட்டும் இல்லையென்றால் ரொம்பவே கஷ்டம்.
நயந்தாரா:
நயந்தாரா சின்ன சின்ன எக்ஸ்பிரசன்ஸ்+நடிப்பில் கலக்கினாலும், வயதாகிவிட்டது நன்றாகவே தெரிகிறது.  நயந்தாராவை விட அவரது தோழியும், ஹீரோவின் தங்கையாக வருபவரும் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார்கள்.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- முதல் ஒரு மணி நேர, திருப்பங்கள் அற்ற மொக்கை திரைக்கதை
- திடீரென ஃபாரினுக்கு டான்ஸ் ஆடக் கிளம்பும் பாடல் காட்சிகள். தியேட்டரில் திட்டுகிறார்கள்.
- பெரிதாக எதுவும் செய்யாத, டெரராக அறிமுகம் ஆகும் சொதப்பல் வில்லன்....வில்லன்னு கூட சொல்ல முடியாது..நெகடிவ் கேரக்டர் அவ்வளவு தான்.
- புதுப்பாட்டு தானா என்று சந்தேகம் கொள்ள வைக்கும் ஹாரிஸின் பழைய ட்யூன்கள்
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- காமெடி + சந்தானம்
- நல்ல வசனங்கள்
- கடைசி அரைமணி நேரம்

பார்க்கலாமா? :

சுந்தர பாண்டியன் / ஓகே..ஓகே வை மறந்துவிட்டு, காமெடி சீன்களுக்காக ஒருமுறை பார்க்கலாம்...ஆவரேஜ் மூவி! 


மேலும் வாசிக்க... "இது கதிர்வேலன் காதல் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

29 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, February 10, 2014

இழிநிலை - குறும்பட விமர்சனம்

மீபத்தில் இந்த குறும்படத்தை பார்க்க நேர்ந்தது. இழிநிலை குறும்படம் இந்த வரிகளுடன் ஆரம்பிக்கிறது.

எமது மொழி எங்களின் அடையாளம் -  அதை இழந்தோம்
வரலாற்றின் வாசல்களில் தூக்கி எறியப்படுவோம். - இயக்குநர்அகீபன்

படித்ததுமே பிடித்துப்போன வரிகள். குறும்படத்தின் கருப்பொருளும் இதுதான். குறும்படத்தினை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். 

1. பட்டப்படிப்பின் இறுதிக்காலத்தில் உள்ள மாணவர்கள், ஏதேனும் ஒரு மொழியைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பிற தமிழ் மாணவர்கள் உட்பட, பலரும் ஃப்ரெஞ்ச், ஆங்கிலம் என மற்ற மொழிகளை ஆய்வுக்கு எடுக்க, ஹீரோ மட்டும் தமிழை தன் ஆய்வுக்கு எடுக்கிறார். ’இதையெல்லாம் மதிக்க மாட்டார்கள்’ என்று நண்பன் பயமுறுத்தும்போதும், ஹீரோ தமிழை ஆராய்ச்சி செய்யவே இங்கு வந்ததாகச் சொல்கிறார்.

2. சொல்லாமல் கொள்ளாமல் ஒரு ஃப்ளாஷ்பேக் விரிகிறது. நல்ல சூட்டிகையான குழந்தையாக இருக்கும் ஹீரோ, சரியாகப் படிப்பதில்லை என கம்ப்ளைண்ட் வருகிறது. எனவே ஒரு மனநல மருத்துவரைப் பார்க்கிறார்கள். அவர் பையனிடம் என்னென்ன மொழிகள் தெரியும் என்று கேட்க, அவன் ‘ஃப்ரெஞ்ச், ஆங்கிலம்’ என்கிறான். தமிழ் தெரியவில்லை. ’இனிமே தமிழ் எதுக்கு?’ என்று பெற்றோரும் கேட்கிறார்கள். டாக்டர், ஒரு மனிதன் தாய்மொழியில் தான் சிந்திக்க வேண்டும். அதுவே சிறந்தது. தாய்மொழியை பிள்ளைக்கு சொல்லிக்கொடுங்கள் என்று சொல்ல, பெற்றோர் திருந்துகிறார்கள். ஃப்ளாஷ்பேக் முடிகிறது.

3. வீட்டில் பெற்றோருடன் பேசிக்கொண்டிருக்கும் மகன், தமிழை எல்லோரும் புறக்கணிக்கிறார்களே..தமிழ் அழிந்துவிடுமா? என்று நீண்ட வசனங்களின் மூலம் புலம்புகிறான்.  பெற்றோர் அப்படியெல்லாம் ஆகாது மகனே என்று ஆறுதல் சொல்கிறார்கள்.

4. அப்புறம் அவ்வளவு தான். படக்கென்று குறும்படம் முடிந்துவிட்டது.

தாய்மொழியை குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டியதன் அவசியம், தனது ஆய்வுக்கு தமிழை எடுக்கத்துணியும் தற்கால அதிசய இளைஞன், பெற்றோரிடம் பேசும்போது வெளிப்படும் மொழியின்மீதான பாசம் என எல்லாமே பாரட்டப்பட வேண்டிய விஷயங்கள் தான். ஆனால் அவையெல்லாம் ஒரு கட்டுரையில் இருந்தால் ஓகே. குறும்படமாக வரும்போது, பிரச்சார நெடி தாங்கவில்லை.

வீரபாண்டியன் என்று விஜயகாந்த் படம் ஒன்று உண்டு. அதைப் பார்க்க என் மாமா என்னை டூரிங் டாக்கீஸ் அழைத்துப்போயிருந்தார். ஆவணப்படம் போன்ற ஒன்று ஓடத்துவங்கியது. புகைப்பதற்கு எதிராகவோ அல்லது குடிப்பதற்கு எதிராகவோ கருத்து மழை. எல்லாரும் பொறுமை இழந்து, ஆபரேட்டர் படத்தைப் போடு என்று கத்தினார்கள். நான் சொல்வது, ஏறக்குறைய 25 வருடத்திற்கு முன்பு. படங்களில் வெளிப்படையாக கருத்து சொல்வது என்பது அப்போதே புளித்துப்போன விஷயம். எனவே குறும்பட படைப்பாளிகள், வசனங்களில் கருத்து சொல்வதை விடுத்து, காட்சிகளின் மூலம் கருத்தை பார்ப்போர் உணர வைப்பது நல்லது. (இந்த படத்திற்கு மட்டும் இதைச் சொல்லவில்லை. சமீபத்தில் நான் பார்த்து டரியலான பல குறும்படங்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன்.)

சினிமா என்பதே காட்சி ஊடகம் என்று ஆனபின், வசனத்தை நீட்டி முழக்கி, சொல்ல வந்ததை வசனம் மூலமாகவே சொல்ல முயற்சிப்பதை தவிர்ப்பது நல்லது. அடுத்து இந்த குறும்படத்தில் உள்ள பிரச்சினை, கதை என்ற ஒன்றே இல்லாதது. மூன்று துண்டு துண்டாக சம்பவங்கள் மட்டுமே இருக்கிறதே ஒழிய, முழுமையான கதை என்று ஏதும் இல்லை. ஃப்ளாஷ்பேக் பகுதியை மட்டுமே கூட தனி குறும்படமாக எடுத்திருக்கலாம். ஒரு முழுமையாவது இருந்திருக்கும்.

ஹீரோ ஆய்வு செய்ய ஆரம்பிக்கிறான் - தாய்மொழி ஏன் படித்தான் என ஃப்ளாஷ்பேக் - தமிழ் பற்றி வசனம் ஆகிய இந்த மூன்று துண்டுகளும் ஒட்டாமல் நிற்கின்றன. ஃப்ளாஷ்பேக்கை முதலில் வைத்து நேர்கோட்டில் கதை சொல்வது, இடையில் வைப்பது, முடிவில் வைப்பது போன்ற ஆப்சன்கள் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியெல்லாம், பெரிதாக யோசிக்காமல் ‘நல்ல கருத்து...சொல்லிடுவோம்’ என்று ஆர்வத்தில் இறங்கி இருப்பது தெரிகிறது. மொழி ஆய்வும் பாதியில் தொங்க, கதையும் முன்னே, பின்னே அலைபாய, முடிவு என்பது இல்லாமல் அந்தரத்தில் தொங்குகிறது குறும்படம்.

நண்பர்கள் பேசிக்கொள்ளும் இடத்தில் லைட்டிங் கண்ணை எரித்தாலும், மற்ற இடங்களில் பாராட்டத்தக்க ஒளிப்பதிவு + நல்ல இசை(திலீப்), அலட்டல் இல்லாத நடிப்பு என எல்லாம் அமைந்தும், ஒழுங்கற்ற கதை+ திரைக்கதையால் திருப்தி இல்லாமல் போய்விட்டது. அகீபனின் இந்த டீம், அடுத்த படத்தை இன்னும் பெட்டராகக் கொடுக்கும் என்று நம்புவோம்.


டிஸ்கி: நான் ஒரு விமர்சகன் மட்டுமே. ‘குறை யார் வேணா சொல்லலாம்..நீ படத்தை நல்லா எடுத்துக்காட்டு பார்ப்போம்’ என்று சவால்விட நினைப்பவர்கள், ஷகீலா கால்ஷீட்டுடன் எந்நேரமும் என்னை அணுகலாம்.
மேலும் வாசிக்க... "இழிநிலை - குறும்பட விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

25 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, February 9, 2014

பாம்பு மாசமா இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி? (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:
பூந்தோட்ட காவல்காரா
பூப்பறிக்க இத்தனை நாளா?
மாந்தோப்புக் காவல்காரா -ஆ ஆ ஆ ஆ
மாம்பழத்தை மறந்து விட்டாயா?
மறந்து விட்டாயா?
பதிவர் புலம்பல்:
ஃபேஸ்புக்ல இருக்கிற நல்ல + கெட்ட விஷயம் சாட் தான். எந்த நிமிசமும் நட்பு வட்டத்துல இருக்கிற யாரையும் ஈஸியா காண்டாக்ட் பண்ண முடியுது. ஆனா மேட்டரே இல்லாம பட்டறை போட சிலர் வர்றது தான் கஷ்டமா இருக்கு. புதுசா ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து அக்செப்ட் பண்ணதுமே ஒருத்தர் வந்து ‘அப்புறம், இன்னிக்கு பதிவு ஏதாவது எழுதி இருக்கீங்களா?’ன்னாரு. ’ஆமாம்’ன்னேன். ’சரி, அந்த லின்க்கை இங்க போடுங்க, பார்ப்போம்’ங்கிறாரு. அதோட விட்டா பரவாயில்லை.
 ‘இனிமே நீங்க என்ன பண்றீங்க, பதிவு போட்டா, சாட்ல எனக்கு லின்க் போட்டிருங்க. ஓகே?’ன்னு கேட்கவும் செம காண்டாகிட்டேன். ‘சாட்ல மட்டும் போட்டா போதுமா பாஸ்? நான் வேணா நீங்க ஆபீஸ் விட்டு போற ரோட்டோரம், ஏதாவது மரத்தடில நின்னுக்கிட்டு வா..வான்னு கூப்பிடட்டுமா?’ன்னு கேட்டேன். அந்தாளுக்கு புரியலை. ‘நீங்க இருக்கிறது குவைத்ல..நான் இருக்கிறது ***-ல. எப்படி பாஸ் வருவீங்க?’ன்னு கேட்கிறார். அடப்பாவிகளா, எங்க இருந்துய்யா இப்படிக் கிளம்பி வர்றீங்க? நீங்க டெய்லி படிக்க நான் என்ன மகாபாரதமா எழுதறேன்? இதைப் படிக்கலேன்னா உங்க குடியா முழுகிப்போயிடும்? என்னையைவே இந்த பாடு படுத்துனா, எழுத்தாளர்களை எல்லாம் என்ன பாடு படுத்துவீங்க? சாரு புலம்பறதுலயும் ஒரு நியாயம் இருக்கும் போல!

குஷ்..பூ:
குஷ்பூவின் ஆடி கார் பின்பக்கத்தை அரசு பஸ் மோதியதுன்னு செய்தி படிக்கவுமே பக்குன்னு ஆகிடுச்சு. பின்பக்கம் மட்டும் தான் சேதாரம், அதுவும் காரின் பின்பக்கம் தான்னு தெரிஞ்ச அப்புறம் தான் நிம்மதி ஆச்சு. 'ச்சே..அந்த டிரைவரு நம்மளை விட வெறித்தனமான ரசிகரா இருப்பாரு போலிருக்கே'ன்னு நினைச்சுக்கிட்டேன். கட்டுப்பாடோட நடந்துக்கோங்கன்னு நாம பலதடவை மன்றக்கண்மணிகள்கிட்ட சொல்லியாச்சு. கேட்க மாட்டேங்கிறாங்க. தலைவியை நேர்ல பார்த்துட்டாப் போதும், 'இது பஸ்..அது ஆடி கார்'ங்கிறதுகூட மறந்துட்டு, விட்டு ஏத்திடுறாங்க. 
ஷீட்டிங் போனா ’பவுடர்’ வீடியோ எடுக்கிறது, மீட்டிங் போனா இடுப்பைக் கிள்றதுன்னு பண்ணாத அக்கப்போர் இல்லை. இப்போ வண்டியைவிட்டு ஏத்துறதையும் ஆரம்பிச்சுட்டாங்க. தலைவியே 'எங்க, நம்ம பெட் ரூமுக்குள்ள பூந்தும் அடிப்பாங்களோ'ன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போது, பஸ்ஸை விட்டு ஏத்துனா பயந்துடாது? கொஞ்சமாவது மனசாட்சியோட நடந்துக்கோங்கப்பா!

பல்பு:
அப்பப்போ பதிவு எழுதி நோட் பேட்ல போட்டு வச்சுக்கிறது வழக்கம். தமிழ்ஸ்.காம்க்கு ஒலக சினிமாவும், நமக்கு நானா யோசிச்சேனும் எழுதி வச்சிருந்தேன். ரெண்டையும் ஓப்பன் பண்ணி வச்சிருந்தவன், அவங்களுக்கு ஒலக சினிமா அனுப்புறதுக்குப் பதிலா மாத்தி காப்பி பண்ணி, நானா யோசிச்சேனை அனுப்பிட்டேன். ‘வாழ்க்கை என்பது மர்மக்குழி...’ங்கிற ரேஞ்சுல கட்டுரை எதிர்பார்த்தவங்களுக்கு, மாம்பழப் பதிவு வந்தா எப்படி இருக்கும்? அப்படியே ஷாக் ஆகிட்டாங்க போல! அய்யோ, பாவம். சரி, நம்மகூட சகவாசம் வச்சுக்கிட்டா, இதெல்லாம் பட்டுத்தானே ஆகணும்!

பாம்பூ:
மூணு வருசத்துக்கு முன்னால மாமனார் வீட்டுக்குப் போயிருந்தப்போ, நைட்ல வீட்டு முற்றத்துக்கு பாம்பு வந்திடுச்சு. பாம்புன்னா சும்மா என் ஒசரத்துக்கு, என் கை தண்டிக்கு! பார்த்த உடனே பதறிட்டாலும், மாமனார் வீடாச்சேன்னு நடுக்கத்தை வெளிய காட்டிக்காம நின்னேன். அது வீட்டு முற்றத்துல நின்னுக்கிட்டு, எங்கிட்டுப் போகன்னு முழிச்சுக்கிட்டு இருக்கு. எல்லாரும் கம்போட, பாம்பை அடிக்க கூடிட்டாங்க. அப்போத்தான் மாமனார் சொன்னாரு 'மாசமா இருக்கும்போது, பாம்பை அடிக்கக்கூடாது.அது பாவம். அதனால கலைச்சு விடுங்க. அது போயிடும்’ன்னு.

'இந்த கிராமத்து ஆட்களோட ஸ்பெஷாலிட்டியே இது தான். மத்தியானம் புழுக்கமாக இருக்கும்போதே, சாயந்திரம் மழை வரும்பாங்க. கரெக்ட்டா வந்திரும். இயற்கையோட அதிகமா டச்ல இருக்கிறதால மழைல ஆரம்பிச்சு, பாம்பு மாசமா இருக்கிறதை கன்டுபிடிக்கிறதுவரை அப்படி ஒரு நுண்ணறிவு. நாம படிக்கப் போறேன்னு போயி, மிஸ் பண்ணது அதைத்தான். ஆனாலும் நம்மளும் கண்டுபிடிப்போம்'ன்னு பாம்பை உத்துப் பார்த்தேன். 

அது மெதுவா, ரொம்ப மெதுவா வேலிக்காட்டை பார்த்து நகருது. 'ஓ..வேகமா போனா மாசமா இல்லை. மெதுவா போனா மாசமா இருக்குன்னு அர்த்தமோ? ஆனா அது நகருமுன்னாடியே மாமனார் கண்டுபிடிச்சிட்டாரே'ன்னு யோசனை. ஆனாலும் மாமனார்கிட்டப் போய் இதைக் கேட்க கூச்சமா இருந்துச்சு.அதனால கிராமத்து பல்கலைக்கழகமான தங்கமணிகிட்டெ கேட்போம்ன்னு முடிவு பண்ணேன். 

மெதுவா போற பாம்பை, பாவமா பார்த்துக்கிட்டிருந்த தங்கமணிகிட்டப் போய், ரகசியக் குரல்ல 'ஏம்மா..பாம்பு மாசமா இருக்குன்னு எப்படி கண்டுபிடிக்கிறது?'ன்னு கேட்டேன். அப்போ எட்டு மாச கர்ப்பிணியா இருந்த தங்கமணி, பல்லைக் கடிச்சிட்டே சொல்லுச்சு "மானத்தை வாங்காதீங்க. அவரு மாசமா இருக்கிறதாச் சொன்னது, என்னை!"


மேலும் வாசிக்க... "பாம்பு மாசமா இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி? (நானா யோசிச்சேன்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

47 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, February 8, 2014

பண்ணையாரும் பத்மினியும் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
நேற்றே வெளியாகி இருக்க வேண்டிய படம் ’பொட்டி வரலை, நாளைக்கு வா’ என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள்.’ நாளைக்குன்னா அது பழைய படம்யா..காசைக் கொடுய்யா’ன்னு கேட்டும் அரபி ஒத்துக்கொள்ளாததால்,  விமர்சனம் இன்று, இங்கே....!
ஒரு ஊர்ல..:
ஒரு கிராமத்தில் வாழும் வெள்ளந்தியான மனசு கொண்ட பண்ணையாருக்கு ஒரு பத்மினி கார் கிடைக்கிறது. அந்த கார் எப்படி அந்த குடும்பத்தில் ஒரு பிள்ளையாக ஆகிறது, அந்த கார் வந்தபின் பண்ணையார்-அவரது மனைவி ஜோடியும், டிரைவர் விஜய் சேதுபதியும்  என்ன மாற்றத்திற்கு ஆளாகிறார்கள் என்பதே கதை. 

உரிச்சா....:
குறும்படக்கதையை முழுநீளப்படமாக ஆக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. டிரைவர் கேரக்டர்க்கு ஒரு காதலி கேரக்டரை உருவாக்கி இழுப்பார்கள் என்ற அளவில் தான் நம் எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் அந்த காரே முக்கிய கேரக்டராக ஆனதுடன், பண்ணையாருக்கும் அவரது மனைவிக்குமான உறவை மிகவும் யதார்த்தமாகக் காட்டியதில் தான் இந்த படம் வெற்றிப்படமாக மட்டுமல்ல, ஒரு தரமான சினிமாவாகவும் ஆகிவிடுகிறது. 

குறும்படத்தை நீளப்படமாக ஆக்கியதுபோல் தெரியவில்லை. நீளப்படத்தைத் தான் ட்ரெய்லராக குறும்படமாக எடுத்திருப்பார் போல. பண்ணையார் ஜெயப்ரகாசின் நண்பர் ஊருக்குப்போகும்போது, பண்ணையாரிடம் பத்மினி காரை கொடுத்துவிட்டுச் செல்வதுடன் படம் ஆரம்பிக்கிறது. பத்மினி மேல் பண்ணையார் வைக்கும் பாசம் கூடிக்கொண்டே போகிறது. அவரது நிழல் போல் இணைந்து வாழும் அவரது மனைவி துளசியும் காரை கொஞ்சம் கொஞ்சமாக நேசிக்க ஆரம்பிக்க, அந்த வீட்டுப்பிள்ளையாகவே ஆகிறது. டிரைவராக விஜய் சேதுபதியும் கிளீனராக(!) பாலாவும் கூட்டணி சேர, படம் ஆரம்பத்தில் இருந்தே கலகலப்பாகச் செல்கிறது. ஒவ்வொரு சீனிலுமே புன்னகைக்க வைக்கும் விஷயங்களை புதைத்து வைத்திருக்கிறார்கள், காரை வைக்கோலுக்குள் ஒளித்து வைத்தது போல!

பத்மினி அந்த வீட்டில் செட் ஆனதுமே, அங்கிருந்து பத்மினியைப் பிரிக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பிக்கின்றன. திருமணநாளில் மனைவியை காரில் வைத்து அழைத்துச் செல்லவேண்டும் என்ற பண்ணையாரின் ஆசை நிறைவேறுமா என்று நாமும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அளவிற்கு, இரண்டாம்பாதி முழுக்க செண்டிமெண்ட்+காமெடியில் பட்டையைக் கிளப்புகிறார்கள்.
படத்தில் மிகவும் பாராட்டத்தக்க விஷயம், ஒரு யதார்த்தமான கிராமத்தையும், யதார்த்தமான கிராமத்து ஜோடிகளாக ஜெயப்ரகாஷ்-துளசியைக் காட்டியது தான். ஒரு கணவன் - மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் வருகிறார்கள். அவர்களுக்குள் நடக்கும் ஊடலும், காதலும் அருமை. எனக்காகப் பிறந்தாயே பேரழகா பாடலின் மாண்டேஜ் காட்சிகள் அட்டகாசம். காதல் என்பது இளைஞர்களுக்கானது மட்டுமல்ல என்று அடித்துச் சொல்லி இருக்கிறார்கள். 

விஜய் சேதுபதியின் காதல் போர்சன் பெரிய அளவில் மனதைக் கவரவில்லை. கொஞ்சநேரம் தான் வருகிறது என்றாலும், ஜெயப்ரகாஷ் ஜோடிக்கு முன், இளம்ஜோடி ஒன்றுமே இல்லையென்றாகிறது. எதுவும் பேசாமல், எவ்வித உணர்ச்சிகளையும் காட்டாமல் நம் மனதைக் கொள்ளை கொள்கிறது அந்த கார். கொஞ்சம் கொஞ்சமாக நாமும் அதை விரும்ப ஆரம்பிப்பதில்தான், இயக்குநரின் திறமை வெற்றிபெறுகிறது. 

ஜெயப்ரகாஷ்:
அற்புதமான குணச்சித்திர நடிகர். ஏறக்குறைய ஹீரோ வேடம். ஒரு அப்பாவி மனுசனாக, யாருக்கும் உதவும் மனம் படைத்தவராக, ரொமாண்டிக் கணவனாக, நெகிழ்ச்சியான தந்தையாக மனிதர் பல பரிமாணங்களில் கலக்குகிறார். இந்த ஆண்டில் சிறந்த ஹீரோ விருதை இவருக்குக் கொடுக்கலாம். கார் போய்விடுமோ என்று பதறுவதும், மனைவியின் ஆசையை நிறைவேற்றப் போராடுவதுமாக நம் மனதில் நிறைகிறார் ஜெயப்ரகாஷ்.

விஜய் சேதுபதி:
ரம்மியைப் போன்றே இதிலும் இரண்டாவது ஹீரோ தான். ஆனால் அதைப்போல் டம்மி வேடம் அல்ல. வழக்கம்போல் மனிதர் கேஷுவல் நடிப்பில் பிய்த்து உதறுகிறார். படத்தை ஜாலியாகக் கொண்டுசெல்வதில் இவரது பங்கு முக்கியமானது. பண்ணையார் கார் ஓட்டக்கற்றுக்கொண்டதும் நமை கழட்டி விட்டுவிடுவாரோ என்று மனதிற்குள்ளேயே புழுங்கும் காட்சிகளில் செம நடிப்பு. சென்ற படத்தில் விட்ட பெயரை, இதில் பிடித்திருக்கிறார். மீண்டும் ஒருமுறை தான் கதையின் நாயகன் மட்டுமே என்று நிரூபித்திருக்கிறார்.
பாலா:
பாலாவிற்கு பெயர் சொல்லும்படி ஒரு படம். காமெடியில் கலக்குகிறார்கள். நமது ‘துப்பாக்கித் தாத்தா’ போன்ற கேரக்டர். ஒன் லைனரிலேயே சிரிக்க வைத்துவிடுகிறார். சீக்கிரமே பெரிய காமெடியனாக ஆகிவிடுவார் என்று நினைக்கிறேன்.

துளசி -ஐஸ்வர்யா:
பண்ணையாரின் மனைவியாக வரும் துளசியின் நடிப்பில் அவ்வளவு யதார்த்தம். கணவனை கண்டிப்பதில் ஆரம்பித்து கிண்டல் செய்வது வரை எதையும் நடிப்பென்று சொல்ல முடியவில்லை. சொந்தக்கார பெரியம்மா போன்ற இமேஜை கொஞ்ச நேரத்திலேயே உண்டாக்கிவிடுகிறார். ஆரம்பக்காட்சிகளில் ஹைபிட்ச்சில் கத்துவதை மட்டும் குறைத்திருக்கலாம்.

ரம்மியிலேயே நம் ‘பாராட்டை’ப் பெற்ற ஐஸ்வர்யா, இதிலும் விஜய் சேதுபதியின் ஜோடியாக வருகிறார். அழகான கண்கள் என்பதைத் தாண்டி சொல்ல ஏதுமில்லை. கதைப்படியே தேவையில்லாத கேரக்டர் என்பதால், விடு ஜூட்!
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- விஜய் சேதுபதியின் காதல் போர்சன்
- உனக்காகப் பிறந்தேனே பேரழகா பாடலை ஜெயப்ரகாஷுக்கு பயன்படுத்தியதோடு விட்டிருக்கலாம். மீண்டும் விஜய் சேதுபதிக்கு அதை யூஸ் பண்ணி, அதன் இம்பாக்ட்டைக் கெடுத்திருக்க வேண்டாம்
- ஆரம்ப கிராமக் காட்சிகளில் திரையில் புள்ளி அடிக்கிறது, சுமாரான கேமிராவில் எடுத்தது போல். ஒளிப்பதிவுக் கோளாறா, தியேட்டர் கோளாறா என்பது தெரியவில்லை.

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- ஜெயப்ரகாஷ் துளசி ஜோடியின் அந்நியோன்மான உறவை நம் மனதில் பதியும்படிச் சொன்னது
- விஜய் சேதுபதி 
- ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் வந்திருக்கும் அருமையான பாடல்கள்
- அந்த மகள் கேரக்டர்.

பார்க்கலாமா? :
கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய தரமான படம்.


மேலும் வாசிக்க... "பண்ணையாரும் பத்மினியும் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

36 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, February 3, 2014

ஹிட்ச்காக் : சஸ்பென்ஸும் சர்ப்ரைஸும் ரம்மியும்

சமீபத்தில் ரம்மி படத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போதே இயக்குநர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கை நினைத்துக்கொண்டிருந்தேன். ஆங்கில த்ரில்லர் மூவி எடுப்பதில் மன்னனாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக (1922-1976) கோலோச்சியவர் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ரம்மி படம் ஒரு த்ரில்லராகவே ஆரம்பித்தது. 

யாராவது கதவைத் தட்டினால்கூட டெரர் எஃபக்ட் கொடுத்து ரணகளப்படுத்தியிருந்தார்கள். ஒளிப்பதிவு-இசை-எடிட்டிங் மூன்றும் இணைந்து நல்ல த்ரில்லைக் கொடுத்தன, தனித்தனி காட்சியாகப் 
பார்க்கையில். ஆனால் படத்தின் கதையும், லாஜிக் இல்லாமல் தேவையற்ற விஷயங்களையும் சஸ்பென்ஸாக வைத்து ஆடியன்சே குழம்பிப்போகிற அளவுக்கு திரைக்கதையில் சொதப்பி இருந்தார்கள். அதனால் தான் ஹிட்ச்காக் பற்றி நினைக்க வேண்டியதாயிற்று.
Francois Truffaut என்பவர் ஹிட்ச்காக்கை எடுத்த 12 மணி நேர பேட்டி Hitchcock என்ற பெயரில் புத்தகமாக வந்துள்ளது. அவரது படங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறார் ஹிட்ச்காக். சமீபகாலமாக ஹிட்ச்காக் படத்தை பார்ப்பதும், புத்தகத்தில் அந்த படத்தின் பகுதியைப் படிப்பதுமாக சுவாரஸ்யமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த புத்தகத்தில் சினிமா ஆர்வலர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் பற்றிப் பேசுகிறார் ஹிட்ச்காக். அதில் முக்கியமானது சஸ்பென்ஸ்க்கும் சர்ப்ரைஸ்க்கும் அவர் கொடுக்கும் விளக்கம். 

நாம் பொதுவாக இரண்டையும் ஒரே பொருளிலோ அல்லது மாற்றி மாற்றியோ தான் உபயோகிக்கிறோம். தமிழில் Suspense என்பதை ஆவலுடன் கூடிய தவிப்பு என்று மொழிபெயர்க்கலாம். Surprise என்பது ஆச்சரியம் அல்லது அதிர்ச்சியைக் குறிக்கும். பேட்டியின்போது இரண்டையும் வரையறை செய்யும்படி ஹிட்ச்காக்கை கேட்கிறார் ட்ரஃபாட். அதற்கு அவர் கொடுத்த விளக்கம், இன்றளவும் போற்றப்படுகிறது. ஹிட்ச்காக் சொல்கிறார்:

” இரண்டுக்கும் இடையே குறிப்பிடத்தகுந்த வேற்றுமை உண்டு. பெரும்பாலான திரைப்படங்கள் இன்னும் இரண்டையும் தொடர்ந்து குழப்பிக் கொள்கின்றன. இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். நமது டேபிளுக்குக் கீழே ஒரு பாம் வைக்கப்பட்டிருப்பதாகக் கொள்வோம். அது நமக்கோ ஆடியன்சுக்கோ தெரியாது. திடீரென பாம் வெடிக்கின்றது. ஆடியன்ஸ் சர்ப்ரைஸ் ஆகிவிடுவார்கள்.(நாம் பீஸ் பீஸாகிவிடுவோம்-என்பதை அவர் சொல்லவில்லை!). ஆனால் அந்த சர்ப்ரைஸ்க்கு முன்னால், இது ஒரு வழக்கமான சாதாரண சீன் தான். ஆடியன்ஸ் மனதில் எந்த எதிர்பார்ப்பையும் விளைவுகளையும் உண்டாக்காத சாதாரண சீன் அது. 
இப்போது இப்படி வைத்துக்கொள்வோம். ஆடியன்ஸுக்கு பாம் வைக்கப்பட்டிருப்பது ஏற்கனவே தெரியும். வில்லன் வந்து பாம் வைக்கும் சீனை இதற்கு முன் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால் நம் இருவருக்கும் அது தெரியாது. இன்னும் கால்மணி நேரத்தில் பாம் வெடிக்கும் என்பதையும் அவர்கள் அறிவார்கள். ஆனால் அதை அறியாமல் நாம் இருவரும் கேசுவலாக ‘அப்புறம், பொண்டாட்டி ஊருக்குப் போனதுல இருந்து ஒரே ஜாலியோஜிம்கானா தானா?’ என்று பேசிக்கொண்டிருக்கிறோம். இதைப் 
பார்க்கின்ற ஆடியன்ஸ் பதறுவார்கள். அட வெண்ணை வெட்டிகளா, கீழே பாம் இருக்குடா. எந்திரிங்கடா என்று பதறுவார்கள். அதே சீன் தான். அதே வழக்கமான உரையாடல்தான். ஆனால் ஆடியன்ஸும் இந்த சீனில் பங்குபெறுகிறார்கள். இது தான் சஸ்பென்ஸ்.

முதல் உதாரணத்தில் ஆடியன்ஸுக்கு நாம் பாம் வெடிக்கும் 15 செகண்ட்ஸ் சர்ப்ரைஸ் மட்டும் கொடுக்கிறோம். இரண்டாவது உதாரணத்தில் 15 நிமிட சஸ்பென்ஸை ஆடியன்ஸுக்கு கொடுக்கிறோம். எனவே எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் ஆடியன்ஸுக்கு ‘மேட்டரை’ தெரியப்படுத்திவிடுவது நல்லது. அந்த மேட்டர், கதையின் முக்கிய நிகழ்வாகவோ, ட்விஸ்ட்டாகவோ, எதிர்பாராத முடிவாகவோ இருந்தால் மட்டுமே சர்ப்ரைஸாக வைக்க வேண்டும்”.


உதாரணமாக முதல்வனில் வரும் பாம் வெடிக்கும் சீனை எடுத்துக்கொள்ளலாம். அம்மா-அப்பா அன்பில் ஹீரோ நனையும்போது (இன்னும் எத்தனை காலத்துக்குய்யா நனைவாங்க?ன்னு பெருசுக யாரும் கேட்க மாட்டாங்கன்னு நம்புறேன்.), ஹீரோக்கு ஃபோன் வருகிறது. சிக்னல் கிடைக்கவில்லை என்று வெளியே வருகிறார். நாமும் வழக்கமான சீன் தான் என்று அசுவராஸ்யமாக உட்கார்திருக்கையில் ‘பூம்’!. அது தான் ஹீரோவையும் ‘அரசியல்வாதி’யாக ஆக்கும் நிகழ்வு. ஹீரோ அந்த அதிர்ச்சியை உணரும் அதே நேரத்தில் ஆடியன்ஸும் உணர வேண்டும் என்று ஷங்கர் முடிவு செய்துள்ளார். எனவே அது சர்ப்ரைஸாக வருகிறது. 

சமீபத்தில் வந்த ‘இவன் வேற மாதிரி’ யில் ஜவுளிக்கடை பொம்மை மாதிரி இருக்கும் ஹீரோயினை வில்லன், திருஷ்டி பொம்மை ஆக்கி 20 மாடி பில்டிங்கில் உயரத்தில் கட்டிவிடுகிறான். அங்கே வந்து ஹீரோ தேடும்போது, நமக்கு ஹீரோயின் இருக்கும் இடம் தெரிகிறது. ‘டேய்..அங்க தாண்டா இருக்கா..நல்லா பாருடா’ என்று மனதுக்குள் நாம் கதறுகிறோம் அல்லவா? அது தான் சஸ்பென்ஸ் காட்சியின் ஸ்பெஷாலிட்டி.

ஹிட்ச்காக் ஒரு சீனை மட்டுமே உதாரணமாகக் கொண்டு மேலே விளக்கினாலும், மொத்த திரைக்கதைக்குமே அப்ளை ஆகக்கூடிய கான்செப்ட் அது. ஹிட்ச்காக் படங்களில் கொலை நடந்தால், பெரும்பாலும் கொலையாளி யார் என்பதை ஆடியன்ஸுக்கு சொல்லி விடுவது அவர் வழக்கம். அப்போது தான் கொலையாளியை போலீஸோ, ஹீரோவோ நெருங்கும்போது அல்லது விலகும்போது நாமும் இன்வால்வ் ஆவோம். 

நேற்று ரம்மி பார்க்கும்போது சஸ்பென்ஸாக வர வேண்டிய விஷயங்கள் சர்ப்ரைஸாக வந்திருப்பதைப் பார்த்து கவலையாக இருந்தது. சர்ப்ரைஸில் இன்னொரு முக்கியமான விஷயம், லாஜிக். ட்விஸ்ட் வைக்கிறேன் பேர்வழி என்று லாஜிக்கை விடக்கூடாது. லாஜிக் இல்லாமல் ட்விஸ்ட் வைத்தால், ஆடியன்ஸ் அப்செட் ஆகிவிடுவார்கள் என்பதை நேற்று தியேட்டரில் வந்த ‘உஸ்ஸ்’ சப்தங்களில் உணர முடிந்தது. 

ஹீரோவும் அல்லக்கை விஜய் சேதுபதியும்(கடுப்பைக் கிளப்பிட்டாங்க, யுவர் ஆனர்!) கிராமத்தின் நடுவே வாடகைக்கு ரூம் எடுத்து தங்கி இருக்கிறார்கள். ஊருக்குள் வலம் வருகிறார்கள். அந்த ஊர்ப்பெண்களை காதலித்தால் வெட்டி விடுவார்கள் என்றும் தெரிகிறது. அல்லக்கையை கிராமத்தில் விட்டுவிட்டு, ஹீரோ ஊருக்குப் போகிறார். திரும்பி வந்தால் ஒரு லெட்டர் மட்டும் அந்த வீட்டில் இருக்கிறது. படித்தால், அல்லக்கை காதலியுடன் ஓடிப்போயிருக்கிறார். இது சர்ப்ரைஸ். ஹீரோ ஊரிலிருந்து கிளம்பி, பஸ்ஸில் பயணித்து, வீடு வந்து சேரும்வரை ‘ஏண்டாப்பா இப்படி இழுக்கிறீங்க?’ என்று உட்கார்திருக்கிறோம். நோ இன்வால்வ்மெண்ட். அதற்குப் பிறகு தான் ஓடிப்போன விஷயமே தெரிய வருகிறது. இதே தான் மொத்த படக்கதையின் பிரச்சினையும். எது நமக்குத் தெரியணுமோ, அது தெரிவதில்லை.
ஒரு மேட்டரை எங்கே, எப்படி ஓப்பன் செய்ய வேண்டும் என்ற ஜட்ஜ்மெண்ட், மிகவும் முக்கியம். இல்லையென்றால் ஆப்பு ஆகிவிடும். அதைப் பற்றி அடுத்த பதிவில் ஒரு குறும்பட அலசலுடன் பார்ப்போம்.

மேலும் வாசிக்க... "ஹிட்ச்காக் : சஸ்பென்ஸும் சர்ப்ரைஸும் ரம்மியும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.