ஜெனர் - கேங்ஸ்டர் (Gangster)
அட்வென்ச்சர் ஜெனரில் ரவுடிகளைப் பந்தாடும் போலீஸ் ஹீரோக்கள் பற்றிப் பார்த்தோம், இல்லையா? இந்த கேங்ஸ்டர் ஜெனர் என்பது அதற்கு எதிர்ப்புறத்தில் நின்று பார்ப்பதைப் போன்றது. வெறுமனே ரவுடி, வில்லன் என்று கடந்து போய்விடாமல், அவர்களின் வாழ்க்கையை ஆராய்வது அல்லது பதிவு செய்வது இந்த கேங்ஸ்டர் படங்கள். இவ்வகைப் படங்களின் திரைக்கதையில் இருக்க வேண்டிய அம்சங்களைப் பார்க்கும் முன்பு, தமிழ் சினிமாவில் வந்துள்ள கேங்ஸ்டர் படங்களைப் பற்றி சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.
தமிழில் கேங்ஸ்டர் படம் என்றதும் நம் நினைவுக்கு வருவது நாயகன் தான். எப்படி ஆங்கிலத்தில் காட் ஃபாதர் படம் ஒரு மாஸ்டர்பீஸோ, அப்படித்தான் தமிழில் நாயகன். நாயகன் படத்தில் உள்ள அம்சங்கள், ஒரு நல்ல கேங்ஸ்டர் படத்தில் இருந்தே தீரும். பொதுவாக தமிழில் வந்த கேங்ஸ்டர் படங்களை மூன்றாகப் பிரிக்கலாம்.
1.நான் தான்டா தாதா:
ஒரு தாதாவின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றிப் பேசுபவை இவ்வகைப் படங்கள். ஜீரோவில் இருந்த ஹீரோ, எப்படி மேலெழுந்து வந்தான், இறுதியில் எப்படி வீழ்ந்தான் என்று ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படம் போல் உருவாக்கப்படுபவை இவ்வகை. நாயகன், புதுப்பேட்டை, ஆரண்ய காண்டம், தளபதி, அமரன் போன்றவை இவ்வகைப் படங்களுக்கு சிறந்த உதாரணங்கள். வறுமையும் குற்றமும் நிறைந்த பிண்ணனியில் இருந்து வரும் ஒரு ஹீரோ, எப்படி இந்த நவீன சமூகத்தை வெற்றிகொள்கிறான் என்பதே இவ்வகைப் படங்களின் கதைப் பொருள். ஹாலிவுட்/உலக சினிமாக்களின் தாக்கம் இவ்வகைப் படங்களில் இருக்கும்.
இதைத் தவிர்த்து, தமிழுக்கென்றே ஒரு சிறப்புவகை கேங்ஸ்டர் படங்கள் உண்டு. அதற்கு மிகச் சிறந்த உதாரணம், சீவலப்பேரி பாண்டி. இந்த மண்ணின் கதையில் இருந்து உருவான வகை இது. மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி, அருவா வேலு என ராஃபின் ஹூட் கதைப்பாணியில் உருவான படங்கள் இவை. ஆனால் இவை அனைத்துமே உண்மைக்கதைகள் என்பது தான் வேடிக்கை. ஹாரிஸ் ஜெயராஜ் மாதிரி, கடவுள் தன்னைத் தானே காப்பி அடித்து எழுதிக்கொண்ட கதைகள் என்றும் சொல்லலாம்!! இந்த ஹீரோக்களின் பொது அம்சம், வன்முறையின் பாதையில் இறங்கி, முடிவில் வன்முறைக்கே பலியாவது. ஹீரோ விரும்பாமலே தாதா ஆகும் கதை என்றாலும், சுப்பிரமணியபுரம் படம் இவ்வகையில் ஒரு கிளாசிக்.
2. நான் தாதா அல்ல :
இவ்வகைப் படங்கள் தாதாக்கள்/ரவுடிகளின் வாழ்க்கையைப் பேசினாலும், ஏதோவொரு காரணத்திற்காக தாதா வாழ்க்கை வேண்டாம் என்று உதறிச் செல்லப் போராடும் ஹீரோவைப் பற்றிப் பேசுபவை. பாட்ஷா இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
தாதாவாக பெயர் பெற்ற ஒருவன், குடும்பம்/காதல் போன்ற ஏதோவொரு காரணத்திற்காக தாதா வாழ்க்கையில் இருந்து வெளியேற விரும்புகிறான். ஆனாலும் பழைய வாழ்க்கை அவனை விடுவதில்லை. இதில் எப்படி ஜெயித்தான்/தோற்றான் என்பதே இவ்வகைப் படங்களின் கதைப் பொருள். பாட்ஷாவிற்கு அடுத்து இவ்வகைப் படங்களுக்கு நல்ல உதாரணம், தலைநகரம். அருமையாக ஒரு திருந்திய தாதாவின் வாழ்க்கையை சித்தரித்த படம் அது. இதையடுத்து, ட்ரெண்ட் செட்டராக அமைந்த அமர்க்களம். ‘ரவுடியைக் காதலிக்கும் ஹீரோயின்’ எனும் இந்த ஒன்லைனை வைத்துக்கொண்டு அப்போது ஏகப்பட்ட படங்கள் வெளியாகின. இன்றைய பேய்க் காமெடிப் படங்கள் போன்று, அப்போது இவ்வகைப் படங்கள் தமிழ் சினிமாவைக் கலக்கின. ஜெமினி இன்னொரு கமர்சியல் படத்திற்கான நல்ல உதாரணம். இவற்றை ரொமாண்டிக் கேங்ஸ்டர் படம் என்றும் வகைப்படுத்தலாம்.
முந்தைய வகையைப் போன்று இல்லாமல், ஜாலியாக இவ்வகைப் படங்களில் கதை சொல்லப்பட்டதும் கமர்சியல் வெற்றிக்கு ஒரு காரணம். பாட்ஷாவின் திரைக்கதையமைப்பில் பகவதி, தோரணை, அரசு என பல படங்கள் வந்தன.
3. தாதாவைச் சுற்றி..:
ஒரு தாதாவின் வாழ்க்கையைப் பற்றிப் பேசாமல், தாதாவின் இருப்பை கதைக்களமாக வைத்து பின்னப்படுபவை இவ்வகைக் கதைகள். நந்தா, ரன், சித்திரம் பேசுதடி போன்றவை இதற்கு உதாரணங்கள். பி ஸ்டோரியாகவோ அல்லது கதைக்களமாகவோ மட்டுமே இங்கே தாதா கதை இருக்கும். ஹீரோ பெரும்பாலும் சம்பந்தபட்ட ஒருவன் அல்லது ஹீரோ பெரும்பாலும் அடியாள். தாதாவிற்கும் ஹீரோவுக்குமான உறவு தான் இங்கே முக்கியம். தளபதியை இவ்வகையில் சேர்க்கலாம் என்றாலும், அர்விந்தசாமி கேரக்டரின் காரணமாகவே அது முதல்வகையில் சேர்கிறது. போக்கிரி போன்ற அட்வென்ச்சர் படங்களை இவ்வகை கேங்ஸ்டர் படங்களின் கலவை என்று சொல்லலாம்.
உலக சினிமாக்களில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு, ஒரு கேங்ஸ்டர் கதையை/திரைக்கதையை எழுத வேண்டும் எனும் கனவு இருந்தே தீரும். திரைக்கதையாசிரியர்களுக்கு மட்டுமல்லாது ஹீரோக்களுக்கும் கேங்ஸ்டர் படம் என்பது ஒரு லட்சியமாக இருப்பதையும் நாம் காண முடிகிறது. இப்போது கேங்ஸ்டர் திரைக்கதையில் இருக்கும் சில பொதுவான அம்சங்களைப் பார்ப்போம். முதல்வகை தான் உண்மையான, சுத்தமான கேங்ஸ்டர் கதை என்பதால், அவற்றையே நாம் அளவுகோலாகக் கொள்ள வேண்டும். எனவே மேலே சொன்ன மற்ற இரண்டு வகைகளைப் பொறுத்து, இந்த அம்சங்கள் மாறுபடும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
கேங்ஸ்டர் மூவீஸ்:
அதிகாரத்திற்கான போர் நடக்கும் கதைக்களமே கேங்ஸ்டர் மூவீஸ் என்று சொல்லலாம். உடலபலம், அதிகார பலம், பண பலம் மூன்றும் இங்கே முக்கியப் பங்கு வகிக்கும். நாயகன் போன்று ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை சித்தரிப்பதாகவோ அல்லது புதுப்பேட்டை போன்று ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் ஊடாக ஒரு சமூகத்தை சித்தரிப்பதாகவோ இவ்வகைப் படங்கள் இருக்கும். நேர்வழியில் போக விரும்பாத அல்லது போக முடியாத ஒருவன், குறுக்கு வழிகளில் அடையும் வளர்ச்சியும் வீழ்ச்சியும் இதில் அலசப்படும்.
ஹீரோ:
ஒரு ஜீரோ எப்படி ஹீரோ ஆகிறான் என்பதே ஹீரோ கேரக்டரைசேசனின் அடிநாதம். எனவே வலுவான குணச்சித்திர வளைவு இங்கே உருவாக்கப்பட வேண்டும். ஹீரோ வேறு எங்கிருந்தோ குடிபெயர்ந்து வந்தவன், அதிகார வேட்கை கொண்டவன், நியாய தர்மங்கள் பற்றிக் கவலைப்படாதவன், எதிரிகளைக் கொல்லவும் அஞ்சாதவன், தன் மக்களுக்கு மட்டுமே நியாயமாக நடப்பவன் என்பது பொதுவான ஹீரோ கேரக்டரைசேசன்.
குறிக்கோள்:
மேலே சொன்னபடி அதிகார வேட்கையும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்வதும் தான் ஹிரோவின் குறிக்கோளாக இருக்கும். பி ஸ்டோரியில் வரும் காதல்கூட ஹீரோவுக்கு முக்கியம் கிடையாது. அது முக்கியம் என்று அவன் நினைக்க ஆரம்பிக்கும்போது, அவன் வீழ்ச்சி ஆரம்பிக்கும். ‘ஒருத்தனை திருந்த விடுறாங்களா..பாவம்’ எனும் செண்டிமெண்ட் டச் உத்தரவாதம்!
வில்லன்:
இந்த சமூகம் தான் கேங்ஸ்டர் படங்களின் மெயின் வில்லன். சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் ஏற்றத்தாழ்வுகள், அடிமட்டத்தில் இருக்கும் ஒருவன் மேலே எழும்போது சந்திக்கும் சவால்கள், எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பணபலம்/அதிகார பலம்/வன்முறை போன்றவை மெயின் வில்லன்கள். கூடவே சட்டமும் போலீஸும் முக்கிய வில்லன்களாக வலம் வரும். பொதுவாக, கேங்ஸ்டர் படங்களில் கெட்ட போலீஸ் மட்டுமே படைக்கப்படும். ஹீரோ திருந்த வேண்டும் என்றால் மட்டுமே, நல்ல போலீஸ் கேரக்டர் இருக்கும். அந்த கேரக்டர் Joseph Campbell சொன்ன வழிகாட்டி கேரக்டராக இருக்கும். Blake Snyder சொன்னபடி, அந்த நல்ல போலீஸ்கார் ஆல் இஸ் லாஸ்ட்டில் சாகவும் வாய்ப்பு 90% உண்டு. இன்னொரு முக்கிய விஷயம், ஹீரோ தாதாக்களால் கொல்லப்படும் நல்ல போலீஸ்களைப் பற்றி....உஷ்!
திரைக்கதை:
இது ஆண்களின் உலகம். (நாங்களும் தாதா தான் எனும் பெண்ணியவாதிகள் மன்னிக்கவும்!). லேடீஸ் கேரக்டர்களுக்கு இங்கே முக்கியத்துவம் மிகவும் குறைவு. அதாவது அவர்களுக்கென்று குணச்சித்திர வளைவு ஏதும் இருக்காது. சிட்டி மற்றும் சேரிப்பகுதியும் இருட்டும் தான் கதை நடக்கும் இடம். நவீன சமூகத்தில் முன்னேறுவதற்கு, ஒரு அடித்தட்டு மனிதன் எப்படிப் போராடுகிறான் என்று சொல்ல, நகரம் தான் சிறந்த இடம். பின்னால் நிற்கும் ரவுடிகளின் எண்ணிக்கை, கார்கள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் போன்றவை தாதாவைச் சுற்றி நிரம்பி வழிவது வழக்கம்.
ஹீரோவின் பிறப்பில் ஆரம்பிக்கும் கதை, அவன் சந்திக்கும் அவமானங்களையும் கஷ்டங்களையும் செட்டப்பில் சொல்லி முடிக்கும். பின்னர் ஹீரோ தாதா உலகில் நுழைந்து தற்காலிக வெற்றியில், பெரிய தாதாவாக ஆவதில் மிட் பாயிண்ட் வரும். அங்கேயிருந்து ஹீரோவின் வீழ்ச்சி ஆரம்பிக்கும். இறுதியில் தோல்வியா அல்லது மீண்டும் வெற்றியா என்பது, கதையின் கருவைப் பொறுத்து அமையும்.
(தொடரும்)
3 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.