Wednesday, June 10, 2015

திரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 44

ஜெனர் – ஆக்சன்

ஒரு சாதாரண மனிதன், ஒரு அசாதாரண சூழ்நிலையை எதிர்கொண்டு வெல்லும் கதைகளே ஆக்சன் கதைகள் ஆகும். ஒரு வலுவான ஹீரோ, உதவும் ஹீரோயின், சண்டைக்காட்சிகள், சவால்கள், அதிரடி வில்லன், இறுதியில் ஜெயிக்கும் ஹீரோ என நாம் எதிர்பார்க்கும் அனைத்து மசாலாக்களையும் உள்ளடக்கிய படம் என்றும் பொதுவாக வரையறுக்கலாம்.

ஒரு ஆக்சன் படத்திற்கு திரைக்கதை எழுதும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு. அவை:

ஹீரோ:
எவ்வித அதிகாரமும் இல்லாத ஒரு சாமானியன். ஆனாலும் வீரன். ஒரு பிரச்சினை என்றால் இறங்கி அடிப்பவனாக ஹீரோ கேரக்டரை வடிவமைக்க வேண்டியது அவசியம். (வெகுசில ஆக்சன் படங்கள், கோழை வீரனாக மாறும் குணச்சித்திர வளைவுடன் வந்திருந்தாலும்...!)

உதாரணமாக, தில் படத்தினை எடுத்துக்கொள்வோம். ஹீரோ, போலீஸ் வேலையில் சேர வேண்டும் எனும் ஆர்வத்தில் இருப்பவன். இதிலேயே அவன் ஒரு தைரியமான ஆள் என்பதும், அவனது குறிக்கோளும் அடங்கி விடுகிறது.
வில்லன்:
வில்லன் கெட்டவன், அவ்வளவு தான். இதில் எவ்வித குழப்பமும் இருக்கக்கூடாது. ஏன் அவன் கெட்டவன் ஆனான் எனும் ஆராய்ச்சி, ஆக்சன் கதைக்குத் தேவையில்லாதது. ஆக்சன் கதைகள் வில்லனின் பின்புலத்தை ஆராய்வதில்லை.வில்லன் கண்டிப்பாக ஹீரோவை விட பெரிய ஆள். அதிகார பலமும், ஆட்கள் பலமும் நிரம்பியவனாக இருக்க வேண்டும். அவனை எப்படி ஹீரோவால் ஜெயிக்க முடியும் எனும் எதிர்ப்பார்ப்பினை ஆடியன்ஸ் மனதில் உருவாக்க இது உதவும்.
தில் படத்தில், வில்லன் ஒரு போலீஸ் ஆபீசர். ஹீரோ மேல் சின்ன  கேஸ் எழுதினாலும் ஹீரோவின் போலீஸ் ஆசைக்கு ஆப்பாகிவிடும். ஹீரோவின் குறிக்கோளுக்கு எதிரியாக அந்த வில்லன் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்.

அடுத்து, வில்லனுக்கும் ஹீரோவுக்கும் சமாதானத்திற்கான வழியே இருக்கக்கூடாது. தில் படத்தில் ஹீரோ வில்லனின் முகத்தில் ஒரு வடுவினை உண்டாக்கிவிடுகிறான். அதைப் பார்க்கும்போதெல்லாம் வில்லன் கொலைவெறியாகிறான். கில்லி படத்தில் மதுரையை அடக்கியாளும் வில்லனை, தன் ஜீப்பில் கட்டி மாட்டை இழுப்பது போல் இழுத்துச் சென்று சகதியில் தள்ளுகிறான் ஹீரோ. அதன்பிறகு காந்தியே வந்தாலும் சமாதனாத்தை உண்டாக்க வழியில்லை. இயக்குநர் தரணி இதைத் தெளிவாகச் செய்திருப்பார்.

குறிக்கோள்:
ஹீரோவின் குறிக்கோள் என்பது பொதுவாக தப்பித்தல், பழி வாங்குதல் அல்லது லட்சியத்தை அடைதல் என்பதாக இருக்கும். ஹிட்ச்காக்கின் ஃபேவரிட் ஒன் லைன் ஆன 'தப்பி ஓடியபடியே, தன்னை நிரபராதி என நிரூபிக்கும் ஹீரோ' என்பதும் ஆக்சன் கதைகளுக்கு நல்ல உதாரணம். கஜினி படம் ஒரு பழி வாங்கும் கதை தான். ஆனால் ஹீரோவுக்கு ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் எனும் விஷயத்தைச் சேர்த்ததும், அதுவொரு புதிய கதையாக ஆகிவிட்டது.

ஆக்சன் படங்களின் அடிநாதமாக ஏதோவொரு பெர்சனல் பிரசிச்னையோ அல்லது சமூக ,அரசியல் பிரசினையோ இருக்கும். அதனுடன் ஹீரோவின் சொந்தப் பிரச்சினையும் சேரும்போது, படத்தின் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.

உதாரணமாக, தில் படத்தில் அதிகார வர்க்கத்தினால் சாமானியன் படம் அவலம் தான் அடிநடஹம். அதில் ஹீரோவின் குறிக்கோள் இணைந்த உடன், ஆடியன்ஸ் படத்துடனும் ஹீரோவுடனும் ஒன்றிவிட்டார்கள். படம், ஹிட்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் படங்கள் பழி வாங்குதல் எனும் பெர்சனல் பிரச்சினையைச் சார்ந்தவை. அதுவே நான் சிகப்பு மனிதன் படத்திலும், அவரது சிஷ்யர் ஷங்கரின் படங்களிலும் சமூகப்பிரச்சினையாக மாற்றப்பட்டிருக்கும். இதைப் பற்றி விரிவாக முதல் பாகத்தில் நாம் பார்த்திருக்கிறோம். உங்கள் ஆக்சன் கதையிலும் ஹீரோவின் பெர்சனல் குறிக்கோளுடன் ஏதாவது சமூகப் பிரச்சினையை இணைக்க முடியுமா என்று பாருங்கள்.

திரைக்கதை: 
பொதுவாக ஆக்சன் படத்தின் திரைக்கதைகள் நம்பக்கூடியதாக, ரியலிஸ்டிக்காக ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக நம்ப முடியாத சாகசப் பகுதிக்குள் நுழையும். ஒரு சாமானியன், அவனது சூழ்நிலை, அவனுக்கு ஏற்படும் பிரச்சினை என இன்டர்வெல்வரை ரியலிஸ்டிக்காக நகர்ந்து ஆடியன்ஸை உள்ளே இழுக்கும். பின்னர் ஹீரோவின் அதிரடி ஆட்டமும் வில்லனின் பதிலடியும் தொடங்கும்.

மேலும், ஆக்சன் படத்தின் திரைக்கதையானது விறுவிறுப்பகாவும் இருக்க வேண்டியது அவசியம். ஆடியன்ஸுக்கு சர்ப்ரைஸ் மேல்சர்ப்ரைஸாகக் கொடுத்துக்கொண்டே, ஹீரோவை வில்லன் மேலும் மேலும் சிக்கலில் ஆழ்த்துவதாக கதை நகர்வது வழக்கம். கதை ஹீரோவின் பார்வையிலேயே நகரும். கிராமத்தை விட நகரத்தில் நடப்பதாக கதையை அமைத்தால், நெகடிவ் கேரக்டர்களிலும் ஆக்சன் சீன்களிலும் பிரமாதப்படுத்த முடியும்.

கதாபாத்திரங்கள்:
த்ரில்லர் படங்களின் முக்கிய அம்சமான குறைவான கேரக்டர்கள் எனும் விஷயம், ஆக்சன் படங்களுக்கும் பொருந்தும்.  ஆனாலும் தமிழில் பி-ஸ்டோரியைப் பொறுத்து கேரக்டர் எண்ணிக்கை கூடலாம்.

ஹீரோயின் கேரக்டர் பொதுவாக ஹீரோவுக்கு உதவவும், டூயட் பாடவுமே தமிழ் ஆக்சன் படங்களில் வருகிறது. அவ்வாறு இல்லாமல், பிரச்சினையில் சிக்குவதே ஹீரோயின் தான் என்பது போன்று கதையை அமைப்பது நல்லது.

ஒன்லைன் :
ஆக்சன் படங்களின் ஒன்லைன் என்பது எப்போதும் சிம்பிளானது தான். ஒரு ஹீரோ-ஒரு குறிக்கோள்-சுபம்.
வில்லன் குரூப் சமூகத்திற்கு கெட்டது செய்துகொண்டிருக்கிறது.
ஹீரோ சுமூகமான வாழ்க்கை வாழ்கிறான்.
வில்லன் குரூப், ஹீரோவின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறது.
ஹீரோ அவர்களை அழித்து, வெற்றிவாகை சூடுகிறான்.
- இது தான் 90% ஆக்சன் படங்களின் கதை. இதில் கேரக்டர், குறிக்கோளை மாற்றி இன்னும் எத்தனை ஆக்சன் படங்கள் வேண்டுமென்றாலும் எடுக்க முடியும்.

கலப்பினங்கள்:
 ஆக்சன் எனும் த்ரில்லர், காமெடி எனும் மெலோடிராமாவுடன் சேரும்போது ஆக்சன் காமெடி என்று ஒரு புது ஜெனர் உண்டாகிறது. இதற்கு தமிழில் பல படங்களை உதாரணமகக் கொள்ளலாம். முக்கியமகா, இரட்டை வேடப் படங்கள். ஒரு ஹீரோ அப்பாவியாக, கோழையாக இருப்பார். இன்னொருவர் வீரனாக, உலகம் அறிந்தவராக இருப்பார். இருவரும் இடம் மாறும்போது, அது ஒரு பக்கா ஆக்சன் காமெடியாக ஆகும்.

தப்பிப் பிழைத்தல், பழி வாங்குதல், ஆள் மாறாட்டம் என இவற்றில் எதை வேண்டுமானாலும் வைத்து, உங்கள் கதையை நீங்கள் அமைக்கலாம். அதற்கு முன், இந்த ஜெனரில் இதே குறிக்கோள்/சூழ்நிலையில் வந்த படங்கள் பற்றியும் நீங்கள் கொஞ்சம் ஸ்டடி செய்திருக்க வேண்டும். இதுவரை வந்த படங்கள் எப்படி, அதை எப்படி மெருகேற்றலாம் என்று அப்போது தான் ஒரு தெளிவு கிடைக்கும்.

இரட்டை வேடக் கதைகள் பற்றிய என் முந்தைய ஸ்டடி இங்கே:


அடுத்த பகுதியில்.... சாகசப் படங்கள் (Adventures).
(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comment:

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.