Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Friday, October 5, 2018

96 - என்னா படம்யா!



தமிழ்சினிமா பொதுவாகவே புறநோக்கு தன்மை கொண்டது. மனதில் நிகழும் நுண்ணுணர்வுகளைப் பதியும் அகநோக்கு சில காட்சிகளில் மட்டும் அரிதாக நிகழும். எதையும் செயல்களாகக் காட்டினால் தான் திருப்தி. மலையாளப் படங்கள் நம்மை முந்துவது இந்த விஷயத்தில் தான். அந்தவகையில்  96 படம், தமிழ் சினிமாவில் முக்கியமானதாக ஆகிறது.

படத்தில் வரும் முக்கிய சம்பவங்கள் எல்லாம் சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாக இருப்பதாலேயே நம்மால் படத்துடன் ஒட்டிக்கொள்ள முடிகிறது. காதல் மலர்வதற்கு சாகச காட்சிகள் ஏதுமில்லை.நான்குநாட்கள் பார்க்க முடியாத ஜானு, காய்ச்சலுடன் ஸ்கூலுக்குத் திரும்பி வருகிறாள். பின்னால் அமர்ந்திருக்கும் ராமை மெதுவாகத் திரும்பிப் பார்க்கிறாள். பூ மலர்வதை படம் பிடிக்கமுடியாது என்பார்கள். இந்தக் காட்சியில் அதை இயக்குநர் செய்துகாட்டியிருக்கிறார்.

வாழ்க்கையில் நம்மைப் புரட்டிப் போட்ட விஷயங்களுக்கு காரணம் தேடினால், சாதாரணமாக இருக்கும். படத்தில் ராம் ஊரைவிட்டுப் போவது, ஜானுவைப் பார்க்க காலேஜிற்கு வருவது, ஜானுவின் கல்யாணத்தன்று ராம் என மிக இயல்பான விஷயங்களே அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக ஆக்கியிருக்கின்றன.

படத்தின் இரண்டாம்பாதி பெரும்பாலும் ராம்-ஜானு இருவர் மட்டும் பேசிக்கொள்ளும் காட்சிகள் தான். வலுவான கதையும் வசனங்களும் மட்டும் இதற்குப் போதாது. அதைவிட வலுவான நடிகர்கள் இதற்கு வேண்டும். விஜய் சேதுபதி - த்ரிஷா ஜோடி அதை சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி நடிப்பில் 96 உச்சம் என்பேன். மிக மெல்லிய உணர்வுகளைக்கூட மனிதர் எளிதாக கொண்டுவந்துவிடுகிறார். அவரது எல்லாப் படங்களைப் போல இதிலும் படத்தை தாங்கும் தூணாக நிற்கிறார். பல வருடங்கள் கழித்து ஜானுவை சந்திக்கும் பதட்டம், ஜானுவின் கல்யாணநாள் பற்றிப் பேசும் சீன், வெர்ஜின் வெட்கம் என்று கிடைக்கிற வாய்ப்பில் எல்லாம் சிக்ஸர் அடிக்கிறார்.

விஜய் சேதுபதியை இயக்குநர் நம்பியதில் ஆச்சரியம் இல்லை. த்ரிஷாவை நம்பி, இந்த கேரக்டரை கொடுத்தது தான் ஆச்சரியம். விண்ணைத் தாண்டி வருவாயா தவிர்த்து எந்தப் படத்திலும் நடிக்காதவர் அவர். கொடி போன்று கிடைத்த நல்ல வாய்ப்புகளையும் சொதப்பியவர். நுணுக்கமான நடிப்பைக் கோரும் இந்த கேரக்டருக்கு அவரை தேர்ந்தெடுத்ததே பெரிய ரிஸ்க் தான்.

ஆனால் இயக்குநரின் நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறார் த்ரிஷா. இத்தனை வருடங்களுக்கும் சேர்த்து, ஆர்ப்பாட்டமே இல்லாமல் நடித்து, தானும் ஒரு நல்ல நடிகை தான் என்று நிரூபித்திருக்கிறார். கல்யாண நாள் பற்றிப் பேசுவது, ராம் ஒதுங்குவது கண்டு கோபப்படுவது, உரிமையுடன் அவனை கலாய்ப்பது என்று ஜானுவாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். ஆண்களை விட பெண்கள் வாழ்க்கையை (வேறு வழியின்றியும்) எப்படி பிராக்டிகலாக எதிர்கொள்கிறார்கள் என்பதை த்ரிஷா கண்முன் கொண்டுவருகிறார்.

‘நான் உன்னைப் பார்க்கலைடா’ எனும் சீனும் கிளைமாக்ஸ் சீனும் த்ரிஷா நடிப்பில் உச்சம். நம்மை உலுக்கிவிடும் நடிப்பு. எல்லாவற்றுக்கும் மேல் தேவதையாக ஜொலிக்கிறார். இதுவரை கமலா காமேஷாகவே இருந்தவர், இந்த படத்தில் தான் த்ரிஷா ஆகியிருக்கிறார்!

இளம் வயது கேரக்டராக வரும் எல்லோருமே நடிப்பிலும் அசத்துவது ஆச்சரியம். முதல்பாதியில் அவர்களின் காட்சிகள் போடும் அஸ்திவாரம் தான், உணர்வுப்பூர்வமான இரண்டாம்பாதியை வலுவாக தாங்குகின்றன.

இதுவொரு ஃபீல் குட் மூவி. எனவே பரபரப்பான திருப்பங்கள் என்று ஏதும் கிடையாது. இரண்டாம்பாதி முழுக்க, 22 வருடப் பிரிவை ராம் & ஜானு ஒரு இரவில் பேசித்தீர்க்கிறார்கள். எனவே சற்று நீளமான படமாக தோன்றலாம். ஆனாலும் ஜானு இன்னும் கொஞ்ச நேரம் இருக்கட்டுமே என்று ராமிற்காக நாமும் ஃபீல் பண்ணுவது தான் படத்தின் வெற்றி.

இயக்குநர் பிரேம்குமார் முக்கியமான படைப்பாளியாக ஆவார் எனும் நம்பிக்கையை படத்தின் பல காட்சிகள் உறுதிசெய்கின்றன. படத்தில் பல அற்புதமான ஷாட்ஸ் இருக்கின்றன. கண்கொட்டாமல் பார்க்க வைக்கிறது சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு. ஜானுவின் கல்யாணம் பற்றி ராம் பேசும் காட்சியில் வரும் பிண்ணனி இசை, அந்த காட்சியின் உணர்வுகளை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்கிறது. ’காதலே..காதலே’பாடல் தவிர மற்ற பாடல்கள் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், பிண்ணனி இசையில் கோவிந்த் பிரமாதப்படுத்தியிருக்கிறார். இளையராஜாவிற்கும் நன்றி சொல்ல வேண்டும்.

’ஒரு பள்ளிப்பருவக் காதல்..பிரிவு..மீண்டும் சந்திப்பு ‘ எனும் அழகி-ஆட்டோகிராஃப் பாணியிலான கதை தான். ஆனால் அந்தப் படங்கள் ஆணின் உணர்வுகளை மட்டுமே பதிவு செய்தவை. அந்த காதலை பெண் எப்படி உணர்ந்தாள், அந்த பிரிவை பெண் எப்படிக் கடந்தாள் என்று சொல்வதில்லை. அதை எதிர்கொள்ளும் அளவிற்கு அன்றைய ஆடியன்ஸிற்கு முதிர்ச்சி இருந்ததா என்பதும் கேள்விக்குறி தான். இந்தப் படம், இருவரின் உணர்வுகளையும் துல்லியமாகப் பதிவு செய்கிறது....அது, இன்றைய ஆடியன்ஸிற்கு இயக்குநர் செய்யும் மரியாதை.
மேலும் வாசிக்க... "96 - என்னா படம்யா!"

Friday, September 14, 2018

சீமராஜா - ஒரு பார்வை


கலாய்த்தும் கலாய்க்கப்பட்டும் மக்களை ரசிக்க வைத்த சிவகார்த்திகேயன். காமெடிக்கு உத்தரவாதம்  தரும் இயக்குநர் பொன்ராம். இருவருக்குமே ‘எத்தனை நாளைக்குத் தான் விளையாட்டுப் பிள்ளையாவே இருக்கிறது?’ எனும் கவலை. அடுத்தகட்ட வளர்ச்சியை விரும்பும் எவருக்கும் வரும் நியாயமான கவலை தான். ’காமெடியாகவே எடுத்துக்கொண்டிருந்தால் வளர முடியாது, காமெடியை விட்டால் ஜெயிக்க முடியாது..என்னா பண்றது?’ என்று புலிவால் பிடித்த கதையாக சிக்கிக்கொண்ட இருவரும், கொஞ்சம் விட்டுத்தான் பார்ப்போமே என்று லைட்டா புலிவாலை லூஸ்ல விட்டிருக்கிறார்கள், சீமராஜாவில்.

ஒரு நல்ல கதையை எடுத்துக்கொண்டு இதைச் செய்திருக்கலாம். முன்னொரு காலத்தில் இதுவும் நல்ல கதை தான்..

ஒரு கோயிலால் இரண்டு ஊர்களுக்கு இடையே பிரச்சினை. அரசாங்கத்தால் கோயில் பூட்டப்படுகிறது. ஹீரோவின் லவ்வருக்கு கோயிலைப் பார்க்க ஆசை. ஹீரோ பூட்டை உடைக்க, ஊர் கலவரம் ஆகிறது. பஞ்சாயத்தில் ஊர்ப் பெரியவரான ஹீரோவின் அப்பா அவமானப்படுத்தப்பட, அப்படியே ஷாக் ஆகி, பெரிசு அவுட். லாலே...லால..லாலா....ஆ!

கோயில் - சந்தை
கமல் - சிவா
சிவாஜி - நெப்போலியன்
கௌதமி-சமந்தா

அப்பா அவமானப்பட்டுச் சாவதே ஹீரோ திருந்த போதுமானதாக இருக்கிறது. ஆனால் படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுத்தே தீருவோம் என்று முடிவுசெய்தபிறகு, சீமராஜா அப்படி சட்டென்று திருந்திவிட முடியுமா? 90ஸ் கதையை லேட்டஸ்ட்டாகவும் மாற்ற வேண்டும்.  எனவே பாகுபலி காளகேயர் சீனை எடுத்து ஒரு ஃப்ளாஷ்பேக். கூடவே, இண்டர்வெல்லில் ஒரு பயங்கர ட்விஸ்ட்..வில்லனின் மகள் தான் ஹீரோயின்..அடேங்கப்பா

பொன்ராம் -சிவா கூட்டணியின் முந்தைய படங்களிலும் பெரிதாக கதை என்று ஒன்றும் இருக்காது.ஆனாலும் அவை மன்னிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டதற்குக் காரணம் அவையெல்லாம் வெறும் காமெடிப்படங்கள் என்பதாலேயே! சீரியஸாக படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டபின், அதற்குரிய உழைப்பைத் தருவது தானே நியாயம்?

போர்க்கள காட்சியில் வில்லனுக்கும் ஹீரோவுக்கும் கடும் வாக்குவாதம். சிரிப்பை அடக்க முடியாமல் பார்க்கவேண்டியிருக்கிறது.ஏனென்றால், வில்லன் ஹிந்தியில் அத்தாம்பெரிய டயலாக் பேச, சிவா அதைவிடவும்பெரிய டயலாக்கை தமிழில் பேசுகிறார். வில்லனே அசந்துபோய், ஆளை விடுடா சாமி என்று சரண்டர் ஆகிறான். எவனாவது என்னிடம் ஹிந்தியில் பேசினால், வம்புக்கென்றே தமிழில் பேசுவேன். ஆனால்  14ஆம் நூற்றாண்டில் இருந்தே இந்த வழக்கம் இருந்திருக்கும் போல!

இது சிறு உதாரணம் தான். இப்படி ஒரு காமெடிப்படத்திற்கு உரிய ’அக்கறை’யுடன் தான் நிறைய சீரியஸ் சீன்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அரதப்பழசான கதைக்கு அடுத்தபடியாக, நம்மை அதிகம் எரிச்சல் அடைய வைப்பது வில்லி சிம்ரனின் கேரக்டரும் ஆக்ட்டிங்கும். ஒரு வில்லன் கேரக்டர் நம்மை கோபப்படவைக்கலாம்,பயப்பட வைக்கலாம். ஆனால் இப்படி எரிச்சல்பட வைக்கக்கூடாது. இந்த மாதிரி கத்திப்பேசுவது சிம்ரனின் கம்ஃபோர்ட் ஜோன் கிடையாது. கூடவே அந்த இம்சையான பிண்ணனிக் குரலும் சேர்ந்துகொள்ள, அப்பப்பா. சிம்ரன் ரசிகன் அல்லாத என்னாலேயே தாங்க முடியவில்லை..பாவம் இடுப்பழகி ஃபேன்ஸ்!

ஹீரோ இமேஜுக்கு பில்டப் ஏற்ற வேண்டும் என்றால், ஸ்ட்ராங்கான வில்லன் கேரக்டர் இருந்தால் தான் எடுபடும். அதிலேயே கோட்டைவிட்டுவிட்டு, சூரியையும் பனானா பவுன்ராஜையும் வைத்து வசனத்திலேயே சிவாவிற்கு பில்டப் ஏற்றுகிறார்கள். அது ஆங்ரி மேக்கிங் காமெடி ஆகிறது!

காமெடியில் கலக்கி எடுத்த ஒரு வெற்றிக்கூட்டணி மூன்றாவது முறையாகச் சேரும்போது எதிர்பார்ப்பு எகிறிவிடும். அதை பூர்த்தி செய்யவில்லை என்றால், அந்த எதிர்பார்ப்பே படத்திற்கு ஆப்பாக ஆகிவிடும். இங்கே சிவா-சூரி காமெடியில் அது தான் நடந்திருக்கிறது. ராமர் சீன், சிறுத்தை சீன் தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் சிரிப்பே வரவில்லை. கடைசி முக்கால் மணி நேரம் முழுக்க சீரியஸாகவே படம் நகர்கிறது. காமெடியை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றத்தையே இது கொடுக்கிறது.

படத்தில் ப்ளஸ் பாயிண்ட்ஸ் என்றால்..

- சிவா இதிலும் ஆக்டிவ்வாக, கலகலப்பாக இருக்கிறார்.அந்த ராஜா கெட்டப்கூட நன்றாகவே செட் ஆகியிருக்கிறது.

- சமந்தா..படத்தில் ஆகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் இவர்தான்.

- இமானின் இரண்டு மெலோடிகள்

- போர்க்காட்சிகள் தேவையில்லாத ஆணி என்றாலும் மேக்கிங் நன்றாகவே இருந்தது.

- டபுள் மீனிங்கோ, ஆபாசமோ இல்லாமல் பொன்ராம் மூன்றாவது படத்தையும் நீட்டாக கொடுத்திருப்பது!


விடுமுறை நாட்களைக் குறி வைத்து, அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதால் எப்படியும் முதல் மூன்று நாட்களுக்கு ஹவுஸ்ஃபுல் ஆகிவிடும். கடைசி இரண்டு படங்களுமே இப்படி ரிலீஸ் ஆகி தப்பித்தவை தான். ஆனால் இந்த ட்ரிக் எத்தனை நாட்களுக்கு கை கொடுக்கும் என்று சிவா யோசிக்க வேண்டும்.
மேலும் வாசிக்க... "சீமராஜா - ஒரு பார்வை"

Sunday, June 17, 2018

காலா : ஒரு வித்தியாசமான டான்


பாஸ், இந்த படத்துல நீங்க ஒரு டானா வர்றீங்க.
போன படத்துலயும் அப்படித்தானப்பா வந்தேன்?
ஆமாம்..ஆனால் இதுல வித்தியாசமான டானா வர்றீங்க.
எப்டி..எப்டி?
வில்லன் உங்களையும் உங்க லவ்வரையும் கலவரம் செஞ்சு பிரிச்சிடுறான்.
இப்போ நான் வில்லனை பிரிபிரின்னு பிரிக்கணும்..அதானே?
இல்லை பாஸ்..நீங்க வேற பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டின்னு செட்டில் ஆகிடுறீங்க.
ஏன்?
ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான்.
அப்புறம்?
வில்லன் உங்க அப்பாவை கொன்னுடறான்
ஹா..இப்போ நான் பொங்கி எழுந்து சும்மா..
பாஸ்...பாஸ்..அதெல்லாம் இல்லை. நீங்க உங்க ஏரியா பொடிசுகளோட கிரிக்கெட் விளையாடி க்ளீன் போல்டு ஆகிறீங்க.
ஏன்பா அப்படி?
ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான் பாஸ்.
இப்பவே கிர்ருங்குதே தம்பி..
இதுக்கே அசந்துட்டா எப்படி சார்..இன்னும் ஸ்பெஷல் ஐட்டம் எல்லாம் வச்சிருக்கேன். வில்லன் இப்போ உங்க ஏரியா நிலத்தையெல்லாம் அபகரிக்க வர்றான்.
நான் ஒரு வீச்சரிவாளோட போய் அவனை..
நோ..நோ..வில்லனை நீங்க இப்போ ஒன்னும் செய்யக்கூடாது பாஸ்.
ஏன்?
ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான்.
ஹய்யோ..சரி சொல்லு.
அப்புறம், வில்லன் உங்க மூத்த மகனைக் கொன்னுடறான்.
இது சூப்பர் தம்பி...என் பிள்ளை மேலயா கைவச்சேன்னு துப்பாக்கியோட போய்...
பாஸ்...அதெல்லாம் இல்லை பாஸ்.
அதுவும் இல்லையா? ஏன்ன்ன்?
ஏன்னா நீங்க ஒரு......நீங்க ஒரு வித்தியாசமான டான். மறந்துட்டீங்களா பாஸ்?
ஏம்பா, வித்தியாசம் தான் இருக்கு. டானைக் காணோம்?
பொறுங்க பாஸ்..வில்லன் உங்க பொண்டாட்டியைவும் கொன்னுடறான்.
அவளையுமா? இப்பவும் நான் சும்மா இருக்கணும்...அதானே?
இல்லை பாஸ்...ஸ்லோமோசன்ல வில்லன் வீட்டுக்குப் போறீங்க.
ஹாஹா...தியேட்டர்ல சும்மா விசில் பறக்குது..
ஆமாம் பாஸ்...போய் வில்லனைப் பிடிச்சு ‘கறுப்பு உழைக்கும் வர்க்கத்தின் கலர்’ன்னு சொல்லிட்டு வந்துடறீங்க.
ஏன்..ஏன்...ஏன்?
ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான். அப்புறம், வில்லன் அடியாட்களை அனுப்பி, உங்க வீட்டைக் கொளுத்தி, ஏரியாவைக் கொளுத்தி உங்க உயிர் நண்பனையும், இளைய மகனையும் மண்டையைப் பொளந்துடறான்.
இப்போ என்ன, நான் உண்ணாவிரதம் இருக்கணுமா?
இல்லை பாஸ்...அந்த சிரமம்கூட உங்களுக்கு வேண்டாம்னு, வில்லன் ஆளுங்க உங்களையும் கொன்னுடறாங்க.
என்னையுமா?
ஆமா பாஸ்.
தம்பி, என்னையுமா தம்பி?
ஆமா பாஸ்
நாந்தான் ஒன்னுமே செய்யலையேப்பா?
ஆமா பாஸ்...ஆனாலும் நீங்க ஒரு வித்தியாசமான டான் இல்லையா? அதனால கொன்னுடறாங்க.
ஆஹாங்...அப்புறம்?
வில்லன் மறுபடியும் நிலத்தை அபகரிக்க வர்றான்..மக்கள் பொங்கி எழுந்து, வில்லன் மூஞ்சில கோலமாவைப் பூசி, அவனைக் கொன்னுடறாங்க பாஸ்.
மக்கள் என்ன தம்பி செய்யறாங்க?
வில்லனைக் கொன்னுடறாங்க சார்.
டேய்...இதைத் தானடா நான் முதல்லயே செய்யறேன்னு சொன்னேன். நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இதே மக்களே முதல் சீன்லயே இதை செஞ்சிருப்பாங்களேடா...அப்படிப் பண்ணியிருந்தால், என் பொண்டாட்டி, பிள்ளைகள், ஆடியன்ஸ்ன்னு எல்லாருமே தப்பிச்சிருக்கலாமே? ஏண்டா இப்படிப் பண்ணே?
அதான் சொன்னேனே பாஸ்...நீங்க ஒரு வித்தியாசமான டான்னு..அதனால தான்!!
மேலும் வாசிக்க... "காலா : ஒரு வித்தியாசமான டான்"

Sunday, June 10, 2018

காளி : இயக்குநர் vs விமர்சகர்கள்


காளி படம் மோசம் என்று விமர்சகர்கள் சொல்ல, இயக்குநர் கிருத்திகா உதயநிதி கொதித்து எழுந்துவிட்டார். ’எப்படி என் படத்தை நல்லா இல்லைன்னு சொல்லலாம்? நீங்க இப்படிச் சொன்னதால்தான் படம் ஊத்தி மூடிக்கிச்சு’என்று சண்டைக்குப் போய்விட்டார். அவர் தரப்புக் கருத்தாக, காளி ஏன் நல்ல படம் என்று அவர் முன்வைத்த பாயிண்ட்ஸ் இவை தான் :


1. ஹீரோ நான்கு கெட்டப்பில்...

2. ஒரே படத்தில் மூன்று வெவ்வேறு கதைகள்...

3. மூன்று கதைகளுக்கும் இடையே தொடர்பு
4. அவசரமாக ரிவ்யூ செய்வதால், உங்களால் வித்தியாசமான படங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒரு இயக்குநர் ஒரு படத்தை எடுக்க நினைக்கத் தூண்டுதலாக, தன் படத்தின் பலமாக சில விஷயங்களை மனதில் வைத்திருப்பார். கிருத்திகாவைப் பொறுத்தவரை முதல் மூன்று பாயிண்ட்ஸ் தான் அவை. ஐடியாவாகப் பார்க்கும்போது நன்றாகவே இருக்கிறது. ஆனால் திரைப்படம் என்பது ஐடியாவிற்காக ஜெயிப்பதில்லை; அந்த ஐடியா எப்படி எக்ஸிக்யூட் பண்ணப்படுகிறது (திரைக்கதையாக) என்பது தான் சூட்சுமம்.

இரண்டு ஹீரோக்கள்.அதில் ஒருவன் விக்ரமாதித்யன், இன்னொருவன் வேதாளம் என்பது ஐடியா. .போலீஸ் vs தாதா - என்று கேரக்டர் பிடித்து, திரைக்கதையையும் ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்?’ என்று ஃப்ளாஷ்பேக் உத்திகளாகப் பிரித்து, ஒவ்வொரு ஃப்ளாஷ்பேக்கையும் முக்கியமான கேள்வியில் நிறுத்தி விக்ரமாதித்யனை சுற்றலில் விட்டது தான் பெர்ஃபெக்ட் எக்ஸிக்யூசன். ஒவ்வொரு சீனையும் எப்படி புதிதாகச் சொல்லலாம் என்று மண்டையைப் பிய்த்துக்கொள்வது தான் திரைக்கதை எழுதுதல். ஃபர்ஸ்ட் ட்ராஃப்ட்டில் வரும் மொக்கை சீன்களை எடுத்துக்கொண்டு விஜய் ஆண்டனியையும் விக்ரம் பிரபுவையும் விக்ரம்-வேதாவாக புக் செய்வது அல்ல, ஃபிலிம் மேக்கிங்!

1. நான்கு கெட்டப் ஹீரோ என்பது தான் கதையின் பாசிடிவ்களில் ஒன்று எனும்போது, விஜய் ஆண்டனியிடம் போனது தவறு. மற்ற ஹீரோக்களிடம் போயிருந்தாலும் எஸ்கேப் ஆகியிருப்பார்கள் என்பது வேறு விஷயம். எனக்கு நடிக்கத் தெரியாது என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும் ஒரு ஹமாம் பார்ட்டியிடம் போய் இந்தக் கதையைக் கொடுத்ததுமே, முதல் பாயிண்ட் அவுட். விமர்சனத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பை எல்லோரும் சுட்டிக்காட்டுவதன் காரணம், படத்தின் பாசிடிவ்வை அவர் நெகடிவ்வாக மாற்றியது தான்.

அடுத்து திரைக்கதைரீதியாக இந்தப் பாயிண்ட்டை அணுகினால், நான்கு கெட்டப்பில் ஹீரோவே வருவதற்கான காரணம் போதுமானதாக இல்லை. முதல் ஃப்ளாஷ்பேக்கை யோகிபாபு நினைத்துப் பார்க்கிறார், ஓகே. ஆனால் மூன்றாவது ஃப்ளாஷ்பேக்கை ஹீரோ டைரியில் தானே படிக்கிறார். அங்கே ஜெயப்பிரகாஷ் தானே வர வேண்டும்? என்ன இழவு லாஜிக் இது?

2. ஒரே படத்தில் மூன்று வெவ்வேறு கதைகள் :
ஹீரோ அப்பாவைத் தேடுவது ஒரு ப்லாட். அதில் மூன்று வெவ்வேறு கதைகளை கோர்த்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது பார்த்தீர்களா? என்பது அடுத்த பாயிண்ட். ஆமாம், அப்படித்தான் இருக்கிறது. ஆனாலும் ஏன் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை? காரணம், மூன்று கதைகளுமே அரதப்பழசான மொக்கைக் கதைகள் என்பதால் தான். மெயின்கதையில் சட்டென்று ஒரு சுவாரஸ்யமான கதையை ஓப்பன் செய்து, மீண்டும் மெயின் கதைக்கு வந்து, மறுபடியும் இன்னொரு சுவாரஸ்யமான கதையைச் சொல்லியிருந்தால், படம் ஹிட் ஆகியிருக்கும்.

ரோமியோ-ஜூலியட்டாக நடித்து காதலில் விழும் காதலர்களின் முடிவும் ரோமியோ-ஜூலியட் முடிவு போலவே அமைந்துவிடுகிறது..த்சொ..த்ச்சொ..அடடே, ஆச்சரியக்குறி! இந்த மாதிரி நெஞ்சை நக்கும் கதை எல்லாம் இந்தக் காலத்தில் சொல்ல அசாத்திய துணிச்சல் வேண்டும். இதே தான் மற்ற இரண்டு கதைகளிலும். ஒரு நல்ல ஐடியாவை மொக்கை சீன்களால் நிரப்பிவிட்டு, குய்யோ முறையோ என்று கத்தி ஆகப்போவதென்ன?

3. ஒன்றுக்கொன்று தொடர்புடைய 3 கதைகள்:

‘மூணு கதைகளுக்கு இடையில் லின்க் இருக்கு..அதையாவது பார்த்தீங்களா?’ என்று அடம்பிடித்து அழுகிறார் இயக்குநர். முதல் கதை இல்லையென்றால் இரண்டாம்/ மூன்றாம் கதை புரியாது என்று சொல்லும் அளவிற்கு திரைக்கதை பின்னப்பட்டிருந்தால் தான் இதை ஒரு வலுவான பாயிண்ட்டாகச் சொல்ல முடியும். மூன்று கதைகளையும் விருமாண்டி போல் ஒன்றையொன்று நிரப்பும் ஃப்ளாஷ்பேக்-களாக ஆக்கியிருக்க முடியும். அதற்கு கொஞ்சம் வேலை செய்யணும். முதல் இரண்டு கதைகளை கட் செய்துவிட்டு, ஸ்ட்ரெய்ட்டாக மூன்றாவது கதைக்குப் போனாலும், அது புரிகிறது. அப்புறம் எதற்கு வேஸ்ட்டா மூணு கதை என்று தான் ஆடியன்ஸே நினைப்பார்கள். அது தான் நடந்தது.

4. அவசரத்தில் விமர்சனம்:

’என்னுடைய திரைக்கதை சித்துவேலைகள் எல்லாம் புரியற அளவுக்கு உங்களுக்கு கெப்பாக்குட்டி இல்லை’ என்று வெள்ளந்தியாகப் பேசுகிறார் இயக்குநர். முகமும் மனதும் குழந்தையாகவே அமைவது வரம். இருக்கட்டும்...ஆரண்ய காண்டம், உறியடி, அருவி என்று வித்தியாசமான படங்களை இணைய விமர்சகர்கள் கொண்டாடவே செய்திருக்கிறார்கள். யாரும் அவசரத்தில் படம் புரியாமல் சொதப்பியதில்லை. எனவே வித்தியாசமான படங்களை வரவிடாமல் விமர்சனங்கள் தடுப்பதாகச் சொல்வதில் நியாயமில்லை.

நான் பல நுண்ணிய வேலைப்பாடுகள் செய்தும் நீங்கள் குறிப்பிடவில்லை, கண்டுகொள்ளவில்லை என்பது தான் இயக்குநரின் ஆகப்பெரிய மனக்குறை. அதற்குப் பதில் சிம்பிள்: படம் கொஞ்சமாவது நன்றாக இருந்தால் தான், அதைப் பற்றி மீண்டும் நினைத்துப் பார்த்து, அடடே..இது நல்லா இருந்ததே...அது நல்லா இருந்ததே’ என்று யோசிப்பார்கள். அதிகம் அது பற்றிப் பேசாமல், துயரங்களை மனம் மறக்கவே விரும்பும்!


 போனஸ் : ’எங்க வீட்ல வேலை செய்றவங்களைக் கேட்டேன். அவங்களுக்கு படம் புரிஞ்சிருக்கு, பிடிச்சிருக்கு’ என்று கிருத்திகா சொன்னதைக் கேட்டு அப்படியே ஷாக் ஆகிட்டேன். ஏன் தாயீ, பிடிக்கலைன்னு சொன்னால் அடுத்த நிமிசமே வேலையை விட்டுத் தூக்கிற மாட்டீங்களா? எனக்கு உங்க கம்பெனியில் வேலை கொடுத்தால், நானே மேலே எழுதிய எல்லாவற்றையும் அழித்துவிட்டு சூப்பர்னு தான் சொல்வேன். நமக்கு சோறு தான் முக்கியம்!

படத்தில் எனக்குப் பிடித்தது அரும்பே பாடல் & அஞ்சலி ..அவ்ளோ அழகு!
மேலும் வாசிக்க... "காளி : இயக்குநர் vs விமர்சகர்கள்"

Saturday, April 21, 2018

நாணுடைமை (2018) – குறும்படம்




அற்புதம்!
இந்த ஒரு வார்த்தையுடன் விமர்சனத்தை முடித்துவிடலாம்.  

ஷார்ட் ஃபிலிமைப் பற்றிப் பேசும் முன்பு, சிறுவன் அஜய்யைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். என்னவொரு இயல்பான உடல்மொழி. காற்றில் மிதக்கும் சிறகு போன்ற ஒரு கேரக்டர். அதை மிக கேஷுவலாக கண்முன் கொண்டுவந்திருக்கிறான். இவ்வளவு இயல்பானை பெர்ஃபார்மன்ஸை, நடிப்பு என்று சொல்ல முடியவில்லை, பெர்ஃபாமன்ஸை வாங்கிய இயக்குநர்உலக சினிமா ரசிகன்பாஸ்கரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பட த்தில் மிகக் குறைவான வசனங்கள். அவையும் பெரும்பாலும் கதையை நேரடியாகச் சுட்டுவன அல்ல. திரைமொழி மூலமாகவே, காட்சிச்சட்டகங்கள் & படத்தொகுப்பு மூலமே, ஒரு மேஜிக்கை கண் முன் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்.
ஆடியன்ஸுடன் இயக்குநர் விளையாடியிருக்கும் விளையாட்டை நான் ரசித்தேன். சிறுவனின் சீட்டு விளையாட்டு மீதான மோகமும் திருந்துவதும் யதார்த்தம். ஆனால் அவனைச் சுற்றிலும் வரும் பள்ளிச்சூழல் முழுக்க கற்பனாவாதம். ஒரு கற்பனையாக உலகிற்குள் ஒரு யதார்த்தமான கதையைப் புகுத்தியிருக்கிறார்.
இதை சரியாகப் பிரித்துப் பார்க்காதவர்களுக்கு, கொஞ்சம் கிர்ரென்று தான் இருக்கும். பள்ளியில் தமிழ், வகுப்பில் திருக்குறள், திருவள்ளுவர் பற்றிய வீட்டுப்பாடம் என்று சர்ரியலிஸ ஸ்கூல். அதில் ஒரு தவறு செய்யும் மாணவனைத் திருத்தும் நாணுடைமைக் குறள்.
குழந்தைகளுடன் பள்ளி வேன் போகும் ஷாட்டை அடுத்து வரும் செங்கல் லாரி, பிள்ளைகளை ஸ்கூல் வேனில் ஏற்றிவிட வரும் பெற்றோருக்கு முன்பு வரும் கன்னுக்குட்டியை ஒரு பெண் ஓட்டிப்போகும் காட்சி, திருக்குறள் பற்றி வேரில் அமர்ந்து கற்றுக்கொள்ளும் குழந்தைகள் என்று இயக்குநரின் குறியீட்டுக் குறும்புகளுக்கு பஞ்சம் இல்லை.
எதையும் டிராமடிக் ஆக்காமல், தெளிவான ஆற்றொழுக்கம் போல் காட்சிகள் நகர்கின்றன. அவர் ஆரம்பத்தில் போடும் மூன்று குருமார்களுக்கு நியாயம் செய்திருக்கிறார். இயக்குநரின்உசிர (உலக சினிமா ரசிகன்)’ என்ற தனது பெயருக்கும் நியாயம் செய்திருக்கிறார்.
தமிழ் வழிக் கல்வியில் ஏறக்குறைய இப்படித்தான் நான் படித்தேன். ஒன்பதாம் வகுப்பு வரை மரத்தடி வகுப்பு தான். படிப்பு என்றும் சுமையாகத் தெரிந்ததில்லை. படிப்பை கட்டாயமாக பள்ளியிலும் வீட்டிலும் எனக்கு ஊட்டியதில்லை. அது தானே நிகழ்ந்த து. அந்த வசந்த காலத்தை இந்த ஷார்ட் ஃபிலிம் மீட்டுக்கொண்டுவந்துவிட்டது.
உசிர நம் உசிரை எடுத்துவிட்டார்!
இந்த ஷார்ட் ஃபிலிமை பார்க்க விரும்புபவர்கள், ப்ளேபட்டன் ஆப்-ஐ உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்தால் பார்க்கலாம். பிடித்திருந்தால், வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.
மேலும் வாசிக்க... "நாணுடைமை (2018) – குறும்படம்"

Saturday, October 28, 2017

ஹரஹர மகாதேவகி - விமர்சனம் (18 +)


எச்சரிக்கை : 18+ படத்திற்கு மட்டுமல்ல, விமர்சனத்திற்கும்!

 ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு சுஹானுபவத்துக்கு ரெடி ஆவோம்னு நானும் என் தம்பியும் இந்த படம் பார்க்க உட்கார்ந்தோம். அப்பவே தம்பிகிட்டே சொன்னேன், ‘அடேய் அம்ப,.நம்ம சென்சார்லாம் கெட்டவா..அதனால நோக்கு இந்த படம் பிடிக்காது’ன்னு.

படம் ஓப்பன் பண்ண உடனே, ஹீரோயினை ஓப்பன் பண்ணுவான்னு பார்த்தால், ஹீரோவை ஓப்பன் பண்ணிட்டா! அதிலேயே துடிப்போட இருந்த தம்பி, துவண்டு போய்ட்டன்! இழுத்த இழுப்புக்கெல்லாம் வர்ற நல்ல தம்பி, இப்படி இடிஞ்சு போய்ட்டானேன்னு நேக்கு ஃபீல் ஆகிட்டது.

இருந்தாலும், டைரக்டர் தம்பி ஏதோ சொல்ல வாராளேன்னு பொறுத்துண்டு பார்த்தேன். லோகத்துல சிலபேருக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபுள் உண்டுன்னு என் சிஷ்யா உங்களுக்கு நல்லாத் தெரியும். இந்த டைரக்டர் தம்பிக்கும் அப்படி ஒரு பிரச்சினை இருக்கும் போல! காமெடி படம்னு சொல்லிண்டு ரொம்ப நேரம் மொக்கை போட்டுண்டு இருந்தா. சரி, முன்னாடி சொதப்பினாலும், பின்னாடி பெருசா பண்ணுவான்னு பொறுத்துண்டேன்.

ஒரு அரைமணிநேரம் தட்டுத்தடுமாறுன டைரக்டர் தம்பி, அப்புறமா ஓரளவு வீறுகொண்டு எழுந்துட்டா.

படத்துல கவர்ன்மெண்ட்டு, ‘பேக் இருக்கிறவா..இல்லாதவா’ன்னு பாகுபாடு பார்க்காமல் எல்லா லேடீஸ்க்கும் இலவச அழகு சாதன பேக் கொடுக்கிறா. அதுல ஒரு பேக்ல வில்லன் அபிஷ்டு‘பாம்’ வைக்க ப்ளான் செஞ்சுடறான்.
ஹீரோ, ஹீரோயினோட ஹார்ட்டையும் ப்ரேக் பண்ணிட்டதால, அவா லவ்வும் ப்ரேக் அப் ஆயிடுது. அதனால ‘தூக்கிப்போட்ட காண்டத்தை தவிர, எனக்குச் சொந்தமான மீதி சாமானை தூக்கிண்டு வாடா’ன்னு ஹீரோயின் சொல்லிடறா. ஹீரோ அதே இலவச பேக்ல அதை அள்ளிப் போட்டுண்டு போறான்.

கள்ளநோட்டு மாத்துற ஒரு அம்பி, ஒரு கோடி ரூபாய் நோட்ட, அதே மாதிரி பேக்ல வச்சுண்டு சுத்திண்டு வர்றான்.

ஒரு ஆண்ட்டியை விட்டுட்டு, அவா குழந்தையை தூக்குன ஒரு பாவி, ஒரு கோடி ரூபா கேட்டு மிரட்டுண்டு இருக்கான். அந்த பணமும் அதே மாதிரி பேக்ல போறது. இந்த நாலு பேக்கும் மாறிப் போயிடறது.

வெஜ்ஜா செய்ய வேண்டிய கதையை, வச்சு செஞ்சிருக்கா. ஒரு சாதாரண காமெடிப் படத்துல கொஞ்சம் ‘பாம்பு..கடவுளே..வாட்சப் ஜோக்’ன்னு நிரப்பி, இதான் ரொமாண்டிக் காமெடின்னு சொல்றா. என் தம்பி மாதிரி ரொம்ப எதிர்பார்க்காமல் உட்கார்ந்தேள்னா, ஒரு நல்ல பஜனை செஞ்ச திருப்தி கிடைக்கும்.

படத்துல பஜனைப் பாட்டு எல்லாம் நல்லா போட்டிருக்கா. ஆயா சோத்துல, ஹரஹரன்னு பாட்டு எல்லாம் தேவாமிர்தம்!

டைரக்டர் தம்பிக்கு ஸ்வாமிஜியோட அட்வைஸ் என்னன்னா........................

எனக்குத் தெரிஞ்ச ஸ்வாமி, அதிகாலைல பத்துக்குப் பத்து ரூம்ல மாமியோட பஜனைக்கு ரெடி ஆனார். மாமியும் பழம், தட்டு, பூவோட பூஜைக்கு ரெடி ஆனா. ஸ்வாமி, பழத்தை உருட்டுறார், தட்டை உருட்டுறார். ஆனாலும் அவரால மணியை மட்டும் அடிக்கவே முடியல; வயசாயிடுச்சு, இல்லியா! மாமியும் ஸ்வாமிக்கு கை கொடுத்துப் பார்க்கிறா. வாய்ப்பாட்டு பாடியும் பிரயோஜனம் இல்லேன்னா பார்த்துக்கோங்க. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, பொங்கி எழுந்த மாமி சொன்னா : ’உம்ம மணியை விட்டுட்டு, என் மண்டையை சொறிஞ்சுவிடும்; இதுக்கு அதுவே நல்லா இருக்கும்’னு!

டைரக்டர் தம்பியும் டபுள் மீனிங்கை ஊறுகாய் போல தடவினதுக்குப் பதிலா, சுத்தமான வெஜ் காமெடி படத்தையே கொடுத்திருந்தால், அதுவே நல்லா இருந்திருக்கும்.

ஹரஹர மகாதேவகி!
மேலும் வாசிக்க... "ஹரஹர மகாதேவகி - விமர்சனம் (18 +)"

Monday, October 23, 2017

அர்ஜூன் ரெட்டியும்....கொஞ்சம் ’சேது’ பாலாவும்!

சினிமாவில் எப்போதும் ஜெயிக்கிற சில கதைகள் உண்டு; டபுள் ஆக்ட்டிங், பழி வாங்குதல் போல, தேவதாஸ் கதைக்கு அழிவே கிடையாது. ஒரு உன்னதமான காதல், அதன் தோல்வியால் விரக்தியில் வாடும் ஹீரோ, இறுதியில் இணையும் அல்லது சாகும் ஜோடி என்பதை வைத்து பலவிதங்களில் தேவதாஸ் கதை நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

தேவதாஸ், வசந்த மாளிகை, வாழ்வே மாயம் எல்லாம் இன்றும் பேசப்படும் கதைகள். சேதுவின் கதையும் அடிப்படையில் தேவதாஸ் கதை தான். தமிழ் சினிமாவையே உலுக்கிய சேது வெளியாகி பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு, தெலுங்கில் அர்ஜுன் ரெட்டியாக தேவதாஸ் கதை மீண்டும் ஜெயித்திருக்கிறது.


பாசம், காதல், கோபம் என எல்லா உணர்ச்சிகளையும் அதிரடியாக வெளிப்படுத்தும் ’சேது’ கேட்டகிரி ஆள், அர்ஜுன் ரெட்டி. ஆர்த்தோ சர்ஜியனாகவும் குடிகாரனாகவும் பெண்களுடன் சல்லாபிப்பவனாகவும் அறிமுகமாகிறார் ஹீரோ. ‘என்னடா, இப்படிப்பட்ட ஆளாக இருக்கிறானே’ என்று நாம் அதிர்ச்சியாகும்போது, ஃப்ளாஷ்பேக்கில் ஒரு அழகான காதல் கதை மலர்கிறது. இத்தகைய படங்களின் கமர்சியலுக்கு வெற்றிக்கு அடிப்படையே, இந்த காதல் அழுத்தமாகச் சொல்லப்படுவது தான். இதில் சொதப்பினால், பின்னால் வரும் எமோசனல் சீன்ஸ் எதுவுமே எடுபடாது.

அதை அர்ஜூன் ரெட்டியில் சரியாகச் செய்திருக்கிறார்கள். ஆனாலும் இது ‘அன்பே...ப்ராணநாதா’வகை புனிதக் காதல் அல்ல என்பது தான் விஷேசம். ஐயாயிரத்திற்கு மேற்பட்ட முத்தங்களுடனும் 549 கலவிகளுடன் இந்த காதல் சொல்லப்படுகிறது. ‘எனக்கு அவளைப் பார்த்தால் தப்பாவே தோணினது இல்லை மச்சி’ என்பது போன்ற டுபாக்கூர் போலித்தனங்களை விட்டுவிட்டு, இறங்கி அடித்திருக்கிறார்கள்.

இந்த காதல் பிரிவில் முடிவதும், தேவதாஸாக அர்ஜூன் ரெட்டி வாழ்வதையும் டீடெய்லாக பதிவு செய்கிறது படம். ஒரு முழு வாழ்க்கையைப் பார்த்த ஃபீலிங்கை கொண்டுவந்துவிடுகிறார்கள்.

கழிவிரக்கம் என்பது இருப்பதிலேயே மோசமான விஷயம். தனக்கு மட்டும் தான் கெட்டது நடப்பதாகவும், தான் மட்டுமே கைவிடப்பட்டதாகவும் நினைத்து நினைத்து, தன்னையே உருக்கி மாய்த்துவிடும் விஷயம், கழிவிரக்கம். மற்ற தோல்விகளைவிட, காதல் தோல்வி தான் எளிதாக கழிவிரக்கத்திற்கு இட்டுச் செல்லும். ‘இது மற்றவர்களுக்கும் நடந்த ஒரு விஷயம் தான். இதை கடந்து செல்வோம்’ என்று இல்லாமல், அந்த புள்ளியிலேயே வாழ்க்கையை உறைய வைத்துவிடும் கழிவிரக்கம்.

கழிவிரக்கம் சுகமானது என்பதாலேயே எளிதில் அதிலிருந்து வெளியேறவும் முடியாது. குடும்பம், நண்பர்களின் விஷேச கவனம் கிடைப்பதும் தொடர்ந்து இந்த சகதியிலேயே உருள முக்கியக் காரணம். இதை நாம் எல்லோருமே உள்ளுக்குள் விரும்புவதாலேயே, ‘யாருக்காக....வாழ்வே மாயம்’ போன்ற சோகப் பாடல்களும் படங்களும் ஹிட் அடிக்கின்றன. அர்ஜூன் ரெட்டியும் விதிவிலக்கல்ல.

ஆனால் கழிவிரக்கம் முழுக்க சுயநலமான விஷயம். தன்னைத் தவிர வேறு எதைப் பற்றியும் மனதை யோசிக்கவிடாத அயோக்கியத்தனம். உலகத்தில் தான் மட்டுமே கஷ்டப்படுவதாக நினைத்து, சுற்றியிருக்கும் உலகைப் பார்க்க மறுக்கும் மூடத்தனம்.

அர்ஜூன் ரெட்டி எங்கே காவியம் ஆகிறதென்றால், கிளைமாக்ஸில் ஹீரோயின் வந்து நிற்கும்போது! ஹீரோவின் கஷ்டங்களே பெரிய விஷயம் என்று நாம் உச்சு கொட்டிக்கொண்டிருக்கும்போது, அதைவிட மோசமான காலகட்டத்தை அவள் தாண்டி வந்து அவனை பளார் என்று அடிக்கும் இடத்தில், படம் வேறு லெவலுக்குப் போய்விடுகிறது.

சில போராளிகள், கிளைமாக்ஸ் ஒரு பழமைவாதம் என்று பொங்கியிருந்தார்கள். ஆனால் இயக்குநர் சொல்ல விரும்பியது, நான் மேலே விளக்கியிருப்பதைத் தான். படத்தின் மையமே, அந்த ஆணின் கன்னத்தில் விழும் அடி தான். நீண்ட நேரம், ஹீரோயின் என்னென்ன கஷ்டங்களை எல்லாம் சந்தித்திருக்கக்கூடும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்...

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.

தமிழில் படம் ரீமேக் ஆகிறது. விக்ரம் மகன் துருவ் நடிக்க, பாலா இயக்குகிறார்!

பாலா, ஒரு வீணாக்கப்பட்ட பொக்கிஷம். என்னைப் பொறுத்தவரை, அவர் எடுத்த ஒரே ஒரு நல்ல ‘சினிமா’ சேது தான். சசிக்குமாருக்கு சுப்ரமணியபுரம் போல், பாலாவிற்கு சேது. நந்தாவில் அகதிகள் பிரச்சினையை பாலா தொட, ‘பாலா என்றால் விளிம்புநிலை மனிதர்களைத் தான் படமெடுப்பார்’ என்று அறிவுஜீவிகள் ஏற்றிவிட, பாலாவும் வெறியேறி நம்மை கடித்துக் குதறியது வரலாறு. இதைச் சொல்வதற்காக பல நண்பர்களின் எதிர்ப்பை பலமுறை சந்தித்திருக்கிறேன். ஆனாலும் நமக்குத் தேவை ‘சேது’ பாலா தானே ஒழிய தாரை தப்பட்டை பாலா அல்ல.

அர்ஜூன் ரெட்டியை ரீமேக் செய்ய, ’சேது’பாலாவை விட வேறு நல்ல இயக்குநர் கிடையாது. அர்ஜூன் ரெட்டியின் பல காட்சிகளில் சேது ஞாபகம் வந்தது உண்மை.

பாலா மீண்டும் தன்னைக் கண்டடையவும், நமக்கு ‘சேது’ பாலா திரும்பக் கிடைக்கவும் இதுவொரு நல்ல வாய்ப்பு. ‘சேது’ பாலாவின் ரசிகனாக, அதை எதிர்நோக்கி இருக்கிறேன்!
மேலும் வாசிக்க... "அர்ஜூன் ரெட்டியும்....கொஞ்சம் ’சேது’ பாலாவும்!"

Friday, October 20, 2017

மெர்சல் - ஆக்கினார்களா?



’உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்’ என்று முன்பெல்லாம் டைட்டில் போடுவார்கள். நிறைய நட்சத்திரங்கள் நடிக்கும்போது, இப்படிப் போடுவது வழக்கம். அட்லி படங்களைப் பொறுத்தவரை ‘உங்கள் அபிமான திரைப்படங்கள் பங்குபெறும்’ என்று தாராளமாக டைட்டில் போடலாம். 

சிவாஜியில் ஆரம்பித்து, தலைவாவிற்குப் போய், மூன்றுமுகத்தை மிக்ஸ் செய்து, கத்தியைத் தொட்டு, பழைய எம்ஜிஆர் படங்களையெல்லாம் ஞாபகப்படுத்தி, ரமணா, டங்கல், பாகுபலியைக் கூட விடாமல் டச் செய்து, அபூர்வ சகோதரர்களின் கதையைச் சொல்லியிருக்கிறார் அட்லி. கொஞ்சம்கூட புதிதாக எதையும் செய்துவிடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்திருக்கிறார்கள். 

முதலில் ஒரு சமூக அக்கறையுள்ள மெசேஜை கொடுத்ததற்காக விஜய் & அட்லியை பாராட்டியே ஆகவேண்டும். விஜய் மாதிரி பெரிய ஹீரோக்கள் சில விஷயங்களைப் பேசும்போது, அதனுடைய ரீச் அதிகம். டிமானிடைசேசன், ஜிஎஸ்டி, மனிதம் இழந்துவிட்ட மருத்துவத்துறை என்று பொளந்துகட்டுகிறார்கள். 

கேட்டுச் சலித்த ஒரு பழிவாங்கும் கதை. அப்பாவை வில்லன்கள் கொன்றுவிட, பிள்ளைகள் வளர்ந்து ஃபாரின் போயாவது பழிவாங்கி முடிக்கிறார்கள். 

மூன்று வேடங்களில் ஹீரோ என்றால், மூன்று ஹீரோயின்கள் இருந்தே ஆக வேண்டுமா? அப்படியே இருந்தாலும், மூன்று பேருக்கும் லவ் சீன்ஸும் டூயட்டும் வைத்தே தீர வேண்டுமா? காஜல் அகர்வால் வர்றதே நாலு சீன்..எப்படியும் மூணு-நாலு கோடி சம்பளம் கொடுத்திருப்பார்கள். ராம.நாரயாணன் ஆவி இந்நேரம் தற்கொலை செய்துகொண்டிருக்கும்.

இன்னொரு பக்கம், பரிதாபமாக ஏ.ஆர்.ரகுமான். படம் ஒரு ரேஞ்சில் போய்க்கொண்டிருக்க, பாட்டு & பிண்ணனி இசையில் டப்பாவை உருட்டலாமா, வேண்டாமா என குழப்பத்திலேயே மியூசிக் என எதையோ செய்துவைத்திருக்கிறார். நமக்கு எதுக்கு பாய் விஜய் படமெல்லாம்? ஆளப் போறான் பாட்டே விஷுவல்ஸால் தான் தப்பிக்கிறது. மற்ற பாட்டெல்லாம் கொடூரம்.

மூன்று பேர் சேர்ந்து திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். அதற்காக இம்புட்டு நீளமா? ஏத்துன டிக்கெட் விலைக்கும் சேர்த்து, எக்ஸ்ட்ராவா படம் காட்டுற உங்க நல்ல மனசுக்கு தேங்க்ஸ்..ஆனாலும் வேணாம், முடியல. 

நமக்கு வருத்தமே, துப்பாக்கி மாதிரி சூப்பர் ஹிட் ஆகியிருக்க வேண்டிய படம் இது. வெற்றி-மாறன் - வெற்றிமாறன் என மூன்று ரசிக்க வைக்கிற கேரக்டர்ஸ், தளபதி எபிசோடு, காளி வெங்கட் ஃப்ளாஷ்பேக், ரசிகர்களை விலடிக்க வைக்கும் பல காட்சிகள்/வசனங்கள் என பல நல்ல விஷயங்களை வைத்துவிட்டு, வழவழா, கொழகொழாவென்று இழுத்து இழுத்து கதை சொல்கிறார்கள். கொடுமையாக, கிளைமாக்ஸுக்குப் பிறகும் படம் ஓடுகிறது. கொஞ்சம் கத்தரி போட்டிருந்தால், கில்லி-போக்கிரி வரிசையில் மெர்சலும் சேர்ந்திருக்கும்.

அதற்காக, பைரவா கேட்டகிரியும் இல்லை; அதற்கும் மேலே தான்.

‘நான் பெரிய ஸ்டார்..நான் சும்மா வந்து குறுக்க மறுக்க நடந்தாலே போதும்’ என்று நினைக்காமல், மூன்று வேடங்களுக்காக விஜய் கொட்டியிருக்கும் உழைப்பை பாராட்டியே ஆகவேண்டும். குறும்பான வெற்றியும், சற்று இறுக்கமான மாறனுமாக அவர் காட்டியிருக்கும் நுணுக்கமான நடிப்பு, முந்தைய படங்களில் இல்லாதது. ஃப்ளாஷ்பேக்கில் மாறன் வரும்போது, தியேட்டர் தெறிக்கிறது. நித்யா மேனன் சாகும் காட்சியில், விஜய்யின் நடிப்பு அட்டகாசம். ஏ சூப்பர்ப்பா, நீ இப்படில்லாம் நடிச்சு பார்த்ததில்லைப்பா! 

விஜய்யின் வசனங்களிலும் அனல் பறக்கிறது. ஒரு நல்ல மெசேஜை விஜய் மாதிரி பெரிய ஹீரோக்கள் பேசும்போது கிடைக்கும் ரீச் அதிகம். விவசாயம், கல்வி, மருத்துவம் என தொடர்ந்து தன் படங்களில் சமூகப் பிரச்சினைகளை விஜய் கதைப்பொருளாக எடுத்துக்கொள்வதை பாராட்டியே ஆகவேண்டும்.

மூன்று ஹீரோயின்களில் நித்யா மேனனுக்கு நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். அவ்வளவு பெரிய ஸ்க்ரீனில் அவ்வளவு பெரிய நித்தியைப் பார்க்க கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஜோதிகா நடித்திருக்க வேண்டிய கேரக்டர். கடைசி நேரத்தில் அவர் காலைவாரிவிட, நித்தியை வைத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள். சமந்தாவின் ‘ரோஸ் மில்க் வாங்கித் தர்றேண்டா’ சீன்களும், அந்த டயலாக் டெலிவரியும் செம ரகளை. மற்ற சீன்களில் காஜல் மாதிரியே இவரும் வேஸ்ட்!

’சுடலை’ சூர்யாவிற்கு இதெல்லாம் சப்பை கேரக்டர். ‘இன்னும் முப்பது வருசத்தில் நார்மல் டெலிவரின்னா ஆச்சரியப்படுவாங்க’ என்று சொல்லும் இடத்தில் மட்டும் ஸ்கோர் செய்கிறார்.

கோவை சரளா, சத்யராஜ், வடிவேலு எல்லாம் இருக்கிறார்கள். இப்போதே ஏறக்குறைய மூணு மணிநேரம். இவர்களையும் ஒழுங்காக பயன்படுத்தியிருந்தால், விடிந்திரிக்கும். ஆனாலும், டிமானிடைசேசன் பற்றி வடிவேலு பேசும் டயலாக்கிற்கு தியேட்டரே அதிர்ந்தது. ‘வீ ஆர் ஃப்ரம் இண்டியா...ஒன்லி டிஜிட்டல் மணி..நோ கேஷ்..ஆல் பீப்பிள் ஸ்டேண்டிங் க்யூ..உங்கிட்ட சொல்றதுக்கு என்ன, எல்லாம் நக்கிட்டுத் திரியறோம்’ என சைகையுடன் வடிவேலு பேசும்போது கிடைக்கும் கைதட்டல்கள், மக்கள் எவ்வளவு கடுப்பில் இருக்கிறார்கள் என்று காட்டுகின்றன.

மொத்தத்தில், இழுவையான சில சீன்களையும் தேவையற்ற சில சீன்களையும் பொறுத்துக்கொண்டால்...................

குடும்பத்துடன் பார்த்துக் கொண்டாடக்கூடிய படம் தான், மெர்சல்.
மேலும் வாசிக்க... "மெர்சல் - ஆக்கினார்களா?"

Saturday, September 16, 2017

துப்பறிவாளன் - திரை விமர்சனம்

முகமூடிக்குப் பிறகு மீண்டும் ஒரு கமர்சியல் ஹீரோவுடன் கமர்சியல் படம் என்று மிஷ்கின் அறிவித்தபோது, கொஞ்சம் பயமாகவே இருந்தது. இருந்தாலும், முகமூடி சொதப்பிவிட்டதை மிஷ்கினே ஒத்துக்கொண்டதால், பழைய தவறுகளைக் களைந்து தரமான கமர்சியல் படமாக வரும் என்று எதிர்பார்த்தேன். எதிர்பார்ப்பை நிறைவேற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தை கணியன் பூங்குன்றனாக தமிழ்ப்படுத்துவதில் ஆரம்பிக்கிறது மிஷ்கின் டச். துப்பறிவாளன் கேரக்டருக்கு இது முதல் படம்(பார்ட்) என்பதால், கணியன் யார், எப்படிப்பட்டவன் என்று நமக்கு புரியவைக்க கொஞ்சம் அதிக நேரத்தையே படம் எடுத்துக்கொள்கிறது. ஆனாலும் கணியனின் புத்திசாலித்தனத்தையும், கிறுக்குத்தனத்தையும் நாம் புரிந்துகொண்டால் தான், இரண்டாம்பகுதி பரபரப்ப்பில் கணியன் செய்யும் சிறு நகாசு வேலைகளைக்கூட நாம் புரிந்து ரசிக்க முடியும். உதாரணம், ஹோட்டல் ரிசப்சனில் மொட்டை மறைந்ததும் ஜான் விஜய்க்கு ஆபத்து என்று ஓடுவது.

பெரிய பெரிய கேஸ்களை எல்லாம் வேண்டாம் என்று சொல்லும் ஹீரோ, ஒரு சிறுவனின் நாய்க்குட்டி கேஸை எடுத்துக்கொண்டு துப்பறிவது தான் கதை. மிக எளிமையான கேஸ் என்று தோன்றுவது, தேன் கூட்டில் கைவைத்தது போல் பல சிக்கல்களுக்குள் ஹீரோவையும் நம்மையும் கொண்டு செல்கிறது. முதல் ஃபைட் சீனில் ஆரம்பித்து, கிளைமாக்ஸ்வரை ரோலர் கோஸ்டர் பயணம் தான்.

டெவில் குரூப்பின் வேலைகளை ஹீரோ துப்பறிந்து நெருங்க, நெருங்க, டெவில் குரூப் தன்னைத்தானே ஓவ்வொருவராக அழித்துக்கொள்வது தமிழுக்கு புதுமை தான். ஹீரோவோ போலீஸோ வில்லன் குரூப்பை கொல்வதில்லை. அவர்களே தங்களை கொன்றுகொல்கிறார்கள்; மெயின் வில்லன் டெவில் மட்டுமே எஞ்சி ஹீரோ கையால் சாகிறான்.

கமர்சியல் ஆடியன்ஸுக்காக இதில் மிஷ்கின் நிறைய இறங்கி வந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பாக்கியராஜ் நெஞ்சில் குத்தப்படும்போது, நெஞ்சுவலி என்று பாக்கியராஜ் ‘நடித்த’ ஷாட் வந்து போவது ஒரு உதாரணம். இந்த மாதிரி ஸ்பூன் ஃபீடிங் வேலைகள், மிஷ்கின் ரசிகர்களுக்குத் தேவையில்லை. கால்களை காட்டும் ஷாட் இல்லாதது எனக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. எங்குபோனாலும் அறிவுஜீவிகள் கால்களைப் பற்றியே கேட்டு, மிஷ்கினை வெறுப்பேற்றிவிட்டார்கள் போல. ஒருவர் சினிமாவில், தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. மணிரத்னம் என்றால் இருட்டு, ரஜினி என்றால் தலை கோதுதல் என்று கஷ்டப்பட்டு ஒரு அடையாளத்தை பிடித்து வைத்தால், அறிவுஜீவிகளுக்கு அது பொறுப்பதில்லை. ‘ஏன் இருட்டுலயே படம் எடுக்கிறார்?...ஏன் கமல் மாதிரி நடிக்க மாட்டேங்கிறார்...ஏன் காலையே காட்டுகிறார்’ என்று கிளம்பி வந்துவிடுகிறார்கள். இதற்கு மிஷ்கின் இறங்கிப்போவது சரியல்ல.


விஷாலுக்கு இதுவொரு முக்கியமான படம். ஆரம்பக் காட்சிகளில் கணியன் பூங்குன்றனாக மிஷ்கின் சேட்டைகளுடன் வெடுக்,வெடுக்கென அவர் நடப்பதும் பேசுவதும் பீதியூட்டினாலும், கொஞ்சநேரத்தில் அந்த கேரக்டர் நம் மனதில் உட்கார்ந்துவிடுகிறது. இரண்டாம்பாதியில் வரும் ஆக்சன் சீகுவென்ஸ், விஷாலுக்கு சரியான வேட்டை என்று தான் சொல்ல வேண்டும். மவுத் ஆர்கன் ஃபைட்டும் சைனீஸ் ரெஸ்டாரண்ட் ஃபைட்டும், பைக் சேஸிங்கும் விஷால் இறங்கி அடிக்கும் களங்கள்.


ஒருமுறை ஜாக்கிசான் ஃபைட் சீன்ஸ் பற்றிப் பேசும்போது ‘அதில் ஒரு ரிதம் இருக்கும். அதுவும் ஒருவகை நடனம் தான்’ என்று சொல்லியிருந்தார். அவரது சைனீஸ் படங்களில் அதை நாம் பார்க்கலாம். ஆனால் ஹாலிவுட் படங்களில் அந்த ரிதம் இருக்காது. துப்பறிவாளன் சண்டைக்காட்சிகளில் அந்த ரிதத்தை உணர முடிந்தது. சைனீஸ் ரெஸ்டாரண்ட் சண்டைக்காட்சியில், மியூசிக்கும் கருப்பு-சிவப்பு-வெள்ளை கலர் பேலட்டும் மயிர்க்கூச்செறியும் ஃபாஸ்ட் மூவ்மெண்ட்டும் நம்மை கிறங்கடிக்கின்றன. அதிலும் ஷூ-விற்கு க்ளோசப் வைத்து ஒரு சின்ன டிரம்ஸ் பீட் போட்டிருக்கிறார்கள்..கொன்னுட்டாங்க!

பிரசன்னா தான் நமக்கு காமிக் ரிலீஃப் கொடுப்பது. நிறைய காட்சிகளில் அவரது ‘ம்..ஆ’போன்ற ஒற்றை வார்த்தை ரியாக்சனுக்கே சிரிப்பலை எழுகிறது. பவர் பாண்டிக்கு அடுத்து இதிலும் ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக பிரசன்னா ஜெயித்திருப்பது சந்தோசம்.

ஹீரோயின் அனு இமானுவேல், நல்ல அறிமுகம். மருண்ட பார்வையுடன் விஷாலை அவர் எதிர்கொள்வதே அழகு. ‘கடைசிவரை’ பிக்பாக்கெட்டாக இருந்து, நம்மை கொள்ளை கொள்கிறார். மிஷ்கின், கால்களை கைவிட்டாலும் ஹீரோயினின் கைகளுக்கு இரு முக்கிய இடங்களில் க்ளோசப் வைக்கிறார். ஒன்று, ஹீரோ கைகளில் முத்தமிடும்போது...அடுத்து, வினய்யை ஹீரோயின் வீட்டுக்குள் அழைக்கும்போது. ஒரு நல்ல ஃபிலிம் மேக்கரின் வேலையே, இப்படி பார்வையாளர்களின் சப்-கான்ஸீயஸ் மைண்டுடன் விளையாடுவது தான். ராபர்ட் ப்ரெஸ்னனின் பிக்பாக்கெட் மூவியில், கைகளை மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். இதிலும் அதிகம் அப்படி எதிர்பார்த்தேன். இரு இடங்களில் மட்டும் வலுவாக ‘பிக்பாக்கெட்டின்’ கைகளை காட்டி முடித்துவிட்டார்.

ஹீரோயினை வேலைக்கு அழைக்கும் ஹீரோ, அவரது பிக்பாப்பெட் மூளையை துப்பறிவதற்கு பயன்படுத்திக்கொள்வார் என்று எதிர்பார்த்தால், வீட்டு வேலைக்காரி ஆக்கியது  கொடுமை.

மிஷ்கினை நாம் நேசிப்பதற்குக் காரணம், ஒவ்வொரு சீனையும் அழகாக்கவும் நேர்த்தியாக வடிவமைக்கவும் அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறை தான். ஹீரோவின் வீடு வடிவமைக்கப்பட்ட விதமும், அதன் க்ரீன் - ப்ரொவ்ன் கலர் பேலட்டும் ஒரு புதிய லுக்கை கொடுக்கின்றன. கதை சென்னையில் தான் நடக்கிறது. முடிந்தவரை பேக்ரவுண்டை ப்ளர் ஆக்கி, காட்சிகளை அழகாக்குகிறார். ஒரு சீனில் அவர் காஃபி போட வேண்டும். அது சாதாரண காஃபி அல்ல. மரணத்திற்கான தூது. அந்த இடத்தில் வெர்மீரின் கிச்சன் மெய்ட் (மில்க் மெய்ட்) பெயிண்டிங்கை பயன்படுத்துகிறார்.

சினிமா என்பது பல கலைகளின் சங்கமம் ஒரு நல்ல கலை ரசிகன் ஃபிலிம் மேக்கர் ஆகும்போது, உலகில் உள்ள கலைகளையும் சாத்திரங்களையும் தன் படைப்பினுள் கொண்டுவருகிறான். வான்கோவின் ஓவியங்களும் வெர்மீரும் ஓவியங்களும் பல காட்சிகளுக்கு இன்ஸ்பிரேசன் ஆகியிருக்கின்றன. அகிரா குரசோவாவின் ட்ரீம்ஸ் ஒரு நல்ல உதாரணம். ஒரு தமிழ் படத்தில் வெர்மீரின் ஓவியத்தையும், அதை பிரதிபலிக்கும் ஷாட்டையும் பார்த்தபோது மிக மகிழ்ச்சியாக இருந்தது. ( இதையும் ஒரு இணைய அறிவுஜீவி, காப்பி என்று கிண்டல் அடித்திருந்தார். தலையில் அடித்துக்கொண்டேன்! )

வினய்-ஆண்ட்ரியா-பாக்கியராஜ்-மொட்டை-தாடி-ஜான் விஜய் என்று வில்லன் கும்பலையும் அவர்களுக்குள் இருக்கும் பாசப்பிணைப்பையும் படம் அழகாக பதிவு செய்கிறது. மொட்டை தற்கொலை செய்யும் காட்சி கவிதை என்றால், பாக்கியராஜ் சாகும் காட்சி சோகம். வில்லன் என்றாலும் பாக்கியராஜுக்குள் ஒரு மனிதம் இருக்கும். தனக்கு நெஞ்சுவலி என்று பதறிய கார் டிரைவருக்கு பணம் கொடுப்பதும், அவன் சாகப்போவது தெரிந்து திரும்பிப் பார்த்தபடி போவதும், மனைவிக்கு விடுதலை கொடுப்பதும் டச்சிங்கான சீன்ஸ். பாக்கியராஜை பேசவிட்டால் சொதப்பிவிடும் என்று ஒரு வரி டயலாக்கிலேயே மேனேஜ் செய்திருப்பது மிஷ்கினின் புத்திசாலித்தனம்.

ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும்......................

ஆரம்ப காட்சிகள் நீளமாக, பொறுமையைச் சோதிக்கின்றன. ஹீரோயின் கேரக்டரைத் தவிர வேறு எந்த கேரக்டருமே நம் மனதைத் தொடுவதில்லை.

துப்பறிவாள் வில்லனைப் பிடிக்கிறார். அவர்கள் இதுவரை என்ன செய்தார்கள், இது முழுமையாக என்ன கேஸ் என்பது தான் ஆடியன்ஸுக்கு சுத்தமாக விளங்கவில்லை. எல்லாவற்றையும் வசனத்திலேயே சொல்ல, கமலேஷ் யார், ராம் ப்ரசாத் யார் என்று நாம் யோசிப்பதற்குள் படம் முடிந்துவிடுகிறது.

துப்பறிவாளன் என்ன கண்டுபிடித்தார் என்று கேட்டால் ‘கமலேஷ் காசு கொடுத்தான். சொர்ணவேல் பையன் செத்தான். சிம்ரனை விட சொர்ணவேல் பொண்டாட்டி அழகு. அது தெரிஞ்ச சிம்ரன் புருசனும் செத்தான். சொர்ணவேல் ஃபீல் ஆகிட்டான். அவனை டெவில் கொன்னுட்டான். டெவில் யார்னா, டெவில் டெவில் தான். நாயை டெவில் போட்டான். அப்புறம், ஆரணி ஜான் விஜய்யை கொன்னுட்டாள். ஜான் விஜய் சோஃபா கொண்டுவந்தவன். ஆனால் அதுக்குள்ள இருந்த பணம், ராம் பிரசாத் கொடுத்தது. ராம் பிரசாத் சிரிச்சு செத்தார். பாக்கியராஜ் தவண்டு செத்தார். டெவில் காஃபி குடிச்சான். டர்ர்னு சொர்ணவேலை அறுத்துக் கரைச்சான். விக்டர் ஹெல்ப் பண்ணான். ஆரணியை டெவில் போட்டான். பிச்சாவரம் போய்
ஃபாரின் போக பார்த்தான். பாவம், சாரி கேட்டு செத்தான் டெவில்’. இது தான் நடந்தது. புரிஞ்சதா?

படம் முழு திருப்தி தராமல் போகக் காரணமே, என்ன எழவு நடந்தது என்றே புரியாமல் போனது தான். இதை மட்டும் இன்னும் தெளிவாகச் சொல்லியிருந்தால், துப்பறிவாளன் எல்லா செண்டரிலும் ஹிட் ஆகியிருக்கும்.

இருப்பினும், ஒரு விறுவிறுப்பான & தரமான ஆக்சன் படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு துப்பறிவாளன் செமயான விருந்து தான்...தாராளமாகப் பார்க்கலாம்.
மேலும் வாசிக்க... "துப்பறிவாளன் - திரை விமர்சனம்"

Friday, September 1, 2017

விவேகம் - பாவம் அஜித்!

'நான் கெட்டவன் இல்லை..கேடுகெட்டவன்’ன்னு சிவா டயலாக் எழுதி, அதை அஜித் ரசிகர்கள் கொண்டாடியபோதே நினைச்சேன், இன்னும் பெருசா அந்தாளு செய்வார்னு! ...செஞ்சுட்டார்!


அஜித்தின் தொப்பையை பலரும் கேலி செய்திருக்கிறார்கள். சில பேட்டிகளில் நேரடியாகவே கேட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் உடம்பைக் குறைக்காத அஜித், இந்த படத்திற்காக குறைத்திருக்கிறார். காரணம், உண்மையிலேயே சிவாவையும் இந்த படத்தையும் நம்பியிருக்கிறார்...பாவம்!

வேகமான ஒரு கமர்சியல் படம் கொடுக்க வேண்டும், அதில் அஜித்தை ஹாலிவுட் ஹீரோ மாதிரிக் காட்ட வேண்டும் எனும் ஆர்வம் எல்லாம் ஓகே தான். ஹாலிவுட் படம் தயாரிப்பதற்கான ஆர்ட், கேமிரா, எடிட்டிங் ஒர்க் எல்லாம் செய்துவிட்டு, கதை-திரைக்கதை-வசனத்தை தெலுங்கு மசாலா ரேஞ்சுக்கு யோசித்தது நியாயமா? 

பொதுவாக ஒரு ஷாட் மனதில் நிற்க நாலு செகண்ட் வேண்டும் என்பது நடைமுறை. இதை ஹாலிவுட்டில் உடைத்து, ஒரு செகண்டிற்கும் கீழே ஷாட்ஸ் வைத்து வெற்றிபெற்றது Bourne Identity. அதில் இருந்து ஆக்சன் படங்கள் என்றாலே கேமிராவை ஆட்டணும், ஷாட் லென் த்தை குறைக்கணும் என்று ஆனது. அதை விவேகத்தில் சின்சியராகவே முயற்சித்திக்கிறார்கள். 

சண்டைக்காட்சிகளில் மட்டும் அதைச் செய்திருந்தால் பரவாயில்லை. வசனக்காட்சிகளில்கூட கேமிராவை அங்கும் இங்கும் அலைபாய்ந்ததில், எதுவுமே மனதில் நிற்காமல் எரிச்சல் வந்தது தான் மிச்சம். படத்தின் பெரிய மைனஸ், இந்த கணக்கீடு இல்லாத ஷாட் காம்போசிசன் தான். சுடுகிற குண்டு எங்கே போகிறது, எங்கிருந்து அடியாள் வருகிறான் என்று எதையுமே புரிந்துகொள்ளாத அளவில் தான் சண்டைக்காட்சிகளும் இருக்கின்றன. அஜித்தே பல வருடம் கழித்து, காலை தூக்கி எல்லாம் அடித்திருக்கிறார்; அந்த உழைப்பை நீங்ககூட மதிக்கலேன்னே எப்படி ப்ரோ?

இன்னொரு பெரும் கொடுமை, வசனங்கள். இவ்வளவு கடுப்பேற்றும் வசனங்களை ஒரே படத்தில் நான் கேட்டதேயில்லை. புருசன் பொண்டாட்டி பேசும்போதுகூடவா பஞ்ச் டயலாக் வைக்கிறது. ஒன்று கேமிராவில் மூஞ்சியை வைத்துப் பேசும் பஞ்ச் டயலாக் அல்லது ஹீரோவை வில்லனே புகழும் பில்டப் டயலாக்ஸ். எதுவுமே ஒரு அளவுக்குள் தான் இருக்க வேண்டும். இது டூ மச்..முடியல.

அந்த ‘கோட்டைசாமி’ சீன் எல்லாம் எப்படித்தான் யோசித்தார்களோ...ஏனய்யா, டேமை பார்த்தவுடனே லிங்கா ஞாபகம் வரவேண்டாமா? அலெக்ஸ்பாண்டியனில் ஓப்பனிங் சீனில் கார்த்தி குதித்தபோதும், குருவியில் விஜய் வைரத்தை திருடி குதித்தபோதும், லிங்காவில் பைக் டூ பலூனில் தலைவர் குதித்தபோதும் என்ன ஆச்சுன்னு சிவாவுக்கு உண்மையிலேயே தெரியாதா? ஒரே ஒரு அஜித் ரசிகரைக் கூப்பிட்டு டேம் சீனை சொல்லியிருந்தால்கூட, சிவா காலில் விழுந்தாவது நிறுத்தியிருக்க மாட்டாரா? 

இது எல்லாத்தையும்கூட பொறுத்துப்பேன்..ஆனால் கிளைமாக்ஸ் ஃபைட்டில் ஹீரோயினை பாட விட்டீங்களே..அந்த கொடுமையை மட்டும் மன்னிக்கவே மாட்டேன். ஹாலுவுட் தரம்னு சொல்லித்தானே கால்ஷீட் வாங்கிட்டு, பரவை முனியம்மா ரேஞ்சுக்கு பாட விட்றுக்கீங்களே...பாட்டாவது நல்லா இருந்தால் தப்பிச்சிருக்கலாம். தியேட்டரிலேயே சிரிக்கிறாங்க.

மேலே சொன்ன 5 பத்திகளைத் தவிர, மத்தபடி படம் நல்லா இருக்கு...நல்லாத் தானே இருக்கு.ஆமா, ஆமா!

அஜித்துக்கு இரண்டே வேண்டுகோள்கள் தான் :

1. நீங்க ஜனா, ஆழ்வார், பில்லா-2 எடுத்தால்கூட ரசிகர்கள் தியேட்டருக்கு வந்திடுவாங்க. அதனால் வெறுமனே ரசிகர்களுக்காக படம் எடுக்காமல், எங்களையும் கொஞ்சம் மனசுல வைங்க. அப்புறம் அந்த சிவா தம்பிகிட்டே ‘ஏம்ப்பா, என் ரசிகர்களுக்காக படம் எடுத்தியா? இல்லே, விஜய் ரசிகர்களுக்காக இந்த படத்தை எடுத்தியா?’ன்னு மறக்காமல் கேட்டிடுங்க.

2. உங்களை பலரும் மதிக்கக்காரணமே, சொந்தக் காலில் நின்று முன்னேறி மேலே வந்தவர் என்பது தான். அப்படிப்பட்ட நீங்கள் என்ன செய்யவேண்டும் என்றால், உங்களை மாதிரியே பெரிய பின்புலம் இல்லாமல் முன்னேறப் போராடும் இயக்குநர்களுக்குத் தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அது தான் நியாயமாக இருக்கும். இந்த விஷ்ணுவர்த்தன், சிவா மாதிரி பணக்கார வீட்டு செல்லப்பிள்ளைகளை வளர்த்துவிட்டது போதும். கொஞ்சம் குனிந்து கோடம்பாக்கத்தைப் பாருங்கள். வியர்க்க, விறுக்க எத்தனையோ பேர் உங்களுக்காக நல்ல கதையுடன் அலைந்துகொண்டிருக்கிறார்கள்! 

உங்க செல்லப்பிள்ளைகள் உங்களை வச்சுச் செய்றாங்கன்னு இன்னுமா உங்களுக்குப் புரியல?
மேலும் வாசிக்க... "விவேகம் - பாவம் அஜித்!"

Tuesday, August 1, 2017

வேலாயுதம் - திரை விமர்சனம் அல்ல சாமியோவ்...

லகத் தரத்தில் ஒரு தமிழ் சினிமா கொடுப்பேன், தொழில்நுட்பரீதியாக தமிழ்சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்துவேன், நடிப்பில் புதிய பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வேன் - என்றெல்லாம் விஜய் எப்போதாவது எங்காவது சொல்லியிருக்கிறாரா?

தீபாவளிக்காக 4 நாள் லீவில் போய்விட்டு வந்தால், வேலாயுதத்தை வைத்து  நடந்திருக்கும் ரணகளத்தைப் பார்க்கவும் அப்படி ஒரு சந்தேகமே வந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் படம் வந்தாலும் சரி, அஜித் - விஜய் படங்கள் வந்தாலும் சரி, இப்படி ஒரு ஆரவாரம் எழும்புவது வழக்கமாப் போய்விட்டது.
என்னைப் பொறுத்தவரை சுப்பிரமணியபுரம், ஆரண்ய காண்டம், எங்கேயும் எப்போதும் போன்ற படங்களுக்கான அளவிகோல் வேறு, இந்த மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கான அளவுகோல் வேறு. இரண்டரை மணி நேரம் ஜாலியாக பொழுதுபோக வேண்டும், காதில் சுற்றப்படும் பூவின் அளவு முடிந்தவரை கம்மியாக இருக்க வேண்டும், அவ்வளவு தான்.

பலரும் ரஜினி-அஜித்-விஜய் படங்களுக்கு முன்முடிவுகளுடன் விமர்சனம் எழுதுவது போன்றே தெரிகின்றது. நல்லவேளையாக 4 நால் லீவில் வேலாயுதம்-ஏழாம் அறிவு இரண்டையும் இணையப் பாதிப்பு இல்லாமல் பார்த்து விட்டேன். (சில நண்பர்கள் நேர்மையாக விமர்சனம் எழுதி உள்ளதும் தெரிகிறது..)

வேலாயுதம் படத்தின் கதை என்ன, நடிகர்கள்/டெக்னிசியன்கள் யார் என்பது பற்றி இந்நேரம் உங்களுக்கு மனப்பாடமே ஆகியிருக்கும். எனவே அதை விடுத்து..

இயக்குநர் ’ரீமேக்’ ராஜா என்ற ஜெயம் ராஜாவின் ஸ்பெஷாலிட்டியே தமிழ் ரசனைக்கு ஏற்றாற்போல், படத்தை மாற்றிவிடுவது தான். இதிலும் அதையே செய்திருக்கிறார். அதுவும் முதல் பாதி காமெடிக் கலக்கல். இந்தப் படத்தைப் பார்த்து ஒரு காட்சியில்கூட நீங்கள் சிரிக்கவில்லையென்றால், உங்களுக்கு பி.வி.நரசிம்மராவ் விருது கொடுக்கலாம். 

பொதுவாக அண்ணன் தங்கை பாசம் என்றால் மனதைப் பிழியும் செண்டிமெண்ட் காட்சிகள் தான் இருக்கும். இதிலோ ஏறக்குறைய முக்கால்மணி நேரத்திற்கு ஜாலி லூட்டி தான். கில்லியில் தங்கையுடன் சண்டை போடுவதில் காமெடி செய்த விஜய், இதில் பாசத்தைப் பொழிவதில் காமெடி செய்கிறார். அதுவும் ட்ரெய்னில் பிச்சைக்காரனுக்கு சோறு போடும் காட்சியில் சிரித்துச் சிரித்து வயிறே வலித்து விட்டது.
இரண்டாம் பாதியில் தான் அண்ணன் சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கிறார். ஆனால் அதை முழுதாக ரசிக்க விடாமல் கடைசி வரை நம்மை பயத்திலேயே வைத்திருப்பது விஜய்யின் குருவி-சுறா போன்ற முந்தைய படங்கள் தான். இந்தப் படத்தின் கதையே சூப்பர் ஹீரோ கதை என்பதால், ஒரே அடியில் தளபதி 10 பேரை அடித்தாலும் நாம் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

படத்தின் காமெடியில் மீதியை சந்தானம் பார்த்துக்கொள்கிறார். எப்போதும் ஜெயம் ராஜா-சந்தானம் கூட்டணி கலக்கும். இதிலும் திருடர் ஆக முயலும் கேரக்டரில் சிரிக்க வைக்கிறார்.

’குழந்தைத் தொழிலாளர்’ சரண்யா மோகனுக்கும் படத்தில் முக்கியமான வேடம். கல்யாண நாளில் கிஃப்ட் பார்சலை எடுத்துக்கொண்டு ஓடும் சீன் செம பரபர. பொம்மரில்லுவில் ஃப்ரெஷ் ஆக இருந்த ஜெனிலியா இதில் முத்திப் போய் வருகிறார்.(உனக்கு அப்படித் தான் தெரியும்..) ஆனால் நடிப்பில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிடுவது இவர் தான்.

அடுத்து வருவது 

ஹன்சிகா அவர்கள். 

தலைவி நடிப்பைத் தவிர எல்லாத்தையும் இந்தப் படத்தில் காட்டுகிறார். அந்த கிராமப் பெண் கேரக்டருக்கும் அவர் சுத்தமாகப் பொருந்தவில்லை என்பதையும் நாம் வருத்தத்தோடு ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும். சிவபெருமான் (அல்லது சிவாஜி?) போல் ’நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே’ என்று தலைவியும் பாடலாம். 

படத்தில் ரசிக்கும்படி அமைந்த இன்னொரு விஷயம் அந்த ரயில் ஃபைட் சீன் அட்டகாசம். ஃபைட் சீன்களில் விஜய் இவ்வளவு ரிஸ்க் எடுப்பது இது தான் முதல் முறை என்று நினைக்கின்றேன்.

தெலுங்கு ஆசாமிகள் போன்ற வில்லன் ஆட்கள் தான் படத்தின் பெரிய குறை. அதுவும் இப்படி ஒரு உள்துறை அமைச்சரை தெலுங்குப் படத்தில் தான் பார்க்க முடியும்.

படத்தைப் பற்றி மொத்தமாகச் சொல்வதென்றால் வேல்+ஆயுதம் என்று பிரித்துக்கொள்ளலாம். முன்பாதி ’வேல்’ எப்போதும் போல் எல்லோருக்கும் நன்மையே செய்கிறது. இரண்டாம் பாதி ஆயுதம் விஜய் ரசிகர்களுக்காக செய்யப்பட்டது. ஒருவேளை உங்களுக்கும் பிடிக்கலாம்.

மேலும் வாசிக்க... "வேலாயுதம் - திரை விமர்சனம் அல்ல சாமியோவ்..."