Showing posts with label திரைக்கதை. Show all posts
Showing posts with label திரைக்கதை. Show all posts

Sunday, April 19, 2020

மௌனராகம் ‘சந்திரமௌலி’ சீன் - செங்கோவியின் அலசல்

இயக்குநர் மணிரத்தினத்தின் சிறந்த படங்களில் ஒன்றான மௌனராகம் படத்தினை, ஹிந்தியிலும் kasak என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள். தமிழ் மற்றும் ஹிந்தியில் உள்ள ’சந்திரமௌலி’ சீன்களை ஒப்பிட்டு, குறிப்பாக நடிப்பு பற்றி நண்பர் கீதப்ரியன் எழுதியிருந்தார். (லின்க் https://www.facebook.com/Geethappriyan/posts/10158425070166340?__cft__[0]=AZUnyfNNlgjMBoaCkNjAeTigJCVnK23TG4uTE3C0siAfO-7ejsFhXfK3ROohL2YbZjYZrnaSSwQuHxWTuXlzUIGfAV6pMx93Vd7_iZw-Zj9mpHs3A9N55fUnA7cZHMn2KyM&__tn__=%2CO%2CP-R .

ஒருமுறை இரண்டு சீன்களையும் பார்த்துவிடுங்கள்). அவரின் பதிவின் தொடர்ச்சியாக, மேலும் கொஞ்சம் அலசுவோம்.

ஒவ்வொரு எழுத்தாளருக்கும் வாக்கிய அமைப்பு மாறுவது போல், ஒவ்வொரு இயக்குநருக்கும் ஷாட் செலக்சன் என்பதும் மாறும். ஒரு சீனை புரிந்துகொள்ளும் விதம், அவர்கள் ஹைலைட் செய்ய விரும்பும் விஷயம், தேவையான நடிப்பின் அளவு, எடிட்டிங், ஷாட் காம்போசிசன் என எல்லாமே மாறுபடும். எனவே, ஹிந்திப்பட இயக்குநர் பாப்பையா-வை மட்டையடி அடிக்காமல் இதை அணுகுவோம்.

காட்சி:

ஹீரோவும் ஹீரோயினும் காஃபி ஷாப்பில் சந்திக்கிறார்கள். அங்கே, எதிர்பாராதவிதமாக ஹீரோயினின் அப்பா சந்திரமௌலி வந்துவிடுகிறார். ஹீரோயின் பயந்து ஒளிய, குறும்புக்கார ஹீரோ மிஸ்டர்.சந்திரமௌலி(!)யை காஃபி சாப்பிட அழைக்கிறான். ஹீரோயின் பதறித் தவிக்க, சந்திரமௌலி குழம்பி நிற்க, ஹீரோ அவரைத் தொடர்ந்து அழைக்கிறான். ஆனாலும் அவர் மறுத்துவிட்டுக் கிளம்புகிறார். செல்லக்கோபத்துடன், ஹீரோயின் ஹீரோ மேல் தண்ணீரை ஊற்றுகிறாள். (மொத்த சீனில், இந்த பிட்-ஐ மட்டும் தான் எடுத்துக்கொள்கிறேன்.)

காட்சியின் உள்ளடக்கம்:

இந்த சீனை புரிந்துகொண்டதில், இரு இயக்குநர்களுமே மாறுபடுகிறார்கள்.

மணிரத்தினத்தைப் பொறுத்தவரை, இந்த சீனின் முக்கிய அம்சமே ஹீரோயினின் தவிப்பு தான். ஆடியன்ஸ் உணர வேண்டியது ஹீரோயின் பதறித் துடிப்பதைத் தான். ஆடியன்ஸும் அதே மனநிலைக்கு வருவது தான் சரியாக இருக்கும். சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்த சீன், ஹீரோயினின் சீன். ’ஹீரோ அழைக்கிறான், சந்திரமௌலி மறுக்கிறார்’என்பது இரண்டாம் பட்சம் தான்.

ஹிந்திப்பட இயக்குநர், இதை ஹீரோவின் சீனாக அணுகுகிறார். ஒரு குறும்புக்கார இளைஞன், ஹீரோயினை தவிக்க விடுகிறான் & ஹீரோயினின் அப்பாவை குழம்ப விடுகிறான். ‘எப்படி கதற விட்டோம், பார்த்தியா!’ என்பது போல், ஹீரோ இரண்டு பக்கமும் என்ன பேசுகிறான் & செய்கிறான் என்பதே ஹிந்தி சீனின் முக்கிய அம்சம். ஆடியன்ஸை ஹீரோவின் பாயிண்ட் ஆஃப் வியூ-வில் நிறுத்த முயற்சிக்கிறார்.

நடிப்பு:

கார்த்திக்கும் ரேவதியும் தனித் தனியே நடித்தாலே தூள் கிளப்புவார்கள். இருவரும் இணைந்த, அத்தனை படங்களிலுமே கெமிஸ்ட்ரி வேறு லெவலில் தான் இருக்கும். இந்த லெஜண்ட்ஸுடன், ஹிந்தியில் நடித்த குழந்தைகளை ஒப்பிடுவது முறையல்ல. பாவம், விட்டுவிடுவோம்.

அப்பா கேரக்டரில் நடித்த இருவருமே ஓகே தான். ஆனாலும் தமிழில் நடித்த சங்கரனின் முகத்தில் இயல்பாகவே இருக்கும் அப்பாவிக்களை ஒரு ப்ளஸ் பாயிண்ட் தான்.




 ஷாட்ஸ்:
இரு படங்களிலும் வந்த ஷாட்ஸை இணைத்துள்ளேன். (1T-First shot Tamil, 1H-First shot Hindi, etc).

தமிழில் மாஸ்டர் ஷாட்டில், கேமிரா பொசிசனும் ப்ளாக்கிங்கும் ஹீரோ & ஹீரோயின் முகத்தை நாம் தெளிவாகப் பார்க்கும்படி டிசைன் செய்திருக்கிறார்கள். குறிப்பாக, ஹீரோயின் முகம். மேலும், பெரும்பாலான ஷாட்ஸ், ஹீரோயினை உள்ளடக்கியதாகவே இருக்கிறது.

முதல் ஷாட்டில், ஹீரோவுடன் அமர்ந்திருக்கும் ஹீரோயின் எழுந்து போவதும், திரும்ப ஓடுவந்து அமர்வதும், ‘என் அப்பா’ என்று ஹீரோவிடம் சொல்வதும் வருகிறது. அதன்பிறகு வரும் ஷாட்ஸில் அப்பாவின்  5 சிங்கிள் ஷாட்ஸ் & ஹீரோவின் 2 சிங்கிள் ஷாட்ஸ் தவிர்த்து, மீதி எல்லா ஷாட்டிலும் ஹீரோயின் இருக்கிறார். அவர் இல்லாத ஷாட்ஸிலும் ஹீரோயின் வாய்ஸ் இருக்கிறது. எனவே தான் ஹீரோயினுடன் சேர்ந்து, நாமும் ‘அய்யய்யோ’ என்று ஃபீல் ஆகிறோம்.

மேலும், ஹீரோயினுக்கு க்ளோசப் வைக்கவில்லை. பொதுவாக இந்த மாதிரி சீன்களில், யாருடைய பாயிண்ட் ஆஃப் வியூ முக்கியமோ, அவருக்கு க்ளோசப் வைப்பது வழக்கம். க்ளோசப் எடுத்துவிட்டு, எடிட்டிங்கில் தூக்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால்....

ஒரு சீனை மாஸ்டர் ஷாட் உடன் எஸ்டாபிள் செய்தபிறகு, அதுவும் மாஸ்டர் ஷாட் என்பது 2-ஷாட் அல்லது 3 ஷாட் ஆக இருக்கும்போது, கட் செய்து இன்னொரு ஷாட்டிற்குப் போவது ரொம்ப சிக்கலான விஷயம். ஹிட்ச்காக் இதைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். மாஸ்டர் ஷாட்டில் கேரக்டர்களுக்கு இடையே உருவாகியிருக்கும் எமோசன், கட் செய்யும்போது அடிபடும். அந்த எமோசன் கண்டினியூ ஆகும் அளவிற்கு, அடுத்த ஷாட் இருந்தே ஆக வேண்டும்.

இங்கே ஹீரோவும் ஹீரோயினும் அமர்ந்திருக்கும் ஷாட்டிலேயே, சீனின் சஸ்பென்ஸ் உருவாக்கப்பட்டுவிட்டது. தமிழில் இதை முடிந்தவரை உடைக்காமல், ஹீரோயினின் கை, வாய்ஸ் போன்றவற்றை எல்லாம் எல்லா ஷாட்டிலும் கொண்டுவந்து, மெயிண்டெய்ன் செய்கிறார்கள். சந்திரமௌலி தனியே நிற்பது லாஜிக்கலி கரெக்ட் என்பதால், அது உறுத்தவில்லை.

ஹிந்தியில் ‘ஹீரோவின் குறும்பு’ என்பது தான் சீனின் கான்செப்ட் என்பதால், மாஸ்டர் ஷாட்டை உடைத்து, தனித்தனி க்ளோசப் போக, இயக்குநர் தயங்கவே இல்லை. தமிழில் 12 ஷாட்களில் (பெரும்பாலும் மாஸ்டர் ஷாட்ஸ்) சொன்ன விஷயத்தை, ஹிந்தியில் 18 ஷாட்களில் சொல்கிறார்கள்.

ஹீரோயினின் அப்பாவை ஹீரோ அழைப்பது, ஹீரோயினிடம் திரும்பிப் பேசுவது, மீண்டும் அப்பாவிடம் பேசுவது என எல்லாவற்றையுமே சிங்கிள் ஷாட் (1-ஷாட்)-ல் ஹீரோவை தனியே உடைத்து எடுத்திருக்கிறார்கள். ஹீரோயினையும் க்ளோசப்பில் தனியே எடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே ஹீரோயினின் அப்பா தனியாகத் தான் நிற்கிறார். 18 ஷாட்களில், ஹீரோயின் 8 ஷாட்களில் தான் இருக்கிறார்.  ஹீரோவுக்கு 12 ஷாட்ஸ். ஹீரோ டூ அப்பா, ஹீரோ டூ ஹீரோயின், ஹீரோ டூ அப்பா என்பதாகவே கதை சொல்லுதல் இருக்கிறது.

ஹீரோயினுக்கு தனியே இரண்டு க்ளோசப் வைத்துமே, தமிழில் ஹீரோயின் கேரக்டர் உருவாக்கிய தாக்கத்தை உருவாக்க முடியவில்லை. காரணம், முன்னும் பின்னும் வந்த உடைக்கப்பட்ட ஷாட்ஸ். மூன்று கேரக்டர்களுமே தனித்தீவாக நிற்கிறார்கள். டிவி சீரியல் எஃபக்ட் வந்துவிடுகிறது.





எடிட்டிங்:


மேலேயே எடிட்டிங்கையும் சேர்த்தே பார்த்தோம். இன்னொரு குறிப்பிடத்தகுந்த விஷயம், அப்பா கேரக்டர் முதலில் காட்டப்படுவது.

தமிழில் ஹீரோயின் எழுந்து போவார், எதையோ பார்த்துவிட்டு ஓடுவந்து அமர்வார். ஹீரோ என்னவென்று கேட்டபிறகு, அப்பா வந்திருப்பதைச் சொல்வார், ஹீரோ எழுந்து பார்ப்பார். இவை அனைத்தும் ஒரே ஷாட்டில் (1T) சொல்லப்பட்ட பிறகு தான், மிஸ்டர்.சந்திரமௌலி வந்திருக்கும் விஷயமே நமக்கு காட்டப்படும்.

ஹிந்தியில் ஹீரோயின் எழுந்து போகும்போதே, அப்பா கேரக்டர் வந்திருப்பதை நமக்கு காட்டிவிடுவார்கள். ஹீரோவின் பாயிண்ட் ஆஃப் வியூவில் சொன்னாலுமே, இது சரியான முடிவு என்று எனக்குத் தோன்றவில்லை.
மாஸ்டர் ஷாட் (1H)-ஐ முழுக்க எடுத்திருக்கிறார்கள். ஆனாலும் இடையில் க்ளோசப் ஷாட்களாக வைத்தது, ஒர்க்-அவுட் ஆகவில்லை. அதைப் பார்த்தபிறகாவது, ஒரிஜினலை ஃபாலோ செய்திருக்கலாம்.

இயக்குநர் மணிரத்தினம் - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் - எடிட்டர்கள் லெனின் & விஜயன் ஆகிய ஜாம்பவான்களின் கூட்டணி உருவாக்கிய மேஜிக், இந்த சந்திரமௌலி சீன். எத்தனை முறை பார்த்தாலும், கார்த்திக்கும் துள்ளலான நடிப்பும் ரேவதியின் ரியாக்சனும் சலித்ததே இல்லை.

நான் எடுத்துக்கொண்ட இந்த துணுக்கில் (1T to 15T) பிண்ணனி இசை கிடையாது. ரேவதியின் வாய்ஸ் தான் பிண்ணனி இசை. எனவே இசைஞானி பற்றி இதில் குறிப்பிடவில்லை. மிகச்சரியாக, இந்த இடத்தில் பிண்ணனி இசையை நிறுத்தியிருப்பார்.

ப்ளாக்கிங், ஷாட் காம்போசிசன், ஷாட் செலக்சன்/எடிட்டிங் எல்லாமே உள்ளுணர்வு சார்ந்த விஷயங்கள். சமயங்களில் எதனால் இந்த ஷாட்டை இப்படி வைத்தோம் என்று படைப்பாளிகளால் சொல்ல முடியாது. ‘அது தான் சரின்னு தோணுச்சு, வச்சேன்’ என்பதே பெரும்பாலும் பதிலாக இருக்கும்.


ஒரு சீனை, ஷாட்டை புரிந்துகொள்வதும் அப்படியே. நீங்கள் இன்னும் ஆராய்ந்தால், மேலும் பல விஷயங்கள் பிடிபடலாம்!

- செங்கோவி
மேலும் வாசிக்க... "மௌனராகம் ‘சந்திரமௌலி’ சீன் - செங்கோவியின் அலசல்"

Wednesday, September 19, 2018

சிறந்த 15 மாஸ்டர்களின் சிறந்த 15 படங்கள்


’சினிமா டிஸ்கசனில் திடீர் திடீர் என்று ஏதாவது இங்கிலிபீசு டைரக்டர் பெயரையோ, படத்தின் பெயரையோ சொல்லி விவாதிக்கிறார்கள். இதுகூட தெரியாதா என்று சிரிக்கிறார்கள்.’ என்று உதவி இயக்குநராக இருக்கும் நண்பர் ஒருவர் ஒருமுறை வருத்தப்பட்டார். ஏறக்குறைய இதே லிஸ்ட்டை அவருக்குச் சொன்னேன்.

நண்பர் பிடித்த பத்து படங்களை பகிரச் சொன்னபோது, அதையே பகிர்ந்துகொண்டேன். இவர்கள் தான் என் திரைமொழியை வடிவமைக்கும் குருநாதர்கள். இவர்களில் ஒருவரின் தோளில் ஏறிக்கொண்டாலும் போதும், உருப்பட்டு விடலாம்!


Master # 1 - Alfred Hitchcock (Movie # 1 - Psycho)


Master # 2 - Stanley Kubric (The shining)


Master # 3 - Akira Kurosawa (Seven Samurai)


Master # 4 - Roman Polanski (Bitter Moon)


Master # 5 - David Lynch (Mulholland Drive)


Master # 6 - Steven  Spielperg (Jurassic Park)


Master # 7 - Krzysztof Kieślowski (The Double Life of Veronique)


Master # 8 - Sergio Leone (Once Upon A Time In The West)


Master # 9 - Christopher Nolan (The Prestige)


Master # 10 - Paul Thomas Anderson (Boogie Nights)


Master # 11 - David Fincher (Seven)


Master # 12 - Coen Brothers (Fargo)


Master # 13 - Quentin Tarantino (pulp fiction)


Master # 14 - James Cameron (Terminator 2 : Judgment Day )


Master # 15 - Francis Ford Coppola (The Godfather)

Master # 16 - Martin Scorsese (Taxi Driver)

ஒவ்வொரு மாஸ்டர்களின் சிறந்த 5 படங்களின் லிஸ்ட்டை சீக்கிரம் கொடுக்க முயற்சிக்கிறேன்.
மேலும் வாசிக்க... "சிறந்த 15 மாஸ்டர்களின் சிறந்த 15 படங்கள்"

Wednesday, April 18, 2018

Revisiting…… சின்னத்தம்பி (1991)


அபூர்வ சகோதரர்கள், சின்னக்கவுண்டர் போன்ற பழைய, நல்ல கமர்சியல் சினிமாக்கள் பற்றி எழுதும்படி அவ்வப்போது நண்பர்கள் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். புத்தாண்டு சபதமாக, அவற்றைப் பற்றி எழுதுவது என்று முடிவு செய்திருக்கிறேன். புத்தாண்டு சபதம் என்பதால், எப்படியும் இரண்டு மாதத்திற்காவது சபதம் தாக்குப்பிடிக்கும் என்று நினைக்கிறேன். பார்ப்போம்!

செங்கோவி வலைப்பூ தூசு தட்டப்பட்டு இங்கேயும் பதிவேற்றப்படும்!


தமிழ் சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை லிஸ்ட் போட்டால், சின்னத்தம்பியை தவிர்க்க முடியாது. திருவிழா போன்று கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டரை நோக்கி ஓடினார்கள். பேசிப் பேசி மாய்ந்தார்கள். இளையராஜாவின் இசையும் பாடல்களும் பாமர மக்களையும் பைத்தியம் ஆக்கின. இயக்குனர் பி.வாசு & ஹீரோ பிரபுவின் சினிமா வாழ்வில் உச்சமாக சின்னத்தம்பி அமைந்தது.

நம்ப முடியாத கதையை நம்பக்கூடியவகையில் சொல்வது எப்படி என்பதற்கு சின்னத்தம்பியை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

ஜோதிடர் ‘ஹீரோயின் காதல் திருமணம் தான் செய்வாள்’ என்று சொன்னதால், அண்ணன்களின் அன்புச்சிறையில் வீட்டுக்குள்ளேயே வைத்து வளர்க்கப்படும் ஹீரோயின். யாரும் தங்கையை நிமிர்ந்து பார்த்தால்கூட, அடித்து துவைக்கும் அண்ணன்கள். அப்படிப்பட்ட ஹீரோயினுக்கு, கல்யாணம் என்றால் என்னவென்றே தெரியாத ஹீரோ மேல் காதல் வந்தால்?..யாருக்கும் தெரியாமல் (ஹீரோவுக்கே தெரியாமல்!) அவள் ஹீரோவைத் திருமணம் செய்தால் என்ன ஆகும்?

கிராமத்து பெரிய வீட்டுக்கதை என்றாலே சினிமாவில் பெரும் கூட்ட த்தைக் கூட்டிவிடுவார்கள். ஆனால் த்ரில்லர் படங்களில் வருவது போல், கச்சிதமாக குறைவான முக்கிய கேரக்டர்களைக் கொண்டு எழுதப்பட்ட து சின்னத்தம்பி திரைக்கதை. ஹீரோயின் வீட்டில் பத்துப் பேர், வெளியே பத்துப்பேர் என்று கதைக்குத் தேவையான, அதிலும் தேவையான நேரத்தில் மட்டுமே வந்துவிட்டுப் போகும் கேரக்டர்கள்.

முதல் காட்சியே ஹீரோயின் பிறப்பதில் ஆரம்பிக்கிறது. ‘ஐயாவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு’என்று ஒரு வேலையாள் சொல்கிறார். அய்யாவும் காட்டப்படுவதில்லை; அம்மாவும் காட்டப்படுவதில்லை. மூன்று அண்ணன்கள் மட்டுமே காட்டப்படுகிறார்கள். பட த்தின் அடிநாதம், அண்ணன்களின் அளவுக்கு மீறிய பாசமே எப்படி வேலியாகிறது என்பது தான். ஆகவே அண்ணன் X தங்கை என்பதிலேயே நம் கவனம் நிலைநிறுத்தப்படுகிறது.

வருவதை முன்கூட்டியே சொல்வது என்பது சினிமாவில் முக்கியமான உத்தி. அது நடக்குமா, எப்படி நடக்கும், அப்படி நடந்தால் என்ன ஆகும் என்று ஆடியன்ஸ் மனதில் 
ஆர்வத்தை தூண்ட இது பயன்படும்.

உதாரணமாக அமெரிக்கன் பியூட்டி(1999)யில் முதல் காட்சியிலேயே ஹீரோவின் டீனேஜ் மகள், ஹீரோவைக் கொல்வது பற்றி தன் பாய் ஃப்ரெண்டிடம் பேசுகிறாள். அடுத்து வாய்ஸ் ஓவர் வசனம் ‘ I'm forty-two years old. In less than a year, I'll be dead.’ என்று வரும். ஹீரோ சாகப்போகிறானா, மகள் தான் கொல்லப்போகிறாளா? ஏன்? என்று அடுக்கடுக்கான கேள்விகளையும் ஆர்வத்தையும் இது தூண்டிவிடும். இந்த முதல் சீனை கட் செய்துவிட்டால், படமே டல் ஆகிவிடும். அந்தளவுக்கு இந்த உத்தி முக்கியமானது.
சின்னத்தம்பியிலும் இந்த உத்தியை ஜோதிடர் கேரக்டர் மூலம் பயன்படுத்தியிருக்கிறார்கள். ‘அரண்மனையில் எவ்வளவு பாசம் காட்டி வளர்த்தாலும், உங்க தங்கச்சி காதல் திருமணம் தான் செய்வாள்’ என்று ஜோதிடர் சொல்லிவிடுகிறார். இதைத் தடுப்பதற்கான எல்லா வேலைகளிலும் அண்ணன்கள் இறங்கிவிடுகிறார்கள். ஆடியன்ஸான நாமும் ஆர்வமாகிவிடுகிறோம்.

‘இவ்வளவு டெரரான அண்ணன்கள்..அடியாட்கள்..வீட்டுச்சிறை..ஏறக்குறைய சிண்ட்ரெல்லா நிலை. இதை மீறி எந்த ராஜகுமாரன் வந்து ஹீரோயினை காதலித்துக் காப்பாற்றுவான்?’ என்றே நாமும் யோசிக்கிறோம். ஒரு அப்பாவியை ஹீரோவாக களமிறக்குகிறார்கள். இது இன்னும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ‘இவன் எப்படி லவ் பண்ணுவான்? இவனை எப்படி அந்த ராஜகுமாரி லவ் பண்ணுவாள்?’ என்ற கேள்விக்கு முதல்பாதி அழகாக, ஸ்டெப் பை ஸ்டெப் ஆக பதில் சொல்கிறது.

’நடக்குமா, நடக்காதா?’ எனும் உத்தியை இடைவேளைவரை வெற்றிகரமாக க் கொண்டுபோய், இடைவேளையில் சம்பவத்தை நட த்திவிடுகிறார்கள். ‘அய்யய்யோ…இது அண்ணன்களுக்குத் தெரிந்தால் கொன்னுடுவாங்களே’ எனும் பதட்டம் தான் இரண்டாம்பாதியை இன்னும் ஆர்வமாகப் பார்க்க வைக்கிறது.
சமீபகாலமாக வரும் படங்கள் எல்லாம் இந்த மண்ணுக்கு மிகவும் அந்நியமானதாக இருக்கின்றன. சமூகவலைத் தளங்களில் பேசப்படும் அளவிற்கு வெளியே பேசப்படுவதில்லை. காரணம், ஆங்கிலப்படங்களில் வருவது போல் செண்டிமெண்ட்டை ஊறுகாயாக தொட்டுக்கொள்வது. இதனால் பி & சி செண்டர் மக்களுக்கு இன்றைய சினிமா அந்நியமான ஒன்றாக ஆகிவருகிறது.

தமிழ் சினிமாவில் இன்றளவும் மாபெரும் வெற்றி பெரும் படங்களைப் பார்த்தால் செண்டிமெண்ட்டை டச் பண்ணிய படங்களாகத் தான் இருக்கும். (செண்டிமெண்ட்களிலேயே அலுக்காத பெஸ்ட் செண்டிமெண்ட், காதல் தான்!)
சின்னத்தம்பி எல்லாவகை செண்டிமெண்ட்டையும் ரவுண்டு கட்டி அடித்த படம். அண்ணன் – தங்கை பாசம், அம்மா – மகன் பாசம், காதல், மனைவி – கணவன் பாசம், கிளைமாக்ஸ் விதவை செண்டிமெண்ட் என்று எல்லா முக்கிய கேரக்டர்களுமே செண்டிமெண்ட்டால் பிணைக்கப்பட்டவர்கள். பொய்யான ‘ஹாய்..ஹலோ’ ரிலேசன்ஷிப்பே அங்கே கிடையாது. எல்லோரும் உணர்வுப்பூர்வமான கேரக்டர்கள். ஆகவே தான் நம்பமுடியாத கதை கூட, நம்பி கொண்டாடப்பட்டது.

அவையத்து முந்தி யிருப்பச் செயல் என்றும்இவன்தந்தை
என்னோற்றான் கொல்
என்றும் சபையில் தன் உறவு பெரும் மரியாதையைக் கண்டு மற்ற உறவுகள் பெருமைப்படுவதை இலக்கியங்களும் சினிமாவும் பல இடங்களில் பதிவு செய்திருக்கின்றன. ஆனால் கணவனை நினைத்து, மனைவி பெருமைப்படுகின்ற, அவையில் முந்தியிருக்க மனைவி எடுக்கும் சிரத்தை பற்றி அதிகம் பேசப்பட்ட தில்லை.
மனைவி வீட்டிலும் மனைவி சொந்தங்களிடமும் கணவன் நல்லபடியாக நடந்து, தான் பெருமைப்படும்படி சபையில் நிற்கின்றானா எனும் பதைபதைப்பு புதிதாக கல்யாணம் ஆன புதிதில் பெண்களுக்கு இருக்கும். சில நேரங்களில் ஸ்பெஷல் டியூசன் எடுக்கப்படுவதும் உண்டு! பெண்களுக்கே உரிய, அந்தரங்கமான மகிழ்ச்சித் தருணங்கள் அவை. ஆனால் பெரும்பாலான பெண்களின் கனவு பொய்த்துப்போவது தான் சாபக்கேடு.

சின்னத்தம்பியின் மாபெரும் வெற்றிக்குக் காரணமாக நான் நினைப்பது, ஹீரோயின் தன் புருசனான ஹீரோவை சபையில் முந்தியிருக்க நட த்தும் போராட்டத்த்தில் நம் தாய்க்குலங்கள் தன்னையே கண்டுகொண்டது தான். பரம்பரைப் பணக்காரர்களான, சமூகத்தில் அந்தஸ்து உள்ள அண்ணன்களுக்குச் சமமாக, ஒரு அப்பாவி கணவனை நிறுத்துவதற்கு ஹீரோயின் படும் பாடு தான் இரண்டாம் பாதிக் கதையாக சொல்லப்படுகிறது.

மேலும், கணவனே மனைவிக்கு மாப்பிள்ளை பார்க்கக் கிளம்புவது, தான் பெண் பார்த்த கதையை மனைவியிடமே சொல்வது என்று பி.வாசு செண்டிமெண்ட்டைப் போட்டுத் தாக்கியதில் மொத்த தமிழ்நாடும் ஃப்ளாட் ஆனது.

அப்போது கிளாமர் ஹீரோயின் என்பதே குஷ்புவின் அடையாளமாக இருந்தாலும், இவ்வளவு கனமான கேரக்டரை திறமையாக வெளிக்கொண்டு வந்திருந்தார். அண்ணன்களுடன் பிரபு சம மாக அமர்ந்து சாப்பிடும்போது காட்டும் மகிழ்ச்சி க்ளோசப் ஒரு உதாரணம்.

இளைய திலகம் என்ற பெயருக்கு ஒருவழியாக பிரபு நியாயம் செய்த படம். ராதாரவி, மனோரமா என பெர்ஃபார்மன்ஸில் பின்னியெடுக்கும் நடிகர்களும் சேர, எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படமாக ஆனது சின்னத்தம்பி.

இளையராஜாவின் சூப்பர்ஹிட் பாடல்களும் நல்ல காமெடியும் இருந்தாலே படங்கள் ஹிட் ஆகிவிடும். கூடவே மேலே சொன்ன அம்சங்களும் சேர்ந்துகொள்ள, சின்னத்தம்பி தமிழ் கமர்சியல் சினிமாவில் முக்கிய இடம் பிடித் த து.
மேலும் வாசிக்க... " Revisiting…… சின்னத்தம்பி (1991)"

Saturday, June 17, 2017

த்ரில்லர் படங்களின் சாபம்...

சமீப காலமாக சில நல்ல த்ரில்லர் படங்கள் தமிழில் வர ஆரம்பித்திருக்கின்றன. துருவங்கள் பதினாறு, மெட்ரோ, 8 தோட்டாக்கள், அதே கண்கள், மாநகரம் போன்ற படங்கள் ஃபேஸ்புக்கிலும் மீடியாக்களிலும் நல்ல பாராட்டைப் பெறுகின்றன. இவற்றில் துருவங்கள் பதினாறு தவிர மற்ற படங்கள் போட்ட காசை வசூலிக்க முடியவில்லை என்பது கசப்பான உண்மை. துருவங்கள் பதினாறும் ஏழு கோடி மட்டுமே வசூலித்ததாக தகவல்.

நண்பர்கள் வட்டாரத்திலும் உறவுகளிடமும் இந்த படங்களைப் பற்றிக் கேட்டால் பெரும்பாலும் தெரிவதில்லை. தெரிந்தவர்களும் ஆன்லைனில் டவுன்லோடு தான் பார்த்திருக்கிறார்கள். ’நீங்கள் என்னென்ன படங்களை தியேட்டரில் போய்ப் பார்த்தீர்கள்?’ என்று கேள்வியைக் கேட்டால், அதில் த்ரில்லர் படங்களுக்கு இடமே இல்லை. ரஜினி-விஜய்-அஜித் படங்கள், ரஜினி முருகன், பாபநாசம், பவர் பாண்டி, சிவலிங்கா(!) என்று தான் லிஸ்ட் போடுகிறார்கள். பாபநாசம் பார்த்தவர்கள்கூட தூங்காவனத்தை கண்டுகொள்ளவில்லை.

இன்னும் எளிமைப்படுத்தினால், தங்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்காத அல்லது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்களையே பெரும்பாலானோர் பார்க்கிறார்கள். ஃபேமிலி டிராமா, காதல், நகைச்சுவைப் படங்களுக்கு எப்போதும் போதிய வரவேற்பு இருக்கிறது. த்ரில்லர் படங்கள் எல்லாம் பிரபல ஹீரோக்கள் நடிக்காவிட்டால், கவிழ்ந்துவிடுகின்றன. ஆனால் அது இங்கே மட்டுமே நடக்கும் விஷயம் அல்ல.

த்ரில்லர் படங்களின் ஆதிமூலம், ஃபிலிம் நுவார் படங்கள் தான். 1940களில் பிரபலமான இந்த ஜெனரின் சிறப்பம்சமே, லோ பட்ஜெட் படங்கள் என்பது தான். இவையெல்லாம் பி கிரேடு (இரண்டாம் தர) படங்களாகவே பார்க்கப்பட்டன, தயாரிக்கப்பட்டன. இரவு நேர நகரம் + மனிதர்களின் இருண்ட பக்கம்+குறைவான கேரக்டர்கள்+ஆனால் டெக்னிகலாக சிறப்பான கேமிரா & எடிட்டிங் அமைந்தால், அதுவே ஃபிலிம் நுவார். இவையே பின்னாளில் த்ரில்லர் என்று பரிணாமம் பெற்றன.

குறைந்த செலவில் படமெடுத்து குறைந்த லாபத்துடன் தப்பிப்பது தான் ஃபிலிம் நுவாரின் சிறப்பம்சமே. சில படங்கள் பெருவாரியான மக்களின் வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்குவித்துவிடுவதுண்டு. ஆனாலும் ஏ செண்டர் மக்களைக் குறிவைத்து எடுக்கப்பட்ட பி கிரேடு(!) படங்கள் தான் ஃபிலிம் நுவார் அல்லது த்ரில்லர் படங்கள். பிற்காலத்தில் நியோ-நுவாராக ஃபிலிம் நுவார் ஆகி, ஹிட்ச்காக் படங்கள், Blade Runner போன்ற படங்கள் எல்லாம் ஏ கிரேடுக்கு நகர்ந்தன...அதாவது மெயின்ஸ்ட்ரீம் படங்களாக ஆகின.

மனிதன் சினிமா பார்க்க ஆசைப்படுவது சந்தோசத்திற்குத்தான் எனும் அடிப்படை உண்மை தான் த்ரில்லர் படங்களின் சாபம். அந்த அடிப்படையைத் தகர்த்து வெற்றி பெறுவது தான் த்ரில்லர் படங்களின் முன் இருக்கும் சவால். திருட்டு விசிடி பிரச்சினை மட்டும் இல்லையென்றால், மேலே சொன்ன படங்கள் இன்னும் கொஞ்சம் வசூலை வாரியிருக்கலாம். இரண்டு/மூன்று கோடியில் தரமான த்ரில்லரை எடுத்து மூன்று/நான்கு கோடி வசூலுடன் தப்பிக்கும் படங்கள் அதிகம் வந்திருக்கலாம்.

டிக்கெட் பிரச்சினையைக் காரணம் காட்டி, பைரஸியை பலர் ஆதரித்தாலும் நல்ல சிறுபட்ஜெட் படங்களை திருட்டு விசிடியும் தியேட்டர் கட்டணங்களும் சேர்ந்து காலி செய்வதே யதார்த்தம். இதனால் என்ன ஆகும் என்றால் பேய்க்காமெடி, நாய்க்காமெடி, புனிதக்காதல், பஞ்ச் டயலாக் என சேஃபர் ஜோனிலேயே தயாரிப்பாளர்கள் விளையாட நினைப்பார்கள். நாம் திருட்டு விசிடியில் 8 தோட்டாக்கள் பார்த்துவிட்டு, விஜய்/அஜித் படங்களை கலாய்த்துக்கொண்டிருப்போம். மலையாள சினிமாவில் இதை கச்சிதமாகச் செய்து, ஜெயிக்கிறார்கள். கம்மாட்டிப் பாடம், அங்கமாலி டயரீஸ் என சின்ன பட்ஜெட்டில் தைரியமாக அவர்களால் படமெடுக்க முடிகிறது. நம்மால் அது முடியாதென்பதே யதார்த்தம்.

இவ்வளவு பிரச்சினை இருந்தும் புதிய படைப்பாளிகளுக்கு த்ரில்லர்கள் மீது தீராத மோகம் இருந்துகொண்டே இருக்கிறது. முக்கியக் காரணங்கள், வித்தியாசமான படம் செய்யும் அரிப்பும் டெக்னிகலாக எக்ஸ்பரிமெண்ட்களை செய்துபார்க்கும் வாய்ப்பும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில், கொஞ்சம் பிரபல நடிகர் இல்லையென்றால் த்ரில்லர் ஜெனர் என்பது தற்கொலை முயற்சிக்கான எளிய வழி என்பதே யதார்த்தம்.

எனவே நாம் எப்போதும் போல் ‘கொரியாப் படம் மாதிரி வருமா?’ என்று பேசிக்கொண்டே காலத்தைக் கழிப்போம்!
மேலும் வாசிக்க... "த்ரில்லர் படங்களின் சாபம்..."

Wednesday, April 5, 2017

சினிமா அலசல் : கிடாரி – கொம்பையாப் பாண்டியன் - There Will Be Blood


எனக்குப் பிடித்த இயக்குநர்களில் ஒருவரான பால் தாமஸ் ஆண்டர்சனின் மாஸ்டர்பீஸ்களில் ஒன்று, There Will Be Blood. பணம் சம்பாதிப்பதற்காக எதையும் செய்யத்துணியும், சம்பாதிப்பதைத் தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு முழு நெகடிவ் கேரக்டரின் கதையைச் சொன்ன படம்.

நல்லவர்களைப் பற்றி எத்தனையோ படங்கள் ஆராய்ந்து தள்ளிவிட்டாலும், வில்லன் என்பதைத் தாண்டி கெட்டவர்களைப் பற்றி படங்கள் பேசுவதில்லை. ஆன்ட்டி ஹீரோ சப்ஜெக்ட்டில் கூட, எப்படியாவது ஹீரோவை நியாயப்படுத்திவிட்டுத்தான் கதை சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம், வணிக வெற்றி குறித்த அச்சம்.

’அவன் கெட்டவன்..ஏன்னா, அவன் கெட்டவன்..அவ்ளோ தான்’ என்று சிம்பிளாக உண்மையை நம் முன் வைக்கும் கதைகள் அரிது. எவ்வித மசாலாவும் சால்ஜாப்பும் இல்லாமல் ஒரு வறண்ட உண்மையை நம் முன் வைத்த படம், There Will Be Blood.


அதில் மையப்பாத்திரத்தில் நடித்த டேனியல் டே-லெவிஸ்ஸின் நடிப்பு மறக்க முடியாதது. உடன் வேலை செய்பவர்கள், வளர்ப்பு மகன், சொந்த பந்தம் என எல்லோரையும் சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்தி, தூக்கி எறியும் கதாபாத்திரத்தை கண்முன் கொண்டு வந்திருப்பார் டேனியல். அதற்காக ஆஸ்கார் விருதையும் தட்டிச் சென்றார். ஒளிப்பதிவிற்காகவும் ஆஸ்கர் கிடைத்தது.

ஆயில் & கேஸ் இண்டஸ்ட்ரியில் வேலை செய்பவன் என்ற முறையில் அந்த படத்தின் மேல் தனிப் பிரியம் உண்டு. மறக்க முடியாத கேரக்டராக, டேனியல் கேரக்டர் பலநாட்கள் என்னைத் தொந்தரவு செய்தது. 

மனசாட்சியை ஊமையாக்க சிறிய காரணம் கிடைத்தாலும், மனிதனால் எவ்விதக் கீழ்மையான காரியத்தையும் செய்துவிட முடியும். வெகுஅரிதாக சிலரால், மனசாட்சி உறுத்தல் இல்லாமல் ஒரு மோசமான வாழ்க்கையை வாழ முடியும் என்பது தான் எவ்வளவு அபாயகரமான விஷயம். அதை இலக்கியங்கள் பதிவு செய்வது பெரிதில்லை. சினிமா போன்ற ஒரு வணிக ஊடகத்தில் இந்த கசப்பான உண்மை பதிவாவது போற்றப்பட வேண்டிய விஷயம்.

’There Will Be Blood டேனியல் மாதிரி தமிழில் ஒரு கேரக்டரைப் படைத்துவிட முடியுமா? லாஜிக் கேள்வி கேட்டே படத்தை ஒழித்துக்கட்டிவிட மாட்டார்களா?’ என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். அதற்கெல்லாம் பதிலாக வந்திருக்கும் படம் தான், கொம்பையாப் பாண்டியன்…மன்னிக்கவும், கிடாரி!

சாத்தூர் என்ற சிறுநகரத்தில் வாழும் கொம்பையாப் பாண்டியன் எனும் தாதாவின் வளர்ச்சியையும் வாழ்க்கையையும் பேசுகிறது கிடாரி. நம்பிக்கை துரோகமும், கொலையும் குற்றமும் மூச்சுவிடுவது போல் இயல்பான நடவடிக்கையாகக் கொண்ட ஒரு தாதாவை கண்முன் நிறுத்தியது தான் படத்தின் பெரும் வெற்றி.

வெளியானபோது பரவலாகக் கவனிக்கப்படாமல் போன படம். அதற்கு முதல் காரணம், படத்தின் ஹீரோ சசிக்குமாரின் முந்தைய படங்கள். நட்புன்னு என்னன்னு தெரியுமா என்று பேசும் வழக்கமான படங்கள் போன்ற தோற்றத்தை படத்தின் போஸ்டர்களும் பாடல்களும் முன்னோட்டமும் கொடுத்துவிட்டன.

கிடாரி என்ற தலைப்பும் கிடாரியை ஹீரோவாக முன்னிறுத்தியதும் தவறு. தவமாய் தவமிருந்து வந்தபோது, இயக்குநர் சேரன் ஹீரோ தான். ஆனாலும் பேட்டிகளிலும் விளம்பரத்திலும் ராஜ்கிரண் தான் இந்த படத்தின் ஹீரோ என்று சொன்னார். அதே போன்று, கொம்பையாப் பாண்டியன் கேரக்டரில் வாழ்ந்த வேல.ராமமூர்த்தி தான் ஹீரோ என்று விளம்பரப்படுத்தியிருக்க வேண்டும்.


அப்படி செய்திருந்தால், படத்தின் ஓப்பனிங் சீனிலேயே கொம்பையாப்பாண்டியன் ரத்த வெள்ளத்தில் கிடப்பது பெரிய தாக்கத்தை உண்டாக்கியிருக்கும். ஹீரோ சசிக்குமார் என்ற எண்ணத்தில் உட்கார்ந்திருக்கும் ஆடியன்ஸுக்கு, பாதிப்படத்துக்கு மேல் தான் இது கொம்பையாப் பாண்டியனின் கதை என்றே புரிகிறது.

படத்தில் கொம்பையாப் பாண்டியன் கேரக்டருக்கு அடுத்து பாராட்டப்பட வேண்டியது, திரைக்கதை. கொம்பையாப் பாண்டியனை குத்தியது யார் என்ற கேள்வியுடன் படம் துவங்குகிறது. அதற்கான பதிலை மூன்று குறுங்கதைகளில் ஒரு கேரக்டர் தேடுகிறது. 

முதல்கதை, கொம்பையாப்பாண்டியனின் வளர்ச்சியைச் சொல்கிறது. இரண்டாவது கதை, எவ்வளவு இயல்பாகவும் ஜாலியாகவும் அடுத்தவருக்கு பிரச்சினை செய்து வாழ்கிறார்கள் என்று பதிவு செய்கிறது. 

மூன்றாவது கதை தான் வலுவானது. இவர்களால் தன் குழந்தையை இழந்த ஒரு தாயின் பழி உணர்ச்சியை உரக்கச் சொல்கிறது. கொம்பையாப்பாண்டியன் கேரக்டருக்கு அடுத்து நம் மனதில் நிற்பது இந்த கேரக்டரும், அதைச் செய்த நடிகை சுஜா வுணிும் தான். கொம்பையாப் பாண்டியனின் மகனாக வரும் வுமித்ர-வின் நடிப்பு கவனிக்கப்பட வேண்டியது. தன் உடல்மொழி மூலமும் கண்களின் மூலமிம் ஒரு உதவாக்கரையை கண்முன்னே கொண்டுவருகிறார்.

சுவின் குழந்தை இறந்ததற்குக் காரணம் கிடாரி எனும்போதே, ஏற்கனவே கிடாரிக்கு ஒட்டாமல் இருக்கும் ஹீரோயிச பில்டப்கள் சுத்தமாக வீழ்ந்துவிடுகின்றன. இயக்குநர் இந்த இடத்தில் கொம்பையாப் பாண்டியனும் கிடாரியும் ஒன்று தான் என்று ஆணித்தரமாகச் சொல்லப் பயந்து மழுப்பியது படத்தின் பெரும்குறை.

கிடாரிக்கும் கொம்பையாப்பாண்டியனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கொம்பையாப் பாண்டியனுக்கு மனசாட்சி கிடையாது. கிடாரிக்கு மனசாட்சி உண்டு. அதை ஆஃப் செய்ய, விசுவாசம் போன்ற சிறுகாரணம் போதும். அவ்வளவு தான் வித்தியாசம். இதில் கிடாரியை ஹீரோவாக நிறுவ முயன்றதில் தான், இன்னொரு சுப்ரமணியபுரத்தை இழந்திருக்கிறார்கள்.

கொம்பையாப் பாண்டியன் நல்ல தாதா போன்ற இமேஜுடன் படத்தை ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக அவரது இருண்ட பக்கத்தைக் காட்டி, நெப்போலியன் கதையில் முழு கெட்டவராக காட்டியிருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். 

படத்தின் கிளைமாக்ஸில் கொம்பையாப் பாண்டியனை பழி வாங்கும் கிடாரி, மீண்டும் கொம்பையாப்பாண்டியனின் வேலையைத் தொடர்வதாக முடித்திருப்பது நமக்கு முழு திருப்தியைத் தரவில்லை. கிடாரி திருந்தி, அந்த இடத்தில் இருந்து நல்லது செய்கிறான் என்று நாமே யூகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

There Will Be Blood ஹீரோ டேனியலுக்கு ஆஸ்கார் கிடைத்தது போன்றே, நியாயத்திற்கு வேல.ராமமூர்த்திக்கு உயரிய விருதுகள் கிடைக்க வேண்டும். லங்கோடு உடன் வேல்கம்பை எடுத்துக்கொண்டு, அவர் வீராவேசமாக வெளியே வரும் காட்சி இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவிலும் பிண்ணனி இசையிலும் வாய்ஸ் ஓவர் கதை சொல்லும் பாணியிலும் அசத்தியிருந்தார்கள். There Will Be Blood மாதிரி நேர்கோட்டில் கதை சொல்லாமல், சுவாரஸ்ய்த்திற்காக நான் – லீனியரில் கதை சொல்லியிருக்கிறார்கள். இதில் சிக்கல் என்னவென்றால், கொம்பையாப்பாண்டியனை முழுதாகப் புரிந்துகொள்ள இரண்டாம் முறையும் படம் பார்க்க வேண்டியதாகிறது.
 
படம் ரிலீஸான வெள்ளிக்கிழமையே படம் பார்த்து ‘சூப்பர்’ என்று சொல்லிவிட முடியாத அளவுக்கு நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட படம் இது. ஓடிக்கொண்டே ஒன்னுக்கு அடிக்கும் ஆசாமிகள், கொஞ்சம் நேரம் ஒதுக்கி நிதானமாகத் தான் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். கொஞ்சநாட்களில், கிடாரி தனக்கான இடத்தை அடையும் என்று நம்புகிறேன்.

ஆனந்த விகடனில் சென்ற ஆண்டுக்கான சிறந்த இயக்குநர் விருது, கிடாரி இயக்குநர் பிரசாத் முருகேசனுக்கும் சிறந்தில்லன் விரு நம் கொம்பையாப் பண்டியுக்கும் வழங்கப்பட்டது. அதன்பிறகே இந்தப் படத்தை நான் பார்த்தேன். என்னை மாதிரியே ‘இது வழக்கமான சசிக்குமார் படம்’ என்று நினைத்து தவறவிட்டவர்கள், இப்போது பார்க்கலாம்.

மேலும் வாசிக்க... "சினிமா அலசல் : கிடாரி – கொம்பையாப் பாண்டியன் - There Will Be Blood"