Wednesday, June 20, 2018

Revisiting….அபூர்வ சகோதரர்கள் (1989)


தமிழ் சினிமாவில் வந்த நல்ல பொழுதுபோக்குப் படங்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டால், இன்றும் முதல் பத்து இடங்களுக்குள் அபூர்வ சகோதரர்கள் இடம்பிடிக்கும். ஒரு வழக்கமான பழி வாங்கும் கதையை எப்படி கொஞ்சமும் அலுக்காமல் சொல்வது என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம்.

ஏற்கனவே நான் எழுதியடபுள் ஆக்ட்டிங்கும் டமில் சினிமாவும் (லின்க், முதல் கமெண்ட்டில்) பதிவில் இத்தகைய படங்களின் பலம் என்ன என்று விரிவாகப் பேசியிருக்கிறோம். ஒரு குறைபாடுள்ள ஹீரோ (கோழை/அப்பாவி)-வும் அவனைப் போன்றே தோற்றமுள்ள ஒரு முழுமையான ஹீரோ (வீரன் / புத்திசாலி) - வும் இடம் மாறும்போது ஏற்படும் சிக்கல்கள் தான் இத்தகைய டபுள் ஆக்ட்டிங் கதைகளின் அடிப்படை

நிஜ வாழ்க்கையில் சாமானியனாக இருக்கும் ரசிகன், திரையில் தன்னைப் போன்ற ஒருவனின் இத்தில் ஒரு ஹீரோ வந்தமர்ந்து பிரச்சினைகளைத் தீர்ப்பதைப் பார்த்து கொண்டாடித் தீர்த்தான். டபுள் ஆக்ட்டிங் இன்னும் முன்னேறி, ட்ரிபிள் ஆக்ட்டிங் ஆனது. பெரும்பாலும்அப்பாவுக்கு ஒரு சிக்கல்..அதை பிள்ளைகள் தீர்ப்பதுதான் ஒன்லைன். சிக்கல் என்பது அபூர்வ சகோதரர்கள் போன்று மர்கயா-வாக க்கூட இருக்கலாம்!

அபூர்வ சகோதரர்கள் படம் அரதப்பழசான பழிவாங்கும் & இரட்டைப் பிள்ளைகள் கதையை புதுமையாகச் சொன்னது. இந்த மாதிரிப் படங்களில் குறைபாடுள்ள ஹீரோ பிரச்சினையில் சிக்கிக்கொள்வான், ‘ஹீரோவந்து காப்பாற்றுவார். இதை கமல் தனது அற்புதமான திரைக்கதையில் தலைகீழாக ஆக்கினார். (பஞ்சு அருணாச்சலம் அவர்களின் கைவண்ணமும் இதில் உண்டு.)

பொதுவான எதிர்பார்ப்பு, அப்பாவைக் கொன்றவர்களை ராஜா கேரக்டர் கொல்லும் என்பதே. ஆனால் இங்கே அப்பு தான் பழிவாங்குவார்.  ராஜா கேரக்டரை அட்டகாசமாக, அப்பு கதையுடன் பொருத்தியிருப்பார்கள். அப்பு கொலை செய்துகொண்டே போக, கொலைப்பழியுடன் ராஜா கேரக்டர் கதறி ஓடிக்கொண்டே இருக்கும். படத்தை கொஞ்சமும் அலுக்காததாக ஆக்கியது என்னவென்றால் இதை நகைச்சுவையாகச் சொன்னது தான். (நீங்க எங்கயோ போய்ட்டீங்க சார் ஐ மறக்க முடியுமா!)

பழிவாங்குதற்கான காரணமும் புதுமையானதாகவும் செண்டிமெண்ட்டாக நம்மைத் தாக்குவதாகவும் இருந்தது. பொதுவாக, ’சிறுவயதில் அப்பாவைக் கொன்னுட்டாங்க/ஃபேலிமியைபிரிச்சிட்டாங்க அல்லது பாட்டியை 4 பேர் ரேப் பண்ணிட்டாங்கஎன்று தெரிந்ததுமே, ஹீரோ கொதித்து எழுந்து கிளம்பிவிடுவார். ஆனால் இங்கே அப்புரூபினி எபிசோடு வலுவான காரணமாக இருக்கும்

ரெஜிஸ்ட்ரார் ஆபீஸில் ஏமாறுவதில் ஆரம்பித்து, அம்மாவால் அவமானப்படுத்தப்பட்டு, உன்னை நினைச்சேன் என்று பாடிக் கலங்கி, தூக்கில் தொங்குவது வரை வரும் எபிசோடு கதையில் முக்கிய மய்யம்! கமலஹாசன் ஏன் சிறந்த நடிகர் என்பதற்கு இந்த எபிசோடை மட்டும் காட்டினால் போதும். உன்னை நினைச்சேன் பாடலில் முகத்தில் முகமூடி போட்டு அழும்போது, உள்ளே எப்படி அழுவார் என்பதை நம் கற்பனைக்கே விட்டிருப்பார்கள். (சிவாஜியின் ஜிஞ்ஜினுக்கா சின்னக்கிளி பாடல் இன்ஸ்பிரேசனாக இருந்திருக்கலாம்.) திடீரென ஆசை காட்டப்படுதல், அதைக் கொண்டாடுதல், தான் ஏமாந்துவிட்டதை நினைத்துக் கலங்குதல், கூடவே அம்மாவின் வார்த்தைகள் என்று எமோசனின் உச்சத்திற்கு நம்மையும் அழைத்துச் சென்றிருப்பார்கள்.

கொலை செய்யும் முறைகளையும் புதுமையாகப் படைத்திருப்பார்கள். கோலி குண்டு, புலி, சர்க்கஸ் துப்பாக்கி என்று விளையாடியிருப்பார்கள்

அநேகமாக அப்பு கேரக்டரை முடிவு செய்துவிட்டு, அதில் இருந்து தான் பின்னோக்கிப் போய் கதை பண்ணியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒருவன் குள்ளன்..அதனால் அவமானம்..குள்ளமானதற்கு காரணமான வில்லன்கள்..அவர்களை குள்ளனே பழி வாங்குவது என்று அதை செமயாக டெவலப் செய்திருக்கிறார்கள்.

படம் வெளியானபோது, அப்பு கேரக்டர் பற்றியே எங்கும் பேசப்பட்டது. அப்பு கேரக்டர் ரகசியம் பலவருடங்களாக கட்டிக்காக்கப்பட்டது. பட வெற்றிவிழாவில் அப்பு கெட்டப்பில் வந்து, கலைஞர் கையால் கமல் விருது வாங்கினார்.  சிவாஜியே செய்யாத கேரக்டரைச் செய்துவிட்டார் என்று கமல் கொண்டாடப்பட்டார்.

சர்க்கஸ், யானை, புலி, சிங்கம், அப்பு என்று குழந்தைகளை கவர்வதற்கான ஐட்டங்கள் பட த்தில் இருந்த தால், குடும்பம் குடும்பமாக தியேட்டருக்குப் படை எடுத்தார்கள். உலக சினிமாக் கிறுக்கு கமலுக்கு முற்றாத காலம் அது. எனவே கமர்சியல் நாயகனாகவும் அவர் ஜொலித்துக்கொண்டிருந்தார். இந்தப் படம் குழந்தைகளையும் கமல் பக்கம் கொண்டுவந்தது. (இதைப் பார்த்து எங்க தலைவரும் ராஜா சின்ன ரோஜா நடித்தது தனிக்கதை!)

கௌதமிகமலில் காதல் போர்சனும் செம ரகளையாக இருக்கும். கிரேஸி மோகனின் வார்த்தை விளையாட்டு வசங்கள் இதில் அருமையாக ஒர்க்அவுட் ஆகியிருக்கும். ’இவர் கூடப் படிச்சவர்..அப்போ நீ குறையப் படிச்சியா?...நான் எப்படி நீட்ட்டா வர்றது?’ என்று கிடைத்த கேப்பில் எல்லாம் புகுந்து விளையாடிருப்பார்கள்.

நாகேஷ் இதில் வில்லன் என்பது இன்னொரு புதுமை. ‘சார், ஃபோன் வந்திருக்குஎன்று சொன்னால் பதிலுக்குயார் வந்தால் என்ன, இருந்து நல்லா சாப்பிட்டு போகச் சொல்லுஎன்று லந்து கொடுப்பது, ‘என்னடா பாதி ஆளைக் கொண்டு வந்திருக்கிறே?’ என்று கேட்பது என வில்லத்தனத்துக்குள்ளும் தனது ட்ரேட் மார்க் நகைச்சுவையைப் புகுத்தியிருப்பார்.

அடுத்து இசைஞானியின் பாடல்களும் பிண்ணனி இசையும். ஒவ்வொரு பாட்டையும் லட்டு மாதிரி போட்டுக்கொடுத்திருந்தார். ஒன்றுகூட சோடை போகாதவை. சிறு வயதில் பப்பப்பா பப்பரேபாடலும் டீன் ஏஜில் வாழ வைக்கும் காதலுக்கு ஜே..ம்க்கும்..க்கும்க்கும்பாடலும் இப்போதெல்லாம் உன்னை நினைச்சேன்பாடலும் என் ஃபேவரிட் என்பதையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன்.

கொலை செய்யும் குறைபாடுள்ள ஹீரோ, அதற்கான காரணம், கொலை செய்யும் முறை, கொலைப்பழி இன்னொரு ஹீரோ மேல் விழுவது, ஒட்டுமொத்தப் படமுமே ஜாலி மூடிலேயே நகர்வது போன்றவற்றால் ஒரு க்ளிஷே கதையை சுவாரஸ்யமாக்கி, பார்க்கவே அப்போது (இப்போதும்) ஃப்ரெஷாக, தமிழில் இப்படி ஒரு கமர்சியல் படமா என்று வியக்கும்படி கலக்கிய படம், அபூர்வ சகோதரர்கள்.

மேலும் வாசிக்க... "Revisiting….அபூர்வ சகோதரர்கள் (1989)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, June 17, 2018

காலா : ஒரு வித்தியாசமான டான்


பாஸ், இந்த படத்துல நீங்க ஒரு டானா வர்றீங்க.
போன படத்துலயும் அப்படித்தானப்பா வந்தேன்?
ஆமாம்..ஆனால் இதுல வித்தியாசமான டானா வர்றீங்க.
எப்டி..எப்டி?
வில்லன் உங்களையும் உங்க லவ்வரையும் கலவரம் செஞ்சு பிரிச்சிடுறான்.
இப்போ நான் வில்லனை பிரிபிரின்னு பிரிக்கணும்..அதானே?
இல்லை பாஸ்..நீங்க வேற பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டின்னு செட்டில் ஆகிடுறீங்க.
ஏன்?
ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான்.
அப்புறம்?
வில்லன் உங்க அப்பாவை கொன்னுடறான்
ஹா..இப்போ நான் பொங்கி எழுந்து சும்மா..
பாஸ்...பாஸ்..அதெல்லாம் இல்லை. நீங்க உங்க ஏரியா பொடிசுகளோட கிரிக்கெட் விளையாடி க்ளீன் போல்டு ஆகிறீங்க.
ஏன்பா அப்படி?
ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான் பாஸ்.
இப்பவே கிர்ருங்குதே தம்பி..
இதுக்கே அசந்துட்டா எப்படி சார்..இன்னும் ஸ்பெஷல் ஐட்டம் எல்லாம் வச்சிருக்கேன். வில்லன் இப்போ உங்க ஏரியா நிலத்தையெல்லாம் அபகரிக்க வர்றான்.
நான் ஒரு வீச்சரிவாளோட போய் அவனை..
நோ..நோ..வில்லனை நீங்க இப்போ ஒன்னும் செய்யக்கூடாது பாஸ்.
ஏன்?
ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான்.
ஹய்யோ..சரி சொல்லு.
அப்புறம், வில்லன் உங்க மூத்த மகனைக் கொன்னுடறான்.
இது சூப்பர் தம்பி...என் பிள்ளை மேலயா கைவச்சேன்னு துப்பாக்கியோட போய்...
பாஸ்...அதெல்லாம் இல்லை பாஸ்.
அதுவும் இல்லையா? ஏன்ன்ன்?
ஏன்னா நீங்க ஒரு......நீங்க ஒரு வித்தியாசமான டான். மறந்துட்டீங்களா பாஸ்?
ஏம்பா, வித்தியாசம் தான் இருக்கு. டானைக் காணோம்?
பொறுங்க பாஸ்..வில்லன் உங்க பொண்டாட்டியைவும் கொன்னுடறான்.
அவளையுமா? இப்பவும் நான் சும்மா இருக்கணும்...அதானே?
இல்லை பாஸ்...ஸ்லோமோசன்ல வில்லன் வீட்டுக்குப் போறீங்க.
ஹாஹா...தியேட்டர்ல சும்மா விசில் பறக்குது..
ஆமாம் பாஸ்...போய் வில்லனைப் பிடிச்சு ‘கறுப்பு உழைக்கும் வர்க்கத்தின் கலர்’ன்னு சொல்லிட்டு வந்துடறீங்க.
ஏன்..ஏன்...ஏன்?
ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான். அப்புறம், வில்லன் அடியாட்களை அனுப்பி, உங்க வீட்டைக் கொளுத்தி, ஏரியாவைக் கொளுத்தி உங்க உயிர் நண்பனையும், இளைய மகனையும் மண்டையைப் பொளந்துடறான்.
இப்போ என்ன, நான் உண்ணாவிரதம் இருக்கணுமா?
இல்லை பாஸ்...அந்த சிரமம்கூட உங்களுக்கு வேண்டாம்னு, வில்லன் ஆளுங்க உங்களையும் கொன்னுடறாங்க.
என்னையுமா?
ஆமா பாஸ்.
தம்பி, என்னையுமா தம்பி?
ஆமா பாஸ்
நாந்தான் ஒன்னுமே செய்யலையேப்பா?
ஆமா பாஸ்...ஆனாலும் நீங்க ஒரு வித்தியாசமான டான் இல்லையா? அதனால கொன்னுடறாங்க.
ஆஹாங்...அப்புறம்?
வில்லன் மறுபடியும் நிலத்தை அபகரிக்க வர்றான்..மக்கள் பொங்கி எழுந்து, வில்லன் மூஞ்சில கோலமாவைப் பூசி, அவனைக் கொன்னுடறாங்க பாஸ்.
மக்கள் என்ன தம்பி செய்யறாங்க?
வில்லனைக் கொன்னுடறாங்க சார்.
டேய்...இதைத் தானடா நான் முதல்லயே செய்யறேன்னு சொன்னேன். நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இதே மக்களே முதல் சீன்லயே இதை செஞ்சிருப்பாங்களேடா...அப்படிப் பண்ணியிருந்தால், என் பொண்டாட்டி, பிள்ளைகள், ஆடியன்ஸ்ன்னு எல்லாருமே தப்பிச்சிருக்கலாமே? ஏண்டா இப்படிப் பண்ணே?
அதான் சொன்னேனே பாஸ்...நீங்க ஒரு வித்தியாசமான டான்னு..அதனால தான்!!
மேலும் வாசிக்க... "காலா : ஒரு வித்தியாசமான டான்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, June 10, 2018

கலைஞர் ஆட்சியின் மிக முக்கியமான 95 சாதனைகள் - ரெபெல்ரவி1. மனிதனை வைத்து மனிதன் இழுத்த கை ரிக்சாக்களை ஒழித்துவிட்டு, அவற்றுக்கு மாற்றாக அந்தத் தொழிலாளிகளுக்கு இலவச சைக்கிள் ரிக்சாக்கள் வழங்கப்பட்ட திட்டம்.
2. பட்டிதொட்டி முதல் மாநகர் வரையில் பார்வை இழந்தோர்க்கு இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம்.
3. பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்.
4. விவசாயிகளுக்கு – நெசவாளர்களுக்கு – இலவச மின்சாரத் திட்டம்.
5. பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம் – வேலையில் 30 சதவிகித ஒதுக்கீடு.
6. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம்.
7. குடிசை மாற்று வாரியம்.
8. குடிநீர் வாரியம்.
9. ஆதி திராவிடர்க்கு இந்தியாவிலேயே முன் மாதிரியான இலவச வீடுகள் வழங்கும் திட்டம்.
10. மலம் சுமக்கும் துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுக்கு மாற்றுத் திட்டம்.
11. பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு – அரசு போக்குவரத்துக் கழகங்கள் அமைப்பு; பேருந்துகள் கிராமங்களுக்கெல்லாம் செல்ல வழிவகை காணப் பட்டது.
12. உடல் ஊனமுற்றோருக்கு உதவி வழங்கும் பல்வேறு திட்டங்கள்.
13. விவசாயிகளுக்கு 7000 கோடி ரூபாய் கடன் ரத்து திட்டம் – வட்டி 9 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக் குறைப்பு.
14. கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்றாக்கி, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்த்
திட்டம்.
15. விலைவாசியைக் கட்டுப்படுத்திட குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் – 50 ரூபாய்க்கு 75 ரூபாய் பெறுமானமுள்ள மளிகைப் பொருள்கள்.
16. காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என்று சட்டம் – மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ரத்து.
17. சத்துணவில் வாரம் மூன்று முட்டைகள் – வாழைப்பழம் வழங்கும் திட்டம்.
18. புதிய புதிய பல்கலைக்கழகங்கள் – பொறியியல் கல்லூரிகள் – மருத்துவக்கல்லூரிகள் – கலை அறிவியல் கல்லூரிகள்.
19. பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பேருந்து பாஸ்.
20. ஏழை மகளிருக்கு முதுகலைப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி.
21. சத்துணவு ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம்.
22. பள்ளிகளில் தமிழ்க் கட்டாயப் பாடம் எனச் சட்டம்.
23. பரிதிமாற் கலைஞரின் கனவு நனவாகி தமிழ் செம்மொழி என அறிவிப்பு.
24. தைத் திங்கள் முதல் நாள் – தமிழ்ப் புத்தாண்டு எனச் சட்டம்.
25. மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை.
26. ஏழைப் பெண்களின் திருமண உதவிக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி.
27. கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் நிதி உதவி
28. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 25 நல வாரியங்கள்.
29. 50 வயதாகியும் திருமணம் ஆகாத ஏழை மகளிருக்கு மாதம் 400 ரூபாய் வழங்கும் திட்டம்.
30. மகளிர் சுய உதவிக் குழுக்கள் – சுழல் நிதி உதவிகள்.
31. அதைப் போலவே இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் சுய உதவிக் குழுக்கள்.
32. தொலைக் காட்சிப் பெட்டிகள் இல்லா வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்.
33. பெண்களுக்கு எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள்.
34. பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்.
35. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்.
36. நமக்கு நாமே திட்டம்.
37. ராமநாதபுரம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்.
38. திருச்சியில் உய்யகொண்டான் – சேலத்தில் திருமணிமுத்தாறு சீரமைப்புத் திட்டங்கள்.
39. மாநிலத்திற்குள் நதிகளை இணைக்கும் மாபெரும் திட்டம்.
40. நகராட்சிகள் அனைத்திலும் பாதாளச் சாக்கடைத் திட்டம்.
41. சென்னை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம்.
42. சென்னை மாநகரில் விளம்பரப் பலகைகளை அகற்றி சிங்காரச் சென்னையாக்கிய திட்டம்.
43. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
44. கட்டணத்தை உயர்த்தாமல் பத்தாயிரம் புதிய பேருந்துகள்.
45. புதிய சட்டமன்ற வளாகம் – தலைமைச் செயலகம்.
46. உலகத் தரத்தில் அண்ணா அரசு நவீன நூலகம்.
47. உழவர் சந்தைத் திட்டம்.
48. வேலை நியமனத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு அரசுத் துறைகளில் புதிதாக 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.
50. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய காவலர்கள் நியமனம்.
51. இந்தியாவிலேயே முன்னோடியாக மூன்று காவல் ஆணையங்கள் (போலீஸ் கமிஷன்கள்).
52. வருமுன் காப்போம் திட்டம்.
53. ஏழைச் சிறார் இதய நோய்த்தீர்க்கும் திட்டம்.
54. நிலமற்ற ஏழைகளுக்கு இலவச நிலம்.;
55. புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்வோருக்கு வீட்டு மனைப்பட்டா.
56. இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு.
57. கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் ரத்து.
58. மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு.
59. பழங்குடியினருக்கு புதிதாக ஒரு சதவிகித இட ஒதுக்கீடு.
60. அரசு அலுவலர்களுக்கு மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதியம்.
61. அரசு அலுவலர் இறந்தால் குடும்பப் பாதுகாப்பு நிதி.
62. விடுதலை வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் நினைவகங்கள் – குடும்பங்களுக்கு நிதி உதவிகள்.
63. சென்னையில் வள்ளுவர் கோட்டமும், குமரி முனையில் 133 அடி உயரத்தில் வள்ளுவருக்கு சிலை.
64. பல்வேறு சாலைகள்.
65. கத்திப்பாரா உட்பட பல்வேறு மேம்பாலங்கள்.
66. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள் தூய்மையாய் மாறின.
67. தனியாரிடமிருந்து நிலத்தை மீட்டு செம்மொழிப்பூங்கா.
68. அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம்.
69. ராஜாஜி நினைவகம்.
70. காமராஜர் நினைவகம்.
71. அண்ணா நினைவகம்.சீரமைப்பு.
72. எம்ஜிஆர் திரை நகர் வடிவமைப்பு.
73. தமிழில் பெயர்ப்பலகை கட்டாயத்திட்டம்.
74. செந்தமிழில் பெயரிட்ட சினிமாவுக்கு வரிவிலக்கு.
75. பெரியார் திரைப்படத்துக்கு மானியம்.
76. அம்பேத்கர் திரைப்படத்துக்கு மானியம்.
77. சென்னையில் மிக நவீன வர்த்தக மையம்.
78.கோயம்பேடு பஸ் நிலையம்.
79.கோயம்பேடு காய்கனிச் சந்தை.
80. காவேரி தீர்ப்பாயம் அமைக்க வழக்கு.
81. ஈழத்தமிழ் அகதியர் நலனுக்குப் பல்வேறு நடவடிக்கைகள்.
82. கர்நாடகத்தில் வள்ளுவர் சிலை.
83. தலைநகர் தில்லியில் வள்ளுவர் சிலை.
84. பூம்புகார் கோட்டம்.செம்மொழி பூங்கா, தொல்காப்பிய பூங்கா, பெரம்பூர் மாறன் பூங்கா, அண்ணா நகர் பூங்கா....
இப்படி பல பல பூங்காக்களை சென்னையில் உருவாக்கியதும் திமுக ஆட்சிதான்...
84.சோழிங்கநல்லூர் SEZ, சிறுசேரி SEZ, IT ஹைவே, கோவை, மதுரை, திருச்சி என முக்கிய
நகரங்களில் IT பார்க்குகள் என பல தொழில்வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்து மென்பொருள்
துறையில் சென்னையை முக்கிய இடம் பிடிக்கசெய்தது திமுக...
85.சென்னை துறைமுக விரிவாக்கம், எண்ணூர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம்,
நின்றுபோன கிருஷ்ணா கால்வாய் குடிநீர் திட்டம் என்று சென்னையின் வளர்ச்சிக்காக திட்டங்களை
கொண்டுவந்ததும் திமுகதான்...
86. பல பின்தங்கிய மாவட்டங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்து தொழில்
வளர்ச்சிக்கு உதவியது திமுக.. தமிழ்நாடு மென்பொருள் ஏற்றுமதி மற்றும் ஆட்டோமொபைல்
உற்பத்தியில் முன்னிலை வகிக்க காரணம் திமுக..
87. 2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே, சுமார் ஏழு பெரிய புதிய மின் உற்பத்தி நிலையங்களை
மேட்டூர், வல்லூர், எண்ணூர் போன்ற இடங்களில் துவக்கப்பட்டன..
88.தமிழகத்தின் தொழில்வளர்ச்சி 33% அதிகரித்தது 2006-11 திமுக ஆட்சியின் போதுதான்...
தமிழகத்தை தொழில்வளர்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கியது கலைஞரின் திமுக
ஆட்சி.. அதின் காரணமாக, இந்தியாவிலேயே GDPயில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ் நாடு..
GST வரிவசூலிலும் இரண்டாம் இடத்தில், அதிகளவு வரி செலுத்தும் உற்பத்தி மாநிலமாக தமிழ் நாடு
முன்னிலை வகிக்கிறது..
89. தமிழ் மொழியிலும் கோயில்களில் அர்ச்சனை செய்ய பயிற்சிகளும் சட்டமும் போடப்பட்டது
திமுக ஆட்சியில்..
90.2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே 2,459 இந்து கோயில்களுக்கு திருப்பணி நடைபெற்று
குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றன..
91. ஆசியாவிலே பெரிய தேர் ஆன, திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் 1948 ஆம்
ஆண்டோடு நின்றுவிட்டது. அதை பழுதுபார்த்து, புணரமைத்து 1970 ஆம் ஆண்டில், 25 ஆண்டுகளுக்கு
பின், மீண்டும் தேரோட்டத்தை நடத்தியவர் கலைஞர்..
92. உலகத்தமிழ் மாநாடு.
93. சிங்காரச்சென்னையில் நாட்டுப்புறத் தொன்கலைச் சிலைகள் அமைப்பு.
திமுக ஆட்சியில் 42 அணைகள் கட்டப்பட்டன
94. கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி திட்டத்தை 1973 ஆம் ஆண்டு துவக்கி
செயல்படுத்தியது கலைஞர். அத்திக்கடவு அவிநாசி குடிநீர் முதல்
95. பகுதியான கோவைக்கு குடிநீர் வழங்கும் "பவானி
அத்திக்கடவு திட்டம்" என்கிற அந்த திட்டத்தை 2001-06 ஆண்டுகளில் செயல்படுத்தியவர் கலைஞர்.
(சாதனைப் பட்டியல் தொடரும்)
ரெபெல்ரவி
06/06/18

மேலும் வாசிக்க... "கலைஞர் ஆட்சியின் மிக முக்கியமான 95 சாதனைகள் - ரெபெல்ரவி"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

காளி : இயக்குநர் vs விமர்சகர்கள்


காளி படம் மோசம் என்று விமர்சகர்கள் சொல்ல, இயக்குநர் கிருத்திகா உதயநிதி கொதித்து எழுந்துவிட்டார். ’எப்படி என் படத்தை நல்லா இல்லைன்னு சொல்லலாம்? நீங்க இப்படிச் சொன்னதால்தான் படம் ஊத்தி மூடிக்கிச்சு’என்று சண்டைக்குப் போய்விட்டார். அவர் தரப்புக் கருத்தாக, காளி ஏன் நல்ல படம் என்று அவர் முன்வைத்த பாயிண்ட்ஸ் இவை தான் :


1. ஹீரோ நான்கு கெட்டப்பில்...

2. ஒரே படத்தில் மூன்று வெவ்வேறு கதைகள்...

3. மூன்று கதைகளுக்கும் இடையே தொடர்பு
4. அவசரமாக ரிவ்யூ செய்வதால், உங்களால் வித்தியாசமான படங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒரு இயக்குநர் ஒரு படத்தை எடுக்க நினைக்கத் தூண்டுதலாக, தன் படத்தின் பலமாக சில விஷயங்களை மனதில் வைத்திருப்பார். கிருத்திகாவைப் பொறுத்தவரை முதல் மூன்று பாயிண்ட்ஸ் தான் அவை. ஐடியாவாகப் பார்க்கும்போது நன்றாகவே இருக்கிறது. ஆனால் திரைப்படம் என்பது ஐடியாவிற்காக ஜெயிப்பதில்லை; அந்த ஐடியா எப்படி எக்ஸிக்யூட் பண்ணப்படுகிறது (திரைக்கதையாக) என்பது தான் சூட்சுமம்.

இரண்டு ஹீரோக்கள்.அதில் ஒருவன் விக்ரமாதித்யன், இன்னொருவன் வேதாளம் என்பது ஐடியா. .போலீஸ் vs தாதா - என்று கேரக்டர் பிடித்து, திரைக்கதையையும் ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்?’ என்று ஃப்ளாஷ்பேக் உத்திகளாகப் பிரித்து, ஒவ்வொரு ஃப்ளாஷ்பேக்கையும் முக்கியமான கேள்வியில் நிறுத்தி விக்ரமாதித்யனை சுற்றலில் விட்டது தான் பெர்ஃபெக்ட் எக்ஸிக்யூசன். ஒவ்வொரு சீனையும் எப்படி புதிதாகச் சொல்லலாம் என்று மண்டையைப் பிய்த்துக்கொள்வது தான் திரைக்கதை எழுதுதல். ஃபர்ஸ்ட் ட்ராஃப்ட்டில் வரும் மொக்கை சீன்களை எடுத்துக்கொண்டு விஜய் ஆண்டனியையும் விக்ரம் பிரபுவையும் விக்ரம்-வேதாவாக புக் செய்வது அல்ல, ஃபிலிம் மேக்கிங்!

1. நான்கு கெட்டப் ஹீரோ என்பது தான் கதையின் பாசிடிவ்களில் ஒன்று எனும்போது, விஜய் ஆண்டனியிடம் போனது தவறு. மற்ற ஹீரோக்களிடம் போயிருந்தாலும் எஸ்கேப் ஆகியிருப்பார்கள் என்பது வேறு விஷயம். எனக்கு நடிக்கத் தெரியாது என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும் ஒரு ஹமாம் பார்ட்டியிடம் போய் இந்தக் கதையைக் கொடுத்ததுமே, முதல் பாயிண்ட் அவுட். விமர்சனத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பை எல்லோரும் சுட்டிக்காட்டுவதன் காரணம், படத்தின் பாசிடிவ்வை அவர் நெகடிவ்வாக மாற்றியது தான்.

அடுத்து திரைக்கதைரீதியாக இந்தப் பாயிண்ட்டை அணுகினால், நான்கு கெட்டப்பில் ஹீரோவே வருவதற்கான காரணம் போதுமானதாக இல்லை. முதல் ஃப்ளாஷ்பேக்கை யோகிபாபு நினைத்துப் பார்க்கிறார், ஓகே. ஆனால் மூன்றாவது ஃப்ளாஷ்பேக்கை ஹீரோ டைரியில் தானே படிக்கிறார். அங்கே ஜெயப்பிரகாஷ் தானே வர வேண்டும்? என்ன இழவு லாஜிக் இது?

2. ஒரே படத்தில் மூன்று வெவ்வேறு கதைகள் :
ஹீரோ அப்பாவைத் தேடுவது ஒரு ப்லாட். அதில் மூன்று வெவ்வேறு கதைகளை கோர்த்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது பார்த்தீர்களா? என்பது அடுத்த பாயிண்ட். ஆமாம், அப்படித்தான் இருக்கிறது. ஆனாலும் ஏன் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை? காரணம், மூன்று கதைகளுமே அரதப்பழசான மொக்கைக் கதைகள் என்பதால் தான். மெயின்கதையில் சட்டென்று ஒரு சுவாரஸ்யமான கதையை ஓப்பன் செய்து, மீண்டும் மெயின் கதைக்கு வந்து, மறுபடியும் இன்னொரு சுவாரஸ்யமான கதையைச் சொல்லியிருந்தால், படம் ஹிட் ஆகியிருக்கும்.

ரோமியோ-ஜூலியட்டாக நடித்து காதலில் விழும் காதலர்களின் முடிவும் ரோமியோ-ஜூலியட் முடிவு போலவே அமைந்துவிடுகிறது..த்சொ..த்ச்சொ..அடடே, ஆச்சரியக்குறி! இந்த மாதிரி நெஞ்சை நக்கும் கதை எல்லாம் இந்தக் காலத்தில் சொல்ல அசாத்திய துணிச்சல் வேண்டும். இதே தான் மற்ற இரண்டு கதைகளிலும். ஒரு நல்ல ஐடியாவை மொக்கை சீன்களால் நிரப்பிவிட்டு, குய்யோ முறையோ என்று கத்தி ஆகப்போவதென்ன?

3. ஒன்றுக்கொன்று தொடர்புடைய 3 கதைகள்:

‘மூணு கதைகளுக்கு இடையில் லின்க் இருக்கு..அதையாவது பார்த்தீங்களா?’ என்று அடம்பிடித்து அழுகிறார் இயக்குநர். முதல் கதை இல்லையென்றால் இரண்டாம்/ மூன்றாம் கதை புரியாது என்று சொல்லும் அளவிற்கு திரைக்கதை பின்னப்பட்டிருந்தால் தான் இதை ஒரு வலுவான பாயிண்ட்டாகச் சொல்ல முடியும். மூன்று கதைகளையும் விருமாண்டி போல் ஒன்றையொன்று நிரப்பும் ஃப்ளாஷ்பேக்-களாக ஆக்கியிருக்க முடியும். அதற்கு கொஞ்சம் வேலை செய்யணும். முதல் இரண்டு கதைகளை கட் செய்துவிட்டு, ஸ்ட்ரெய்ட்டாக மூன்றாவது கதைக்குப் போனாலும், அது புரிகிறது. அப்புறம் எதற்கு வேஸ்ட்டா மூணு கதை என்று தான் ஆடியன்ஸே நினைப்பார்கள். அது தான் நடந்தது.

4. அவசரத்தில் விமர்சனம்:

’என்னுடைய திரைக்கதை சித்துவேலைகள் எல்லாம் புரியற அளவுக்கு உங்களுக்கு கெப்பாக்குட்டி இல்லை’ என்று வெள்ளந்தியாகப் பேசுகிறார் இயக்குநர். முகமும் மனதும் குழந்தையாகவே அமைவது வரம். இருக்கட்டும்...ஆரண்ய காண்டம், உறியடி, அருவி என்று வித்தியாசமான படங்களை இணைய விமர்சகர்கள் கொண்டாடவே செய்திருக்கிறார்கள். யாரும் அவசரத்தில் படம் புரியாமல் சொதப்பியதில்லை. எனவே வித்தியாசமான படங்களை வரவிடாமல் விமர்சனங்கள் தடுப்பதாகச் சொல்வதில் நியாயமில்லை.

நான் பல நுண்ணிய வேலைப்பாடுகள் செய்தும் நீங்கள் குறிப்பிடவில்லை, கண்டுகொள்ளவில்லை என்பது தான் இயக்குநரின் ஆகப்பெரிய மனக்குறை. அதற்குப் பதில் சிம்பிள்: படம் கொஞ்சமாவது நன்றாக இருந்தால் தான், அதைப் பற்றி மீண்டும் நினைத்துப் பார்த்து, அடடே..இது நல்லா இருந்ததே...அது நல்லா இருந்ததே’ என்று யோசிப்பார்கள். அதிகம் அது பற்றிப் பேசாமல், துயரங்களை மனம் மறக்கவே விரும்பும்!


 போனஸ் : ’எங்க வீட்ல வேலை செய்றவங்களைக் கேட்டேன். அவங்களுக்கு படம் புரிஞ்சிருக்கு, பிடிச்சிருக்கு’ என்று கிருத்திகா சொன்னதைக் கேட்டு அப்படியே ஷாக் ஆகிட்டேன். ஏன் தாயீ, பிடிக்கலைன்னு சொன்னால் அடுத்த நிமிசமே வேலையை விட்டுத் தூக்கிற மாட்டீங்களா? எனக்கு உங்க கம்பெனியில் வேலை கொடுத்தால், நானே மேலே எழுதிய எல்லாவற்றையும் அழித்துவிட்டு சூப்பர்னு தான் சொல்வேன். நமக்கு சோறு தான் முக்கியம்!

படத்தில் எனக்குப் பிடித்தது அரும்பே பாடல் & அஞ்சலி ..அவ்ளோ அழகு!
மேலும் வாசிக்க... "காளி : இயக்குநர் vs விமர்சகர்கள்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.