Showing posts with label கோலிவுட். Show all posts
Showing posts with label கோலிவுட். Show all posts

Wednesday, May 21, 2014

ஹிட்ச்காக்கின் Vertigo (1958) - விமர்சனம்

ஹிட்ச்காக்கின் படங்களிலேயே அழகான படம் என்று போற்றப்படுவது Vertigo. வழக்கமான சஸ்பென்ஸ் படம் என்று ஒதுக்கிவிட முடியாத அளவிற்கு, உணர்ச்சிகளின் குவியலாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் ஹிட்ச்காக். உண்மைக்கும் மாயைக்கும் இடையே ஒரு மனிதனின் உணர்ச்சிகள் பந்தாடப்படுவதே படத்தின் அடிநாதம். 
படத்தின் முதல் காட்சியில் யாரோ ஒருவனை ஒரு போலீஸ்காரரும் இன்னொரு போலீஸான ஹீரோவும் விரட்டுகிறார்கள். சேஸிங்கின்போது ஒரு உயரமான கட்டடத்தில் தாவும்போது ஹீரோ வழுக்கி, அந்தரத்தில் தொங்குகிறார். அப்போது தான் ஹீரோவுக்கு உயரத்தைக் கண்டால் பயப்படும் அக்ரோஃபோபியா எனும் நோய் இருப்பது தெரிய வருகிறது. அவருக்கு உதவி செய்ய வரும் உடன்வந்த போலீஸ்காரர், அந்த பலமாடி உயரக் கட்டிடத்தில் இருந்து விழுந்து இறக்கிறார். ஹீரோ பிழைக்கிறார். ஒரு ’மாயமான’ ஆளை விரட்டிப் பிடிக்கும் முயற்சியில் உடன் இருக்கும் உண்மையான ஒரு ஆளை இழக்கிறார் ஹீரோ. அது தான் படத்தின் கருவும்!

மேலே சொன்ன சம்பவத்திற்குப் பின் குற்ற உணர்ச்சியால் ஹீரோ ஸ்காட்டி(James Stewart ) தனது போலீஸ் வேலையை ராஜினாமா செய்கிறார். அப்போது அவரது பழைய நண்பர் ஒரு டிடெக்டிவ் வேலையைக் கொடுக்கிறார். தன் மனைவி மேடலின் (Kim Novak- ஹீரோயின்) ஒரு ஆவியின் பிடியில் இருப்பதாகவும், அவளை ஃபாலோ செய்து எங்கெல்லாம் அவள் அல்லது அவள் உடம்பில் இருக்கும் பேய் போகிறது என்று கண்டுபிடிக்கும்படியும் நண்பர் சொல்கிறார். பேய்க்கதையை நம்ப மறுக்கும் ஹீரோ, நண்பருக்காக அந்த வேலையை எடுத்துக்கொள்கிறார். 

அதன்பின் நடக்கும் சம்பவங்கள் ஹீரோவுக்கு மட்டுமல்ல, நமக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுக்கின்றன. மேடலினை பின் தொடரும் ஸ்காட்டி, அவளை காதலிக்க ஆரம்பிக்கிறார். தொடர்ந்து நடக்கும் மர்மமான & ரொமாண்டிக் சம்பவங்களை அடுத்து, மேடலின் தற்கொலை செய்துகொள்கிறாள். அதனால் மனம் பேதலித்த நிலையில் இருக்கும் ஸ்காட்டி, மேடலின் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஜூடி எனும் அழகிய இளம்பெண்ணை சந்திக்கிறார். மீதியை லேப்டாப் திரையில் காண்க.
Boileau-Narcejac என்பவர் எழுதிய நாவலை ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது, இந்தப் படம். ஹிட்ச்காக்கின் The Wrong man படத்திற்கு திரைக்கதை எழுதிய Maxwell Anderson-ஐ வைத்து வெர்டிகோவின் திரைக்கதையை உருவாக்க ஆரம்பித்தார் ஹிட்ச்காக். அது சரிவராமல் போக, அவரை விரட்டிவிட்டு Alec Coppel எனும் நாவலாசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான இன்னொரு லெஜண்டை கொண்டுவந்தார். அவரும் ஹிட்ச்காக்கும் இணைந்து ஒரு திரைக்கதையை உருவாக்க, அதிலும் சம்திங் ராங் என்று ஹிட்ச்காக்கும் தயாரிப்பு நிறுவனமும் அவரை விரட்டிவிட்டன. அடுத்து வந்தார் Samuel A. Taylor. கோப்பெல் உருவாக்கியிருந்த திரைக்கதையை பட்டி பார்த்து, நெளிசல் எடுத்து ஒரு அட்டகாசமான திரைக்கதையை உருவாக்கினார். அதுவே நாம் படத்தில் பார்ப்பது.

நாவலைத் தானே படம் எடுக்கிறார்கள், அதற்கு ஏன் இத்தனை பாடு என்று நீங்கள் நினைக்கலாம். நாவல் இரண்டாம் உலகப்போரை பிண்ணனியாகக் கொண்டது. அது இந்தக் கதைக்கு தேவையில்லை. இங்கே ஹீரோவுக்கும் ஹீரோயினுக்குமான உணர்ச்சிப்போராட்டமே முக்கியம் எனும் முடிவுக்கு ஹிட்ச்காக் வந்திருந்தார். நாவலில் ஹீரோ மனதிற்குள் யோசிப்பதை எழுதிவிடலாம். படத்தில் வாய்ஸ் ஓவரில் சொன்னால் நன்றாக இருக்காதே? எனவே ஹீரோ மனம்விட்டுப் பேசும் ஒரு தோழி (ஒருதலைக் காதலி) கேரக்டரை உருவாக்கினார்கள். இதை சர்ப்ரைஸ் பாணியில் சொல்வதா, சஸ்பென்ஸ் பாணியில் சொல்வதா என்பது வேறு பெரும் பஞ்சாயத்தாக இருந்தது. முடிவில் சஸ்பென்ஸ் கேட்டகிரிக்கே வந்தார்கள்.

படத்தின் முதல்பாதி, மேடலினின் கற்பனை அல்லது ஆவி உலகத்தில் நாமும் சஞ்சரிப்பது போன்ற தோற்றம் வரும்படி எடுத்திருப்பார்கள். ஷார்ப்பான  வளைவுகளைக் கொண்ட மலைரோடுகள் இருக்கும் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரை தேர்ந்தெடுத்தார் ஹிட்ச்காக். ஹீரோ ஹீரோயினை ஃபாலோ செய்யும்போது, அதன் எஃபக்ட் நன்றாகவே தெரியும். ஹீரோயினின் ஆவி உலகத்தையும் வெர்டிகோ எஃபக்ட்டையும் சரிவிகிதத்தில் கலப்பது போல் அமைந்திருக்கும், காட்சிகள் கொடுக்கும் எஃபக்ட். ஹீரோ தான் ஹீரோயினை ஃபாலோ செய்வதாக நாம் நினைத்திருக்க, அப்படியில்லை ஹீரோயின் தான் ஹீரோவை அவள் விரும்பும் இடத்திற்கெல்லாம் வரவழைக்கிறாள் என்று பின்னால் தெரியும்போது, நமக்கும் வருகிறது வெர்டிகோ எஃபக்ட்!
வழக்கமான ஹிட்ச்காக் படங்களைப் போல் அல்லாமல், இந்தப் படம் துப்பறியும் கதையாக இல்லாமல் காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. மேடலின் இறந்தபின், அந்த கேஸை அதற்கு மேல் துப்பறிவதை விட, ஜூடிக்கும் ஸ்காட்டிக்கும் உருவாகும் உறவு நுணுக்கமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அதாவது பொதுவாக க்ரைமிற்கான காரணம் தான் MacGuffin-ஆக வரும். ஆனால் இந்தப் படத்தில் அந்த க்ரைமே MacGuffin தான்.

ஸ்காட்டி தன் குற்றவுணர்ச்சியில் இருந்து மீண்டுவர, ஜூடியை மேடலின் போல் மாற்ற முயற்சிக்கிறான். ஸ்காட்டியை காதலிக்கும் ஜூடி ‘என்னை அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாதா? ஏன் மேடலின் போல் என்னை மாற்றுகிறீர்கள்?’ என்று கெஞ்சுகிறாள். ஸ்காட்டியின் இதயம் அந்த மாயம் நிறைந்த பெண்ணான மேடலின் மீதே நிலைத்திருக்க, ஜூடியின் இதயம் ஸ்காட்டியின் அன்புக்காக ஏங்கும் காட்சிகளில் நமக்கு ஜூடியின் மேல் மட்டுமல்லாது ஸ்காட்டியின் மேலும் பரிதாபம் வருகிறது.

படத்தின் பல வசனங்கள் ஆழ்ந்த பொருள் உடையவை. முதல்முறை பார்க்கும்போது சாதாரணமாகவும், என்ன நடக்கிறது/நடந்தது என்று அறிந்தபின் பார்க்கும்போது பிரமிப்பூட்டுவதாகவும் இருக்கின்றன இந்தப் படத்தின் வசனங்கள். உதாரணமாக மேடலினின் கணவர் ‘Do you believe that someone out of the past, someone dead, can enter and take possession of a living being?’ என்று ஸ்காட்டியிடம் கேட்கிறார்.பின்னர் ஸ்காட்டியின் நிலையே அப்படி ஆகும்போது அந்த வசனத்தின் வீச்சு நமக்குப் புரிகிறது. அதே போன்றே மேடலின் ஸ்காட்டியிடம் கடைசியாகப் பேசும் வார்த்தைகள் ‘If you lose me, you’ll know I loved you and wanted to go on loving you.’ என்பது வெறும் உணர்ச்சிகரமான வார்த்தை மட்டுமல்ல, அவள் சொன்ன அர்த்தம் வேறு என்பதும் பின்னர் தான் புரிய வருகிறது. 
ஹீரோ James Stewart-ன் கரியரில் பெருமைக்குரிய படம் இது. ஹிட்ச்காக்கின் Rope,The Man Who Knew Too Much, Rear Window-ல் அவர் நடித்திருந்தாலும், வெர்டிகோ அளவிற்கு உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வழங்க அவற்றில் வாய்ப்பில்லை. வெர்டிகோ எஃபக்ட்டால் பாதிக்கப்படுபவராக, குற்ற உணர்ச்சியில் தவிப்பவராக, ரொமாண்டிக் ஹீரோவாக, இழந்த காதலியை ஜூடி வடிவில் மீட்கப் போராடுபவராக நவரச நடிப்பில் பின்னியிருப்பார். 

அதே போன்றே ஹீரோயினான நடித்த Kim Novak, மேடலின் கேரக்டரில் வரும்போது ஒரு மென்மையான பெண்ணாகவும், ஜூடியாக வரும்போது அதிரடியான பெண்ணாகவும் கலக்கியிருப்பார். Kim Novak-ன் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், அவருக்கு பிரா போடவே பிடிக்காதாம். ஹிட்ச்காக் எவ்வளவோ கெஞ்சிக்கேட்டும் ‘No..no..I'm very proud of it'-ன்னு சொல்லி பிரா அணியவே மறுத்துட்டராம். ஜூடி கேரக்டர்ல தான் அதோட எஃபக்ட் தெரியும்!
ஒரு சிக்கலான உறவாக ஆகிவிட்ட அந்த புதிய காதல் எப்படி முடியப்போகிறது என்று நாம் சஸ்பென்ஸுடன் காத்திருக்க, எதிர்பாராத கிளைமாக்ஸைத் தருகிறார் ஹிட்ச்காக். உண்மையில் அந்த கிளைமாக்ஸ் எனக்குப் பிடிக்கவில்லை. ஒருவேளை ஜூடியை நானும் லவ் பண்ணியதால் இருக்கலாம்! அப்புறம்...படம் பார்க்கும்போது உங்களுக்கு சுவாரஸ்யம் போயிடக்கூடாதுங்கிறதால, ரெண்டு ட்விஸ்ட்டையும் கிளைமாக்ஸையும் தவிர்த்திருக்கிறேன். ஒரு ஸ்டைலிஷான, சைக்காலஜிகலாக நம்மை இம்ப்ரஸ் செய்யும் படம், Vertigo.

மேலும் வாசிக்க... "ஹிட்ச்காக்கின் Vertigo (1958) - விமர்சனம்"

Tuesday, December 31, 2013

2013: சூப்பர் ஹிட்டான டாப் 5 திரைப்படங்கள்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

2013ம் ஆண்டு வெளியான படங்கள் பற்றிய அலசலில் கடைசிப்பதிவை, ஆண்டின் கடைசிநாளான இன்று பார்த்துவிடுவோம். ராஜா ராணி, எதிர்நீச்சல், இவன் வேற மாதிரி என்று சில படங்கள் ஹிட் அடித்திருந்தாலும், எல்லா சென்டர்களிலும் சூப்பர் ஹிட் ஆன படங்களின் லிஸ்ட் கீழே:
 
சூப்பர் ஹிட்#5: பாண்டிய நாடு:

தீபாவளி ரேஸில் மூன்றாவது அணியாய் களமிறங்கிய படம். ஒரு நல்ல தரமான ஆக்சன் மூவியாக இருந்ததால், விஷாலுக்கு உண்மையான ஹிட்டாக அமைந்தது. படம் வெளிவரும் முன்பே கலாய்ச்சிஃபை பாடல் ஹிட்டாகி, படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்தது.
 
ஓவர் பில்டப் இல்லாத ஹீரோயிசம், பழிவாங்க முயலும் அப்பா கேரக்டர், அதில் பாரதிராஜாவின் நடிப்பு, பவர்ஃபுல்லான வில்லன் கேரக்டர் என எல்லா விஷயங்களுமே அருமையாக அமைந்த படம். சுசீந்திரனின் 'நான் மகான் அல்ல' சாயல் இருந்தாலும், உதவியாளர் கதையை சுட்டுவிட்டதாக புகார் கிளம்பினாலும், விஷால் ஹாப்பி அண்ணாச்சி!
 
சூப்பர் ஹிட்#4: சிங்கம்-2:
 
தமிழ்சினிமாவில் பார்ட்-1, பார்ட்-2 என சீரீஸ் படங்கள் வெற்றி பெறாது எனும் சென்ட்டிமென்ட்டை அடித்து நொறுக்கிய படம். முதல் பாகத்தைவிட, அதிக விறுவிறுப்பான படம். ஹரியின் மசாலா ட் ரீட் என்பதால், எல்லா ஏரியாக்களிலும் பட்டையைக் கிளப்பியது சிங்கம்-2.
 
முதல் பாகத்தை புத்திசாலித்தனமாக, உறுத்தாமல் இதில் இணைத்தது, அந்த ஆப்பிரிக்க வில்லன் கேரக்டர், சிங்கம் போன்றே சூர்யாவை தாவி ஓட வைத்து புது எஃபக்ட்டைப் பார்ப்போருக்கு கொடுத்தது என ஒரு நல்ல கமர்சியல் படத்திற்கு உரிய அத்தனை அம்சங்களுடன் எடுத்திருந்தார்கள். பாடல்கள்தான் முதல் பாகம் அளவிற்கு இல்லை. தொடர் தோல்விகளால் துவண்டிருந்த சூர்யாவை தலை நிமிர வைத்த படம்.

சூப்பர் ஹிட் # 3: ஆரம்பம்
 
ஆவரேஜாக இருந்தாலே போதும், மாஸ் ஹீரோக்களின் படம் தப்பிவிடும் என்று நிரூபித்த படம். பில்லா-2 இயக்கியிருக்க வேண்டிய விஷ்ணுவர்த்தன், அதிலிருந்து விலகிக்கொண்டு இந்த படத்திற்கான கதையை ரெடி பண்ணினார். ஹேமந்த் கர்கரேவின் கதையை அடிப்படையாக வைத்து எழுதியிருப்பதை அண்ணன் உண்மைத்தமிழன் கண்டுபிடித்துச் சொன்னார். படத்தில் ஸ்ட் ராங்கான அரசியல் இருந்தும், எந்த பிரச்சினையும் இல்லாமல் கமுக்கமாக வெளியான படம். பாம்பாகவே இருந்தாலும், இது மாதிரி பரமசிவன் கழுத்தில் இருக்க வேண்டும்!
 
ஸ்டைலிஷான மேக்கிங், அஜித்தின் ஹாலிவுட் ஹீரோ லுக், வயதுக்குப் பொருத்தமான கேரக்டர், ஜோடி இல்லாத ஹீரோ கேரக்டர், ஆர்யாவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் என பல பாசிடிவ் விஷயங்கள் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கின. லாஜிக் பற்றி இயக்குநர் அதிகம் அலட்டிக்கொள்ளாதது தான் படத்தின் குறை. அஜித் எனும் மேஜிக்கினால் அந்த குறையும் பார்வையாளர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

சூப்பர் ஹிட் #2 : விஸ்வரூபம்

தமிழ்நாட்டையே பரபரப்பில் ஆழ்த்திய படம். அரசியல் காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் தடுக்கப்பட, கமல் சாமர்த்தியமாக அதை மீடியாவிடம் கொண்டு சென்றார். தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை அதன்மூலம் வென்றார். வழக்கமாக கமல் படம் பார்க்காதவர்கூட, இந்தப்படத்தை பார்த்தே தீருவது என்று களமிறங்கினார்கள். விளைவு, படம் சூப்பர் டூப்பர்ஹிட்.
 
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதில் கமலின் பங்களிப்பை மறுக்க முடியாது. இதிலும் ஹாலிவுட் தரத்தில் காட்சிகளை அமைத்திருந்தார். குறிப்பாக ஆப்கான் காட்சிகளும், விஸ்வரூபம் எடுக்கும் காட்சியும் கமலின் திறமையை பறைசாற்றின. படம் இரு பாகங்களாக பிரிக்கப்பட்டதால், பல கேள்விகளுக்கும் விடை இல்லாமல் படம் முடிந்தது. கிளைமாக்ஸே இல்லாமல் தமிழில் வந்த படம் என்றும் சொல்லலாம். 24 அமைப்புகள் மட்டும் கமலுக்கு "ஆதரவாக" களம் இறங்கியிருக்கவில்லை என்றால், வசூல்ரீதியாக படம் இந்தளவுக்கு வெற்றி அடைந்திருக்காது. அடுத்த பாகத்திற்கும் இதே மாதிரி பொங்கி, கமலுக்கு ஆதரவளிக்க கேட்டுக்கொள்வோம்.

சூப்பர் ஹிட் #1: சூது கவ்வும்
 
இந்த வருடத்தின் ஆச்சரியங்களில் ஒன்று இந்தப் படம். வித்தியாசமான கான்செப்ட்டில் வெளியாகி, கமர்சியலாகவும் வெற்றி பெற்றது தான் ஆச்சரியத்திற்குக் காரணம். பொதுவாக இத்தகைய படங்கள் இணையத்திலும், ஏ சென்டர்லும் மட்டுமே வெற்றியடையும். தமிழ் சினிமாவில் முதன்முதலாக சூப்பர் ஹிட்டான நுவோ நுஆர்  படமாக சூது கவ்வும் அமைந்தது. இறுதியில் தீமையே வெல்லும் என்பதுபோல் காட்டியது ஒன்று தான் படத்தின் குறை.
 
விஜய் சேதுபதியின் அட்டகாசமான நடிப்பு, அவர் சொல்லும் கொள்கைகள், மாய ஹீரோயின் கேரக்டர், மந்திரி மகனே கடத்தலுக்கு உதவும் ட்விஸ்ட், அந்த பேசாத இன்ஸ்பெக்டர் கேரக்டர், முக்கியமாக அந்த கிளைமாக்ஸ் டுமீல் என படத்தில் பாராட்ட ஏகப்பட்ட விஷயங்கள். ஒவ்வொரு சீனிலும், கேரக்டர்களிலும் பெர்பெக்சனை மெயின்டெய்ன் செய்திருந்தார்கள். தரத்தையும் பொழுதுபோக்கு அம்சன்களையும் ஒன்றுபோல் மெயின்டெய்ன் செய்துகொண்டு, திரும்பத் திரும்ப பார்க்கக்கூடிய படமாக அமைந்ததால், நம்மைப் பொறுத்தவரை இவ்வாண்டின் நம்பர் ஒன் மூவி சூது கவ்வும் தான்.
 
மேலும் வாசிக்க... "2013: சூப்பர் ஹிட்டான டாப் 5 திரைப்படங்கள்"

Sunday, December 29, 2013

2013: டாப் 5 காமெடிப்படங்கள் - ஒரு பார்வை

தமிழ் சினிமாவில் திடீரென ஒரு ட்ரென்ட் ஸ்டார்ட் ஆகி, அதே ஜெனரில் படங்களாக வந்து குவியும். அந்தவகையில், இந்த ஆண்டு காமெடிப்படங்கள் வரிசைகட்டி வந்தன. ஜனவரியில் வந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் தான் இந்த ட்ரெண்ட்டை ஆரம்பித்து வைத்தது. 'காமெடிப்படம் தான் ஓடுது' என்று நல்ல படைப்பாளிகளே சலித்துக்கொள்ளும் அளவிற்கு நிலைமை போனது. நல்லவேளையாக தில்லுமுல்லு, வணக்கம் சென்னை, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற மொக்கைப் படங்களால், இந்த ட்ரென்ட் ஒரு முடிவுக்கு வந்தது. இப்போது இந்த ஆன்ட்டின் டாப் 5 காமெடிப்படங்களைப் பார்ப்போம் வாருங்கள்.

டாப் 5 : கேடி பில்லா கில்லாடி ரங்கா
 பசங்க, வம்சம், மெரீனா போன்ற தரமான படங்களைக் கொடுத்த பாண்டிராஜ், இனி இப்படி இருந்தால் பொழைக்க முடியாது என்று உணர்ந்து இறங்கி அடித்த படம். மிகவும் சுமாரான மேக்கிங்குடன் 'கந்தா கடம்பா கதிர்வேலா' ரேஞ்சில் எடுக்கப்பட்ட படம்.
 
ஆனாலும் பாக்ஸ்  ஆபீஸில் படம் பட்டையைக் கிளப்பியது. சிவ கார்த்திகேயனின் டைமிங் காமெடியும், பிந்து மாதவியும், கிளைமாக்ஸில் வந்த உருக்கமான காட்சியும் படத்தைக் காப்பாற்றியது எனலாம். அதிசயமாக இதில் சூரியின் நகைச்சுவையை ரசிக்க முடிந்தது.
 
டாப் 4 : இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
விஜய் சேதுபதி கொடுத்த இரன்டாவது ஹிட் இந்தப் படம். முதல்பாதியில் வந்த அஸ்வின் சமந்தப்பட்ட காட்சிகள் நம் பொறுமையைச் சோதித்தாலும், விஜய் சேதுபதி ப்ளாஷ்பேக் சொல்லும் காட்சிகளும், இரன்டாம்பாதியிலும் கிளைமாக்ஸிலும் வந்த காமெடிக்காட்சிகளால் படம் தப்பித்தது.
 
வெறுமனே காமெடிப்படம் என்று ஒதுக்க முடியாதபடி, மதுவுக்கு எதிராக தன் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தது இந்தப் படம். ரொம்ப நாளைக்குப்பிறகு பசுபதி என்ற மகாநடிகனுக்கு நல்ல தீனி போட்ட படம். நாயே..நாயே போன்ற வித்தியாசமான பாடல்களும் நம் மனதைக் கவர்ந்தன.
 
டாப் 3: வருத்தப்படாத வாலிபர் சங்கம்
 
சிவகார்த்திகேயனை ஸ்டார் நடிகராக உயர்த்திய படம்.  'உங்க அக்கா அழகாயிருப்பாளா?'போன்ற சிவகார்த்திகேயனின் டைமிங் பஞ்ச்களுடன் கலக்கிய படம். வடிவேலு சொன்ன 'த்ரிஷா இல்லேன்னா திவ்யா' டயலாக்கை உண்மையாக்குவதுபோல் புதுமுகம் ஸ்ரீதிவ்யா அறிமுகம் ஆனதாக ஒரு பேஸ்புக் நண்பர்(பேர் மறந்துடுச்சு) எழுதியிருந்தார்.
 
பொதுவாக தாவணியே 50% அழகைக் கொடுத்துவிடும். சதா என்ற சாதா நடிகையும் ஜெயம்மில் நம்மை ஏமாற்றியிருக்கிறார். எனவே ஸ்ரீதிவ்யாவின் அடுத்த படத்தில்தான் தெரியும் அம்மணி எப்படியென்று.ஆனாலும் இந்த ஆண்டு ஏக வரவேற்புப் பெற்ற அறிமுகநாயகி என்று ஸ்ரீதிவ்யாவைச் சொல்லலாம்.
 
சத்தியராஜ் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட படம். சூப்பர் ஹிட்டான அட்டகாசமான பாடல்களுடன், ராஜேஷின் காமெடி டயலாக்களும் சேர படம் சூப்பர் ஹிட்.
 
டாப் 2: கண்ணா லட்டு தின்ன ஆசையா?
 
திரைக்கதை மன்னன் பாக்கியராஜின் இன்று போய் நாளை வா-வின் ரீமேக்காக வந்த படம். வருட ஆரம்பத்திலேயே சூப்பர் ஹிட் ஆகி, சந்தானத்தை இந்த ஆண்டின் பிஸியான/பெஸ்ட் காமெடியனாக ஆக்கியது. ஆல் இன் ஆல் புண்ணியத்தில் இந்த ஆண்டின் ஒர்ஸ்ட் காமெடியனாகவும் அவர் ஆனது துரதிர்ஷ்டமே.
 
இயல்பிலேயே காமெடியான முகபாவம் கொண்ட பவர் ஸ்டாருக்கு ஒரு ரியல் ஹிட் இந்தப் படம். ஆனாலும் மனிதர்க்கு நடிப்பு தான் வரவில்லை. எனவே அடுத்து அவர் நடித்த எந்த படத்திலும்,அவரது நகைச்சுவை எடுபடவிம் இல்லை. ஒரிஜினலை சீன் பை சீன் அப்படியே எடுக்காமல்,  கதைக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு காமெடியில் விளையாடியிருந்தார்கள். எனவே ஒரிஜினலில் இருந்த டச்சிங் மிஸ் ஆனாலும், படம் ஹிட் ஆனது.
 
டாப்1: தீயா வேலை செய்யணும் குமாரு!
கடந்த 18 வருடங்களாகவே காமெடிப்படம் எடுப்பதில் கிங்காக இருந்துவரும் சுந்தர்.சி, தனது 25வது படமான கலகலப்பு எனும் சூப்பர் ஹிட் படத்தை அடுத்து கொடுத்த படம். கவுண்டமணிக்கு உள்ளத்தை அள்ளித்தாவையும், வடிவேலுவுக்கு வின்னரையும் கொடுத்தவர், சந்தானத்திற்கு கொடுத்த ஹிட் 'தீயா வேலைசெய்யணும் குமாரு'. இடையில் நடிக்கப்போய் வழிதவறினாலும், காலத்திற்கு ஏற்றாற்போன்று தன்னை புதுப்பித்துக்கொண்டு இந்தப் படத்தில் கலக்கினார் சுந்தர்.சி
 
படத்தின் ஹீரோ என்றால் அது சந்தானம் தான். 'சம்பந்தி தான் அந்த அட்டு பிகரா?' என்று கேட்குமிடத்தில் சிரித்து வயிறு வலித்துவிட்டது. படம் முழுக்கவே செமயான பெர்ஃபார்மன்ஸ். ஆச்சரியமாக ஹன்சிகாவிற்கு நடிக்கத் தெரியும் என்று நிரூபித்த படம். வழக்கமான இஹி..இஹித்தனமில்லாமல், ஹன்சி நன்றாகவே நடித்திருந்தார்.
 
காமெடிப்படம் என்றாலும் மேக்கிங்கிலும் தரத்திலும் நம்மை அசத்தியதால், நம்பர் ஒன் இடம் இந்தப் படத்திற்கே! (சூது கவ்வும் இதைவிட பெட்டர்..ஆனால் அது அடுத்த பதிவான சூப்பர் ஹிட் பட வரிசையில் வரும்..அடுத்த பதிவோட2013க்கு கும்பிடு போட்டுடலாம்..டோன்ட் ஒர்ரி!)
 
 
மேலும் வாசிக்க... "2013: டாப் 5 காமெடிப்படங்கள் - ஒரு பார்வை"

Monday, December 16, 2013

2013 : ஜஸ்ட் மிஸ்ஸான டாப் 5 கமர்சியல் திரைப்படங்கள்

சில படங்கள் சூப்பர் ஹிட் ஆகும் அம்சங்களை கதையிலோ மேக்கிங்கிலோ கொண்டிருக்கும். ஆனாலும் வெற்றி என்பது ஜஸ்ட் மிஸ் ஆகிவிடும். அந்த வகையில் இந்த வருடம் வெளியாகி, வெற்றியை கோட்டை விட்ட டாப் 5 படங்கள் பற்றிப் பார்ப்போம்.

மிஸ் # 5: குட்டிப்புலி

தென்மாவட்ட குலதெய்வங்களைப் பற்றிச் சொல்ல வந்த படம். சில குலதெய்வங்களுக்கு வித்தியாசமான ஒரு கதை இருக்கும். அவர்கள் அந்த குலத்திற்கோ, குடும்பத்திற்கோ நன்மை செய்வதற்காக தன் உயிரை மாய்த்திருப்பார்கள், சிலநேரங்களில் மானம் காக்க உயிரை விட்டிருப்பார்கள். அந்த மாதிரி குலதெய்வம் ஆன இரு பெண்களைப் பற்றிப் பேச வந்த படம்.

ஆனால் சசிகுமாரை மையப்படுத்தியே படம் நகர்ந்ததால், சசிகுமாரை பி&சி செண்டரில் நிலைநிறுத்த சில டகால்ட்டி வேலைகளைச் செய்ததால், எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போனது. சசிக்குமாரிடம் எப்போதும் இயல்பான நடிப்புத்திறமை உண்டு. ஆனால் இதில் அவர் கிராமத்து ஹீரோயிசத்தில் இறங்கியதைப் பார்க்க வருத்தமாக இருந்தது. கும்கியில் நம் மனம் கவர்ந்த லட்சுமி மேனன், மூன்றாவது படமான இதிலேயே சாதாரண ஃபிகராக மாறிப்போன சோகமும் அரங்கேறியது. அதீத வன்முறை, ஓவர் பில்டப் ஹீரோயிசம், மெயின் கேரக்டர்களான அம்மாமாரை ஓரம் கட்டியது போன்ற காரணங்களால் நமக்கு முழு திருப்தி இல்லாமல் போனது. ஆனாலும் சசிக்குமாருக்கு இருந்த ஓப்பனிங்கால் நஷ்டமின்றி படம் தப்பித்தது. இதே பாதையில் போனால் சசிக்குமாரை அவரது குலதெய்வத்தால்கூட காப்பாற்ற முடியாது என்பது நிச்சயம்.

மிஸ் # 4: சேட்டை
Real Miss # 1
ஹிந்தியில் வெற்றி பெற்ற டெல்லி பெல்லியின் தமிழாக்கம். தமிழுக்கு ஏற்றாற்போல் மாற்றி எடுப்பதாக இயக்குநர் ஷூட்டிங்கின்போது சொல்லியிருந்தார். ஹிந்தி ஒரிஜினலைப் பார்த்தவன் என்பதால், நல்ல செக்ஸுவல் காமெடிப்படமாக, நியூ போன்று வரும் என்று நம்பியிருந்தேன். டூ பீஸ் ட்ரெஸ்ஸே சாதாரணமாகிவிட்ட பாலிவுட்டுக்கும் நம் கோலிவுட்டுக்கும் ரசனையில் நிறையவே வித்தியாசம் உண்டு. நம் மக்களுக்கு பப்பரப்பா என்று வந்தால் புஸ்ஸ் ஆகிவிடும். இலைமறை காயாக இருப்பதில் தான் கிக் அதிகம் என்று நம்பும் அப்பாவிகள் நம் மக்கள். 

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அணுகுண்டு ரேஞ்சுக்கு அப்படியே ஹிந்தியில் இருந்து ரீமேக்கியிருந்தார்கள். நம் மக்களுக்கு அது ஓவரோ ஓவர் டோஸ். நம்மை மாதிரி யோக்கியர்களே ‘அடப்பாவிகளா..இப்படியாடா பப்ளிக்கா எடுப்பீங்க’ என்று பதறும் அளவுக்கு காட்சிகள் இருந்தது தான் படத்தை காலி செய்தது. ஆனாலும் நாசர் துணியை விரித்து, தூசு இல்லாமல் ஊதிவிட்டு, அதை ஊற்றும் காட்சியில் சிரித்து வயிறு வலித்துவிட்டது. தொடர்ந்து சந்தானம் படம் முழுக்க, கக்கா போனதில் தான் நம் ஆட்கள் டர்ர் ஆகிப்போனார்கள். ஹோட்டல் அறையில் அஞ்சலி செய்த அந்த ஆக்டிங்கை ரசிக்க, நம் தமிழ்ச்சமூகத்திற்கு இன்னும் ஐம்பது வருசம் தேவைப்படலாம். கொஞ்சம் ஆபாசத்தையும் நாற்றத்தையும் கண்ட்ரோல் செய்திருந்தால், படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். எல்லாம் வேஸ்ட் ஆகிவிட்டது.

மிஸ் # 3: வத்திக்குச்சி

ஒரு ஹீரோ..அவனைக் கொல்ல முயலும் மூன்று வில்லன் கும்பல் என பரபரவென ஆரம்பித்த படம். செம ஸ்டைலான மேக்கிங்கில் புது இயக்குநர் கின்ஸ்லின் அசத்தியிருந்தார். அஞ்சலியின் இங்கிலீஸ் ஸ்பீக்கிங் கிளாஸ் காமெடியும் அலட்டலான நடிப்பும் நம் மனதைக் கவர்ந்தன. ஒரு நல்ல ஆக்சன் த்ரில்லராக வந்திருக்க வேண்டிய படம். ஆனால்..

படத்தின் முதல் குறை ஹீரோவாக நடித்த மனிதர் தான். ஹீரோவுக்கான முகவெட்டு இல்லாததுகூடப் பர்வாயில்லை, நடிப்பு என்பதே சுத்தமாக் வரவில்லை. முருகதாஸ் தம்பி என்று அறிமுகப்படுத்தினார்கள். பாவம் இயக்குநர் கின்ஸ்லின்..மனதிற்குள் எப்படியெல்லாம் திட்டினாரோ! படத்தில் இருந்த லாஜிக் ஓட்டைகள் நிறைய இருந்தாலும், ஹீரோ பெரிதாக ஏதோ செய்கிறார் என்று நாம் எதிர்பார்க்கும் நேரத்தில் நன்றாக தூங்கி ரெஸ்ட் எடுத்துவிட்டு, இட்லி சாப்பிட்டு ஹீரோ ஃபைட் செய்யும் கிளைமாக்ஸ் தான் படத்தை பப்படம் ஆக்கியது. ஒரு நல்ல கதை இப்படி வீணாகிவிட்டதே என்று படம் பார்த்து பலநாட்களுக்கு வருத்தமாக இருந்தது. கின்ஸ்லின் அடுத்த படம் செய்கிறாரா என்று தெரியவில்லை. நல்ல நடிகர் அமைந்தால், தன்னை அதில் நிரூபிப்பார் என்று நம்புகிறேன்.

மிஸ் # 2: சமர்

தொடர்ந்து தோல்விப்படங்களையே கொடுத்த விஷாலின் படம் தானே என்று சுவாரஸ்யம் இல்லாமல் பார்த்த படம். ஆனால் காட்சிக்குக் காட்சி சஸ்பென்ஸை ஏற்றி, மிரட்டினார்கள். இயக்குநர் ஆங்கிலப்படங்களை அதிகம் பார்ப்பவர் போலிருக்கிறது. நல்ல ஸ்டைலிஷான மேக்கிங். ஆங்கிலப்பட ஸ்டைலில் காட்சிகள், ஹீரோவைப் போலவே நமக்கும் சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ். அடடா..சூப்பர் படம் என்று நாம் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போன நேரத்தில், சப்பையாக ஒரு கிளைமேக்ஸ். 

முடிச்சு மேல் முடிச்சாக போட்டு சுவாரஸ்யத்தை ஏற்றியவர்கள், எப்படி முடிச்சை அவிழ்ப்பது என்று தெரியாமல் ஏனோதானோவென்று சஸ்பென்சை உடைத்திருப்பார்கள். (அதற்குத் தான் முடிச்சை அவிழ்க்க, ஆங்கிலப்படங்களை மட்டும் பார்த்தால் போதாது, நம் மல்லுப்படங்களையும் பார்க்க வேண்டும் என்று சொல்வது!).  படத்தில் இன்னொரு அதிசயம், கமலா காமேஸின் பெர்ஃபார்மன்ஸ். தனக்கு நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்திருந்தார். சம்சாரம் அது மின்சாரம் படத்தில்கூட இப்படி ஒரு நடிப்பை நாம் பார்க்கவில்லை. ஏற்கனவே விஷாலின் முந்தைய தோல்விப்படங்களின் எஃபக்ட்டும் சேர்ந்து, இந்தப் படத்தை சூப்பர் ஹிட் ஆகாமல் தடுத்துவிட்டது தான் சோகம்.

மிஸ் # 1: 555

தமிழ் சினிமாவில் வந்த நல்ல த்ரில்லர்களில் ஒன்று 555. ஏற்கனவே பூ போன்ற தரமான படங்களைக் கொடுத்து, நம் மனதில் இடம்பிடித்த இயக்குநர் சசியின் இயக்கத்தில் வந்த படம் இது. நம் எதிர்பார்ப்பை ஏமாற்றாத வகையில் திரைக்கதையில் கலக்கியிருந்தார். சந்தானம் குணச்சித்திர வேடத்திற்கும் பொருந்திப்போவார் என்று நமக்கு உணர்த்திய படம். ஹீரோ-ஹீரோயினின் காதல் காட்சிகள், செம ஜாலியாக இருந்தது. பரத் இந்த படத்திற்காக தன் உடலையே உருமாற்றி 6 பேக்குடன் வந்தார்.

எல்லாம் சரியாக இருந்தும் இந்தப் படம் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. முந்தைய பரத் படங்களைப் போன்றே இதுவும் இருக்கும் என்று மக்கள் நினைத்துவிட்டார்களா என்று தெரியவில்லை. மற்ற இயக்குநர்கள் அளவிற்கு தடால் புடால் என்று பேசி, மீடியா வெளிச்சத்திலேயே வலம் வரும் நபரல்ல சசி. சில இயக்குநர்கள் கட்டி எழுப்பியிருக்கும் பிம்பத்தைப் பார்த்தால், அவர்களது குப்பைப் படத்தைக்கூட குறை சொல்ல பயமாயிருக்கிறது. அறிவுக்கொழுந்துகள் பாய்ந்து வந்து பிராண்டுகிறார்கள். ஆனால் தமிழில் உள்ள நல்ல இயக்குநர்களில் ஒருவரான சசியைக் காப்பாற்ற இங்கே ஆளில்லை. ‘தமிழன் ஒரு மடையன்..இங்கே எவனுக்கும் படம் பார்க்கத் தெரியாது..என்னை ஜப்பான்ல கூப்ட்டாங்கோ’ ரேஞ்சில் அள்ளி விட்டால்தான் இங்கே பிழைக்க முடியும்போல் உள்ளது. 

சசி எடுத்த ஐந்து படங்களுமே வெவ்வேறு ஜெனர்களைச் சேர்ந்தவை. ஆனால் அத்தனை படங்களையும் மனிதர் பெர்ஃபெக்ட்டாக கொடுத்திருப்பார். அவரது இந்த நல்ல படமும் பெரிய வெற்றியை அடையமுடியாமல் போனது, தமிழ் சினிமாவிற்குத் தான் இழப்பு.

மேலும் வாசிக்க... "2013 : ஜஸ்ட் மிஸ்ஸான டாப் 5 கமர்சியல் திரைப்படங்கள்"

Saturday, December 7, 2013

2013: வித்தியாசமாக முயற்சி செய்த 5 திரைப்படங்கள்

தமிழ் சினிமாவிற்கு ஒருவகையில் இந்த ஆண்டு நல்லபடியாக அமைந்தது என்று சொல்லலாம். மசாலாப் படங்களுக்கு நடுவே பல வித்தியாசமான புதிய முயற்சிகளும் செய்யப்பட்டன. அதில் முக்கியமானது நேரம் மற்றும் சென்னையில் ஒருநாள். இரண்டுமே மலையாளத்தில் இருந்து வந்தவை என்பதால் நமது பாராட்டுக்களை தெரிவிப்பதோடு, இந்த லிஸ்ட்டில் இருந்து தள்ளி வைக்கிறோம்.

அதே போன்றே மூடர் கூடம் மற்றும் விடியும் முன் ஆகிய படங்கள், முற்றிலும் புதிய களத்தில் கதை சொல்லி நம்மை அசத்தின. துரதிர்ஷ்டவசமாக இரண்டுமே காப்பி என்பதால், அதே போன்ற தரத்தில் அந்த இயக்குநர்கள் அடுத்த படத்தை சுடாமல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, அவற்றையும் தள்ளி வைக்கிறோம். மிஞ்சிய ஐந்து படங்கள் பற்றிய பார்வை இங்கே:
நல்ல படம் #5: தங்க மீன்கள்
கற்றது தமிழிற்குப் பிறகு ராம் எடுத்த படம் என்பதால், நல்ல சினிமாவை விரும்புவோர் மத்தியில் ஏக எதிர்பார்ப்பு. தியேட்டர் வேறு கிடைக்காமல் பிரச்சினையாக, படத்திற்கு ஆதரவு நம் மனதில் பெருகியது. ஆனால் படம் வெளியானபின் பார்த்தால் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.

தந்தையை மையப்படுத்தி சில படங்களே வந்திருக்கின்றன. அந்த கேட்டகிரியில் வந்த படம் என்பது தான் இதன் தனிச்சிறப்பு. தேவையற்ற சைக்கோத்தனம் நிரம்பிய கேரக்டர், தந்தை-மகள் பாசத்தைப் பேச ஆரம்பித்து தனியார் பள்ளிகளே எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் என்று முடித்து நம்மை சோதனைக்குள்ளாக்கினார் ராம்.

இன்னும் நன்றாகவே கொடுத்திருக்கலாம் என்பதே படம் பார்த்த பலரின் அபிப்ராயமாக இருந்தது. அதற்குக் காரணம், ராம் மேல் நாம் வைத்திருக்கும் நம்பிக்கை. அடுத்த படத்திலாவது காப்பாற்றுகிறாரா என்று பார்ப்போம். (இந்த இடத்தில் நேரம் படம் வருவது தான் நியாயம் என்று நினைக்கிறேன்!)

நல்ல படம் #4: ஹரிதாஸ்
ஆட்டிசம் குறைபாடு பற்றி அருமையாகப் பேசிய படம். இது பற்றி மக்களிடையே உள்ள அறியாமையை நீக்குவதாக, இந்தப் படம் அமைந்தது. ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பையனாக நடித்த ப்ரித்விராஜும், சிநேகாவும் நடிப்பில் கலக்கியிருந்தார்கள். கல்யாணமான பிறகும், சிநேகா தான் அந்த கேரக்டர் செய்யவேன்டும் என்று இயக்குநர் பிடிவாதமாக இருந்து நடிக்க வைத்தார். படம் பார்த்தபோது, அவரை விடவும் அந்த கேரக்டருக்கு பொருத்தமான நடிகை யாரும் இல்லை என்றே தோன்றியது.
ஆனாலும் கமர்சியலாக படம் தோல்வியைத் தழுவியது. பிரபலமான ஹீரோ நடிக்காமல் நல்ல நடிகரான கிஷோர் நடித்தது பி&சி ஏரியாவில் எடுபடவில்லை. மேலும் படம் சில குறைகளோடு தான் எடுக்கப்பட்டிருந்தது. ஆட்டிசம் குறைபாடு கொன்டவர்களை சரியான முறையில் நடத்த வேன்டும் என்று ஒரு பக்கம் வாதிட்டுக்கொண்டே, இன்னொரு பக்கம் கிஷோர், தன் டிரைவர் சூரியை நடத்தியவிதம் மட்டமாக இருந்தது. 

காமெடிக்கு என்று செய்தது, அந்த கிஷோர் கேரக்டரின் மீதான பரிதாபத்தைக் குறைத்தது. மேலும், என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் எனும் கிஷோரின் வேடமும் தர்க்கரீதியில் தவறானது. மாற்று சிந்தனையாளர்களுக்கு என்கவுன்ட்டரும், ஆட்டிசம் உள்ளவரை இழிவாக நடத்துவதும், டிரைவரை மரியாதையின்றி நடத்துவதும் ஒன்று தான். இரு தவறுகளை நியாயப்படுத்திக்கொண்டே, ஒரு தவறைப்பற்றி மட்டும் பேசியதில் படத்தின் தரம் குறைந்து போனது.

எனினும் கமர்சியல் குப்பைகளுக்கு நடுவே, இதுவொரு நல்ல முயற்சி. அந்தவகையில் இயக்குநர் குமாரவேல் பாராட்டப்பட வேண்டியவர்.

நல்ல படம் #3:ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
தனக்கென்று தனித்த திரைமொழியை உருவாக்கிக்கொண்ட லோன்லி வுல்ஃப் மிஷ்கின் தயாரித்து, இயக்கிய படம். குண்டடி பட்டுக்கிடக்கும் ஓநாயை, மருத்துவக் கல்லூரி ஆட்டுக்குட்டி ஒன்று காப்பாற்ற, அதனைத் தொடர்ந்து ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வந்தது.

மிஷ்கினின் முந்தைய படங்களோடு ஒப்பிடும்போது, நமக்கு ஏமாற்றமே மிஞ்சியது. என்ன காரணத்திற்காக இந்த ஓட்டம் என்று இறுதியில் கண் இமைக்காமல் மிஷ்கின் கதை சொன்னாலும், அது நம்மை திருப்திப்படுத்தவில்லை.
வில்லனிடம் வேலை செய்யும் மிஷ்கின், தவறுதலாக ஒரு ஆளைக் கொன்றுவிடுகிறார். இறந்தவரின் குடும்பத்தில் எல்லாருமே கண் பார்வையற்றவர்கள். எனவே மிஷ்கின், அவர்களைக் கவனித்துக்கொள்வதற்காக, வில்லனிடம் பார்த்த பே-கில்லர் வேலையை விடுகிறார். அதனால் கடுப்பாகும் வில்லன் மிஷ்கினை அழைக்க, மிஷ்கின் மறுக்க அந்த குடும்பத்தின்மீது வில்லன் பாய்கிறான். அதை மிஷ்கின் தடுத்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதே விரிவான கதை. இதில் ஒரு குழந்தையைத் தவிர அனைவருமே கொல்லப்படுகிறார்கள். மிஷ்கின், இந்த குடும்பத்தை விட்டு விலகி இருந்தாலே போதும். நல்லது செய்கிறேன் என்று போய், மொத்தக் குடும்பத்தையும் ஒழித்துக்கட்டியது தான் மிச்சம். இப்படி ஒரு லாஜிக் இல்லாத கதையால், நாம் ஏமாற்றமே அடைந்தோம்.

ஆனால் இந்தக் கதை கிளைமாக்ஸில் தான் சொல்லப்படுகிறது. அதுவரை மிஷ்கின் அதகளம் பண்ணியிருந்தார். செம மேக்கிங். ஒவ்வொரு சீனிலும் பெர்பக்சன் தெரிந்தது.(குறியீடும் தெரிந்ததாகக் கேள்வி.) படம் ஆரம்பித்தது முதல் விறுவிறுப்பாகச் சென்றது. 

இளையராஜாவின் முன்னணி இசை என்று பிரபலப்படுத்தியதே நமக்கு தொந்தரவாக அமைந்தது. நந்தலாலாவை ஒப்பிடும்போது, இதில் இசையின் வீச்சு, குறைவு தான். நம்மை படம் முழுக்க திருப்திப்படுத்தாவிட்டாலும், ஒரு முறை பார்க்கும்படியே இருந்தது. ஆனாலும் கமர்சியலாக ஓடவில்லை, ஓடாது!

நல்ல படம் #2: ஆறு மெழுகுவர்த்திகள் (6)
மிகவும் பதைபதைத்துப் போய் பார்த்த படம். காணாமல்போன மகனைத் தேடி கிளம்பும் தந்தையின் பயணமும், அந்த பயணத்தில் ஹீரோ சந்திக்கும் பயங்கர உலகமுமே படம். நடிகர் ஷாம், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருந்தார்.
ஹீரோயின் கேரக்டரும் கதைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவே வந்தது. ஒரு தரமான படத்தைக் கொடுக்கவேண்டும்  எனும் இயக்குநர் துரையின் ஆர்வம், ஒவ்வொரு சீனிலும்  தெரிந்தது. கமர்சியல் அம்சமும் வேன்டும் என்பதால், ஹீரோவை பத்து பேர் வந்தாலும் அடித்துத் தள்ளும் வீரனாக காட்டியது தான் ஒரே குறை. அதைத் தவிர்த்து படத்தில் பெரிதாக  குறை இல்லை.

நடிகர் ஷாம் இந்த படத்திற்காக சேது விக்ரம் ரேஞ்சிற்கு கஷ்டப்பட்டிருந்தார். ஆனாலும் பெரிய அளவில் படம் வெற்றியடையாமல் போனது. இறுதிக்காட்சியில் தந்தையை அடையாளம் தெரியாமல் மகனும், மகனை அடையாளம் தெரியாமல் தந்தையும் நிற்கும் இடத்தில் அசத்தியிருந்தார்கள். உண்மையான தங்கமீன்கள் என்று பாராட்டப்பட்ட, அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல படம்.

நல்ல படம் #1: ஆதலால் காதல் செய்வீர்

அருமையான கதைக்கருவுடன், சுசீந்திரன் இயக்கத்தில் வந்த படம். விடலைப் பருவக் காதலின் விபரீதத்தை பொட்டில் அடித்தாற்போன்று சொல்லியது. தலைப்பு காதல் செய்யத் தூண்டினாலும், படம் நேரெதிர் கருத்தைச் சொன்னது. உண்மையாக காதல் செய்யுங்கள் என்பதைத் தான்  இயக்குநர், அப்படி தலைப்பில் சொல்கிறார் என்றும் சிலரால் விளக்கப்பட்டது.
இந்த தலைமுறை எவ்வளவு கேஷுவலாக உடல் கவர்ச்சியில் விழுகிறது, அதனால் சமூகத்தில் உண்டாகும் விளைவு என்ன என்று அதிக சினிமாத்தனம் இல்லாமல் பேசிய படம். பெண் கர்ப்பமானது தெரிந்து பதறும் தந்தையின் வேதனையும், பேரம் பேசும் காட்சிகளும் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. 

படத்தில் நம்மை நிலைகுலைய வைத்தது, கடைசி ஐந்து நிமிடம் தான். இவ்வளவு அழுத்தமான கிளைமாக்ஸை நாம் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு பாடலுடன், நம்மை உருக்கியபடி படம் முடிந்தது. இந்த ஆண்டின் சிறந்த படம் ஆதலால் காதல் செய்வீர் தான்.
மேலும் வாசிக்க... "2013: வித்தியாசமாக முயற்சி செய்த 5 திரைப்படங்கள்"

Tuesday, December 3, 2013

2013 : ஜாம்பவான்களைக் கவுத்திய டாப் 5 திரைப்படங்கள்

நல்ல கமர்சியல் படம் தருபவர்கள், நல்ல சினிமா தருபவர்கள் என்று நாம் நம்பும் பலர் தமிழ் சினிமாவில் உண்டு. அதில் சிலரின் திரைப்படங்கள் இந்த ஆண்டும் வெளியாகியது. அதில் கமலஹாசனைத் தவிர மற்ற எல்லாருமே கடும் தோல்வியைத் தழுவினார்கள்.(இப்போ உங்களுக்கு விஸ்வரூபம் பற்றி என்ன தோணுதுன்னு எனக்குத் தெரியும்!). பாரதிராஜாவின் அன்னக்கொடியை முந்தைய பதிவிலேயே பார்த்துவிட்டதால், மீதிப் படங்கள் கீழே :

காவியம் # 5: கடல்

மணிரத்னம்...தமிழ் சினிமாவின் கதை சொல்லும் உத்தியை மாற்றிக்காட்டியவர். சினிமா ஒரு காட்சி ஊடகம் என்று புரிந்து படம் எடுப்பவர்களில் ஒருவர். அதன்மூலம் இந்திய அளவில் புகழ் பெற்றார். அதனாலேயே தமிழுக்கும் ஹிந்திக்கும் ஒத்துவரும் (என்று நினைத்து) படங்களை எடுத்து, ஏற்கனவே தோல்வியைக் கண்டார். இந்தமுறை தமிழுக்கு மட்டுமே என்று கடல் படம் எடுக்க ஆரம்பித்தபோது, நமக்கு நம்பிக்கை இருந்தது. மேலும் கார்த்திக்-ராதா ஜோடியின் மகன் - மகள் இணையும் படம் என்று வேறு பரபரப்பைக் கிளப்பினார்கள். அப்போ அவங்க அண்ணன் - தங்கை முறை தானே என்றெல்லாம் நாம் குதர்க்கமாக யோசிக்காமல், இன்னொரு அலைபாயுதே வரும் என்று ஆசையுடன் இருந்தோம். படத்தின் தோல்விக்கு முக்கியக் காரணமாக, அந்த விளம்பரமே அமைந்தது.

நாம் எதிர்பார்த்தது போல் காதலைப் பற்றியோ, மீனவர் பிரச்சினை பற்றியோ பேசாமல் படம் ஆன்மீகத்தை மையமாகக் கொண்டு பேசியது. கிறிஸ்துவத்தைப் பற்றி பல்வேறு கோணங்களில் ஆங்கிலப்படங்கள் வந்திருந்தாலும், உவமை வடிவில் கடல் படம் ஆன்மீகம் பேசியது. தமிழில் இது ஒரு முக்கியமான முயற்சி என்று சொல்லலாம். ஆனால் கமர்சியல் சினிமா ரசிகர்களுக்கு, இது பெரும் கசப்பாக அமைந்தது. குறிப்பாக கதாநாயகியின் கேரக்டரைசேசன், படுமோசமாக அமைந்தது. முதல் பாதியில் இருந்த நேர்த்தி, இறுதிக்காட்சிகளில் இல்லாமல் போய் படம் பப்படம் ஆனது. மணிரத்னம் அடுத்த படத்திலாவது வெற்றிக்கனியைப் பறிப்பார் என்று நம்புவோம்.

காவியம் # 4: ஆதி பகவன்

மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் என மூன்று வித்தியாசமான ஜெனர்களில் அசத்திய இயக்குநர் அமீர். குரு பாலாவையே அந்த விஷயத்தில் மிஞ்சியவர். என்றைக்கு அரசியல், சங்கம், பதவி என்று போனாரோ அப்போதே நமக்கு பாதி நம்பிக்கை போனது. அடுத்து யோகி என்று அப்பட்டமான காப்பி படத்தை எடுத்து, சுத்தமாக தன் மரியாதையைக் கெடுத்துக்கொண்டார். ஆனாலும் நான்கு வருடங்களாக(!) இந்தப் படத்தை எடுத்தபோது, மீண்டும் பழைய அமீராக வருகிறார் என்று நினைத்தோம். படம் பார்த்தபோது, எப்படி இருந்த அமீர் இப்படி ஆகிட்டாரே என்று தான் தோன்றியது.
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு அம்மா கேரக்டரைசேசனை பார்க்க முடியாது. வறுமை காரணமாக பஞ்சம் பிழைக்க குடும்பத்துடன் பாங்காக் சென்ற உத்தமத் தாய் அவர். பாங்காங் என்ன தொழிலுக்கு ஃபேமஸ் என்று எல்லாருக்கும் தெரியும். பஞ்சம் பிழைக்க குடும்பத்துடன் வெளிநாடு போவதே ஓவர், அதிலும் பாங்காங் என்றால்..உஸ்ஸ்! ஏன்யா இப்படி என்று கேட்டதுக்கு ‘நிறைய சேஸிங் சீன் வைக்கணும்னு முடிவு பண்ணோம். அதுக்கு பாங்காங் ரோடு தான் கரீக்டா இருக்கும்னு தோணுச்சு. அதான் அங்க போனோம்’ என்று உலகமகா விளக்கம் கொடுத்தார். இதில் சேஸிங் சீன் என்பது அம்மா கேரக்டருக்குமா, சென்சாரில் அதெல்லாம் போச்சா என்று தகவல் இல்லை.

பாலிடிக்ஸ்களில் இருந்து மீண்டு, அமீர் மீண்டும் ஒரு படைப்பாளியாக திரும்ப வரவேண்டும் என்பதே நம் விருப்பம். ராம் படத்தின் மேக்கிங், இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறது. பருத்திவீரன் முத்தழகு இன்னும் நம் நெஞ்சுக்குள் நிற்கிறார். அந்த மாதிரிப் படங்களைத்தான் அமீரிடம் நாம் எதிர்பார்க்கிறோம். அப்படி ஒரு ஸ்க்ரிப்ட் அமையும்வரை, சசிகுமார் போல் இயக்கத்தை விட்டு ஒதுங்கியே இருக்கலாம், தப்பில்லை!

காவியம் # 3: இரண்டாம் உலகம்

‘ஆய்..ஊய்’ என்று கடந்த ஒரு வாரமாகவே இணையத்தில் ஒரே ஜண்டை!..ஒன்னுமில்லை, நல்லா இல்லாத படத்தை நல்லா இல்லேன்னு சொல்லிட்டாங்களாம்...ராஸ்கல்ஸ். ஒரு பூலோக வாசி..அதாவது பூமியில் இருக்கும் ஒருவன் (இப்போல்லாம் சுத்த தமிழ்ல எழுதுனா, கெட்ட வார்த்தையான்னு கேட்காங்க பாஸ்)..சரி, பூமியில் இருக்கும் ஒரு ஹீரோ, இரண்டாம் உலகத்திற்கு பயணித்து அங்கு செய்யும் சாகசமே கதை. சாகசம் என்றால் பெரிதாக நினைக்க வேண்டாம், அங்கே பூ பூப்பதில்லை. எனவே எல்லா செடிக்கும் தண்ணி ஊத்துறது அல்லது அனுஷ்காவுக்கு பன்னும் டீயும் வாங்கிக் கொடுத்து காதல் வரவைப்பது தான் அந்த சாகசம். இதில் இரண்டாவதை தேர்ந்தெடுக்கிறார் ஆர்யா. அங்கே தான் படம், ப்பூ..என்று ஆனது.
முதல் பாதியில் இரண்டு உலகத்தையும் மாற்றி, மாற்றி காட்டியவரைக்கும் நன்றாகவே கொண்டுபோயிருந்தார் செல்வா. இரண்டாம் உலகத்தில் ஆர்யா நுழையவும் தான் பிரச்சினை ஆரம்பித்தது. அங்கே கடவுள் என்று ஒரு...ச்சே, கடவுளா நடிச்சவரை அந்த வார்த்தைல விவரிக்கலாமா, தப்பாச்சே..சரி, ஒரு ஃபாரின் குட்டியை காட்டியபோதே புஸ்ஸென்று ஆனது. அதிலும் அவரைக் கடத்துவதாக வசனத்தில் சொன்னதால் புரிந்தது, இல்லையென்றால் ‘லெட்ஸ் கோ’ என்று அந்த கடவுளே கடத்த வந்தவனின் மடியில் தொத்திக்கொண்டார் என்றே நினைத்திருப்போம். கடவுளின் சக்தி என்ன, ஏன் அந்த உலகத்தில் மொத்தமே 50 பேர் தான் இருக்கிறார்கள்? கடவுளையே கடத்துனாலும் ‘கரண்ட் போச்சா’ங்கிற தமிழர்கள் மாதிரி ஏன் அப்படி ஒரு சவசவ ரியாக்சன் என்று கேள்வி மேல் கேள்விகளை எழுப்பிய படம்.

படத்தின் கதையே ஆர்யா இரண்டாம் உலகத்தில் பயணம் செய்வது தான் எனும்போது, அங்கே போனபின் அவர் என்னென்னவோ செய்திருக்கலாம். பூமி அனுஷ்காவின் ஃபோட்டோவை இன்னொரு அனுஷ்காவிடம் காட்டியதையும், அனுஷ்காவுக்கு சாப்பாடு கொண்டுவந்து தந்ததையும் தவிர வேறெதுவும் செய்யவில்லை. இருக்கிற கடுப்பு போதாதென்று, அனுஷ்கா ட்ரெஸ் மாற்றும்போது திரும்பிக்கொள்ள வேறு செய்கிறார்.(சீன் போச்சே!). கடவுளின் நோக்கம் என்ன என்று ஆர்யாவுக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும். ஆர்யா அதன் நியாயத்தை உணர்ந்து, அதற்காக முழு ஈடுபாட்டுடன் அனுஷ்கா-ஆர்யா2 ஜோடியை சேர்க்க முயன்றிருக்க வேண்டும். அப்படி சேர்த்துவைத்தால், செத்துப்போன அனுஷ்கா திரும்பக் கிடைப்பார் என்று ஒரு நல்ல ஆஃபரைக்கூட கொடுத்திருக்கலாம்.

இப்படி அடிப்படை விஷயங்களில் கோட்டை விட்டுவிட்டு, குறியீடினால் மட்டும் படத்தின் தரத்தை உயர்த்திவிடலாம் என்று நினைத்தால்..சாரி பாஸ்!...செல்வராகவனுக்கு இந்தப் படம் பெரும் அடி தான். 67 கோடியில் 6 கோடி தான் தேறியதாகச் சொல்கிறார்கள். செல்வா தன் வீடு ஒன்றையும் தயாரிப்பாளருக்கே எழுதிக்கொடுத்துவிட்டதாக கிசுகிசு. ஒரு நல்ல இயக்குநர் இப்படியெல்லாம் சீரழிவதைப் பார்க்க கஷ்டமாக இருக்கிறது. இனியாவது திருந்துகிறாரா என்று பார்ப்போம்.

காவியம் # 2: தலைவா

இயக்குநர் விஜய் எப்போது ஜாம்பவான் ஆனார் என்று யோசிக்காதீர்கள். நடிகர் விஜய் படம் என்பதால், இந்த லிஸ்ட்டில் தலைவா. (அதுக்கும் கடுப்பானீங்கன்னா, சாரி பாஸ்!)

விஜய்யிடம் ரொம்ப வருசமாகவே ஒரு கெட்ட பழக்கம் உண்டு. தொடர்ந்து 2-3 படம் ஹிட் ஆகிவிட்டால், அடுத்த முதல்வர் ஆவதற்கான வேலைகளில் துரிதமாக இறங்கிவிடுவார். ‘அண்ணா’ எஸ்.ஏ.சி அறிவுரைபடி, அரசியலில் இறங்குவதற்கான பில்டப்பை ஏற்றும் கதையை தேர்ந்தெடுத்து நடிப்பார். நாமும் தெளிவாக அதை ஃப்ளாப் ஆக்குவோம். ஆனாலும் அவர் திருந்துவதில்லை. நாம் தியேட்டருக்குப் போவது பொழுதுபோக்கிற்குத் தானே ஒழிய, விஜய் கட்சியில் சேருவதா வேண்டாமா என்று கொள்கை முடிவு எடுக்க அல்ல. இது விஜய்&கோவிற்குப் புரிவதேயில்லை.

டைம் டூ லீட் என்று பில்டப்புடன் படம் ஆரம்பிக்கப்பட்டபோதே, இது வழக்கம்போல் புஸ்ஸ் ஆகப்போகிறது என்று தெரிந்தது. ஆனால் இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக, படம் ரிலீஸ் ஆனபின் அசிங்கப்படாமல், ரிலீஸ் ஆகும் முன்பே அசிங்கப்பட்டார்கள். அதிலேயே படத்தின் இமேஜும் அடிவாங்கிவிட, இனி குப்பையிலா போட முடியும் என்று தியேட்டரில் ரிலீஸ் செய்தார்கள். 
பாலச்சந்தரின் ஒரு வீடு இரு வாசல் படத்தில் இரண்டு சினிமாவை காட்டியிருப்பார். அதையும் மிஞ்சும்விதமாக பாட்ஷா-தேவர் மகன் - நாயகன் என மானாவாரியாக பல தமிழ்ப்படங்களை மிக்ஸியில் போட்டு அடித்து இந்த படத்தைக் கொடுத்து நம் வயிற்றைக் கலக்கினார்கள். ’ஹாலிவுட் படத்தைச் சுடும் இயக்குநர்’ என்று நாம் திட்டியதற்கு இப்படி கொடூரமாக பழி தீர்த்துக்கொண்டார் இயக்குநர் விஜய்.

"Give me the same thing...........in different way' என்று திரைக்கதை பற்றிய பால பாடத்தில் சொல்வார்கள். பழைய அரதப்பழசான கதையைக்கூட புதிய கோணத்தில், புதுமையான காட்சிகளுடன் சொன்னால் ரசிக்கப்படும். ஆனால் இங்கே கதையும் பழசு, திரைக்கதையும் காட்சிகளும் பல படங்களில் பார்த்துச் சலித்த அரதப்பழசு. பழைய படங்கள் அளவிற்காவது இருந்ததா என்றால், அதுவும் இல்லை. தேவர் மகனில் கமல் கெட்டப் மாற்றி வந்த காட்சியில் புல்லரித்தது. இங்கே விஜய் டீ-சர்ட் மாற்றிவிட்டு வந்து நிற்கவும் ’ங்கொய்யால..’ என்று தான் தோன்றியது. 

அதுகூடப் பரவாயில்லை, மக்கள் அந்த கெட்டப்பில் விஜய்யைப் பார்த்துவிட்டு வாயைப் பிளந்தபடி கூடியதைத்தான் தாங்க முடியவில்லை.  தேவர்மகனில் ’அப்படி’ தான் ஆக முடியாது என கமல் சிவாஜியிடம் வாதாடியிருப்பார். ஆனால் இங்கே விஜய் நான் அப்படித்தான் ஆவேன் என்று ஃபோட்டொவுக்கு முண்டிக்கிட்டு போஸ் கொடுக்கும் தயாநிதி மாறன் மாதிரி ஆரம்பத்தில் இருந்தே முண்டிக்கொண்டு நிற்பார். கமலைப் பார்த்து நாம் வியந்தது கெட்டப் சேஞ்சிற்கு மட்டும் அல்ல, அந்த மனமாற்றத்திற்கும் சேர்த்துத் தான். 

அதே போன்ற இன்னொரு கொடுமை ‘டமுக் டுமுக்’ போலீஸ் அமலா பாலூ. (அவர் போலீஸ் கெட்டப்பில் நடக்கும்போது நாம் போட்ட பிண்ணனி இசையே அந்த டமுக் டுமுக் ஆகும்!). ஒரு பெரிய படத்தில் நடிக்கும் அளவிற்கு அமலா பாலூவிடம் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் ஒன்றும் இல்லை. அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்றர்கள். அதுக்குப் பதிலா அஞ்சு ரூபாய்க்கு ரெண்டு எலுமிச்சைம்பழம் வாங்கி, டைரக்டரு தலையில தேச்சு குளிச்சிருக்கலாம். 

கிளைமாக்ஸில் விஜய் வில்லன் கோஷ்டியை கத்தியால் குத்திக் கொன்றுவிடுகிறார். ’முடிஞ்சதா..அப்பாடா தப்பிச்சோம்டா’ என்று நாம் ஓட எத்தனிக்கும்போது, நம் டமுக் டுமுக் போலீஸ் வந்து அந்த டெட் பாடி வில்லன் கோஷ்டியை சுட்டு வழக்கில் இருந்து விஜய்யைக் காப்பாற்றுகிறார். என்னங்கடா இது..போஸ்ட் மார்ட்டத்துல கத்திக்குத்து தெரியாதா கேட்டா ‘சுட்டேன் சார்..ஆனாலும் நம்ம டிபார்ட்மெண்ட் குண்டை நம்ப முடியுமா? அதான் கத்தியை எடுத்து வரிசையா சொருகிட்டேன்’னு அமலா பாலூ சொல்லுமோ என்னவோ! சீன் படத்துலகூட இதைவிட பெட்டரா சீன் யோசிக்கிறாங்க மக்கா.

‘சார்..ஒயிட் டீசர்ட் கூலிங்கிளாஸ் போட்டு வெளில வர்றீங்க..ஜனங்கள்லாம் தலைவான்னு உங்களைப் பார்த்து ஓடி வர்றாங்க..தியேட்டர்ல உள்ளவன்லாம் ஃபீல் ஆகுறான்’ என்று இந்த ஒருவரியை மட்டும் தான் டைரக்டர், விஜய்யிடம் சொல்லியிருப்பார் போல. இது போதுமே, அடுத்த சி.எம் நாம் தான் என்று அணில் தாவிக்குதித்து, அடுப்பில் விழுந்துவிட்டது. ஒரு கெட்டதிலும் நல்லது இருக்கும்னு சொல்வாங்க. அது மம்மி, விஜய்க்கு கொடுத்த ட்ரீட்மெண்ட்க்கு சரியாப் பொருந்தும். ஜெயலலிதா செய்தது ஒருவகை அராஜம் என்றால், விஜய் செய்து வந்ததும் அதற்கு இணையான இன்னொரு அராஜகம் தான். எப்படியோ நெகடிவ்வும் நெகடிவ்வும் சேர்ந்து, நமக்கு பாசிடிவ் ஆகிவிட்டது.

மொத்தத்தில் Time to Lead என்பது Time to Hide ஆகிவிட்டது.

காவியம் # 1: பரதேசி

பாலாவைக் குறை சொல்லலாமா, அப்படி குறை சொல்லிட்டு முழுசா ஒருத்தன் பதிவுலகத்துல நடமாட முடியுமா? இருந்தாலும் உண்மைன்னு ஒன்னு இருக்கே நியாயமாரே! 

எங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி கிடையாது. முதன்முதலாக கலைஞர் ஆட்சியில் தான் மினிபஸ் வந்தது. எனவே அதுபற்றி சன் டிவியில் இருந்து மக்களிடம் பேட்டி எடுக்க வந்திருந்தார்கள். ஒரு ஆளிடம் மைக்கை நீட்டி ‘மினிபஸ் உங்க ஊருக்கு வந்திருக்கே..அதைப் பத்தி சொல்லுங்க’ என்றார்.  ‘ரொம்ப வருசமா கேட்டுக்கிட்டிருந்தோம்யா..யாருமே கண்டுக்கலை. இப்போ தான் ஒருவழியா பஸ்ஸை விட்ருக்காங்க..ரொம்ப சந்தோசமா இருக்கு. இனிமே எங்க புள்ளைங்க..’ என்று அவர் சொல்லும்போதே, மைக் பார்ட்டி ‘நிப்பாட்டுங்க..நிப்பாட்டுங்க..இந்த திமுக ஆட்சியில பஸ் விட்ருக்காங்க..நன்றின்னு சொல்லணும் சரியா?’ என்றார். நம் ஆளும் சரிங்க என்ற் சொல்லிவிட்டு ரொம்ப வருசமா...-ன்னு ஆரம்பித்து கடைசியில் திமுக ஆட்சிக்கு நன்றி சொன்னார். ஆனாலும் மைக் பார்ட்டிக்கு திருப்தி இல்லை. ‘நீங்க என்ன பண்றீங்க..மினிபஸ் விட்ட ஐயா கலைஞர் அவர்களுக்கும் திமுக ஆட்சிக்கும் நன்றின்னு சொல்லுங்க..எங்க, முதல்ல இருந்து சொல்லுங்க பார்ப்போம்’ என்றார்.

நம்ம ஆளு அடுத்து அதைச் சொல்லும்போது அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே..அவருக்கு கலைஞர்மீதோ திமுகமீதோ கோபம் ஏதும் இல்லை. உண்மையிலேயே அவர் நன்றி சொல்லவே விரும்பினார். முதல் டயலாக்கை அவர் சொல்லும்போது அவர் முகம் நிறைய சந்தோசத்துடன் பேசினார். கொஞ்சநேரம் விட்டிருந்தால், அவரே கலைஞருக்கு நன்றி சொல்லியிருப்பார். ஆனால் மைக் பார்ட்டி கைங்கர்யத்தால், அவர் பேசிய ஸ்டைல் எப்படி இருந்தது என்று தெரியவேண்டும் என்றால், நீங்கள் அவசியம் பரதேசி படத்தின் முதல் பகுதியைப் பார்க்க வேண்டும்.

சகிக்க முடியாத செயற்கைத்தனத்துடன் நடிகர்கள் நடித்த ஒரே படம் பரதேசி தான். அதிலும் அந்த கதாநாயகி இருக்கிறாரே..அடடா!. சாக்கடைக்குள் தவறி விழுந்த மனநிலை தவறிய சேட்டு பெண் என்று தான் அந்த கேரக்டரைச் சொல்லவேண்டும். இடலாக்குடி ராசா எனும் அழகான இலக்கியத்தை ஒடித்து, நெளித்து தன் திரைக்கதையில் வலுக்கட்டாயமாகத் திணித்திருந்தார் பாலா. ராசாவை ஏன் எல்லாரும், குறிப்பாக ஹீரோயின் அப்படி நடத்துகிறார்கள்? எல்லாருமே ஏர்வாடி கேஸ் தானா? என்று நாம் எரிச்சல் அடையும்வண்ணம் முதல் பாதி எடுக்கப்பட்டிருந்தது.
சினிமா என்பது கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்-ஒளிப்பதிவு-நடிப்பு-இசை என பல விஷயங்களின் சங்கமம். ஆனால் இங்கே புதிதாக ஒரு கதையையோ, கதைச்சூழலையோ எடுத்துக்கொண்டாலே போதும். உலக சினிமா என்று கூவ ஆரம்பித்துவிடுகிறார்கள். சேது-நந்தாவில் பாலா வாங்கிய நடிப்பிற்கும், பரதேசியில் பாலா வாங்கிய நடிப்பிற்கும் தான் எவ்வளவு வித்தியாசம். பிதா மகனில் ஆரம்பித்த பித்து, பரதேசியில் முற்றி நிற்கிறது. பாலாவை உசுப்பேற்றியே, உண்மையை உணர விடாமல் செய்து, ஊர்வலம் போன அம்மண ராஜா போல் ஆக்கிவிட்டார்கள் அவரது ரசிகர்கள். 

சேதுவில் வந்த ஏர்வாடி காட்சியில்கூட ஒரு நேர்த்தி இருக்கும், அந்த துணைநடிகர்களின் நடிப்பில் ஒரு ஒழுங்கு இருக்கும். இங்கே ஹீரோ-ஹீரோயின் கூட அந்த துணை நடிகர்களைவிட மோசமாக நடித்திருந்தார்கள். வித்தியாசமான கதைச்சூழலும், கதையும், கிளைமாக்ஸும் மட்டுமே படத்தில் உருப்படி. மற்றபடி, இந்தப் படம் ஒரு குப்பை தான். அதனாலேயே நம்மை அதிகம் ஏமாற்றிய பாலாவின் இந்தப் படம், காவியம் # 1 ஆகிறது.

டிஸ்கி: இந்த வரிசைப்படுத்தல் என் தனிப்பட்ட ரசனை சார்ந்தது. மாற்று ரசனைக்கு எம் வந்தனங்கள்!

மேலும் வாசிக்க... "2013 : ஜாம்பவான்களைக் கவுத்திய டாப் 5 திரைப்படங்கள்"

Saturday, November 30, 2013

2013 : சிறந்த 5 மொக்கைத் திரைப்படங்கள்

பதிவிற்கு போவதற்கு முன் ஒரு விளம்பரம்..

வெட்டி பிளாக்கர் நண்பர்கள் நடத்தும் வலைபதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி..விபரங்களுக்கு: http://velangaathavan.blogspot.com/2013/11/vettibloggers.html



இந்த வாரம் முழுக்க 2013ம் ஆண்டு வெளியாகிய திரைப்படங்கள் பற்றிப் பார்ப்போம். இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. அதில் நம்மை தியேட்டருக்கு இழுக்காத டப்பா படங்களை விட்டுவிட்டு, நம் கவனத்தைக் கவர்ந்த படங்களை மட்டும் இங்கே ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்வோம்.  அந்த வரிசையில் இன்று நம்மை கதறக் கதற அலற வைத்த பெஸ்ட் 5 மொக்கைப் படங்களைப் பார்ப்போம், வாருங்கள்:

மொக்கை # 5: நய்யாண்டி

தேசிய விருது பெற்ற சற்குணமும் தனுஷும் இணைந்து, இப்படி ஒரு படத்தைக் கொடுப்பார்கள் என்று யாரும் நினைக்கவில்லை. தொப்புள் பிரச்சினை வேறு கிளம்பி, சீப் பப்ளிசிட்டியைக் கொடுத்தும் படம் தேறவில்லை. ஒரு மலையாளப்படமான ‘மேல் பரம்பில் ஆண்வீடு’-ன் ரீமேக் இது. ஆனால் அந்த படத்தை ஏற்கனவே பாண்டியராஜனை ஹீரோவாக வைத்து ’வள்ளி வரப் போறா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக்கி விட்டார்கள் என்ற துயரமான செய்தி பின்னர் கிடைத்தது. 

இண்டர்வெல் விடும்போதே பலரும் தியேட்டரைவிட்டே எகிறிக்குதித்து ஓடும் கண்கொள்ளாக் காட்சிகளை தந்த படம் இது. ஏனோதானோவென எடுக்கப்பட்டது போல், பல காட்சிகளும் இருந்தன. தனுஷ்க்கு பெரிய அடி. மரியான் படமும் ஏறக்குறைய இந்த லிஸ்ட்டில் வர வேண்டியது என்றாலும், ஒளிப்பதிவு-இசை என சில விஷயங்களால் தப்பியது. இந்தப் படத்தில் எல்லாமே மொக்கையாகப் போய்விட்டது, சில பாடல்களைத் தவிர.

மொக்கை # 4: சுட்டகதை

சூது கவ்வும், பீட்சா ரேஞ்சில் பில்டப் செய்யப்பட்ட படம். நம்பி உள்ளே போனவர்களை, நசுக்கி வெளியே விட்டார்கள். படத்தில் ஒரு கேரக்டர்கூட சீரியஸ்னஸ் இல்லாமல், எல்லாருமே ஹெக்கேபிக்கே என ஏதோ மெண்டல் ஹாஸ்பிடலுக்குள் வந்த ஃபீலிங்கை ஏற்படுத்தினார்கள். 

படத்தைவிடவும் பெரும் கொடுமையாய் படம் பற்றிய அறிவுஜீவி விளக்கங்களும் இயக்குநர் தரப்பில் இருந்து வந்து குவிந்தன. காமிக்ஸ் வடிவில் எடுக்கப்பட்ட படம், ஜனங்களுக்குத் தான் அறிவில்லை என்று செல்வராகவன் ரேஞ்சுக்கு விளக்கம் வந்தது. (அதைப் படிச்சிட்டுத் தான் நான் படம் பார்த்தேன்!) தமிழ் சினிமாவில் காட்சிப்படுத்துதலில் காமிக்ஸை கனகச்சிதமாகப் பயன்படுத்துபவர், மிஷ்கின் ஒருவர் தான்.அவரது எல்லாப் படங்களையுமே காமிக்ஸ் ஆக்கியும் படித்துவிடலாம்.

இப்படி ஒட்டுமொத்தமாக லூசு கேரக்டர்களை மட்டுமே வைத்து நான் எந்த காமிக்ஸையும் படித்ததில்லை. காமிக்ஸிற்கும் சினிமாவின் காட்சிப்படுத்தலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதை விளக்குவது நம்மை பதிவின் ’உயர்ந்த’ நோக்கத்தை விட்டு வெளியே செல்ல வைக்கும் என்பதால், நாவலை நாவல் வடிவிலேயே எடுத்தால் எப்படி முட்டாள்தனமாகவே இருக்குமோ அப்படியே காமிக்ஸ் கதை என்று தான் நினைத்ததை இயக்குநர் சினிமா ஃபார்மேட்டுக்கு மாற்றாமல் அப்படியே எடுத்தது!

வழக்கமான ஹீரோ-பஞ்ச் டயலாக்-டூயட் இல்லாமல் எடுக்கப்படும் படங்களையும் சந்தேகக் கண்ணுடன் பார்க்க வைத்தது இந்தப் படம். அந்த தவறைச் செய்ததாலேயே இந்த லிஸ்ட்டில் இந்தப் படத்தை கட்டாயம் சேர்க்க வேண்டியதானது.

மொக்கை # 3: அன்னக்கொடி
படத்தின் பூஜையில் இருந்தே பயங்கர பில்டப் செய்யப்பட்ட படம். ஆனால் படம் வெளியானபிறகு தான் தெரிந்தது, மகனை புரமோட் பண்ண பாரதிராஜாவின் இன்னொரு அட்டாக் என்று! எப்போதெல்லாம் இந்த வேலையில் இறங்குகிறாரோ, அப்போதெல்லாம் நாம் கதற வேண்டியதாகிறது. பாவம், ராதா மகள். அவரது உழைப்பு எல்லாம் வீணானது. படத்தில் ஹீரோ என்று ஒரு ’கொடுத்து வைத்த’ டம்மி பீஸும் இருந்தது.

ஆண்மையற்றவன், ஆனாலும் அயிட்டம்-ஹீரோயின் என எல்லாரையும் அணுகுபவன், கல்யாணமும் முடிப்பவன் என ஒரு குழப்படியான மனோஜ் கேரக்டரும், கில்மா ரேஞ்சு கதையுமே படத்தை பப்படம் ஆக்கியது. பொதுவாகவே ‘ஆண்மையற்றவன்’ என்ற கான்செப்ட்டை ரசிகர்கள் ரசிப்பதில்லை. கல்யாணமாகாத பலருக்கும் அந்த டவுட் உண்டென்பதால், இந்த டாபிக்கை மூன்று மணிநேரம் உட்கார்ந்து பார்க்க எவனும் வரமாட்டான். வந்தவனும் பாதியில் ஓடி விடுவான். இயக்குநர் வஸந்த எடுத்த ஒரு நல்ல படமும், இதனாலேயே தோல்வியைத் தழுவியது. அந்தப் படமாவது நல்ல மேக்கிங்..இங்கே அதுவும் இல்லை.

மொக்கை # 2: அலெக்ஸ் பாண்டியன்

மூன்று முகம் படத்தில் ரஜினி செய்த கேரக்டரால், தமிழ் சினிமாவில் அலெக்ஸ் பாண்டியன் என்ற பெயருக்கு ஒரு மரியாதை இருந்தது. அதை காலி செய்து, பேரைக் கேட்டாலே அலறும்படி ஆக்கியது இந்தப் படம். கார்த்தி-சந்தானம் காம்பினேசன் என்ற நம்பிக்கையில் படம் பார்க்கப்போனவர்கள் எல்லாம் நொந்து நூலாகும் வண்ணம், தெலுங்கு மசாலாப்படங்களை விடவும் மோசமான படமாக இது அமைந்தது.

கதையிலேயே பெரிய லாஜிக் மிஸ்டேக் இருந்தது. போலி மருந்துகளை தமிழகத்தில் விற்பனை செய்ய விரும்பும் ஒருவன், அதற்கு அனுமதி தர மறுக்கும் முதலமைச்சரின் மகளைக் கடத்தி மிரட்டுகிறான். பெயருக்கு அனுமதி தந்துவிட்டு, மகளை மீட்டவுடன் அனுமதியை ரத்து செய்வது பெரிய விஷயம் அல்ல. மருந்துகளை சீஸ் பண்ணவும் முடியும். ஒரு விஷயத்தை தமிழ்நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்ல வேண்டுமானால், மிரட்டலாமேயொழிய, உள்ளே வர மிரட்டுவது ஆப்பசைத்த குரங்கின் புத்திசாலித்தனம் தான். அதைவிடக் கொடுமை, அனுஷ்காவிற்கு கார்த்தி மேல் வரும் காதல். கார்த்தியும் ‘அப்படியா..சரி, ரொம்ப கெஞ்சுறே..நானும் லவ் பண்ணித்தொலைக்கேன்’ என்ற ரேஞ்சில் காதலை ஏற்றுக்கொள்வார்.

எந்தவித லாஜிக்கும் இல்லாத சண்டைக்காட்சிகளில் தான், மக்கள் மரணத்தின் எல்லையைத் தொட்டார்கள். எதிரே வரும் டாடாசுமோவின் டயரை கார்த்தி வெட்டியபோது, தங்கள் கழுத்தையே வெட்டியிருக்கலாம் என்ற ஃபீலிங் படம் பார்த்தோருக்கு வந்தது. இவ்வளவு ஆழத்திற்கு குழி பறித்துவிட்டு, மண்ணைப் போட்டு மூட, படத்தில் வந்த விஷயம் ஆபாசமான வசனங்கள். கார்த்தியைக் காப்பாற்றி வீட்டிற்கு கூட்டிவரும் ஒரு பெண்மணி, தன் மூன்று மகள்களை கார்த்தியுடன் அப்படி கும்மாளமடிக்க விடுவதும், அவரே எண்ணெய் தேய்த்துவிடுவதும் பிட்டுப்படங்களில் மட்டுமே காணக்கூடிய விஷயங்கள்.


மொக்கை # 1 : ஆல் இன் ஆல் அழகுராஜா

இன்னும் அதிர்ச்சி விலகவில்லை!...ராஜேஸ் படமா இது என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு இந்தப் படம் அமைந்தது. கார்த்திக்கு இது மோசமான தோல்வி. சகுனிக்கு தியேட்டர் நிரம்பியது. அதில் உஷாரான பலர், அலெக்ஸ்பாண்டியனுக்கு வரவில்லை. அடுத்து அலெக்ஸ் பாண்டியனும் ‘அப்படி’ என்று ஆனது. எனவே ‘விமர்சனம் கேட்டுவிட்டு.படித்துவிட்டு பார்க்கப்பட வேண்டிய லிஸ்’ட்டில் கார்த்தி படங்களும் சேர்ந்தன. 

அழகுராஜாவில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பேசினார்கள், பேசினார்கள் பேசியே கொன்றார்கள். நமக்குத்தான் சிரிப்பு வரவேயில்லை. தியேட்டரில் ஒருவரை ஒருவர் திரும்பித் திரும்பி பார்க்கும்படி ஆனது. காஜல் அகர்வால் மட்டும் இல்லையென்றால், கடைசிவரை இந்தப் படத்தை பார்த்திருக்கவே முடியாது. எப்படி இதுபோன்று ஒரு படத்தை எடுத்தார்கள் என்று இன்னும் நமக்குப் புரியவில்லை. 

அலெக்ஸ் பாண்டியனிலாவது கார்த்தி ஏதாவது செய்தார். இதில் ஒன்றுமே இல்லை. அலெக்ஸ் பாண்டியன் படம் மாதிரி நம்மளை கட்டி வச்சு, ஒருநாள் முழுக்க அடிக்கிறதுகூடப் பரவாயில்லை. ஆனா ஒருநாள் முழுக்க நம்மை கட்டிவச்சு, ஒன்னுமே செய்யாம/பேசாம குறுகுறுன்னு நம்மளை பார்த்துக்கிட்டே இருந்தா எப்படி இருக்கும்? ‘டேய்..ஏதாவது பண்ணுடா’ என்று நாம் கெஞ்சியும் அங்கே ரியாக்சனே இல்லாமல் போனால்..அது தான் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’. இதை காசு கொடுத்து அனுபவித்தோம் என்பது தான் ஜீரணிக்க முடியாத கொடுமை. எனவே தான் மொக்கைப் படங்களில் நம்பர் ஒன்னாக ஆனது ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’.

அடுத்த பதிவு : ஜாம்பவான்களைக் கவுத்திய பெஸ்ட் 5 படங்கள்

டிஸ்கி: இந்த வரிசைப்படுத்தல் என் தனிப்பட்ட ரசனை சார்ந்தது. மாற்று ரசனைக்கு எம் வந்தனங்கள்!
மேலும் வாசிக்க... "2013 : சிறந்த 5 மொக்கைத் திரைப்படங்கள்"

Tuesday, November 26, 2013

இரண்டாம் உலகம் மற்றும் செல்வராகவன் எனும் மலராத பூக்கள்!

செல்வராகவனுக்கு இருக்கும் ‘ஓப்பனிங்’ எப்போதுமே நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கக்கூடியது. ஏனென்றால் செல்வராகவன் குத்துப்பாட்டு, பஞ்ச் டயலாக் பேசும் ஹீரோக்களை வைத்து படம் எடுப்பவர் அல்ல. அதே நேரத்தில் வீடு-பசி-உதிரிப்பூக்கள் போன்ற வாழ்வியல் தரிசனம் தரும் படத்தை தருபவரும் அல்ல. செல்வராகவனின் படங்களின் மையக்கரு அல்லது அவரது ஸ்பெஷாலிட்டி, தமிழ் சினிமா பேசத்தயங்கிய பாலியல் வறட்சியைப் பேசியது தான்.  இன்னும் சொல்வதென்றால், அவர் வணிக சினிமாவிற்குள்ளேயே, மாறுபட்ட முயற்சிகளை மேற்கொள்பவர். எனவே அவருடைய படங்கள் உலக சினிமா/கலைப் படங்கள் கேட்டகிரி என்று சொல்வதைவிட, ஹாலிவுட் வணிக சினிமா கேட்டகிரியில் வருபவையே. தரமான வணிக சினிமாவைத் தர முயல்பவர் என்று சொல்லலாம். 
செல்வராகவன் கடைசியாக அனைத்துத் தரப்பினரும் மகிழும்படி கொடுத்த திரைப்படம், 7ஜி ரெயின்போ காலனி. அதற்கு முன்னால் காதல் கொண்டேன். புதியவகையான கதை சொல்லல்,காதலின் மெல்லிய உணர்வுகளை திரையில் கொண்டுவரும் நுணுக்கமான திறமை போன்றவற்றால், தமிழின் நம்பிக்கை தரும் இயக்குநராக செல்வராகவன் இடம்பிடித்தார். அதே நேரத்தில் சேது என்ற காதல் படம் மூலம் அறிமுகமான பாலா, காதலை உதறி அடித்தட்டு மக்களை நோக்கி தன் படைப்புத்திறனைச் செலுத்த ஆரம்பித்தார். செல்வராகவனும் ‘புதுப்பேட்டை’ மூலம் தான் ஒரு ‘கில்மாத் தர’ இயக்குநர் மட்டுமல்ல என்று நிரூபிக்கும் முயற்சியில் இறங்கினார்.

செல்வாவிற்கு பிரச்சினை ஆரம்பித்தது அங்கே இருந்து தான். உண்மையில் புதுப்பேட்டை, தமிழில் ஒரு உன்னதமான முயற்சி. ஒரு தாதாவின் வாழ்க்கையை, சென்னையில் இருண்ட பக்கத்தை யதார்த்தமாகச் சொல்ல முயன்ற படம். தமிழில் முதல் ‘நியோ நாய்ர் (Neo-Noir)' ஆக, ஆகியிருக்க வேண்டிய படம். இரண்டாம்பாதி திரைக்கதை சொதப்பலால், நல்ல முயற்சி என்ற அளவிலேயே அது முடிந்துபோனது.பின்னர் 5 வருடங்கள் கழித்து வந்த ஆரண்ய காண்டம், அந்த பெயரை தட்டிச் சென்றது. புதுப்பேட்டைக்கு வந்த விமர்சனங்கள் சொன்னது இது தான் : நல்ல முயற்சி, இரண்டாம் பாதியில் தான் திரைக்கதை தறிகெட்டு ஓடிவிட்டது. இருப்பினும் தவிர்க்க முடியாத படம்.
பின்னர் தெலுங்கில் ‘யாரடி நீ மோகினி’ எடுத்தார். தரத்தில், மேக்கிங்கில் அது ஒரு ஆவரேஜ் படம். அதை தன்னுடைய படமாக செல்வா காட்டிக்கொள்ள விரும்ப மாட்டார் என்றே நம்புவோம். பின்னர் ஆயிரத்தில் ஒருவன் படத்தை எடுத்தார். தமிழில் ஒரு ஃபேண்டஸி படம் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ஆனால் படம் பார்த்தபோது, செல்வாவை நினைத்து பரிதாபப்படவே முடிந்தது. நிச்சயமாக அதுவும் தமிழில் ஒரு நல்ல முயற்சி. இரண்டாம்பகுதிக்கு திரைக்கதை எழுதிவிட்டுத்தான் ஷூட்டிங் போனாரா என்று திகைக்கும் அளவிற்கு, பெர்ஃபக்சன் இல்லாமல் படம் அலைபாய்ந்தது. அது ஒரு அற்புதமான கதை. ’தங்களுக்குள் போரிட்ட சோழ-பாண்டிய வம்சங்கள் இப்போதும் இருந்தால்...இப்போதும் அந்த போர் தொடர்ந்தால்..’எனும் செமயான நாட் அது. நல்ல கதையும் ஃபேண்டஸியும் போதும் என்று திரைக்கதை பற்றி அதிகம் செல்வா, அலட்டிக்கொள்ளாததின் அவலமே ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம்.

அடுத்துவந்தது மயக்கம் என்ன. தமிழில் பியூட்டிஃபுல் மைண்ட் போன்று வந்திருக்க வேண்டிய படம். அந்த திரைப்படத்தின் பெரும்பாலான விமர்சனங்கள் சொன்னது இது தான் : முதல்பாதிக்காக பார்க்கலாம். இரண்டாம் பகுதியில் என்னென்னவோ நடக்கிறது. செல்வாவிற்கு ஒரு நல்ல அல்லது கெட்ட பழக்கம் உண்டு. தனது படத்தின் திரைக்கதையை அவரே முழுக்க எழுதுவாராம். உதவியாளர்களிடன் சீன் கலெக்ட் பண்ணுவதில்லை என்று படித்திருக்கிறேன். ஆரம்ப காலத்தில் புதிய சிந்தனையாக அவர் படங்கள் தெரிந்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்போதும் அப்படித்தான் எழுதுகிறாரோ என்று சந்தேகம் வருகிறது.

இதுவரை படித்ததில் புதுப்பேட்டை-ஆயிரத்தில் ஒருவன் - மயக்கம் என்ன படங்களுக்குள் ஒரு துயரமான ஒற்றுமையை நீங்கள் கவனித்திருக்கலாம். அவை மூன்றுமே வித்தியாசமான முயற்சிகள், அடிப்படையில் நல்ல வலுவான கதை, நல்ல முதல் பகுதி, மோசமான இரண்டாம்பகுதி! துரதிர்ஷ்டவசமாக இரண்டாம் உலகத்திற்கும் இது பொருந்திப்போகிறது. 2006ல் வந்த புதுப்பேட்டையில் ஆரம்பித்து, 2013ல் வந்திருக்கும் இரண்டாம் உலகம் வரை ஒரே புராணம் தான் ‘நல்ல முயற்சி’. இன்னும் எத்தனை வருடங்களுக்கு செல்வா முயற்சி செய்துகொண்டே இருக்கப்போகிறீர்கள்?
உண்மையில் செல்வாவிற்கு என்ன தான் பிரச்சினை? அருமையான கருவை எடுத்துக்கொள்கிறார். அற்புதமான திரைக்கதை வடிவத்தையும்(நியோ நாய்ர்-ஃபண்டஸி என..) எடுத்துக்கொள்கிறார். ஆனால்...ஆனால் அவசரக்குடுக்கையாக, திரைக்கதையை முழுக்க எழுதுவதில்லை அல்லது அரைவேக்காட்டுத்தனமாக, மோசமான ஃபினிஷிங் உடன் எழுதுகிறார். முக்கால்கிணறு தாண்டியதுமே, அவருக்கு ஓவர் கான்ஃபிடென்ஸ் வந்துவிடுகிறது. அவரே ‘எப்பேர்ப்பட்ட முயற்சி..என்னா ஒரு கதை..என்னா ஒரு மேக்கிங்’ என்று புல்லரித்துப்போகிறார். சினிமா என்பது கதையோ, மேக்கிங் ஸ்டைலோ அல்ல; திரைக்கதை தான் சினிமா. முழுமையின்றி அந்தரத்தில் தொங்கும், விடை காணப்படாத கேள்விகள் ஒட்ட்டடை போல் படிந்திருக்கும் ஸ்க்ரிப்ட்டை வைத்துக்கொண்டு, ‘எவ்வளவு பெரிய முயற்சி..இதை குறை சொல்கிறீர்களே?’ என்று அழுவதில் அர்த்தம் இல்லை.

காதல் கொண்டேன் வெற்றிவிழா நிகழ்ச்சியை டிவியில் பார்த்தபோதுதான், அது ஒரு லோ பட்ஜெட் படம் என்றே தெரிந்தது. துல்லியமான திரைக்கதையே படத்தை பிரமாண்டமாகக் காட்டியது. படத்தின் பட்ஜெட் ஒரு கோடிக்கும் கீழ் தான். ஆனால் இன்று 60 கோடிகள் கிடைத்தும், அந்த திருப்தியை நமக்கு செல்வாவால் ஏன் கொடுக்க முடியவில்லை? கதையிலும் ’முழுமையான’ திரைக்கதையிலும் பிரமாண்டத்தைக் கொண்டுவந்தாலே போதும், 6 கோடியில் அற்புதமாக படம் எடுத்துவிடலாம். இல்லையென்றால் வெறுமனே கதையும், காட்சிகளில் பிரமாண்டமும் மட்டுமே போதும் என்பவர்களுக்கு மட்டுமே செல்வாவின் படங்கள் அற்புதமாகத் தோன்றும்.

ஃபேண்டஸி படம் பற்றி செல்வா என்ன வகையான கருத்தைக் கொண்டிருக்கிறார் என்றும் தெரியவில்லை. அவதார் படம் தான் ஃபேண்டஸியின் உச்சம். ஆனால் மிக எளிமையான கதை. (ஒரு பதிவுலக நண்பர் வியட்நாம் காலனி படத்தின் கதைக்கும், அவதார் கதைக்கும் உள்ள ஒற்றுமையை விளக்கியிருந்தார். பெயர் மறந்துவிட்டது). அந்த எளிமையான கதைக்குப் பின் ஒரு வலுவான குறியீடு இருந்தது.

 ‘உங்களை நாகரீகமாக்குகிறோம்’ என்ற பெயரில் வேட்டையாடப்பட்ட செவ்விந்தியர் முதல் ஆப்பிரிக்கர்வரை பலரின் துயரத்தை அந்தப் படம் சொன்னது. நாகரீகம் என்ற பெயரால் அழிக்கப்பட்ட மனிதர்கள், கலைகள். கலாச்சாரங்கள் அனைத்திற்கும் அவதார் கதை பொருந்தும். அது தான் அந்த படத்தின் ஆன்மா. அது தான் நம்மை முழு திருப்தியுடன், தியேட்டரில் இருந்து அனுப்பி வைத்தது. இல்லையென்றால் இரண்டாம் உலகத்தில் கிடைத்த வெறுமையான உணர்வு தான், அவதாருக்கும் கிடைத்திருக்கும். ஃபேண்டஸி படம் என்பது கற்பனையான உலகத்தை, உண்மையான ஆன்மாவுடன் சிருஷ்டிப்பது. சிஜிக்காரனை மட்டும் நம்பி எடுப்பது ஃபேண்டஸி படம் அல்ல, பொம்மைப் படம்.
ஒரு படத்தின் கமர்சியல் வெற்றி என்பது வேறு விஷயம். வெறும் மழையாலேயே ஓடாமல் போன படங்களின் சோகக்கதையெல்லாம் இங்கே உண்டு. அந்த நாள் முதல் ஆரண்ய காண்டம் வரை வணிகரீதியில் தோற்றுப்போன தரமான படங்களும் இங்கே உண்டு. ஆனால் அந்த படத்தைப் பார்த்ததுமே அந்த இயக்குநர்கள் மனநிறைவடைந்திருப்பார்கள், நல்ல சினிமாவுக்கு ஏங்கும் ரசிகர்களும் அதே உணர்வை அடைந்திருப்பார்கள். செல்வாவின் சமீபத்திய படங்கள், அத்தகைய நிறைவை அளிக்கின்றனவா?  சுருக்கமாகக் கேட்பதென்றால், காதல் கொண்டேன் படம் கொடுத்த நிறைவு, செல்வாவிற்கு இந்த படங்களில் கிடைத்ததா?

இங்கே கதை/திரைக்கதையையும் ஒருவரே செய்வதால், விமர்சகர்கள் திரைக்கதையை விமர்சிப்பதோடு செல்வாவை விட்டுவிடுகிறார்கள்.  20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் உலகம் 25-30 கோடியில் முடியலாம். ஆனால் 60 கோடி செலவாகியிகிறதென்றால், ஒரு இயக்குநராக செல்வா தோற்றுவிட்டார் என்றே அர்த்தம். தெளிவான திட்டமிடலும் ஒரு இயக்குநருக்கான அடிப்படைத் தேவை. ’இரண்டாம் உலகத்திற்கு வரவேற்பில்லை என்றால், இனி சினிமாவே எடுக்க மாட்டேன்’ என்று செல்வா பேட்டியளித்திருந்தார். நிரந்தர ஓய்வில் அல்ல, ஒரு நீண்ட ஓய்வில் போய் செல்வராகவன் தன்னைத் தானே இத்தகைய கேள்விகளால் சுயபரிசோதனை செய்வது அவசியம். இன்னும் செல்வராகவனை நாம் நம்புவதாலேயே, இந்த வேண்டுகோள்!


மேலும் வாசிக்க... "இரண்டாம் உலகம் மற்றும் செல்வராகவன் எனும் மலராத பூக்கள்!"