Showing posts with label ஹாலிவுட். Show all posts
Showing posts with label ஹாலிவுட். Show all posts

Saturday, April 28, 2018

HEAT ( 1995) – க்ளாசிக்கல் க்ரைம் மூவி




நல்ல படங்களுக்கும் மோசமான படங்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை என்னவென்றால், படம் பார்த்து இரண்டு, மூன்று நாட்களுக்கு நம்மை தொந்திரவு செய்துகொண்டே இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, மீண்டும் ஹீட்டை பார்த்தேன். மூன்று நாட்கள் கடந்தும் இன்னும் சூடு குறையவில்லை.

அல் பசினோ, ராபர்ட் டி நீரோ எனும் இரண்டு சிங்கங்கள் இணைந்து மிரட்டிய படம். இயக்குநர் மைக்கேல் மேன்னின் பெஸ்ட் மூவியாக இன்றும் முதலிடத்தில் இருக்கும் படம்.
இயக்குநர் மைக்கேல் மேனின் நண்பர், முன்னாள் போலீஸ்கார், இயக்குநரின் கதை ஆலோசகர் ஆடம்சன். அவர் சந்தித்த நீல் எனும் ஒரு தொடர் கொள்ளையனைப் பற்றியும், நீலின் பெர்ஃபெக்சனிசம் பற்றியும் மைக்கேல் மேன் அறிந்தபோது, தொடங்கியது இந்த கிளாசிக்கல் மூவிக்கான விதை. ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு மேலாக எழுதப்பட்ட திரைக்கதை. இடையில் l.a. takedown (1989) எனும் டிவி பைலட் மூவியாகவும் இந்தக் கதையை மைக்கேல் மேன் எடுத்தார். (ஆரம்பத்தில் இதை டிவி சீரீஸாக செய்வதாக ஐடியா).

கதையின் கிளைமாக்ஸ் சிக்கியபின், இதை அல் பசினோவும் ராபர்ட் டி நீரோவும் இணைந்து நடித்தால், மறக்க முடியாத சினிமாவாக வரும் என்பதை இயக்குநர் உணர்ந்தார். ஹீட் ஆரம்பம் ஆனது.

தனக்கென்று பெர்ஃபெக்ட்டான சிறு குழுவை வைத்துக்கொண்டு, பெரிய அளவிலான கொள்ளைகளை நட த்தி வருபவன் நீல் மெக்காலே (ராபர்ட் டி நீரோ). இதைத் தவிர வாழ்க்கையில் அவனுக்கு வேறு எதுவும் முக்கியம் கிடையாது. தொழில் பக்தாஸ்!

தனது குழுவுடன் நகரின் நடக்கும் குற்றங்களை தடுக்கும், குற்றவாளிகளை விரட்டி விரட்டி வேட்டையாடும் போலீஸ் அதிகாரி வின்சன்ட் ஹன்னா (அல் பசினோ). இரண்டு டைவர்ஸ்களைக் கடந்து, மூன்றாவது டைவர்ஸை நோக்கி போய்க்கொண்டிருக்கும் சின்சியர் ஆபீசர். வேலையைத் தவிர வேறு எதுவும் முக்கியம் கிடையாது.

ஏறக்குறைய சம திறமையுள்ள, தொழில்பக்தி மிக்க ஆனால் எதிரெதிர் துருவங்கள். பட த்தின் முதல் காட்சியிலேயே ஒரு கொள்ளை நடுரோட்டில் நடக்கிறது. டி நீரோவின் குழுவில் புதிதாகச் சேர்ந்த வேய்ங்க்ரோவின் அதிகப்பிரசிங்கித்தனத்தால், முதல் கொள்ளை மூன்று கொலைகளுடன் முடிகிறது. அதை விசாரிக்க அல் பசினோ வந்து சேர்கிறார்.

வேய்ங்ரோவை டி நீரோ கொல்ல முயல, அவன் தப்பிச்செல்கிறான். அந்த ஆபத்து டி நீரோவை நோக்கி எப்போதும் திரும்பி வரும் சூழ்நிலை. இன்னொரு பக்கம், அல் பசினோ விரிக்கும் வலை.
ஆபத்து உன்னை நெருங்கும்போது, 30 செகண்டிற்குள் விட்டு விலக முடியாத எதனுடனும் உன்னை பிணைத்துக்கொள்ளாதேஎன்பது டி நீரோவின் தொழில் தர்மம். மனைவி மேல் அட்டாச்மெண்டாக இருக்கும் தம்பிக்கே, டி நீரோ கொடுக்கும் அட்வைஸ் அது தான்.

அல் பசினோ ஸ்கெட்ச் போட்டு, டி நீரோவை நெருங்கும்வேளையில், டி நீரோவுக்கும் ஒரு காதல் வருகிறது.

அல் பசினோ இந்த கொள்ளைக்கூட்டத்தைப் பிடித்தாரா?

டி நீரோ தன் தொழிலை அல் பசினோவை மீறி செய்ய முடிந்ததா?

இரு ஹீரோக்களாலுமே தன்னையும், தன் கூட்ட த்தையும் மற்ற ஹீரோவிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள முடிந்ததா?

இரண்டு ஹீரோக்களின் பெர்சனல் வாழ்க்கை என்ன ஆகிறது

-    என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்த க்ளாசிக்கல் மூவி.

ஹீட் -ஐ க்ரைம் மூவி என்று சொல்வதைவிட, எமோசனல் டிராமா என்று சொல்லிவிடலாம். திருடன்போலீஸ் விளையாட்டு என்பது ப்லாட்டாக இருந்தாலும், ஒவ்வொரு முக்கிய கேரக்டரின் பெர்சனல் வாழ்க்கை பற்றியும், ஃபீலிங்ஸ் பற்றியுமே படம் அதிகம் பேசுகிறது.

படத்தை மறக்க முடியாத அனுபவமாக ஆக்குபவை நான்கு சீன்கள் :

1.  1.  அல் பசினோவும் டி நீரோவும் சந்திக்கும் ரெஸ்டாரண்ட் காட்சி. சினிமா வரலாற்றில் மிக முக்கியமான காட்சிகளுள் ஒன்றாக இன்றளவும் கொண்டாடப்படும் காட்சி அது. இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் இடம் அது. அதே நேரத்தில் இன்னும் உக்கிரமாக மோதிக்கொள்ளப்போகிறார்கள் என்பதையும் நமக்கு உணர்த்திவிடும் காட்சி. இரண்டு பேரின் உடல்மொழிக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் காட்சி.

2.   2. பேங்க் கொள்ளை. ஒரு அதகள ஆக்சன் பட த்தின் கிளைமாக்ஸ் காட்சி போல், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராமல் நிகழும் காட்சி. இருதரப்புமே தன்னை மறந்து களத்தில் குதிக்கும் அழகை, பார்த்துக்கொண்டே இருக்கலாம். இந்த சீனைப் பற்றி படிப்பதைவிட, பட த்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

3.  3.  ‘Sun rises with her & sets with her’ என்று சொல்லும் தம்பி வால் கில்மர்க்கும் அவரது சீட்டிங் மனைவிக்கும் இடையிலான கடைசி ஷாட், அந்த கை அசைப்பு.
4.     
4. மைக்கேல் மேன் கேரக்டர்களை வடிவமைத்த விதத்தினால், இரு ஹீரோக்களுமே ஜெயிக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். திருடன் என்பதால் டி நீரோ தோற்றுப்போக வாய்ப்பு இருப்பதையும் நாம் உணர்கிறோம். இங்கே எதுவும் நடக்கலாம் என்பதால், ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். இந்த அளவிற்கு டச்சிங்கான கிளைமாக்ஸ் காட்சியை, ஒரு க்ரைம் மூவியில் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. டி நீரோவின் காதலி திகைத்து நிற்கும் ஷாட், இறுதில் இரு ஹீரோக்களும் கை பிடித்து நிற்கும் அந்த ஷாட், கூடவே அந்த முடிவு….அசந்து போய் உட்கார்ந்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஒவ்வொரு கேரக்டர்களும் எடுக்கும் கடைசி முடிவுகளும், அதன் விளைவுகளும் தான் நம்மை உணர்ச்சிகரமாக ஆக்குகின்றன. திருந்தி வாழும் ஒருவன் மீண்டும் ட்ரைவராக திருடக் கிளம்புவது, அல் பசினோவை எப்போதும் தடுக்கும் அவன் மனைவி கிளைமாக்ஸில் தடுக்காமல் விடுவது, தம்பி மனைவியின் கடைசி முடிவு, டி நீரோ காதலி பற்றி எடுக்கும் கடைசி முடிவு, வேய்ங்ரோ பற்றி எடுக்கும் முடிவுஎன்று எல்லாமே, யோசித்துப்பார்த்தால், இவை வேறுவிதமாக நடந்திருக்கலாமே என்று நம்மை ஃபீலிங்கில் ஆழ்த்துவது தான் இந்த திரைக்கதையின் பெரும் பலம்.

இது பார்த்து ரசிக்க வேண்டிய படம் என்பதால், முடிந்தவரை ஸ்பாய்லர்களை தவிர்த்து எழுதியிருக்கிறேன். நல்ல சினிமா விரும்பிகள், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
மேலும் வாசிக்க... "HEAT ( 1995) – க்ளாசிக்கல் க்ரைம் மூவி"

Friday, September 1, 2017

The Conformist (IL CONFORMISTA)- இத்தாலிய சினிமா - அறிமுகம்


தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் ஒரு சினிமாவைப் பார்க்கிறார். ‘படம் பிடிக்கலை..இதுவொரு குப்பை’ என்று சொல்கிறார். உடனே அவர் கடும் மிரட்டலுக்கு ஆளாகிறார். அவர் வீட்டுப் பெண்களைப் பற்றி வசைமழை பொழிகிறார்கள். தன் அடையாளத்தைக் குறிப்பிட்டே, ‘உன்னை கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டுகிறார்கள். அவர் அந்த படத்தின் ஹீரோவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார், உங்கள் ரசிகர்களைக் கண்டியுங்கள்..அவர்களால் என் உயிருக்கு ஆபத்து என்று. அங்கேயிருந்து எந்த பதிலும் இல்லை. கனத்த மௌனம். ஒரு எழுத்தாளனின் உயிரைவிட ஒரு கமர்சியல் படத்தின் வசூல் முக்கியம் இல்லையா? அடுத்த படம் ரிலீஸ் ஆகும்போது விமர்சனம் எழுத, எழுத்தாளர் யோசிக்க வேண்டும் இல்லையா? 

‘நேர்மை என்றால் ஹமாம்’ என்பது போல் நல்லவர் என்றால் அந்த நடிகர் தான் எனும் பிம்பம், மீடியாக்களால் கடந்த பத்து வருடங்களாகவே வளர்த்தெடுக்கப்பட்டது. கிளிப்பிள்ளை மாதிரி எல்லோருமே இன்று அவர் நல்லவர் என்று ஒத்துக்கொள்வார்கள், நீங்கள் உட்பட. பாசிடிவ் செய்திகளைத் தவிர வேறு எதுவுமே எங்கேயும் வெளிவரவில்லை. நெகடி செய்திகளும் உடனடியாக நீக்கப்பட்டன, மறைக்கப்பட்டன. தற்போதுகூட ஒரு பிரபல இணையதளத்தில் அந்த படத்தின் விமர்சனம் ‘திருத்தி’ எழுதப்பட்டது. முதல்நாள் மோசமான படம் என்ற விமர்சனம், அடுத்த நாளே அருமை என்றது. இப்படி பாசிடிவ் செய்திகளை மட்டுமே கேட்டு பழகிப்போன ரசிகர்களுக்கு, திடீரென ஒரு படம் குப்பை என்று நெகடிவ் விமர்சனம் வரவும், அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. ‘என் தலைவன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்..அவர் படத்தையே குறை சொல்றியா?’ என்று மிரட்டலில் இறங்கிவிட்டார்கள்.

ஏன் விமர்சித்த எழுத்தாளனுக்கு ஃபோன் செய்து ‘கொன்று விடுவேன்’ என்று ‘சொன்னார்கள்’? ஏனென்றால் கையில் அதிகாரம் இல்லை, எனவே ‘சொன்னார்கள்’. இல்லையென்றால் செய்திருப்பார்கள். தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு சில நல்லவர்களில் ஒருவர் என்று மீடியாக்களால் முன்னிறுத்தப்படும் நடிகரின் ரியாக்சனே இப்படி என்றால், மற்றவர்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தனக்கு எதிரான கருத்தை யாரும் வெளியிட்டுவிடக்கூடாது, அந்த கருத்தும் கருத்தைச் சொல்பவரும் சமூகத்தில் இருந்தே ‘நீக்கப்பட’ வேண்டியவர்கள் என்பது தான் பாசிசம். இது சென்ற வாரத்தில் இங்கே நடந்த வரலாறு!

ஹிட்லர், முசோலினி போன்ற தனிமனிதர்களால் எப்படி ஒரு கூட்டத்தையே வெறிபிடிக்க வைக்க முடிந்தது என்பதற்கான பதில், இந்த சமகால நிகழ்வுகளில் ஒளிந்திருக்கிறது. எழுத்தாளரை மிரட்டியவர்கள் யார் என்று பார்த்தால், மிகப் பெரிய ரவுடியாகவெல்லாம் இருக்க மாட்டார்கள். சாமானியர்கள். அன்றாடங்காய்ச்சிகள். சுய அடையாளம் இல்லாதவர்கள். தன் தலைவனைப் பற்றியோ தலைவன் சம்பந்த விஷயங்களைப் பற்றியோ எதிர்மறைக் கருத்தை சகித்துக்கொள்ள முடியாத மனநிலைக்கு தள்ளப்பட்டவர்கள். மிகத் தீவிரமாக தன் தலைவனை நேசிப்பவர்கள். ஆனால் இவர்களை விடவும் மோசமான ஆட்கள் உண்டு, அவர்கள் தான் Conformists.


ஒரு சாதாரண திரைப்படத்திற்காக ஒரு இலக்கியவாதி மேல் தாக்குதலே நடந்தாலும், ஒன்றுமே நடக்காதது போல் கமுக்கமாக இருப்பவர்கள். அந்த நடிகராலோ அல்லது அவர்களின் ரசிகர்களாலோ கிடைக்கும் ஆதாயங்களை இழக்க விரும்பாதவர்கள். தனக்கு பயன் கிடைக்கும் என்று தெரிந்தால், ரசிகர் கூட்டத்துடன் இணைந்து தாக்குதலில் இறங்கக்கூடியவர்கள். இவர்களுக்கு ஃபாசிச தலைமையின் கொள்கை பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மெஜாரிட்டி ஆதரவு எந்தப் பக்கம் இருக்கிறதோ, எந்தப் பக்கம் இருந்தால் சௌகரியங்கள் கிட்டுமோ அந்தப் பக்கம் நிற்கக்கூடியவர்கள். ஃபாசிச தலைமையை விட, அவர்களை ஆதரிக்கும் கூட்டத்தை விட ஆபத்தான ஆட்கள் இந்த Conformists.

சினிமாக்களில் ஃபாசிச தலைமையைப் பற்றி படங்கள் வந்திருக்கின்றன. அவர்களை ஆதரிக்கும் கூட்டத்தைப் பற்றி, எதிர்க்கும் கூட்டத்தைப் பற்றி, பாதிக்கப்பட்ட கூட்டத்தைப் பற்றியெல்லாம் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இந்த வகைகளில் சேராமல், சுயநலத்தைத் தவிர வேறு எதையும் யோசிக்காத, அதே நேரத்தில் கெட்டவர்கள் என்றும் ஒதுக்கிவிட முடியாத Conformists பற்றி இலக்கியங்களோ, சினிமாக்களோ அதிகம் பேசியதில்லை. காரணம், இதுவொரு சிக்கலான மனநிலை. ‘நிம்மதியாக, ஊரோட ஒத்து வாழ நினைக்கும் அப்பாவிகள்’ என்றும் இவர்களைச் சொல்லலாம், சுயநலத்திற்காக ஒரு தவறுக்கு துணை போகிறவர்கள் என்றும் சொல்லலாம். இந்த சிக்கலான கேரக்டரை காட்சிப்படுத்துவது மிகவும் கஷ்டம். அதை வெற்றிகரமாகச் செய்த படம் ‘ The Conformist (IL CONFORMISTA)'. 

இந்த படத்தின் ஹீரோவின் ஒரே லட்சியம், ஊரோடு ஒத்து வாழ்வது தான். சிறுவயதில் நடந்த சில மோசமான நிகழ்வுகளால், இயல்பான வாழ்க்கையில் இருந்து விலகிப்போனவன் அவன். எனவே ஒரு ’இயல்பு வாழ்க்கை’ வாழ என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய விழைகிறான். 

பெரும்பாலான மக்கள் சர்வாதிகாரியின் பக்கம் நிற்கிறார்கள்; அவனும் அங்கே சேர்ந்துகொள்கிறான்.

பெரும்பாலான மக்கள் திருமணம் செய்து வாழ்கிறார்கள்; அவனும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். 

திருமணத்திற்கு முன் பாவ மன்னிப்பு கேட்கும் வழக்கம் இருக்கிறது; அவனும் போய் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறான். ஆனாலும் அதுவரை செய்த தவறுகளைத் தொடர்கிறான்.

ஹனிமூன் ட்ரிப்புக்கு அவன் கிளம்புகையில், அவனுக்கு ஒரு அசைன்மெண்ட் கொடுக்கப்படுகிறது. ஃபாசிசத்திற்கு எதிர் கருத்து கொண்ட அவனது கல்லூரிப் பேராசிரியரைக் கொல்ல வேண்டும். அவனுக்கு மிகவும் பிடித்த பேராசிரியர் அவர். ’அதனால் என்ன?’ என்று ஹனிமூன் ட்ரிப்பின் ஆன் தி வேயில் அவரைக் கொலை செய்ய ஃப்ரான்ஸ் போய் இறங்குகிறான். அங்கே சிக்கல், ‘அன்னா’ வடிவில் வருகிறது.

அவளைப் பார்த்ததும் காதலில் விழுகிறான். அன்னா ஒரு பேரழகி. ஆனால் வயதான பேராசியரின் இளம் மனைவி. இப்போது காதலுக்காக(!) பின்வாங்குவதா? அல்லது தனது இயல்பு வாழ்க்கை தொடர பேராசியரை போட்டுத்தள்ளுவதா? புது மனைவியை என்ன செய்வது? அன்னாவும் சில நாட்களில் அவன் பேராசியரைக் கொல்ல வந்தவன் என்று புரிந்துகொள்கிறாள். அவளை மீறி, பேராசியரைக் கொல்ல வேண்டும். தேவைப்பட்டால், அவளையும் கொல்ல வேண்டும்! என்ன செய்வான் ஹீரோ?
ஃபாசிசம் எந்த அளவிற்கு மோசமானது என்று அடுத்தடுத்து வரும் நிகழ்வுகளும், கிளைமாக்ஸும் நமக்குச் சொல்கின்றன. படம் முடிகையில் திகைத்துப்போய்த் தான் அமர்ந்திருக்கிறோம். கொஞ்சம் கவனமாக இல்லாவிட்டாலும் நாமும் ஒரு Conformist ஆக மாறும் அபாயம், நம் வாழ்க்கையில் இருப்பதை படம் சுட்டிக்காட்டுகிறது.

இத்தாலிய சினிமாக்களில் பை சைக்கிள் தீவ்ஸ், சினிமா பாரடைசோ பற்றிப் பேசப்பட்ட அளவிற்கு, ஏனோ இந்தப் படத்தைப் பற்றிப் பேசப்படவில்லை. இந்த படத்தின் ஒளிப்பதிவு, உலகப் புகழ்பெற்றது. பல ஃபிலிம் இன்ஸ்டுயூட்களில் ஒளிப்பதிவிற்காக ஸ்டடி செய்யப்படுவது!

என்னைப் பொறுத்தவரை இது தான் இத்தாலிய சினிமாக்களில் பெஸ்ட் என்பேன்!
மேலும் வாசிக்க... "The Conformist (IL CONFORMISTA)- இத்தாலிய சினிமா - அறிமுகம் "

Wednesday, December 17, 2014

The Double Life of Véronique (1991) - சினிமா அறிமுகம்

சினிமா ஒரு விஷுவல் மீடியம்.

இது ஒரு புளித்துப்போன வசனம் தான் என்றாலும், இதை உணர்ந்து படம் எடுப்பவர்கள் மிகவும் குறைவு. வசனங்களிடமும் ஓவர் ஆக்டிங்கிடமும் சரணடைபவர்களே அதிகம். ஆனால் தான் வைக்கும் ஷாட்களின் மூலமே, கதையை நமக்குப் புரிய வைப்பதும், வசனங்களை முடிந்தவரை குறைப்பதுமே சினிமா ஒரு விஷுவல் மீடியா என்பதற்கு அர்த்தம். அத்தகைய படைப்பாளிகளில் ஒருவர் போலந்து இயக்குநர் Krzysztof Kieslowksi.

அப்போது சாதாரண நடிகையாக இருந்த Irène Jacob-ஐ ஹீரோயினாக வைத்து, Kieslowksi எடுத்த காவியம் தான் ' The Double Life of Véronique'. 1991ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோதே, பெரும் வரவேற்பைப் பெற்றது.

படத்தின் கதை சிம்பிளானது தான். ஒரே நாளில் வெவ்வேறு நாட்டில் (போலந்து & ஃப்ரான்ஸ்) பிறந்த இரு கதாநாயகிகள் வெரோனிக்கா & வெரோனிக். இருவரும் ஒரே போன்ற தோற்றம் உடையவர்கள். ஒரே போன்ற மேனரிசம் உடையவர்கள். ஒருவருக்கு ஒரு நாட்டில் நடப்பதை, இன்னொருவர் கனவு போன்றோ உள்ளுணர்வாகவோ உணர்கிறார்கள். ஆனாலும் தன்னைப் போன்ற இன்னொருவர் இருப்பது மற்றவருக்குத் தெரியாது.அதில் வெரோனிக்கா இறந்தபின்,  தன்னைப் போலவே தன்னில் இன்னொரு பாதியாக, தனக்கு ஒரு முன்னெச்சரிக்கையாக ஒருத்தி போலந்தில் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறாள் என்று ஃப்ரான்ஸ் வெரோனிக் உணர்ந்துகொள்கிறாள்.

படம் பார்க்கும்போது நாமும் ஒரு கனவு காண்கிறோமோ எனும் தோற்றத்தை ஏற்படுத்தியது தான் இயக்குநர் கீய்ஸ்லோவ்ஸ்கியின் வெற்றி. திரைக்கதையும், ஒளிப்பதிவும், ஜாகோப்பின் நடிப்பும் சேர்ந்து, விஷுவலாகக் கதை சொல்ல பேருதவி செய்திருக்கின்றன.

படம், போலந்தில் வாழும் வெரோனிக்காவுடன் ஆரம்பிக்கிறது. எனர்ஜெடிக்கான, நன்றாகப் பாடும் திறமையுள்ள, ஆனால் ஹார்ட் பிரச்சினையுள்ள பெண்ணாக அவரது கேரக்டர் விவரிக்கப்படுகிறது.

சிறுவயதிலேயே அம்மாவை இழந்தவர்..

அன்பான அப்பா..

ஃபைல் லேஸை விரலில் சுற்றிக்கொண்டேயிருக்கும் மேனரிசம் கொன்டவ்ர்..

தங்கமோதிரத்தால் இமையை வருடும் மேனரிசம் கொண்டவர்.

ஒளிஊடுருவும் ரப்பர் பால் ஒன்றின்வழியே உலகத்தை தலைமீழாகப் பார்ப்பதில் ஆர்வம்..

பாடும்திறமை உள்ளவர்.
இதயநோய் உள்ளவர்

- இப்படி படத்தின் முதல் அரைமணி நேரம் வெர்னிகாவுடன் மட்டுமே க(ளி)ழிக்கிறோம். வெர்னிகாவிற்கு திடீரென பாடும் வாய்ப்பு வர, முதல் மேடை நிகழ்ச்சியிலெயே இதயநோய் காரணமாக சுருண்டு விழுந்து இறந்து போகிறார். அதன்பின் படம் ஃப்ரான்ஸில் வெரோனிக் உடன் ஆரம்பிக்கிறது. (வெரோனிக்காவின் கதையை எந்த ஷாட்டில், எங்கே கட் செய்து, வெரோனிக்கின் கதையை எங்கேயிருந்து ஆரம்பிக்கிறார் என்று கவனித்துப்பாருங்கள். இறப்பில் இருந்து பிறப்புக்குத் தாவும் மேஜிக்கை அனுபவியுங்கள்.)

தான் தனி ஆள் அல்ல எனும் அதே உணர்ச்சியுடன் வாழும் வெரோனிக், நம்மூர் பொம்மலாட்டம் போன்ற பப்பெட் ஷோ நடத்தும் ஹீரோவுடன் காதலில் விழுகிறார். ஹீரோ யார் என்றே தெரியாத நிலையில், ஹிரோ அனுப்பும் க்ளூ எல்லாம் தற்செயலாக வெரோனிக்காவின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. அவன் தான் தன்னுடைய இன்னொரு பாதி என்று நினைத்து அவனைத் தேடிச் செல்லும் ஹீரோயின், அவன் ஒரு சுயநலவாதி என்பதையும் தன்னுடைய உண்மையான பாதி யார் என்பதயும் அங்கே தெரிந்துகொள்கிறாள்.

படத்தின் விஷேசமே, மேலே சொல்லப்பட்ட எதுவும் விலாவரியாக விளக்கப்படுவதில்லை. இருவருக்கும் ஹார்ட் பிராப்ளம் என்பதை இரு காட்சிகளில் சொல்கிறார் இயக்குநர்.
வெரோனிக்கா தெருவில்  போகும்போது நெஞ்சைப் பிடித்தபடி வலியை உணர்கிறாள்.

வெரோனிக் ஹீரோ அனுப்பிய லேஸை ஒரு ECG ரிப்போர்ட் மேல் வைத்துப் இருக்கிறாள்.

---------- அவ்வளவு தான். வசன விளக்கம் எதுவும் இல்லை. நுணுக்கமான நடிப்பு, கதை சொல்லும் ஷாட்ஸ் என இரண்டை வைத்தே முழுப்படமும் நகர்கிறது. ஒவ்வொரு ஷாட்டும் காரணத்தோடு, நுணுக்கமான டிடெய்ல்ஸுடன் வைக்கப்பட்டுள்ளது. ஒரு செகன்ட் அசந்தாலும், அதைத் தவறவிட்டுவிடுவோம்.


படம் முழுக்க குறியீடுகளால் நிரம்பி வழிகிறது. படத்தின் முதல் ஷாட், குழந்தையாக இருக்கும் வெரோனிக்காவை அவளது அம்மா தலைகீழாகப் பிடித்தபடி, வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைக் காட்டுகிறார்.

அடுத்த ஷாட், வெரோனிக்கின் அம்மா ஃப்ரான்ஸில் ஒரு மரத்தின் இலையைக் காட்டி, இது முதல் இலை. வ்சந்தகாலத்தில் இன்னும் பெருகும் என்று சொல்கிறாள்.

மறையும் நட்சத்திரம் வெரோனிக்காவிற்கு...வளர்ந்து செழிக்கும் இலை வெரோனிக்கிற்கு...ஏன் அப்படிக் காட்டப்படுகிறது என்று யோசியுங்கள்.
வெரோனிக்கா இறந்தபின்னர், வெரோனிக் உடன் ஆவியாக இருக்கிறாள் என்பதும் பல காட்சிகளில் குறிப்பாக உணர்த்தப்படுகிறது. அதில் ஒரு காட்சி தான் வெளிப்படையாக இருக்கும். மற்றவை கவனித்தால் தான் தெரியும்.


அதே போன்றே, போலந்தில் வாழும் வெரோனிக்காவின் வாழ்க்கையை சித்தரிக்கும் காட்சிகளில், பெரும்பாலும் வெரோனிக்காவின் ஒரு மிரர் இமேஜும் தெரிந்துகொண்டேயிருக்கும். இரட்டைத்தன்மையை விளக்க, ஹிட்ச்காக் கடைப்பிடித்த பாணி அது. அதை கீய்ஸ்லோவ்ஸ்கியும் வெற்றிகரமாக இங்கே உபயோகப்படுத்தியிருக்கிறார். (கீய்ஸ்லோவ்ஸ்கி வெள்ளைக்காரத்துரை என்பதால், இதை காப்பி லிஸ்ட்டில் அறிவுஜீவிகள் சேர்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.)

மர்மம், ஆவி, தற்செயல் என பல தளங்களில் படம் பயணிக்கிறது.  இயக்குநர் Keislowski இந்தக் கதையைச் சொல்லியிருக்கும் விதத்தில் தான், இந்தப் படம் உலக சினிமாவாக ஆகிறது.

தற்செயலாக நடக்கும் சம்பவங்கள் முடிவில் வேறு அர்த்தத்தை அல்லது ஒரு முழுமையை உண்டாக்குகின்றன. இந்த படத்தின் திரைக்கதையையும் அப்படியே அமைத்திருக்கிறார். முதலில் வேண்டாத சிறுவிஷயம் என்று நாம் நினைப்பது எல்லாம் பிற்பாதியில் முக்கியமானதாகவும் கதையை நமக்கு விளங்கவைப்பதாகவும் இருக்கின்றன. இந்த சிம்பிளான கதையை அர்த்தமுள்ளதாகவும், ரசிக்கவைப்பதாகவும் ஆக்குவது அந்த உத்தி தான்.

கூடவே, ஒளிப்பதிவு. “Every Frame is Painting’ என்று சொல்வது இந்தப் படத்திற்குத் தான் சாலப்பொருந்தும். லைட்டிங்கும், கேமிராக்கோணங்களும், ஹீரோயினும் நுணுக்கமான எக்ஸ்பிரச்ன்களும் சேர்ந்து, இந்தப் படத்தின் தரத்தை எங்கோ கொண்டுசென்றுவிடுகின்றன.

ஹீரோயினுக்கு நடப்பது என, அவள் யோசிப்பது என்ன. இருவருக்குமான பிணைப்பு என்ன என்று எதுவுமே வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. கிளமாக்ஸில் தான் நமக்கு மொத்தக்கதையுமே 'ஓரளவு' புரிகின்றன. மர்மமும் சுவாரஸ்யமும் கலந்த கலவையாக இந்தப் படம் இருக்கிறது.

Preisner-ன் இசையும் Irène Jacob-ன் நடிப்பும் அழகும் நம் மனதைவிட்டு ரொம்பநாளைக்கு நீங்காது.

‘ட்வின்ஸ், ஒருவருக்கு நடப்பதை இன்னொருவர் உணர்வார்கள்’ எனும் கான்செப்ட்டில் எம்.ஜி.ஆரின் நீரும் நெருப்பும் படமும், ஜாக்கிசானின் 'ட்வின் பிரதர்ஸ்' படமும் ஏற்கனவே வந்திருக்கின்றன. (கீய்ஸ்லோவ்ஸ்கி வெள்ளைக்காரத்துரை என்பதால்….ரிப்பீட்டேய்!) அந்தப் படங்கள் கமர்சியல் என்டெர்டெய்ன்மென்டுக்காக அந்த கான்செப்ட்டை யூஸ் செய்திருந்தன. இங்கே தன் கதை சொல்லும் முறையால் இயக்குநர் கீய்ஸ்லோவ்ஸ்கி    இந்த உலகத்தில் யாரும் தனியல்ல, ஏதேனுமொரு விதத்தில் இன்னொரு விதத்தில் இன்னொருவருடன் பிணைக்கப்பட்டவர்கள் தான் என்று நமக்கு உணர்த்த உபயோகித்திருக்கிறார்.

விளக்க ஆரம்பித்தால், ஒவ்வொரு காட்சியையும் விளக்க வேண்டும். அது நீங்கள் படம் பார்க்கும் அனுபவத்தைக் கெடுக்கும் என்று அஞ்சுவதால்....

ஏதாவது நல்ல புத்தகத்தைப் படிக்கும்போதோ அல்லது இணையத்தில் நல்ல படங்கள் பற்றிப் படிக்கும்போதோ ‘The Double Life of Véronique ' எனும் இந்தப்பெயர் திரும்பத் திரும்ப கண்ணில் பட்டுக்கொண்டே யிருக்கும். நீண்டநாட்கள் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்த படம்..இந்த வாரம் தான் பார்க்க முடிந்தது. அடுத்த நாளே மறுபடியும் பார்த்தேன்.... மெய் மறந்தேன்!

 இதுவரை நான் பார்த்த படங்களில் டாப் 5 லிஸ்ட்டில் இந்தப் படத்திற்கு மூன்றாம் இடத்தைத் தருகிறேன். உலக சினிமா ரசிகர்களுக்குப் பொக்கிசம் இந்தப் படம். ஒரு திரைப்படத்தின் கூறுகளான நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், கதை, திரைக்கதை என சகல அம்சங்களும் ஒன்றுபோல் பெர்ஃபெக்ட்டாக வருவது அபூர்வம். அது இந்தப் படத்தில் சாத்தியமாகியிருக்கிறது. அதனால் தான் இயக்குநர் Krzysztof Keislowski உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

எச்சரிக்கை/நல்ல செய்தி : படத்தில் கில்மா சீன்கள் உண்டு.
 
மேலும் வாசிக்க... "The Double Life of Véronique (1991) - சினிமா அறிமுகம்"

Tuesday, November 11, 2014

ஹிட்ச்காக் : Rebecca(1940) - ஒரு அலசல் (நிறைவுப் பகுதி)

ரிபெக்கா குளிர் காய்ந்த நெருப்பு
ரிபெக்காவிற்கு ஃபாவெல் எனும் ஒரு கள்ளக்காதலன் படத்தில் வருகிறார்.
George Sanders அந்த கேரக்டரில் கலக்கியிருப்பார். மிகவும் எனர்ஜெடிக்கான ஆசாமி. ரிபெக்காவை ஃபாவெல் கேரக்டரை விடவும் அதிகம் நேசிப்பது, Mrs.Danver தான்.

ரிபெக்காவின் கம்பேனியனாக வந்து, அந்த மாளிகையை நிர்வகிக்கும் பெண்மணி. Judith Anderson எனும் நாடக நடிகை அந்த கேரக்டரைச் செய்திருப்பார். ஹீரோயினை சைக்காலஜிக்கலாக டார்ச்சர் செய்யும் கேரக்டர் என்பதால், ஒரு மர்மமான பெண்மணியாக அசத்தியிருப்பார்.

ரிபெக்காவின் அடையாளங்கள் கொஞ்சமும் அழியாமல் பார்த்துக்கொள்வது.

ரிபெக்காவின் பெட் முதல் கர்ச்சீப் வரை, ரிபெக்கா உயிருடன் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே மெயிண்டெய்ன் செய்வது.

ஹீரோயின் எங்கு சென்றாலும், ரிபெக்காவை ஞாபகப்படுத்தும் ஏதோவொன்று இருக்கும்படி பார்த்துக்கொள்வது

அதன்மூலம், ஹீரோவும் ரிபெக்காவை முழுக்க மறந்துவிடாதபடி செய்வது.

கொஞ்சம் கொஞ்சமாக தாழ்வுமனப்பான்மையின் உச்சத்திற்கே ஹீரோயினைத் தள்ளுவது

ஹீரோயினை தற்கொலை செய்யத் தூண்டுவது – என மிஸஸ் டேன்வரின் லீலைகள் கணக்கில் அடங்காதவை. ஹீரோவை விடவும் முக்கியமான ரோல் இது. ஆனால் இதையேல்லாம் இவர் ஏன் செய்கிறார்?
ரிபெக்காவுடன் அந்த மாளிகைக்கு வந்தவர். ரிபெக்காவை ஆராதித்தவர். முதலாளியம்மா மேல் உள்ள பாசத்தினால் மட்டுமே அதைச் செய்கிறாரா? யாராவது முதலாளியம்மா இறந்துவிட்டால், அந்த இடத்திற்கு வேறு யாரும் வரக்கூடாது என்று நினைப்பார்களா? ஹீரோயின் போன்ற அப்பாவி முதலாளியம்மா கிடைத்தால், கொண்டாட மாட்டார்களா? சரி, ஹீரோவுக்கு ரூட் விடுகிறாரா என்றால், அதுவும் இல்லை. அப்புறம், ஏன்?

அதில் தான் ஹிட்ச்காக் ஒரு அணுகுண்டை ஒளித்து வைத்திருக்கிறார். ரிபெக்கா ஒரு லெஸ்பியன் என்றே யூகிக்கிறேன். மிசஸ் டேன்வரும் ரிபெக்காவும் காதலர்கள். 1940களில் அமெரிக்க சென்சார் போர்டு நம்மூர் சென்சார் போன்று ஸ்ட்ரிக்ட்டாக இருந்தது. ஓரினச்சேர்க்கை பற்றிய காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் அனுமதியில்லை. அனுமதி இருந்திருந்தாலும், ஹிட்ச்காக் இதை ஆடியன்ஸின் யூகத்திற்கு விடவே விரும்பியிருப்பார் என்று நம்புகிறேன்.

ரிபெக்காவுக்கும் மிசஸ் டேன்வருக்குமான உறவை கீழ்க்கண்ட விஷயங்கள் உறுதிப்படுத்துகின்றன.

- She adores Rebecca எனும் மிசஸ்.டேன்வர் பற்றிய வசனம்
- தன் காதலி ரிபெக்காவின் இடத்தில் இன்னொருத்தியா என்று கடுப்பாவது
- ஹீரோ வேறு யாரையும் அந்த இடத்திற்கு கொண்டுவந்துவிடக்கூடாது என்று நினைப்பது
- போலீஸிடம் ஃபாவெல் ரிபெக்காவும் தானும் காதலர்கள் என்று சொல்லும்போது, கடுப்பில் முகம் சிவப்பது.
- அவனிடம் கோபமாக ‘Love was a game to her…It made her laugh. She used to sit on the bed and rock with the laughter at the lot of you’ என்று சொல்வது.
- ரிபெக்காவை ஹீரோ கொன்றான் என்று கேள்விப்பட்டதும் கோபமாகி, அந்த டாக்டர் பற்றிச் சொல்வது. கல்யாணத்திற்கு முன்பே அந்த டாக்டரிடம் ரிபெக்கா செல்வது வழக்கம் என்று சொல்வது. அதாவது, மிசஸ்.டேன்வர் பலவருடங்களாக ரிபெக்காவை அறிவார்.

மிசஸ்.டேன்வர் என்று அழைக்கப்படாலும் மிஸ்டர்.டேன்வர் என்று யாரும் இல்லாதது. டாக்டரிடம் சென்ற ரிபெக்காவும் தன் பெயரை மிசஸ்.டேன்வர் என்றே கொடுத்திருப்பது. அதாவது, இருவருமே ஒருவருக்கொருவர் மிசஸ்.டேன்வர் தான்.

இறுதியில் ரிபெக்கா தற்கொலை தான் செய்துகொண்டாள் எனும் செய்தியைக் கேட்டதும், அந்த மாளிகையை அழித்துவிட்டு, மிசஸ்.டேன்வரும் இறந்து போவது!

விபத்தில் ரிபெக்கா இறந்தாள் எனும் எண்ணத்தில் தான் அதுவரை ரிபெக்கா வாழ்ந்த இடத்தை மிசஸ்.டேன்வர் பொத்திப் பாதுகாத்து வருகிறார். ரிபெக்காவின் இடத்திற்கு இன்னொருவர் வருவதைக்கூட ஜீரணிப்பதில்லை. இறுதியில் தன் துணை கேன்சர் வந்த காரணத்தால், தன்னிடம்கூட அதைச் சொல்லாமல் தற்கொலை செய்துகொண்டதை அறிந்து தானும் தற்கொலை செய்துகொள்வது. ஹீரோ-ஹீரோயின் காதலை விடவும், இந்தக் காதலின் சக்தி அதிகம் தான்.


இன்னும் கொஞ்சம்..:
இந்தப் படத்தில் சிறந்த நடிப்பை வழங்கியவர் யாரென்றால், ஹீரோயின் Joan Fonataine தான். ஒரு அப்பாவிப் பெண் என்பதை வசனங்களைப் பேசாமலேயே உணர்த்திவிடுகிறார். இதில் நடித்தமைக்காக இவரது பெயர் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனாலும் ஜஸ்ட் மிஸ்.

ஹீரோவாக நடித்த Laurence Oliver-ம் சாதாரண ஆசாமி அல்ல. பின்னாளில் Hamlet போன்ற படங்களை இயக்கிய சாதனையாளர். Spartacus படத்திலும் குறிப்பிடத்தக்க நடிப்பை வழங்கியிருப்பார். இந்த படத்திலும் குற்றவுணர்ச்சியுடனும் கவலையுடனும் அலைபவராக பின்னியிருப்பார். ‘உனக்கும் எனக்கும் இடையில் ரிபெக்கா நிழல் போல் இருந்துகொண்டே இருக்கிறாள். அவள் ஜெயித்துவிட்டாள்’ என்று ஹீரோயினிடம் அவர் சொல்லும் காட்சியில் இருவருமே பண்பட்ட நடிப்பை வழங்கியிருப்பார்கள்.

ரிபெக்கா கேரக்டர்க்கு உருவம் கிடையாது என்பது போலவே, ஹீரோயின் கேரக்டர்க்கு பெயரும் கிடையாது. ஹீரோ அவரை டார்லிங் என்பார், மற்றவர்கள் அவரை Mrs. De Winter என்று அழைக்கிறார்கள். இறுதிவரை அவர் பெயர் நமக்குத் தெரிவதேயில்லை.

‘காதல் காட்சியை மர்டர் சீன் போல் எடுக்கிறார். மர்டர் சீனை காதல் காட்சி போல் எடுக்கிறார்’ எனும் செல்ல குற்றச்சாட்டு/பாராட்டு ஹிட்ச்காக் மேல் உண்டு. ஹிட்ச்காக்கை சஸ்பென்ஸ் மன்னன் என்று சொன்னாலும், உண்மையில் காதல் காட்சிகளை உணர்ச்சிப்பூர்வமாக எடுப்பதில் மன்னன் அவர். வெர்டிகோ எதில் உச்சம். இந்தப் படத்தையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, காதல் உணர்வே மேலோங்கி இருக்கிறது.

அவரை சஸ்பென்ஸ் மன்னன் என்று கட்டம் கட்டாமல் இருந்திருந்தால், இன்னும் பல சிறப்பான காதல் கதைகளை அவர் வழங்கியிருப்பார். எனவே தான் அந்த வருட சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதினை இந்தப் படம் தட்டிச்சென்றதில் நாம் ஆச்சரியப்பட ஏதுமில்லை. மொத்தத்தில், ஹாலிவுட்டில் முதல்படத்திலேயே வெற்றிக்கொடி நாட்டினார் ஹிட்ச்காக். இந்த 1940லிருந்து 1976வரை முப்பத்தாறு வருடங்கள் ஹாலிவுட், ஹிட்ச்காக்கின் மந்திரத்தில் கட்டுண்டு கிடந்தது. அதை ஒவ்வொன்றாக இன்னும் பார்ப்போம்!

மேலும் வாசிக்க... "ஹிட்ச்காக் : Rebecca(1940) - ஒரு அலசல் (நிறைவுப் பகுதி)"