“அப்படியா?” என்று கேட்ட அகிலா, சடாரென எழுந்தாள்.
“வாங்க..போய் பாண்டியனோட பெர்சனல் ஃபைலை நாமளும் பார்க்கலாம்” என்றாள்.
ரங்கராஜன் பாண்டியனின் பெர்சனல் ஃபைலை எடுத்து, அகிலாவிடம் கொடுத்தார். அகிலா அதை வாங்கி, அவசரமாகப் புரட்டிப் பார்த்தாள்.
“..ஊர் திருப்பூர்னு போட்டிருக்கே..அப்பா பேர் முருகையன்..அப்பா இப்போ உயிரோட இல்லை. அம்மாவும் சமீபத்துல இறந்துட்டாங்கள்ல?”
“ஆமாம் மேம்”
“அப்பா பேர்ல எம்-ன்னு இனிஷியல் போட்டிருக்கு. அது என்ன பேர்னு டீடெய்ல் இருக்கா?”
“இருக்கும் மேம்..கொண்டாங்க, பார்த்துட்டுச் சொல்றேன்” என்று வாங்கிய ரங்கராஜன் சில
பக்கங்களைப் புரட்டியபின் “முத்துச்சாமி” என்றார்.
“என்ன..முத்துச்சாமியா..இதே பேர் தானே அந்த கேஸ்ல இருந்துச்சு..புகார் கொடுத்தவர் அவர் தானே?”
“ஆமா மேம்” என்றார் ரங்கராஜன்.
“சரி..இந்த ஃபைலை எடுத்துட்டு வாங்க..அந்த கேஸ் ஃபைலோட வச்சுப் பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு, அகிலா தன் அறைக்கு ஏறக்குறைய ஓடினாள்.
சித்தர்மலை கேஸ் ஃபைலை எடுத்து, முத்துச்சாமி பற்றிய விவரத்தைத் தேடினாள். அவரும் பூசாரியும் கொடுத்த வாக்குமூலங்களைப் படித்தாள். “எங்களுக்கு பணம், நகைன்னு எதுவும் வேணாம் சார்..எங்க சாமியை மட்டும் திருப்பிக்கொடுங்க. வழக்கை வாபஸ் வாங்கிட்டு நாங்க எங்கேயாவது போய், நிம்மதியா வாழ்ந்துக்கறோம்.” என்பதையே அவர்கள் திரும்பத் திரும்ப பல இடங்களில் சொல்லியிருப்பது தெரிந்தது.
கவிதா ரங்கராஜனை நிமிர்ந்து பார்த்துக் கேட்டாள் “முத்துராமன் சார் இந்தக் கேஸ் பத்தி என்ன நினைச்சார்? அவங்க புகார் உண்மைன்னு நினைச்சாரா? இல்லே, சும்மா பொய் சொல்றாங்கன்னு நினைச்சாரா?”
“அது எனக்குக் கரெக்ட்டாத் தெரியலை மேம்..ஆனால் அந்த நேரம் அவருக்கு நிறைய பொலிடிக்கல் பிரசர் இருந்துச்சு. ஆதாரமே இல்லாம அந்த மக்கள் பிரச்சினை பண்றாங்கன்னு ஆபீஸ்ல பேசிக்கிட்டாங்க”
”இப்போ ரெண்டு முத்துச்சாமியும் ஒன்னுதானான்னு தெரிஞ்சா, கேஸ் முடிஞ்சிடும்” என்றாள் அகிலா.
“சித்தர்மலை கேஸ் முத்துச்சாமியோட ஃபோட்டோ இருக்கு மேம்..பாண்டியன் தாத்தா ஃபோட்டோவுக்கு எங்கே போறது? பாண்டியன்கிட்ட இருக்குமான்னு கூட டவுட் தான்” என்று சொன்னார் ரங்கராஜன்.
அகிலா தீவிர யோசனையில் ஆழ்ந்தாள். முத்துராமன் சார் குடும்பம் மருதமலைக்கு அடிக்கடி போனது ஏன்? வீட்டில் மற்ற இடங்களை விட்டுவிட்டு, பூஜை ரூமில் MARS 1024 என்று எழுதியது ஏன்? கண்டிப்பாக இது இரண்டிற்கும் சம்பந்தம் இருக்க வேண்டும்.
அகிலா முத்துராமன் கொலைக்கேஸ் ஃபைலை செந்தில் பாண்டியன் டேபிளில் இருந்து எடுத்து வரச்சொன்னாள். பாண்டியன் கொலையாளியாக இருக்கலாமோ என்ற கோணத்தில் ஆரம்பத்தில் இருந்து எல்லாவற்றையும் மறுபடியும் படித்தாள்.
- கொலையாளி
முத்துராமனுக்கு நன்றாகத் தெரிந்தவன். அவன் உள்ளே நுழைய எந்த எதிர்ப்பும் அவர் காட்டவில்லை.
- உள்ளே நுழைந்தபின் சோஃபாவில் அமர்ந்து பேசியிருக்கிறார்கள், தொடர்ந்து ஏதோ வாக்குவாதம்
- பூஜை ரூமில் இருந்த நகைகள் திருட்டு..நகைக்காகத் தான் கொலை என்றால், மற்ற அறைகளில் இருந்த நகைகளை ஏன் எடுக்கவில்லை. அப்படியென்றால், சித்தர்மலையில் கிடைத்த நகைகளா அங்கு இருந்தன?
- MARS 1024 என்று முருகனைக் குறிக்கும் க்ளூ..முத்துராமனையும் பாண்டியனையும் இணைக்கும் முருகர் சம்பந்தப்பட்ட விஷயம்....சித்தர் மலை?
- லோக்கல் இன்ஸ்பெக்டரின் விசாரணைக்குறிப்பில் ‘முத்துராமன் மகன் ஸ்ரீனிவாசன், அப்பா டெட்பாடியைப் பார்த்து அதிர்ந்ததைவிட, பூஜை ரூமைப் பார்த்து அதிர்ச்சியானது அதிகம்’ என்று எழுதியிருந்தது..அப்படியென்றால்...அப்பாவைவிடவும் உயர்வான விஷயம் அங்கிருந்ததா?..நகைகள் அப்பாவை விடவும் முக்கியமானவையா? இருக்காதே..
ஸ்ரீனிவாசனை அகிலா நன்கு அறிவாள். அவரும் அப்பா மாதிரியே நல்ல மனிதராயிற்றே..
அகிலா யோசனையுடன் ஃபோனை எடுத்து முத்துராமன் வீட்டிற்குக் கால் செய்தாள்.
“ஹலோ..சார், நான் அகிலா பேசறேன்..வீட்ல தான் இருக்கிறீங்களா?....ஓகே சார்..நான் இப்போ அங்கே வந்தா உங்களைப் பார்க்கலாமா? ஓ, தேங்க் யூ சார்” என்று பேசிவிட்டு ஃபோனை வைத்தவள் எழுந்தாள்.
“நான் முத்துராமன் சார் வீடு வரைக்கும் போயிட்டு வந்திடறேன்.” என்று ரங்கராஜனிடம் சொல்லிவிட்டு வெளியேறினாள்.
(தொடரும்)
3 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.