Friday, June 12, 2020

திரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு

 

என் வலைப்பக்கத்தில் வெளியான மன்மதன் லீலைகள் தொடருக்குப் பின், எனக்கு அதிக மின்னஞ்சல்களைப் பெற்றுத் தந்தது திரைக்கதை சூத்திரங்கள் தான். 
 
 
 
எளிய நடையில் முழுக்க முழுக்க தமிழ் சினிமா உதாரணங்களை மட்டுமே பயன்படுத்தி எழுதியதால், பலருக்கும் உபயோகமாக இருந்தது.
சினிமா மாணவர்களிடமிருந்தும் உதவி இயக்குநர்களிடமிருந்தும் அன்றிலிருந்து சென்ற வாரம்வரை கூட பாராட்டும் நன்றி தெரிவித்தலும் வரும். கூடவே இதை புத்தகமாக வெளியிடுங்கள் என்று வேண்டுகோளும்.
எனது சோம்பேறித்தனத்தால் கடுப்பாகி, அவர்களே காப்பி செய்து ப்ரிண்ட் போட்டு படித்துக்கொண்ட உதவி இயக்குநர்களும் உண்டு. மகிழ்ச்சியுடன் நானும் அதை வரவேற்றிருக்கிறேன். நம் எழுத்து பிறருக்கு உதவுவதே சந்தோசம் தானே!
 
இப்போது ஒருவழியாக புத்தகத்தை தயார் செய்துவிட்டேன்.
தொடர்ந்து ‘தமிழில் உலக சினிமா’ தொடரும் ‘மன்மதன் லீலைகளும் கிண்டிலில் வெளிவரும்.
 
 
எனது பல வருட உழைப்பின் தொகுப்பான ’திரைக்கதை சூத்திரங்கள்’ அமேசான் கிண்டில் நூல் இன்று முதல் இந்த லின்க்க்கில் கிடைக்கும்:
 
 
 
நண்பர்கள் ஆதரவை வேண்டி...
 
அன்புடன்
செங்கோவி
 
டிஸ்கி: குவைத்தில் இருக்கும்போதே இதைச் செய்தால் தான் உண்டு. எனவே தான் இந்த கொரானா ரணகளத்திலும் இந்த சோலியை பார்த்துக்கொண்டிருக்கிறேன்!
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, April 19, 2020

மௌனராகம் ‘சந்திரமௌலி’ சீன் - செங்கோவியின் அலசல்

இயக்குநர் மணிரத்தினத்தின் சிறந்த படங்களில் ஒன்றான மௌனராகம் படத்தினை, ஹிந்தியிலும் kasak என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள். தமிழ் மற்றும் ஹிந்தியில் உள்ள ’சந்திரமௌலி’ சீன்களை ஒப்பிட்டு, குறிப்பாக நடிப்பு பற்றி நண்பர் கீதப்ரியன் எழுதியிருந்தார். (லின்க் https://www.facebook.com/Geethappriyan/posts/10158425070166340?__cft__[0]=AZUnyfNNlgjMBoaCkNjAeTigJCVnK23TG4uTE3C0siAfO-7ejsFhXfK3ROohL2YbZjYZrnaSSwQuHxWTuXlzUIGfAV6pMx93Vd7_iZw-Zj9mpHs3A9N55fUnA7cZHMn2KyM&__tn__=%2CO%2CP-R .

ஒருமுறை இரண்டு சீன்களையும் பார்த்துவிடுங்கள்). அவரின் பதிவின் தொடர்ச்சியாக, மேலும் கொஞ்சம் அலசுவோம்.

ஒவ்வொரு எழுத்தாளருக்கும் வாக்கிய அமைப்பு மாறுவது போல், ஒவ்வொரு இயக்குநருக்கும் ஷாட் செலக்சன் என்பதும் மாறும். ஒரு சீனை புரிந்துகொள்ளும் விதம், அவர்கள் ஹைலைட் செய்ய விரும்பும் விஷயம், தேவையான நடிப்பின் அளவு, எடிட்டிங், ஷாட் காம்போசிசன் என எல்லாமே மாறுபடும். எனவே, ஹிந்திப்பட இயக்குநர் பாப்பையா-வை மட்டையடி அடிக்காமல் இதை அணுகுவோம்.

காட்சி:

ஹீரோவும் ஹீரோயினும் காஃபி ஷாப்பில் சந்திக்கிறார்கள். அங்கே, எதிர்பாராதவிதமாக ஹீரோயினின் அப்பா சந்திரமௌலி வந்துவிடுகிறார். ஹீரோயின் பயந்து ஒளிய, குறும்புக்கார ஹீரோ மிஸ்டர்.சந்திரமௌலி(!)யை காஃபி சாப்பிட அழைக்கிறான். ஹீரோயின் பதறித் தவிக்க, சந்திரமௌலி குழம்பி நிற்க, ஹீரோ அவரைத் தொடர்ந்து அழைக்கிறான். ஆனாலும் அவர் மறுத்துவிட்டுக் கிளம்புகிறார். செல்லக்கோபத்துடன், ஹீரோயின் ஹீரோ மேல் தண்ணீரை ஊற்றுகிறாள். (மொத்த சீனில், இந்த பிட்-ஐ மட்டும் தான் எடுத்துக்கொள்கிறேன்.)

காட்சியின் உள்ளடக்கம்:

இந்த சீனை புரிந்துகொண்டதில், இரு இயக்குநர்களுமே மாறுபடுகிறார்கள்.

மணிரத்தினத்தைப் பொறுத்தவரை, இந்த சீனின் முக்கிய அம்சமே ஹீரோயினின் தவிப்பு தான். ஆடியன்ஸ் உணர வேண்டியது ஹீரோயின் பதறித் துடிப்பதைத் தான். ஆடியன்ஸும் அதே மனநிலைக்கு வருவது தான் சரியாக இருக்கும். சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்த சீன், ஹீரோயினின் சீன். ’ஹீரோ அழைக்கிறான், சந்திரமௌலி மறுக்கிறார்’என்பது இரண்டாம் பட்சம் தான்.

ஹிந்திப்பட இயக்குநர், இதை ஹீரோவின் சீனாக அணுகுகிறார். ஒரு குறும்புக்கார இளைஞன், ஹீரோயினை தவிக்க விடுகிறான் & ஹீரோயினின் அப்பாவை குழம்ப விடுகிறான். ‘எப்படி கதற விட்டோம், பார்த்தியா!’ என்பது போல், ஹீரோ இரண்டு பக்கமும் என்ன பேசுகிறான் & செய்கிறான் என்பதே ஹிந்தி சீனின் முக்கிய அம்சம். ஆடியன்ஸை ஹீரோவின் பாயிண்ட் ஆஃப் வியூ-வில் நிறுத்த முயற்சிக்கிறார்.

நடிப்பு:

கார்த்திக்கும் ரேவதியும் தனித் தனியே நடித்தாலே தூள் கிளப்புவார்கள். இருவரும் இணைந்த, அத்தனை படங்களிலுமே கெமிஸ்ட்ரி வேறு லெவலில் தான் இருக்கும். இந்த லெஜண்ட்ஸுடன், ஹிந்தியில் நடித்த குழந்தைகளை ஒப்பிடுவது முறையல்ல. பாவம், விட்டுவிடுவோம்.

அப்பா கேரக்டரில் நடித்த இருவருமே ஓகே தான். ஆனாலும் தமிழில் நடித்த சங்கரனின் முகத்தில் இயல்பாகவே இருக்கும் அப்பாவிக்களை ஒரு ப்ளஸ் பாயிண்ட் தான்.




 ஷாட்ஸ்:
இரு படங்களிலும் வந்த ஷாட்ஸை இணைத்துள்ளேன். (1T-First shot Tamil, 1H-First shot Hindi, etc).

தமிழில் மாஸ்டர் ஷாட்டில், கேமிரா பொசிசனும் ப்ளாக்கிங்கும் ஹீரோ & ஹீரோயின் முகத்தை நாம் தெளிவாகப் பார்க்கும்படி டிசைன் செய்திருக்கிறார்கள். குறிப்பாக, ஹீரோயின் முகம். மேலும், பெரும்பாலான ஷாட்ஸ், ஹீரோயினை உள்ளடக்கியதாகவே இருக்கிறது.

முதல் ஷாட்டில், ஹீரோவுடன் அமர்ந்திருக்கும் ஹீரோயின் எழுந்து போவதும், திரும்ப ஓடுவந்து அமர்வதும், ‘என் அப்பா’ என்று ஹீரோவிடம் சொல்வதும் வருகிறது. அதன்பிறகு வரும் ஷாட்ஸில் அப்பாவின்  5 சிங்கிள் ஷாட்ஸ் & ஹீரோவின் 2 சிங்கிள் ஷாட்ஸ் தவிர்த்து, மீதி எல்லா ஷாட்டிலும் ஹீரோயின் இருக்கிறார். அவர் இல்லாத ஷாட்ஸிலும் ஹீரோயின் வாய்ஸ் இருக்கிறது. எனவே தான் ஹீரோயினுடன் சேர்ந்து, நாமும் ‘அய்யய்யோ’ என்று ஃபீல் ஆகிறோம்.

மேலும், ஹீரோயினுக்கு க்ளோசப் வைக்கவில்லை. பொதுவாக இந்த மாதிரி சீன்களில், யாருடைய பாயிண்ட் ஆஃப் வியூ முக்கியமோ, அவருக்கு க்ளோசப் வைப்பது வழக்கம். க்ளோசப் எடுத்துவிட்டு, எடிட்டிங்கில் தூக்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால்....

ஒரு சீனை மாஸ்டர் ஷாட் உடன் எஸ்டாபிள் செய்தபிறகு, அதுவும் மாஸ்டர் ஷாட் என்பது 2-ஷாட் அல்லது 3 ஷாட் ஆக இருக்கும்போது, கட் செய்து இன்னொரு ஷாட்டிற்குப் போவது ரொம்ப சிக்கலான விஷயம். ஹிட்ச்காக் இதைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். மாஸ்டர் ஷாட்டில் கேரக்டர்களுக்கு இடையே உருவாகியிருக்கும் எமோசன், கட் செய்யும்போது அடிபடும். அந்த எமோசன் கண்டினியூ ஆகும் அளவிற்கு, அடுத்த ஷாட் இருந்தே ஆக வேண்டும்.

இங்கே ஹீரோவும் ஹீரோயினும் அமர்ந்திருக்கும் ஷாட்டிலேயே, சீனின் சஸ்பென்ஸ் உருவாக்கப்பட்டுவிட்டது. தமிழில் இதை முடிந்தவரை உடைக்காமல், ஹீரோயினின் கை, வாய்ஸ் போன்றவற்றை எல்லாம் எல்லா ஷாட்டிலும் கொண்டுவந்து, மெயிண்டெய்ன் செய்கிறார்கள். சந்திரமௌலி தனியே நிற்பது லாஜிக்கலி கரெக்ட் என்பதால், அது உறுத்தவில்லை.

ஹிந்தியில் ‘ஹீரோவின் குறும்பு’ என்பது தான் சீனின் கான்செப்ட் என்பதால், மாஸ்டர் ஷாட்டை உடைத்து, தனித்தனி க்ளோசப் போக, இயக்குநர் தயங்கவே இல்லை. தமிழில் 12 ஷாட்களில் (பெரும்பாலும் மாஸ்டர் ஷாட்ஸ்) சொன்ன விஷயத்தை, ஹிந்தியில் 18 ஷாட்களில் சொல்கிறார்கள்.

ஹீரோயினின் அப்பாவை ஹீரோ அழைப்பது, ஹீரோயினிடம் திரும்பிப் பேசுவது, மீண்டும் அப்பாவிடம் பேசுவது என எல்லாவற்றையுமே சிங்கிள் ஷாட் (1-ஷாட்)-ல் ஹீரோவை தனியே உடைத்து எடுத்திருக்கிறார்கள். ஹீரோயினையும் க்ளோசப்பில் தனியே எடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே ஹீரோயினின் அப்பா தனியாகத் தான் நிற்கிறார். 18 ஷாட்களில், ஹீரோயின் 8 ஷாட்களில் தான் இருக்கிறார்.  ஹீரோவுக்கு 12 ஷாட்ஸ். ஹீரோ டூ அப்பா, ஹீரோ டூ ஹீரோயின், ஹீரோ டூ அப்பா என்பதாகவே கதை சொல்லுதல் இருக்கிறது.

ஹீரோயினுக்கு தனியே இரண்டு க்ளோசப் வைத்துமே, தமிழில் ஹீரோயின் கேரக்டர் உருவாக்கிய தாக்கத்தை உருவாக்க முடியவில்லை. காரணம், முன்னும் பின்னும் வந்த உடைக்கப்பட்ட ஷாட்ஸ். மூன்று கேரக்டர்களுமே தனித்தீவாக நிற்கிறார்கள். டிவி சீரியல் எஃபக்ட் வந்துவிடுகிறது.





எடிட்டிங்:


மேலேயே எடிட்டிங்கையும் சேர்த்தே பார்த்தோம். இன்னொரு குறிப்பிடத்தகுந்த விஷயம், அப்பா கேரக்டர் முதலில் காட்டப்படுவது.

தமிழில் ஹீரோயின் எழுந்து போவார், எதையோ பார்த்துவிட்டு ஓடுவந்து அமர்வார். ஹீரோ என்னவென்று கேட்டபிறகு, அப்பா வந்திருப்பதைச் சொல்வார், ஹீரோ எழுந்து பார்ப்பார். இவை அனைத்தும் ஒரே ஷாட்டில் (1T) சொல்லப்பட்ட பிறகு தான், மிஸ்டர்.சந்திரமௌலி வந்திருக்கும் விஷயமே நமக்கு காட்டப்படும்.

ஹிந்தியில் ஹீரோயின் எழுந்து போகும்போதே, அப்பா கேரக்டர் வந்திருப்பதை நமக்கு காட்டிவிடுவார்கள். ஹீரோவின் பாயிண்ட் ஆஃப் வியூவில் சொன்னாலுமே, இது சரியான முடிவு என்று எனக்குத் தோன்றவில்லை.
மாஸ்டர் ஷாட் (1H)-ஐ முழுக்க எடுத்திருக்கிறார்கள். ஆனாலும் இடையில் க்ளோசப் ஷாட்களாக வைத்தது, ஒர்க்-அவுட் ஆகவில்லை. அதைப் பார்த்தபிறகாவது, ஒரிஜினலை ஃபாலோ செய்திருக்கலாம்.

இயக்குநர் மணிரத்தினம் - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் - எடிட்டர்கள் லெனின் & விஜயன் ஆகிய ஜாம்பவான்களின் கூட்டணி உருவாக்கிய மேஜிக், இந்த சந்திரமௌலி சீன். எத்தனை முறை பார்த்தாலும், கார்த்திக்கும் துள்ளலான நடிப்பும் ரேவதியின் ரியாக்சனும் சலித்ததே இல்லை.

நான் எடுத்துக்கொண்ட இந்த துணுக்கில் (1T to 15T) பிண்ணனி இசை கிடையாது. ரேவதியின் வாய்ஸ் தான் பிண்ணனி இசை. எனவே இசைஞானி பற்றி இதில் குறிப்பிடவில்லை. மிகச்சரியாக, இந்த இடத்தில் பிண்ணனி இசையை நிறுத்தியிருப்பார்.

ப்ளாக்கிங், ஷாட் காம்போசிசன், ஷாட் செலக்சன்/எடிட்டிங் எல்லாமே உள்ளுணர்வு சார்ந்த விஷயங்கள். சமயங்களில் எதனால் இந்த ஷாட்டை இப்படி வைத்தோம் என்று படைப்பாளிகளால் சொல்ல முடியாது. ‘அது தான் சரின்னு தோணுச்சு, வச்சேன்’ என்பதே பெரும்பாலும் பதிலாக இருக்கும்.


ஒரு சீனை, ஷாட்டை புரிந்துகொள்வதும் அப்படியே. நீங்கள் இன்னும் ஆராய்ந்தால், மேலும் பல விஷயங்கள் பிடிபடலாம்!

- செங்கோவி
மேலும் வாசிக்க... "மௌனராகம் ‘சந்திரமௌலி’ சீன் - செங்கோவியின் அலசல்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.