‘படிப்புக்கு அவ்வளவு தான் மரியாதை, இல்லையாடா?” என்ற டயலாக் என் கல்லூரி நண்பர்களிடையே மிகவும் பிரபலம். காரணம் அதைக் கேட்ட சுரேஷும், கேட்கப்பட்ட கேப்டனும். கேப்டன் என்றால், கல்லூரியில் கிரிக்கெட் டீம் கேப்டனாக இருந்து ‘கேப்டன்’ என்று பெயர் பெற்ற நண்பர்.
என்னைப் போன்றே கேப்டனும் ஏழ்மையான சூழ்நிலையில் ஒரு கிராமத்தில் இருந்து தட்டுத்தடுமாறி படித்து வந்தவர். நாங்கள் பயின்றது அரசுக் கல்லூரிகள் லிஸ்ட்டில் வரும் தன்னாட்சி பெற்ற மதுரை தியாகராசா பொறியியல் கல்லூரி. எனவே மதிப்பெண் அடிப்படையில் வரும் பெரும்பாலான மாணவர்கள் முதல் தலைமுறைப் பட்டதாரிகள், தமிழ்வழியில் பள்ளிக்கல்வியை பயின்றவர்கள். இதை எங்கள் கல்லூரி நிர்வாகமும் புரிந்தே இருந்தது.
எனவே முதல் இரு வருடங்களுக்கு பாடம் நடத்தும்போது தமிழிலும் சொல்வார்கள். அடுத்த ஆண்டில் அது கொஞ்சம் குறைந்து, இறுதி ஆண்டில் முழு ஆங்கிலத்திற்கு அனைத்து லெக்சரர்களும் மாறியிருபபர்கள். அது எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.
கேப்டனும் கல்லூரியிலும் பாஸ் பண்ணுவதற்கே ஆரம்ப வருடங்களில் போராடியவர்.சராசரி மதிப்பெண்களுடன் பி.இ. முடித்தார். அதன்பின் ஆங்கிலமும் வசப்பட்டு விட அடுத்து எம்.இ. முடித்தார்.
கல்லூரிக் காலம் முடிந்து, வேலை தேடும் படலம் தொடங்கியது. கேப்டனுக்கும் நல்ல ஒரு கம்பெனியில் செட்டில் ஆனார். அங்கு நல்ல பெயரும் சில வருடங்களில் கிடைத்தது. அதுவரை எந்தவொரு இடத்திலும் வேலையில் சேராமல்/நிலைக்காமல் சுரேஷ் போராடிக் கொண்டிருந்தார். சுரேஷ், படித்த நல்ல வேலையில் இருக்கும் பெற்றோரின் மகன். எனவே ஆரம்பக் காலம் முதல் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர். அவரும் பின்னர் கேப்டன் வழியில் எம்.இ. முடித்தார், அதிக மதிப்பெண்களுடன்.
துரதிர்ஷ்டவசமாக சுரேஷிற்கு வேலை எதுவும் அதன்பிறகும் கிடைக்கவில்லை. எனவே நண்பர்களின் உதவியை நாடினார். நம் கேப்டனும் தன் கம்பெனியில் பேசி, நண்பனுக்கு வேலை வாங்கிகொடுத்தார். அடுத்துத் தான் பிரச்சினை ஆரம்பம் ஆனது. கம்பெனி எதிர்பாப்பது முதலில் குவாலிட்டியை, அடுத்து குவாண்ட்டிடியை. தரமான முறையில் வேலை செய்வது எல்லோருக்கும் வருவதல்ல. பெரும்பாலானோர் ரஃப் அடி அடித்து வேலையை முடிப்பவர்களே. அவர்களை கம்பெனி அதற்கே இருக்கும் தரம் அதிகம் தேவைப்படாத புராஜக்ட்களில் போட்டு, வேலை வாங்கிக் கொள்ளும். தரம் அதிகம் எதிர்பார்க்கும் க்ளையண்ட்/ புராஜக்ட்களில் ரொம்ப தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்களை வைத்துக் கொள்ளும். சிலர் இரண்டுக்குமே ரெடியாக இருப்பர்.
சுரேஷிடம் இருந்த பிரச்சினை குவாலிட்டி, குவாண்டிடி இரண்டுமே இல்லாதது தான். ஒரு வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வதும், அப்படி முடிக்கும் வேலையிலும் ஆயிரத்தெட்டு கம்ப்ளைண்ட்ஸ். தொடர்ந்து அவருக்கு வார்னிங் கொடுக்கப்பட்டுகொண்டே வந்தது.
இன்னொரு பக்கம் நம் கேப்டன் ‘தெளிவாக’ அடித்து விளையாடிக்கொண்டிருந்தார். கம்பெனி நிர்வாகம் சுரேஷ் விஷயத்தில் பொறுமை இழந்து கேப்டனை அழைத்தது. கேப்டனுக்கு நல்ல பெயர் இருந்ததால் சுரேஷுக்கு அறிவுரை சொல்லும்படியும், இல்லையென்றால் வேலையை விட்டு தூக்க வேண்டி வரும் என்றும் எச்சரித்தது. கேப்டனும் சுரேஷிடம் ‘பார்த்து இருந்துக்கோ மச்சி. இப்படிச் சொல்றாங்க’ என்ற போது சுரேஷ் சொன்ன பதில் தான் ” படிப்புக்கு அவ்வளவு தான் மரியாதை, இல்லையாடா?”. “நீ எப்படி படிச்சே, என்ன மார்க் எடுத்தே...நான் எப்படிப் படிச்சேன், என்ன மார்க் எடுத்தேன்னு நினைச்சுப்பாருடா. அப்போ நான் படிச்சதுக்கு, என் மார்க்குக்கு ஒரு மரியாதையும் இல்லை. அப்படித் தானே?” என்று சுரேஷ் தொடர்ந்து கேட்க, கேப்டன் நொந்து போனார்.
பெரும்பாலான மாணவர்கள் நினைப்பது நல்ல மார்க் மட்டுமே தன்னைக் கரையேற்றும் என. ஆனால் கம்பெனிகளுக்குத் தேவை ‘எக்ஸிக்யூடிவ்ஸ்’ தான். ஒரு செயலை நிறைவேற்றும்-எக்ஸிகியூட் செய்யும் ஆட்களே கம்பெனிகள் எதிர்பார்ப்பது. டிகிரி சர்ட்டிஃபிகேட்டும் மார்க் ஷீட்டும் இண்டர்வியூ முடிந்ததும் மதிப்பிழந்து விடுகின்றன. அதன்பிறகு கம்பெனி அது பற்றிக் கவலைப் படுவதில்லை. ஏனென்றால் எந்தவொரு க்ளையண்ட்டும் உங்கள் மார்க் ஷீட்டுக்காக ‘பில்’ பண்ணுவதில்லை.
சில பதவிகள் குறிப்பிட்ட படிப்பைக் கோரும். அதற்காக அந்தப் படிப்பு முடித்த சில பேக்குகள் உள்ளே வந்து விடுவதும் உண்டு. அவர்களாலும் சுரேஷ் போல் அதிகநாட்கள் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. ஒரு வேலையைக் கொடுத்தால் எந்த அளவிற்கு உற்சாகத்துடன், குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கின்றீர்கள் என்பதே கம்பெனிகளின் தேவை. சில நேரங்களில் கோல்மால்களைக் கூட கம்பெனிகள் சந்தோசமாக அனுமதிக்கும் என்பது அசமஞ்ச மாணவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய அதிர்ச்சிச் செய்தி.
அப்படியென்றால் படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லையா? அப்புறம் ஏன் கம்பெனிகள் அதிக மார்க் எடுத்தவனை கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்ந்தெடுக்கின்றன என்பது அடுத்து எழும் கேள்வி. நம் மார்க் ஷீட் ஒரு வகையில் நம் கேரக்டரையும் பிரதிபலிக்கவே செய்யும். படிப்பும் கல்லூரிக் காலத்தில் ஒரு வேலையே. அந்த வேலையை எந்த அளவிற்கு அக்கறையுடன் செய்திருக்கின்றோம் என்பதைக் கண்டுபிடிக்க மார்க்ஷீட்டும் ஒரு வழி. ஆனால் அதுவே முழுக்க சரியான முறையும் அல்ல. வேறு மாற்று வழிகள் இல்லாத சூழலில், மார்க் ஷீட்டையே கம்பெனிகள் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது.
எனது நண்பர் ஹிசாம் அலி ஒரு டஜனுக்கும் மேல் அரியர்ஸ் வைத்திருந்தவர். கடைசி 1 1/2 வருடங்களில் அத்தனை அரியர்ஸையும் வெறியோடு படித்து க்ளியர் செய்தார். அது தான் அவர் டார்கெட். அதைக் குறித்த நேரத்தில் முடித்தார். இன்று வரை அவர் அப்படியே! புராஜக்ட் டார்கெட் டேட்டை நெருங்கும்வரி கெக்கேபிக்கே என்று இருப்பதும் கடைசியில் லபோதிபோ என அடித்துக்கொண்டு வேலையை முடிப்பதும் அவர் வழக்கம். சரியான நேரத்தில் வேலையை முடிப்பவர் என்றுகம்பெனியும் அவரைக் கொண்டாடுகிறது. அதைத் தான் சொல்கிறேன், மார்க் ஷீட்டும் உங்கள் கேரக்டரைக் காட்டும்.
டிகிரி சர்ட்டிஃபிகேட் என்பது வெறும் விசிட்டிங் கார்டு. அக்கறையும் செயல்திறனுமே உங்களை செய்யும் இடத்தில் முன்னேற்றும்.
முக்கி வாங்கிய மதிப்பெண்களும் வாராது காண் கடைவழிக்கே!
நன்றி: லீலையில் மயங்கி வேலையைப் பற்றி எழுதாமல் விட்ட என்னை நறுக்கென்று குட்டிச் சொன்ன நண்பர் ‘மெட்ராஸ் பவன்’ சிவக்குமாருக்கு!
வேண்டுகோள் : மேலதிக/விடுபட்ட விபரங்களை அனுபவம் வாய்ந்தோர் பின்னூட்டத்தில் சொல்லி, பதிவைப் படிப்போர்க்கு உதவுங்கள்.
64 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.