Showing posts with label Mechanical Engineering. Show all posts
Showing posts with label Mechanical Engineering. Show all posts

Tuesday, February 24, 2015

இனிமேல்....படித்தால் மட்டும் போதுமா?

குலத்தொழிலை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தது, நம் சமூகம். நாட்டில் நாகரீகம் மலர, மலர தொழிலும் கல்வியும் ஜனநாயகமாக்கப்பட்டன. அப்போது கல்வி என்பதையே கட்டாயமாகப் புகுத்த வேண்டிய அவலநிலை நம் நாட்டில் இருந்தது. ஏறக்குறைய 25 ஆண்டுகளாக நமது அரசாங்கம் கல்வி பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தது. பள்ளி ஆசிரியர்களும் அக்கறையுடன் கல்வியை வலுக்கட்டாயமாகத் திணித்தார்கள். (ஸ்கூல் போலீஸ் பற்றி இங்கே சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.)

ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. ஒரு கூலித் தொழிலாளிகூட தன் பிள்ளையை ப்ரைவேட் ஸ்கூலில் படிக்க வைக்கிறார். ஸ்கூல் வேன்களில் பிள்ளைகள் பயணிப்பது, கிராமங்களில்கூட காணக்கிடைக்கும் காட்சியாகிவிட்டது. இது ஆரோக்கியமான, வரவேற்கத்தக்க விஷயம். கூடவே இதுவொரு சிக்கலையும் கொண்டு வந்துள்ளது.
கல்வியைப் பரவலாக்க உழைத்த அளவிற்கு, நம் அரசாங்கங்கள் வேலைவாய்ப்பில் அதற்கு இணையாக உயர்த்த உழைத்தார்களா என்றால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வருடமும் எத்தனை பேர் படித்து வெளியே வருவார்கள், அப்போது அவர்களுக்கு எத்தனை வேலை வாய்ப்புகள் காத்திருக்கும்?' என்பது பற்றியெல்லாம் இங்கே யாருக்கும் எப்போதும் பெரிய தொலைநோக்குப் பார்வை இல்லை.


முந்தைய தலைமுறைக்கு கல்வி பெரும் வரப்பிரசாதமாக இருந்தது. படித்தாலே போதும், ஏதாவது ஒரு வேலைக்குப் போய்விடலாம் எனும் வாய்ப்பு இருந்தது. காரணம், படித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் இப்போது எல்லாருமே படித்தவர்கள் என்று ஆகும்போது, டிகிரி சர்ட்டிஃபிகேட் மட்டுமே வேலை கேட்பதற்கான தகுதி என்பது போய்விட்டது.

இதற்கு சமீப காலத்தில் நாம் பார்த்த ஐ.டி. வேலை வாய்ப்பினை உதாரணமாகச் சொல்லலாம். 1990களில் ஐ.டி.நிறுவனங்கள் வந்தபோது, இங்கே போதுமான ஐ.டி.வல்லுநர்கள் இல்லை. எனவே ஏதாவது ஒரு டிகிரி படித்திருந்து, கூடவே ஒரு ஐ.டி.கோர்ஸ் படித்த சர்ட்டிஃபிகேட் இருந்தாலே வேலை கிடைத்தது. இஞ்சினியரிங்கில் ஐ.டி.படித்தவர்களுக்கு மட்டுமல்லாது, மெக்கானிக்கல், சிவில் படித்திருந்தாலும் கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலைகிடைக்கும் காலம் இருந்தது.

ஆனால் எவ்வித தொலைநோக்குமின்றி, கன்னாபின்னாவென்று பொறியியல் கல்லூரிகளை ஆரம்பித்தார்கள். விளைவு, இன்றைக்கு ஐ.டி.படித்த 12 பேரில் ஒருவருக்கே வேலை கிடைப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது.அப்படியென்றால், மெக்கானிக்கல் போன்ற வேறு பிராஞ்சில் படித்த பொறியியல் மாணவர்களுக்கோ, ஆர்ட்ஸ் காலேஜில் படித்த வேறு மாணவர்களுக்கோ இனி அங்கே (பெரும்பாலும்) இடம் இல்லை.

இந்த ஐ.டி.சூழ்நிலை எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.  வேலை வாய்ப்புச் சந்தையில் சப்ளை அதிகமாகி விட்டது, டிமாண்ட் குறைந்துவிட்டது. இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது தான் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் முன் இருக்கும் மிகப்பெரிய சவால். இதைத் தனி மனிதனாக எப்படி எதிர்கொள்ளலாம் என்று யோசித்தால்....

1.மேற்படிப்பு:
1970-80களில் டிப்ளமோ படிப்பு என்பது வேலைவாய்ப்பை அள்ளித்தரும் விஷயமாக இருந்தது. பொறியியல் கல்லூரிகள் வந்ததும், எஞ்னியரிங் டிகிரி அந்த இடத்தைப் பிடித்தது. இப்போது பி. இ. மலிந்துவிட்டநிலையில், இதற்கு அடுத்த இடம் நோக்கி நாம் நகரலாம். நமது எம்.இ-ஐ விட அமெரிக்க எம்.எஸ் இன்னும் மதிப்புடன் இருக்கிறது.

2. புதிய அலை: 1990களில் நமக்கு வரப்பிரசாதமாக வந்தது ஐடி அலை. அதற்கு முன்பு 1970களில் தொழிற்சாலைகளின் வரவு வேலை வாய்ப்பைக் கொடுத்தது. அதுபோன்று அடுத்து என்ன வருகிறது என்று பார்க்கலாம். (என் சிற்றறிவுக்கு ஒன்றும் பிடிபடவில்லை.)

3. வெளிநாடு வேலை வாய்ப்பு : நமக்கு முன்பே 100% கல்வியறிவு பெற்ற சேட்டன்கள் காட்டிய வழி. ஆனால் உலகம் முழுக்கவே சூழ்நிலை இப்போது மாறிவருகிறது. உதாரணமாக, வளைகுடா நாடுகளில் மண்ணின் மைந்தருக்கே வேலை எனும் கொள்கை மிகத்தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிரது.இன்றைய சூழ்நிலையில் ஒரு அரபி ஒரு டிகிரி முடித்தாலே அரசு வேலையில் சேர்துவிட முடியும். அரபி ஆண்களும் பெண்களும் அதிக அளவில் இங்கே வேலையில் சேர்ந்து வருகிறார்கள். அந்நியருக்கு அரசு வேலை என்பது ஏறக்குறைய நிறுத்தப்பட்டு விட்டது. இன்னும் 20 வருடங்களில் தனியார்க் கம்பெனிகளிலும் அதே நிலைமை வர வாய்ப்பு உள்ளது. எனவே ஐ.டி.க்காரன் மட்டும் தான் நாசமாப் போறான் எனும் கனவில் இருக்கும் பிறதுறை ஆசாமிகள் கொஞ்சம் விழித்துக்கொள்ளலாம்.

4. புதிய கல்விமுறை : நமது இன்றைய எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம் என்ன என்று பார்த்தால்.....நம் கல்விமுறை தான். 'படி, வேலை கிடைக்கும்'..'நல்லாப் படிச்சத்தான் நல்ல வேலைக்குப் போக முடியும்' என்றுசொல்லியே நம் பிள்ளைகளை வளர்க்கிறோம். அதாவது படிப்பு என்பது பிள்ளைகளை ஏதாவது ஒரு கம்பெனியில் அடிமைகளாக ஆக்குவது என்றே நம்புகிறோம். சுயதொழில் செய்து சொந்தக் காலில் நிற்பது பற்றி நமக்கு எவ்வித சிந்தனையும் இல்லை. காரணம், பாதுகாப்பு பற்றிய பயம்.

நம்மில் பெரும்பாலோனோர் முதல் தலைமுறை பட்டதாரிகள். வறுமையை கல்வியால் வென்றவர்கள். எனவே மீண்டும் ரிஸ்க் எடுத்து பிஸினஸ் செய்து, ஆரம்பித்த இடத்திற்கே பிள்ளைகளை அனுப்பி விடுவோமோ எனும் பயம் இருக்கிறது. ஆனால் வி.ஐ.பிகளாக பிள்ளைகளைஆக்குவதைவிட, படிப்புடன் சுயதொழில்கள் பற்றிய அறிவையும் பிள்ளைகளுக்கு பள்ளியிலும் வீட்டிலும் புகுத்துவது அவசியம் ஆகிறது. குஜராத் போன்று சுயதொழில் சார்ந்த சமூகமாக நாம் மாறவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

விவசாயத்தில் ஆரம்பித்து ரியல் எஸ்டேட்வரை எல்லாத் தொழில்கள் பற்றிய அறிவுடன் நம் பிள்ளைகள் வளரட்டும். படித்தால் வேலைக்குப் போகலாம் எனும் அடிமை மனோபாவத்தை மட்டும் உண்டாக்காதீர்கள். ஏனெனில் இனிவரும் காலத்தில் டிகிரி சர்ட்டிபிகேட் என்பது வேலைக்கான உத்தரவாதச் சீட்டு அல்ல!
மேலும் வாசிக்க... "இனிமேல்....படித்தால் மட்டும் போதுமா?"

Saturday, November 5, 2011

அடிப்படைக் குழாயியல் (Basics of Piping) - அறிமுகமும் முன்னுரையும்

தொடர் அறிமுகம் :

பல மொழிகளில் உள்ள சாத்திரங்கள் தமிழுக்கு வரவேண்டும் என்றான் பாரதி.

அந்த வகையில் என் தாய் கொடுத்த தமிழாலேயே தமிழுக்கு நான் சூட்டும் அணிகலனே இந்தத் தொடர்.

இதை பாடப்புத்தகமாகவே சொல்லப்போவதால், கதை சொல்லும் பாணியிலோ, உரையாடல் பாணியிலோ இந்தத் தொடர் இருக்கப்போவதில்லை. பொறியியல் சம்பந்தப்படாத மனிதராக நீங்கள் இருந்தால், இதைப் படிப்பது உங்களுக்கு நேர விரயமே. அதனைத் தவிர்க்கவும். எனக்கு வழக்கமாக மொய்க்கு மொய் செய்யும் அன்பர்களும் இதற்கு கமெண்ட்டோ, ஓட்டோ போட வேண்டிய அவசியம் இல்லை. தலைப்பைப் பார்த்ததும் உள்ளே வராமல் அப்படியே ஓடி விடவும்.

உங்களுக்குத் தெரிந்த மெக்கானிகல் எஞ்சினியரிங் படிக்கும் மாணவர் இருந்தால், அவருக்கு இந்தத் தொடரை அறிமுகப்படுத்துங்கள். அதுவே போதும். மற்றபடி இதைப் படித்து நேரத்தை விரயமாக்க வேண்டாம். சீரியஸாகவே இதைச் சொல்கின்றேன்.
மெக்கானிகல் எஞ்சினியரிங் டிகிரி என்பது நான்கு வருடங்கள்/எட்டு செமஸ்டர்களில் பல பாடங்களைப் படித்துக் கிடைப்பது. அப்படிப் படித்த பின், படித்த எல்லாப் பாடங்களும் எல்லோருக்கும் உபயோகமாகிறதா என்றால், இல்லையென்று தான் சொல்லவேண்டும். இருக்கும் துறைக்கு ஏற்ப, தேவைப்படும் பாடங்கள் மாறுபடுகின்றன. இதைப் பற்றி விரிவாக நான் முன்பு எழுதிய பொறியியல் தொடரில் குறிப்பிட்டுள்ளேன்.

மெக்கானிகல் எஞ்சினியரிங் துறை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாகவும் ஐ.டி.க்கு நிகரான சம்பளத்தை கொடுக்கும் துறையாகவும் உள்ளது குழாயியல் (பைப்பிங்) ஆகும். பெட்ரோலிய சுத்திகரிப்புத் துறை, கப்பல் கட்டுமானம், தொழிற்சாலை/கட்டடக் கட்டுமானம் என எல்லாத் துறைகளிலும் குழாயியலுக்கான தேவை மிக அதிகம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குழாயியல் நமது கல்லூரிப் பாடத்திட்டத்திலேயே கிடையாது. திரவங்களின் பரவும் தன்மை குறித்து விளக்கும் பாடத்தில் மட்டும் சில பக்கங்கள் ஹை-டெக் நடையில் சொல்லப்பட்டிருக்கும்.

குழாயியல் பற்றிய அடிப்படை எதுவும் நான்கு வருடம் கல்லூரியில் படித்தாலும் சொல்லித்தரப்படுவதில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் சில கம்யூட்டர் கோச்சிங் செண்டர்கள் இவற்றை ஒரு மாத கோர்ஸாக 15,000 முதல் 30,000 வரை வாங்கிக் கொண்டு நடத்துகின்றன.

அவர்கள் என்ன பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு நடத்துகிறார்களோ, அதையே இங்கே எளிய தமிழில் சொல்ல விழைகின்றேன்.

கடும் வறுமையிலும் போராடி என்னைப் படிக்க வைத்த என் தாய்-தந்தைக்கு இந்தத் தொடரை சமர்ப்பிக்கின்றேன்.

எப்போதும் என்னோடு துணையிருக்கும் என்னப்பன் முருகன், இப்போதும் துணை வருவான் என்ற நம்பிக்கையுடன் இந்த பெரிய முயற்சியில் இறங்குகின்றேன்.

முருகனருள் முன்னிற்கட்டும்.

குழாயியல் - முன்னுரை:

அன்பு நண்பர்களே,

ஏற்கனவே கல்லூரியில் பல பாடங்களைப் படித்து களைத்துவிட்ட நிலையில், புதிதாக இன்னுமொரு பாடமா என்று களைப்புடன் நீங்கள் இருப்பது தெரிகின்றது.

நீங்கள் புத்துணர்ச்சியோடு இருந்தால் தானே, பாடத்தை நானும் சுவாரஸ்யமாய் நடத்த இயலும். எனவே முதலில் போய் முகம் கழுவிவிட்டு வாருங்கள்.

அங்கே இருக்கும் வாஷ் பேசினுக்குச் செல்லுங்கள். குழாயைத் திருப்பி தண்ணீரைத் திறந்து விட்டீர்களா? இப்போது கொஞ்சம் பொறுங்கள்.

இந்தத் தண்ணீர் எப்படி இந்தக் குழாயில் வந்து சேர்கின்றது என்று கவனித்துள்ளீர்களா? 

இது தான் அனைவருக்கும் தெரியுமே என்கின்றீர்களா?

பூமியில் இருக்கும் நீரை போர் போட்டு, மேலே இருக்கும் தண்ணீர்த் தொட்டிக்கு ஏற்றி, அங்கிருந்து வாஷ் பேசினுக்கு குழாய் வழியாக கனெக்சன் கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவு தானே என்கின்றீர்களா?

ஆம், அவ்வளவு தான்...அது தான் குழாயியல். 

இவ்வாறு நீங்கள் விரும்பும் இடத்திற்கு நீரைக் கொண்டுவர என்னவெல்லாம் உபயோகப்படுத்தி உள்ளார்கள் என்று பாருங்கள். பூமியின் அடியில் குழாயின் அடிமட்டத்தில் ஒரு வால்வு, குழாயின் மறுப்பக்கம் நீரேற்றும் பம்பு, மீண்டும் வால்வுகள், குழாய், மேலே ஒரு நீர்த்தொட்டி. அதன் மேல் பகுதியில் தண்ணீர் விழும்படியான குழாயின் அமைப்பு, குழாய் செல்லும் திசையை திருப்ப எல்போ, டீ, ஃப்ளாஞ்ச், ரெடுயூசர் என சில இணைப்பான்கள், மீண்டும் நீர்த்தொட்டியின் அடியின் ஒரு வால்வு, தொடர்ந்து குழாய், எல்போ, டீ, வால்வு என வாஷ்பேசின் வரை வருகின்றதா?

மேலே சொல்லப்பட்டவை ஒரு குறிப்பிட்ட விதத்தில் , குறிப்பிட்ட காரணத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது புரிகின்றதா? அந்த மொத்த அமைப்புக்கும் பெயரே குழாயியல் அமைப்பு.

அதாவது, ஒரு நெகிழ்ச்சிப் பொருளை (அது திரவமாகவோ, வாயுவாகவோ இருக்கலாம்) ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல உதவும் ஒட்டுமொத்த அமைப்பு, பைப்பிங் சிஸ்டம் / குழாயியல் அமைப்பு எனப்படும்.

பொதுவாக கட்டிடங்களில் அமைக்கப்படும் குழாயியல் அமைப்பை ப்ளம்பிங் என்றே சொல்வார்கள். கட்டிடங்கள் தவிர்த்த மற்ற இடங்களில் பயன்படும் குழாயியல் அமைப்பே பைப்பிங் எனப்படும்.

எப்படி வீடு முழுக்க குறிப்பிட்ட நோக்கத்துடன் குழாயியல் பரவி உள்ளதோ, அதே போன்றே பெரிய தொழிற்சாலைகளிலும் குழாயியல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தண்ணீர் முதல் நீராவி, வாயு, பெட்ரோலியப் பொருட்கள் வரை பலவற்றையும் ஒரு தொழிற்சாலையில் ஒரு இடத்தில் (டேங்க்கில்) இருந்து, தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு செல்ல குழாயியல் முக்கியப் பங்காற்றுகிறது.

நம் உடலில் எப்படி நரம்புகள் உடலெங்கிலும் பரவி மூளையுடன் இணைந்து உணர்ச்சிகளை பரப்புகின்றதோ அப்படியே குழாயியல் வீடு/தொழிற்சாலை/கப்பல்/விமானம் உள்ளிட்ட பல இடங்களில் பொருட்களை கடத்த உதவுகின்றன. கீழே உள்ளது ஒரு தொழிற்சாலையில் உள்ள குழாயியல் அமைப்பு: 

நம்மைச் சுற்றிலும், நாம் அறியாமலேயே குழாயியல் எனும் பொறியியல் நமக்கு உதவிக்கொண்டே உள்ளது.

இந்தத் தொடர், குழாயியல் துறையில் பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படைத் திறமையை உங்களுக்குக் கொடுக்கும். 

எளிதாக, ஸ்டெப்-பை-ஸ்டெப் விளக்கங்களுடன் பாடங்கள் வெளிவரும். ஏதேனும் சந்தேகம் இருப்பின், தயங்காமல் கேளுங்கள். நன்றி.

(தொடரும்)

டிஸ்கி: இன்று ஞாயிற்றுக்கிழமை
மேலும் வாசிக்க... "அடிப்படைக் குழாயியல் (Basics of Piping) - அறிமுகமும் முன்னுரையும்"

Sunday, April 10, 2011

மெக்கானிகல் எஞ்சினியர்களுக்கு_தொடரின் நிறைவுப் பகுதி

இதுவரை மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் என்னென்ன வகையான வேலைகள் உள்ளன, அதற்கு எவ்வாறு ரெசியூம் ரெடி பண்ண வேண்டும் எனப் பார்த்தோம். இன்று தொடரின் நிறைவுப் பதிவாக இண்டெர்வியூ பற்றிய சில டிப்ஸ்களும், முடிவுரையும். 

பலரும் அட்டெண்ட் பண்ணும் நேர்முகத் தேர்வில், நீங்கள் மட்டும் தனித்துத் தெரியவேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? பலரது சி.வி.க்களில் உங்கள் சி.வி.கவனிக்கப்பட என்ன செய்தீர்களோ அதையே இங்கும் செய்ய வேண்டும். 

சென்ற பதிவிலேயே சொன்னபடி, இண்டெர்வியூ செல்லும் முன் உங்கள் சி.வி.யில் உள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் தெளிவான ஐடியா உங்களுக்கு இருக்க வேண்டும். சி.வி.யில் உள்ள எந்தவொரு வார்த்தையைப் பிடித்தும் கேள்விகள் எழலாம்.உங்கள் சி.வி.யில் NDT என்ற வார்த்தை இருந்தால், அதன் விரிவாக்கம், உபயோகம், செய்முறை என எல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். 

முதலில் அந்தக் கம்பெனி பற்றியும், வேலை செய்யப்போகும் டிபார்ட்மெண்ட் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

’அதற்கேற்றால் போல்’ தயார் செய்த சி.வி.யை நன்றாக மனதில் உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

இண்டர்வியூவில் பொதுவாக முதலில் கேட்கப்படும் கேள்வி ‘Tell about yourself' தான். எனவே உங்களைப் பற்றிய சிறு அறிமுக உரையை தயார் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து உங்கள் கல்வி பற்றிக் கேட்கப்படும். தொடர்ந்து உங்களுடைய ஹாபீஸ் என்னென்ன? ரீடிங் என்றால் என்ன பத்திரிக்கை படிப்பீர்கள் என்பது போன்ற எளிய கேள்விகள் கேட்கப்படும். இவையெல்லாம் உண்மையில் உங்களை ரிலாக்ஸ் பண்ணவும், உங்களைப் பற்றிய ஒரு கருத்தை உருவாக்கிக்கொள்ளவுமே. இதற்கு உண்மையைச் சொன்னால் போதும். என்ன படிப்பீர்கள் என்ற கேள்விக்கு வேலை சம்பந்தப்பட்ட பத்திரிக்கை எதையாவது நீங்கள் படித்திருந்தால் அதைச் சொல்லலாம்.

அதன் பிறகு டெக்னிகல் கேள்விகள் ஆரம்பிக்கும். உங்கள் ஏரியா ஆஃப் இண்டெரெஸ்ட் / வேலை பார்த்த துறை பற்றிக் கேள்விகள் கேட்கப்படலாம். நீங்கள் ஏற்கனவே நன்றாகத் தயார் செய்துகொண்டு வந்திருந்தால் எளிதாகப் பதில் சொல்லலாம். கவனியுங்கள் பதில் ‘சொல்ல’ வேண்டும். ஒப்பிக்காதீர்கள். 

மெக்கானிகல் லைனில் வேறெதும் அப்டிடியூட் டெஸ்ட், குரூப் டிஸ்கசன் போன்றவை பெரும்பாலும் கிடையாது. ஒரு சில கம்பெனிகளே அவற்றை நடத்தும். அதைப் பற்றி முன்பே விசாரித்துக் கொள்ளுங்கள்.

’எனக்கொரு வேலை கொடுங்கள். எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை. நான் சின்ஸியராக வேலை செய்வேன்’ என்று தான் பலரும் சொல்வார்கள். நீங்கள் முதலிலேயே இந்த வேலை பற்றி தெளிவாக அறிந்திருப்பதால், அந்த வேலைக்கு எது தேவையோ, அதைக் குறிப்பிட்டுப் பேசுங்கள். குறிப்பிட்டுப் பேசுங்கள். உதாரணமாக ‘டிசைன் எஞ்சினியராக வேலை செய்யவே விருப்பம். டிராயிங்கில் எனக்கு எப்போதும் ஆர்வம் அதிகம்..டிசைன் சாஃப்ட்வேர் இது-இது தெரியும்’ என்று சொன்னால்  நிச்சயம் கவனிக்கப்படுவீர்கள்.

இண்டர்வியூவிற்கு நேரத்திற்குச் செல்வது, நீட்டாகச் செல்வது போன்ற அடிப்படை விஷயங்களை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

---------------------------------

நான் ஒரே பதிவாக இதை எழுதலாம் என்று தான் ஆரம்பித்தேன். பிறகு தான் புரிந்தது, ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டுக்கும் ஒரு பதிவு தேவைப்படும் என்று. இந்தத் தொடரின் முதல் நோக்கம், மெக்கானிகல் எஞ்சினியர் என்பது பல வேலைகளைக் குறிக்கும் ஒரு பொதுச்சொல், ஒன்றிற்கொன்று சம்பந்தமில்லா துறைகளைக் கொண்ட ஏரியா இது என்பதை மெக்கானிகல் படிக்கும் மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே.

பெரும்பாலான என் போன்ற முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு கம்பெனிச் சூழ்நிலை பற்றி எதுவும் படிக்கும்போது தெரிவதில்லை. எனவே தான் ஒவ்வொரு டிபார்ட்மெண்டின் தினசரி நடவடிக்கைகள் இந்தத் தொடரில் விளக்கப்பட்டன. மேலும், எங்கு அதிக சம்பளம் கிடைக்கும், எதைத் தவிர்ப்பது என்று தெரியாமல் தவறான துறைகளில் மாட்டிக்கொள்ளும் அவலமும் நடக்கிறது. அதைப்பற்றியும் இப்பொழுது ஒரு தெளிவு, உங்களுக்குக் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். 

சொலல்வலன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது - என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கினை மனதில் கொண்டு, உங்கள் வாழ்வில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள். 

இந்தத் தொடருக்கு ஆதரவளித்து பின்னூட்டமும் ஓட்டும் அளித்த நண்பர்களுக்கு நன்றி.

மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், இந்தப் பதிவை எப்போது படித்தாலும் பின்னூட்டதிலோ மின்னஞ்சலிலோ கேளுங்கள்.

மேலும் வாசிக்க... "மெக்கானிகல் எஞ்சினியர்களுக்கு_தொடரின் நிறைவுப் பகுதி"

Sunday, April 3, 2011

சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?_தொடர்ச்சி

டிஸ்கி: சில கோல்மால் வேலைகள் இங்கு சொல்லப்படுவதால், யோக்கியர்கள் இந்தப் பதிவைத் தவிர்க்கவும்.

டிஸ்கி: என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு) தொடரின் 9வது பகுதி இது. இருப்பினும் எல்லோரும் படிக்கலாம். தப்பில்லை!

இதுவரை இந்தத் தொடரில் நாம், மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் பல்வேறு வகையான டிபார்ட்மெண்ட்ஸ் உள்ளன என்றும், ஒவ்வொன்றின் வேலையும் வெவ்வேறானவை என்றும் பார்த்திருக்கிறோம். ஒரு புரடக்சன் என்சினியருக்குத் தேவைப்படும் விஷயங்கள், ஒரு டிசைன் எஞ்சினியருக்குத் தேவைப்படாது. ஒரு மெயிண்டனன்ஸ் என்சினியருக்குத் தெரிந்த விஷயம், ஒரு குவாலிடி என்சினியருக்குத் தெரியாது. ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட, தனி உலகங்கள்!. நீங்கள் எங்கு வேலை செய்தாலும், சமூகம் உங்களை மெக்கானிகல் என்சினியர் என்றே அழைக்கும். இந்த வித்தியாசத்தை நன்றாக மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.
இப்போது சென்ற பதிவில் பார்த்த சி.வி. தயாரித்தலைத் தொடர்வோம்.  உங்களுக்கு ‘நான் இப்படித்தான், இந்த டிபார்ட்மெண்டில் இந்த வேலைக்குத் தான் செல்வேன்’ என்ற தெளிவும் முடிவும் இருந்தால் சி.வி.தயாரிக்க சென்ற பதிவே போதும். அப்படியல்ல, மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் எந்த டிபார்ட்மெண்ட்டிலும் வேலை பார்க்கத் தயார் என்றால், சென்ற பதிவின்படி தயாரித்த சி.வி. வேலைக்காகாது.

நீங்கள் ஒரு ஃப்ரெஷ் எஞ்சினியர். புதன்கிழமை வரும் ‘தி ஹிந்து -ஆப்பர்சுனிடி’யையோ அல்லது ஞாயிறு வரும் கிலாசிஃபைட்ஸ்-ஐயோ பார்க்கிறீர்கள். அதில் இரு விளம்பரங்கள் வந்துள்ளதாகக் கொள்வோம். ஒன்றின்படி, ஆயில்&கேஸ் செக்டரில் டிசைன் டிபார்ட்மெண்ட்டிற்கு டிசைன் எங்சினியர்/ட்ராஃப்ட்ஸ்மேன் தேவை. இன்னொன்றின்படி, ஒரு ஃபவுண்ட்ரிக்கு புரடக்சன் என்சினியர் தேவை. 

இப்போது மிகவும் நல்ல பிள்ளையாக, சென்ற பதிவின்படி தயாரித்த ’உள்ளது உள்ளபடி’ உங்கள் ஏரியா ஆஃப் இண்டெரெஸ்ட்/எக்ஸ்பீரியன்ஸ் போட்டுத் தயாரித்த சி.வி.-ஐ இரண்டுக்கும் அனுப்பினீர்கள் என்றால் உங்கள் சி.வி. எல்லா இடத்திலும் ரிஜெக்ட் செய்யப்படவே வாய்ப்பு அதிகம். 

ஒரு சி.வி. செலக்ட் செய்யப்பட வேண்டும் என்றால், அது அந்த வேலைக்கும், டிபார்ட்மெண்ட்டிற்கும் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். நீங்கள் உங்களை அந்தக் கம்பெனியின் நிலையில் வைத்து யோசித்துப் பாருங்கள். உங்கள் முன் நூற்றுக்கணக்கான சி.வி.க்கள் வருகின்றன. அதில் எதை எடுப்பீர்கள்? கொஞ்சமாவது தேவைப்படும் ஸ்கில்ஸ்/நாலெட்ஜ், அந்த சி.வி.யில் இருந்தால்தானே எடுப்பீர்கள். பெரும்பாலான பேர் செய்யும் தவறு இதை யோசிக்காமல், ஒரே சி.வி.யை எல்லாக் கம்பெனிக்கும் அனுப்புவது.

இப்போது முதல் விளம்பரத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு ஆயில்&கேஸ் கம்பெனி, டிசைன் டிபார்ட்மெண்டிற்கு AutoCAD/PDMS தெரிந்த ஆள் தேவை என்று கேட்டுள்ளது. இப்போது இங்கு சி.வி. அனுப்ப, உங்களுக்கு இரண்டு விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஒன்று அந்தக் கம்பெனியின் செக்டர் பற்றிக் கொஞ்சமாவது பேசிக் நாலேட்ஜ் இருக்க வேண்டும். அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அந்தக் கம்பெனியின் வெப்சைட்டிற்குப் போனீர்கள் என்றாலே அங்கு கம்பெனி பற்றியும், அதன் செக்டர் பற்றியும் விவரங்கள் இருக்கும். மேலும் விவரங்கள் அறிய Google உதவும். (ஆமாங்க, கூகுள்-ல நல்ல விஷயங்களையும் தேடலாம்!)

அடுத்து, அந்தக் கம்பெனி கேட்டுள்ள சாஃப்ட்வேர்கள் பற்றிய அறிவு. உங்களுக்கு ஆட்டோகேட் தெரிந்திருக்கலாம்.PDMS தெரியாது என்றால், இண்டர்வியூவுக்கு முன் கொஞ்சமாவது கற்றுக் கொள்ள முடியுமா என்று பாருங்கள். முடியாது என்று தோன்றினால் விட்டுவிடுங்கள். (சாஃப்ட்வேர் தெரியும் என பொய் சொல்ல முடியாது, ஏனென்றால் பெரும்பாலும் பிராக்டிகல் டெஸ்ட் இருக்கும். )இந்த இரு விஷயங்களிலும் நீங்கள் தெளிவான பின், நல்ல பிள்ளையாகத் தயாரித்த சி.வி.யை எடுங்கள். இப்போது Objective முதல் ---- வரை இந்தக் கம்பெனிக்கு ஏற்றாற்போல் மாற்றுங்கள். ஏரியா ஆஃப் இண்டெரெஸ்ட்-ஐ முழுக்க முழுக்க டிசைன் சம்பந்தப் பட்டதாக மாற்றுங்கள். நீங்கள் மனிதனாகப் பிறந்ததே ஒரு டிசைன் எஞ்சினியராக வேலை செய்யத்தான் என்பது போல் சி.வி.-ஐ மாற்றுங்கள்.(இண்டர்வியூவிலும் அப்படியே புளுக வேண்டும்!). 

இப்போது பார்த்தால், அவர்கள் கேட்டதும் நீங்கள் அனுப்புவதும் நன்றாகப் பொருந்தும். அப்புறம் என்ன, நிச்சயம் உங்கல் சி.சி. செலக்ட் ஆகும். சி.வி.-யை அனுப்பிய பின், உங்களுக்குத் தெரியாத விஷயங்கள் ஏதாவது போட்டிருந்தால் கண்டிப்பாக அதைப் படித்து விடுங்கள். சி.வி.யை அனுப்பும் முன், இதே லைனில் உங்களுக்குத் தெரிந்தவர் யாராவது இருந்தால், அவரிடம் உங்கள் சி.வியைக் காட்டி ஆலோசனை கேளுங்கள். (வேலை கேட்டால்தான் தலை தெறிக்க ஓடுவோம், ஆலோசனை என்றால் அள்ளி வழங்குவோம்!)

இப்போது அடுத்த விளம்பரத்தைப் பாருங்கள். ஒரு ஃபவுண்ட்ரிக்கு புரடக்சன் என்சினியர் தேவை. நீங்களே இப்போது சொல்லுங்கள், நாம் மேலே தயாரித்த டிசைன் எஞ்சினியர் சி.வி.யை ஃபவுண்ட்ரிக்கு அனுப்பினால் என்ன ஆகும்? நேரே குப்பைத் தொட்டிக்குத் தானே போகும். (பின்னால் எப்போதாவது, அவர்களுக்கு டிராஃப்ட்ஸ்மேன் தேவைப்பட்டு, அப்போது அவர்களுக்குத் தெரிந்த பையன் யாரும் இல்லாமல் இருந்து, நீங்களும் அப்போது ஃப்ரீயாக இருந்தால் அவர்கள் உங்களைக் கூப்பிடலாம். அவ்வாறு காத்திருப்பது உங்கள் பொருளாதார நிலைமை/மனதிடத்தைப் பொறுத்தது!)

சரி, இப்போது என்ன செய்ய வேண்டும்? அதே...அந்தக் கம்பெனி பற்றியும் அதன் செக்டர் பற்றியும் நெட்டில் இருந்தோ, எங்காவது விசாரித்தோ தெரிந்து கொள்ளுங்கள். புரடக்சன் இஞ்சினியர் வேலைக்குக் கேட்டுள்ளதால், ஒருமுறை புரடக்சன் டெக்னாலஜியில் படித்த ஃபவுண்ட்ரி பற்றிய பாடத்தை வாசித்துக் கொள்ளுங்கள். இப்போது பழைய சி.வியை எடுங்கள். அந்நியன் மாதிரி டிசைன் எஞ்சினியர் ஸ்டேஜிலிருந்து புரடக்சன் எஞ்சினியராக மாறுங்கள். இப்போது நீங்கள் பிறந்ததே ஒரு ஃபவுண்ட்ரியில் புரடக்சன் வேலை பார்க்கத் தான்..ஓகே.வா?..ஸ்டார்ட்..Objective-Area of Interest என சி.வி.யில் உள்ள எல்லாவற்றையும் புரடக்சனுக்கு ஏற்றால்போல் மாற்றுங்கள். இப்போது அனுப்பினால், நிச்சயம் உங்கள் சி.வி. கவனிக்கப்படும்.

சில கம்பெனியில் கேட்கலாம், எப்படி ஒரு ஃப்ரெஷராக இருந்து கொண்டு, இவ்வளவு மேட்ச்சாக சி.வி.அனுப்புகிறீர்கள் என. மாட்டிக்கொண்டொமே எனப் பயந்துவிடாதீர்கள். அது பொதுவாகக் கேட்கப் படும் கேள்வி தான். எனக்கு சிறுவயதிலிருந்தே டிசைனில் ஆர்வம், ஏதாவது வரைந்து கொண்டே இருப்பேன்..அது..இது என அள்ளிவிட்டால் போதும்!

இந்த மாதிரி சி.வி. தயாரிப்பதில் இரு சிக்கல்கல் உண்டு. ஒரே கம்பெனிக்கு ஒரே நேரத்தில் இரண்டையும் அனுப்பினால் டர் ஆகிவிடும்.அதைத் தவிர்க்கவும். சி.வி.யில் போட்டதை நீங்களே மறந்துவிட்டாலும் டர்ர்ரு தான். எனவே ஒவ்வொரு இண்டர்வியூ போகும் முன், உங்கள் சி.வி. மனப்பாடமாக உங்களுக்குத் தெரிய வேண்டும். உங்களால் கற்றுக்கொள்ள முடியாத விஷயத்தை ஒரு நாளும் சி.வி.யில் போடாதீர்கள். சி.வி.யில் உள்ள எந்தவொரு வார்த்தையைப் பிடித்தும், கேள்வி கேட்கப்படலாம். எனவே சி.வி.யில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் தெளிவாக இருங்கள்.

ஃப்ரெஷர் மட்டுமல்லாது, ஒரு சில வருடங்கள் எக்ஸ்பீரியன்ஸ் உள்ள, பிடிக்காத/தவறான லைனில் மாட்டிக்கொண்டோரும் செய்ய வேண்டியது இதுவே. கூடுதலாக எக்ஸ்பீரியன்ஸில் Fake போட வேண்டியிருக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு கம்பெனியில் மெயிண்டனன்ஸில் உள்ளீர்கள். உங்களுக்கோ டிசைன் போக ஆசை என்றால், முதலில் ஏதாவது ஒரு சாஃப்ட்வேரையாவது காசு கொடுத்தாவது வெளியில் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கம்பெனியில் டிசைன் டிபார்ட்மெண்ட் இருந்தால், அவர்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களது டெய்லி ஆக்டிவிடீஸ் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். 

முடிந்தால் அவர்கள் தயாரித்த டிராயிங்கைச் சுட்டு, உங்கள் வீட்டில் வைத்து நீங்களே வரைந்து பாருங்கள். பிறகு சி.வி.யில் உங்கள் கம்பெனியில் நீங்கள் டிசைன் எஞ்சினியராக வேலை பார்ப்பதாகப் போடுங்கள். கொஞ்சம் நாளானாலும் பரவாயில்லை. உங்களுக்கே கான்ஃபிடன்ஸ் வரும்வரை வரைந்து/மாடல் செய்து பழகுங்கள். முடிந்தால் உங்கள் டிசைன் ஃப்ரெண்ட்டின் சி.வி.யை வாங்கி, உங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ளுங்கள். பிறகு சி.வியை அதற்கேற்றாற்போல் தயாரித்து அனுப்பினால் சக்ஸஸ்!

டிஸ்கி: பதிவில் ஏதேனும் விடுபட்டிருந்தால், நண்பர்கள் பின்னூட்டத்தில் சொல்லி உதவுங்கள்.

மேலும் வாசிக்க... "சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?_தொடர்ச்சி"

Saturday, March 26, 2011

சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?

டிஸ்கி: என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு) தொடரின் 8வது பகுதி இது. இருப்பினும் எல்லோரும் படிக்கலாம். தப்பில்லை!


இந்த சமூகத்தில் கல்யாணத்துக்கு ஜாதகம் எப்படி முக்கியமோ அப்படித்தான் உங்களுக்கு Resume-ம். இதை curriculum vitae (C.V)ன்னும் சொல்வாங்க.

சி.வி.-ங்கறது சுருக்கமா உங்களைப் பத்தின தகவல்களைச் சொல்ற ஒரு டாகுமெண்ட். நல்லாப் படிக்கிற பலரும் கோட்டை விடுகிற விஷயம், இந்த சி.வி. தயாரிப்பு. ஒரு கம்பெனிக்கு ஆள் தேவைன்னு பத்திரிக்கையில் விளம்பரம் கொடுப்பாங்க. நீங்களும் சி.வி. அனுப்புவீங்க. உங்களை மாதிரியே நூற்றுக்கணக்கான/ஆயிரக்கணக்கான பேர் தங்களோட சி.வி.-யை அனுப்புவாங்க. அதில இருந்து உங்க சி.வி.யை கம்பெனி செலக்ட் பண்ணனும்னா, ஏதோ ஒரு விதத்தில் அவங்களை உங்க சி.வி. அட்ராக்ட் பண்ணனும். (அதுக்காக பதிவர் மாதிரி நமீதா படத்தை அட்டாச் பண்ணிடாதீங்க!). அது எப்படிப் பண்றதுன்னு பார்ப்போம்.

ஒரு சி.வி. இப்படித் தான் இருக்கணும்னு வரையறை எதுவும் கிடையாது. தேவையான தகவல்கள் எந்த வரிசையிலும் சொல்லப் படலாம். முதல்ல ஒரு சி.வி.-யில் இருக்க வேண்டிய முக்கியப் பகுதிகளைப் பார்ப்போம்.

Objective :
ஒரு சிவியோட ஆரம்பமே இது தான். சில பேர் ஒரு பாராகிரஃபே எழுதுவாங்க இங்கே. அது தேவையில்லை. இதுல நீங்க ஒரு வரி/ ரெண்டு வரில விஷயத்தைத் தெளிவாச் சொல்லிடனும். உதாரணமா ‘To obtain a challenging career as a Piping Engineer  in the field of Oil & Gas’-ன்னு சொன்னாப் போதும். கம்பெனி ’Piping Engineer  - Oil & Gas’ -ங்கிற ரெண்டு விஷயத்தைத் தான் பார்க்கும். 

நீங்க யார், என்ன போஸ்ட்டுக்கு அப்ளை பண்றீங்கன்னு தெரிஞ்சுக்க இது போதும். ஒரு பாரா எழுதுனா, அதுல தேடி, இதைக் கண்டுபிடிக்கவே கடுப்பாகிடும்.

Career Summary:
நீங்க ஃப்ரெஷ் கேண்டிடேட்-னா இதை 'Area of Interest'னு போடுங்க. உங்களுக்கு எந்த ஏரியா (Strength of Materials/Thermodynamics/Production Techmology etc) விருப்பமானதோ அதை இங்கே நீங்க சொல்லணும். உங்களுக்கு ஏதாவது எக்ஸ்பீரியன்ஸ் இருந்தா, Career Summary-ல சுருக்கமா 4-5 பாயிண்ட்ல சொல்லுங்க. முதல் பாயிண்ட்ல நீங்க எத்தனை வருசம் அனுபவம் உள்ளவர்னு சொல்லிடுங்க. என்ன பண்ணுனீங்கன்னு தான் இங்க சொல்லணும். கம்பெனி டீடெய்ல்ஸை பின்னாடி சொல்லலாம். 

இது எதுக்குன்னா, உங்களுக்கு என்ன தெரியும், இதுவரை எவ்வளவு நாளா, என்ன பண்ணியிருக்கீங்கன்னு கம்பெனி புரிஞ்சிக்க உதவும். இதுல மேட்ச் ஆகலைன்னா, பின்னாடி வர்ற எதையும் அவங்க படிக்க மாட்டாங்க. தூக்கி ஓரமா வச்சுடுவாங்க. ஏன்னா வர்ற சிவி எல்லாத்தையும் முழுசா உட்கார்ந்து படிக்க முடியாது. அதனால ரொம்பக் கவனமா இந்தப் பகுதியை எழுதுங்க. உதாரணமா 

-Design Engineer having totally 5 years experience in Product Modeling
- Modeling of Valve parts using Pro-E, Solidworks and AutoCAD

ஒரு கம்பெனி Pro-E Software-ல் 3 வருச எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஆளைத் தேடிக்கிட்டிருக்கலாம். முதல் ரெண்டு வரிலயே ‘இது நம்ம ஆளு’ன்னு அவங்களுக்குப் புரிஞ்சிடும்.

Academic Qualification:
இங்கே நீங்க உங்களோட கல்வி பற்றிய விபரங்களைக் கொடுங்க. பத்தாவது வகுப்புல இருந்தே விவரங்கள் இருக்கணும்னு கம்பெனிகள் எதிர்பாக்குறாங்க. அதனால அட்டவணை வடிவத்துல கொடுங்க.

Course - Institution - Year of Passing(Batch)-Marks% இந்த வரிசைல 10, 12, Degree டீடெய்ல்ஸைக் கொடுங்க. இது எதுக்குன்னா, சில கம்பெனிகள் 70%க்கு மேல இருந்தாத் தான் எடுப்போம்-னு விதிமுறைகள் வச்சிருக்கலாம். அதனால இந்த டேபிளைப் பார்த்ததுமே, தொடர்ந்து உங்க சி.வி.யைப் பாக்குறதா வேணாமா-ன்னு முடிவு பண்ண இது உதவும். 

கடந்த இரு பகுதியும் ஓ.கே-ன்னா உங்க சி.வி. 80% செலக்ட் ஆகிடும்.


Professional Experience: (Current to Previous)

நீங்கள் கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவர் என்றால், நீங்கள் இப்போது வேலை பார்க்கின்ற/பார்த்த கம்பெனி விவரங்களில் இருந்து ஆரம்பித்து, ரிவர்ஸில் முந்தைய கம்பெனி, அதற்கு முந்தைய கம்பெனி எனக் கொடுக்கவும். ஃப்ரெஷ் ஆளென்றால், Inplant Training சென்ற கம்பெனி விவரங்களையும், அங்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் சொல்லவும்.

ஒரு பொழுதும் கதை மாதிரி பத்தி பத்தியாக எழுதாதீர்கள். பாயிண்ட், பாயிண்டாகவோ, டேபிள் ஃபார்மேட்டிலோ இருப்பது நல்லது. உதாரணமாக:

Organization : மன்னார் & மன்னார் கம்பெனி
Designation : வெட்டி ஆபீசர்
Duration       : May.2001 – Aug.2010/Till Date

Job description: 

Lay-out planning and 3D Pipe Routing in PDMS, CADWorx, AutoCAD
Leading a Piping Designers team 
Iso-extraction, Checking and Issuing for fabrication


இவ்வாறு எழுதினால் படிப்போர்க்கு எரிச்சல் வராமல் உங்கள் சிவியை மதிப்பிட எளிதாக இருக்கும்.


Technical/Software Skills:

இந்தப் பகுதியில் நீங்கள், உங்களுக்குத் தெரிந்த சாஃப்ட்வேர் டீடெய்ல்ஸ் மற்றும் CNC Machining போன்ற வேறு ஏதேனும் கோர்ஸ் செய்திருந்தால் அவை பற்றிய விவரங்களைக் குறிப்பிடவும். ஃப்ரெஷ் கேண்டிடேட்டுக்கு முக்கியமான பகுதி இது.

Extra-Curricular Activities:

ஃப்ரெஷ் கேண்டிடேட்டுக்கு மட்டுமே இது கட்டாயம். கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் ஆனவர்கள் இதை எடுத்துவிடலாம். இந்தப் பகுதியில் நீங்கள் NSS/NCC, Sports போன்றவற்றில் பங்கு பெற்ற விபரங்களைக் கொடுக்கவும். நீங்கள் ஏதெனும் செமினார் எடுத்திருந்தாலும் அது பற்றிய விவரங்களைக் கொடுக்கலாம்.

Personal Data:

உங்களைப் பற்றிய தனிப்பட்ட விவரங்களை இங்கு கொடுக்கவும் தனியார் கம்பெனிக்கு ஜாதி தேவையில்லை. அப்படியே கேட்டாலும் FC/BC/MBC/SC என பொத்தாம்பொதுவாகப் போடுவது நல்லது. கீழே உள்ளது போன்றும் விவரங்களைக் கொடுக்கலாம்:

Date of Birth                 : xxxxxx
Marital Status                 : Single/Married
Languages Known : English, Tamil
Academic Qualification : B.E (Mechanical)
Year of Passing      : xxxx
Residing Address : xxxxxxxxx
Permanent Address : : xxxxxxxx


முடிந்தவரை சி.வி.யை சுருக்கமாகவும், தெளிவாகவும் தயார் செய்யவும். படிக்கக்கூடிய ஃபாண்ட்-ல் கொடுங்கள். பக்கத்தைக் கூட்டவோ/குறைக்கவோ ஃபாண்ட்-ஐ மாற்றி சி.வி.யின் அழகைக் கெடுக்க வேண்டாம்.

நீங்கள் ரொம்பவும் நல்ல பிள்ளையென்றால், எவ்விதக் கோல்மால் வேலைக்கும் பழக்கப்படாதவ்ர் என்றால் இதுவரை சொன்னது போதும். All the Best!
--------------------------------

சரி, இந்த மாதிரி ‘நாம் யார், என்ன தெரியும், என்ன செய்தோம்’-னு கரெக்டாகப் போட்டால் நம் சி.வி.யை செலக்ட் செய்து விடுவார்களா? அது தான் இல்லை. எப்போது உங்கள் சி.வி.க்கு ஏற்ற வேலை ஒரு கம்பெனியில் காலி ஆகிறதோ அப்போது தான் கூப்பிட்டாலும் கூப்பிடுவார்கள். 

‘காலுக்கு ஏற்ற செருப்பு கிடைக்கவில்லை எனில் செருப்புக்கு ஏற்ற மாதிரி காலை வெட்டத் துணிபவர் ’என்றால்....தொடர்ந்து வாருங்கள். என்ன கோல்மால் செய்ய வேண்டும் எனச் சொல்லித் தருகிறேன். அது அடுத்த வாரம்.
மேலும் வாசிக்க... "சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?"

Saturday, March 19, 2011

என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_7

டிஸ்கி: இந்தப் பதிவு மெக்கானிக்கல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களிடம் இந்தப் பதிவை அறிமுகப் படுத்தவும். மற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.

இன்று நாம் பார்க்கப் போவது MAINTENANCE டிபார்ட்மெண்ட் பற்றி...

எதுக்கு இது?
ஒரு கம்பெனியில் பல இயந்திரங்கள்/உபகரணங்கள் இருக்கும். அவற்றுக்கான பராமரிப்பு வேலைகளைத் தொடர்ந்து செய்து, இயந்திரம் பழுது படாமல் பார்த்துக் கொள்வதும் பழுதானால் அதனைச் சரி செய்வதுமே இவர்களின் முக்கியப் பணி.

என்ன செய்வாங்க?
ஒரு கம்பெனியில் உள்ள அனைத்து இயந்திரங்களும் இவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இயந்திரக்களுக்குத் தேவையான ஆயில் போன்றவற்றை தேவையான இடைவெளியில் செலுத்தப்படுகின்றதா, சரியான லோடில் தான் இயந்திரங்கல் இயங்குகின்றனவா என ரெகுலராகச் சோதிப்பர். ஏதேனும் இயந்திரம் பழுதானால், அதனைப் பிரித்து எந்த உதிரி பாகம் பழுதடைந்திருக்கிறது எனச் சோதித்து அதனை மாற்றுவர்.

இவர்கள் தான் உண்மையான ’இயந்திர’ப் பொறியாளர்கள் எனச் சொல்லலாம். ஏனென்றால் இயந்திரங்களைப் பற்றிய நல்ல அறிவு இவர்களுக்கு அனுபவத்தின் மூலம் கிடைக்கும்.

இந்த வேலையில் உள்ள முக்கியப் பிரச்சினையே இது நேரம் காலம் பார்க்காமல் இயந்திரம் சரியாகும்வரை வேலை பார்க்கவேண்டும் என்பதே. மேலும், தீபாவளி பொங்கல் போன்ற விடுமுறை நாட்களில்தான் ஷட்-டவுன் செய்து மெயிண்டனன்ஸ் வேலை பார்க்க வேண்டியிருக்கும்.

இங்கே சேரணும்னா..
சிறுவயதிலிருந்தே எதையாவ்து பிரித்து மேயும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?..அது போதும், இந்த வேலை கிடைக்கவும், வேலையில் நல்ல பெயர் எடுக்கவும். இந்த வேலைக்கான இண்டர்வியூவுக்கு போகும்போது, அங்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் & இயந்திரங்கள் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொண்டு போகவும்.

டப்பு தேறுமா
சம்பளத்தைப் பொறுத்தவரை புரடக்சனுக்கும் மெயிண்டனஸ்க்கும் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. ஆனாலும் சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்கும்போது, சில கம்பெனிகள் இன்செண்டிவ் கொடுப்பதுண்டு.

PRODUCT DEVELOPMENT:
இந்த டிபார்ட்மெண்டைப் பற்றியும் இன்று பார்த்துவிடுவோம். ஒரு கம்பெனி பல உதிரிப் பாகங்களைத் தயாரிப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த வேலையை நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி புரடக்சன் & குவாலிட்டி டிபார்ட்மெண்ட் பார்த்துக்கொள்ளும். ஆனால் புதிதாக ஒரு புராடக்ட் கிளையண்ட்டாலோ R&D டிபார்ட்மெண்ட்டாலோ அறிமுகப் படுத்தப்பட்டால், முதலில் சில மாதிரி பீஸ்களைத் தயாரித்து, அது சரியாக உள்ளதா என முடிவு செய்வர். அதன் பிறகே மாஸ் புரடக்சனுக்கு போக முடியும். அந்த மாதிரி (Sample) தயாரிப்புப் பொறுப்பை இந்த டிபார்ட்மெண்ட் பார்த்துக்கொள்ளும்.

இதில் வேலை செய்பவர்களுக்கு டிசைன், புரடக்சன், குவாலிடி & ப்ளானிங் அறிவு முக்கியம். எனவே பெரும்பாலும் ஃப்ரெஷ் என்சினியர்களை இங்கு எடுப்பதில்லை. எடுத்தால், நீங்கள் நிறையக் கற்றுக் கொள்ள முடியும்.

இதைத் தவிர பெயிண்டிங், ஃபைனல் இன்ஸ்பெக்சன் & டெலிவரி போன்ற சில டிபார்ட்மெண்ட்கள் உண்டு. அவற்றின் வேலையும் சூப்பர்வைசிங்/குவாலிட்டி போன்றே இருக்கும். தனியாகச் சொல்ல ஏதுமில்லை.

இனி Resume தயாரித்தல் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

மேலும் வாசிக்க... "என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_7"

Sunday, March 13, 2011

என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_6

டிஸ்கி: இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். மற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.

இன்று நாம் பார்க்கப் போவது QUALITY ASSURANCE AND QUALITY CONTROL டிபார்ட்மெண்ட் பற்றி...

எதுக்கு இது?
நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி, டிசைன் டிபார்ட்மெண்ட்ல தந்த டிராயிங்கை வச்சு, உற்பத்தி செய்றாங்க. அது அந்த டிராயிங்ல உள்ள அதே டைமன்சனோட இருக்கா, ASME/ASTM போன்ற ஸ்டேண்டர்ட்களின் படி இருக்கா போன்றவற்றை செக் பண்றதும், அதுப்படி பொருள் தயாராகுதான்னு ப்ராச்சை க்ளோசா கண்காணிக்கிறதுக்குத் தான் இந்த QC டிபார்ட்மெண்ட்.

என்ன செய்வாங்க?
QC-ன்னா பொருள் தயாரான பிறகு பண்ற இன்ஸ்பெக்சன் மட்டும் கிடையாது. ஒரு பொருளின் உற்பத்தி ஸ்டேஜ் ஒவ்வொன்னும் கரக்டான ப்ரொசியூசர் படி நடக்குதான்னு கண்காணிக்கறதும் இவங்கா வேலை.

உதாரணமா ஒரு ஃபவுண்ட்ரில மெட்டலை உருக்கி, மோல்டுல ஊத்தி, தேவைப்பட்டா கோர் வச்சு, அதுல உருக்குன மெட்டலை ஊத்துவாங்க.

QC என்ன செய்யும்னா, மெட்டல் சரியான மெட்டீரியல் காம்பினேசன்ல உருக்கப்பட்டிருக்கான்னு உருக்குன இரும்புக் குழம்பை எடுத்து டெஸ்ட் பண்ணும்.

மோல்டு சரியான ஹார்ட்னெஸ்ல செய்யப்பட்டிருக்கான்னு ‘ப்ரினெல் ஹார்ட்னெஸ் டெஸ்ட்’ மற்றும் மோல்ட் சேண்ட் பிராபர்ட்டியை டெஸ்ட் பண்ணும். கோருக்கும் அதே மாதிரி இன்னொரு QC டீம் டெஸ்ட் செய்யும். இரும்புக் குழம்பு சரியான வெப்பநிலையில் ஊத்தப்படுதான்னும் டெஸ்ட் நடக்கும். எல்லாமே சரியா இருந்தா வெளில வ்ர்ற கேஸ்டிங் (பொருள்)-ம் சரியா இருக்கும். அப்படி இல்லேன்னா, ஏன் அப்படி ஆச்சுன்னு மேலே சொன்ன டெஸ்ட் ரிப்போர்ட்களை சரி பார்த்தாத் தெரிஞ்சு போகும்.

பொருளோட டைமன்சனை அளந்து செக் பண்றது, போராசிட்டி போன்ற மெட்டலர்ஜிகல் பிராப்ளம் இருக்கான்னு ரேடியோகிராஃபி டெஸ்ட் பண்றது போன்ற வேலைகளும் செய்வர்.

இதே மாதிரி வெறும் டிராயிங் மட்டும் தயாரிக்கிற டிசைன் கம்பெனிகள்லயும் QC இருக்கும். (சில நேரங்கள்ல உங்க பாஸே QC வேலையைப் பார்ப்பார்). தயாராகிற டிராயிங்கை கண்ணுல விளக்கெண்ணெய் விட்டு செக் பண்ணுவாங்க!

இது போக ISO Certified Company-ன்னா அதுக்குத் தேவையான டாகுமெண்ட்ஸை மெயிண்டெய்ன் பண்றதும் QC வேலை தான்..

இங்கே சேரணும்னா..
ஒரு QC Jobக்கு இண்டர்வியூ போறீங்கன்னா, நீங்க காலேஜ்ல படிச்ச Qulaity Control  மற்றும் ASME/ASTM போன்ற ஸ்டேண்டர்களின் பிராக்டிகல் உபயோகம் பற்றித் தெரிஞ்சுகிட்டுப் போங்க!
டப்பு தேறுமா
சம்பளத்தைப் பொறுத்தவரை புரடக்சனுக்கும் QCக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. ஆனாலும் மேலும் சில QC Related எக்ஸாம்களை (AWS, MAS போன்ற) எழுதி உங்களை நீங்க த்குதிப்படுத்திக்கிட்டா ஓரளவு நல்ல சம்பளத்தோட நல்ல கம்பெனிக்குத் தாவலாம்!

அடுத்த வாரம் மெயிண்டனன்ஸ் டிபார்ட்மெண்ட் பற்றிப் பார்ப்போம்!
மேலும் வாசிக்க... "என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_6"

Saturday, March 5, 2011

என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_5

டிஸ்கி: இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களைப் படிக்கச் சொல்லவும். மற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.

இன்று நாம் பார்க்கப் போவது உற்பத்தி (PRODUCTION/ASSEMBLY) & கட்டுமானம்(ERECTION)  டிபார்ட்மெண்ட் பற்றி...

எதுக்கு இது?
இதுவரை படிச்ச R&D, Design எல்லாமே ப்ராக்டிகலா ஒரு பொருளா மாறுகின்ற இடம் புரடக்சன் டிபார்ட்மெண்ட். உற்பத்தி-ங்கிறது பெரிய ஏரியா..தயாரிக்கப் படுற பொருளைப் பொறுத்து உற்பத்தி முறை மாறும்.
ஃபவுண்ட்ரி, மெசின் ஷாப், ஃபோர்ஜிங், ஷீட் மெட்டல் ஃபார்மிங், வெல்டிங்-ன்னு நீங்க புரடக்சன் டெக்னாலஜி-ல படிச்ச ஒவ்வொரு சேப்டரும், நிஜ வுலகில், தனித் தனி ஏரியா..ஒவ்வொன்னும் பெரிய ஏரியா..ஃபவுண்ட்ரில ஒர்க் பண்ற எஞ்சினியருக்கு மெசின் ஷாப் நுணுக்கங்கள் தெரியாது. மெசின் ஷாப்ல ஒர்க் பண்ற எஞ்சினியருக்கு வெல்டிங்/எரக்சன் பற்றிய நுணுக்கங்கள் தெரியாது.
நீங்க எந்த ஏரியாவுல வேலை பார்க்குறீங்களோ, அதைப் பத்தி நீங்க படிச்சது மட்டும் தான் பயன்படும். மற்றவை சும்மா ஏதாவது ரெஃபரன்ஸ்க்கு உதவும். அவ்வளவு தான்.

என்ன செய்வாங்க?
உற்பத்திங்கிறது ஒரு நட்டை அல்லது ஒரு பம்ப்-இன் ஸ்பேர் பார்ட் போன்றவற்றை தயாரிக்கிற துறை. அப்படித் தயாரான உதிரிப் பாகங்களை இணைக்கற ஏரியா, அசெம்ப்ளி. ஹூண்டாய் போன்ற பெரிய கம்பெனிகள், கார் உதிரி பாகங்களை உற்பத்தி செய்றதில்லை. பெரும்பாலும் வெளில வெண்டார்கிட்ட டிராயிங் கொடுத்து, பார்ட்ஸை வாங்கிக்கறாங்க. அசெம்ப்ளி மட்டும் தான் இவங்க பண்றாங்க.

உற்பத்திலயே வர்ற இன்னொரு ஏரியா எரக்சன். இது பில்டிங் கட்டுறது, தொழிற்சாலையை நிர்மாணிக்கிறது, கப்பல் கட்டுறதுன்னு பல பெரிய புராஜக்ட்ஸ் நடக்கிற இடம். மேலே சொன்ன, உற்பத்தி செய்யப்பட்ட உதிரிப் பாகங்களை அசெம்பிள் பண்ணி தயாரிக்கப்பட்ட பம்ப், இங்க தேவையான இடங்கள்ல பொருத்தப்படும். (நம்ம வீடுகள்ல பொருத்தப்பட்ட மாதிரி!)
ஒரு பொருளை உற்பத்தி பண்ற எல்லா தொழிற்சாலைகளிலும் புரடக்சன் ஷாப் இருக்கும். பேரே சொல்ற மாதிரி, இங்க தான் அந்தப் பொருள் உற்பத்தி செய்யப்படும். அதற்கு உதவுற இயந்திரங்களையும், இயந்திரங்களை இயக்குற ஆபரேட்டர்களும் இங்க தான் இருப்பாங்க. அவங்களுக்கு வேலை கொடுத்து, அவுட்புட் வாங்குறவர்தான் புரடக்சன் இஞ்சினியர்.  மெட்டீரியல் டிபார்ட்மெண்ட்ல இருந்து தேவையான ரா மெட்டீரியல் வந்துடும். டிசைன் டிபார்ட்மெண்ட்ல இருந்து ட்ராயிங் வந்துடும். ஏற்கனவே மெசினும், ஆபரேட்டரும் இருக்காங்க.

அப்புறம் என்ன, புரடக்சனை ஆரம்பிக்க வேண்டியதுதான். தினமும் இவ்வளவு என்ணிக்கை உற்பத்தி ஆகணும்னு டார்கெட் கொடுத்துடுவாங்க. அதை முடிக்கமுன்னே பெண்டு கழண்டுடும். மெசின் சரியா இருந்தா, ஆபரேட்டர் பிரச்சினை பன்ணுவாங்க. ஆபரேட்டர் சரியா இருந்தா மெசின் அல்லது டிராயிங்ல பிரச்சினை வரும். எல்லாத்தையும் இழுத்துக்கட்டிப் போறதுங்கிறது, ரெண்டு பொண்டாட்டிக்காரன் பொழப்பை விட மோசமா இருக்கும்.

இங்கே சேரணும்னா..
ஒரு புரடக்சன் கம்பெனிக்கு இண்டர்வியூ போறீங்கன்னா, அவங்க என்ன பொருள் தயார்ரிக்கிறாங்க, என்ன முறையில் (ஃபவுண்ரியா..மெசின் ஷாப்பா ) தயாரிக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு, அதைப்பத்தி நல்லாப் படிச்சுட்டுப் போங்க.            

டப்பு தேறுமா
டிசைன் போன்ற துறைகளை  ஒப்பிடும்போது, இங்கு உடல் உழைப்பு அதிகம், சம்பளம் கம்மி. ஹூண்டாய் போன்ற ஒரு சில MNC கம்பெனிகள் கொஞ்சம் டீசண்டான சம்பளம் தருகிறார்கள்.அதனால முடிந்தவரை, இந்தத் துறையை தவிர்ப்பது நல்லது!

5000 ரூபாய் சம்பளத்துக்கு டிசைன்ல வேலையும், 10,000ரூபாய் சம்பளத்துக்கு புரடக்சன்ல வேலையும் கிடைச்சா, டிசைனை செலக்ட் பண்ணுங்க..அடுத்த ரெண்டு வருஷத்தில் புரடக்சன் எஞ்சினியரை விட எங்கயோ போய்டுவீங்க!
புரடக்சன்ல நீங்க பெரும்பாலும் பண்றது ப்ளானிங்கும், சூப்பர்வைசிங்கும் தான். அதனால  வருடக்கடைசீல போனஸ்/சம்பள உயர்வு கேட்டா, ‘டிசைன்ல இருகுறவன் டிராயிங் கொடுத்தான்,ஒர்க்கர் வேலை பார்த்தாங்க.  நீ என்னப்பா பண்ணெ?' -ன்னு கூச்சப்படாமக் கேட்பாங்க. 

எனது ஆரம்பக்காலங்களில் கோயம்பத்தூரில் உள்ள மெசின் ஷாப்களில் வேலை பார்த்திருக்கிறேன். இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு காலை 7 மணிக்கு ஆரம்பிச்சு இரவு 9 மணிக்கு மேலேயும் வேலை பார்ப்போம். இரவு 9 மணிக்கு கிளம்பும்போது மேனேஜர் கேட்பார்: என்னப்பா, அதுக்குள்ள கிளம்பிட்டே!
 
அடுத்த வாரம் Quality Control டிபார்ட்மெண்ட் பற்றிப் பார்ப்போம்!
மேலும் வாசிக்க... "என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_5"

Saturday, February 26, 2011

என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_4

டிஸ்கி: இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களைப் படிக்கச் சொல்லவும். மற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.


இன்னைக்கு டிசைன் (Design) டிபார்ட்ம்ண்ட்ல வேலைக்குச் சேரணும்னா என்னல்லாம் நீங்க படிக்கனும்னு பார்க்கலாம்.

AUTO CAD:
ஒரு மெக்கானிகல் எஞ்ஜினியரா வேலைக்குப் போறவங்களுக்கு, பேண்ட், சட்டையை விடவும் அடிப்படைத் தேவை ஆட்டோ கேட் பற்றிய அறிவு தான். இப்போல்லாம் காலேஜ்லயே ஆட்டோகேட் சொல்லித்தர்றாங்க.அப்படி இல்லைன்னா, நீங்க வெளில ஏதாவ்து கம்ப்யூட்டர் செண்டர்ல போய்க் கத்துக்கோங்க. 
முன்னாடில்லாம், பெரிய A1 சைஸ் சீட்ல, மினி ட்ராஃப்டெர் போன்ற கருவிகளின் உதவியோடதான் கம்பெனிகள்ல டிராயிங் வரைஞ்சுக்கிட்டு இருந்தாங்க.ஒரு டிராயிங் போட எப்படியும் ஒரு வாரம் ஆயிடும். இப்பவும் அந்த நிலைமை இருந்திருந்தா, நம்ம பாடு திண்டாட்டம்தான். ஆனால், நல்லவேளையா இந்த சாஃப்ட்வேர் வந்தது. ஒரு கோடு (Line) பொடணும்லா ல்-ன்னு தட்டுனாப் போதும். எவ்வளவு ஈஸி பாருங்க..உண்மையில் இப்போ டிசைன்ல இருக்குற சில பேர்கிட்ட ஒரு லைனை கையால நேராப் போடச்சொன்னா,அவங்க அந்தக் கோடை, காஷ்மீர்ல ஆரம்பிச்சு காசி போய் ராமேஸ்வரம் தாண்டி, கன்னியாகுமரில முடிப்பாங்க.

ஆட்டோகேட் பெரும்பாலும் 2D டிராயிங் வரையத்தான் யூஸ் பண்றாங்க. இதில் 3D வரையறதும் ரொம்பக் கஷ்டம்.


கம்பெனிகள்ல ஒரு பேப்பர்ல கையால ரஃபா வரிஞ்ச டிராயிங்கயோ, PDF ஃபார்மேட்ல இருக்கிற டிராயிங்கையோ உங்ககிட்ட எஞ்சினியர் கொடுப்பார். நீங்க அதை அப்படியே சரியான டைமன்சனோட ஆட்டோகேட்ல வரையணும். இது தான் உங்க வேலை. அதை க்ளையண்டுக்கு அனுப்புவாங்க. அவங்க ஏதாவது கரெக்சன் சொன்னா, அதையும் செய்யணும்.

இதுல சக்ஸஸ் ஆதத் தேவை நல்ல ஆட்டோகேட் நாலேட்ஜும், நல்ல ஸ்பீடா வரையற திறமையும் தான்்


PRO-E/SOLID WORKS/CATIA/IDEA/UNI GRAPHICS/Auto Desk:
ஆட்டோகேட் 2D ல சக்ஸஸ் ஆன அளவுக்கு 3 Dல ஆகலை. 2D ல உள்ள பிரச்சினை, நாம தான் அது 3 ல எப்படி இருக்கும்னு ஃப்ரண்ட், டாப், சைடு வியூவை வச்சு முடிவு செய்யணும். அதனால 3Dக்காகவே ஸ்பெஷலாத் தயாரிக்கப்பட்ட சாஃப்ட்வேர்கள் தான் மேலே சொன்னவை. இதுல உள்ள டூல்ஸை யூஸ் பண்ணி,நாம நேர்ல பார்க்குற மாதிரியே மாடலை உருவாக்கலாம். அதிலிருந்து 2D டிராயிங்-ம் எடுத்துக்க முடியும்.

CNC Machining பத்தி படிச்சிருப்பீங்க. அதுக்கு இந்த 3D மாடல் ரொம்ப உதவியா இருக்கும்.இதிலிருந்தே நேரா சிஎன்சி கோடை உருவாக்கி மெசினிங் பண்ண முடியும். அதனால நிறைய நேரமும் செலவும் மிச்சமாகும்.

ஒரு 2D டிராயிங் கொடுத்தா, அதை ஸ்டடி பண்ணி, 3D-ல வரையணும் நீங்க..என்ன தான் 3டி-ல போட்டாலும், மெசின் ஷாப்/புரடக்சன் சாப்-க்கு 2டி-ல தான் டிராயிங் கொடுக்க வேண்டியிருக்கும். 2டி-ல தான் டைமென்சன் டீடெய்ல் நல்லாக் கொடுக்க முடியும். எப்படியானாலும், ஆட்டோகேட் கத்துக்காம 3டி சாஃப்ட்வேர் படிக்கிறது நல்லதில்லை. ஆட்டோகேட் தான் எல்லாத்துக்குமே அடிப்படை.

மேலே சொன்ன சாஃப்ட்வேர் தவிர வேறு சிலவும் உண்டு. இது தான் அதிகமா யூஸ் பண்றாங்க. குறிப்பா SolidWroks & Pro-E தான் டாப்ல இருக்கு.

ANSYS:

இது ஸ்ட்ரெஸ் அனலிஸ் பண்ண உதவுற சாஃப்ட்வேர். நீங்க படிச்ச Strength of Materials, Finite Element Method போன்ற பாடங்கள் இங்க யூஸ் ஆகும். ஒரு புராடக்ட் எவ்வளாவு ஸ்ட்ரெஸ் தாங்கும், எவ்வளவு Elongate ஆகும் போன்ற விஷயங்களை, அதைத் தயாரிக்கறதுக்கு முன்னாலேயே, செக் பண்ணிக்க இது உதவுது. இதனால கம்பெனிகளுக்கு நிறைய புரடக்சன் செலவும் நேரமும் மிச்சமாகும். இது ஒரு ப்யூர் டெக்னிகல் ஒர்க்கா இருக்கும்.

PDS/PDMS/CADWorx:
மேலே உள்ள படத்தைப் பாருங்க. இது ஒரு Piping System-ன் 3டி படம். இதை SolidWorks மாதிரி சாஃப்ட்வேர்ல பண்ணா, தாவு தீர்ந்திடும். அதனால தான் PDS, PDMS, CADWorx போன்ற சாஃப்ட்வேர்ஸ் இதுக்குன்னே ஸ்பெஷலாக் கண்டுபிடிச்சிருக்காங்க. இதை சில குறிப்பிட்ட கம்ப்யூட்டர் செண்டர்ல தான் சொல்லித் தருவாங்க. இதைப் பத்தி நிறையப் பேருக்குத் தெரியறதில்லை. ஆட்டோகேட் மட்டும் தெரிஞ்சவங்க, டைரக்டா இதைக் கத்துக்கலாம். சென்னைல MechciCADD, SivaPDS center, CADDCenter ஆகிய இடங்களில் சொல்லித் தர்றாங்க. இதைப் படிச்சா, ஆயில் ரிஃபைனரி ப்ளாண்ட் டிசைன், கப்பல்/ரிக் பைப்பிங் டிசைன், பில்டிங் பைப்பிங் டிசைன் போன்றவற்றைப் பண்ணலாம். 

மெக்கானிகல்-ல டிசைன் -ல நல்ல துறை. டிசைன் -ல பைப்பிங் டிசைன் நல்ல துறை..நல்ல காசு!

CAESAR:
இதுவும் பைப்பிங்-ல யூஸ் ஆகுற சாஃப்ட்வேர் தான். ANSYS மாதிரி, Stress Analys பண்ண, இது யூஸ் ஆகுது. பைப்பிங் பத்தி, கொஞ்சம் பேசிக் தெரிஞ்சப்புறம் இது படிக்கலாம்.

மேலே சொன்ன எதைப் படிச்சுட்டு, இண்டெர்வியூ போனாலும், ஏதோ ஒரு டிராயிங்-கைக் கொடுத்து அரை மணி நேரத்திலேயோ, ஒரு மணி நேரத்திலேயோ முடிக்கச் சொல்வாங்க. அதைக் கரெக்டாப் பண்ணீட்டீங்கன்னா, வேலை உறுதி. அதனால, ஸ்பீடா வரைய கத்துக்கிட்டாப் போதும். வேலை கிடைச்சப்புறம் அதே டிராயிங்கை ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து போடுவோம்..அதனால இண்டெர்வியூவைப் பார்த்து பயந்துடாதீங்க. ஆல் தி பெஸ்ட்.

அடுத்த வாரம்...உற்பத்தி, அசெம்ப்ளி, எரக்சன் ( Production ,Assembly & Erection)


மேலும் வாசிக்க... "என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_4"