போட்டி, பொறாமை நிறைந்த பதிவுலகில் என்னைஆச்சரியப்பட வைக்கும் வெகுசிலரில் நிரூபனும் ஒருவர். மன்மதன் லீலைகள் தொடர் 50 பகுதிகளைத் தாண்டியதுமே ஒரு விமர்சனப் பதிவு தொடர் முடிவில் போடுவதாகச் சொன்னார். நிரூபனின் தமிழ் மேல் நமக்குத் தனிப் பிரியம் உண்டு. எனவே நானும் எல்லாப் பாகங்களையும் எழுதி முடித்தவுடன், அவருக்கு அனுப்பி வைத்தேன். அவர் எழுதிய விமர்சனக் கட்டுரையை ப்ரூஃப் பார்க்க எனக்கு அனுப்பி வைத்தார்.
பிறகு யார் வலைப்பூவில் இதைப் பதிவேற்றுவது என்று ஒரு சிறிய அன்புச்சண்டை நடந்தது. கடைசியில் தம்பி எனக்கே விட்டுக்கொடுத்தார். விமர்சனத்திற்கும், விட்டுக்கொடுத்தலுக்கும் நன்றி நிரூ.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
மயக்கத்தை கொடுத்த மன்மதன் லீலைகள்
இயந்திர வேகமான இவ் உலகில் மெல்லத் தமிழ் இனிச் சாகும் எனச் சிலர் சொல்லி நிற்க, வீழும் நிலை வரினும் எம் தமிழை எத் துறையினூடாகவும் வாழ வைப்போம்! எனத் திட சங்கற்பம் பூண்டவர்களாய் தமிழ் விரும்பிகள் இன்று தரணியெங்கும் வீறு நடை போடுகின்றார்கள். தமிழ்த் தாய் அகிலத்தின் அனைத்துத் துறையினூடாகவும் ஏறி வலம் வந்து, தடைகளையும், தடங்கல்களையும் தாண்டித் தாவிப் பிடிக்க முடியாத உயரத்தில் வீற்றிருக்கிறாள். இணையத்தில் இனிமைத் தமிழில் எம் இதயத்தில் கொலுவிருக்கும் நிகழ்வுகளை எழுதிப் பதிவேற்றி அகிலமும் முழுதும் கொண்டு சேர்க்கும் அரிய பணியினைச் செய்து கொண்டிருப்பவை தான் வலைப் பதிவுகள்.
எம் மனதின் எண்ணங்களை, எம் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் கற்பனைத் தமிழ் இலக்கிய ஊற்றுக்களை, நாம் ரசிக்கும் விடயங்களை, எமைக் கடந்து போகும் அன்றாட நிகழ்வுகளை ரசனை கூட்டி, அழகு சேர்த்து அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் அரிய பணியினை கூகுள் எனும் மிகப் பெரும் வலை நிறுவனம் இலவசமாய் செய்து தருவதும், எம் தமிழில் எழுதும் வசதிகளை அவ் வலைப் பதிவு பெற்று நிற்பதும் நாம் அனைவரும் எம் தமிழுக்குச் சேவை செய்ய வேண்டும் எனும் ஆவலினைத் தூண்டுவதற்கான அரிய செயல் அல்லவா? என்று சில வேளை ஐயம் கொண்டுள்ளேன். வெகுஜன ஊடகமாக எம் கையருகே இருந்து விரும்பிய நேரம் விரும்பிய தகவலை உலகின் எப்பாகத்திற்கும் கணினி ஊடே கொண்டு செல்வதற்கான கருவியாக இருப்பதுவும் இந்த வலைப் பதிவு அல்லவா?
"பரபரப்புத் தலைப்புக்களும், சுண்டி இழுக்கும் சூப்பரான மேட்டர்களும் விலை போகும் இங்கே" எனும் எழுதாத வலிந்து திணிக்கப்பட்ட யதார்த்தம் வலைப் பதிவில் இருந்தாலும், இலக்கியப் படைப்புக்களும், இனிமையான விடயங்களும் பலர் மனதையும் கவரும் என்பது உண்மை தானே?"
இத்தகைய வலைப் பதிவில் ஒவ்வோர் நாளும் வெவ்வேறு விடயங்களை வெவ்வேறு உள்ளடக்கத்தில் எழுதும் போது, வாசகர் வருகை அதிகரிக்குமாம். ஆனால் அந்தப் பதிவு பலராலும் படிக்கப்பட்டாலும் ஆழமாய் பலர் மனதில் பதியாது என்பது நிதர்சனம். இத்தகைய சூழ் நிலையில் ஒரு நெடுந் தொடரை தினந் தோறும் அதிகளவான வாசகர் பரப்பெல்லையினை நோக்கி நகர்த்துவது என்பது கடினமான விடயம்.
நெடுந் தொடரைப் பல பாகங்கள் நோக்கிக் கொண்டு செல்லும் போது, ஒரே தலைப்பில் கொண்டு சென்றால் வலைப் பதிவிற்கு வரும் வழமையான கூட்டம் குறைந்து விடுமென்பது பதிவர்களின் உள்ளத்து உணர்வின் வெளிப்பாடு. இவற்றையெல்லாம் எதிர்பார்க்காது, இலக்கிய வெறியோடு யதார்த்தம் கூட்டி, வாசகர்களுக்குச் சலிப்பின்றி, அத் தொடரைத் தன்னை நாடி வரும் - தன் பதிவினைப் படிக்க வரும் வாசகர்களை ஈர்க்கும் வண்ணம் சுவைபட எழுதி வாசக உள்ளங்களின் அமோக ஆதரவினைப் பெற்றுக் கொள்ளும் வண்ணம் அப் படைப்பானது அமைகின்ற போது; அது தான் அத் தொடரின் வெற்றி என்பதற்கான மகுடமாகி ஒரு பதிவரின் ஆத்ம திருப்தி எனும் மன நிறைவினைப் பூர்த்தி செய்கிறது.
அதிகளவான வாசகர்களை உள் இழுத்து, இலக்கியச் சுவையோடும், இன்ப மூட்டும் கிளு கிளு குறிப்புக்களோடும், மனதில் எழும் எண்ண அலைகளின் வேறுபாட்டிற்கமைவாக வெவ்வேறு தள வடிவிலான கதை நகர்வில் மன்மதன் லீலைகள் எனும் பெயர் கொண்ட நெடுந் தொடரினை வெற்றிகரமாகப் படைத்து இணையமூடே உலா வரும் இலக்கிய விரும்பிகளின் இலக்கியத் தாகத்திற்கு இணையில்லா விருந்தளித்திருக்கிறார் செங்கோவி அவர்கள்.
தன் கல்லூரி வாழ்வில் தான் கண்டு அனுபவித்த விடயங்களின் கோர்வையாகவும், தன்னைச் சுற்றியிருந்த நண்பர்களின் லீலைகள் - அட்டகாசங்கள் - அலப்பறைகள் - ரகளைகள் - கலகலப்பு நிறைந்த காலேஜ் வாழ்வின் கண் முன்னே நிற்கும் காட்சிகள், சுவையான எப்பொழு நினைத்தாலும் மனதினுள் ஒரு வித இனம் புரியா உணர்ச்சியினை வர வைக்கும் ராக்கிங் ரகளைகள்,காதல் கலாட்டாக்கள் என அனைத்து வகையான அம்சங்களையும் உள்ளடக்கிய முதற் பாதித் தொகுப்பாகவும், பின்னர் ஒரு
மனிதன் தன் பாலியல் எனும் உணர்வின் மூலமாகவும், அடங்காத காமத்தின் வெளிப்பாடாகவும் எப்படியெல்லாம் சீர் கெட்டுத் திசை மாறி நிற்கிறான் என்பதனைச் சமூகத்திற்குச் செய்தியாகப் பிற் பாதியிலும் சொல்லி நிற்கும் அற்புதமான ஒரு தொடர் தான் இந்த மன்மத லீலைகள்.
சுருங்க கூறின், காலேஜ் வாழ்வில் பல பெண்களை அனுபவிக்க வேண்டும் எனத் துடிக்கும் ஒரு இளைஞன் (மதன்) காதல் லீலை செய்து, பின்னர் வசமாக ஒரு பெண்ணின் வலையில் மாட்டி (ஜமீலா) அவள் அன்பில் நனைந்து, மனந் திருந்தி; தான் தேடிப் போய் விருந்துண்ணும் பட்சிகளை விடத் தன்னைத் தேடி வரும் அன்னமே வெள்ளை மனம் உள்ளது எனப் புத்தி தெளிந்து அவளோடு வாழ வேண்டும் எனும் ஆவல் கொண்டவனாய்த் தம் திருமணத்திற்கு வேலியாகக நின்று வேரறுத்த மதத்தினை உதறித் தள்ளிக் காதற் திருமணம் செய்து இல்லற பந்தத்தில் இணைந்து கொள்கிறான்.
சந்தர்ப்ப சூழ் நிலையால் புலம் பெயர்ந்து சென்று திசை மாறிப் பல பெண்களிடம் தன் ஆசையினால் அனைத்தையும் இழந்து கையறு நிலையில் இக் கதையின் நாயகன் மதன் நிற்கும் போது, இனி மதன் திருந்துவானா? இல்லை தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருந்தவன் தண்டனை பெற்று வருந்துவானா? எனும் ஏக்க உணர்விற்கு விடை தரும் தொடர் தான் இந்த மன்மத லீலைகள்.
மதம் எனும் தடைக்கலைத் தூரத் தள்ளி வைத்து தம் வாழ்வே பெரிதென எண்ணித் திருமணம் செய்யும் காதலர்கள் ஊடாகப் பிரிவினையற்ற சமுதாயம் வேண்டும் எனும் உண்மையினையும், தீராத விளையாட்டுப் பிள்ளையாகப் பெண்களை நோக்கி அலையும் ஒரு திருமணமான இளைஞன் இறுதியில் அனைத்தையும் இழந்து தான் போடும் போலி வேசம் எல்லாம் கலைந்த பின்னர் தவிப்போடு நிற்பதனூடாக; "தான் தேடிப் போவோரை விடத் தன்னை நேசிப்போரில் தான் பாசம் அதிகம்" எனும் உண்மையினை அழகுறச் சொல்லி நிற்கிறது இந்த மன்மத லீலைகள்.
காதற் திருமணத்தின் ஒரு படி நிலையாக பெற்றோரைப் பிரிந்து நிற்கையில் தனக்குத் தன் குழந்தையும், கணவனும் உற்ற துணையாக இருப்பார்கள் என எண்ணிச் சமூகத்தில் பெணொருத்தி வாழும் போது, கணவனின் லீலைகளால் குழந்தையோடு கைவிடப்பட்டவளாய், தன் பெற்றோர், மாமனார் - மாமியாரால் வார்த்தைகளால் சூடு வாங்கி நிர்க்கதி நிலையில் நிற்கையிலும் நம்பிக்கையினைத் தவற விடாத ஒரு ஜீவனாக இங்கே ஜமீலா எனும் பெண் பாத்திரத்தினைப் படைத்து இத் தொடரின் மூலம் சமூகத்தில் கணவனால் கை விடப்பட்ட பெண்கள் தன்னம்பிக்கையுடன் எப்படி வாழலாம் எனும் உள உரத்தினைப் வெள்ளிடை மலையாகச் சொல்லி நிற்கிறார் கதாசிரியர்.
கதாபாத்திரப் படைப்புக்கள் ஒவ்வொன்றும் இத் தொடரின் உண்மைச் சம்பவத்திற்குச் சிறிதும் பங்கம் ஏற்படா வண்ணம் படைக்கப்பட்டிருப்பதும் தொடருக்கு கிடைத்திருக்கும் பெரு வெற்றி எனலாம். யதார்த்தம் கலந்த உரையாடல்கள், உள்ளதை உள்ள படி சொல்லும் அப்பழுக்கற்ற வசன அமைப்புக்கள், வட்டார மொழிச் சொற்கள், இயற்கை அழகினை மனக் கண் முன்னே கொண்டு வரும் படைப்பாளியின் கமெராக் கைவண்ணம் முதலியவை இத் தொடருக்கு அழகு சேர்த்திருக்கிறது.
இவை அனைத்திற்கும் அப்பால் இலக்கியச் சுவை குன்றா வண்ணம் இத் தொடரை நகர்த்த வேண்டும் எனும் படைப்பாளியின் ஆவலுக்குத் தீனி போடும் இலக்கிய வசன மேற்கோள் குறிப்புக்கள்; ஆங்காங்கோ வாசம் வீசும் அந்தரங்கச் சுவையோடு வெளி நாட்டு மதுக் கோப்பைகளின் வெளிப் புறத்தில் பட்டுத் தெறிக்கும் வெள்ளைக்கார மாதுக்களின் அங்க வர்ணனைகள், தொழில் நுட்பத்தின் உதவியோடு திசை மாறும் மதனின் லீலைகளை அம்பலப்படுத்தும் டெக்னாலஜி விசயங்கள் எனப் பல சுவையான அம்சங்களினூடாக இத் தொடருக்குச் சுவை கூட்டியிருக்கிறார் செங்கோவி அவர்கள்.
தமிழகம், நோர்வே என இரு வேறுபட்ட தளங்களைப் படைப்பின் மையப் பகுதியாகக் கொண்டு நகரும் இத் தொடர், ஆங்காங்கே அழகு கொஞ்சும் அன்னைத் தமிழ்க் கவிதை மூலம் அசத்தி நிற்கிறது. அதற்கு எடுத்துக் காட்டாகப் பின்வரும் கவிதையினைக் குறிப்பிடலாம்.
செவ்வான நிறத்தில்
மனம் மயங்குகிறது.
குளத்தில் இருமீன்களும்
துள்ளி அலைகின்றன.
இருபுறம் கனிந்திருக்கும்
ஆப்பிள் மீது வெண்பனி வேறு.
எங்கே என்கிறாய் – உன்
முகத்தில் தானடி
இவையனைத்தும்!
ஒவ்வோர் அங்கத்திலும் சிறப்பான கவிதைகளைக் கொடுத்திருக்கும் கதாசிரியர், பதின் மூன்றாம் பாகத்தின் பின்னர் இந்த நவீன யுகத்தில் தமிழ்க் கவிதைகள் ஊற்றெடுப்பதிலும் பஞ்சம் நிலவுகிறதே எனும் ஆதங்கத்தினை வர வைத்திருக்கிறார்.
இலக்கியங்கள் மீதான தன் காதலினையும், வாசகர்களிற்கு சலிப்பின்றி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று இலக்கியக் குறிப்புக்களை வழங்க வேண்டும் என ஆவல் கொண்டவராய் ஆங்காங்கே சங்க இலக்கியங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சில வரிகளை எடுத்து மேற்கோளாக காட்டியிருப்பதும் இத் தொடர் மூலம் பரந்து பட்ட விடயப் பரப்பெல்லையினை அலசும் பக்குவத்தினையும், தேடல் மூலம் தீராத தமிழ்த் தாகத்தைத் தீர்த்துத் தமிழ்ச் சுவையினைப் பருகலாம் எனும் உண்மையினையும் உணர்த்தி நிற்கிறார் செங்கோவி அவர்கள். பின் வரும் வரிகள் இதற்குச் சான்று பகர்கின்றது.
"அன்பு என்பதைச் சீக்கிரமே கண்டுபிடித்தான். சட்டென்று ‘அகத்தே அன்பிலா மாந்தரைத் தழுவிய பாவியாவேன்’ என்பது போன்ற வரி ஞாபகம் வந்தது. அது அகநானூறா புறநானூறா என்று யோசித்தான். தெரியவில்லை, ஆனால் அதன் அர்த்தம் இப்போது நன்றாகவே விளங்கியது. அகத்தே அன்பில்லா மாந்தருடன் இணைதல் பிணத்துடன் புணர்வதைப் போன்றது. இனி இந்த இழிசெயலைச் செய்வதில்லை’ என்ற முடிவுக்கு வந்தான்.
இத் தொடரின் ஊடாக பல்கலைக் கழக வாழ்வில் எம் நெஞ்சில் பசு மரத்தாணியாகப் பதியமிட்டுள்ள நினைவுகள் மீட்டப்பட்டு எம் மனங்கள் யாவும் காலேஜ் வாசலை நோக்கி மீண்டும் சிறகடித்துப் பறந்து செல்லும் என்பது ஒரு வாசகனாக இது வரை காலமும் இத் தொடரோடு பயணித்த எனது எண்ணத்தின் வெளிப்பாடாகும்.
ஒரு மனிதன் தான் எப்படி வாழ வேண்டும் எனும் நினைவினைச் சுமக்க விரும்புகிறானோ அவனுக்கு இத்தகைய வழிகளை நீ நாடக் கூடாது எனும் அறிவுரையிச் சொல்லி நிற்கும் இத் தொடரானது கூடவே பெற்றோருக்குத் தம் பெண் பிள்ளைகள் திசை மாறிச் செல்ல விடாது கண்ணியதோடு வளர்க்க வேண்டும் எனும் பொறுப்பு மிக்க உணர்வினை இக் காலத்தில் தட்டியெழுப்பும் ஒரு அலாரமாகவும், திசை மாறிச் சென்றால் வாழ்க்கையில் நாம் எத்தகைய நிலையினை அடைந்து கொள்வோம் எனும் அனுபவ வெளிப்பாட்டியினையும் தன்னகத்தே கொண்டு அழகுற மிளிர்ந்து நிற்கிறது இந்த மன்மத லீலைகள்.
ஒரு வாசகனாக இப் படைப்பினை நீங்கள் அணுகினால் உங்கள் உள்ளத்தைத் தித்திக்க வைக்கும் ஒரு தீந் தமிழ் சுவை கலந்த சிறப்பான தொடராக இம் மன்மத லீலைகள் அமைந்திருக்கும்!
ஒரு விமர்சகனாக விரல் கொண்டு வருடினால் உங்கள் உள்ளத்தில் பல தேடல்களை ஏற்படுத்தி "அடடா இத்தனை வியத்தகு விடயப் பரப்பெல்லைகள் நிறைந்த தொடரா? இது!" என உங்களை ஆச்சரியப்பட வைக்கும் இத் தொடர்!
நேசமுடன்,
செல்வராஜா நிரூபன்.
நட்டாங்கண்டல்,
வன்னி மாவட்டம்,
இலங்கை.