Saturday, August 24, 2019

ஆடை - அமலாபால்


மெயின் கேரக்டரை குறைகள் உள்ள கேரக்டராக படைப்பது என்பது திரைக்கதை உத்திகளில் ஒன்று. அந்த குறையில் இருந்து எப்படி அந்த கேரக்டர் மீண்டு வந்தது என்பது கிளைக்கதையாகவும் இருக்கலாம் அல்லது மெயின் கதையே அதுவாக இருக்கலாம்.

ஜுராசிக் பார்க்கில் ஹீரோவிற்கு குழந்தைகள் என்றாலே பிடிக்காது. கதையின் போக்கில், ஒரு ஆபத்தில் சிக்கும்போது, ஹீரோ கேரக்டர் எப்படி மாறுகிறது என்பது கிளைக்கதையாகச் சொல்லப்பட்டிருக்கும்.

தேவர்மகனில் வன்முறைக்கு ஊரே பலியாகும்போது, ஹீரோ வெளியூருக்குப் போய் ஹோட்டல் வைத்து பிழைப்பதைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்கும். அந்த மக்களைப் பற்றி எவ்வித அக்கறையும் ஹீரோவிற்கு இருக்காது. இந்த குறையில் இருந்து ஹீரோ எப்படி மீண்டு, மக்களுக்காக வாழ்கிறான் என்பது படத்தின் மெயின் கதை.

இப்படி ஒரு குறையை மெயின்கேரக்டருக்கு வைக்கும்போது, ‘நல்லவன்...ஆனாலும் இப்படி ஒரு குறை..அவனும் மனிதன் தானே!’ என்று ஆடியன்ஸ் அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் அளவிற்குள் தான் அந்த நெகடிவ் பாயிண்ட் இருக்க வேண்டும். மெயின் கேரக்டருடன் ஆடியன்ஸ் ஐடெண்டிஃபை ஆகும் அளவிற்குள் தான் அந்தக் குறையை படைக்க வேண்டும். இல்லையென்றால், கடைசிக் காட்சியில் திருந்தும் நம்பியார் போல் வில்லன் ரோலாக ஆகிவிடும் அபாயம் இந்த டெக்னிக்கில் உண்டு.

ஆடை படத்தின் மிகப்பெரிய குறை, அமலாபால் கேரக்டர் வில்லன் ரோலாக ஆகிவிட்டது தான். இடைவேளை வரை, ஒரு காட்சியில்கூட, அவர் செய்யும் ஒரு செயல்கூட நமக்குப் பிடித்ததாக இல்லை. ஒவ்வொரு காட்சியும், நம்மை எரிச்சலின் உச்சத்திற்கே கொண்டு செல்கின்றன.

(வில்லன் கேரக்டரையே ஹீரோ கேரக்டர் என்று நம்பி, எழுதி பல்பு வாங்கிய இன்னொரு படம், மிஸ்டர். லோக்கல். விருப்பமில்லாப் பெண்ணை விரட்டி, விரட்டி தொந்தரவு செய்பவன் வில்லன், ஹீரோ அல்ல.

2013ஆம் ஆண்டு சட்ட திருத்தத்தின்படி, stalking என்பது தண்டனைக்குரிய குற்றம் என்று இபிகோ 354D சொல்கிறது. இதையெல்லாம் திரைக்கதை விவாதத்தில் யாராவது சொல்லியிருக்க வேண்டும்.)

ஏற்கனவே எனக்கு ப்ரான்க் ஷோ பிடிக்காது. இதில் வடை போச்சே ப்ரான்க் ஷோ செய்தவரே நடித்திருப்பது, எரிகிற தீயில் பெட்ரோலை ஊற்றியபடி ஆகிவிட்டது.

எனவே, இண்டர்வெல்லில் அமலாபால் ஆடையின்றி பிரச்சினையில் சிக்கும்போது, 1%கூட அனுதாபம் வரவில்லை. அவர் அங்குமிங்கும் ஓடும்போது, எட்டிஎட்டிப் பார்ப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை.

மைனா படத்திற்குப் பிறகு, அமலா பாலின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. அவர் இந்த கேரக்டரை ஒத்துக்கொண்டது, மிகவும் போல்டான முடிவு. இந்த படத்தில் அவரின் பெர்ஃபார்மன்ஸைப் பார்த்தபோது, தமிழ் சினிமா வீணடித்த நல்ல நடிகை என்று தோன்றியது. (அதற்கு அவரும் ஒரு முக்கியக் காரணம்.) ஒரு ஆபாச நடிகையாகத் தோன்றிவிடும் அபாயம் இருந்தும், அத்தகைய தோற்றம் வராமல் மேனேஜ் செய்திருப்பதைப் பாராட்டியே ஆகவேண்டும்.

மேயாத மான் மூலம் கவனம் ஈர்த்த ரத்னகுமார், டெக்னிகலாகவும் பெர்ஃபார்மன்ஸிலும் பெட்டரான படத்தையே கொடுத்திருக்கிறார். கதையும், திரைக்கதையும் இவ்வளவு பெரிய கான்செப்ட்டிற்கு நியாயம் செய்வதாக இல்லை என்பதே நம் வருத்தம். ’ப்ரான்க் ஷோ செய்யாதீர்கள்’ எனும் மெசேஜ் போதுமானதாக இல்லை.

ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், சிந்துபாத்திற்குப் பிறகு இதிலும் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார். நிறைய ரசிக்கும்படியாக ஃப்ரேம்கள். ஆபாசத்தத்தை தவிர்க்கும் புத்திசாலித்தனமான ஷாட்ஸ். கூடவே, எடிட்டர் சபீக் முகமது அலியும் இசையமைப்பாளர் பிரதீப் குமாரும் படத்திற்கு பெரும் பலம்.

நடிப்பு+இயக்கம்+ஒளிப்பதிவு+எடிட்டிங்+இசை எல்லாம் இடைவேளைக்குப் பின் அட்டகாசமாக இருந்தும், முதல்பாதியால் முதலுக்கே மோசமாகிவிட்டது.

ஒரு நல்ல டீம், ஜெயித்திருக்க வேண்டும். ஜஸ்ட் மிஸ்!
மேலும் வாசிக்க... "ஆடை - அமலாபால்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.