நான் கோயம்புத்தூரில் ஒரு மெசின் ஷாப்பில் வேலை செய்துகொண்டிருந்த காலம். என்னுடன் பாலமுருகன் என்ற நண்பரும் வேலை செய்தார். எங்கள் இருவருக்குமே மாதம் 2000 ரூபாய் தான் சம்பளம். அந்த நேரத்தில் பாலாவின் நண்பர் ஒருவர் மற்றொரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு ஒரு அசிஸ்டெண்ட் தேவைப்பட, அவர் பாலாவை அப்ளை செய்யும்படி சொன்னார்.
இருவரும் ஒரே வகுப்பில் படித்து வந்தவர்கள் என்பதால், பாலாவிற்கு ஈகோ பிரச்சினை. நாம சோத்துக்கே லாட்டரி அடிச்சாலும், மானம் மருவாதியை விட்டுத்தர மாட்டோம், இல்லியா? அதனால அவர் என்னை அப்ளை பண்ணச் சொன்னார். ’முருகனே’ சொல்லும்போது, மாட்டேன்னு சொல்லலாமான்னு செண்டிமெண்ட்டலா யோசிச்சு, அப்ளை பண்ணேன். அப்புறம் இண்டர்வியூக்கும் போனேன். பாலாவின் நண்பரும் ரெகமண்ட் பண்ணதால, இண்டர்வியூ ஈஸியா கிளியர் ஆகிடுச்சு. சம்பளம் 3500 ரூபாய்னு சொல்லிட்டாங்க.
பாலாகிட்ட வந்து செலக்ட் ஆனதையும் 3500 ரூபாய் சம்பளம்ங்கிறதையும் சொன்னேன். அவர் அதிர்ச்சியாகிட்டார். என்ன இருந்தாலும், அவரும் மனுசன் தானே? 2000 ரூபாயில இருந்து 3500 ரூபாய்னா சும்மாவா? அன்னிக்கு நைட் வீட்டுக்குப் போனவர், வீட்ல விஷயத்தைச் சொல்லியிருக்கார். அவங்க கடுப்பாகிட்டாங்க. ‘அட மூதி..இப்படி 3500 ரூபா வேலை தேடி வந்திருக்கு. இப்படி வேஸ்ட்டா இன்னொருத்தனுக்கு தூக்கி கொடுத்திருக்கியே..நமக்கெல்லாம் ஈகோ தேவையா?’ன்னு அட்வைஸ் மழை. அவங்க சொல்றதும் சரி தானே?
அதனால அடுத்த நாள் எங்கிட்ட வந்த பாலா, ‘வீட்ல திட்டறாங்க..நானே போயிரக்கலாம்னு தோணுது’ன்னு புலம்புனாரு. அங்க நான் வேலை பார்க்கப்போறது பாலாவோட ஃப்ரெண்டுக்கு கீழே..அதனால பாலாவை பகைச்சுக்கிட்டுப் போறது நல்லதில்லை..அதுமட்டுமில்லாம, இந்த வேலையே பாலா கொடுத்தது தானே? அதனால ‘நீயே போய்க்கோ’ன்னு சொல்லிட்டேன். அந்த கம்பெனிக்கும் ஃபோன் பண்ணி, ‘என்னை ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிட்டிருக்காக..சிங்கப்பூர்ல சில்க் ஸ்மிதா கூப்பிட்டிருக்காக’ன்னு அளந்து விட்டுட்டு, என்னால வர முடியாதுன்னு சொல்லிட்டேன். அப்புறம் என்ன..பாலா அங்கே வேலைக்குப் போயிட்டாரு.
வாழ்க்கை எனும் ஓடம்... |
ஆனாலும் பாலாக்கு மனசுல உறுத்தல். ‘இவ்வளவு தங்கமான, கண்ணியமான, யோக்கியமான, அப்பாவியான....இன்னும் எல்லாம் ஆன' நண்பனுக்கு துரோகம் செஞ்சுட்டமோன்னு மனுசனுக்கு யோசனை. அவர் ஊர் ஈரோட்டுப் பக்கம். அந்த வார கடைசியில் அவர் ஊருக்குப் போகும்போது, பக்கத்து சீட்டில் எங்கள் வயது வாலிபன்(அப்போ!) உட்கார்ந்திருந்தார். அவர் வளவளா பார்ட்டி. எனவே பாலாவிடம் கோவையிலிருந்து ஈரோடு வரை விடாமல் பேசிக்கொண்டே வந்திருக்கிறார். அதில் அவர் சொன்னது ‘ நான் ஒரு கம்பெனியில் வேலை பார்த்தேன். இன்னிக்கு ரிலீவ் ஆகிட்டேன்..அடுத்த வாரம் புதுக்கம்பெனியில் சேரப்போறேன்..பழைய கம்பெனியில் சம்பளம் 3500’. அதைக் கேட்டதும் பாலா மண்டையில் பல்பு எரிந்தது.
அன்று இரவே எனக்கு ஃபோன் செய்து ‘நீ திங்கட்கிழமை காலையிலே நேரா அந்தக் கம்பெனிக்குப் போ. உன் ரெசியூமைக் கொடு. எப்படியும் அவங்களுக்கு ஆள் தேவை. உன்னை எடுத்துப்பாங்க’ என்று சொன்னார். ’அந்த கம்பெனி வேலைக்கு ஆள் தேவைன்னு விளம்பரம் ஏதும் கொடுக்கலியே..நானா எப்படிப் போறது’ன்னு யோசிச்சப்போ, பாலா ரொம்ப வற்புறுத்தி என்னை அங்கே அனுப்பி வைத்தார்.
நான் போய் ரெசியூம் கொடுக்கவும், உடனே செலக்ட் ஆனேன். பாலாவுக்கும் அதன்பிறகே நிம்மதி. அதன்பின் நான் ஒரு டிசைன் எஞ்சினியராக ஆக, அங்கேயே எனக்கு அடித்தளம் அமைந்தது.(மெக்கானிக்கலில் பொதுவாக டிசைனில் தான் காசு!) இன்றைக்கு நான் இந்த நிலைமையில் இருக்கவும் அதுவே காரணம். அன்று மட்டும் பாலா வற்புறுத்தி அனுப்பியிருக்காவிட்டால், ஏதேனும் மெசின் ஷாப்பிலேயே என் காலம் முடிந்திருக்கலாம்.
ஆனால் பாலாவுக்காக என் வேலையை விட்டுக்கொடுத்த, அந்த ஒரு வாரத்தில் நான் மிகவும் மனவேதனை அடைந்தேன். ’அந்த மெசின் ஷாப் வேலையை விட்டுக்கொடுத்திருக்கக்கூடாதோ’ என்று பலவாறு நெகடிவ்வாக யோசித்தபடியே திரிந்தேன். ஆனால் அந்த வாய்ப்பு பறிபோனதே, எனக்கு இப்படி ஒரு நல்ல வாழ்க்கையைத் தரத்தான் என்று பிறகு தான் புரிந்தது.
என் மகனுடன்... |
அதன்பின் சிக்கலான நேரங்களில், ஏதேனும் வருத்தமான விஷயங்கள் நடக்கும் நேரங்களில் நான் என்னைக் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று தான் : ’தம்பி, உனக்கு எது நல்லதுன்னு உனக்குத் தெரியுமா? அது அந்த ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். முயற்சி செஞ்சும் கைகூடலேன்னா, என்னப்பன் முருகன் வேறு ஏதோ உனக்காக வைச்சிருக்கான்னு அர்த்தம். அதனால புலம்பாதே!’
இன்னைக்கு வரைக்கும் அது சரியாவே இருக்கு. பொறுப்பை அவன்கிட்ட விட்டுட்டா, நிம்மதியாவும் இருக்கு..கடமையைச் செய்றது மட்டும் தானே நம்ம கடமை. பலன் கொடுப்பது அவன் கடமை இல்லியா?
29 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.