Tuesday, May 31, 2011

சினிமாவும் கார்ப்போரேட் நிறுவனங்களும்

”தமிழ் சினிமாவுக்கு இனிமே வசந்தகாலம்தான்..ஹாலிவுட் சினிமா மாதிரி நம்ம சினிமாவும் மாறப்போகுது”

இரண்டு வருடங்களுக்கு முன்பு சினிமா ரசிகரான என் நண்பர் குதூகளித்தார். அப்போதுதான் ஐங்கரன், சாய்மீரா, மோசபியர், ரிலையன்ஸ் அட்லப்ஸ் போன்ற பெரிய கார்ப்போரேட் நிறுவனங்கள் நேரடி படத்தயாரிப்பில் இறங்கியிருந்தன. 

நான் அதை முழுதும் மறுத்தேன்.
“இல்லை நண்பரே..இந்த நிறுவனங்கள் அனைத்தும் கடும் நஷ்டத்தைச் சந்திக்கும். இது சினிமாத்துறைக்கும் நல்லதல்ல.. ஃபெண்டா மீடியா போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இங்கு ஜெயிக்கமுடியாமல் போயிருக்கின்றன.” என்றேன். நண்பர் அப்போது அதை ஒத்துக்கொள்ளவேயில்லை. இன்று இந்த நிறுவனங்கள் இருப்பது கடும் நிதிச்சிக்கலில்...

மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் மேனேஜர் போலி பெட்ரோல் பில் கொடுத்து 150 ரூபாய் கமிசன் அடிப்பதை இந்தியா போன்ற தேசத்தில்தான் காணமுடியும். மிகப் பெரிய நிறுவனங்களின் உயர்பதவியில் இருப்பவர்கள் கடமை-கண்ணியம்-கட்டுப்பாட்டில் நமது அரசியல்வாதிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல. அதுவும் அந்த நிறுவனம் ஒரு லிமிட்டேட் கம்பெனியாக இருந்துவிட்டால், கடிவாளம் அறுந்த குதிரையின் நிலைதான். போன வருடம் ஒரு பிரபல இதழில் வந்த கிசுகிசு இது:

”பட்டம் நடிகை இப்போதெல்லாம் சென்னை வந்தால், கார்ப்போரேட் நிறுவன டைரக்டர்களுடன் காரில் பறக்கிறாராம். நடிகர், இயக்குனர்களைப் பிடிப்பதைவிட நேரடியாக இவர்களைப் பிடிப்பதால் கைமேல் படங்கள்”

இது கிளுகிளுப்பான கிசுகிசு அல்ல. பெரிய நிறுவனங்களில் உள்ள அவல நிலை. ஒரு தனிப்பட்ட மனிதரின் சொந்தப் படமாக இருந்தால் அவராவது கொஞ்சம் அக்கறை கொள்வார். ஆனால் கார்போரேட் நிறுவனங்களின் நிலை அந்த வகையில் மோசம்தான். 
இவை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவன்ங்கள் என்பதால், இவர்கள் அள்ளி விட்டதில் பெரும்பகுதி மக்கள் பணம். மக்கள் பணத்தைக் கையாளும்போது தாராள மனதாய் நாம் நடந்துகொள்வதும் சகஜமே! (இத்தகைய நிறுவன்ங்களில் முதலீடு செய்வது பலமுறை யோசித்துச் செய்யவேண்டிய ரிஸ்க் மிகுந்த சமாச்சாரம்!)

நடிகர்களைக் கட்டுப்படுத்தாமல் அவர்களின் சுய சொறிதல்களுக்கு அடிபணிந்ததும், அவர்களின் சம்பளத்தை பல மடங்கு கூட்டிவிட்டதும் இந்த நிறுவனங்கள் செய்த மிகப் பெரிய தவறாகும்.

ஒரு நிறுவனத்தின் பணியானது ஒரு பொருளை(Product) தயாரிப்பது அல்லது தொலைத் தொடர்புத்துறை போன்ற சேவை(service)யினை அளிப்பது. சினிமாவைப் பொறுத்தவரை வரும் சிக்கல் என்னவென்றால் திரைப்படம் என்பதை முழுதாக பொருள்வகையிலோ சேவையிலோ சேர்க்க இயலாது. மேலும் படத்தயாரிப்பு என்பது முழுமையான தொழிலும் அல்ல. அது தொழிலும் சூதாட்டமும் சரிவிகித்தில் கலந்த ஒரு கலவை.

சினிமாவில் ஒரு நிறுவனம் ஜெயிக்கத் தேவை கண்டிப்பான தலைமை. ஏவிஎம், சின்னப்பத்தேவர் போன்ற, பெரிய ஸ்டார்களையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு தலமை இருந்ததால்தான் அந்த நிறுவனங்களால் சினிமாவில் இத்தனை வருடம் நிலைத்திருக்க முடிந்தது. 

எனவே, கண்டிப்பான தலைமையும், நேர்மையான சினிமா அறிவுள்ள அதிகாரிகளும் இல்லாதவரை கார்போரேட் நிறுவனங்களுக்கு சினிமாவில் லாபம் என்பது கனவே.

மேலும் வாசிக்க... "சினிமாவும் கார்ப்போரேட் நிறுவனங்களும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

44 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, May 30, 2011

என்னை சென்னையை விட்டே விரட்டிய ஆபாச சிடி


டிஸ்கி-1: இது ஆபாசப் பதிவு அல்ல. (நம்ம நிலைமை இப்படி ஆகிடுச்சே!)

டிஸ்கி-2: இது ஆபாச சி.டி. பற்றிய பதிவு

டிஸ்கி-3: இந்தப் பதிவில் உள்ள படங்களில் காணப்படும் நடிகைகளுக்கும் ஆபாச சிடிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்த நல்ல பெண்மணிகளை நான் அவமானப்படுத்தி விட்டதாக யாரும் கருதினால், 108 தோப்புக்கரணம் போடத் தயாராக இருக்கிறேன்.

டிஸ்கி-4: ’யோவ், எத்தனை டிஸ்கிய்யா போடுவே..மேட்டருக்கு வாய்யா’ன்னு நீங்க கடுப்பாவது தெரிவதால், மிச்ச சொச்சம் டிஸ்கியை பதிவின் கடைசியில் போடுகிறேன்.

நான் சென்னையில குப்பை கொட்டிக்கிட்டடு இருந்த நேரம்..ஒரு வீட்ல வாடகைக்கு இருந்தேன். அந்த காம்பவுண்டுக்குள்ள மொத்தம் 3 வீடு. ஒன்னுல ஹவுஸ் ஓனரு. ரஃபா இருப்பாங்க. அதனால அவங்களை விடுங்க..இன்னொன்னுல தென் மாவட்ட குடும்பம்..ரொம்ப நல்லவங்க..ஒரு தம்பதியும் ஒரு குழந்தையும்! நானும் தெக்கத்தி ஆளுங்கிறதால என்கூட நல்லாப் பழகுனாங்க. அந்த சாரும் நல்லாப் பேசுவாரு. அந்த அக்காவும் ரொம்ப நல்லவங்க.வீட்ல கறிக்குழம்பு வச்சா, பாயாசம் வச்சா எனக்கும் கண்டிப்பாக் கொடுப்பாங்க. (அப்போ நல்லவங்க தான்!)
என் கம்பெனில அக்கவுண்ட் செக்சன்ல சிபி சிபின்னு ஒருத்தர் வேலை பார்த்தாரு.(நண்பரின் நலம் கருதி அவர் பெயர் மாற்றப்பட்டுள்ளது!) அவர் ரொம்ப தங்கமான மனுசன். ஏதாவது சீன் பட சிடி கிடைச்சா தன்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் ரவுண்ட்ல விடுவாரு. அதை ஃபாலோ பண்றதுக்குன்னே தனியா ஒரு எக்ஸெல் சீட் வச்சிருப்பாரு.

எந்த சிடி யார்கிட்ட, என்னைக்கு கொடுத்தாரு, அதை யாரெல்லாம் வச்சிருந்தாங்க, இப்போ யாரு வச்சிருக்காங்க-ன்னு எல்லா டீடெய்லும் அதுல இருக்கும். ஆனா சிபி கோவக்காரரு. சொன்ன டயத்துக்கு சிடியைத் திரும்பத் தரலேன்னா கெட்ட வார்த்தையிலேயே திட்டுவாரு. அதுகூடப் பரவாயில்லை..அடுத்த தடவை சிடி வந்தா தரமாட்டாரு. அந்த நேரத்துல தான் வரிசையா நடிகைங்கள்லாம் குளிக்கிறது எப்படி, ட்ரெஸ் மாத்துறது எப்படின்னு நடிச்சுக் காட்டுன சிடியா ரிலீஸ் ஆகிக்கிட்டிருந்துச்சு. அதனால சிபி மனசு கோணாம நாங்க நடந்துப்போம்!

ஒருநாளு ’இரு வெள்ளை ஆமைகள் செய்த வெள்ளாமை’-ன்னு ஒரு இங்கிலீஸ் சிடியை ரிலீஸ் பண்ணாரு. அது அவர் வச்ச பேரு. அதனால கூகுள்ல தேடாதீங்க.கிடைக்காது. நான் வாக்குத் தவறாத நல்ல பையங்கிறதால, பெர்ஃபார்மன்ஸ் அடிப்படையில அந்த சிடியை முதல்ல எனக்குத் தான் கொடுத்தாரு. வாங்கிக்கிட்டு நைட் ரூம்ல போய் கம்ப்யூட்டர்ல போட்டுப் பார்த்துக்கிட்டிருந்தேன்.(கம்ப்யூட்டர் கண்டுபுடிச்சதே அதுக்குத் தானே!)

அப்போப் பாத்து கதவை டபடபன்னு தட்டுற சத்தம். “யாரு?”ன்னு கேட்டேன். ‘நாந்தான்’ன்னாரு பக்கத்து வீட்டு சார்! அடடா..சார் வந்துருக்காரே..உடனே போனா மூஞ்சியைப் பாத்தே கண்டுபிடிச்சிடுவாரேன்னுட்டு, எப்பவும் எங்கூட இருக்குற திருக்குறளை குத்துமதிப்பா திறந்து ஒழுக்கமுடைமை-ல ரெண்டு குறளைப் படிச்சேன். பிறகு போய் கதவைத் திறந்தேன். 

’என்னப்பா பண்றே?’ன்னு கேட்டுக்கிட்டே என்னையும் தள்ளீட்டு உள்ள வந்தாரு. நான் ‘ஒன்னுமில்லே..கம்ப்யூட்டர்ல ஒர்க் பண்றேன் சார்’னு சொல்லும்போதே சிடி ட்ரைவ் பட்டனை அமுக்கிட்டாரு. இருவெள்ளாமைகளும் வெளில வந்திடுச்சு. அவர் அதை எடுத்துக்கிட்டு ’காலைல தர்றேன்’னு சொல்லீட்டு போய்க்கிட்டே இருந்தாரு. ’எப்படிக் கண்டுபிடிச்சாரு, நாம சத்தம் எதுவும் போடலியே.. ச்சே..திருவள்ளுவர்கூட நம்மைக் காப்பாத்தலியே’ன்னு நொந்து போனேன்.

காலைல 9 மணி பஸ்ஸைப் பிடிச்சாத்தான் ஆபீஸ்க்கு கரெக்ட் டயத்துக்கு போகமுடியும். அடுத்த பஸ்ஸைப் பிடிச்சா அரை மணி நேரம் லேட்டாத்தான் போக முடியும். அதனால 8.50க்கே கிளம்பிட்டேன். சரி, சார்கிட்ட சிடி வாங்குவோம்னு போனா சார் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாரு. அக்கா பக்கத்துல சோறு வச்சுக்கிட்டு இருந்துச்சு. இப்போ எப்படிக் கேட்கன்னு திரும்பி வந்துட்டேன். சரி, இன்னைக்கு 9 மணி பஸ் அவ்வளவு தான். 
லேட் ஆனாலும் பரவாயில்லை..சிடி இல்லாமப் போனா சிபி கொன்னுடுவாரு. இதுவரை கட்டிக்காத்த நல்ல பேரும் போயிடுமே. அப்புறம் எக்ஸெல்ல நம்ம பேரு கடைசிக்குப் போயிடுமேன்னு ஒரே யோசனை. திரும்ப சார் வீட்டு வாசலைக் க்ராஸ் பண்ணிக்கிட்டே நோட்டம் போட்டேன்.அப்பாடி..அக்கா உள்ளே சமையல் கட்டுல! சார் லுங்கில கையத் தொடச்சுக்கிட்டே வெளில வந்து ‘என்னப்பா?’ன்னாரு. எனக்கு பகீர்னு ஆயிடுச்சு. என்ன இப்படிக் கேட்காறேன்னுட்டு ‘சார்..அந்த சிடி சார்’ன்னேன். உடனே உள்ளே திரும்பிப் பார்த்தாரு. 

நான் கிசுகிசு குரல்ல சொன்னேன் ‘அக்கா உள்ள தான் இருக்கு”ன்னு. 

உடனே அவர் ‘ஏம்மாஆஆஆஆஆஆஆஆ’ன்னு கூப்பிட்டாரு.

எனக்கு கை காலெல்லாம் வெலவெலத்துப்போச்சு. 

அது உள்ளேயிருந்து’என்ன்ன்ன்னாஆஆஆஆங்ங்க”ன்னுச்சு. 

இவர் இங்கிருந்து சத்தமா ‘அந்த சிடியை தம்பி கேட்குது. எடுத்துட்டு வா’ன்னாரு. 

அதுக்கு அது இன்னும் சத்தமா ‘எந்ந்ந்ந்ந்ந்ந்ந்த சிடி?”ன்னுச்சு.

அதுக்கு அவர் சொன்னாரு ‘நைட் நம்ம பாத்த்த்த்த்த்த்த்த்தமே.........அந்த சிடி’

பூமி சுத்துதுங்கிர பூகோள உண்மையே எனக்கு அப்ப தான் அனுபவப்பூர்வமா தெரிஞ்சது.

உள்ள இருந்து அக்கா சிடியோட வந்துச்சு. நான் அக்காவுக்கு முகம் காட்டாம திரும்பி, அங்க இருந்த சுவத்தோட சுவரா பல்லி மாதிரி ஒட்டி நின்னுக்கிட்டேன். அது வந்து சார்கிட்ட சிடியைக் கொடுத்துச்சு. அப்பக்கூட அந்தாளு என் மேல பரிதாபப்படலை.

“தம்பி தானே கேட்டுச்சு..தம்பிகிட்ட கொடும்மா’ன்னு அடுத்த இடியை இறக்குனாரு. 

அக்காவும் கொடுத்துச்சு. 

நான் திரும்பியே பாக்காம கையை மட்டும் பின்னால நீட்டி வாங்கிக்கிட்டேன். 

அடச் சண்டாளங்களா..மனுஷங்களாய்யா அவங்க..ஈவிரக்கமே இல்லாத பாவிங்க....ஒரு பச்சப்புள்ளையை இப்படியா மிரட்டுவாங்க!

இனியும் இவங்க மூஞ்சிலயே முழிக்கக் கூடாதுன்னு, அந்த மாசமே சென்னையை விட்டே ஓடி வந்துட்டேன்.


டிஸ்கி -6: டிஸ்கி தொடர்கிறது..

டிஸ்கி-7: இந்தப் பதிவில் உள்ள படங்களில் காணப்படும் நடிகைகளுக்கும் ஆபாச சிடிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனவே இவர்கள் நடித்த சிடி என்று நினைத்து, யாரும் என்னிடம் அந்த சிடியைக் கேட்டு இம்சை செய்ய வேண்டாம்.

டிஸ்கி-8: அக்கா வீட்டு அட்ரஸ் யாருக்கும் தரப்பட மாட்டாது. (பதிவெழுத வந்தப்புறம், அது ஒன்னுதான்யா செய்யலை. அந்த வேலையையும் செய்ய வச்சுடாதீங்கய்யா...)

மேலும் வாசிக்க... "என்னை சென்னையை விட்டே விரட்டிய ஆபாச சிடி"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

83 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, May 24, 2011

டபுள் மீனிங் பாடல்களும் கவியரசு கண்ணதாசனும்

எனது மனங்கவர்ந்த திரைப்படக் கவிஞர்களின் முக்கியமானவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். அவரது பாடல்களில் உள்ள விசேஷத்தன்மையே எளிமையான வார்த்தைகளும் ஆழ்ந்த பொருளும் தான்.

நேற்றிரவு திடீரென பழைய பாடல்களைக் கேட்கவேண்டுமெனத் தோன்றியது. என்னிடமிருந்த கலெக்சனில் இருந்து பாடல்களை ஓட விட்டேன். அப்போது தான் இரட்டை அர்த்தப் பாடல்கள் எழுதுவதிலும் வல்லவராக கவிஞர் விளங்கிய விஷயம் தெரிந்தது. 

உதாரணமாக ’குலமகள் ராதை’யில் வரும் இந்தப் பாடலைப் பாருங்கள்:

பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் - அவன்
இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்

இரவிலே அவனைக் காண நானும் நடப்பேன் - அவன் 
எல்லோரும் பார்க்கும்படி உயரத்தில் இருப்பான்.

இதில் என்ன இருக்கிறது, நிலாவை உவமையாக வைத்து எழுதப்பட்ட பாடல் தானே என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் படம் பார்த்தவர்களுக்கு இங்கு கவிஞர் செய்திருக்கும் நுணுக்கமான வேலை புரியும்.

அந்தப் படத்தில் சிவாஜியின் பெயர் சந்திரன். அவரும் சரோஜாதேவியும் காதலர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து விடுவார்கள். பலநாட்கள் கழித்து அதே ஊருக்கு சர்க்கஸ் சாகசக்காரராக சிவாஜி திரும்பி வருவார். கூடவே அவரை ஒருதலையாகக் காதலிக்கும் தேவிகாவும். 

விஷயம் அறிந்து சரோஜாதேவி சிவாஜியைப் பார்க்க பகலில் செல்வார். ‘இப்போது பார்க்க முடியாது. இரவு சர்க்கஸ் நடக்கும்போது டிக்கெட் வாங்கி வந்து வேடிக்கை பார்த்து விட்டுப் போ’ என்று சொல்லி விரட்டி விடுவார் தேவிகா. சோகத்தில் சரோஜாதேவி பாடும் பாடல் தான் அது:

பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் - அவன்
இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்

இரவிலே அவனைக் காண நானும் நடப்பேன் - அவன் 
எல்லோரும் பார்க்கும்படி உயரத்தில் இருப்பான்.

இதே படத்தில் ’சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா? ’ பாடலின் பல்லவியிலும் சரணத்தில் வரும்

சந்திரன் ஒளியை உண்டு வாழும்
சாதகப் பறவை ஆனேனே நானே’ என்ற வரிகளிலும் கவிஞர் புகுந்து விளையாடி இருப்பார்.

அடுத்து அவரது இரட்டை அர்த்தப் புலமை வெளிப்பட்ட படம் வசந்த மாளிகை. அதில் நடிகர் திலகம் ஜமீன்தார் வீட்டுப் பிள்ளை. ஆனாலும் அவர்மீது அன்பு காட்ட அங்கு யாருக்கும் மனதோ நேரமோ கிடையாது. 


அந்த நேரத்தில் அவருக்கு பெர்சனல் செகரட்டரியாக வரும் வாணிஸ்ரீ, அந்தஸ்து காரணமாக அவர் மீது அன்பு காட்டவும் முடியாமல், எனக்கென்ன வென்று தள்ளி நிற்கவும் முடியாமல் தடுமாறுவார். 
அதே வீட்டில் வீணை ஒன்றும் யாராலும் கவனிக்கப் படாமல் கிடக்கும். இது போதாதா கவிஞருக்கு. அந்த வீணையை வாசித்தபடியே வாணிஸ்ரீ (பி.சுசீலா) பாடும் பாடல் இது:

கலைமகள் கைப் பொருளே – உன்னை
கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில் – உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ!

(கலைமகள்)

நான் யார் உன்னை மீட்ட – வரும்
நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட
ஏனோ துடிக்கின்றேன் – ஒரு
நிலையில்லாமல் தவிக்கின்றேன்
விலை இல்லா மாளிகையில் – உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ!

அவர் பாடுவது வீணைக்கும் பொருந்தும், சிவாஜிக்கும் பொருந்தும். அதிலும் ‘ஏனோ துடிக்கின்றேன்’ எனும் இடத்தில் பி.சுசீலாவின் குரலும் கே.வி.மகாதேவனின் இசையும் அட அட!

இப்போது சொல்லுங்கள், கவியரசர் இரட்டை அர்த்தப் பாடல் புனைவதிலும் வல்லவர் தானே?

டிஸ்கி-1: கவியரசர் எழுதிய அந்தப் பாட்டும் எனக்குத் தெரியும். ஆனாலும் கொஞ்ச நாளைக்கு அதைப் பத்திப் பேஷ் மாட்டேன்..பேஷ் மாட்டேன்!

டிஸ்கி-2: வேறு ஏதாவது எதிர்பார்த்து வந்த நல்ல உள்ளங்கள் எனது ‘நானா யோசிச்சேன்’ பகுதிக்குப் போய் கடுப்பைத் தணித்துக் கொள்ளவும்.

மேலும் வாசிக்க... "டபுள் மீனிங் பாடல்களும் கவியரசு கண்ணதாசனும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

33 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, May 18, 2011

பிரசவ நேரத்தில் கணவன் தேவையா?


எனக்கு பிரசவம் என்றால் பயம்.

என்னைப் பிரசவித்த கொஞ்ச நேரத்தில், என்னைக் கொஞ்சாமலே என் தாய் இறந்தார். அதுகூடக் காரணமாய் இருக்கலாம்.

சினிமாவில் கூட என்னால் பிரசவக் காட்சியைக் காண முடியாது. சிறு வயதில் இருந்தே, பிரசவக் காட்சி வந்ததென்றால் கண்ணையும் காதையும் நான் மூடிக் கொள்வது வழக்கம். கிம்டுகிக்-ன் படங்களை விடவும் கொடூரக் காட்சிகளைக் கொண்ட படம் ‘தாலாட்ட்டுக் கேட்குதம்மா’ தான். கதாநாயகியின் பிரசவ பயத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் அது. தெரியாமல் படம் பார்க்கப் போய்விட்டு, பாதியிலேயே ஓடி வந்தேன்.

திருமண வாழ்வில் நான் பயந்த விஷயமும் பிரசவம் தான். இதைத் தவிர்க்கவே முடியாதா என்று பலவாறு யோசித்திருக்கிறேன். ’நார்மல் டெலிவரியில் தான் ஆபத்து அதிகம், சிசேரியன் அப்படியல்ல’ என்று நானாகவே நினைத்துக் கொண்டேன். சிசேரியனுக்குப் பின் படுகின்ற கஷ்டங்களைப் பற்றி அப்போது எனக்குத் தெரியவில்லை. 

என் மனைவி கர்ப்பம் தரித்ததை அறிந்தபோது, சந்தோசமும் பயமும் சரி பாதியாக நின்றன.

ஆனால் என் மனைவி தைரியமானவர். நார்மல் டெலிவரி தான் என்பதில் பிடிவாதமாக இருந்தார். தினமும் வீட்டை குத்துக்காலிட்டு துடைப்பது, நடைப்பயிற்சி என்று நார்மல் டெலிவரிக்காகச் செய்ய வேண்டியவற்றை விடாமல் செய்து வந்தார்.
கூடவே ஒரு பயங்கரமான கோரிக்கையையும் வைத்தார். ஆம், பிரசவ நேரத்தில் நான் அருகில் இருக்க வேண்டும் என்றார். என்னால் அதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இதிலிருந்து எப்படியாவது தப்பி விடவேண்டும் என்றே முடிவு செய்தேன். ’பிள்ளை பெத்துக்கப் போறது அவங்க..பிரசவம் பார்க்கப் போறது டாக்டர். இடையில் நாம எதுக்கு’ என்று மனதிற்குள் நினைத்தபடியே சரி சரியென்று தலையாட்டி வைத்தேன்.

’மே இரண்டாவது வாரத்தில் பிரசவம் ஆகலாம்’ என்று டாக்டர் சொன்னார். ’அப்போ அந்த தேதியில் எங்காவது ஓடி விட வேண்டியது தான்’ என்று முடிவு செய்து ஒரு முக்கிய வேலை என்று சொல்லி விட்டு, கோவை போய்விட்டேன். ஆனாலும் அவர்கள் விடவில்லை. மறுநாளே ஃபோன் செய்து ’உடனே கிள்ம்பி வாங்க’ என்று கண்டிப்பான அழைப்பு வந்தது. வேறுவழியே இல்லாமல் ஊர் போய்ச் சேர்ந்தேன். 

முதல் நாளே வலி வர ஆரம்பித்து விட்டது. ‘வாங்க, உடனே ஆஸ்பத்திரி போவோம், என்றேன். அதற்கு ‘இந்த வலி போதாது. இன்னும் நல்லா வலிக்கணும். பொறுங்க’ என்று இரக்கமேயில்லாமல் அனுபவஸ்தர்கள் சொன்னார்கள். 

மறுநாள் காலையிலேயே கடுமையான வேதனை தங்கமணி முகத்தில் தெரிந்தது. வலிக்கிறதா என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை. ‘இப்பவாவது போவோம்..வாங்க..வாங்க’ என்று எல்லோரையும் அவசரப்படுத்தினேன்.

ஒரு வழியாக டாக்ஸிக்கு கால் செய்தோம். வந்தது. டிரைவர் ‘வண்டியைத் திருப்பி நிறுத்தவா’ என்றார். ’சரி, நிறுத்துங்க’ என்றேன். காரைத் திருப்பினால், பின் கண்ணாடியில் ‘யாமிருக்க பயமேன்’ எனும் முருகர் படம்!

கொஞ்சம் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. பிறகு ஆஸ்பத்திரிக்குச் சென்றோம்.     அஸ்பத்திரியை நெருங்க நெருங்க எனக்கு பயம் அதிகம் ஆகியது. ஆஸ்பத்திரியில் ஒரு ரூம் கொடுத்து ‘இன்னும் வலி வரணும். அதுவரைக்கும் இங்க வெயிட் பண்ணுங்க’ன்னு சொன்னாங்க. ‘இன்னுமா’ன்னு நடுங்கிப் போனேன்.

ஒரு வழியாக அடுத்த ஒரு மணி நேரத்தில் ‘பிரசவ அறைக்குள் அழைத்துப் போனார்கள். அதன் வாசலில் உள்ள பெஞ்சில் அமர்ந்திருந்தேன். இனி நம்மால் செய்ய முடிவதென்று ஏதுமில்லை என்பது புரிந்தது. திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என முருகரை வேண்டியபடியே அமர்ந்திருந்தேன்.

திடீரென உள்ளேயிருந்து ‘அம்மா’ என்ற அலறல் கேட்டது. எனக்கு கை கால் எல்லாம் நடுங்கி விட்டது. இனியும் நம்மால் தாங்க முடியாதென உணர்ந்தவனாக ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்து நின்று கொண்டேன். 

பிறகு மாமியார் ஓடி வந்தார். ‘மாப்ளே, குழந்தை பிறந்தாச்சு..சுகப்பிரசவம்’ என்று சொன்னார்.  அடுத்து அரைமணி நேரம் கழித்து குழந்தையை மட்டும் கொண்டு வந்தார்கள். ரோஸ் நிறத்தில் மிருதுவாக என் மகன். கையில் ஏந்திப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

திரும்ப குழந்தையை வாங்கிக் கொண்டு போனார்கள். ஒரு மணி நேரம் கழித்து என் மனைவியை அழைத்து வந்தார்கள். என்னைப் பார்த்ததும் தளர்ந்து போய்ச் சிரித்தார். எதுவும் சொல்ல முடியாமல் கை பிடித்து அழுத்தினேன். ‘இப்போ சந்தோசமா?’ என்றார். எனக்கு அழுகை வந்தது. எங்கள் வீட்டிலும் நல்ல படியாக ஒரு பிரசவம்!

சில நாட்கள் கழித்து ‘எதற்காக என்னை பிரசவத்தின் போது இருக்கச் சொல்லிக் கட்டாயப் படுத்தினாய்?’ என்று கேட்டேன்.

‘யார் இருந்தாலும் இல்லேன்னாலும், நீங்க இருந்தா மனசுக்குத் தெம்பா இருக்கும். நம்ம குழந்தை பிறந்த அந்த நிமிசச் சந்தோசத்தை கூட இருந்து பகிர்ந்துக்கணும்னும் நினைச்சேன். உள்ளே இருக்கும்போது கூட, வெளில இந்தப் புள்ளை காத்திருக்குதே.நல்லபடியாக் குழந்தையைப் பெத்துக்  காட்டணும்னு தோணுச்சு. வலியைத் தாங்க அதுவும் உதவியா இருந்துச்சு” என்றார்.

அலுவலக நண்பர் பயந்து கொண்டு, வேலையைக் காரணம் காட்டி, அவரது மனைவியின் பிரசவத்திற்குப் போகவில்லையாம். இன்று வரை அவருக்குத் திட்டு விழுகிறது. இப்போதெல்லாம் நண்பர்களுக்கு இந்த விஷயத்தில் நான் சொல்வது இது தான். ‘எப்படியும் பிரசவ அறைக்குள் கொஞ்ச நேரம் முன்பே அழைத்து விடுவார்கள். அவர்கள் உள்ளே நுழைந்த்தும், வெளியே ஓடிக் கொள்ளுங்கள். ஆனால் பயந்து கொண்டோ, அலட்சியத்தாலோ போகாமல் மட்டும் இருந்து விடாதீர்கள்.’

நமக்கு பெரிதாகத் தோன்றும் விஷயங்களெல்லாம் அவர்களுக்கு சாதாரணமாகத் தெரிகின்றது. நாம் கண்டுகொள்ளாமல் ஒதுக்கும் சிறு விஷயங்கள்கூட அவர்களுக்கு பெரிய சந்தோசத்தையும் மனத் திருப்தியையும் தருகின்றது.

கடுமையான வலியை எதிர்கொண்டு, ஏகப்பட்ட ரத்தத்தையும் இழந்து, ஏறக்குறைய உடலைச் சின்னாபின்னமாக்கி குழந்தையைப் பெற்றுக் கொடுப்பவர் பதிலுக்கு எதிர்பார்ப்பது நம் அருகாமையை மட்டும் தான். நம் வாழ்க்கைத் துணைக்காக அதைக் கூடச் செய்ய மாட்டோமா என்ன?

இன்று தான் அந்த நன்னாள். என் மகன் பால முருகனின் பிறந்த நாள்!

மேலும் வாசிக்க... "பிரசவ நேரத்தில் கணவன் தேவையா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

90 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, May 17, 2011

ராணாவில் ரஜினி அவசியம் நடிக்க வேண்டுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் உடல்நிலைக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி என்று செய்திகள் வருகின்றன. ’சிகிச்சைக்காக அமெரிக்கா போகலாம்’ என்றும் சொல்கிறார்கள். அதே நேரத்தில் சில விஷமிகள் மனித நேயமற்ற முறையில் தொடர்ந்து விஷமத்தனமான வதந்தியைப் பரப்புகிறார்கள். 

பொதுவாகவே ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இடையே போதிய இடைவெளி விடுவதும், இமயமலைப் பகுதியில் ஓய்வெடுப்பதும் ரஜினியின் வழக்கம். எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் வேரு யாரும் அமர்ந்து விட முடியாது என்பதை பலமுறை நிரூபித்தவர். எதனாலோ இப்போது அவசர அவசரமாக அடுத்த படமான ராணா வேலையில் இறங்கினார்.

’சுல்தான் தி வாரியர்’ படத்திற்கு கோடி கோடியாகக் கொட்டிய பின்னும், படச்சுருளைக் கண்ணில் காண முடியாத தயாரிப்பு நிறுவனங்கள் கொடுத்த பிரஷர் கூடக் காரணமாக இருக்கலாம். ஏற்கனவே காசு விஷயத்தில் சுத்தமானவரான ரஜினியும், கணக்கை செட்டில் செய்ய ராணாவை நடித்துக் கொடுக்க முன் வந்திருக்கலாம். 

ஆனால் ஆரம்பித்தில் இருந்தே இந்தப் படம் நம் மனதைக் கவரவில்லை என்பதே உண்மை. எந்திரனுக்கு இருந்த வரவேற்பும் இதற்கு இல்லை. எதனாலோ ‘பாபா’ ஃபீலிங் வந்து கொண்டே இருந்தது. படப்பிடிப்பு பூஜை போஸ்டரைப் பார்த்த போது, அந்த ஃபீலிங் கன்ஃபார்ம் ஆகியது.

தொடர்ந்த கெட்ட செய்தியாக அவருக்கு மூச்சுத் திணறல் என்று செய்தி வந்து சேர்ந்தது. நாமும் ஆரம்பத்தில் சாதாரண விஷயம் என்றே நினைத்து, அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தொடர்ந்து வரும் செய்திகளைப் பார்க்கும்போது, ஏதோவொரு கவலை மனதில் குடிகொள்கிறது.

உடல்நலம் தேரும்வரை இந்தப் படத்தைத் தள்ளி வைப்பதும், முடிந்தால் இதைத் தலைமுழுகுவதுமே நல்லது. 

நம்மையெல்லாம் மகிழ்விக்க ஏற்கனவே வேலைக்காரன் - ராஜாதிராஜா-படிக்காதவன் - நெற்றிக்கண் - மூன்றுமுகம் - அண்ணாமலை - பாட்ஷா - சந்திரமுகி-எந்திரன் போன்றவை இருக்கும்போது, இப்படிக் கஷ்டப்பட்டு நடித்து ராணாவை உருவாக்குவது அவசியம் தானா?

உடல்நிலை சரியில்லாமல் போன அமிதாப் திரும்பி வரும்வருவதர்கு பல ஆண்டுகள் ஆனபோதும், அவரது ரசிகர்கள் அவரை மறந்து விடவில்லை. அவருக்கான எதிர்பார்ப்பு குறையவும் இல்லை. அமிதாப்பை விடவும் உணர்ச்சிகரமான ரசிகர்களை வைத்திருக்கும் ரஜினி, பூரண ஓய்வு எடுத்துக் கொண்டு புதுப் பொலிவுடன் வரவேண்டும்.

ஜக்குபாயைச் சுருட்டி விட்டு, சந்திரமுகியுடன் திரும்பி வந்தது போல், இம்முறையும் ரஜினி செய்யலாம். ரஜினியின் நீண்ட நாள் ஆசையான ஐஸ்வர்யா ராயுடன் நடிப்பதே நிறைவேறி விட்டபின், கொஞ்ச நாள் ஓய்வு எடுப்பதில் என்ன தயக்கம்?

ஒரு ரசிகராக நமக்குத் தேவை ரஜினி தானேயொழிய ராணா அல்ல!
மேலும் வாசிக்க... "ராணாவில் ரஜினி அவசியம் நடிக்க வேண்டுமா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

38 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, May 10, 2011

விபச்சாரியை விபச்சாரி என்று சொல்லலாமா?

சமீபத்தில் நண்பர் ஒருத்தர்கூடப் பேசிக்கிட்டு இருக்கும்போது விபச்சாரிகள்னு சொல்லிப்புட்டேன்..அவருக்கு உடனே கோவம் வந்துடுச்சு. ‘படிச்ச நீங்க இப்படிச் சொல்லலாமா?” ன்னு கோபமாக் கேட்டார். எனக்கு ஒன்னும் புரியலை. எப்படிச் சொல்லிட்டோம்..விபச்சாரியை நம்ம ஊர்ல இன்னும் கேவலமால்ல சொல்றோம்னு நினைச்சுக்கிட்டே ‘நான் என்னப்பா தப்பாச் சொல்லிட்டேன்’னு கேட்டேன். 

அவர் மனித உரிமை, ஆணாதிக்கம் அண்டர்வேருன்னு என்னன்னமோ சொல்லிக் கொந்தளிச்சாரு. கடைசியா ‘பாலியல் தொழிலாளி’ன்னு தான் சொல்லணும். பாவப்பட்ட ஜென்மங்க அவங்க. கருணையோட பேசுங்க’ன்னு பயங்கரமா அட்வைஸ் பண்ணாரு.

எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை. அப்புறம் அவர் போனப்புறம் எனக்குத் தெரிஞ்ச ரெண்டு விபச்..அய்யய்யோ பாலியல் தொழிலாளிகள் ஞாபகம் வந்துச்சு.
முத ஆளு எங்க கிராமந்தான். அந்தப் பொண்ணு பிஞ்சிலேயே பழுத்தது. ஆரம்பத்துல ஃப்ரீ சர்வீஸ்தான் பண்ணிக்கிட்டு இருந்துச்சு. நம்ம ஆளுகதான் நல்ல மனுசன் கையில கூட லஞ்சத்தைத் திணிச்சு ‘சும்மா வச்சுக்கோங்கண்ணே’ன்னு சொல்றவங்களாச்சே. 

அதனால் அந்தப் பொண்ணுகிட்டயும் ஜிமிக்கி, வளையல் வாங்கிக் கொடுத்து’ நாங்க எதையும் சும்மா வாங்கிக்க மாட்டோம்’னு நிரூபிச்சாங்க. அப்புறம் அந்தப் பொண்ணும் ஏதாவது பொருள் கொடுத்தவனுக்கு முன்னுரிமை கொடுக்க ஆரம்பிச்சுச்சு. 

அப்புறம் அது வீட்டுக்குத் தெரிஞ்சு, உடனே கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க. ஆடுன காலும்..னு பழமொழி சொல்வாங்களே..அதுக்கு ஏத்த மாதிரி அந்தப் பொண்ணும் ஒரே மாசத்துல திரும்பி வந்துடுச்சு. அப்புறம் பொருளுக்குப் பதிலா காசு வாங்க ஆரம்பிச்சுச்சு. 

அவங்க வீட்ல அந்தப் பொண்ணைத் திருத்த எவ்வளவோ ட்ரை பண்ணாங்க. ‘எங்களைக் கேவலப்படுத்தன்னே பிறந்திருக்காய்யா’ன்னு அந்தப் பொண்ணு ஐயா, எங்கப்பாகிட்ட சொல்றதை நான் கேட்டிருக்கேன். அது திருந்தவே இல்லை. தப்புப் பண்ணலாமா..வேணாமா-ன்னு யோசிக்கிற பலபேரும் அது வலையில விழுந்தாங்க. காடு, வயலு, ஓடைன்னு சர்வீஸ்க்கு இடம்,பொருள், ஏவல்லாம் கிடையாது. தன்னோட (ஏறக்குறைய) 35 வயசு வரைக்கும் சர்வீஸ் பண்ணுச்சு. திடீர்னு ஒருநாள் எங்கயோ கிளம்பிப் போயிடுச்சு.

ரெண்டாவது பாலியல் தொழிலாளியை நான் பார்த்தது சிங்கப்பூர் ஏர்போர்ட்ல. எங்கூட விமானத்துல அடுத்த சீட் தான் அதுக்கு. 

அது வந்து உட்காரவும் ‘என்ன வேலை செய்றீங்க?’ன்னு கேட்டேன். 

“அதைச் சொன்னா போலீஸ் பிடிச்சுட்டுப் போயிரும்’னு சொல்லிட்டுச் சிரிச்சது.

நான் டர்ர்ர் ஆயிட்டேன். போலீஸ் கேள்வி கேட்ட என்னையும் பிடிக்குமோன்னு பயம்!

அப்புறம் நாம தான் இலக்கியம்லாம் படிக்கிற ஆளாச்சே..அதனால பரிவோட “நீங்க ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தீங்க’ன்னு கேட்டேன்.

“என் புருஷன் ரெண்டு குழந்தையோட என்னைத் தவிக்க விட்டுட்டு செத்துப் போய்ட்டாரு. அதான் இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்”ன்னுச்சு.

எனக்கு பாவமாப் போச்சு..அடடான்னுட்டு, ‘வேற வேலைக்குப் போயிருக்கலாமே’ன்னேன். அதுக்கு அது ‘வேற வேலைக்குப் போயி என்னைக்கு செட்டில் ஆகறது..சீக்கிரம் செட்டில் ஆக இதான் சரி’ ன்னு சொல்லிட்டு சிரிச்சது. 
நாகரீகக் கனவான்கள்லாம் ‘பாலியல் தொழிலாளிகள் சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டவர்கள். அடிமட்ட மக்கள்.’ அப்படி இப்படின்னு பேசும்போது எனக்கு இவங்க ஞாபகம் தான் வருது.

எங்க ஏரியால தீப்பெட்டித் தொழிற்சாலைகள் அதிகம். அங்க எப்பவும் வேலைக்கு ஆளுங்க தேவைப்படும். திடீர் திடீர்னு வெளியூர்க்காரங்க வந்து வேலை கேட்டு நிப்பாங்க. நம்ம ஆட்களும் வேலை கொடுத்து அங்கயே செட்டில் ஆக உதவுவாங்க.

இப்போ எங்க ஏரியால விவசாயக் கூலி வேலைக்கு ஆளுங்க கிடைக்க மாட்டேங்குது.விவசாயம் பண்றவங்க, குடும்பத்தோட காட்டுல உழைக்க வேண்டிய நிலைமை.

இப்படி இருக்குற ஒரு சமூகச் சூழல்ல ‘எனக்கு வேற வழியில்லை. அதான் உடம்பை விக்க ஆரம்பிச்சேன்’ங்கிறதும். ‘நாங்கள்லாம் வஞ்சிக்கப்பட்டவங்க’ங்கிறதும் எந்த அளவிற்குச் சரின்னு எனக்குப் புரியலைங்க..

இவங்க தெரிஞ்சோ தெரியாமலோ ‘பொம்பளை வெறும் போகப் பொருள் மட்டும் தான்’ன்னு இநத சமூகம் நினைக்க துணை போறாங்க தானே?

ஒரு விதவைப் பெண், நல்ல வழில தன் குடும்பத்தைக் கரையேத்த முடியாத சூழ்நிலையா இங்க இருக்கு?

நம்மோட சில தலைவர்களும், நடிகர்களும் விதவைத் தாயால் வளர்க்கப்பட்டவங்க தானே? அந்தத் தாய்களும் ‘சீக்கிரம் செட்டில் ஆகணும்’னு அந்தத் தொழில்ல இறங்கலையே..கஷ்டப்பட்டு உழைச்சுத் தானே தன் பிள்ளைகளை அவங்க பெரிய ஆளாக்குனாங்க?

கொத்து வேலை பாக்குற பெண்கள், பட்டாசுத் தொழிற்சாலைல வேலை பார்க்குற பெண்கள், டெய்லர்கள்னு எத்தனை எத்தனை உழைப்பாளிங்க நமக்கு மத்தியில இருக்காங்க..

அப்படி இருக்கும்போது, இந்த விபச்சாரிகளுக்கு மட்டும் வாழ முடியாத நிலை எப்படி வந்துச்சு?

சிலபேர் ரவுடிக் கும்பலால் கடத்தப்பட்டு, கட்டாயமாக இந்தத் தொழில்ல ஈடுபடுத்தப் படுறதாச் சொல்றாங்க. அவங்களை மீட்டு, நல்ல வாழ்க்கைக்கு அவங்க திரும்ப உதவலாம். அதை விட்டுட்டு, பரிதாபம் காட்டுறேங்கிற பேர்ல அவங்க செய்யுற தொழிலை சரின்னு ஒத்துக்கிறது நியாயமா?

நாகரீகம்ங்கிற பேர்ல ரொம்ப ஓவரா கனிவு காட்டுறமோன்னு தோணுது. 

எப்படி யோசிச்சும் இந்த விபச்சாரிகள் மரியாதைக்கு உரியவர்களா என்பது எனக்குத் தெரியலை..என்ன தான் கோட்டுசூட்டுப் போட்டாலும் உள்ளுக்குள்ள நான் இன்னும் ‘கிராமத்துக் கோவணாண்டி’ தாண்ணே..அதனால யாராவது நாகரீகமானவங்க பின்னூட்டத்துல எனக்குப் புரியற மாதிரி விளக்குனா, புண்ணியமாப் போகும்.

நன்றி!

மேலும் வாசிக்க... "விபச்சாரியை விபச்சாரி என்று சொல்லலாமா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

156 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, May 8, 2011

அம்போ ஆன ராசாவும் அம்பலப்பட்டுப் போன கலைஞரும்

“ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஆ.ராசாவே முழுப்பொறுப்பு” என்று வாதாடினார் ராம் ஜெத்மலானி

கனிமொழி கைது செய்யப்படவில்லை. விசாரணை முடிந்ததும், தன் கணவருடன் காரில் ஏறிப் பறந்தார் கனிமொழி!

- என்ற இரு கெட்ட செய்திகளும் இந்நேரம் ராசாவை எட்டி இருக்கும். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதும் அவருக்குப் புரிந்திருக்கும்.
வெறும் விசாரணைக்கு மட்டுமே அழைக்கிறார்கள் என்று நினைத்துப் போன ராசாவை கைது செய்து, இவ்வளவு நாட்கள் உள்ளே வைப்பார்கள் என்று ராசாவே எதிர்பார்த்திருக்க மாட்டார். எப்படியும் கட்சி கை கொடுக்கும் என்று நம்பி இருந்தார். தேர்தல்வரை பொறுத்திருக்கும்படியும், பின்னர் கட்சி ராசா விஷயத்தில் தீவிரமாக இறங்கும் என்றும் ராசாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களது தீவிரம் ‘ராசாவை நிரந்தரமாக உள்ளே வைப்பதற்கே’ என்பது நன்றாகத் தெரிந்து விட்டது இப்போது.

கலைஞரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. சமீபகால அரசியல் வரலாற்றில் இவ்வளவு மோசமான நிலைமை வெறெந்தத் தலைவருக்கும் ஏற்பட்டதில்லை.

அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு, கட்சியை தன் வசப்படுத்திய சாமர்த்தியம், வெற்றிகரமான கதை வசனகர்த்தாவாக, பகுத்தறிவுவாதியாக தன்னை தனது ஆரம்பக்காலங்களில் நிலைநிறுத்திக்கொண்டவர் கலைஞர். திமுக தொண்டர்களுக்கு அதிமுக தொண்டர்களை விட நாம் உயர்ந்தவர்கள், கலைஞர் என்ற சாமர்த்தியசாலியின் பின்னால் நிற்கும் அறிவுஜீவிகள் என்ற எண்ணம் எப்போதும் உண்டு. 

தமிழின் மீதும் தமிழினத்தின் மீதும் அக்கறை கொண்டவர் என்பதால் திமுக தொண்டர்களால் ‘தமிழினத் தலைவர்’ என்றும் அழைக்கப்பட்டார். அதனை பிறகட்சியினரும் பெரிய தவறென்று சொன்னதில்லை...ஈழப்படுகொலைக்கு முன்பு வரை!

தமிழ்ப்பற்று, ஈழ ஆதரவு நிலைப்பாடு, சாணக்கியத்தனம், ஆரிய-திராவிட வாதம், விஞ்சானப்பூர்வமாக ஊழல் செய்யும் திறமை ஆகியவற்றை அணிகலன்களாகக் கொண்ட கலைஞரின் வீழ்ச்சி, அவரது வாரிசுகளின் அரசியல் பிரவேசத்தால் ஆரம்பித்தது.அவரது மோசமான அரசியல் வாரிசாக கனிமொழி உருவெடுத்து வந்தார்.

ஆ.ராசா தான் அமைச்சராக வேண்டும் என்று அடம்பிடித்து தொலைத்தொடர்புத் துறையை வாங்கினார். தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் அரங்கேற்றப்பட்டது. அன்றிலிருந்து கலைஞரின் அணிகலன்கள் கழன்று விழ ஆரம்பித்தன.

கூட ரெண்டு ஓட்டு விழுமென்றால், குட்டிக்கரணம் போடவே தயங்காத கலைஞருக்கு ஈழப்படுகொலை நல்ல வாய்ப்பாக வந்தது. பழைய கலைஞர் என்றால் புகுந்து விளையாடி இருப்பார். ஆனால் ஸ்பெக்ட்ரம் என்ற பேய் பிடித்த பிறகு, காங்கிரஸை மீறி என்ன செய்துவிட முடியும்? 

பலவருடங்களாகக் கட்டி எழுப்பி வந்த ‘தமிழினத் தலைவர்’ இமேஜை மூன்று மணி நேர சூப்பர் ஃபாஸ்ட் உண்ணாவிரத்த்தில் தொலைத்தார்.

ராசாவின் மீது குற்றச்சாட்டு சொல்லப்பட்டபோது, இது ஆரிய சதி என்றும், தலித் என்பதால் ராசா குறிவைக்கப்படுவதாகவும் கலைஞர் சொன்னார். இன்று கலைஞரால் நியமிக்கப்பட்ட வக்கீல் ‘திராவிடச் செம்மல்’ ராம் ஜெத்மலானி சொல்கிறார் ‘தலித் ராசாவே எல்லாவற்றுக்கும் காரணம்’ என்று! இபோது தலித் ராசாவைக் குறிவைப்பது யார்? கலைஞர் எப்போது ஆரியர் ஆனார்? இவ்வள்வு வெளிப்படையாக கலைஞர் கீழிறங்குவார் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.

ராசா கைதை எதிர்த்து திமுக நிறைவேற்றிய தீர்மானத்தில் “ராசா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அதற்குப் பிறகு கட்சி தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருக்கிறார். ஆனால் ஒருவர் கைது செய்யப்பட்டு விட்ட காரணத்தாலேயே அவர் குற்றவாளியாக ஆகி விட மாட்டார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.” என்று சொன்னார்கள். இப்போது தயவு தாட்சண்யம் காணாமல் போய் உள்ளதே.அப்படியென்றால்...

தனது வாழ்வின் கடைசிக்கட்டத்தில் உள்ள ஒரு தலைவர், தனது தைரியத்தையும் கொள்கைகளையும் இழந்துவிட்டு, அம்பலப்பட்டு நிற்பதைப் பார்க்கும்போது நமக்கு பரிதாபமே மேலிடுகிறது.

கட்சியா, கனிமொழியா என்பதே தற்போதைய கேள்வி. கனிமொழியே முக்கியம் என்று கலைஞர் முடிவெடுத்துவிட்டது துரதிர்ஷ்டமே. கனிமொழியைக் கைகழுவுவதே கட்சி இழந்த பெயரை மீட்டுத்தர உதவும். அதை கலைஞரின் காலத்திற்குப் பின் ஸ்டாலினும் அழகிரியும் செய்வர்.

இப்போது கனிமொழி மீதான வழக்கு எப்படிப் போகும் என்பது மே13ம் தேதி வரும் ரிசல்ட்டைப் பொறுத்தது. திமுக கூட்டணி வென்றால், காங்கிரசின் கூட்டணி ஆட்சி என்ற மிரட்டலுக்கு அடிபணிந்தால், அம்பானியைப் போல் கனிமொழியும் கைது செய்யப்படாமல் வெளியில் உலவலாம்.

இல்லையென்றால், கனிமொழி மீது சிபிஐயின் பிடி இறுகும். விசாரணைக்காக கொஞ்ச நாள் உள்ளே போக வேண்டி வரலாம். அதன்பிறகு என்ன ஆகும் என்பதைச் சொல்ல ஜோதிட ஞானம் எல்லாம் தேவையில்லை. நமது  பத்திரிக்கைகள் மென்று முழுங்கிச் சொல்லும் செய்தி ஒன்றே போதும்.

மே 11ம் தேதி சிபிஐ கோர்ட்டில் பிறந்த நாள் பரிசு வழக்கில்   புரட்சித்தலைவி ஆஜராகத் தேவையில்லை-ஐகோர்ட் உத்தரவு’. 1992ஆம் ஆண்டில் அடித்த கொள்ளைக்கே இன்னும் முக்கி முக்கி வழக்கு நடந்து வருகிறது. 

எனவே 2031ஆம் ஆண்டு இப்படிச் செய்தி வரலாம்: ‘மே14 சிபிஐ வழக்கில் கனிமொழி ஆஜரானார். விசாரணை முடிந்த பின் கணவர் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் காரில் ஏறிப் பறந்தார்.

அப்போ ராசாவும் சரத்குமார் ரெட்டியும்? அம்போ தான்!

மேலும் வாசிக்க... "அம்போ ஆன ராசாவும் அம்பலப்பட்டுப் போன கலைஞரும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

45 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, May 6, 2011

எங்கேயும் காதல் - திரை விமர்சனம்

ஹ..ஹ..ஹன்சிகா நடிப்பில் வெளிவரும் இரண்டாம்(உண்மையில் முதல்) படம், பிரபுதேவா-ஜெயம்ரவி காம்பினேசனில் வரும் இரண்டாவது படம்(உண்மையில் இரண்டாவது!) என்று எனக்கு (மட்டுமாவது) எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த படம். பிப்ரவரியிலேயே காதலர் தினத்தன்று வெளிவந்திருக்க வேண்டிய படம், ஒருவழியாக இன்று ரிலீஸ்!
படத்தோட கதை என்னன்னா..........’பாரீஸிற்கு வெகேசனில் வந்திருக்கும் பிஸினஸ்மேன் & ஜாலி பேர்வழி கமலுக்கும்(ஜெயம் ரவி) பாரீஸிலேயே வாழும் தமிழ்ப்பெண் கயல்விழிக்கும்(ஹன்சிகா) காதல், இது தான் கதை..இதைத் தான் பார்க்கப்போறீங்க’-ன்னு முதல் சீனிலேயே பிரபுதேவா வந்து சொல்றாரு. அதனால அது தான் கதை!

இப்படிச் சொல்ல ’எஸ்.ஜே.சூர்யா’ மாதிரி தில் இருந்தாப் போதாது, கூடவே ’குஷி’ மாதிரி நல்ல திரைக்கதையும் வேணும். அது இல்லாமப் போனது தான் பிரச்சினையே! முத சீன்லயே ஹன்சிகா ஜெயம்ரவியைப் பார்த்ததும் காதல் கொல்ல்ல்கிறார்! ஜெயம் ரவியோ நிறைய கேர்ள் பிரண்ட்ஸ் உள்ள பேர்வழி. யாரும் தன்னைக் காதலிக்கிறாங்கன்னு தெரிஞ்சா ஓடிப் போயிடற ஆளு. 

அப்படிப்பட்ட ஆளை ஃப்ரெஷ் ஹன்சிகா எப்படிக் காதல்ல விழவைக்காருன்னு மொக்கைத்தனமாச் சொல்றாங்க. இடைவேளை வரைக்கும் ஜெயம்ரவிக்கு ஹன்சிகா காதல் உறைக்கவே இல்லை. கெக்கேபிக்கே-ன்னு பழகிட்டு கிளம்பி இந்தியா போயிடுறாரு. சரி, இண்டர்வெல்லுக்கு அப்புறம் கதை இந்தியாவில நடக்கும்னு எதிர்பார்த்தா..ம்ஹூம்..ஒரு வருடத்திற்குப் பிறகு --ன்னு போட்டுட்டு, அடுத்த வெகேசனுக்கு ரவி திரும்ப வர்றாரு. திரும்ப ஹன்சிகாவோட காதல் அட்டாக் தொடருது..உஸ்..முடியலை.
எங்கேயும் காதல்-னு தலைப்புலேயே காதல் பொங்கும்போது, படத்துல எப்படி இருக்கணும்..செத்தவன் கையில வெத்தலை பாக்கு கொடுத்தமாதிரி ஆகிடுச்சு. இந்த மாதிரிக் காதல் கதைகளில் கதாநாயகன் அல்லது கதாநாயகியோடு. ரசிகர்கள் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வைப்பது அவசியம். ஆனால் நேட்டிவிட்டியே இல்லாமல் பாரீஸ்-பிஸினஸ்மேன் என படம் நகர்கையில் யார் வீட்டு எழவோ-ன்னு படம் பார்க்க வந்தவங்கள்லாம் உட்கார்ந்திருக்காங்க.

ஜெயம்ரவி அழகா இருக்கார். பிரபுதேவா படத்து ஹீரோக்கள் மாதிரியே நல்லா டான்ஸும் குறும்பும் பன்றாரு. அவர் வேலையை கரெக்டாத் தான் பண்றாரு. ஆனாலும் ஜெயம்ரவியை வெறும்ரவியா ஆக்கிப்புட்டாங்க.

காமெடிக்கு ராஜூ சுந்தரம்..எப்படி இருந்திருக்கும்னு நீங்களே யோசிச்சுக்கோங்க. உண்மையிலேயே நல்ல காமெடி பிட்ஸ்..ஆனால் ராஜூ கொடுக்கிற எக்ஸ்பிரசன்ஸ்ல எரிச்சல்தான் வருது. ஹன்சிகா அப்பாவா, டிடெக்டிவ்வா சுமன். ’ஒரு டிடெக்டிவ்வா ஜெயம்ரவியின் லீலைகளை கண்டுபிடிக்கிற அப்பா-அந்த ஜெயம்ரவியையே லவ் பண்ற மகள்’-இப்படித் தான் புரடியூசர்கிட்ட பிரபுதேவா கதை சொல்லி இருக்கணும்..நல்ல நாட் தான். அந்த சுமன் கேரக்டரை டெவலப் பண்ணியிருந்தாக்கூட படம் தேறி இருக்கும். அதையும் மொக்கை ஆக்கிட்டாங்க.
ஆனால் நிறைய சுவாரஸ்யமான ‘பிரபுதேவா டச்சிங்’ சீன்கள் படத்துல இருக்கு. அதை மட்டும் டிவி கிளிப்பிங்ஸ்ல பார்த்தா நிச்சயம் ரசிக்கிற மாதிரியே இருக்கும். பணத்தோட அருமையை ஹன்சிகா ரவிக்கு உணர்த்த முயற்சி பண்ற சீன் ஒரு உதாரணம். ஆனால் படமே நகராம ஆணி..இல்லை ஆப்பு அடிச்ச மாதிரி நிக்குது!

படத்துக்குப் பிளஸ் பாயிண்ட் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு. கண்ணில் ஒத்திக்கொள்ளலாம் போன்று பாரீஸ் அழகை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார். அப்புறம் நம்ம ஹாரீஸ் ஜெயராஜ்..பாவம், அவர் பாட்டை அவரே ரீமிக்ஸ் பண்ண மாதிரிப் பாடல்கள்..ஆனாலும் திகுதிகு போன்ற சில பாடல்கள் தேறுகின்றன. 

வள்ளியே..சக்கரவள்ளியே பாடல் கொரியோகிராபி அமர்க்களம். ஃபாரினர்ஸ் நம்ம ஹன்சியைப் பார்த்துப் பாடற மாதிரி எடுத்திருக்காங்க.(அப்போ, அவங்க கூடயும் நாம போட்டி போடணுமோ!) மைக்கேல் ஜாக்சனின் பீட்டையும் நல்லா யூஸ் பண்ணி இருக்கார் ஹாரிஸ் ஜெயராஜ். 
படம் மொக்கையானாலும் கொடுத்த காசு வீண் போகாம, நம்மைக் காப்பாத்துறது நமது தங்கத்தலைவி..ஹன்சிகா தான்!..அட, அட அட..அவங்க கண்ணை மூடிக்கிட்டு குழந்தை மாதிரி சிரிக்கிற சிரிப்பென்ன..ஜோதிகா மாதிரி கொடுக்கிற எக்ஸ்பிரசன்ஸ் என்ன..அவங்களோட காஸ்ட்யூம்ஸ் என்ன..சிரிச்சுக்கிட்டே டான்ஸ் ஆடுற அழகென்ன..பாட்டு சீன்ல காட்டுற தாராளம் என்ன..என்ன..என்ன..என்ன..என்ன..என்ன! படத்துலயே ஒரு சீன்ல தான்(வள்ளி பாட்டு) சேலை கட்டி வர்றாங்க. சும்மா தியேட்டரே அதிருது!

ஏற்கனவே மாப்பிள்ளையால் நொந்தோம். அப்பவும் ஹன்சி தான் காப்பாத்துச்சு.’படத்துக்கு கதை கண்ராவில்லாம் எதுக்கு..ஹன்சி போதும்’னு தான் நாம நினைக்கோம். ஆனா, எல்லாரும் நம்மளை மாதிரி நல்லவங்க இல்லையே!

ஒரு தொலைக்காட்சி நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட சன் டிவி, ஒரு சினிமாத் தயாரிப்பு/விநியோக நிறுவனமாக இன்னும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை. அவர்கள் படங்களை தேர்ந்தெடுக்கும் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. இன்று ஸ்க்ரீனில் சன் பிக்சர்ஸ் என்று வரவுமே, பின்னால் அமர்ந்திருந்தவர்கள் ‘அய்யோ, இவங்க படமா’ என்று கத்தினார்கள். அது சரி தான் என்று இந்தப் படம் நிரூபித்து விட்டது. 

எங்கேயும் காதல் - ’சன் பிக்சர்ஸ் படம்’

மேலும் வாசிக்க... "எங்கேயும் காதல் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

49 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, May 3, 2011

ரஜினியை பார்த்த கலைஞரும் ராமராஜனை கண்டுகொள்ளாத ஜெ.வும்

நமக்கு ஆரம்பித்திலிருந்தே ராணா படத்தின் மீது ஒரு நல்ல எண்ணமே வர மறுக்கிறது. படத்தின் போஸ்டரும் ஏனோ பாபாவை ஞாபகப் படுத்துகிறது. முதல் நாள் சூட்டிங் போன சூப்பர் ஸ்டார், வயிற்று வலி+மூச்சுத் திணறலால் திண்டாடி விட்டார்.  உடனே மருத்துவமனியில் அட்மிட் ஆகிற அளவிற்கு நிலைமை போய் விட்டது.
வயிற்று வலிக்குக் காரணம் காலை டிபன் தான் என்றும் மூச்சுத் திணறலுக்குக் காரணம் பக்கத்தில் நின்ற தீபிகா படுகோனே தான் என்றும் உளவுத்துறை தகவல்கள் கிடைத்த உடன் சீறிக் கிளம்பினார் நம்ம சி.எம்(?) கலைஞர். உடனே ரஜினியை நேரில் சந்தித்து விட்டு, வெளியில் வந்து ”அவர் நலமுடன் உள்ளார்” என்ற நல்ல செய்தியையும் உலகிற்கு அறிவித்தார்!

கடைசியாக வந்த ரஜினி-கலைஞர் சம்பந்தப்பட்ட செய்தி என்றால் ரஜினி மீடியாக்காரங்க+சொந்த பந்தம் சூழ இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டதும், மாலையே கலைஞருடன் உட்கார்ந்து ‘பொன்னர் சங்கர்’ பார்த்ததும் தான். கலைஞர் வைரமுத்துவிடம் பேசும்போது ரஜினியைக் காய்ச்சி எடுத்ததாகவும் தகவல் வெளியானது. 

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இப்போது தான் இந்தத் திடீர் பாசச் சந்திப்பு. இதற்கான காரணம், கடைசிச் செய்தியைப் பொய்யாக்க இருக்கலாம். ’ரஜினி மேல் கலைஞர் கொண்ட தனிப்பட்ட பாசம்’ என்று முரசொலி சொல்லக் கூடும். ஒருவேளை கலைஞர் ”நானும் ரஜினி ரசிகன் தான்” என்று பேட்டி கொடுக்கலாம். அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று அறிந்தவர்களுக்கு, இது ஒன்றும் பெரிய அதிர்ச்சியைத் தராது!

அல்லது, எங்கு போனாலும் ‘ஸ்பெக்ட்ரம்-சம்மன்-கைது’ என்று ஒரே கெட்ட வார்த்தையாகக் காதில் விழுவதால், ஒரு சேஞ்சுக்கு ‘நலம்’ என்ற செய்தியை அறிவித்து சந்தோசப்பட வந்திருக்கலாம். 

காரணங்கள் எதுவானாலும், அவரது செய்கை பாராட்டத் தக்கதே. திமுக பேச்சாளர் வெற்றி கொண்டான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி, தன் வாழ்வின் கடைசிநாட்களில் இருந்தபோது, டாக்டர்கள் அவரை இனிமேல் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்றனர். அவர் கேட்பதாக இல்லை. பிறகு கலைஞர் சென்று அவரைப் பார்த்து கண்டிப்புடன் அதைச் சொல்லி உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ளச் சொன்னார். 

இன்னொரு பக்கம், ராமராஜன் என்றொரு அப்பாவி அதிமுக கூட்டத்தில் பேசிவிட்டுத் திரும்பும் வழியில் ஆக்ஸிடெண்டில் சிக்கினார். ஓ.பி. ஆஸ்பத்திரிக்குப் போய், அதிமுக எல்லாச் செலவையும் ஏற்கும் என்றார். அதுவே பெரிய விசயம் தான் என்பது போல் ஆகிவிட்டது இப்போது. அதன் பின் அவர் சென்னை திரும்பி விட்டதாகவும், நடக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் அவரை ஒரு முறை கூட ’அம்மா’ என்ற புனித வார்த்தையால் அழைக்கப் படும் ஜெயலலிதா பார்க்கவேயில்லை. 
விபத்து நடந்த உடனே மதுரை சென்று பார்த்திருக்கலாம். அம்மாவே கதி என்று கிடந்த ராமராஜனுக்காக அவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியவில்லை போலும். பரவாயில்லை, ஆனால் அவர் சென்னை திரும்பிய பிறகாவது சந்தித்து ஆறுதல் தெரிவித்து இருந்தால், அது அதிமுக தொண்டனுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும். தேர்தல் பிரச்சாரத்தின்போது நல்ல இமேஜையும் கொடுத்திருக்கும். ஆனால் தேர்தல் பிரச்சாரம் செய்த களைப்புத் தீர கொடநாடு பற்ந்து விட்டார் இப்போது.

கட்சிக்காக உழைக்கும் தொண்டனுக்கு இரு இயக்கங்களும் பெரிதாக எதுவும் செய்வதில்லை தான். ஆனாலும் ஒரு ஆறுதல் வார்த்தை சொன்னாலே போதும், தொண்டன் காலாகாலத்திற்கும் உங்கள் பின்னால் வருவான். எந்த ஊருக்குப் போனாலும், கட்சியினரைச் சரியாகப் பெயர் சொல்லி அழைத்து நலம் விசாரிப்பது கலைஞரின் வழக்கம். அதைப் பலநாட்களுக்குச் சொல்லி மகிழ்வதை நான் பார்த்திருக்கிறேன். அதுதான் ஆட்சியில் இல்லாமல் 14 வருடம் வனவாசம் போனபோதும், கட்சி காணாமல் போகாமல் காப்பாற்றியது. 


ஜெயலலிதாவிடம் அத்தகைய குணம் கொஞ்சம்கூட இல்லை என்பது வருந்தத் தக்கதே! அது தான் எம்.ஜி.ஆரின் இடத்தை ஜெ.பிடிக்க முடியாமல் போனதற்கான முக்கிய காரணம் ஆகும்!

டிஸ்கி: இதன்மூலமாக கலைஞர் ஒரு மனிதாபிமானி என்று நிறுவ நாம் முயலவில்லை. அது நம் வேலையும் அல்ல. நம்மிடையே இருக்கின்ற இரு தலைவர்கள், தனது தொண்டர்களுடன் கொண்டுள்ள உறவைப் பற்றிய ஒரு பார்வையே இந்தப் பதிவு.

மேலும் வாசிக்க... "ரஜினியை பார்த்த கலைஞரும் ராமராஜனை கண்டுகொள்ளாத ஜெ.வும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

57 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, May 1, 2011

பணம் வந்தால் தூக்கம் போய்விடுமா?

என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தும் பேச்சு. ‘பணம் சம்பாதித்தால் நிம்மதி போய் விடும், படுத்தால் தூக்கம் வராது’ என்பதே. இலக்கியங்களிலும் சினிமா போன்ற வெகுஜன ஊடகங்களிலும் இந்தக் கருத்து திரும்பத் திரும்பச் சொல்லப் படுகிறது. ஆனால் அது உண்மை தானா?

முதலில் யார் இந்தக் கருத்தைச் சொல்கிறார்கள் என்று பார்ப்போம். கோடிகளில் புரளும் சினிமா நட்சத்திரங்களும், கோடிகளோடு சேர்த்து நடிகையோடும் புரளுகின்ற கார்ப்போரேட் சாமியார்களுமே அதிகமாக இதைச் சொல்வது.

அட, பணம் வந்ததால் நிம்மதி போய்விட்டதென்றால் எதுக்கு அந்தக் கர்மத்தை வீட்ல வச்சுக்கிட்டு இருக்கீங்க..ஒரே ஒரு அறிக்கை, ‘நாளைக்கு காலைல என் வீட்டுக்கு வர்றவங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கப்படும்’னு சொன்னாப் போதாதா? மறுநாளே பணத்தைக் கொடுத்துட்டு நிம்மதியா இருக்கலாமே?..இல்லே, அடுத்துச் செய்யப்போற வேலைக்கு(நடிப்போ, கவிதையோ) ஒரு ரூபாய் சம்பளம் போதும்னு மம்மி மாதிரி சொல்லிடலாமே!

இந்த மாதிரி நெருக்கிக் கேட்டால் ‘நிம்மதியாக வாழ பணம் மட்டுமெ போதாது. அதைத் தான் சொல்கிறோம்’ என்று சொல்லிச் சமாளிப்பார்கள். ஆனால் ‘பணம் வந்ததால் தான் நிம்மதி போய்விட்டது’ என்பதாகவே அவர்கள் சொல்வது மக்களால் புரிந்து கொள்ளப்படுகிறது.

இந்த மாதிரிப் பிரபலங்களை நம்பும் சாமானியர்களும் அதே டயலாக்கை கிளிப்பிள்ளை மதிரி திரும்பச் சொல்வதைப் பார்த்திருக்கிறேன். மேலுக்கு சட்டை கூட இல்லாமல், வெறும் லுங்கியோடு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு ‘மனுசனுக்கு நிம்மதி தான்பா முக்கியம்..பணம் இன்னைக்கு வரும், நாளைக்குப் போகும்’ என்று பேசுகிற ஆட்களை எனது ஊரில் பார்த்திருக்கிறேன். ஏதோ பணம் இன்னைக்கு நாம் அழைத்தால் வந்துவிடுவது போன்று பேசுவது வேடிக்கை தான் இல்லையா?

‘பணம் சம்பாதித்தால் நிம்மதி போய் விடும் என்பது ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்க பணக்காரர்கள் சொல்லும் பொய்’ என்று எங்கோ படித்திருக்கிறேன். அதுவே உண்மை என்றும் தோன்றுகிறது. நமக்கு ‘தூக்கம் வராது’ என்று அறிவுரை சொல்பவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாகவே இருப்பதும் அதை உறுதிப் படுத்துகிறது.
இந்தியா போன்ற ஆன்மீக பூமியில் பணத்தைப் புகழ்ந்து பேசுவது மரியாதையான காரியம் அல்ல. அதனால் தானோ என்னவோ வீட்டில் கோடி கோடியாக பணம் வைத்திருப்பவர்கள் கூட ’நிம்மதி போய்விடும்’ என்ற பாட்டைத் தவறாமல் பாடுகிறார்கள். இந்தப் பதிவு கூட உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். அந்தளவிற்கு நாம் அந்தப் பொய்யை நம்பும் சூழ்நிலையே இங்கு நிலவுகிறது. 

பணம் சம்பாதிப்பதற்காக தன் குடும்பத்தையே கவனிக்காமல் விடுவதும், பிறர் வயிற்றில் அடிப்பதும் தான் தவறேயொழிய பணம் சம்பாதிப்பதே தவறல்ல. அம்பானிகளும் டாட்டாக்களும் தூங்குவதே இல்லையா என்ன?

கஷ்டம் என்பது நிழல் போல் நம்முடனே வருவது. படித்தவனுக்கும் இங்கு கஷ்டம் உண்டு, படிக்காதவனுக்கும் கஷ்டம் உண்டு. பணக்காரனுக்கும் கஷ்டம் உண்டு, ஏழைக்கும் கஷ்டம் உண்டு. எப்படியும் கஷ்டப்படப் போகிறோம்..அதை பணக்காரனாக இருந்தே கஷ்டப் படலாமே.

நேர்மையாக எவ்வளவு சம்பாதித்தாலும், அது நம் நிம்மதியைக் கெடுக்காது என்பதே உண்மை. எனவே நன்றாக உழைத்து, நல்ல பொருள் ஈட்டி வாழ்வில் முன்னேறுவோம்!


அனைவருக்கும் இனிய மே தின நல்வாழ்த்துகள்!

மேலும் வாசிக்க... "பணம் வந்தால் தூக்கம் போய்விடுமா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

40 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.