எல்லா இயக்குநர்களுக்கும் ஒரு ஃபேவரிட் கதைக்கரு இருக்கும். அதைக் கையில் எடுத்தால், பின்னி விடுவார்கள். பாலச்சந்தருக்கு உறவுச்சிக்கல், ஷங்கருக்கு ’ஜெண்டில்’ மேன் என சில ஸ்பெஷாலிட்டி தீம்கள் உண்டு. அந்தவகையில் ஹிட்ச்காக்கின் ஃபேவரிட் தீம், ஒரு அப்பாவி செய்யாத குற்றத்திற்குப் பழிசுமத்தப்பட்டு தப்பி ஓடுதல்!
ஹிட்ச்காக்கின் மெகா ஹிட் படமான North By Northwest மற்றும் Young and Innocent, Saboteur போன்ற படங்களில் இதே தீம் தான். இந்தப் படத்திற்கு முன் 17 படங்களை அவர் டைரக்ட் செய்திருந்தாலும், ஹிட்ச்காக் ஸ்டைல் என்று ஒன்று தெளிவாக உருவானது இந்தப் படத்தின் மூலம் தான்.
ஹீரோ ஹேன்னி (Robert Donat) ஒரு பெண்ணுக்கு தன் ரூமில் ஓர் இரவு அடைக்கலம் கொடுக்கிறான். அவள் ஒரு ஸ்பை என்றும் முக்கியமான தகவல் இந்த நாட்டைவிட்டு கடத்தப்படப் போவதாகவும் அதைத் தடுக்க தான் முயல்வதாகவும் சொல்கிறாள். அதனால் அவளை சிலர் ஃபாலோ பண்ணி, கொல்ல முயல்வதாகச் சொல்கிறாள். ஹென்னி அந்தக் கதையை சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. அந்த இரவில் அவள் கொல்லப்படுகிறாள். சாகும்முன் ஒரு மேப்பைக் காட்டி, ஸ்காட்லாண்டில் இருக்கும் ஒரு மனிதரைச் சந்தித்து அவள் விட்ட பணியை முடிக்கச் சொல்கிறாள். அவளைக் கொன்ற பழி ஹேன்னி மேல் விழுந்து போலீஸ் தேட, தன்னைக் காப்பாற்றிக்கொண்டே ஹேன்னி எப்படி அந்த வில்லன் கூட்டத்தை ஒழித்தான் என்பதே கதை.
இந்தப் படமும் John Buchan என்பவரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானது தான். வழக்கம்போல் ஹிட்ச்காக்கின் கைவண்ணம், திரைக்கதையில் உண்டு. படத்தின் ஆரம்பத்தில் வரும் பெண் ஸ்பை கேரக்டரையும், பிறகு வரும் ஹீரோயின்( Madeleine Carroll) கேரக்ட்ரையும் அவர் சேர்த்தார். படத்தை சுவாரஸ்யமானதாக அது ஆக்கியது. உயிரைக் காப்பாற்ற ஓடும்போதும், கூலாக இருக்கும் ஹீரோ எனும் கான்செப்ட்டை இதில் தான் அவர் கொண்டு வந்தார். ஆரம்பம் முதல் இறுதிவரை ஹேன்னி, எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்ளும் ஜாலியான ஆளாகவே வருகிறார். ஆபத்தில் இருந்து தப்பிக்க ஓடும்போது, ஹீரோயினும் அந்த பயணத்தில் இணைவது எனும் ஹிட்ச்காக்கின் இன்னொரு ஸ்டைலும் இதில் உருவானது.
ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் ஆரம்பம் முதலே மோதல் தான். இரண்டு முறை ஹீரோவை போலீஸில் மாட்டிவிடுகிறார் ஹீரோயின். பின்னர் அவரும் ஹீரோவுடன் கைவிலங்கில் சிக்கிக்கொள்வது வேடிக்கை. கை விலங்கினை மறைத்தபடியே ஒரு லாட்ஜில் தங்கி, ஒரு இரவைக் கழிக்கும் சீகுவென்ஸ், செம ஜாலியானது. Robert Donat கேஷுவலாக நடித்து, ஒரு ஊடல் எஃபக்ட்டை கொண்டுவந்திருப்பார். ஹீரோயின் பெயர் மேடலின்( Madeleine Carroll) . அவர் பெயரைத்தான் வெர்டிகோ ஹீரோயின் கேரக்டருக்கு வைத்தாரா என்பது ஹிட்ச்காக்கிற்கே வெளிச்சம்!
ஹீரோ தப்பி ஓடும்போது வழியில் ஒரு விவசாயி வீட்டில் தங்குவதாக ஒரு சீக்குவென்ஸ் வரும். அட்டகாசமாக இருக்கும். விவசாயி வயதானவர், பக்தி நிறைந்த கிறிஸ்டின். அவர் மனைவியோ இளம்பெண். ஹீரோவும் அந்த பெண்ணும் கேஷுவலாகப் பேசிக்கொள்வதெல்லாம் புருசனுக்கு தப்பாகவே தெரியும். அதிலும் டைனிங் ஹாலில் ஒரு பிரேயர் சீன் வரும். சஸ்பென்ஸ் காட்சிகளை ஜாலியாகச் சொல்ல முடியும் என்று காட்டியிருப்பார் ஹிட்ச்காக்.
அங்கேயும் போலீஸ் வந்துவிட, விவசாயியின் கோட்டை அந்த பெண் ஹீரோவுக்கு கொடுத்து, தப்பி ஓடும்படி சொல்வார். கிளம்பும் ஹீரோ, படக்கென்று அந்தப் பெண்ணிற்கு ஒரு கிஸ் அடித்துவிடுவார். அந்தப் பெண் அப்போது காட்டும் உணர்ச்சியும் ஹிட்ச்காக் வைத்த அந்த ஒரு ஷாட்டும், ஒரு மிகச்சிறந்த சிறுகதைக்குச் சமம்.
ஹீரோ துப்பாக்கியால் சுடப்படும்போது, அவர் அணிந்திருக்கும் முருகர் டாலரோ சிலுவையோ தோட்டாவை தடுப்பது போல் பல படங்களில் பார்த்திருப்பீர்கள் அல்லவா? அதை ஆரம்பித்து வைத்தது இந்தப் படம் தான். விவாசியி கோட்டில் ஒரு பைபிள் இருக்கும். ஹீரோ சுடப்படும்போது, பைபிள் அவரைக் காப்பாற்றும். இதில் இருந்த ஆன்மீக டச், பலரையும் கவர்ந்தது. பல மொழிப்படங்களுக்கும் அந்த ட்ரிக் இன்ஸ்பிரேசனாக அமைந்தது.
முதல் விவசாயி தம்பதிகளுக்கு நேரெதிராக காதல் நிறைந்த இன்னொரு தம்பதி ஜோடி, லாட்ஜ் ஓனர்களாக இரண்டாம்பாதியில் வருவார்கள். ஹீரோ-ஹீரோயின்னை வில்லனிடம் இருந்து காப்பாற்றுவார்கள். அவர்களிடம் இருந்து கைவிலங்கை மறைத்தபடியே ஹீரோ-ஹீரோயின் நெருக்கமான தம்பதிகளாக நடிப்பதும், அதை அந்த அம்மா ரசிப்பதும் அதகளம்.
இந்தப் படம் சீகுவென்ஸ், சீகுவென்ஸாக நகரும் தன்மை கொண்டது. ஒரு இடத்தில் கொலை, அங்கேயிருந்து தப்பி இன்னொரு இடம்,அங்கே கிடைக்கும் க்ளூவை வைத்து அடுத்த இடம், செல்லுமிடமெல்லாம் ஆபத்து, துணைக்குக் கிடைக்கும் ஹீரோயினுடன் ரொமான்ஸ், படத்தின் ஆரம்பக் காட்சியுடன் தொடர்புடைய கிளைமாக்ஸ் என அழகான சீட்டுக்கட்டு மாளிகை போல் ஹிட்ச்காக், இந்தப் படத்தினை அடுக்கியிருப்பார்.
இந்தப் படத்திலும் Maccuffin-ஆக, வில்லன்கள் கடத்தும் ரகசியம் வருகின்றது. எப்போதும் போல், அதற்கு மரியாதை இல்லை. இந்தப் படமும் நாவலும் உண்மையிலேயே வாழ்ந்த ஒரு மனிதரின் டேலண்ட்டை மையமாக வைத்து உருவானது. படத்தில் மிஸ்டர் மெமரி என்ற பெயரில் அவர் வருவார். அவரால் பல விஷயங்களை ஒரே நேரத்தில் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்.
கோவில்பட்டி பகுதியில் கனகசுப்புரத்தினம் என்று ஒருவர் இருந்தார். தசாவதானி என்று அவரைச் சொல்வார்கள். மாணவர்களிடம் பல விஷயங்களைச் சொல்லச் சொல்வார். 30-40 பேர் வெவ்வேறு விஷயங்களைச் சொல்வோம். எல்லாரும் சொல்லி முடித்தபின், யார் என்ன சொன்னார்கள் என்பதை அதே ஆர்டரிலும் மாற்றியும் அவரால் சரியாகச் சொல்ல முடியும். 25வது ஆள் கேட்டாலும், அவன் சொன்னதைச் சொல்வார். 9வது ஆள் கேட்டாலும் அவன் சொன்னதைச் சொல்வார். அந்த மாதிரியான ஒரு மனிதரின் மீதான இன்ஸ்பிரேசனில் உருவானது, இந்தப் படம்.
ஒரு சீரியஸான த்ரில்லர் கதையை காமெடியாகவும் ரொமாண்டிக்காகவும் சொல்வது எப்படி என்பதற்கு உதாரணம், இந்தப் படம்.
படத்தின் யூ-டியூப் லின்க் : http://www.youtube.com/watch?v=k4v7vUIm4Ws
டொரண்ட் : http://kickass.to/the-39-steps-1935-brrip-x264-zeberzee-t5651458.html
டொரண்ட் : http://kickass.to/the-39-steps-1935-brrip-x264-zeberzee-t5651458.html
11 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.