Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Monday, November 5, 2012

I-T ACT SECTION 66 A - நமது கவலைகளும், கோரிக்கைகளும்.

வதேராவை விடவும் கார்த்தி சிதம்பரம் அதிக சொத்து சேர்த்திருப்பதாக செய்திகள் வருகின்றன”- என்ற இந்த ஒற்றை வரிக்காக ரவி ஸ்ரீனிவாசன் எனும் ட்வீட்டர் கார்த்தி சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். I-T ACT SECTION 66 A-ன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்களிக்கும் பேச்சுச் சுதந்திரத்தை பறிப்பதாக உள்ள இந்த சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். இல்லையென்றால் சினிமா விமர்சனம் முதல் சகபதிவர் மீதான கிண்டல்வரை அனைத்துக் காரணங்களுக்காகவும் ப்ளாக்/ஃபேஸ்புக்/ட்வீட்டர் பயனாளிகள் அனைவருமே உள்ளே போகும் வாய்ப்பு அதிகம்.

எனவே நமது இணைய சுதந்திரத்தைக் காக்க, ஐயா.தருமி அவர்கள் முன்னெடுத்திருக்கும் இந்த நல்ல முயற்சியை ஆதரிப்பது நம் கடமை. மேலும், இந்தப் பதிவின் மையக் கருத்தினை, ஒரு சட்ட மனுவாக அல்லது பொது நல வழக்காக நீதிமன்றத்திற்கும் எடுத்துச் செல்வது அவசியம். இந்த விஷயத்தின் மேல் அக்கறையுள்ள வழக்கறிஞர்கள், ஐயா.தருமியைத் தொடர்பு கொள்ளவும்.

-----------------
 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 - http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும் (http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.

நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம்.
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.

-----------------------
தொடர்ந்து 2 நாட்கள் கீழே உள்ள வரியை எல்லோரும் டிவிட்டரிலும் பேஸ் புக்கிலும் பதிவிடலாமே :

இந்திய அரசே,
தனிமனித உரிமைகளையே பறிக்கும். I-T ACT Section 66 A திருத்தப்பட வேண்டும். தனிமனித கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்.


மேலும் வாசிக்க... "I-T ACT SECTION 66 A - நமது கவலைகளும், கோரிக்கைகளும். "

Tuesday, August 30, 2011

யோக்கியப் பதிவர்களை நசுக்கும் அயோக்கியப் பதிவர்கள்...

பதிவுலகில் அவ்வப்போது எழும் ஒப்பாரி, மீண்டும் இப்போது எழத் தொடங்கியுள்ளது. அநேகமாக இதை ஆரம்பித்து வைத்தவர் நிரூபனாக இருக்கலாம்.அங்கே பேசியவற்றின் தொடர்ச்சியாக எழுந்த சிந்தனைகளின் தொகுப்பாக இதை எழுதுகின்றேன்..

கமர்சியல் பதிவர்களால் நல்ல காத்திரமான இலக்கியப் பதிவுகள், நல்ல பதிவுகள் பல வாசகர்களைச் சென்றடையாமல் போவதாகவும் இதற்கு என்ன செய்யலாம் என்றும் தீவிரமாக ஆலோசனைகள் நடந்து வருகின்றன. வழக்கம்போல் நம் மக்கள் விஷயத்தின் அடிநாதத்தை தவற விடுவதாகவே எனக்குத் தோன்றுகின்றது. 

மொக்கை போடும் கூர்மையான புத்திசாலிகள், நடிகைகளின் கில்பான்சி படம் போடும் நல்லவர்கள், அயராது காப்பி பேஸ்ட் பதிவு போடும் உழைப்பாளிகள், உருப்படியாக எதையும் எழுதாமல் வெறுமனே பின்னூட்டம்/ ஓட்டு போட்டே பிரபலம் ஆவோர் போன்ற புண்ணிய ஆத்மாக்களே நம் மக்களால் கமர்சியல் பதிவர்கள் என்று சுட்டியும் அயோக்கியப் பதிவர் என்று திட்டியும் காட்டப்படுகின்றனர். 

நல்ல கதை/கவிதையை படைப்போரும், இங்கே வந்து கதை / கவிதை எழுதப் பழகிக்கொண்டிருப்போரும் உண்மையிலேயே சமூகத்திற்குப் பயனளிக்கும் விவாதங்களைக் கிளப்பும் பதிவுகளை எழுதுவோரும், சினிமா/அரசியல்/நகைச்சுவை/காத்திரமான படைப்புகள் என எதுவுமே எழுதத் தெரியாதவர்களும் யோக்கியப் பதிவர்கள் என்று பெருமையுடன் அழைக்கப்படுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் பதிவுலகில் எழுப்பப்படும் குற்றச்சாட்டு, நல்ல பதிவுகள் மக்களைச் சென்றடைய விடாமல் கமர்சியல் பதிவர்கள் கெடுக்கின்றார்கள் என்பதே. பதிவுலகம் என்பது நமது நிஜ உலகின் பிரதிபலிப்பு என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. எனவே நாம் முதலில் நிஜவுலகில் நல்ல படைப்புகளின் நிலை என்ன என்று பார்க்கலாம்.

2009ஆம் ஆண்டு திடீரென எழுத்தாளர்களுக்கு தரப்படும் ராயல்டி குறித்து சலசலப்பு எழுந்தது. அப்போது ஜெயமோகன் ‘ஒரு வருடத்திற்கு எனது புத்தகம் ஆயிரம் விற்றாலே பெரிய விஷயம் என்றார். சும்மாவே புலம்பும் சாருநிவேதிதா ‘எல்லாரும் ஓசியில் என் தளத்தைப் படிக்கிறாங்களேயொழிய யாரும் என் புத்தகங்களை வாங்குவதில்லை’ என்று அழுதார். மற்றொரு முக்கிய படைப்பாளியான எஸ்.ராமகிருஷ்ணன் ‘ஆம்..எனக்கும் அப்படியே’ என்று கொஞ்சம் கெத்தாக ஒப்புக்கொண்டார்.

‘தமிழகம் ஏன் இவ்வளவு மோசமான நிலையில் உள்ளது? நல்ல இலக்கியங்கள் மக்களைச் சேர இனி நாம் என்ன செய்ய வேண்டும்’ என தீவிரமான விவாதம் மொத்தமே 100 பிரதிகள்கூட விற்காத இலக்கிய சிற்றிதழ்களில் நடந்தது. அதன்பிறகு என்ன செய்வதென்றே தெரியாமல் அது அடங்கியது.

அதே நேரத்தில் குமுதமும் விகடனும் தமிழ்நாட்டிலேயே நாங்கள் தான் நம்பர்.1 பத்திரிக்கை..எங்கள் புத்தகம் ஒவ்வொரு வாரமும் 5 லட்சம் பிரதிகள் விற்கின்றன என்று உரக்க சொல்லிக்கொண்டிருந்தன. மசாலாப் பொடி, சோப்பு டப்பா கொடுத்து குங்குமமும் கொஞ்சநாள் அதைச் சொன்னது.

விஷ்ணுபுரம், ஜீரோடிகிரி, உபபாண்டவம் என தீவிர இலக்கியப் படைப்புகள் ஆயிரம் பிரதியைத் தாண்ட முடியாத நேரத்தில், கமர்சியல் பத்திரிக்கைகள் லட்சங்களில் பேசிக்கொண்டிருந்தன. 

நம் பதிவர்கள் அளவிற்கு ஜெயமோகன், சாரு வகையறாவிற்கு ஞானம் இல்லாததால் விகடன்/குமுதத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழவில்லை. அந்த அளவிற்கு ஆண்டவன் நம்மைக் காப்பாற்றினான்.

ஏன் இப்படி நிகழ்கிறது என்று கொஞ்சம் யோசிப்போருக்கும் உண்மை புரியும். முதலில் பெருவாரியான மக்கள் படிப்பது பொழுதுபோக்கிற்காகவே. உக்கிரமான, சிந்தனையைத் தூண்டும் படைப்புகளை நாடி யாரும் படிப்பதில்லை.

ஏற்கனவே சொந்த வாழ்விலும், அலுவலத்திலும் அழுத்தம் தாளாமல் தன்னை ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ள வருவோரே இங்கு 80%க்கும் அதிகம். அவர்களது ஒரே நோக்கம் பொழுதுபோக்குவதும், கவலை மறந்து சிரிப்பதுமே. அந்த வகையில் இந்த கமர்சியல் பத்திரிக்கைகள் உளவியல்ரீதியாக இந்த சமூகத்திற்கு ஆற்றிக்கொண்டிருக்கும் பங்கு பாராட்டத்தக்கது. (சினிமாவும் அப்படியே!)
குமுதம் படிக்கும் லட்சக்கணக்கான மக்களில் பத்தாயிரம் பேரால் கூட விஷ்ணுபுரத்தை படிக்க(அதாவது வெறுமனே வாசிக்க)க்கூட முடியாது. அதை ஆயிரம் பேரால்கூட உள்வாங்கவும் முடியாது.

இன்னும் சரியாகச் சொல்வதென்றால், இலக்கியம் படிக்கவும் தேர்ந்த வாசிப்பு அனுபவமும், இந்த வாழ்வின் இயங்குமுறை பற்றிய சில அடிப்படைக் கண்ணோட்டமும்(அது தவறாகவோ, மாறிக்கொண்டோ இருக்கலாம்) தேவை.

அதாவது இலக்கியம் என்பது எப்போதும் எங்கும் வெகுஜன மக்களுக்கானது அல்ல. பாரதியின் காலம் முதல் இப்போது வரை ஒரு சிறு வாசகர் வட்டத்தாலேயே இலக்கியமானது கவனிக்கப்படுகிறது. பாரதியின் இறுதி ஊர்வலத்திற்கு வந்தோர் வெறும் 13 பேர்கள் தான் என்பதில் அடங்கியுள்ளது நம் புலம்பலுக்கான பதில்.

எப்போதும் நல்ல படைப்பு என்பது எழுதிய அக்கணமே நம்மை பெரும் திருப்தியில் ஆற்றிவிடும். அதன்பிறகு எழுதியவன் செய்வதெல்லாம் இதை எத்தனை பேர் சரியாக புரிந்துகொள்கிறார்கள் என்று வேடிக்கை பார்ப்பதே. எழுத்தாளனுக்கு ஆத்மதிருப்தி தர ஒரு பத்துப் பேர் (அதிகபட்சமாக) அதனை விளங்கிக் கொண்டாலே போதும்.

உலக இலக்கியம் பற்றியோ, நமது இலக்கியச் சூழல் பற்றியோ எவ்வித அடிப்படைப் புரிதலும் இன்றி, அய்யய்யோ..யாரும் வர மாட்டேங்கிறாங்களே..கமர்சியல் பதிவர்கள் என் பொழப்பை கெடுக்கிறாங்களே ‘ என்று கூவுவதை விடுங்கள். அதிக கூட்டம் வந்தால் ‘சம்திங் ராங்’ என்று சந்தேகப்படக் கற்றுக்கொள்ளுங்கள்.

பல வருட உழைப்பில் உருவான புத்தகமே வருடத்திற்கு ஆயிரம்கூட விற்பதில்லை..அதாவது ஒரு வருடத்திற்கு ஆயிரம் ஹிட்ஸ்கூட வாங்குவதில்லை என்பதை நினைவில் வையுங்கள். அதை ஒப்பிடும்போது, நமக்கு வருவது பெரும் கூட்டம் என்பது புரியும்.

கமர்சியல் பதிவர்கள் யாரும் எனக்குத் தெரிந்தவரை யாரையும் கையைப் பிடித்து இழுத்து வருவதில்லை..யாரையும் கத்தியைக் காட்டி மிரட்டியும் அழைத்து வருவதில்லை. அந்த வாசகர் வட்டம் தானாகவே உருவாகி வருவது. கமர்சியல் எழுதியும் ஹிட் ஆகாத பதிவர்களும் இங்கு உண்டு. நம் மக்கள் தங்களுக்கு எது தேவையோ, அதை அவர்களே தேர்ந்தெடுப்பார்கள்.

எந்தவொரு கமர்சியல் பதிவரும் யோக்கியப் பதிவருக்கு கூட்டம் வரக்கூடாது என்ற குறிக்கோளுடன் பதிவிடுவதில்லை. தனக்குத் தெரிந்ததை, பிடித்ததை பகிர்ந்து கொள்கிறார்கள். ‘நீ ஏன் 

இதை எழுதுறே..நீ ஏன் அதை அப்படி எழுதக்கூடாது’ என்று மிரட்டுவது பாசிசம். உங்களுக்குப் பிடித்ததைத் தான் எழுத வேண்டும் என்றால், உங்கள் ப்ளாக்கிலேயே எழுதி விடலாமே..தனியாக ஒரு ப்லாக் எதற்கு?

’நல்ல கருத்துகள் (மட்டுமே) அதிக வாசகர்களைச் சேரவேண்டும். அதுவே சமூகத்திற்கு நல்லது ‘ என்ற உங்கள் நோக்கம் சரி தான், ஆனாலும் நடைமுறை யதார்த்தம் நிஜவுலகிலும் பதிவுலகிலும் அப்படி இல்லை என்பதை நினைவில் வைப்போம்.

நல்ல படைப்பு வாசகனிடம் தொடர்ந்த சிந்தனையைக் கோரும். அதற்கு இங்கு யாரும் தயாராக இல்லை, அதற்கு அவர்களிடம் நேரமும் இல்லை என்பதை நினைவில் வைத்தால் குழப்பம் இல்லை.

மேலும், எழுதுவது மட்டுமே நம் வேலையாக இருக்கட்டும். எதைப் படிப்பது என்பதை வாசகரே தீர்மானிக்கட்டும். ஏனென்றால் அவர்கள் நம்மை விடவும் புத்திசாலிகள்!

இந்தப் பதிவிற்குச் சம்பந்தப்படாத ஒரு தகவல்...

தமிழ்மண தர வரிசைப் பட்டியலில் இருந்து எனது வலைப்பூவை நீக்கும்படி தமிழ்மணத்திடம் கேட்டுக்கொண்டுள்ளேன். இனி என் வலைப்பூ அங்கே காணப்பட மாட்டாது. நன்றி.

மேலும் வாசிக்க... "யோக்கியப் பதிவர்களை நசுக்கும் அயோக்கியப் பதிவர்கள்..."

Thursday, March 24, 2011

100வது ஃபாலோயரும் முதல் ஃபாலோயரும் பின்னே நானும்..

நேத்து பதிவு வழக்கத்துக்கு மாறா ரொம்ப சூடாப் போயிடுச்சு. அதனால முதல்ல ரிலாக்ஸ் பண்ணிப்போம்:

ஓ.கே..இப்போ இன்றைய பதிவைப் பார்ப்போமா..

சாதிச்சுட்டேன் மக்கா, சாதிச்சிட்டேன்..புதுசா ராக்கெட் ஏதும் ஏவிட்டனா-ன்னு யோசிக்காதீங்க...பதிவு எழுத வந்து 100 ஃபாலோயர்ஸைச் சேர்த்துட்டேன்..அதாவது அவங்களாச் சேர்ந்துட்டாங்க. நண்பர் செல்வன் 100வது ஃபாலோயராகச் சேர்ந்திருக்கிறார். அவருக்கு என் மனப்பூர்வமான நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்து எதுக்குன்னா யாருமே என் பதிவுல 100வது ஃபாலோயரா சேரலை..அவர் மட்டும் தான் 100வது ஃபாலோய்ரா ஆகி இருக்காரு. அதுக்குத் தான்!(என்னவே, நான் சரியா பேசுதனா?) அவர் 100வது ஃபாலோயராச் சேர உதவி செய்த மீதி 99 ஃபாலோயர்ஸ்-க்கும் நானே அவர் சார்புல நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்.

என்னோட தளத்திற்கு முதல் ஃபாலோயரா சேர்ந்தது ஈஸ்வரி ரகு-ங்கிற சகோதரி. அவங்க ரொம்ப ஸ்பெஷலான ஃபாலோயர்! எப்படின்னு சொல்றேன் கேளுங்க.

2010-ல ஒரு ஆறு மாசம் வேலை வெட்டி இல்லாம சும்மா இருந்தேன். சரி, சும்மாதானே இருக்கோம்,பதிவர் ஆகலாம்..ஹாலிவுட் பாலாண்ணன் வேற அன்பா கூப்பிட்டாரேன்னு நவம்பர்ல இந்த வலைப்பூவை உண்டாக்குனேன்!.நம்ம வலைப்பூ சும்மா இருக்கக்கூடாதேன்னு பக்திப்பூர்வமா ஒரு முருகர் படத்தையும் ‘குருவாய் வருவாய்’ போன்ற சில பாடல்களை எங்கிருந்தோ சுட்டு சும்மா போட்டுருந்தேன்.

அப்புறம் ஒரு மாசமா நானே என் ப்ளாக்கை ஓப்பன் பண்ணி முருகரைப் பாக்குறதும் ஃபீல் பண்றதுமா பொழுது போச்சு. திடீர்னு ஒருநாள் பாக்குறேன்..ஃபாலோயர் லிஸ்ட்ல ஒரு ஆளு சேர்ந்திருக்கு. என்ன அதிசயம், நாம தான் ஒன்னுமே எழுதலியே..அப்புறம் எப்படி.யாரும் நம்மளை வச்சு காமெடி பண்றாங்களோன்னு டவுட்டு. அதனால வழக்கமா அந்த வேலையைச் செய்யுற தங்க மணிகிட்டயே காட்டுனேன்..

அவங்க ‘பாத்தீங்களா.. எவ்வளவு நல்லவங்களா இருக்காங்க...அதுக்காகவாவது நீங்க எழுதாம இருக்கலாமே..பாவம் இல்லையா அவங்க’ன்னு ஓட்டுனாங்க.  அப்புறமா விளக்கிச் சொன்னேன், ‘அவனவன் எம் எல் எம்காரன் மாதிரி சொந்தக்காரன்/நண்பன் கழுத்துல கத்தியை வச்சு மிரட்டி ஃபாலோயராச் சேத்துக்கிட்டிருக்கான்! நமக்கு தன்னாலயே சேர்றாங்களே’ன்னு! அப்புறமென்ன..இனியும் பொறுக்கக்கூடாதுன்னு பதிவு எழுத ஆரம்பிச்சுட்டேன்.

அந்த அன்புச் சகோதரி இப்பவும் படிக்காங்களா..இல்லே நான் போடுற படங்களைப் பார்த்து தலை தெறிக்க ஓடிட்டாங்களான்னு தெரியலை! இருந்தாலும் நான் ஒன்னும் எழுதாத போதே என் திறமையைப் புரிஞ்சுக்கிட்டு(?), ஃபாலோயராச் சேர்ந்து என் பதிவுலக வாழ்க்கையை குத்துவிளக்கேத்தி துவக்கி வைத்த அந்த அன்புச் சகோதரிக்கு நன்றி. நீங்க எங்கிருந்தாலும் எல்லா வளமும் பெற்று நல்லா இருக்கணும்னு என்னப்பன் முருகன்கிட்ட வேண்டிக்கிறேன். 

100 பேர் சேரும்வரை என்னைப் பற்றிய விவரங்களை வெளியிடக்கூடாது என்று வைராக்கியத்தோடு இருந்தேன். இனி என்னைப்பற்றிய விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக லீக் செய்யப்படும். இப்போதைக்கு நான் ஒரு ஆம்பிளை என்றும் குவைத்தில் பொறியாளனாக வேலை செய்கிறேன் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். எனது முத்துன முகத்தைப் பார்க்க உங்களைத் தயார்ப்படுத்தும் விதமாக, என் பிஞ்சு முகத்தை இங்கே போடுகிறேன்.
மேல தமன்னா..கீழ குஷ்பூ..ம்ம்..கலக்குற செங்கோவி!
தினமும் 100 பேர் வந்தாலே போதும், சந்தோசமா எழுதலாம்னு நினைச்சுத்தான் வந்தேன். அதனால ஃபாலோயர்ஸ் டார்கெட்டை 100ஆ ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டேன். அந்த 100 பேரும் முன்னப்பின்னத் தெரியாதவங்களாத்தான் இருக்கணும்னு முடிவு பண்ணேன்! அதனால மொய்க்கு மொய் சிஸ்டத்தையும் ஃபாலோ செய்யவில்லை. எப்படியோ பதிவுலகிற்கு வந்த மூன்று மாதங்களில் டார்கெட்டை அச்சீவ் பண்ணீட்டேன்.(இண்ட்லியில் உள்ள ஃபாலோயர்ஸ் லிஸ்ட் தனி.) அதனால இப்போ என்ன செய்யப் போறேன்னா......
கரெக்ட்..திரும்பிப் பார்த்து ஆரம்ப காலத்தில் எனக்கு ஆதரவளித்தோருக்கு நன்றி சொல்லப் போறேன்.

முதல் பதிவிற்கு முதல் பின்னூட்டம் போட்டு மங்களகரமாகத் துவக்கி வைத்த பிரபல பதிவர் கேபிள் சங்கர் அவர்களுக்கு நன்றி. எனது ஆரம்ப காலத்தில் நான் தனியே தன்னந்தனியே இருந்த போது பின்னூட்டம் போட்டு என்னை உற்சாகப்படுத்திய பாரத்..பாரதி, கஸாலி, இரவு வானம், ஜீ, சிவகுமார், சே.குமார், சித்ரா போன்றோருக்கு நான் நிச்சயம் கடமைப்பட்டிருக்கிறேன்.

எனது தேர்தல் ஸ்பெஷல் தொடரை தனது தளத்தில் குறிப்பிட்டு, எனக்கு விளம்பரம் தேடித்தந்த நண்பர் தொப்பிதொப்பிக்கும் அதே பதிவில் அதை ஆமோதித்து பாராட்டிய (மீண்டும்) பாரத்..பாரதி & ஆனந்தியக்காவிற்கும் நன்றிகள்.

வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய சிரிப்பு போலீஸ் ரமேஷ் அவர்களுக்கும் கஸாலிக்கும் நன்றிகள் பல. அது என்னைப் பல வாசகர்களிடம் கொண்டு சேர்த்தது.

மேலும் பல உற்சாகமான நண்பர்களிடம் என்னைக் கொண்டு சேர்த்த நமீதா, குஷ்பூ, சிநேகா, பாவனா, சில்க் ஸ்மிதா போன்றோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

எனக்கு இத்தனை பேர் ஃபாலோயராகச் சேர்ந்தாலும், நான் இன்னும் பெரும்பாலானோருக்கு ஃபாலோயராகச் சேரவில்லை. இனி சேர முயற்சிக்கிறேன். சென்னைப்பித்தன், அமுதா கிருஷ்ணா, இக்பால் செல்வன், ராஜராஜேஸ்வரி போன்ற பலரின் எழுத்துக்களை நான் விரும்பிப் படித்தாலும் பின்னூட்டம் இடுவதில்லை..நேரமின்மையே காரணம். யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

இதுவரை எழுதியதில் எனக்குப் பிடித்தது முந்து சிறுகதை தான். எனது பதிவுகளில் அட்டர் ஃப்ளாப்பும் அதுவே!

பொதுவாக யாரையும் காயப்படுத்தக் கூடாது என்ற மனப்பான்மை கொண்டவன் நான். ஆனாலும் நான் நடிகைகளின் படத்தைப் போடுவது சிலருக்கு வருத்தத்தையும் கோபத்தையும் உண்டாக்கி இருப்பதை அறிவேன். நான் எந்தவிதமான சமூகப் புரட்சியும் செய்ய பதிவுலகிற்கு வரவில்லை. சும்மா ரிலாக்ஸ் பண்ணவே வந்தேன். 

’நீங்கள் காசு கொடுத்து வாங்கும் குமுதம்/விகடன் போன்ற பத்திரிக்கைகளில் வரும் படங்களை விட எனது பதிவில் வரும் படங்கள் பெட்டர், எனவே அதில் தவறேதும் இல்லை ’என்றே இத்தனை நாளாக நினைத்து வந்தேன். ஆனால் இப்போது அது தவறு என்பதை மனதார உணர்ந்துவிட்டேன். தவறு என்று தெரிந்தபின் மன்னிப்பு கேட்க நான் தயங்குவதில்லை.எனவே இதுவரை போட்ட கவர்ச்சிப் படங்களுக்காக அன்புச்சகோதரிகள்+நல்ல ஆத்மாக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.

அப்புறம் இனிமேல் போடப்போகும் கவர்ச்சிப் படங்களுக்காகவும் இப்போதே அவர்களிடம் அட்வான்ஸ் மன்னிப்பைக் கோருகிறேன். இன்னும் நூறு பேர் ஃபாலோயராகச் சேர்ந்தால் மட்டுமே புது மன்னிப்பு கேட்பேன் . அதுவரை இதையே பத்திரமாக வைத்துக் கொள்ளவும். தொலைத்தால் எங்கள் சங்கத் தலைவரைத் தொடர்பு கொள்ளவும்.

வேறு ஏதேனும் மாற்றங்களை என் பதிவுகளில் எதிர்பார்க்கிறீர்களா? அப்படி ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும்.

என்னை, எனது கிறுக்குத்தனங்களோடு ஏற்றுக்கொண்டு பின் தொடரும் நல்ல உள்ளங்களுக்கு மீண்டும் நன்றி! நன்றி! நன்றி!

மேலும் வாசிக்க... "100வது ஃபாலோயரும் முதல் ஃபாலோயரும் பின்னே நானும்.."