Showing posts with label வலைப்பூ. Show all posts
Showing posts with label வலைப்பூ. Show all posts

Tuesday, June 19, 2012

ஆபீசருடன் ஒரு சந்திப்பு...


இந்த இந்தியப் பயணத்தில் என்னை அசர வைத்த மனிதர் ஆபீசர் என்று நம்மால் அன்போடு அழைக்கப்படும் உணவுலகம் சங்கரலிங்கம் அவர்கள் தான். என்னைப் பார்க்க வேண்டும் என்ற விபரீத ஆசையை அவர் சொன்னபோது, நான் ’வேலைப்பளு காரணமாக என்னால் திருநெல்வேலி வரமுடியாது. எனவே அடுத்த முறை பார்ப்போம்’ என்று சொன்னேன். 

அதற்கு அவர் ‘அதனால் என்ன..கோவில்பட்டியில் எங்கேன்னு சொல்லுங்க. நானே வர்றேன்’ என்றார். எவ்வளவு பெரிய மனிதர்..தானே வருவதாகச் சொல்கிறாரே என்று மெல்ட் ஆகிவிட்டேன். ஆனாலும் கோவில்பட்டியில் சந்திக்க முடியாதபடி, தொடர்ந்து வேலை. கடைசியாக கிளம்புவதற்கு முதல்நாள் சங்கரலிங்கம் சாரை சங்கரன்கோவிலில் சந்திப்பது என்று முடிவு செய்தேன். அவரும் அங்கு வருவதாக ஒத்துக்கொண்டார். 

ஆனால், அதுவே எனக்கு ஆப்பாகும் என்று நான் நினைக்கவேயில்லை.

(தொடரும்)


ச்சே..தொடர்கதையா எழுதி, ஏதாவது (கேவலமான) சஸ்பென்ஸ் வந்தாலே கை தன்னால தொடரும் போடுது..சரி, அதை விடுங்க. என்ன ஆப்புன்னு சொல்றேன்..

தங்கமணிகிட்ட சங்கரன்கோவிலில் ஆபீசரைப் பார்க்கப் போறேன்னு சொன்னேன். அவங்க சந்தோசமா “அந்த ஜவுளிக்கடைப் பக்கத்துல என் ஃப்ரெண்ட் வீடு இருக்கு.நானும் அவளைப் பார்க்கணும். என்னை அங்கே விட்டுட்டுப் போங்க”ன்னாங்க. அந்த ஜவுளிக்கடைல தான் ரெண்டு வாரம் முன்ன இருபதாயிரம் ரூபாய்க்கு வேட்டு வச்சாங்க.அங்கிருந்த சேல்ஸ் கேர்ள்ஸ் என்னைப் பரிதாபமாப் பார்த்து “சார், உங்களுக்கு எதுவும் எடுக்கலியா? கூல் ட்ரிங்ஸ் வேணா சாப்பிடுறீங்களா?” என்று கேட்டு என்னை கேவலப்படுத்தியது ஞாபகம் வந்தது. ‘மறுபடியும் அந்தப் பக்கமா’ என்று பயந்தேன். நான் பயந்தது சரியாப் போச்சு.

சங்கரன்கோவில் போய் ஃப்ரெண்ட் வீட்ல தங்கமணியை இறக்கி விட்டப்போ “என்னாங்க...எனக்கு இன்னும் ஒரே ஒரு ட்ரெஸ் எடுக்க வேண்டியிருக்கு. நான் இவளைப் பார்த்துட்டு அங்கே இருப்பேன்..வந்திடுங்க” என்று அடுத்த அணுகுண்டைப் போட்டார். ஆபீசரால நமக்குச் செலவு தானா என்று நொந்துகொண்டேன். சரி என்று சொல்லிவிட்டு, ஆபீசரைச் சந்திக்க பஸ் ஸ்டாண்ட் விரைந்தேன்.

ஆபீசர் பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து ஸ்லோ மோசனில் வெளியே வந்தார். ஃபோட்டோவில் பார்த்ததை விடவும் ஹேண்ட்சமாக இருந்தார். காலேஜ் படிக்கும்போது எப்படியும் பத்துப் பதினைந்து தேற்றியிருப்பார் என்று தோன்றியது. புகைச்சலை மறைத்தபடியே “ஹலோ சார் “என்று கை கொடுத்தேன். முகமெல்லாம் மலர ”நல்லாயிருக்கீங்களா?” என்று கேட்டார்.

பிறகு அருகில் இருந்த ஹோட்டலில் போய் உட்கார்ந்தோம். காஃபி ஆர்டர் செய்துவிட்டு ரொம்ப நேரம் பதிவுலகம் பற்றியும் அதை மேலும் எப்படி முன்னேற்றுவது என்றும் விவாதித்தோம். ”20 நாளா நான் ஒன்னுமே எழுதலை “ என்றார் ஆபீசர். ”நானும் கம்மியா தான் எழுதறேன்” என்றேன். ‘இப்படியே தொடர்ந்தால், பதிவுலகம் உருப்பட்டுவிடும்” என்று முடிவு செய்தோம்.

அடுத்து காஃபி சாப்பிட்ட பில் வந்தது. காஃபி மட்டும் தான் என்பதால், நானே காசு கொடுத்து விடலாம் என்று முடிவு செய்தேன். ஆனாலும் ஆபீசர் விடவில்லை..அவரே பில் பே பண்ணினார்..என்ன இருந்தாலும் பெரிய மனுசன், பெரிய மனுசன் தான்யா! 

அடுத்து ஆபீசர் செண்ட் பாட்டில் ஒன்றை எனக்குப் பரிசாக அளித்தார். எதை வைத்து என்னை நாத்தம் பிடிச்ச மனுசன்னு முடிவு செய்தார்ன்னு தெரியலை. இருந்தாலும் ஓசிக்கு வருவதை வேண்டாம்னு சொல்லக்கூடாது என்பதால், வாங்கிக் கொண்டேன்.

நேரம் ஆகிவிட்டதால் கிளம்புகிறேன் என்றார் ஆபீசர்.’ஃபேமிலியோ சென்னையில..ஆனாலும் வீட்டுக்குபோக ஏன் அவசரப்படுறார்..சம்திங் ராங்’-ன்னு தோணினாலும் அவர் மேல் உள்ள மரியாதையால் கேட்கவில்லை. 

’என் ஃபேமிலி இங்கே தான் இருக்காங்க..வாங்க, பார்த்துட்டே போகலாம்’ன்னு சொல்லி அவரை அழைச்சுக்கிட்டு ஜவுளிக்கடைக்குப் போனேன் அங்கே லேடீஸ் செக்சனுக்குச் சென்றால், தங்கமணியைக் காணவில்லை. ஏற்கனவே இங்கே வந்து நொந்து நூலானவன் என்பதால், அங்கிருந்த சேல்ஸ் கேர்ள்ஸ்க்கு என்னை ஞாபகம் இருந்தது. 

‘என் வீட்ல வந்தாங்களா?” என்று ஒரு பெண்ணிடம் கேட்டேன்.

அவர் ‘இல்லையே சார்..நீங்க வேணா வெயிட் பண்ணுங்க சார்..வரட்டும்’ என்றார்.

இடையில் புகுந்த இன்னொரு பெண் “ஏ, உனக்கு இவங்களைத் தெரியுமா?’ என்றார்.

“ஹே, சாரை எனக்கு நல்லாத் தெரியும்டி.” என்று அவர் பதில் சொல்லும்போது தான் ஆபீசர் இருப்பதே ஞாபகம் வந்தது. திரும்பிப் பார்த்தால் பேயறைந்தது போல் நின்றுகொண்டிருந்தார் ஆபீசர். ‘இவன் இங்க வந்தே ஒரு மாசம் தானே ஆகுது..அதுக்குள்ளயே இப்படியா..’ன்னு அவரு யோசிப்பது புரிந்தது.

“இல்லை சார்..நான் ஏற்கனவே இங்க பர்ச்சேஸ்..” என்று நான் ஆரம்பிக்கவும் ‘போதும்..மூடு’ என்பது போல் கையைக் காட்டினார். ‘ஆஹா..பதிவரைக் கூட வச்சுக்கிட்டு வேண்டாத வேலை பார்த்துட்டமே’ன்னு நினைச்சுக்கிட்டேன். அவருக்கு என்ன ஞாபகம் வந்துச்சோ ‘சரிங்க..நான் வீட்டுக்குப் போகணும்..கிளம்புறேன்’ன்னு ஆரம்பிச்சார். ‘சரிதான்..மனுசன் பேச்சுலர் லைஃபை எஞ்சாய் பண்றார் போல’ என்று நினைத்துக்கொண்டேன்.

நாங்கள் கீழே இறங்கி வரவும் என் மகனும் தங்கமணியும் வரவும் சரியாக இருந்தது. ‘சார் தான் எங்க ஆபீசர்’ என்று அறிமுகப்படுத்தி வைத்தேன். ஒரு பதிவரின் மனைவி என்பதால் என் தங்கமணிக்கு பதிவர்கள் மேல் பெரும் மரியாதை(!) உண்டு. ஆனாலும் அன்று ஆபீசருக்கு பணிவுடன் வணக்கம் வைத்தார். 

திடீரென ஆபீசர் கேமிராவை வெளியே எடுத்தார். ‘பயப்படாதீங்க..பதிவுல போட மாட்டேன்’ என்று உறுதி கொடுத்தார். ‘போட்டுட்டாலும்..ஹூம்’ என்று தங்கமணி ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தார். பதிவில் போடுவதற்கு ஏற்றவாறு ஸ்பெஷல் ஃபோட்டோக்களும் எடுத்துக்கொண்டோம். 

பிறகு தங்கமணியை ஜவுளிக்கடைக்குள் அனுப்பிவிட்டு, மீண்டும் பஸ் ஸ்டாண்ட் நோக்கி பேசிக்கொண்டே நடந்தோம். ’ஆக்சுவலி பதிவர்கள் அனைவரும் நல்லவர்கள் தான்..பதிவர்கள் பற்றி வரும் எந்தவொரு வதந்தியையும் நீங்க நம்பக்கூடாது’ என்று அட்வைஸ் பண்ணினார். 

பஸ் ஸ்டாண்ட்டை நெருங்கவும் ‘சரிங்க..நான் கிளம்புறேன்’ என்று அவசர அவசரமாக ’பேச்சுலர்’ ஆபீசர் விடை பெற்றார்.

அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து, டெபிட் கார்டை பழுக்க வைத்துவிட்டு ஜவுளிக்கடையில் இருந்து தங்கமணியுடன் வெளியில் வந்தேன்! ‘சாப்பிட்டுட்டே போகலாம்’ என்று தங்கமணி சொன்னதால், பஸ் ஸ்டாண்ட் அருகே பைக்கை நிறுத்தி விட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். ஆபீசர் எங்குமே தென்படவில்லை. ‘

அப்பாடி’ என்று நிம்மதிப் பெருமூச்சுடன் கொத்துப்புரோட்டா கடைக்குள் நுழைந்தோம்.


மேலும் வாசிக்க... "ஆபீசருடன் ஒரு சந்திப்பு..."

Sunday, May 27, 2012

இம்சையுடன் ஒரு பதிவர் சந்திப்பு...


டிஸ்கி: தலைப்பை பிரபல பதிவர்-தொழிலதிபர் இம்சை அரசன் பாபுவுடன் ஒரு பதிவர் சந்திப்புஎன்று விரித்துப் புரிந்து கொள்ளவும்.

மக்கு பதிவர்னாலே பயம்..அதுவும் பதிவர் சந்திப்புன்னா பயமோ பயம்..அதனால யார் கையிலயும் சிக்காம ஃப்ரீயா சுத்திக்கிட்டிருந்த எனக்கு சிரிப்பு போலீஸ் ரமேஷ் மூலமா ஒரு சோதனை வந்தது. இம்சை அரசன் பாபு கோவில்பட்டி தான்..நம்ம க்ளோஸ் ஃப்ரெண்டு..அவசியம் போய்ப் பாருங்கன்னு சொல்லி அட்ரசும் சொல்லிட்டார். டெய்லி அந்த வழியாத் தான் நான் போய்க்கிட்டு இருந்ததால பத்து நாள் தீவிரமா யோசிச்சு, இந்த சோதனையை எதிர்கொள்றதுன்னு முடிவு பண்ணேன்.

சிப்பு (இதை சிரிப்பு போலீஸ் ரமேஷ் என்று விரிக்கவும்!) ஃப்ரெண்ட்டுன்னா, அவர் மாதிரியே யாரோ ஒரு சின்னப் பையன்(!)ன்னு நினைச்சுக்கிட்டே அவர்கூட ஃபோன்ல பேசுனேன். இம்சை அரசனும் ரொம்ப சந்தோசமா ஃப்ரீயா இருக்கும்போது வாங்கன்னார். நம்மளோ குளிக்கும்போது தான் ஃப்ரீயா இருப்போம்..அப்போ எப்படிப் போறதுன்னு நானா யோசிச்சுக்கிட்டே இன்னைக்கு ஈவ்னிங் வர்றேன்னு சொன்னேன்.

அப்புறம் தான் சோதனை ஆரம்பிச்சுச்சு..உடனே அவரு வாங்க வாங்க..கோவில்பட்டிலேயே பெரிய்ய்ய ஹோட்டலாப் போய் ரெண்டு மணி நேரம் சாப்பிட்டுக்கிட்டே நிதானமாப் பேசலாம்னு சொன்னாரு. என்ன இருந்தாலும் அவரு ஒரு பதிவர் இல்லியா..அதனால எங்கயும் சிக்கிக்காத படி போகலாம்..சாப்பிடலாம்னு சொல்றாரே ஒழிய யாரு காசு கொடுக்கணும்னு சொல்லவேயில்லை. நானும் வர்றேன்னு சொல்லிட்டு ஃபோனை வச்சுட்டேன்.

எனக்கோ இதுல யாரு பலியாடுன்னு புரியலை..எதுக்கு வம்பு..இப்படியே எஸ் ஆகிடுவோம்னு முடிவு பண்ணி சாயந்திரமா அவருக்குக் கூப்பிட்டு அண்ணே, நான் ரொம்ப பிஸி..வர முடியலைன்னு சொன்னேன். அவரும் பரவாயில்லைங்க..நாளைக்கு என் ஆஃபிசுக்கு வந்திருங்கன்னு சொன்னாரு.

எனக்கும் அது சரின்னு தோணுச்சு..காலைல பத்து மணிக்குப் போனா யாருக்கும் சேதாரம் இல்லாம தப்பிச்சுடலாம்னு முடிவு பண்ணி, ஒலக முக்கியத்துவம் வாய்ந்த அந்த சந்திப்புக்கு நான் ஒத்துக்கிட்டேன்.

ஆனாலும் விதி செஞ்ச சதியால பதினொரு மணிக்கு அவர் ஆஃபீஸ் பில்டிங் முன்னாடி போய் நின்னேன். ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல அண்ணன் ஆஃபீசு. மேல போயி ஆஃபீசுல வாசல்ல நின்னுக்கிட்டு இப்போ எப்படிக் கேட்கறது..இம்சை அரசன்னு சொன்னாத் தெரியுமான்னு யோசிக்கும்போதே வாங்க...வாங்கன்னு ஒரு தேன் மதுரக் குரல் கேட்டுச்சு..திரும்பிப் பார்த்துட்டு அசந்துட்டேன். நீங்களும் அசரணும்னா கீழே இருக்கிற ஸ்டில்லைப் பாருங்க:

என்னடா இது..நம்ம ஊருல இப்படி ஒருத்தரா..அஜித்குமாரோட அசல் மாதிரி இருக்காரே..பொதுவா பதிவர்னாலே பேக்கு மாதிரி தானே இருப்பாங்கன்னு பிரமிச்சு நின்னப்போ வாங்க செங்கோவி..உட்காருங்கன்னு சொன்னார். இவங்க தான் என் ஒய்ஃப்ன்னு அண்ணியாரை அறிமுகம் செஞ்சு வச்சார். யாரை முதல்ல பார்த்தாலும் பேக்கு மாதிரி முழிக்கிற என் வழக்கப்படி ஒரு வணக்கம் போட்டுட்டு முழிச்சேன்.

அண்ணனைப் பார்த்தவுடனே எல்லாருக்கும் தோணுற அதே கேள்வி எனக்கும் தோணுச்சு..கேட்டேன்..இவ்ளோ ஹேண்ட்சமா இருக்கிறீங்களே..நீங்க ஏன் உங்க ஸ்டில்லை உங்க ப்ளாக்ல போடுறதில்லைன்னு கேட்டேன்..அது வேணாங்க..ரசிகைங்க தொல்லை ஜாஸ்தி ஆகிடும்..நானோ ஏக பத்தினி விரதன்னாரு. எனக்கு புல்லரிச்சுடுச்சு.. அண்ணியாருக்கு கண் கலங்கிடுச்சு..கண்ணைத் துடைச்சுக்கிட்டேநீங்க பேசிக்கிட்டிருங்கன்னு சொல்லிட்டு வெளில போய்ட்டாங்க.

அண்ணியாரும் பிசினஸ்ல கூடவே இருந்து உதவி செய்றாங்கன்னு சொன்னாரு..அடப்பாவமே..வீட்டுக் கஜானாவை அவங்ககிட்ட கொடுத்தது பத்தாதுன்னு ஆஃபீஸ் கஜானாவையும் அங்க கொடுத்துட்டு உட்கார்ந்திருக்காரே..அப்போ நாம நேத்து எஸ்கேப் ஆனது சரி தான்ன்னு நினைச்சுக்கிட்டேன்.

ஆனால் அண்ணன் யாரு..விட்டுடுவாரா..அப்புறம், மதியம் சாப்பிட எங்க போகலாம்?”னாரு..ஆஹா...மனுசன் கொலைவெறியோட இருக்காரு போலிருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இல்லைண்ணே, இன்னிக்கு நான் விரதம்னு ஒரே போடாப் போட்டுட்டேன்.
ஒன்னுமே சாப்பிடமாட்டீங்களா?”ன்னாரு.
ஒன்லி ஜூஸ்ன்னு சொன்னேன். அவரும் ஆஃபீஸ் பாயை (பாய் தான்..!) மொபைல்ல கூப்பிட்டு ஏதாவது ஜூஸ் வாங்கிட்டு வா..ஆப்பிள்..ஆரஞ்சு..எதுன்னாலும் ஓகேன்னு சொல்லிட்டு, என்கிட்ட பேச ஆரம்பிச்சாரு.
அண்ணன்கிட்ட ஒரு அருமையான குணம் இருந்துச்சு..பொதுவா ஒரு பதிவர்கிட்ட நான் முருக வேட்டைன்னு ஒரு தொடர் எழுதறேன்ன்னு சொன்னா, ‘ஆங்..பார்த்தேன்..நான்கூட ஒரு தொடர் எழுதுனேன் முன்னாடி படிச்சீங்களான்னு ஆரம்பிச்சு அவங்க எழுதுனதைப் பத்தியே பேசுவாங்களேயொழிய நம்மளைப் பத்தி ஒன்னும் சொல்ல மாட்டாங்க. ஆனா அண்ணன் ரொம்ப நேரம் என் பதிவுகளைப் பத்தி விலாவரியாப் பேசுனாரு..

அப்புறம் தான் கவனிச்சேன்..அவருக்குப் பின்னாடி வரிசையா ஏகப்பட்ட சாமி ப்டங்களா மாட்டியிருந்துச்சு..அண்ணனோட தேஜஸ்க்கும் அதுக்கும் ஏகப் பொருத்தம்..நம்ம நித்திக்கு வேற மார்க்கெட் போயிருச்சே..பேசாம அண்ணன் கழுத்துல கொட்டையை மாட்டி, களத்துல இறக்கிடலாமான்னு யோசிச்சேன். ஆனாலும் ஆப்பிள் ஜூஸ் வர்ற வரைக்குமாவது சும்மா இருப்போம்னு நான் ஒன்னும் சொல்லலை.

ஆனாலும் தவளையும் தன் வாயால் கெடும்கிற கதையா நான் இன்னிக்கு காலைல ஒரு போஸ்ட் போட்டிருக்கேன்..பார்த்தீங்களா?”ன்னு கேட்டுட்டேன். அப்படியான்னு கேட்டுக்கிட்டே பக்கத்துல இருந்த கம்ப்யூட்ட்ர்ல ஜெ.வின் ஓராண்டு ஆட்சி-ஒரு பார்வைங்கிற பதிவை ஓப்பன் பண்ணாரு..கொஞ்சம் படிக்கவுமே டென்சன் ஆகிட்டாரு. அண்ணன் அந்தக் காலத்துல இருந்தே மம்மி ரசிகர் போல..

பதிவை இன்னும் நல்லா எழுதியிருக்கலாம்னு ஆரம்பிச்சு இது நல்ல ஆட்சி தான்ங்கிற மாதிரியே பேசுனாரு. பேசிக்கிட்டே மொபைலை எடுத்து யாருக்கோ மிஸ்டு கால் வேற கொடுத்தாரு. நமக்கு பகீர்னு ஆகிடுச்சு..ஆஹா..தேவையில்லாம ஒரு தொழிலதிபரை பகைச்சுக்கிட்டமேன்னு கவலையாப் போச்சு.

ஜூஸ் வாங்கப் போன ஆளும் திரும்பி வந்தாரு..பார்த்தா அரை டம்ப்ளர்ல கொஞ்சூண்டு பெப்சி..ஆஹா..அண்ணன் ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்து ஜூஸை பெப்சி ஆக்கிட்டாரே..இனிமே யாரையும் சந்திக்கிறதா இருந்தா, அன்னிக்கு பதிவே போடக்கூடாதுங்கிற பாடத்தைக் கத்துக்கிட்டேன். அப்புறம் அண்ணன் பல பதிவுகலக பயங்கர ரகசியங்களைப் பத்திப் பேசுனாரு..பல நல்ல அட்வைஸ்லாம் கொடுத்தாரு. அடுத்து அண்ணன் சொன்னதைக் கேட்டுத் தான் நான் மெல்ட் ஆகிட்டேன்.

ரொம்ப கேசுவலா எங்கயும் போகணும்னா என் காரை எடுத்துக்கிட்டுப் போங்க..சும்மா தயங்காமக் கேளுங்கன்னாரு. நான்லாம் என் பையனோட பொம்மைக் காரையே யாருக்கும் தர மாட்டேன்..பக்கத்து வீட்டுப் பையன் வந்து கதவைத் தட்டுனா, அந்த பொம்மைக் காரை ஒளிச்சு வச்சுட்டுத் தான் கதவையே திறப்பேன்..ஆனா அண்ணனுக்கு எவ்ளோ பெரிய மனசுன்னு நினைச்சு புல்லரிச்சுப் போச்சு எனக்கு.

அண்ணனும் தொடர்ந்து நான் ரொம்ப சிம்பிளா இருப்பேங்க..கார்ல ஆஃபீசுக்கு வந்தாலும், கீழேயே காரை விட்டுட்டு வந்திடுவேன். இந்த ஃபர்ஸ்ட் ஃப்ளோருக்கு நடந்தே தான் வருவேன்ன்னாரு..இதன்மூலமா அண்ணன் பூந்தி மாதிரி இனிமையானவர் மட்டுமில்லை, காந்தி மாதிரி எளிமையானவர்னும் தெரிஞ்சுக்கிட்டேன்.

அப்புறமா வீட்டுக்கு வாங்கன்னு சொல்லிட்டு, வீடு இருக்கிற இடத்தைச் சொன்னாரு..அது என் அண்ணன் இருக்கிற ஏரியா..அவரைத் தெரியுமான்னு கேட்டேன்..அடடா..அவர் என் ஃப்ரெண்டுங்க..அவர் தம்பியா நீங்கன்னு ரொம்ப சந்தோசப்பட்டார்.

ஆஹா..நாம ஃபாரின் ரிட்டர்ன்..பெரிய அப்ப்பாடக்கர்னு பீலா விடலாம்னு வந்தா, மனுசன் மெயின் ஆளையே கைக்குள்ள வச்சிருக்காரேன்னு நினைச்சுக்கிட்டு, ஆஃப் ஆகிட்டேன்..

அதுக்குள்ள அந்த அரை டம்ப்ளர் பெப்சியும் தீர்ந்து போயிடுச்சு..சரிண்ணே, நான் கிளம்பறேன்ன்னு சொல்லிட்டு எழுந்தேன்.

அவரும் எழுந்து கை கொடுத்துட்டு சரி, ஃப்ரீ ஆகிட்டு வாங்க..சாப்பிடப் போகலாம்னாரு.

அடப்பாவிகளா..போகலாம்.போகலாம்ங்கிறாங்க..ஆனா யாரு பே பண்ணுவாங்கன்னு சொல்லவே மாட்டேங்கிறாங்களேன்னு நொந்துக்கிட்டே திரும்பிட்டேன்.

இவ்வாறாக ஒரு சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்த திருப்தியுடன், அந்த பதிவர் சந்திப்பு இனிதே நிறைவுற்றது.

மேலும் வாசிக்க... "இம்சையுடன் ஒரு பதிவர் சந்திப்பு..."

Sunday, December 12, 2010

நானும் ஹாலிவுட் பாலாவும்...

நான் ஒரு 32 வயதே நிரம்பிய இளம்(?)பொறியாளன். கடந்த 3 வருடங்களாக தமிழ்ப் பதிவுலகின் வாசகன். அனேகமாக எல்லா பதிவர்களின் பதிவைப் படிப்பதும் பதிவுலகில் நடப்பவற்றை வேடிக்கை பார்ப்பதுமே எனக்குப் பொழுதுபோக்கு..’அப்படியே இருந்துருக்க வேண்டியதுதானே..ஏம்ப்பா எழுத வந்தே ன்னு நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்குக் காரணம்  ஹாலிவுட் பாலா தான்..எப்படீன்னா..சொய்ங்..சொய்ங்..

தோராயமா ஒரு வருடம் முன்பு ஹாலிவுட் பாலா ‘Eyes Wide Shut’ங்கிற ஒரு காவியத்திற்கு(!) விமர்சனம் போட்டார். ஒரு வலைப்பதிவு வாசகனாக என்ன செய்திருக்கவேண்டும் நான்?..பதிவைப் படித்தோமா..குளோஸ் பண்ணோமான்னு போயிருக்கணும்!!!..அப்படி இல்லாம ஒரு பின்னூட்டம் போட்டேன்..

அப்போதான் (உங்க)விதி பாலாண்ணன் ரூபத்தில் இப்படி பதில் போட்டது: இவ்வளவு தெளிவா..அழகா..அருமையா..ஒரு பின்னூட்ட்த்திலேயே இம்ப்ரஸ் பண்ணினது நீங்களாத்தான் இருக்கும்..நீங்க இன்னும் பிளாக் எழுத ஆரம்பிக்காதது..கூடிய விரைவில் எழுத ஆரம்பிக்க இப்பொழுதே என்னுடைய வாழ்த்துக்கள் (அவர் இப்படித்தான் நிறையப் பேர உசுப்பேத்தியிருக்கார்னு அப்போ எனக்குத் தெரியாது!)

இதுக்கு நானும் அசராம இப்படி பதில் சொன்னேன்: என்னது பிளாக் எழுதவா?..நான் நல்லா இருக்குறது பிடிக்கலையா.. நல்லா கிளப்புறாங்கப்பா பீதியை..கமெண்ட் போட்டது ஒரு குத்தமாயா?..ரொம்ப நாளா உங்க பிளாக்கைப் படிச்சும் இப்போதான் கமெண்ட் போடுரேன்னா, அதுலேயே தெரியலையா என் சுறுசுறுப்பு..எனினும் ஒரு மூத்த பதிவரிடமிருந்து வந்த அழைப்பை மிகப் பெரும் கௌரவமாகவே எடுத்துக் கொள்கிறேன்


ஸ்கூல்ல படிக்கும்போதே நமக்கு கதை, நாவல்னா ரொம்ப ஆர்வம்..அப்போ நானே யோசிச்சு’ 2 கதைகளை எழுதி குமுதத்திற்கும் விகடனுக்கும் அனுப்பினேன்..அன்னைக்கி காந்தி ஜெயந்திங்கிறதால 2 கதையும் வாங்க ஆளில்லாமல் திரும்பி வந்துடுச்சு(உஷ்..எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு). அப்புறம் முதல்ல பூவாவுக்கு வழி பண்ணுவோம்னு பொறியியல் பக்கம் போய்ட்டேன்.. 


இது தெரியாமல் பாலாண்ணன் எனக்குள்ள சுருண்டு தூங்கிட்டிருந்த படைப்பாளியை எழுப்பி விட்டுட்டாரு..அதனாலதான் இப்போ எழுதவே வந்துட்டேன்..ஆனா நான் எழுதி அறுக்க வந்துருவேன்னு பயந்தோ என்னவோ ஹாலிவுட் பாலாண்ணன் கடையைப் பூட்டிட்டு தற்காலிகஓய்வுல போய்ட்டாரு..அண்ணே எங்கிருந்தாலும் வாழ்த்துங்க..

ரொம்ப நாளா பிறரின் பதிவுகளைப் படிக்கிறதால, பதிவர்களை ரொம்ப உரிமையா நண்பர்கள் வட்டத்துல ஓட்டிப்போம்..உதாரணமா:

மாப்லே, ஒரு ஆச்சரியமான விசயம் கேளு..திருப்பூர் பக்கத்துல ஒரு மலைப் பாம்பு பிடிபட்டுருக்காம்

இதுல என்னப்பா ஆச்சரியம்?”

அட, அது நம்ம உண்மைத் தமிழன் பதிவை விடவும் நீளமா இருக்காம்!

இப்போ நம்மை எத்தனைபேர் ஓட்டப்போறாங்களோன்னு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.

எழுதுறதுன்னு முடிவு செய்தபின், என்ன எழுதுறதுன்னு குழம்பி என் அதிரடிக்கார மச்சானிடம் கேட்டேன். மாப்ளே, பதிவர்கள்ல நிறையப்பேர் எதையோ எழுதணும்னு வந்து, எப்படியோ எழுதி, இப்போ எங்கயோ நிக்கிறவங்கதான்..அதுனால எழுத ஆரம்பி..உன் எழுத்து உன்னை எங்கு கொண்டு சேர்க்கனுமோ, அங்கு கொண்டு போய்ச் சேர்க்கும் என பீதியைக் கிளப்பினார். அதையும்தான் பார்ப்போமேன்னு களத்தில் இறங்கிவிட்டேன். அந்த முருகன் தான் நம்மைக் கரை சேர்க்கணும்! 


அடுத்த பதிவில் சந்திப்போமா....
மேலும் வாசிக்க... "நானும் ஹாலிவுட் பாலாவும்..."