“ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஆ.ராசாவே முழுப்பொறுப்பு” என்று வாதாடினார் ராம் ஜெத்மலானி
கனிமொழி கைது செய்யப்படவில்லை. விசாரணை முடிந்ததும், தன் கணவருடன் காரில் ஏறிப் பறந்தார் கனிமொழி!
- என்ற இரு கெட்ட செய்திகளும் இந்நேரம் ராசாவை எட்டி இருக்கும். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதும் அவருக்குப் புரிந்திருக்கும்.
வெறும் விசாரணைக்கு மட்டுமே அழைக்கிறார்கள் என்று நினைத்துப் போன ராசாவை கைது செய்து, இவ்வளவு நாட்கள் உள்ளே வைப்பார்கள் என்று ராசாவே எதிர்பார்த்திருக்க மாட்டார். எப்படியும் கட்சி கை கொடுக்கும் என்று நம்பி இருந்தார். தேர்தல்வரை பொறுத்திருக்கும்படியும், பின்னர் கட்சி ராசா விஷயத்தில் தீவிரமாக இறங்கும் என்றும் ராசாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களது தீவிரம் ‘ராசாவை நிரந்தரமாக உள்ளே வைப்பதற்கே’ என்பது நன்றாகத் தெரிந்து விட்டது இப்போது.
கலைஞரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. சமீபகால அரசியல் வரலாற்றில் இவ்வளவு மோசமான நிலைமை வெறெந்தத் தலைவருக்கும் ஏற்பட்டதில்லை.
அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு, கட்சியை தன் வசப்படுத்திய சாமர்த்தியம், வெற்றிகரமான கதை வசனகர்த்தாவாக, பகுத்தறிவுவாதியாக தன்னை தனது ஆரம்பக்காலங்களில் நிலைநிறுத்திக்கொண்டவர் கலைஞர். திமுக தொண்டர்களுக்கு அதிமுக தொண்டர்களை விட நாம் உயர்ந்தவர்கள், கலைஞர் என்ற சாமர்த்தியசாலியின் பின்னால் நிற்கும் அறிவுஜீவிகள் என்ற எண்ணம் எப்போதும் உண்டு.
தமிழின் மீதும் தமிழினத்தின் மீதும் அக்கறை கொண்டவர் என்பதால் திமுக தொண்டர்களால் ‘தமிழினத் தலைவர்’ என்றும் அழைக்கப்பட்டார். அதனை பிறகட்சியினரும் பெரிய தவறென்று சொன்னதில்லை...ஈழப்படுகொலைக்கு முன்பு வரை!
தமிழ்ப்பற்று, ஈழ ஆதரவு நிலைப்பாடு, சாணக்கியத்தனம், ஆரிய-திராவிட வாதம், விஞ்சானப்பூர்வமாக ஊழல் செய்யும் திறமை ஆகியவற்றை அணிகலன்களாகக் கொண்ட கலைஞரின் வீழ்ச்சி, அவரது வாரிசுகளின் அரசியல் பிரவேசத்தால் ஆரம்பித்தது.அவரது மோசமான அரசியல் வாரிசாக கனிமொழி உருவெடுத்து வந்தார்.
ஆ.ராசா தான் அமைச்சராக வேண்டும் என்று அடம்பிடித்து தொலைத்தொடர்புத் துறையை வாங்கினார். தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் அரங்கேற்றப்பட்டது. அன்றிலிருந்து கலைஞரின் அணிகலன்கள் கழன்று விழ ஆரம்பித்தன.
கூட ரெண்டு ஓட்டு விழுமென்றால், குட்டிக்கரணம் போடவே தயங்காத கலைஞருக்கு ஈழப்படுகொலை நல்ல வாய்ப்பாக வந்தது. பழைய கலைஞர் என்றால் புகுந்து விளையாடி இருப்பார். ஆனால் ஸ்பெக்ட்ரம் என்ற பேய் பிடித்த பிறகு, காங்கிரஸை மீறி என்ன செய்துவிட முடியும்?
பலவருடங்களாகக் கட்டி எழுப்பி வந்த ‘தமிழினத் தலைவர்’ இமேஜை மூன்று மணி நேர சூப்பர் ஃபாஸ்ட் உண்ணாவிரத்த்தில் தொலைத்தார்.
ராசாவின் மீது குற்றச்சாட்டு சொல்லப்பட்டபோது, இது ஆரிய சதி என்றும், தலித் என்பதால் ராசா குறிவைக்கப்படுவதாகவும் கலைஞர் சொன்னார். இன்று கலைஞரால் நியமிக்கப்பட்ட வக்கீல் ‘திராவிடச் செம்மல்’ ராம் ஜெத்மலானி சொல்கிறார் ‘தலித் ராசாவே எல்லாவற்றுக்கும் காரணம்’ என்று! இபோது தலித் ராசாவைக் குறிவைப்பது யார்? கலைஞர் எப்போது ஆரியர் ஆனார்? இவ்வள்வு வெளிப்படையாக கலைஞர் கீழிறங்குவார் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.
ராசா கைதை எதிர்த்து திமுக நிறைவேற்றிய தீர்மானத்தில் “ராசா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அதற்குப் பிறகு கட்சி தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருக்கிறார். ஆனால் ஒருவர் கைது செய்யப்பட்டு விட்ட காரணத்தாலேயே அவர் குற்றவாளியாக ஆகி விட மாட்டார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.” என்று சொன்னார்கள். இப்போது தயவு தாட்சண்யம் காணாமல் போய் உள்ளதே.அப்படியென்றால்...
தனது வாழ்வின் கடைசிக்கட்டத்தில் உள்ள ஒரு தலைவர், தனது தைரியத்தையும் கொள்கைகளையும் இழந்துவிட்டு, அம்பலப்பட்டு நிற்பதைப் பார்க்கும்போது நமக்கு பரிதாபமே மேலிடுகிறது.
கட்சியா, கனிமொழியா என்பதே தற்போதைய கேள்வி. கனிமொழியே முக்கியம் என்று கலைஞர் முடிவெடுத்துவிட்டது துரதிர்ஷ்டமே. கனிமொழியைக் கைகழுவுவதே கட்சி இழந்த பெயரை மீட்டுத்தர உதவும். அதை கலைஞரின் காலத்திற்குப் பின் ஸ்டாலினும் அழகிரியும் செய்வர்.
இப்போது கனிமொழி மீதான வழக்கு எப்படிப் போகும் என்பது மே13ம் தேதி வரும் ரிசல்ட்டைப் பொறுத்தது. திமுக கூட்டணி வென்றால், காங்கிரசின் கூட்டணி ஆட்சி என்ற மிரட்டலுக்கு அடிபணிந்தால், அம்பானியைப் போல் கனிமொழியும் கைது செய்யப்படாமல் வெளியில் உலவலாம்.
இல்லையென்றால், கனிமொழி மீது சிபிஐயின் பிடி இறுகும். விசாரணைக்காக கொஞ்ச நாள் உள்ளே போக வேண்டி வரலாம். அதன்பிறகு என்ன ஆகும் என்பதைச் சொல்ல ஜோதிட ஞானம் எல்லாம் தேவையில்லை. நமது பத்திரிக்கைகள் மென்று முழுங்கிச் சொல்லும் செய்தி ஒன்றே போதும்.
‘மே 11ம் தேதி சிபிஐ கோர்ட்டில் பிறந்த நாள் பரிசு வழக்கில் புரட்சித்தலைவி ஆஜராகத் தேவையில்லை-ஐகோர்ட் உத்தரவு’. 1992ஆம் ஆண்டில் அடித்த கொள்ளைக்கே இன்னும் முக்கி முக்கி வழக்கு நடந்து வருகிறது.
எனவே 2031ஆம் ஆண்டு இப்படிச் செய்தி வரலாம்: ‘மே14 சிபிஐ வழக்கில் கனிமொழி ஆஜரானார். விசாரணை முடிந்த பின் கணவர் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் காரில் ஏறிப் பறந்தார்.”
அப்போ ராசாவும் சரத்குமார் ரெட்டியும்? அம்போ தான்!

