Saturday, September 29, 2018

செக்கச் சிவந்த வானம் - விமர்சனம் & New World (2013)


’பெரியவரைக் கொன்றது யார்? பெரியவருக்குப் பின் அந்த இடத்தில் யார்?’ என்ற இரு கேள்விகள் தான் படம்.

கடந்த மூன்று படங்களாக தடுமாறிக்கொண்டிருந்த மணிரத்னம், இதில் சொல்லியடித்திருக்கிறார். இவ்வளவு பரபரப்பான படத்தினை நிச்சயம் அவரிடம் எதிர்பார்க்கவில்லை.

பெரியவராக வரும் பிரகாஷ்ராஜ் கரியரில் இந்தப் படம் முக்கியமான ஒன்றாக இருக்கும். அலட்டல் இல்லாத நடிப்பில் மிரட்டுகிறார் மனுசன். முரட்டுத்தனமான மகனாக அரவிந்த்சாமி. என்ன தான் உயிரைக் கொடுத்து நடித்தாலும், கார்போரேட் ஆபீசர் லுக்கை மறைக்க முடியவில்லை. ‘எல்லாருமே சைஃபர் தான்’ என்று சொல்லும் இடத்தில் தான் 100% ஸ்கோர் செய்கிறார்.

சிம்புவிற்கு நல்ல கம்பேக் மூவி. அருண்விஜய்யை விட மூத்தவராக சிம்பு தெரிவது தான் சோகம். எதையும் கேர் பண்ணாத, எதையும் செய்யத் துணியும் கேரக்டர் சிம்புவிற்கு எளிதாக பொருந்திப் போகிறது.

அருண் விஜய்யை தியேட்டருக்குள் நுழையும்வரை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனாலேயே அவரது கேரக்டரும் நடிப்பும் நம்மை எளிதில் வசீகரிக்கின்றன. இரண்டாம் பாதியில் அரவிந்த்சாமியைத் தேடி வீட்டிற்குள் வரும் சீன் அதகளம்.

ஜோதிகா முதல்பாதியில் வீணடிக்கப்பட்டாலும், ‘முடிவில்’ ஒரு நல்ல இம்பாக்ட்டை கொடுத்துவிட்டுப் போகிறார்.

இப்படி இத்தனை பேர் இருந்தாலும், கை தட்டல்களை அள்ளிச்செல்வது விஜய் சேதுபதி தான். மற்ற மூன்று ஹீரோக்களின் கேரக்டர்களுடன் நாம் ஐடெண்டிஃபை ஆக முடியாமல் கஷ்டப்படும்போது, சிம்பிளான ஒன்லைனர்களால் நம்மை கொள்ளை கொண்டுவிடுகிறார். யாருக்கும் பயப்படாமல், யாரையும் பயமுறுத்தாமல், படத்தில் அதிரடியாக ஒன்றுமே செய்யாமல், மொத்த அப்ளாஸையும் விஜய் சேதுபதி அள்ளிச்செல்கிறார். சான்ஸே இல்லை.

வசனங்கள் புதிதாக இருந்தன. நிறைய இடங்களில் புன்னகைக்க முடிந்தது.
படத்தில் இரண்டு ட்விஸ்ட்கள். கடைசி ட்விஸ்ட்டை மட்டும் யூகிக்க முடிந்தது.

மணிரத்தினத்தின் முந்தைய மூன்று படங்களை ஒப்பிடுவதாலேயே, இந்தப் படத்தை கொண்டாடுகிறோம். தனியே இந்தப் படத்தைப் பார்த்தால்...
மணிரத்னம் டச் மிஸ்ஸிங்..மனதில் நிற்கிற ஷாட், லைட்டிங் மேஜிக் என்று எதுவுமே மனதில் நிற்கவில்லை.

மூன்று கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் தர சில சீன்கள்..அவை நன்றாகவே இருந்தாலும், யாருடனும் நாம் கனெக்ட் ஆக முடியாமல் வெறுமனே வேடிக்கை பார்க்கும் மனநிலை தான் நமக்கு. எனவே யார் செத்தாலும் பெரிதாக ஃபீல் பண்ண முடியவில்லை.

முதல்பாதி வேகமும் கலகலப்புமாக போய்விடுகிறது. இரண்டாம் பாதியை சகோதரச் சண்டையை வைத்தே ஓட்ட வேண்டிய கட்டாயம். எனவே கொஞ்சம் ஸ்லோவாகவும் காதைச் சுற்றி மூக்கைத்தொடுவதாகவும் படம் நகர்கிறது. கடைசி இருபது நிமிடங்களில் தான் படத்தில் கதை நகர்கிறது.
சோக சீனா? ’போடு பூமி..பூமி’ பாடலை..ஆக்சன் சீனா? போடு ’சிவந்து போச்சு நெஞ்ச’ - என்று பிஜிஎம்மில் கொடுமை செய்திருக்கிறார்கள். சோக சீனில் கிக்கான வாய்ஸில் பூமி..பூமி ஒலிக்கும்போது ஜென் நிலைக்குப் போகிறோம்.
ஹிந்தி-தெலுகு-தமிழ் என எல்லா ரசிகரையும் திருப்திப்படுத்த முனையாமல், திருந்திய மணிரத்தினத்திற்கு ஒரு கோடி நன்றிகள். அதற்காகவே இந்தப் படத்தை பார்க்கலாம்!!New World(2013) Vs CCV (2018)

பொதுவாக இணையத்தில் எழுப்பப்படும் ’காப்பி..காப்பி’ கூச்சலுக்கு எதிரானவன் நான். இதுபற்றி விரிவாக பலமுறை எழுதியிருக்கிறேன். டேக்கன் படம் முதலில் வந்து மகநாதி பிறகு வந்திருந்தால், மகாநதியை காப்பி என்று சொல்லியிருப்பார்கள். அந்தளவிற்கு மண்வாரித் தூற்றும் போக்கு இங்கே உண்டு.

நாயகன் படம் வரதராஜ முதலியாரின் உண்மைக்கதை. அதை காட் ஃபாதர் படத்தின் மேக்கிங் ஸ்டைலை எடுத்தாண்டு சொன்னார்கள். டைம் மேகசின் உலகின் சிறந்த 100 படங்களில் ஒன்றாக நாயகன் படத்தினை லிஸ்ட் செய்திருக்கிறது. அந்த லிஸ்ட்டில் காட் ஃபாதரும் உண்டு. இது தெரிந்தும், காட் ஃபாதர் காப்பி தான் நாயகன் என்று இன்றுவரை சொல்வோர் உண்டு.

தேவர் மகன் கதையில் காட் ஃபாதரின் தாக்கம் அதிகம் உண்டு. ஆனாலும் அது வேறு கதை தான். கட் ஃபாதருக்கும் மைக்கேலுக்கும் வன்முறை மேல் வெறுப்பு கிடையாது, இதை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணமும் கிடையாது. ஆனால் பெரிய தேவரும் சக்திவேலும் அடிப்படையிலேயே வன்முறைக்கு எதிரானவர்கள்.

ஒரு வன்முறைச் சூழலில் இருக்கும் இனத்தை, அதிலிருந்து மீட்காமல், அப்படியே வைத்திருந்து காப்பாற்றுபவர்கள் காட் ஃபாதர்& சன்ஸ்; ஒரு வன்முறைச் சுழலில் சிக்கிக்கொண்ட இனத்தை மீட்டு, வெளியே கூட்டிட்டுப் போக முயல்பவர்கள் பெரிய தேவரும் மகனும். எனவே இங்கே கதையே வேறு ஒன்றாக பரிமாணம் பெற்றுவிடுகிறது. மேக்கிங்கும் காட் ஃபாதரில் இருந்து வேறுபட்டது என்பதால், தேவர் மகன் தனித்துவமான படமாக ஆகிறது.

ஆங்கிலத்திலும் இத்தகைய படங்கள் உண்டு. Bitter Moon & Gone Girl படங்கள் ஒரு உதாரணம். இரண்டுமே ஒரே கதைக்களம் தான். ஆனால் இரண்டு படங்களின் பேசுபொருள் வேறு;எனவே கதையும் வேறு ஆகிறது. யாரும் அங்கே Gone Girl படத்தை காப்பி என்று சொல்வதில்லை, அதையும் கொண்டாடவே செய்கிறார்கள்.

இங்கே காப்பி என்ற ஒன்று கிடையாதா என்றால் நிச்சயம் உண்டு. அப்படியே ஒரு டிவிடியைப் பார்த்து,நம் சூழலுக்கு ஏற்பவும் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவும் சில மாற்றங்களைச் செய்து ஒரு கதையைத் தேற்றிவிடுவார்கள். கதையையும் நானே எழுதுவேன் என்று அடம்பிடிக்கும் கதையறிவற்ற ஜந்துக்கள் இதைச் செய்வது இங்கே வழக்கம்.

New World படத்தினை இன்று பார்த்தபோது, உண்மையிலேயே பெரிய அதிர்ச்சிக்கு ஆளானேன். ’இப்படி அப்பட்டமாக ஒரு கதையை உருவ வேண்டிய அவசியம் மணி சார் என்ற மகானுக்கு ஏன் வந்தது? தமிழ் மண்ணின் கதைகளையெல்லாம் தமிழ் சினிமா பேசி முடித்துவிட்டதா?’ என்று குழம்பிப் போனேன்.

New World படத்தின் கதை : ஒரு தலைமை கொல்லப்பட, தலைமைப் பதவிக்காக முட்டிமோதும் மூன்று பேர்..தலைமையைக் கொன்றது யார், அடுத்த தலைமை யார்? என்பது தான் கதை. கூடவே ஒரு கேஷுவலான ’அண்டர்கவர் ஆபரேசன்’ போலீஸ்கார்..அய்யகோ!

திரைக்கதை, மேக்கிங் என்று எல்லாவற்றிலும் வேறு பாதையில் செக்கச் சிவந்த வானம் பயணித்தாலும், கதை என்பது அடிப்படையில் அங்கே இருந்து உருவப்பட்டது தான். மாட்டிக்கொள்ளாமல் இருக்க, ஒரு முக்கியமான ட்விஸ்ட்டை மாற்றி, பதவிக்கு மோதும் முன்று பேரை அண்ணன் தம்பிகளாக்கி, கைமா பண்ணியிருக்கிறார்கள், நமது ஜந்துக்கள் ஸ்டைலில்.

முடிவில் சப்டைட்டில் இல்லாமல் New World படத்தைப் பார்த்து எழுதிய கதை போல் இருக்கிறது செக்கச் சிவந்த வானம். தமிழ்சினிமாவின் ஐகான்களில் ஒருவரான மணிரத்னம் இதைச் செய்திருக்கக்கூடாது.

அவர் சொந்தமாக யோசித்த படங்களே காப்பி என்று குற்றம் சாட்டப்படும் சூழலில், இணையம் உலகத்தில் உள்ள சினிமாக்களை உள்ளங்கையில் கொண்டு வந்துவிட்ட காலத்தில், மணிரத்னம் இதைச் செய்திருக்கவே கூடாது!

மேலும் வாசிக்க... "செக்கச் சிவந்த வானம் - விமர்சனம் & New World (2013)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, September 19, 2018

சிறந்த 15 மாஸ்டர்களின் சிறந்த 15 படங்கள்


’சினிமா டிஸ்கசனில் திடீர் திடீர் என்று ஏதாவது இங்கிலிபீசு டைரக்டர் பெயரையோ, படத்தின் பெயரையோ சொல்லி விவாதிக்கிறார்கள். இதுகூட தெரியாதா என்று சிரிக்கிறார்கள்.’ என்று உதவி இயக்குநராக இருக்கும் நண்பர் ஒருவர் ஒருமுறை வருத்தப்பட்டார். ஏறக்குறைய இதே லிஸ்ட்டை அவருக்குச் சொன்னேன்.

நண்பர் பிடித்த பத்து படங்களை பகிரச் சொன்னபோது, அதையே பகிர்ந்துகொண்டேன். இவர்கள் தான் என் திரைமொழியை வடிவமைக்கும் குருநாதர்கள். இவர்களில் ஒருவரின் தோளில் ஏறிக்கொண்டாலும் போதும், உருப்பட்டு விடலாம்!


Master # 1 - Alfred Hitchcock (Movie # 1 - Psycho)


Master # 2 - Stanley Kubric (The shining)


Master # 3 - Akira Kurosawa (Seven Samurai)


Master # 4 - Roman Polanski (Bitter Moon)


Master # 5 - David Lynch (Mulholland Drive)


Master # 6 - Steven  Spielperg (Jurassic Park)


Master # 7 - Krzysztof Kieślowski (The Double Life of Veronique)


Master # 8 - Sergio Leone (Once Upon A Time In The West)


Master # 9 - Christopher Nolan (The Prestige)


Master # 10 - Paul Thomas Anderson (Boogie Nights)


Master # 11 - David Fincher (Seven)


Master # 12 - Coen Brothers (Fargo)


Master # 13 - Quentin Tarantino (pulp fiction)


Master # 14 - James Cameron (Terminator 2 : Judgment Day )


Master # 15 - Francis Ford Coppola (The Godfather)

Master # 16 - Martin Scorsese (Taxi Driver)

ஒவ்வொரு மாஸ்டர்களின் சிறந்த 5 படங்களின் லிஸ்ட்டை சீக்கிரம் கொடுக்க முயற்சிக்கிறேன்.
மேலும் வாசிக்க... "சிறந்த 15 மாஸ்டர்களின் சிறந்த 15 படங்கள்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, September 15, 2018

மேற்குத் தொடர்ச்சி மலை – தமிழில் ஒரு உலக சினிமா


ஒரு படத்தின் கதாநாயகன் என்பவன் எதிலும் ஜெயிக்கும் அசகாய சூரன், படத்தின் காட்சிகள் என்பவை கதாநாயகனின் சாகசங்களின் தொகுப்பு என்பதே வழக்கமான மைய நீரோட்டப் படங்களின் அம்சங்களாக இருக்கும். ஆனால் இயல்பு வாழ்க்கையில் சின்னச்சின்ன ஆசைகளுடன், எவ்வித சாகசங்க நிகழ்வுகளிமின்றி முடியும் மனிதர்களே அதிகம்.

காட்சி இலக்கியமான சினிமாவுக்கு அத்தகைய மனிதர்களைப் பதிவுசெய்யும் கடமை உண்டு. அந்தவகையில் உருவாகியிருக்கும் படம் தான் மேற்குத் தொடர்ச்சி மலை.

பொழுதுபோக்கு சினிமாக்களுக்கென்று ஒரு திரைமொழி உண்டு. அதே போன்றே திரைக்கதை/ஒளிப்பதிவு/எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப விஷயங்களை வைத்து புத்திசாலித்தனமாக விளையாடும் சினிமாக்களுக்கென்று ஒரு திரைமொழி உண்டு. இந்த மாதிரியான ஜிம்மிக்ஸ் வேலைகள் இல்லாமல் உள்ளதை உள்ளபடி பதிவு செய்வதை மட்டுமே செய்யும் சத்யஜித் ரே வகைப் படங்களுக்கென்று ஒரு டாகுமெண்டரி ஸ்டைல் திரைமொழி உண்டு.

மேற்குத் தொடர்ச்சி மலை அந்தவகைப் படம். எனவே அந்த திரைமொழியை கிரகித்துக்கொள்ளும் மனநிலையுடன் இந்தப் படத்தை அணுக வேண்டியது அவசியம்.

ரங்கசாமி எனும் மனிதனின் கதையைப் பேசிக்கொண்டே, அங்கே வாழும் எளிய மனிதர்களின் கதையை போகிற போக்கில் பதிவு செய்கிறது படம். அந்தவகையில் படத்தில் ரங்கசாமி மட்டுமே கதாநாயகன் என்று சொல்லிவிடமுடியாது.

படத்தின் முதல் நாற்பது நிமிடம், ரங்கசாமி காலையில் குளித்துக் கிளம்பி மலையுச்சியை அடையும் பயணத்தை மட்டுமே பதிவு செய்கிறது. பத்திரிக்கை கொடுக்க வரும் கேரக்டர் வாயிலாக,அதில் உள்ள சிரமங்களும் அவர்களின் பழக்க வழக்கங்களும் இயல்பாகப் பதிவு செய்யப்படுகின்றன.

அந்த மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதும், மெலிதாக கேலிசெய்துகொள்வதும் அவர்களின் வீம்பும் எவ்வித ஜோடனையும் இன்றி காட்சிகளாக விரிகின்றன. ரங்கசாமி நிலம் வாங்கப் போகிறான் என்பது அமைதியான நதியாக இந்த காட்சிகளுக்கு இடையே ஓடிக்கொண்டிருக்கிறது.

ரங்கசாமி ஏன் நிலம் வாங்க வேண்டும் என்பதை வசனங்களோ, கதாநாயகனின் தேவைகள் மூலமோ சொல்லப்படுவதில்லை. அதை நாம் புரிந்துகொள்ள, வனகாளி கேரக்டரின் வாழ்க்கையே போதுமானதாக இருக்கிறது. இளவட்டங்களுடன் போட்டிபோட்டு மூட்டை தூக்கி, வயோதிகத்தால் ரத்தம் கக்கிச் சாகும் வனகாளி, ரங்கசாமி பாத்திரத்தின் வருங்கால வடிவம். மலை மத்தியில் மரணித்த எத்தனையோ வனகாளிகளுள் ஒருவனாக ரங்கசாமியும் ஆகிவிடும் ஆபத்தை,நம் மனதில் ஆர்ப்பாட்டமில்லாமல் படம் பதியச் செய்கிறது.

கல்யாணம் என்பதைக்கூட கதாநாயகனால் ரொமாண்டிக்காக அணுக முடிவதில்லை. அதையும் கூடுதல் பொறுப்பு என்பதாகவே அணுகி யோசனையில் ஆழ்கிறான். ஹீரோயின் வெட்கச்சிரிப்புடன் நிற்க, ரங்கசாமி யோசனையில் ஆழ்கின்ற அந்தக் காட்சி இந்தப் படத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று.

இயக்குநர் லெனின் பாரதி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் மூவரும் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த திரைமொழி, எளிதில் நம் தமிழ்சினிமாவில் காணக்கிடைப்பது அல்ல.

இளையராஜாவின் இசை இயக்குநரின் கூப்பிட்ட குரலுக்கு மட்டும் வந்து கூவுகிறது. பிண்ணனி இசை என்பது கதை சொல்ல கை கொடுக்கும் தோழன் மட்டுமே என்ற தெளிவு இயக்குநருக்கும் இசைஞானிக்கும் இருந்திருக்கிறது.

படத்தில் சினிமாத்தனமான வசனங்கள் என்று ஏதுமில்லை. அந்த சூழலில் அந்த மக்கள் என்ன பேசுவார்களோ, அவை மட்டுமே வசனங்களாக வருகின்றன. வழக்கமான சினிமாவுக்கு வசனம் எழுதுவதைவிட, இது கஷ்டம். அதை வசனகர்த்தா ராசீ.தங்கதுரை சிறப்பாகச் செய்திருக்கிறார்.

கங்காணி, கடைக்கார பாக்கியம்மாள், கழுதைக்கார கிழவர், கிறுக்குக்கிழவி, கணக்கு, ஹீரோவின் தோழன், பாய், ஏலக்காய் முதலாளி என ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவத்துடன் நம் நெஞ்சில் நிறைகிறார்கள். எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஒரே காட்சியில்கூட அவை உணர்த்தப்பட்டுவிடுகின்றன.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி மற்றும் படக்குழுவினரின் கடின உழைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ‘துபாயை என் மொட்டை மாடிக்கு கொண்டு வாங்க’ என்று சொல்லும் ஜிகினா ஹீரோக்களுக்கிடையே, உண்மையான ஹீரோக்களாக இவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். சினிமாவை இவ்வளவு சின்சியராக அணுகிய தன்மைக்கே தனி பாராட்டுவிழா நடத்த வேண்டும்.படத்தை தயாரித்த விஜய் சேதுபதியும் நம் நன்றிக்கு உரியவர்.

குறைகளற்ற படைப்பென்று எதுவுமில்லை. அங்கிருக்கும் மனிதர்களையே நடிக்க வைத்திருப்பதால், சில காட்சிகளில் நாடகத்தனமான வசன ஒப்புவித்தல் நடந்திருக்கிறது. அது காட்சிகளின் வீரியத்தைக் குறைக்கிறது.

ரங்கசாமி நிலம் வாங்கும் போராட்டத்தில் ஏலக்காய் மூட்டை விழுந்து சிதறும் காட்சி நம்மைப் பதற வைக்கிறது. அது விழுவதற்கான காரணம், தற்செயலானது. வாழ்க்கையில் இப்படியான சிறிய தற்செயல் நிகழ்வுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதைக் காணலாம். எனவே அந்தக் காட்சியை உளப்பூர்வமாக வலியுடன் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் ரங்கசாமி கொலைசெய்யப் போகும் காட்சி படத்தின் ஆகப்பெரிய குறை. அதுவரை கட்டிக்காத்து வந்த யதார்த்தத்தை ஏலக்காய் மூட்டையாக இயக்குநர் போட்டு உடைக்கும் இடம் அது.

கல்யாணம் செய்வதற்கே யோசிப்பவன் கதாநாயகன். சகாவு கூப்பிட்டவுடன் அரிவாளுடன் கிளம்புவான் என்பது அபத்தம். கம்யூனிஸ்ட் தோழரின் துரோகத்தால் பாதிக்கப்படுவது கூலித்தொழிலாளிகள். நில முதலாளி ஆகிவிட்ட கதாநாயகனுக்கு அதனால் பாதிப்பில்லை. ரோடு வருவதும் கதாநாயகனின் நிலத்தைப் பிடுங்குவதாக இல்லை.

பின்னே, எதற்காக கதாநாயகன் கொலைசெய்யப் போகிறான்? அப்படிப் போனால் தான் ஜெயிலுக்குப் போக முடியும், நிலத்தை இழக்க முடியும்’ என்பதாலா? இந்த இடத்தில் இறுதிக்காட்சிவரை வரும் எல்லாமே வலிந்து திணிக்கப்பட்டவை ஆகின்றன.

ஆனாலும்…

’காணி நிலம் வேண்டும்’ எனும் பாரதியின் ஆசை தான் ரங்கசாமியின் ஆசையும். அதை லட்சியம் என்று சொல்லிவிட முடியாது. அதற்காக பெரிய சாகசங்களில் ரங்கசாமி ஈடுபடுவதில்லை. வருகிற வாய்ப்பை பயன்படுத்த முனைகிறான். தோற்றால், மெல்லிய வருத்ததுடன் அதைக் கடந்து செல்கிறான். உட்கார்ந்து அழவோ,திட்டங்கள் தீட்டவோ முடியாத அளவிற்கு, விடியற்காலையில் இருந்து மாலை வரை வாழ்க்கை அவனை ஓட வைத்துக்கொண்டே இருக்கிறது.

நம்மை பெரும் அளவில் தொந்தரவு செய்வது இது தான். கொஞ்சம் கண் திறந்து சுற்றுமுற்றும் பார்த்தால், விதிக்கப்பட்ட வாழ்க்கையை நொந்தபடி வாழ்ந்து மடியும் லட்சக்கணக்கான ரங்கசாமிகளைப் பார்க்கலாம்.

பெருவாரியான சினிமாக்கள் நம்மை மயக்கத்தில் ஆழ்த்தி அனுப்பும்போது,முகத்தில் அறைந்து சபிக்கப்பட்டவர்களைப் பார்க்கச் சொல்கிறது.நமது சென்ற தலைமுறைகளில் ஒன்று இப்படித்தான் தடயமே இல்லாமல் வாழ்ந்து மறைந்ததும் நினைவுக்கு வந்து தைக்கிறது.

சமையல் கட்டில் ஓரத்தில் கிடக்கும் ஏலக்காய் என்பதை இனி நாம் இயல்பாகப் பார்க்க முடியாது. கடுகும் சீரகமும்கூட ரங்கசாமிகளின் முதுகில் ஏறி நம்மை வந்தடைந்திருக்கலாம்.

சக மனிதர்களை மட்டுமல்லாமல், அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களைக்கூட கனிவுடன் பார்க்க வைப்பதால் தான் இது உலக சினிமா ஆகிறது.
மேலும் வாசிக்க... "மேற்குத் தொடர்ச்சி மலை – தமிழில் ஒரு உலக சினிமா"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, September 14, 2018

சீமராஜா - ஒரு பார்வை


கலாய்த்தும் கலாய்க்கப்பட்டும் மக்களை ரசிக்க வைத்த சிவகார்த்திகேயன். காமெடிக்கு உத்தரவாதம்  தரும் இயக்குநர் பொன்ராம். இருவருக்குமே ‘எத்தனை நாளைக்குத் தான் விளையாட்டுப் பிள்ளையாவே இருக்கிறது?’ எனும் கவலை. அடுத்தகட்ட வளர்ச்சியை விரும்பும் எவருக்கும் வரும் நியாயமான கவலை தான். ’காமெடியாகவே எடுத்துக்கொண்டிருந்தால் வளர முடியாது, காமெடியை விட்டால் ஜெயிக்க முடியாது..என்னா பண்றது?’ என்று புலிவால் பிடித்த கதையாக சிக்கிக்கொண்ட இருவரும், கொஞ்சம் விட்டுத்தான் பார்ப்போமே என்று லைட்டா புலிவாலை லூஸ்ல விட்டிருக்கிறார்கள், சீமராஜாவில்.

ஒரு நல்ல கதையை எடுத்துக்கொண்டு இதைச் செய்திருக்கலாம். முன்னொரு காலத்தில் இதுவும் நல்ல கதை தான்..

ஒரு கோயிலால் இரண்டு ஊர்களுக்கு இடையே பிரச்சினை. அரசாங்கத்தால் கோயில் பூட்டப்படுகிறது. ஹீரோவின் லவ்வருக்கு கோயிலைப் பார்க்க ஆசை. ஹீரோ பூட்டை உடைக்க, ஊர் கலவரம் ஆகிறது. பஞ்சாயத்தில் ஊர்ப் பெரியவரான ஹீரோவின் அப்பா அவமானப்படுத்தப்பட, அப்படியே ஷாக் ஆகி, பெரிசு அவுட். லாலே...லால..லாலா....ஆ!

கோயில் - சந்தை
கமல் - சிவா
சிவாஜி - நெப்போலியன்
கௌதமி-சமந்தா

அப்பா அவமானப்பட்டுச் சாவதே ஹீரோ திருந்த போதுமானதாக இருக்கிறது. ஆனால் படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுத்தே தீருவோம் என்று முடிவுசெய்தபிறகு, சீமராஜா அப்படி சட்டென்று திருந்திவிட முடியுமா? 90ஸ் கதையை லேட்டஸ்ட்டாகவும் மாற்ற வேண்டும்.  எனவே பாகுபலி காளகேயர் சீனை எடுத்து ஒரு ஃப்ளாஷ்பேக். கூடவே, இண்டர்வெல்லில் ஒரு பயங்கர ட்விஸ்ட்..வில்லனின் மகள் தான் ஹீரோயின்..அடேங்கப்பா

பொன்ராம் -சிவா கூட்டணியின் முந்தைய படங்களிலும் பெரிதாக கதை என்று ஒன்றும் இருக்காது.ஆனாலும் அவை மன்னிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டதற்குக் காரணம் அவையெல்லாம் வெறும் காமெடிப்படங்கள் என்பதாலேயே! சீரியஸாக படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டபின், அதற்குரிய உழைப்பைத் தருவது தானே நியாயம்?

போர்க்கள காட்சியில் வில்லனுக்கும் ஹீரோவுக்கும் கடும் வாக்குவாதம். சிரிப்பை அடக்க முடியாமல் பார்க்கவேண்டியிருக்கிறது.ஏனென்றால், வில்லன் ஹிந்தியில் அத்தாம்பெரிய டயலாக் பேச, சிவா அதைவிடவும்பெரிய டயலாக்கை தமிழில் பேசுகிறார். வில்லனே அசந்துபோய், ஆளை விடுடா சாமி என்று சரண்டர் ஆகிறான். எவனாவது என்னிடம் ஹிந்தியில் பேசினால், வம்புக்கென்றே தமிழில் பேசுவேன். ஆனால்  14ஆம் நூற்றாண்டில் இருந்தே இந்த வழக்கம் இருந்திருக்கும் போல!

இது சிறு உதாரணம் தான். இப்படி ஒரு காமெடிப்படத்திற்கு உரிய ’அக்கறை’யுடன் தான் நிறைய சீரியஸ் சீன்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அரதப்பழசான கதைக்கு அடுத்தபடியாக, நம்மை அதிகம் எரிச்சல் அடைய வைப்பது வில்லி சிம்ரனின் கேரக்டரும் ஆக்ட்டிங்கும். ஒரு வில்லன் கேரக்டர் நம்மை கோபப்படவைக்கலாம்,பயப்பட வைக்கலாம். ஆனால் இப்படி எரிச்சல்பட வைக்கக்கூடாது. இந்த மாதிரி கத்திப்பேசுவது சிம்ரனின் கம்ஃபோர்ட் ஜோன் கிடையாது. கூடவே அந்த இம்சையான பிண்ணனிக் குரலும் சேர்ந்துகொள்ள, அப்பப்பா. சிம்ரன் ரசிகன் அல்லாத என்னாலேயே தாங்க முடியவில்லை..பாவம் இடுப்பழகி ஃபேன்ஸ்!

ஹீரோ இமேஜுக்கு பில்டப் ஏற்ற வேண்டும் என்றால், ஸ்ட்ராங்கான வில்லன் கேரக்டர் இருந்தால் தான் எடுபடும். அதிலேயே கோட்டைவிட்டுவிட்டு, சூரியையும் பனானா பவுன்ராஜையும் வைத்து வசனத்திலேயே சிவாவிற்கு பில்டப் ஏற்றுகிறார்கள். அது ஆங்ரி மேக்கிங் காமெடி ஆகிறது!

காமெடியில் கலக்கி எடுத்த ஒரு வெற்றிக்கூட்டணி மூன்றாவது முறையாகச் சேரும்போது எதிர்பார்ப்பு எகிறிவிடும். அதை பூர்த்தி செய்யவில்லை என்றால், அந்த எதிர்பார்ப்பே படத்திற்கு ஆப்பாக ஆகிவிடும். இங்கே சிவா-சூரி காமெடியில் அது தான் நடந்திருக்கிறது. ராமர் சீன், சிறுத்தை சீன் தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் சிரிப்பே வரவில்லை. கடைசி முக்கால் மணி நேரம் முழுக்க சீரியஸாகவே படம் நகர்கிறது. காமெடியை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றத்தையே இது கொடுக்கிறது.

படத்தில் ப்ளஸ் பாயிண்ட்ஸ் என்றால்..

- சிவா இதிலும் ஆக்டிவ்வாக, கலகலப்பாக இருக்கிறார்.அந்த ராஜா கெட்டப்கூட நன்றாகவே செட் ஆகியிருக்கிறது.

- சமந்தா..படத்தில் ஆகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் இவர்தான்.

- இமானின் இரண்டு மெலோடிகள்

- போர்க்காட்சிகள் தேவையில்லாத ஆணி என்றாலும் மேக்கிங் நன்றாகவே இருந்தது.

- டபுள் மீனிங்கோ, ஆபாசமோ இல்லாமல் பொன்ராம் மூன்றாவது படத்தையும் நீட்டாக கொடுத்திருப்பது!


விடுமுறை நாட்களைக் குறி வைத்து, அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதால் எப்படியும் முதல் மூன்று நாட்களுக்கு ஹவுஸ்ஃபுல் ஆகிவிடும். கடைசி இரண்டு படங்களுமே இப்படி ரிலீஸ் ஆகி தப்பித்தவை தான். ஆனால் இந்த ட்ரிக் எத்தனை நாட்களுக்கு கை கொடுக்கும் என்று சிவா யோசிக்க வேண்டும்.
மேலும் வாசிக்க... "சீமராஜா - ஒரு பார்வை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.