ஒரு படத்தின் கதாநாயகன் என்பவன் எதிலும் ஜெயிக்கும் அசகாய சூரன், படத்தின் காட்சிகள் என்பவை கதாநாயகனின் சாகசங்களின் தொகுப்பு என்பதே வழக்கமான மைய நீரோட்டப் படங்களின் அம்சங்களாக இருக்கும். ஆனால் இயல்பு வாழ்க்கையில் சின்னச்சின்ன ஆசைகளுடன், எவ்வித சாகசங்க நிகழ்வுகளிமின்றி முடியும் மனிதர்களே அதிகம்.
காட்சி இலக்கியமான சினிமாவுக்கு அத்தகைய மனிதர்களைப் பதிவுசெய்யும் கடமை உண்டு. அந்தவகையில் உருவாகியிருக்கும் படம் தான் மேற்குத் தொடர்ச்சி மலை.
பொழுதுபோக்கு சினிமாக்களுக்கென்று ஒரு திரைமொழி உண்டு. அதே போன்றே திரைக்கதை/ஒளிப்பதிவு/எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப விஷயங்களை வைத்து புத்திசாலித்தனமாக விளையாடும் சினிமாக்களுக்கென்று ஒரு திரைமொழி உண்டு. இந்த மாதிரியான ஜிம்மிக்ஸ் வேலைகள் இல்லாமல் உள்ளதை உள்ளபடி பதிவு செய்வதை மட்டுமே செய்யும் சத்யஜித் ரே வகைப் படங்களுக்கென்று ஒரு டாகுமெண்டரி ஸ்டைல் திரைமொழி உண்டு.
மேற்குத் தொடர்ச்சி மலை அந்தவகைப் படம். எனவே அந்த திரைமொழியை கிரகித்துக்கொள்ளும் மனநிலையுடன் இந்தப் படத்தை அணுக வேண்டியது அவசியம்.
ரங்கசாமி எனும் மனிதனின் கதையைப் பேசிக்கொண்டே, அங்கே வாழும் எளிய மனிதர்களின் கதையை போகிற போக்கில் பதிவு செய்கிறது படம். அந்தவகையில் படத்தில் ரங்கசாமி மட்டுமே கதாநாயகன் என்று சொல்லிவிடமுடியாது.
படத்தின் முதல் நாற்பது நிமிடம், ரங்கசாமி காலையில் குளித்துக் கிளம்பி மலையுச்சியை அடையும் பயணத்தை மட்டுமே பதிவு செய்கிறது. பத்திரிக்கை கொடுக்க வரும் கேரக்டர் வாயிலாக,அதில் உள்ள சிரமங்களும் அவர்களின் பழக்க வழக்கங்களும் இயல்பாகப் பதிவு செய்யப்படுகின்றன.
அந்த மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதும், மெலிதாக கேலிசெய்துகொள்வதும் அவர்களின் வீம்பும் எவ்வித ஜோடனையும் இன்றி காட்சிகளாக விரிகின்றன. ரங்கசாமி நிலம் வாங்கப் போகிறான் என்பது அமைதியான நதியாக இந்த காட்சிகளுக்கு இடையே ஓடிக்கொண்டிருக்கிறது.
ரங்கசாமி ஏன் நிலம் வாங்க வேண்டும் என்பதை வசனங்களோ, கதாநாயகனின் தேவைகள் மூலமோ சொல்லப்படுவதில்லை. அதை நாம் புரிந்துகொள்ள, வனகாளி கேரக்டரின் வாழ்க்கையே போதுமானதாக இருக்கிறது. இளவட்டங்களுடன் போட்டிபோட்டு மூட்டை தூக்கி, வயோதிகத்தால் ரத்தம் கக்கிச் சாகும் வனகாளி, ரங்கசாமி பாத்திரத்தின் வருங்கால வடிவம். மலை மத்தியில் மரணித்த எத்தனையோ வனகாளிகளுள் ஒருவனாக ரங்கசாமியும் ஆகிவிடும் ஆபத்தை,நம் மனதில் ஆர்ப்பாட்டமில்லாமல் படம் பதியச் செய்கிறது.
கல்யாணம் என்பதைக்கூட கதாநாயகனால் ரொமாண்டிக்காக அணுக முடிவதில்லை. அதையும் கூடுதல் பொறுப்பு என்பதாகவே அணுகி யோசனையில் ஆழ்கிறான். ஹீரோயின் வெட்கச்சிரிப்புடன் நிற்க, ரங்கசாமி யோசனையில் ஆழ்கின்ற அந்தக் காட்சி இந்தப் படத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று.
இயக்குநர் லெனின் பாரதி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் மூவரும் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த திரைமொழி, எளிதில் நம் தமிழ்சினிமாவில் காணக்கிடைப்பது அல்ல.
இளையராஜாவின் இசை இயக்குநரின் கூப்பிட்ட குரலுக்கு மட்டும் வந்து கூவுகிறது. பிண்ணனி இசை என்பது கதை சொல்ல கை கொடுக்கும் தோழன் மட்டுமே என்ற தெளிவு இயக்குநருக்கும் இசைஞானிக்கும் இருந்திருக்கிறது.
படத்தில் சினிமாத்தனமான வசனங்கள் என்று ஏதுமில்லை. அந்த சூழலில் அந்த மக்கள் என்ன பேசுவார்களோ, அவை மட்டுமே வசனங்களாக வருகின்றன. வழக்கமான சினிமாவுக்கு வசனம் எழுதுவதைவிட, இது கஷ்டம். அதை வசனகர்த்தா ராசீ.தங்கதுரை சிறப்பாகச் செய்திருக்கிறார்.
கங்காணி, கடைக்கார பாக்கியம்மாள், கழுதைக்கார கிழவர், கிறுக்குக்கிழவி, கணக்கு, ஹீரோவின் தோழன், பாய், ஏலக்காய் முதலாளி என ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவத்துடன் நம் நெஞ்சில் நிறைகிறார்கள். எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஒரே காட்சியில்கூட அவை உணர்த்தப்பட்டுவிடுகின்றன.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி மற்றும் படக்குழுவினரின் கடின உழைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ‘துபாயை என் மொட்டை மாடிக்கு கொண்டு வாங்க’ என்று சொல்லும் ஜிகினா ஹீரோக்களுக்கிடையே, உண்மையான ஹீரோக்களாக இவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். சினிமாவை இவ்வளவு சின்சியராக அணுகிய தன்மைக்கே தனி பாராட்டுவிழா நடத்த வேண்டும்.படத்தை தயாரித்த விஜய் சேதுபதியும் நம் நன்றிக்கு உரியவர்.
குறைகளற்ற படைப்பென்று எதுவுமில்லை. அங்கிருக்கும் மனிதர்களையே நடிக்க வைத்திருப்பதால், சில காட்சிகளில் நாடகத்தனமான வசன ஒப்புவித்தல் நடந்திருக்கிறது. அது காட்சிகளின் வீரியத்தைக் குறைக்கிறது.
ரங்கசாமி நிலம் வாங்கும் போராட்டத்தில் ஏலக்காய் மூட்டை விழுந்து சிதறும் காட்சி நம்மைப் பதற வைக்கிறது. அது விழுவதற்கான காரணம், தற்செயலானது. வாழ்க்கையில் இப்படியான சிறிய தற்செயல் நிகழ்வுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதைக் காணலாம். எனவே அந்தக் காட்சியை உளப்பூர்வமாக வலியுடன் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால் ரங்கசாமி கொலைசெய்யப் போகும் காட்சி படத்தின் ஆகப்பெரிய குறை. அதுவரை கட்டிக்காத்து வந்த யதார்த்தத்தை ஏலக்காய் மூட்டையாக இயக்குநர் போட்டு உடைக்கும் இடம் அது.
கல்யாணம் செய்வதற்கே யோசிப்பவன் கதாநாயகன். சகாவு கூப்பிட்டவுடன் அரிவாளுடன் கிளம்புவான் என்பது அபத்தம். கம்யூனிஸ்ட் தோழரின் துரோகத்தால் பாதிக்கப்படுவது கூலித்தொழிலாளிகள். நில முதலாளி ஆகிவிட்ட கதாநாயகனுக்கு அதனால் பாதிப்பில்லை. ரோடு வருவதும் கதாநாயகனின் நிலத்தைப் பிடுங்குவதாக இல்லை.
பின்னே, எதற்காக கதாநாயகன் கொலைசெய்யப் போகிறான்? அப்படிப் போனால் தான் ஜெயிலுக்குப் போக முடியும், நிலத்தை இழக்க முடியும்’ என்பதாலா? இந்த இடத்தில் இறுதிக்காட்சிவரை வரும் எல்லாமே வலிந்து திணிக்கப்பட்டவை ஆகின்றன.
ஆனாலும்…
’காணி நிலம் வேண்டும்’ எனும் பாரதியின் ஆசை தான் ரங்கசாமியின் ஆசையும். அதை லட்சியம் என்று சொல்லிவிட முடியாது. அதற்காக பெரிய சாகசங்களில் ரங்கசாமி ஈடுபடுவதில்லை. வருகிற வாய்ப்பை பயன்படுத்த முனைகிறான். தோற்றால், மெல்லிய வருத்ததுடன் அதைக் கடந்து செல்கிறான். உட்கார்ந்து அழவோ,திட்டங்கள் தீட்டவோ முடியாத அளவிற்கு, விடியற்காலையில் இருந்து மாலை வரை வாழ்க்கை அவனை ஓட வைத்துக்கொண்டே இருக்கிறது.
நம்மை பெரும் அளவில் தொந்தரவு செய்வது இது தான். கொஞ்சம் கண் திறந்து சுற்றுமுற்றும் பார்த்தால், விதிக்கப்பட்ட வாழ்க்கையை நொந்தபடி வாழ்ந்து மடியும் லட்சக்கணக்கான ரங்கசாமிகளைப் பார்க்கலாம்.
பெருவாரியான சினிமாக்கள் நம்மை மயக்கத்தில் ஆழ்த்தி அனுப்பும்போது,முகத்தில் அறைந்து சபிக்கப்பட்டவர்களைப் பார்க்கச் சொல்கிறது.நமது சென்ற தலைமுறைகளில் ஒன்று இப்படித்தான் தடயமே இல்லாமல் வாழ்ந்து மறைந்ததும் நினைவுக்கு வந்து தைக்கிறது.
சமையல் கட்டில் ஓரத்தில் கிடக்கும் ஏலக்காய் என்பதை இனி நாம் இயல்பாகப் பார்க்க முடியாது. கடுகும் சீரகமும்கூட ரங்கசாமிகளின் முதுகில் ஏறி நம்மை வந்தடைந்திருக்கலாம்.
சக மனிதர்களை மட்டுமல்லாமல், அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களைக்கூட கனிவுடன் பார்க்க வைப்பதால் தான் இது உலக சினிமா ஆகிறது.
0 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.