கலாய்த்தும் கலாய்க்கப்பட்டும் மக்களை ரசிக்க வைத்த சிவகார்த்திகேயன். காமெடிக்கு உத்தரவாதம் தரும் இயக்குநர் பொன்ராம். இருவருக்குமே ‘எத்தனை நாளைக்குத் தான் விளையாட்டுப் பிள்ளையாவே இருக்கிறது?’ எனும் கவலை. அடுத்தகட்ட வளர்ச்சியை விரும்பும் எவருக்கும் வரும் நியாயமான கவலை தான். ’காமெடியாகவே எடுத்துக்கொண்டிருந்தால் வளர முடியாது, காமெடியை விட்டால் ஜெயிக்க முடியாது..என்னா பண்றது?’ என்று புலிவால் பிடித்த கதையாக சிக்கிக்கொண்ட இருவரும், கொஞ்சம் விட்டுத்தான் பார்ப்போமே என்று லைட்டா புலிவாலை லூஸ்ல விட்டிருக்கிறார்கள், சீமராஜாவில்.
ஒரு நல்ல கதையை எடுத்துக்கொண்டு இதைச் செய்திருக்கலாம். முன்னொரு காலத்தில் இதுவும் நல்ல கதை தான்..
ஒரு கோயிலால் இரண்டு ஊர்களுக்கு இடையே பிரச்சினை. அரசாங்கத்தால் கோயில் பூட்டப்படுகிறது. ஹீரோவின் லவ்வருக்கு கோயிலைப் பார்க்க ஆசை. ஹீரோ பூட்டை உடைக்க, ஊர் கலவரம் ஆகிறது. பஞ்சாயத்தில் ஊர்ப் பெரியவரான ஹீரோவின் அப்பா அவமானப்படுத்தப்பட, அப்படியே ஷாக் ஆகி, பெரிசு அவுட். லாலே...லால..லாலா....ஆ!
கோயில் - சந்தை
கமல் - சிவா
சிவாஜி - நெப்போலியன்
கௌதமி-சமந்தா
அப்பா அவமானப்பட்டுச் சாவதே ஹீரோ திருந்த போதுமானதாக இருக்கிறது. ஆனால் படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுத்தே தீருவோம் என்று முடிவுசெய்தபிறகு, சீமராஜா அப்படி சட்டென்று திருந்திவிட முடியுமா? 90ஸ் கதையை லேட்டஸ்ட்டாகவும் மாற்ற வேண்டும். எனவே பாகுபலி காளகேயர் சீனை எடுத்து ஒரு ஃப்ளாஷ்பேக். கூடவே, இண்டர்வெல்லில் ஒரு பயங்கர ட்விஸ்ட்..வில்லனின் மகள் தான் ஹீரோயின்..அடேங்கப்பா
பொன்ராம் -சிவா கூட்டணியின் முந்தைய படங்களிலும் பெரிதாக கதை என்று ஒன்றும் இருக்காது.ஆனாலும் அவை மன்னிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டதற்குக் காரணம் அவையெல்லாம் வெறும் காமெடிப்படங்கள் என்பதாலேயே! சீரியஸாக படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டபின், அதற்குரிய உழைப்பைத் தருவது தானே நியாயம்?
போர்க்கள காட்சியில் வில்லனுக்கும் ஹீரோவுக்கும் கடும் வாக்குவாதம். சிரிப்பை அடக்க முடியாமல் பார்க்கவேண்டியிருக்கிறது.ஏனென்றால், வில்லன் ஹிந்தியில் அத்தாம்பெரிய டயலாக் பேச, சிவா அதைவிடவும்பெரிய டயலாக்கை தமிழில் பேசுகிறார். வில்லனே அசந்துபோய், ஆளை விடுடா சாமி என்று சரண்டர் ஆகிறான். எவனாவது என்னிடம் ஹிந்தியில் பேசினால், வம்புக்கென்றே தமிழில் பேசுவேன். ஆனால் 14ஆம் நூற்றாண்டில் இருந்தே இந்த வழக்கம் இருந்திருக்கும் போல!
இது சிறு உதாரணம் தான். இப்படி ஒரு காமெடிப்படத்திற்கு உரிய ’அக்கறை’யுடன் தான் நிறைய சீரியஸ் சீன்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
அரதப்பழசான கதைக்கு அடுத்தபடியாக, நம்மை அதிகம் எரிச்சல் அடைய வைப்பது வில்லி சிம்ரனின் கேரக்டரும் ஆக்ட்டிங்கும். ஒரு வில்லன் கேரக்டர் நம்மை கோபப்படவைக்கலாம்,பயப்பட வைக்கலாம். ஆனால் இப்படி எரிச்சல்பட வைக்கக்கூடாது. இந்த மாதிரி கத்திப்பேசுவது சிம்ரனின் கம்ஃபோர்ட் ஜோன் கிடையாது. கூடவே அந்த இம்சையான பிண்ணனிக் குரலும் சேர்ந்துகொள்ள, அப்பப்பா. சிம்ரன் ரசிகன் அல்லாத என்னாலேயே தாங்க முடியவில்லை..பாவம் இடுப்பழகி ஃபேன்ஸ்!
ஹீரோ இமேஜுக்கு பில்டப் ஏற்ற வேண்டும் என்றால், ஸ்ட்ராங்கான வில்லன் கேரக்டர் இருந்தால் தான் எடுபடும். அதிலேயே கோட்டைவிட்டுவிட்டு, சூரியையும் பனானா பவுன்ராஜையும் வைத்து வசனத்திலேயே சிவாவிற்கு பில்டப் ஏற்றுகிறார்கள். அது ஆங்ரி மேக்கிங் காமெடி ஆகிறது!
காமெடியில் கலக்கி எடுத்த ஒரு வெற்றிக்கூட்டணி மூன்றாவது முறையாகச் சேரும்போது எதிர்பார்ப்பு எகிறிவிடும். அதை பூர்த்தி செய்யவில்லை என்றால், அந்த எதிர்பார்ப்பே படத்திற்கு ஆப்பாக ஆகிவிடும். இங்கே சிவா-சூரி காமெடியில் அது தான் நடந்திருக்கிறது. ராமர் சீன், சிறுத்தை சீன் தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் சிரிப்பே வரவில்லை. கடைசி முக்கால் மணி நேரம் முழுக்க சீரியஸாகவே படம் நகர்கிறது. காமெடியை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றத்தையே இது கொடுக்கிறது.
படத்தில் ப்ளஸ் பாயிண்ட்ஸ் என்றால்..
- சிவா இதிலும் ஆக்டிவ்வாக, கலகலப்பாக இருக்கிறார்.அந்த ராஜா கெட்டப்கூட நன்றாகவே செட் ஆகியிருக்கிறது.
- சமந்தா..படத்தில் ஆகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் இவர்தான்.
- இமானின் இரண்டு மெலோடிகள்
- போர்க்காட்சிகள் தேவையில்லாத ஆணி என்றாலும் மேக்கிங் நன்றாகவே இருந்தது.
- டபுள் மீனிங்கோ, ஆபாசமோ இல்லாமல் பொன்ராம் மூன்றாவது படத்தையும் நீட்டாக கொடுத்திருப்பது!
விடுமுறை நாட்களைக் குறி வைத்து, அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதால் எப்படியும் முதல் மூன்று நாட்களுக்கு ஹவுஸ்ஃபுல் ஆகிவிடும். கடைசி இரண்டு படங்களுமே இப்படி ரிலீஸ் ஆகி தப்பித்தவை தான். ஆனால் இந்த ட்ரிக் எத்தனை நாட்களுக்கு கை கொடுக்கும் என்று சிவா யோசிக்க வேண்டும்.
0 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.