உலகம் முழுக்க பல்வேறு மொழிகளில் பல்லாயிரம் சினிமாக்கள் படைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் சில முத்துக்கள் மட்டுமே உலக சினிமா என்று கொண்டாடப்படுகின்றன. உலக சினிமா என்பதற்கான வரையறை சிக்கலானதாக இருந்தாலும், எளிமையாகப் பின்வருமாறு சொல்லலாம். தன் சொந்த மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக முன்வைக்கின்ற, அதே நேரத்தில் மனித வாழ்வின் அபத்தத்தை/மேன்மையை நமக்கு உறைக்கின்றாற் போன்று சொல்கின்ற, இதுவரை நாம் தரிசிக்காத கோணத்தில் வாழ்வைப் பேசுகின்ற சினிமாவே உலக சினிமா ஆகின்றது. அந்த வகையில் இந்த தலைமுறை இயக்குநர்களின் படைப்பில் முக்கியமான உலக சினிமாவாக நிற்கின்றது சுப்ரமணியபுரம்.
படத்தின் கதை நீங்கள் அறிந்ததே என்றாலும் சுருக்கமாக அதைப் பார்த்துவிட்டே முன்னகர்வோம். 1980ல் வாழ்ந்த அழகர், பரமன், டும்க்கான், காசி, டோப்பன் ஆகிய 5 நண்பர்களின் கதை இது. அழகருக்கு முன்னாள் கவுன்சிலர் பெண் துளசிடன் காதல். வேலையில்லாமல், ஊரில் சண்டியர்த்தனம் செய்யும் இவர்களை போலீஸ் தொல்லையில் இருந்து காப்பது அந்த அரசியல்வாதியே. எனவே அழகரும் நண்பர்களும் அந்த அரசியல்வாதியின் நலனுக்காக ஒரு அரசியல் கொலையைச் செய்துவிட்டு, ஜெயிலுக்குப் போகிறார்கள். அரசியல்வாதி தங்களைக் காப்பார் எனும் நம்பிக்கை பொய்த்துப்போகையில், சிறையில் இருக்கும் இன்னொரு தாதா உதவுகிறார். அவருக்காக இன்னொரு கொலை செய்ய, வன்முறைச் சுழலுக்குள் வாழ்க்கை சிக்குகின்றது. அரசியல்வாதியைப் பழி வாங்க இவர்கள் முயல, காதலியின் துரோகத்தால் அழகர் கொல்லப்படுகிறான். அதற்கு பரமன் பழி வாங்க, காசியின் துரோகத்தால் பரமன் கொல்லப்படுகிறான். சிறைத்தண்டனை முடிந்து திரும்பும் காசியை, டும்க்கான் காத்திருந்து பழி வாங்குகிறான்.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் கிளைமாக்ஸ் காட்சி ஷூட்டிங்வரை, சசிக்குமார் தவிர யாருக்குமே படத்தின் கிளைமாக்ஸ் தெரியாது. எனவே தான் கண்கள் இரண்டால் பாடலிலும் படத்திலும் காதல் உயிர்ப்புடன் இருந்தது.
மனிதர்களின் வாழ்க்கையின் பெரும் அபத்தமே, அது நம்பிக்கை எனும் பலவீனமான கண்ணியால் இணைக்கப்பட்டிருப்பது தான்.
அந்த நம்பிக்கைக்கண்ணி அறுந்தால், ஒரு நண்பருடன் அறையைப் பகிர்வதில் ஆரம்பித்து, பிறருடன் நம் சொந்த விஷயங்களைப் பகிர்வது வரை எல்லாமே நின்று விடும். சமூக வாழ்க்கையே சிக்கலாகி விடும். சமூக வாழ்க்கையின் அச்சாணியே அந்த நம்பிக்கையில் தான் இருக்கிறது.
எனவே தான் எல்லாக் கலைகளும் வாழ்க்கையின் மேன்மையை முன்வைக்கின்றன. வாழ்க்கையின் மற்றும் உறவுகளின் நேர்மறைத்தன்மையைப் பேசுகின்றன. ’பியூட்டிபுல் மைண்ட்’ படம் போன்று வாழ்க்கையை நேர்மறையாய் எதிர்கொள்வது பற்றிப் பேசுகின்றன. ஆனாலும் வரலாறு முழுக்க, துரோகத்தின் ரத்தத்தடம் விரவிக்கிடக்கின்றது. வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் ஏதேனும் ஒரு துரோகத்தை எதிர்கொள்ளாமல் தப்பிப்பவர் வெகு சிலரே.
ஆனாலும் தமிழ்சினிமா போன்ற கமர்சியல் ஊடகத்தில், துரோகம் போன்ற வாழ்வின் அபத்தங்களை முன்வைப்பது கடினமான் காரியம். அதை முன்வைத்து வெற்றி பெறுவது மிகவும் கடினமான காரியம். அந்த வகையில் தான் சுப்பிரமணியபுரம் தமிழ்சினிமாவின் மகுடங்களில் ஒன்றாக இருக்கிறது.
உண்மையில் காதலின் துரோகம் சினிமாவுக்குப் புதிதல்ல. ஒரு கதாநாயகி ஏமாற்றுவதும், இன்னொரு கதாநாயகி ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ என்று எண்ட்ரி கொடுப்பதும் நம் சினிமாக்களில் சகஜம் தான். ஆனாலும் அவற்றை துரோகம் என்பதை விட ஏமாற்றுதல்/கழட்டி விடுதல் என்றே நாம் புரிந்து கொள்கிறோம். ஏனென்றால் அது திரும்பிப் போக முடியாத ஒற்றை வழிப்பாதை அல்ல. ஆனால் துரோகம் என்பது நம்மை முழுமையாக ஆன்மரீதியாகவோ, உடல்ரீதியாகவோ அழித்து விடுவது.
சுப்பிரமணியபுரத்தில் துளசியின் துரோகம், முற்றாக அழகரை அழித்து விடுகிறது. அதனால் தான் இந்தப்படம் பார்வையாளனுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. அதுவும் வாழ்க்கைக்கு மிக நெருக்கமான, யதார்த்தமான ஒரு கதையில், இத்தகைய முடிவு தந்த வலி பெரியது.
அது போன்றதே காசியின் துரோகமும். துளசியின் துரோகத்திற்காவது லீடு காட்சிகள் உண்டு. காசியின் துரோகம், முகத்தில் அறைவது. ஒரு நிமிடம், நாம் கொண்டிருக்கும் எல்லா நம்பிக்கைகளையும் சிதற வைப்பது. அவ்வாறு சொல்ல வந்த விஷயத்தை, நேரடியாக தெளிவாகச் சொன்னதாலேயே இந்தப் படம் உயர்ந்த இடத்தினைப் பெற்றது. ஆனாலும் காசியின் கேரக்டர், காசு இல்லாமல் சந்திக்கும் அவமானங்கள் படம் முழுக்க சொல்லப்பட்டிருக்கும். ஒரு பீடிக்குக்கூட கெஞ்சும் நிலைமை, எச்சில் டீ முகத்தில் பட்டாலும் ஒன்றும் சொல்ல முடியாத சூழ்நிலை என பணம்-மரியாதை இல்லாமல் வாழும் ஒரு கேரக்டராகவே அது சித்தரிக்கப்பட்டிருக்கும். அதனாலேயே அவனது துரோகம், அதிர்ச்சி என்றாலும் யதார்த்தமே என்று உறைத்தது.
சுப்பிரமணியபுரம் படத்தின் சிறப்பே, சினிமாவில் யாரும் சொல்லாத புதிய விஷயங்களைக் கொண்டிருந்ததே. அதே நேரத்தில் அந்த புதிய விஷயங்கள், நாம் வாழ்வில் சந்திக்கும் உண்மையாகவும் அமைந்தது தான் படத்தின் தரத்தைக் கூட்டியது. படத்தில் வில்லன் என காசியையோ, துளசியையோ, காசியின் சித்தப்பா கனகுவையோ நாம் நினைத்தாலும், படத்தில் முக்கிய வில்லன் கேரக்டர், கவுன்சிலரின் மனைவி தான்! அவள் பேசும் ஒரு வசனம் தான் பலரின் வாழ்வைப் புரட்டிப்போடுகிறது. முன்னாள் கவுன்சிலர் ஆகி, பதவி-அதிகாரம் இழந்து நிற்கும் கணவனைப் பார்த்து அவள் சொல்லும் ‘திருவிழாக்குக்கூட மூஞ்சியைக் காட்ட முடியாம, மாடில போய் உட்கார்ந்துக்கிட்டாரு பொட்டச்சி மாதிரி’ எனும் வசனம் தான் பலரின் வாழ்வை அழிக்கும் நெருப்புப் பொறி.
வாழ்க்கையில் யாரும் முழு வில்லனாகவோ முழு கதாநாயகனாகவோ இருப்பதில்லை. சூழ்நிலைக்கேற்ப, உறவுக்கேற்ப ஏதேனும் ஒரு வேடத்தை அணிந்து கொள்கிறோம். அதை சசி இந்தப் படத்தில் நன்றாகவே காட்டியிருப்பார். கேரக்டரைசேசனில் அத்தகைய நுணுக்கமான வேலைப்பாடுகளில் தான் சசிக்குமாரின் திறமை தெரிகின்றது. கவுன்சிலரின் மனைவிக்கு ‘தன் கணவன் நிரந்தர வேலையிலோ, மதிப்பு தரும் பதவியிலோ இல்லையே’ எனும் சராசரிப் பெண்ணின் கவலை. கவுன்சிலருக்கு முன்பு மாதிரி கௌரவமாக வாழ பதவி வேண்டுமே எனும் கவலை, இதனால் எழும் கணவன் - மனைவி பிரச்சினையில் குடும்ப அமைதி குலையுதே எனும் கவலை கனகுவுக்கு, துளசிக்கோ காலில் விழும் குடும்பத்தை எப்படி உதறுவது எனும் கவலை, காசிக்கு பணம்-மரியாதை இல்லையே எனும் கவலை. இப்படி படத்தில் எல்லாருமே அவரவர்க்குரிய நியாயங்களுடன் தான் நிற்கின்றார்கள். நீங்கள் எந்த பாத்திரத்தின் சார்புநிலை எடுத்தாலும், அந்த பாத்திரத்தை நியாயப்படுத்திவிட முடியும். தமிழ்சினிமாவில் சமீபகாலத்தில், இத்தகைய கேரக்டரைசேசனுடன் எந்தவொரு படமும் வந்ததில்லை என்று சொல்லலாம்.
இயல்பு வாழ்க்கைக்கும், ரவுடியிசம் போன்ற வன்முறை வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது உணர்ச்சிகளால் ஆன ஒரு மெல்லிய திரை தான். எந்த நிமிடமும் சிறு உணர்ச்சிவசப்படலும் அந்த மெல்லிய திரையைக் கிழித்து, நம்மை வேறு உலகத்திற்குள் தள்ளி விடும். உணர்ச்சிவசப்பட்டு கையை/தலையை வெட்டிவிட்டு, சிறைத்தண்டனை பெற்று, ஒரு நிமிட தவறுக்காக வாழ்நாளெல்லாம் நரகமாக்கிக்கொண்டோர் ஏராளம். சிறையிலிருந்து மீண்டும் வெளியே வந்தாலும்,சமூகத்தில் மீண்டும் இணக்கமாக வாழ்வது பெரும் சவாலான விஷயம். சுப்பிரமணியபுரம் படத்தின் சிறப்பம்சம், வன்முறையில் இறங்குவதில் உள்ள அபாயத்தை ஜோடனையின்றி நேரடியாகக் காட்டியது தான். பழக்கத்துக்காக கொலை செய்வது எனும் மதுரைப்பகுதி வாழ்வியலைச் சொன்னதுடன், அதில் இறங்கியவர்கள் எப்படி தன் மொத்த வாழ்க்கையைத் தொலைக்கின்றார்கள் என்றும் பேசியது இந்தப் படம்.
இந்த படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், புதிய புதிய விஷயங்களை நாம் கண்டுகொள்ள முடிகிறது. இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ, கால் ஊனமான டும்க்கான் தான் என்பது முதல்முறை பார்க்கும்போது நமக்குத் தெரிவதில்லை. அழகர்-துளசி போன்றே இன்னொரு காதல் ஜோடியும் படத்தில் பேக்ரவுண்ட்டில் தோன்றிக்கொண்டே இருக்கும். போலீஸ் ஸ்டேசனுக்கு அழகர் குரூப் பற்றி போன் செய்து தகவல் சொல்வது கனகு தான், 1980
எனும் எம்.ஜி.ஆரின் முதல் ஆட்சிக்கால அரசியல் என பல விஷயங்களை அங்காங்கே புதையல் போன்று மறைத்து வைத்திருக்கிறார் சசிக்குமார்.
மொத்தத்தில் இந்த கலைப்படைப்பைப் புரிந்துகொள்ள, நம் வாழ்க்கையை ஒப்பிட்டுப் புரிந்துகொள்ள மீண்டும் ஒருமுறை சுப்பிரமணியபுரம் பாருங்கள்.
மறுபடியும் படிக்க புது புதுசெய்திகள்!
ReplyDelete