Saturday, September 29, 2018

செக்கச் சிவந்த வானம் - விமர்சனம் & New World (2013)


’பெரியவரைக் கொன்றது யார்? பெரியவருக்குப் பின் அந்த இடத்தில் யார்?’ என்ற இரு கேள்விகள் தான் படம்.

கடந்த மூன்று படங்களாக தடுமாறிக்கொண்டிருந்த மணிரத்னம், இதில் சொல்லியடித்திருக்கிறார். இவ்வளவு பரபரப்பான படத்தினை நிச்சயம் அவரிடம் எதிர்பார்க்கவில்லை.

பெரியவராக வரும் பிரகாஷ்ராஜ் கரியரில் இந்தப் படம் முக்கியமான ஒன்றாக இருக்கும். அலட்டல் இல்லாத நடிப்பில் மிரட்டுகிறார் மனுசன். முரட்டுத்தனமான மகனாக அரவிந்த்சாமி. என்ன தான் உயிரைக் கொடுத்து நடித்தாலும், கார்போரேட் ஆபீசர் லுக்கை மறைக்க முடியவில்லை. ‘எல்லாருமே சைஃபர் தான்’ என்று சொல்லும் இடத்தில் தான் 100% ஸ்கோர் செய்கிறார்.

சிம்புவிற்கு நல்ல கம்பேக் மூவி. அருண்விஜய்யை விட மூத்தவராக சிம்பு தெரிவது தான் சோகம். எதையும் கேர் பண்ணாத, எதையும் செய்யத் துணியும் கேரக்டர் சிம்புவிற்கு எளிதாக பொருந்திப் போகிறது.

அருண் விஜய்யை தியேட்டருக்குள் நுழையும்வரை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனாலேயே அவரது கேரக்டரும் நடிப்பும் நம்மை எளிதில் வசீகரிக்கின்றன. இரண்டாம் பாதியில் அரவிந்த்சாமியைத் தேடி வீட்டிற்குள் வரும் சீன் அதகளம்.

ஜோதிகா முதல்பாதியில் வீணடிக்கப்பட்டாலும், ‘முடிவில்’ ஒரு நல்ல இம்பாக்ட்டை கொடுத்துவிட்டுப் போகிறார்.

இப்படி இத்தனை பேர் இருந்தாலும், கை தட்டல்களை அள்ளிச்செல்வது விஜய் சேதுபதி தான். மற்ற மூன்று ஹீரோக்களின் கேரக்டர்களுடன் நாம் ஐடெண்டிஃபை ஆக முடியாமல் கஷ்டப்படும்போது, சிம்பிளான ஒன்லைனர்களால் நம்மை கொள்ளை கொண்டுவிடுகிறார். யாருக்கும் பயப்படாமல், யாரையும் பயமுறுத்தாமல், படத்தில் அதிரடியாக ஒன்றுமே செய்யாமல், மொத்த அப்ளாஸையும் விஜய் சேதுபதி அள்ளிச்செல்கிறார். சான்ஸே இல்லை.

வசனங்கள் புதிதாக இருந்தன. நிறைய இடங்களில் புன்னகைக்க முடிந்தது.
படத்தில் இரண்டு ட்விஸ்ட்கள். கடைசி ட்விஸ்ட்டை மட்டும் யூகிக்க முடிந்தது.

மணிரத்தினத்தின் முந்தைய மூன்று படங்களை ஒப்பிடுவதாலேயே, இந்தப் படத்தை கொண்டாடுகிறோம். தனியே இந்தப் படத்தைப் பார்த்தால்...
மணிரத்னம் டச் மிஸ்ஸிங்..மனதில் நிற்கிற ஷாட், லைட்டிங் மேஜிக் என்று எதுவுமே மனதில் நிற்கவில்லை.

மூன்று கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் தர சில சீன்கள்..அவை நன்றாகவே இருந்தாலும், யாருடனும் நாம் கனெக்ட் ஆக முடியாமல் வெறுமனே வேடிக்கை பார்க்கும் மனநிலை தான் நமக்கு. எனவே யார் செத்தாலும் பெரிதாக ஃபீல் பண்ண முடியவில்லை.

முதல்பாதி வேகமும் கலகலப்புமாக போய்விடுகிறது. இரண்டாம் பாதியை சகோதரச் சண்டையை வைத்தே ஓட்ட வேண்டிய கட்டாயம். எனவே கொஞ்சம் ஸ்லோவாகவும் காதைச் சுற்றி மூக்கைத்தொடுவதாகவும் படம் நகர்கிறது. கடைசி இருபது நிமிடங்களில் தான் படத்தில் கதை நகர்கிறது.
சோக சீனா? ’போடு பூமி..பூமி’ பாடலை..ஆக்சன் சீனா? போடு ’சிவந்து போச்சு நெஞ்ச’ - என்று பிஜிஎம்மில் கொடுமை செய்திருக்கிறார்கள். சோக சீனில் கிக்கான வாய்ஸில் பூமி..பூமி ஒலிக்கும்போது ஜென் நிலைக்குப் போகிறோம்.
ஹிந்தி-தெலுகு-தமிழ் என எல்லா ரசிகரையும் திருப்திப்படுத்த முனையாமல், திருந்திய மணிரத்தினத்திற்கு ஒரு கோடி நன்றிகள். அதற்காகவே இந்தப் படத்தை பார்க்கலாம்!!



New World(2013) Vs CCV (2018)

பொதுவாக இணையத்தில் எழுப்பப்படும் ’காப்பி..காப்பி’ கூச்சலுக்கு எதிரானவன் நான். இதுபற்றி விரிவாக பலமுறை எழுதியிருக்கிறேன். டேக்கன் படம் முதலில் வந்து மகநாதி பிறகு வந்திருந்தால், மகாநதியை காப்பி என்று சொல்லியிருப்பார்கள். அந்தளவிற்கு மண்வாரித் தூற்றும் போக்கு இங்கே உண்டு.

நாயகன் படம் வரதராஜ முதலியாரின் உண்மைக்கதை. அதை காட் ஃபாதர் படத்தின் மேக்கிங் ஸ்டைலை எடுத்தாண்டு சொன்னார்கள். டைம் மேகசின் உலகின் சிறந்த 100 படங்களில் ஒன்றாக நாயகன் படத்தினை லிஸ்ட் செய்திருக்கிறது. அந்த லிஸ்ட்டில் காட் ஃபாதரும் உண்டு. இது தெரிந்தும், காட் ஃபாதர் காப்பி தான் நாயகன் என்று இன்றுவரை சொல்வோர் உண்டு.

தேவர் மகன் கதையில் காட் ஃபாதரின் தாக்கம் அதிகம் உண்டு. ஆனாலும் அது வேறு கதை தான். கட் ஃபாதருக்கும் மைக்கேலுக்கும் வன்முறை மேல் வெறுப்பு கிடையாது, இதை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணமும் கிடையாது. ஆனால் பெரிய தேவரும் சக்திவேலும் அடிப்படையிலேயே வன்முறைக்கு எதிரானவர்கள்.

ஒரு வன்முறைச் சூழலில் இருக்கும் இனத்தை, அதிலிருந்து மீட்காமல், அப்படியே வைத்திருந்து காப்பாற்றுபவர்கள் காட் ஃபாதர்& சன்ஸ்; ஒரு வன்முறைச் சுழலில் சிக்கிக்கொண்ட இனத்தை மீட்டு, வெளியே கூட்டிட்டுப் போக முயல்பவர்கள் பெரிய தேவரும் மகனும். எனவே இங்கே கதையே வேறு ஒன்றாக பரிமாணம் பெற்றுவிடுகிறது. மேக்கிங்கும் காட் ஃபாதரில் இருந்து வேறுபட்டது என்பதால், தேவர் மகன் தனித்துவமான படமாக ஆகிறது.

ஆங்கிலத்திலும் இத்தகைய படங்கள் உண்டு. Bitter Moon & Gone Girl படங்கள் ஒரு உதாரணம். இரண்டுமே ஒரே கதைக்களம் தான். ஆனால் இரண்டு படங்களின் பேசுபொருள் வேறு;எனவே கதையும் வேறு ஆகிறது. யாரும் அங்கே Gone Girl படத்தை காப்பி என்று சொல்வதில்லை, அதையும் கொண்டாடவே செய்கிறார்கள்.

இங்கே காப்பி என்ற ஒன்று கிடையாதா என்றால் நிச்சயம் உண்டு. அப்படியே ஒரு டிவிடியைப் பார்த்து,நம் சூழலுக்கு ஏற்பவும் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவும் சில மாற்றங்களைச் செய்து ஒரு கதையைத் தேற்றிவிடுவார்கள். கதையையும் நானே எழுதுவேன் என்று அடம்பிடிக்கும் கதையறிவற்ற ஜந்துக்கள் இதைச் செய்வது இங்கே வழக்கம்.

New World படத்தினை இன்று பார்த்தபோது, உண்மையிலேயே பெரிய அதிர்ச்சிக்கு ஆளானேன். ’இப்படி அப்பட்டமாக ஒரு கதையை உருவ வேண்டிய அவசியம் மணி சார் என்ற மகானுக்கு ஏன் வந்தது? தமிழ் மண்ணின் கதைகளையெல்லாம் தமிழ் சினிமா பேசி முடித்துவிட்டதா?’ என்று குழம்பிப் போனேன்.

New World படத்தின் கதை : ஒரு தலைமை கொல்லப்பட, தலைமைப் பதவிக்காக முட்டிமோதும் மூன்று பேர்..தலைமையைக் கொன்றது யார், அடுத்த தலைமை யார்? என்பது தான் கதை. கூடவே ஒரு கேஷுவலான ’அண்டர்கவர் ஆபரேசன்’ போலீஸ்கார்..அய்யகோ!

திரைக்கதை, மேக்கிங் என்று எல்லாவற்றிலும் வேறு பாதையில் செக்கச் சிவந்த வானம் பயணித்தாலும், கதை என்பது அடிப்படையில் அங்கே இருந்து உருவப்பட்டது தான். மாட்டிக்கொள்ளாமல் இருக்க, ஒரு முக்கியமான ட்விஸ்ட்டை மாற்றி, பதவிக்கு மோதும் முன்று பேரை அண்ணன் தம்பிகளாக்கி, கைமா பண்ணியிருக்கிறார்கள், நமது ஜந்துக்கள் ஸ்டைலில்.

முடிவில் சப்டைட்டில் இல்லாமல் New World படத்தைப் பார்த்து எழுதிய கதை போல் இருக்கிறது செக்கச் சிவந்த வானம். தமிழ்சினிமாவின் ஐகான்களில் ஒருவரான மணிரத்னம் இதைச் செய்திருக்கக்கூடாது.

அவர் சொந்தமாக யோசித்த படங்களே காப்பி என்று குற்றம் சாட்டப்படும் சூழலில், இணையம் உலகத்தில் உள்ள சினிமாக்களை உள்ளங்கையில் கொண்டு வந்துவிட்ட காலத்தில், மணிரத்னம் இதைச் செய்திருக்கவே கூடாது!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.