Friday, October 5, 2018

96 - என்னா படம்யா!



தமிழ்சினிமா பொதுவாகவே புறநோக்கு தன்மை கொண்டது. மனதில் நிகழும் நுண்ணுணர்வுகளைப் பதியும் அகநோக்கு சில காட்சிகளில் மட்டும் அரிதாக நிகழும். எதையும் செயல்களாகக் காட்டினால் தான் திருப்தி. மலையாளப் படங்கள் நம்மை முந்துவது இந்த விஷயத்தில் தான். அந்தவகையில்  96 படம், தமிழ் சினிமாவில் முக்கியமானதாக ஆகிறது.

படத்தில் வரும் முக்கிய சம்பவங்கள் எல்லாம் சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாக இருப்பதாலேயே நம்மால் படத்துடன் ஒட்டிக்கொள்ள முடிகிறது. காதல் மலர்வதற்கு சாகச காட்சிகள் ஏதுமில்லை.நான்குநாட்கள் பார்க்க முடியாத ஜானு, காய்ச்சலுடன் ஸ்கூலுக்குத் திரும்பி வருகிறாள். பின்னால் அமர்ந்திருக்கும் ராமை மெதுவாகத் திரும்பிப் பார்க்கிறாள். பூ மலர்வதை படம் பிடிக்கமுடியாது என்பார்கள். இந்தக் காட்சியில் அதை இயக்குநர் செய்துகாட்டியிருக்கிறார்.

வாழ்க்கையில் நம்மைப் புரட்டிப் போட்ட விஷயங்களுக்கு காரணம் தேடினால், சாதாரணமாக இருக்கும். படத்தில் ராம் ஊரைவிட்டுப் போவது, ஜானுவைப் பார்க்க காலேஜிற்கு வருவது, ஜானுவின் கல்யாணத்தன்று ராம் என மிக இயல்பான விஷயங்களே அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக ஆக்கியிருக்கின்றன.

படத்தின் இரண்டாம்பாதி பெரும்பாலும் ராம்-ஜானு இருவர் மட்டும் பேசிக்கொள்ளும் காட்சிகள் தான். வலுவான கதையும் வசனங்களும் மட்டும் இதற்குப் போதாது. அதைவிட வலுவான நடிகர்கள் இதற்கு வேண்டும். விஜய் சேதுபதி - த்ரிஷா ஜோடி அதை சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி நடிப்பில் 96 உச்சம் என்பேன். மிக மெல்லிய உணர்வுகளைக்கூட மனிதர் எளிதாக கொண்டுவந்துவிடுகிறார். அவரது எல்லாப் படங்களைப் போல இதிலும் படத்தை தாங்கும் தூணாக நிற்கிறார். பல வருடங்கள் கழித்து ஜானுவை சந்திக்கும் பதட்டம், ஜானுவின் கல்யாணநாள் பற்றிப் பேசும் சீன், வெர்ஜின் வெட்கம் என்று கிடைக்கிற வாய்ப்பில் எல்லாம் சிக்ஸர் அடிக்கிறார்.

விஜய் சேதுபதியை இயக்குநர் நம்பியதில் ஆச்சரியம் இல்லை. த்ரிஷாவை நம்பி, இந்த கேரக்டரை கொடுத்தது தான் ஆச்சரியம். விண்ணைத் தாண்டி வருவாயா தவிர்த்து எந்தப் படத்திலும் நடிக்காதவர் அவர். கொடி போன்று கிடைத்த நல்ல வாய்ப்புகளையும் சொதப்பியவர். நுணுக்கமான நடிப்பைக் கோரும் இந்த கேரக்டருக்கு அவரை தேர்ந்தெடுத்ததே பெரிய ரிஸ்க் தான்.

ஆனால் இயக்குநரின் நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறார் த்ரிஷா. இத்தனை வருடங்களுக்கும் சேர்த்து, ஆர்ப்பாட்டமே இல்லாமல் நடித்து, தானும் ஒரு நல்ல நடிகை தான் என்று நிரூபித்திருக்கிறார். கல்யாண நாள் பற்றிப் பேசுவது, ராம் ஒதுங்குவது கண்டு கோபப்படுவது, உரிமையுடன் அவனை கலாய்ப்பது என்று ஜானுவாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். ஆண்களை விட பெண்கள் வாழ்க்கையை (வேறு வழியின்றியும்) எப்படி பிராக்டிகலாக எதிர்கொள்கிறார்கள் என்பதை த்ரிஷா கண்முன் கொண்டுவருகிறார்.

‘நான் உன்னைப் பார்க்கலைடா’ எனும் சீனும் கிளைமாக்ஸ் சீனும் த்ரிஷா நடிப்பில் உச்சம். நம்மை உலுக்கிவிடும் நடிப்பு. எல்லாவற்றுக்கும் மேல் தேவதையாக ஜொலிக்கிறார். இதுவரை கமலா காமேஷாகவே இருந்தவர், இந்த படத்தில் தான் த்ரிஷா ஆகியிருக்கிறார்!

இளம் வயது கேரக்டராக வரும் எல்லோருமே நடிப்பிலும் அசத்துவது ஆச்சரியம். முதல்பாதியில் அவர்களின் காட்சிகள் போடும் அஸ்திவாரம் தான், உணர்வுப்பூர்வமான இரண்டாம்பாதியை வலுவாக தாங்குகின்றன.

இதுவொரு ஃபீல் குட் மூவி. எனவே பரபரப்பான திருப்பங்கள் என்று ஏதும் கிடையாது. இரண்டாம்பாதி முழுக்க, 22 வருடப் பிரிவை ராம் & ஜானு ஒரு இரவில் பேசித்தீர்க்கிறார்கள். எனவே சற்று நீளமான படமாக தோன்றலாம். ஆனாலும் ஜானு இன்னும் கொஞ்ச நேரம் இருக்கட்டுமே என்று ராமிற்காக நாமும் ஃபீல் பண்ணுவது தான் படத்தின் வெற்றி.

இயக்குநர் பிரேம்குமார் முக்கியமான படைப்பாளியாக ஆவார் எனும் நம்பிக்கையை படத்தின் பல காட்சிகள் உறுதிசெய்கின்றன. படத்தில் பல அற்புதமான ஷாட்ஸ் இருக்கின்றன. கண்கொட்டாமல் பார்க்க வைக்கிறது சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு. ஜானுவின் கல்யாணம் பற்றி ராம் பேசும் காட்சியில் வரும் பிண்ணனி இசை, அந்த காட்சியின் உணர்வுகளை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்கிறது. ’காதலே..காதலே’பாடல் தவிர மற்ற பாடல்கள் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், பிண்ணனி இசையில் கோவிந்த் பிரமாதப்படுத்தியிருக்கிறார். இளையராஜாவிற்கும் நன்றி சொல்ல வேண்டும்.

’ஒரு பள்ளிப்பருவக் காதல்..பிரிவு..மீண்டும் சந்திப்பு ‘ எனும் அழகி-ஆட்டோகிராஃப் பாணியிலான கதை தான். ஆனால் அந்தப் படங்கள் ஆணின் உணர்வுகளை மட்டுமே பதிவு செய்தவை. அந்த காதலை பெண் எப்படி உணர்ந்தாள், அந்த பிரிவை பெண் எப்படிக் கடந்தாள் என்று சொல்வதில்லை. அதை எதிர்கொள்ளும் அளவிற்கு அன்றைய ஆடியன்ஸிற்கு முதிர்ச்சி இருந்ததா என்பதும் கேள்விக்குறி தான். இந்தப் படம், இருவரின் உணர்வுகளையும் துல்லியமாகப் பதிவு செய்கிறது....அது, இன்றைய ஆடியன்ஸிற்கு இயக்குநர் செய்யும் மரியாதை.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.