2010-ல் தென்மேற்குப் பருவக்காற்று மூலம் ஹீரோவாக அவதாரமெடுத்த விஜய் சேதுபதி, வெற்றிகரமாக 25ஆம் படமாக சீதக்காதியை இந்த வாரம் ரிலீஸ் செய்கிறார். எவ்விதப் பின்புலமும் இல்லாமல், சிறுசிறு வேடங்களில் ஆரம்பித்து,இன்றைக்கு மக்கள் செல்வனாக வெற்றிவாகை சூடியிருக்கும் விஜய் சேதுபதியின் பயணத்தை கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம்.
புதுப்பேட்டை, நான் மகான் அல்ல போன்ற ஆரம்ப காலப் படங்களில் துணைநடிகராக ஒரு ஓரத்தில் நிற்பதில் ஆரம்பித்தது அவரின் திரைப்பட வாழ்க்கை. 2004 முதல் 2010வரை சினிமாவில் கொட்டிக்கிடக்கும் உதிரிகளில் ஒன்றாகவே அவரது காலம் கடந்தது. ஆனாலும் அந்த காலகட்டத்தில் ஷார்ட் ஃபிலிம்களிலும் நடித்துக்கொண்ட்டிருந்தார்.
அதன்மூலம் தன்னை கூர்தீட்டிக்கொண்டதோடு, குறும்பட அலையில் ஒரு அங்கமாகவும் ஆனார். குறும்பட வட்டாரங்களில் தெரிந்த முகமாகவும் ஆனார். விளைவு, தென்மேற்குப் பருவக்காற்று படத்திற்கு ஹீரோவாக பரிந்துரைக்கப்பட்டார்.
சீனு.ராமசாமியும் இவருக்குள் இருக்கும் கலைஞனைக் கண்டுகொள்ள, ஹீரோவாக நமக்கு அறிமுகமானார் விஜய் சேதுபதி. ஆனாலும் இப்படி ஒரு படம் ரிலீஸ் ஆனதே பெரும்பாலானோர்க்குத் தெரியாது. படம் தேசியவிருது பெற்றபோது தான், படம் பற்றிய சிறிய பேச்சு எழுந்தது. ஹீரோவாக நடித்த படம் கமர்சியலாக ஊத்திக்கொள்ள, சுந்தரபாண்டியனில் வில்லன் வேடம்,வர்ணத்தில் முத்து கேரடர் என்று மீண்டும் போராட்ட வாழ்க்கை.
2012-ல் தமிழ் சினிமாவில் எழுந்தது, குறும்பட கலைஞர்களின் புதிய அலை. பீட்சா எனும் அணுகுண்டு, தமிழ்சினிமாவின் மத்தியில் விழுந்தது. ஏதோ சாதாரணப் படம் என்று உள்ளே நுழைந்தவர்களை உண்மையிலேயே மிரட்டித் துவைத்தது படம். கார்த்திக் சுப்புராஜ், சி.வி.குமார், சந்தோஷ் நாராயணன் போன்றோருடன் விஜய் சேதுபதி எனும் ‘நடிகனை’யும் பீட்சா எல்லாப்பக்கமும் கொண்டுசேர்த்தது.
அதே ஆண்டில் அடுத்து வந்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் & சூதுகவ்வும் படமும் சூப்பர்ஹிட் ஆக, ஹாட்ரிக் நாயகனாக ஆனார் விஜய் சேதுபதி. மூன்று வெற்றிப்படங்கள், மூன்றிலும் வெவ்வேறு கதாபாத்திரங்கள். ‘என்ன ஆச்சு?’ எனும் ஒரே கேள்வியை முக்கால்வாசிப்படம்வரை திரும்பத் திரும்பக் கேட்டுகொண்டே இருப்பது ரிஸ்க்கான விஷயம்.அதற்கு விசே கொடுத்த மாடுலேசனும், கைவிரல்களின் நடனமும் அந்த வசனம் வரும்போதெல்லாம் கைதட்ட வைத்தன.
சூதுகவ்வும் படம் இன்னொரு வகையான அதகள அனுபவம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத, தமிழில் அரிதாக வெல்லும் ப்ளாக் ஹ்யூமர் மூவி. இன்றைய விஜய் சேதுபதியின் ஆரம்பம், அந்த தாஸ் கேரக்டர் என்று சொல்லலாம். அதை முழுமை செய்த படம், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.
அமைதியானவன், சாமானியன், கூச்சசுபாவம் கொண்டவன் போன்ற சொந்த இயல்புகளைக் கொண்ட கேரக்டர்களையே செய்துவந்த விஜய் சேதுபதியை உடைத்து, இன்றைய கலகலப்பான, ‘நாட்டி பாய்’விஜய் சேதுபதியாக மாற்றிய படங்கள் என்று சூதுகவ்வும் & இ.ஆ.பாலகுமாராவைச் சொல்லலாம்.
ஆனாலும் இதை விஜய் சேதுபதி அப்போதே புரிந்துகொண்டார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அடுத்து 2014 & 2015-ல் வந்த படங்களில் இந்த மேஜிக் தொலைந்து போயிருந்தது. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம் (அய்யகோ!!) போன்ற படங்களில் எல்லாம் மீண்டும் பழைய விஜய் சேதுபதியே இருந்தார். இடையில் புறம்போக்கு, ஆரஞ்சுமிட்டாய் போன்ற சீரியஸ் படங்களும் நல்ல நடிகர் என்ற பெயரைக் கொடுத்தாலும் கமர்சியலாக எல்லாமே தோல்விப்படங்கள் தான்.
2012-ல் கிடைத்த ஹாட்ரிக் வெற்றி வெறுமனே அதிர்ஷ்டத்தில் கிடைத்த வெற்றி என்று பேச்சு எழுந்தது. இந்த மோசமான காலட்டத்தில் இருந்து, அவர் மீண்டது நானும் ரவுடி தான் மூலம். மீண்டும் ‘வெட்கங் கெட்ட நாட்டி பாய்’ அவதாரம். ரசிகர்கள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று அவரும், அவரிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்களும் புரிந்துகொண்ட டர்னிங் பாயிண்ட் என்று நானும் ரவுடி தானைச் சொல்லலாம். மீண்டும் வெற்றிப்பட நாயகனாக அவரை அது ஆக்கியது.
அதன்பிறகு, எத்தனை நடிகர்கள் இருந்தாலும் ஒரு சீனை தனதாக ஆக்கிக்கொள்ளும் வித்தை மேஜிக் அதன்பிறகு எளிதாக அவருக்கு கைகூடி வந்தது. சின்ன ஒன்லைனில் தியேட்டரை தெறிக்கவிடுவது, சட்டென்று எதிர்பாராத ஒன்றை செய்துவிடுவது, ஆக்சனில் மட்டுமல்லாமல் ரியாக்சனிலும் சரியான பீட்டில் எக்ஸ்பிரசன்ஸ் கொடுப்பது, ஒரு கேரக்டர் அந்த இடத்தில் என்ன செய்யும் என்பதை மனநிலை முதல் பாடி லாங்குவேஜ்வரை கணிப்பது போன்றவை விஜய் சேதுபதி மேஜிக்கின் அங்கங்கள்.
முறைக்காத, சிரிப்பு வருது - சேதுபதி
‘அவளும் இருந்தா..நானும் இருந்தேன்’ - கா.க.போ
எஸ்.ஜே.சூர்யா துப்பாக்கியை எடுத்ததும், கையில் இருப்பதை கீழே போட்டு, தளரும் கிளைமாக்ஸ் - இறைவி
ஒரே ஒரு ஓட்டை வடையுடன், முகம் காட்டாமலேயே தெறிக்க விட்ட ஓப்பனிங் - விக்ரம் வேதா
என நான் ரசித்த விசே மொமெண்ட்ஸை சொல்லிக்கொண்டே போகலாம்.
செக்கச் சிவந்த வானத்தில் அத்தனை ஸ்டார்ஸ் இருந்தும், தியேட்டரில் கைதட்டல்களை அள்ளியது விஜய் சேதுபதி தான். இத்தனைக்கும் எல்லாப் பக்கமும் ஆமாம் போட்டுக்கொண்டே போகிற கேரக்டர். அடுத்து வந்த 96 பற்றிச் சொல்லவே வேண்டாம். முழுக்க முழுக்க, நடிப்பாலேயே வெற்றி பெற்ற படம் அது. அந்த படத்தை ரீமேக் செய்யலாம்.ஆனால் விசே-த்ரிஷா பெர்ஃபார்மஸில் இருந்த கெமிஸ்ட்ரியை ரீமேக் செய்வது அவ்வளவு எளிது கிடையாது.
விஜய் சேதுபதி இன்றைக்கு மக்களால் மட்டுமல்லாமல் இண்டஸ்ட்ரியிலும் கொண்டாடப்படுவதற்குக் காரணம், நடிப்புத் திறமை மட்டுமே கிடையாது. அலட்டல் இல்லாத நேர்மையான பேச்சு, இன்னும் பழசை மறக்காத தன்மை, சேரன் போன்ற சம்பந்தமில்லாத மனிதருக்கும் தோள்கொடுக்கும் நட்புணர்வு என்று நிறையச் சொல்லலாம்.
நடிப்பையும் தாண்டி, எனக்கு பெர்சனலாக விஜய் சேதுபதியைப் பிடிக்க இரண்டு காரணங்கள் தான்.
1. அதிக படங்களில் நடிப்பது :
2016-ல் ஆறு படங்கள், 2017-ல் 4 படங்கள், 2018-ல் 6 படங்கள். என்னைப் பொறுத்தவரை இதுவே குறைவு தான். சென்ற தலைமுறையில் 10 படம், 18 படமெல்லாம் நடித்திருக்கிறார்கள். இன்றைய தலைமுறை, எல்லாத் துறையிலும், கொஞ்சம் உழைப்பு-நிறையப் பணம் என்று சொகுசாக வாழ விரும்புகிறது. 40 வயதில் இப்படி விஜய் சேதுபதி ஓடி, ஓடி உழைக்கவேண்டிய அவசியம் இல்லை. வெற்று பில்டப்பில் சம்பளத்தை ஏற்றிவிட்டு, வருடம் இரண்டு படம்செய்தால் போதும். அது அவரால் முடியும். ஆனாலும் அவர் அதைச் செய்வதில்லை.
ஒரு ஹீரோ படங்களைக் குறைக்கும்போது வரும் சிக்கல் என்னவென்றால், புதிய இயக்குநர்கள் அறிமுகமாவது கடினமான விஷயமாக ஆகும். அது தமிழ் சினிமாவை தேக்கத்தில் கொண்டுபோய் நிறுத்தும். மேலும், ஹீரோவுக்கு டிமாண்ட் அதிகரிக்கும்போது,ஒரு கதையை ஹீரோவை மட்டுமே திருப்தி செய்ய உருவாக்க வேண்டியதாகிறது. கடந்த மூன்று வருடத்தில் எந்தவொரு வெற்றியும் கொடுக்காத ஹீரோகூட ‘படத்தில் எல்லா சீனிலும் நான் இருக்கணும். முக்கியமான எல்லாவற்றையும் நானே செய்யணும்’ என்று சொல்லும் அவலம் இன்னும் நிலவுகிறது. அதனால் ஹீரோ கால்ஷீட்டிற்காக கதையை வளைத்து அட்ஜஸ்ட் செய்து தோற்கும் புதியவர்கள் இப்போது அநேகம்.
ஒரு ஹீரோ நான்கு படங்கள் செய்கிறார் என்றால், இரண்டு படங்களை புதியவர்களுக்கு கொடுக்க முடியும். ஆறுபடங்கள் செய்தால், இரண்டு ’நல்ல’ படங்களை கமர்சியல் வெற்றி எதிர்பாராமல் நடிக்க முடியும். அதனால் தான், விஜய் சேதுபதி ஓடி, ஓடி உழைப்பது ஒருவகையில் தமிழ் சினிமா வளர்ச்சிக்கு அவரின் சேவை என்கிறேன். (ஆனால், அவர் தனது படங்களின் ரிலீஸை கொஞ்சம் முறைப்படுத்த வேண்டும்.)
2. ஹீரோ இமேஜை உடைத்தது :
ஹீரோ இமேஜை விட ஒரு நல்ல படத்தில் தான் இருப்பது தான் முக்கியம் என்ற விஜய் சேதுபதியின் புரிதல் தான், அவரது வேகமான வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். முன்பெல்லாம் கதை விவாதத்தில் ஹீரோ என்றாலே 25 வயது வாலிபன் தான். அதற்கு மேலே போய்விட முடியாது, ஹீரோ கால்ஷீட் கிடைக்காது.
ஒரு ஹீரோ நரைத்தமுடியுடன் நடித்தால், தமிழ்சினிமாவே ‘பார்த்தீரா பராக்கிரமத்தை!’ என்று காணாததைக் கண்டதாக அலறும். ஆனால் இன்றைக்கு நாற்பது வயது மனிதனின் கதையையும் சொல்ல முடிகிறது, எழுபது வயது மனிதனின் கதையையும் சொல்ல முடிகிறது. நல்ல கதையும் சுவாரஸ்யமான திரைக்கதையுமே முக்கியம் எனும் தெளிவு பெரும்பாலான ஹீரோக்களுக்கு வந்திருக்கிறது.
மக்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் இப்போது நம்புகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ‘நான் நாற்பது வயது ஆளாக நடித்திருக்கிறேன்’என்பது பெருமையான விஷயமாக ஆகியிருக்கிறது. டாப் மசாலா ஸ்டார்ஸ் கூட, ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடிப்பது சகஜமாகியிருக்கிறது. இவையெல்லாம் 2010க்குப் பின் வந்த மாற்றங்கள். இந்த மாற்றத்திற்கு விஜய் சேதுபதியின் வெற்றியும் முக்கியக்காரணம்.
அஞ்சு பாட்டு, நாலு ஃபைட் என்று மசாலாவிற்குள் சிக்காமலேயே, முண்ணனி நட்சத்திரமாக உருவாவது சாதாரணம் அல்ல. அதை விஜய் சேதுபதி சாதித்துக்காட்டியிருக்கிறார். சீதக்காதியை அடுத்து, சூப்பர் டீலக்ஸும், பேட்டயும் வரிசையில் இருக்கின்றன. அந்த மனிதர் இப்போதும் நல்ல படங்களைத் தர, ஓடிக்கொண்டே இருக்கிறார்.
Very nice.. My blog always cinema related so Pls visit my blog https://www.jaimuruganwriter.com
ReplyDelete